Advertisement

15
ஆதி மருத்துவமனை கிளம்பிக் கொண்டிருந்தான். அவன் முன்பு போல வீட்டில் அதிகம் பேசுவதில்லை. என்னவோ ஒரு வெறுமை அவனுக்குள்.
ஒரு வாரம் ஆகிப்போயிற்று விலோசனா அவள் வீட்டிற்கு சென்று. அவன் தான் விட்டு வந்திருந்தான் நயனாவிற்கு சரியாகும் வரை அங்கிருக்கச் சொல்லி.
அவன் கிளம்பி வெளியே ஹாலில் இருந்த அந்த ஒற்றை இருக்கையில் அமர்ந்தான். பெரிய சோபாவில் அமர்ந்து அருள்செல்வன் பேப்பரை படித்துக் கொண்டிருந்தார்.
இவன் வந்ததை அவர் கவனிக்கவில்லை “சந்து எனக்கு ஒரு காபி” என்று குரல் கொடுக்க சந்தியாவும் “இதோ வர்றேன்” என்றவர் சில நொடிகளில் காபியுடன் வந்தார்.
அங்கிருந்த மகனை பார்த்ததும் காபியை கணவரிடத்தில் கொடுக்கலாமா வேண்டாமா என்று அவர் பார்க்க அவன் பார்வையும் யோசனையும் அங்கில்லை என்பதை அப்போது தான் உணர்ந்தார்.
மனைவியின் பார்வையை தொடர்ந்து அருள்செல்வனும் மகனை பார்த்து யோசனையானார். ‘அன்னைக்கு ரொம்ப பேசிட்டமோ’ என்று அவருக்கு வருத்தமாக இருந்தது.
சந்தியா மகனின் அருகே சென்று “ஆதி…” என்று உலுக்க “ம்மா…”
“என்னப்பா யோசனையா இருக்கே??”
“ஒண்ணுமில்லைம்மா டிபன் வைங்க, ஆஸ்பிட்டல் கிளம்பணும்” என்று சொல்லவும் சந்தியா அவனுக்கு டிபன் எடுத்து வந்து பரிமாறினார்.
“ஆதி இன்னைக்கு விலோ வீட்டுக்கு போயிட்டு தங்கிட்டு திங்கள்கிழமை வாயேன்” என்றார் அவர்.
“ஏன்மா??”
“என்ன ஏன்மான்னு கேட்கறே?? உன் பொண்டாட்டியை போய் பார்க்க வேணாமா நீ. அங்கவே இருக்கட்டும் விட்டிற போறியா என்ன??” என்ற அவரின் பேச்சில் அதிர்ந்தவன் “இல்லைம்மா போகணும், இன்னைக்கு வேணாம் நாளைக்கு போயிட்டு வர்றேன்”

“சரி” என்றவர் “இன்னைக்கு நானும் அப்பாவும் நயனாவை பார்க்கப் போறோம். அன்னைக்கு ஆஸ்பிட்டல் வைச்சு பார்த்ததோட சரி”
“ஓ!! நல்லதும்மா போயிட்டு வாங்கம்மா” என்றவன் மருத்துவமனைக்கு கிளம்பிவிட்டான்.
“சந்து”
“என்னங்க??”

“என்னாச்சு இவனுக்கு ஏன் இப்படி என்னவோ போல இருக்கான்??”
“அதெல்லாம் புள்ளைய திட்டுறதுக்கு முன்னாடி இருக்கணும். இப்போ வந்து என்னைய கேளுங்க என்னாச்சு ஏதாச்சுன்னு” என்று பொரிந்தார் சந்தியா மகன் முகம் வாடியது பொறுக்காமல்.
அருள்செல்வனோ மனைவியை ஒரு மாதிரியாக பார்த்தார். “நான் தான் காரணமா அதுக்கெல்லாம்??”
“நீங்களும் தான்” என்று விடாது சொன்னார் சந்தியா.
“அவன் செஞ்சது சரின்னு சொல்றியா நீ??”
“நான் அப்படி சொல்லவே இல்லை”
“அப்போ என்னை எதுக்கு கேள்வி கேட்கறே??”
“எப்பவும் ஒரே மாதிரி இருந்தா தெரியாது. புதுசா நீங்க திட்டவும் அவன் இப்படி ஆகிட்டான்” என்றார் குற்றசாட்டாக.
தன் கணவர் பேசியதில் தவறில்லை என்றாலும் பெற்ற தாய்க்கு மகனை விட்டுக் கொடுக்க முடியாது தானே. அதிலும் அவன் முகம் வாடினால் எந்த தாய்க்கு தான் பொறுக்கும். சந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல தானே. 
“நான் சொல்லக்கூடாதா அப்போ??” என்று முறுக்கினார் அருள்.
