Advertisement

“அதையும் நான் சொல்லலை. உனக்கு அது வேணாம்ன்னா நீ அன்னைக்கே அவர்கிட்ட வேணாம்ன்னு சொல்லியிருக்கலாம்ல”
“அப்போ நீ பழிவாங்க தான் அவரை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டியா??” என்று முகத்துக்கு நேராகவே கேட்டாள் தமக்கையை.
“நயன் ஏன் என்னை புரிஞ்சுக்க மாட்டேங்குறே?? நீயும் கூட என்னையே குற்றம் சொல்றே??”
“நான் குற்றம் சொல்லலை விலோ. எனக்கு உன் வாழ்க்கையை நினைச்சு கவலையா இருக்கு. இதெல்லாம் நடக்கக்கூடாதுன்னு தான் நான் அப்போவே இந்த கல்யாணம் வேணாம்ன்னு சொன்னேன்”
“நீங்க ரெண்டு பேரும் தான் பிடிவாதம் பிடிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க. அப்போ அதை நீங்க சந்தோசமா வாழணுமா வேணாமா. அதைவிட்டு இப்படி எதிரும் புதிருமா இருந்தா என்ன அர்த்தம் விலோ எனக்கு புரியலை”
“நான் இதை உன்கிட்ட இருந்து எதிர்பார்க்கலை. ரெண்டு பேரும் மனசுவிட்டு பேசுங்க. அதுலவே எல்லாம் சரியா போய்டும் விலோ, ப்ளீஸ் விலோ இப்படியே இருந்திடாத” என்று உண்மையான அக்கறையோடு சொன்னாள் நயனா.
விலோசனா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். “விலோ” என்று சொல்லி அவள் தோளைத்தொட ஓவென்று அழுதாள் அவள்.
“நயனா” என்று வெளியில் தந்தையின் குரல் கேட்கவும் “விலோ அழாதே அப்பா ரொம்ப வருத்தப்படுவார். நாம அப்புறம் பேசுவோம்” என்றவள் விலோசனாவின் கண்ணீர் துடைத்து அங்கிருந்து நகர்ந்தாள்.
———————
கதிருக்கு நயனாவின் வீட்டிற்கு வருவதற்கு அவ்வளவு தர்மசங்கடமாக இருந்தது. ஆம் அவனைப் பொறுத்தவரை இது ஆதியின் மாமனார் வீடு என்று நினைக்கவில்லை அவன். அவனுக்கு அது நயனாவின் வீடாக மட்டுமே தெரிந்தது.
வண்டியை அவள் வீட்டின் வாசலில் முதலில் விட்டவனுக்கு அவள் அன்று சொன்னது நினைவு வர வண்டியை எதிர்சாரியில் சென்று நிறுத்தினான். அவள் தலை தென்படுகிறதா என்று பார்த்துக்கொண்டே அவன் உள்ளே செல்ல “இங்க எதுக்கு வந்தீங்க??” என்ற குரலில் திரும்பி பார்க்க நயனா பக்கவாட்டில் இருந்து வந்துக் கொண்டிருந்தாள்.
அவளை பார்த்ததும் அப்படியே நின்றுவிட்டான் அவன். “உங்களை தான் கேட்டேன் இப்போ எதுக்கு இங்க வந்தீங்க?? அதான் அன்னைக்கே ஆஸ்பிட்டல்ல வைச்சு சொன்னேன்ல உங்ககிட்ட பேச எனக்கு விருப்பமில்லைன்னு அப்புறம் ஏன் வீடு தேடி வர்றீங்க??” என்று படபடவென்று பொரிந்தாள்.
“ஆதியை பார்க்க வந்தேன்” என்று அவன் சொல்லவும் அவள் முகம் லேசாய் வாடியது.
அதை மறைத்துக்கொண்டு “அவர் அவரோட வீட்டில இருப்பாரு இங்க வந்து கேட்கறீங்க. சும்மா சாக்கு சொல்லிட்டு இங்க வந்து நிக்கறீங்கன்னு எனக்கு தெரியும்” என்று அவள் சொல்ல செங்கதிரின் இதழ்கள் விரிந்தது சிரிப்பில் அதை பார்த்தவளுக்கு இன்னமும் ஆத்திரமாக வந்தது.
அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று அவளின் பேச்சைக் கேட்டு செங்கதிர் கிளம்பி விட்டிருந்தான்.
ஆனாலும் அவனுக்கு மனது கேட்கவில்லை இரவெல்லாம். நயனாவிடம் தன் நிலையை பேசி புரிய வைத்துவிடும் எண்ணம் அவனுக்கு.
அவள் என்ன சொன்னால் என்ன தான் அவளிடம் பேசிவிடலாம் என்ற நம்பிக்கை வர மறுநாள் காலையில் அவளை பார்க்க மருத்துவமனை சென்றான்.
அங்கு விலோசனா தங்கையுடன் அமர்ந்திருப்பதை பார்த்ததும் அப்படியே தேங்கினான் கதிர். அவள் இவனை பார்த்ததும் “வாங்க” என்று எழுந்து நின்றாள்.
“இல்லை இவங்களுக்கு எப்படி இருக்குன்னு பார்த்திட்டு போகலாம்ன்னு வந்தேன்” என்று சமாளித்தான் அவன்.
“டாக்டர் என்ன சொன்னாங்க??”
“இன்னைக்கு எப்படியும் டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்கன்னு தான் சொன்னாங்க”
“பெயின் எப்படி இருக்கு??”
“நைட் ரொம்ப நேரம் தூங்க முடியாம அவஸ்தை பட்டா. டாக்டர் வந்து ஊசி போட்டாங்க. அப்புறம் தான் தூங்குனா” என்றாள்.
“டிபன் சாப்பிட்டீங்களா??”
“இல்லை அவர் வந்திடுவார் கொஞ்ச நேரத்துல அத்தை கொடுத்து விடறேன்னு சொல்லி இருக்காங்க”
“உங்கப்பா வந்தாச்சா??”
“நைட் வர முடியலைன்னு போன் பண்ணியிருந்தார்.காலையில் கிளம்பி வர்றதா சொன்னார்”
“அவங்ககிட்ட சொல்லிட்டீங்களா??”
“இன்னும் இல்லை, டென்ஷன் ஆவாங்க. வரவும் சொல்லிக்கலாம்ன்னு” என்றாள்.
“காபி ஏதும் குடிச்சீங்களா??”
“இல்லை இனிமே தான்…”என்று அவள் தங்கையை பார்க்க அவளை தனியே விட்டுச் செல்ல முடியாமல் இவளும் அமர்ந்திருக்கிறாள் என்று புரிய செங்கதிர் “நான் வாங்கிட்டு வர்றேன்” என்று நகர்ந்தான்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் இருவருக்கும் காபியுடன் வந்திருந்தான். நயனா அப்போது தான் கண் விழித்தவள் இவனை கண்டதும் முகத்தை திருப்பிக்கொண்டாள்.
“நயன் காபி குடிடி”
“எனக்கு வேணாம்”
“குடி பேசாம” என்ற விலோசனா அவளை கைத்தாங்கலாய் பாத்ரூமிற்கு அழைத்து சென்று முகம் கழுவி பல் துலக்கி அழைத்து வந்தவள் காபியை அவளிடம் நீட்டினாள்.
இருவருமாய் சேர்ந்து பருக விலோசனா நினைவு வந்தவளாக “நீங்க?? உங்களுக்கு??” என்றாள்.
“நான் சாப்பிட்டு தான் வந்தேன்…”
கதிர் தயங்கி நின்றிருந்தான். “வேற எதாச்சும் வேணுமா??” 
“இல்லை…” என்ற விலோசனாவிற்கு அப்போது தான் நினைவு வந்தது.
“காலையில ஏதோ ஊசி போடணும்ன்னு சொன்னாங்க. நான் போய் நர்ஸ் கூட்டிட்டு வர்றேன். நீங்க கொஞ்சம் இருக்கீங்களா??” என்று சொல்ல அவன் தலையாட்டினான்.