அந்த குரலில் தான் சந்தியா தன் இயல்பிற்கு வந்தார். “விடுங்க நான் உங்களை எதுவும் சொல்லலை”
“இவ்வளவு நேரம் நீ சொன்னதுக்கு என்ன அர்த்தம்”
“எம்புள்ளை ஏதோ வருத்ததுல இருக்கான்னு அர்த்தம். அதனால நான் உங்களை ரெண்டு வார்த்தை சொல்லிட்டேன் தப்பா. நான் எதுவும் உங்களை கேட்கக் கூடாதா” என்று இவன் சொல்ல “சந்து” என்றார் அவர்.
“அவன் வேணும்ன்னு சொன்னான்னு நாம இந்த கல்யாணத்தை பண்ணியிருக்க கூடாதோன்னு தோணுது எனக்கு. பயமாயிருக்கு அவன் முகத்துல சந்தோசமே இல்லைங்க”
“அதெல்லாம் அவன் சரி பண்ணிப்பான் சந்து. அவனை பார்த்தா தெரியலையா உனக்கு. விட்டுப்பிடிக்கறதுன்னா என்னன்னு வாழ்க்கை அவனுக்கு கத்துக் கொடுத்திட்டு இருக்கு”
“நீ அவனுக்கு அம்மாவா பார்க்காம வெளிய வந்து பாரு. அவனோட மாற்றம் உனக்கு தெரியும். எல்லாம் நல்லதுக்குன்னு நினைச்சுக்கோ சந்து”
“இவனால அந்த பொண்ணு காயப்பட்டிருக்கா. அதையும் நாம யோசிக்கணும் தானே. அவளுக்கு அந்த ஒரு வருஷத்துல வேற நல்ல வாழ்க்கை அமைஞ்சு இருந்திருந்தாலும் அவ அதெல்லாம் மறந்திருக்க வாய்ப்பிருக்கு”
“அப்படியொரு விஷயம் நடக்கலை. அவளுக்கு அதெல்லாம் சேர்ந்து ஒரு குழப்பத்தை பயத்தை கொடுத்திருக்கும். இது அவங்க வாழ்க்கை ரெண்டு பேருமே விரும்பி தான் சரின்னு சொல்லியிருக்காங்க”
“இல்லைங்க அந்த பொண்ணு இவனை பழிவாங்க”
“என்ன பேசறே நீ?? உன்கிட்ட என்ன சொன்னேன் அம்மாவா யோசிக்காம மூணாம் மனுஷியா இருந்து யோசின்னு சொன்னேன்ல”
“நல்லா புரிஞ்சுக்கோ சந்து. ஒருத்தரை பழிவாங்க யாராச்சும் தன்னோட வாழ்க்கையே பணயமா வைப்பாங்களா சொல்லு. உறுதியா சொல்றேன் அந்த பொண்ணுக்கும் நம்ம ஆதியை பிடிச்சு தான் இருக்கு”
“அது அவன் பண்ண குழப்பத்துல அவளால அதை உணர முடியலை. நம்ம ஆதிக்கு அவ மேல இருக்க விருப்பம் நாள் கழிச்சு புரிஞ்ச மாதிரி அந்த பொண்ணுக்கும் புரியும்”
“அப்போ அவங்களை விட பெஸ்ட் கபிள்ஸ் இருக்க மாட்டாங்க. நீ வேணா பாரேன்” என்று கணவர் கொடுத்த விளக்கம் சந்தியாவை திருப்தியடையச் செய்தது. மனம் தெளிந்தார் அவர். 
“நீங்க சொல்ற மாதிரியே நடக்கட்டுங்க” என்றவர் வேலைக்கு செல்ல கிளம்பினார்.
——————–
“அம்மா நான் கடைக்கு கிளம்பறேன்” என்றான் கதிர்.
“சாப்பிட்டு போ கதிரு”
“இல்லைம்மா வேணாம் கடையில பார்த்துக்கறேன். நெறைய வேலைக்கு இருக்கு…” என்று பட்டும்படாமலும் பேசியவன் முன் அசையாது நின்றார் அவர் கண்களில் கண்ணீருடன்.
அவன் அன்னை அப்படியே நிற்கவும் என்னவென்று பார்த்தான் செங்கதிர். அவர் விழிகளில் கண்ணீருடன் பார்க்க அவனுக்கு எரிச்சலாக இருந்தது.
“என்னம்மா??”
“ஏன் கதிர் இப்படி பண்றே??”
“நிஜமா தான்மா சொல்றேன், எனக்கு கடையில நிறைய வேலை இருக்கு. புரிஞ்சுக்கோங்க”
“இல்லை நைட் நான் பேசினதை மனசுல வைச்சு தான் நீ இப்படி பேசறே” என்றார் அவர் வழிந்த கண்ணீரை துடைக்காமல்.
அதை தன் கைக்கொண்டு துடைத்தவன் “இப்போ என்ன நான் சாப்பிட்டா நம்புவீங்களா??”
அவர் பதில் சொல்லவில்லை. அப்படியே பார்த்தார். “வேற என்ன செய்யணும் நான் இப்போ??”
அவரின் அமைதி அவனை உச்சக்கட்ட கோபத்திற்கு எடுத்துச் சென்றது. “உங்க மேல சத்தியம்ன்னு சொல்லிட்டேன்ம்மா. இன்னும் நீங்க என்னை நம்பாமலே பார்த்தா நான் என்ன சொல்ல”
“உங்களுக்கு என் மேல அவ்வளவு தான் நம்பிக்கைன்னா என் வாழ்க்கையில கல்யாணம் அப்படிங்கற ஒரு விஷயமே வேணாம். நான் உங்க கூடவே இருந்திடறேன்” என்று அவன் சொல்லிட ஓவென்று அழுதார் அவன் அன்னை ராஜாத்தி.
“அம்மா…” என்றான் பொறுக்கமாட்டாமல்.
“நான் நைட் ஜோசியர் ஏதோ சொன்னாருன்னு மனசுக்கேட்காம சொல்லிட்டேன். நீ தான் கோபப்பட்டே. இதோ பாரு காலையில சாப்பிடாம கடைக்கு கிளம்பறே. நான் ஏன்னு கேட்டா கல்யாணம் பண்ணிக்க போறதில்லைன்னு சொல்றே” என்றவர் சொல்லி சொல்லி விடாமல் அழுதார்.
அவரை ஒருவாறு தேற்றி சாப்பிட வைத்து தானும் உண்டு கடைக்கு கிளம்பியிருந்தான் செங்கதிர்.
‘அய்யோ எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது’ என்ற ஆற்றாமை அவனுக்குள் எழுந்தது. விஷயம் இது தான் முதல் நாள் ராஜாத்தி ஜாதக பொருத்தம் பார்க்கச் சென்றிருந்தார்.
ஒரு பெண்ணின் ஜாதகம் வந்திருந்தது அதையும் இவன் ஜாதகத்தையும் எடுத்துக்கொண்டு பொருத்தம் பார்க்க போயிருந்தார்.
அப்படி சென்ற இடத்தில் பொருத்தம் பார்த்தவர் “இவருக்கு நீங்க எப்படி பொண்ணு பார்த்தாலும் அமையாதுங்க. இவருக்கு காதல் கல்யாணம் நடக்கும். நீங்க எவ்வளவு பொருத்தம் பார்த்தாலும் எதுவும் நடக்காது” என்று உறுதியாய் சொல்லிட வீட்டில் வந்து ஒரே அழுகை ராஜாத்தி.
இரவு கடை அடைத்து செங்கதிர் வீட்டிற்கு வந்திட அம்மாவின் அழுது வடிந்த முகமே வரவேற்றது. 
“என்னாச்சும்மா??”
தன் அழுகையை அடக்கிக்கொண்டு “ஒண்ணுமில்லைப்பா” என்றார் அவர்.
“அப்புறம் ஏன்மா ஏதோ போல இருக்கீங்க??”
“நல்லா தான் இருக்கேன்ப்பா”
“இல்லைம்மா நீங்க அழுதிருக்கீங்க” என்றான் அவர் முகத்தில் கண்ணீரின் சாயல் கண்டு.
மகன் சொல்லவும் அவருக்கும் முட்டிக்கொண்டு கண்ணீர் வந்திருந்தது. பதறியவன் “என்னன்னு சொல்லுங்கம்மா??” என்றான்.
“உடம்புக்கு எதுவும் செய்யுதா?? டாக்டர்கிட்ட போகணுமா??” என்றான்.
“இல்லை கதிரு…”
“அப்போ என்னாச்சும்மா??”
“உனக்கு நான் பார்க்கற பொண்ணு அமையாதுன்னு இந்த ஜோசியனும் சொல்றான்ப்பா…”
“அம்மா இந்த ஜோசியக்காரங்களுக்கு வேற என்ன வேலை சொல்லுங்க. நல்லா இருக்கவனை கலக்கப்படுத்துறது தான் வேலையே. அதெல்லாம் தூக்கிப்போட்டு வேற வேலையை பாருங்கம்மா” என்றான்.
“இல்லை கதிரு எனக்கும் உங்கப்பாக்கும் கூட கல்யாணம் செய்ய வேணாம்ன்னு தான் சொன்னாங்க. நாங்க அதை மீறி கல்யாணம் பண்ணோம். என்ன நல்லா இருந்திட்டோம் சொல்லு”
“எங்க கல்யாணத்துக்கு பார்த்தப்போ அந்த ஜோசியர் சொன்னதெல்லாம் தான் உனக்கு முன்னாடியே சொல்லியிருக்கேனே கதிரு. அப்படியே புட்டுபுட்டு வைச்சாரு”
“நாங்க ரெண்டு பேரும் பிடிவாதமா கட்டிக்கிட்டோம். உங்கப்பா எனக்கு மாமா மகன் அப்படிங்கறதால வீட்டிலையும் எங்க விருப்பத்துக்கு சரின்னு சொல்லி கட்டிவைச்சாங்க”
“எங்க விதி நடக்க வேண்டியது எல்லாம் நடந்திச்சு. உங்கப்பா குணம் மாற ஆரம்பிக்கவும் உன்னோட ஜாதகமும் அக்காவோட ஜாதகமும் எடுத்திட்டு அதே ஜோசியரை போய் பார்த்தேன்”

Advertisement