இதற்கு தானே அவன் காத்திருந்தான். அவளிடம் பேச வேண்டும் எப்போது நேரம் கிடைக்கும் என்று பார்த்திருந்தவனுக்கு அந்த நேரத்தை வீணாக்க விருப்பமில்லை.
நயனாவின் அருகில் சென்றான். “நயனா” என்று அவன் அழைக்கவும் திரும்பி அவனைப் பார்த்தாள் அவள்.
“என் பேரு மத்தவங்ககிட்ட சொல்ல மட்டும் தான் யூஸ் பண்ணுவீங்கன்னு நினைச்சேன். என்னைக் கூப்பிட கூட செய்யறீங்க”
“நயனா ப்ளீஸ்…”
“சொல்லுங்க”
“நான் சொல்ல வர்றதை கேளு…”
“நீங்க வேணாம்ன்னு ஏற்கனவே சொல்லிட்டீங்க அதையே தான் திரும்ப வந்து சொல்ல போறதுன்னா எனக்கு அதை கேக்க வேணாம். நீங்க கிளம்பலாம்” என்றாள் முகத்திலடித்தது போலவே.
“உனக்கு ஏன் இந்த பிடிவாதம்??”
“இது பிடிவாதம் இல்லை என்னோட சுயமரியாதை. நான் வந்து உங்ககிட்ட கெஞ்சலை சரியா. நீங்க என் மேல பரிதாபப்பட்டு எனக்கு எந்த விளக்கமும் சொல்லத் தேவையில்லை”
“உங்க எண்ணம் என்னன்னு ஏற்கனவே என்கிட்ட சொல்லிட்டீங்க. அவ்வளவு தான் அத்தோட விட்டுடுங்க, அதுக்கு மேல நான் பேசத் தயாரா இல்லை. தயவு செஞ்சு இனிமே என் முன்னால வந்திடாதீங்க”
“நயனா…”
“என் பேரை உங்க வாயால கேட்கணும்ன்னு ரொம்ப நாளா ஆசைப்பட்டிருக்கேன் இப்ப சொல்றீங்க. ஆனா அதை அனுபவிக்கற மனநிலையில இல்லை” என்று சொல்லும் போது அவ்வளவு விரக்தி அவள் குரலில்.
அன்று சென்றவன் தான் அவளைப் பற்றி நினைத்தாலும் ஆதியிடம் கூட விசாரித்திருக்கவில்லை. முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும் என்ற மனநிலை தான் அவனுக்கு.
மேலும் மேலும் அவளை கஷ்டப்படுத்த விரும்பவில்லை அவன். மனதின் ஓரம் ஒரு வலி இருந்தாலும் அதைக்காட்டாது தன் வேலையை பார்த்தான்.
ஆதிக்காக தான் இப்போது அங்கு வந்திருந்தான். ஆதி அங்கிருக்கிறான் என்று தெரிந்து தானே வந்தான். அவளுக்கு அவன் அவளை பார்க்க வந்திருக்கிறான் என்ற எண்ணத்தில் அவனை விரட்டுவது போல் அவள் பேசியிருக்க அதில் தான் அவனுக்கு சிரிப்பு வந்திருந்தது.
“சரி நான் அவனை அங்க போய் பார்த்துக்கறேன்” என்றுவிட்டு வெளியில் வந்தவன் ஆதிக்கு அழைத்தான்.
போனை எடுத்துக்கொண்டு வெளியில் ஆதி வர நயனாவோ கண்ணை சுருக்கி ஐயோவென்று பார்த்தாள் அவனை.
“டேய் வெளியில நின்னுட்டு தான் போன் பண்றியா. உள்ள வாடா” என்று அவன் அழைக்க செங்கதிரின் பார்வை நயனாவை தொட்டு மீண்டது.
அவளுக்கு இப்போது தான் ஞாபகம் வந்தது ஆதி நண்பன் ஒருவன் வருவான் என்று சொன்னது. அது கதிரை தான் சொல்லியிருப்பானோ என்று புரிய தன் தலையில் தட்டிக்கொண்டு உள்ளே சென்றாள்.

Advertisement