Advertisement

“அவர் அப்போவே சொன்னாருப்பா உங்க பையன் உங்களை மீறி தான் கல்யாணம் பண்ணிக்குவான்னு. அதுக்கு பிறகு நானும் ஒரு நாலஞ்சு இடத்துல பார்த்திட்டேன் எல்லாரும் ஒண்ணு போலவே சொல்றாங்கப்பா” என்று அவர் அழ கதிருக்கு கோபமாக வந்தது.
“அம்மா அப்போ என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா. இதையே எத்தனை தரம் தான் சொல்வீங்க. இதுக்கு முன்னாடி நீங்க என்கிட்ட இப்படி சொன்னப்பவே நான் என்ன சொன்னேன் உங்ககிட்ட. நீங்க பார்க்கற பொண்ணை தான் நான் கட்டுவேன்னு சொன்னனா இல்லையா. அப்புறம் ஏன்மா இப்படி பண்றீங்க??”
“இல்லைப்பா எல்லாவனும் அப்படியே சொல்றாங்க. மனசுக்கு என்னவோ போல இருக்குதுப்பா…”
“நீங்க கண்ணுக்கு முன்னாடி நிக்கற உங்க மகனோட பேச்சை நம்ப மாட்டேங்கறீங்க. எவனோ ஒருத்தன் சொல்றதை நம்பறீங்க. என்னமோ பண்ணுங்க…” என்று கோபமாய் பேசிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.
ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்தவன் ஒன்றும் பேசாமல் படுத்துக்கொண்டான். இதோ காலையில் வேலைக்கு கிளம்பிய நேரத்தில் மீண்டும் அதே பஞ்சாயத்து மனதிற்கு பெரும் சோர்வை கொடுத்தது அவனுக்கு.
அவனுக்கு தெரியும் அவன் தாயின் மனநிலை. சில விஷயங்கள் நல்லதிற்கு நம்பாவிட்டாலும் ஒரு கெட்டது நடந்துவிடும் பட்சத்தில் மனம் அவங்க சொன்னதை முன்னாடியே கேட்டிருக்கலாமோ என்று தானே நினைக்கும், அப்படி தான் அவர் மனமும் நம்பியது. 
பொறுப்பில்லாத அவன் தந்தையால் தாய் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதை உடன் இருந்து பார்த்தவன். பத்தாவது வரை தான் படித்திருந்தார் அவர். ஆங்கிலம் தெருத்தெருவாக மார்கெட்டிங் சர்வே எடுக்க அவர் செல்வதை கண்டிருக்கிறான். 
பெரும்பாலும் யாரும் மதிக்கமாட்டார். காலையில் பிள்ளைகளை கிளம்பி பள்ளிக்கு அனுப்பிவிட்டு அவருக்கும் மதிய உணவை கட்டிக்கொண்டு காலையில் கிளம்புபவர் ஏழு மணி போலத்தான் வீட்டிற்கே வருவார்.
மதிய உணவை ஏதோவொரு வீட்டின் வெளி வாயிலில் தான் அமர்ந்து சாப்பிடுவார். சில முறை அதை அவன் நேரில் கண்டிருக்கிறான். ஒரு மகனாய் தன் தாயின் துயர் துடைக்க அந்த பிள்ளையின் மனம் விரும்பியது.
அவரை எப்போதும் கண்கலங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணினான். அதை ஒவ்வொரு விஷயத்திலும் வெளிப்படுத்தியிருந்தான் அப்பிள்ளை.
அவன் தலையெடுத்த பிறகு தாயை வேலையை விடச்செய்து தமக்கையின் திருமணத்தை சிறப்பாய் முடித்து அவளுக்கு ஒவ்வொரு சீரும் சிறப்பாய் செய்து ஒரு நல்ல மகனாய் இருந்தான் அவன்.
அதனாலேயே அவன் தமக்கையின் திருமணத்தின் போது பொருத்தம் பார்க்கச் சென்றிருந்த அன்னை அவன் ஜாதகத்தையும் எதற்கும் பார்க்கலாம் வேறு ஜோசியர் தானே என்று நினைத்து பார்த்திருக்க அவரும் மகன் விரும்பிய திருமணம் தான் நடைபெறும் என்றிட உடன் சென்றிருந்தவனுக்கு தாங்கவில்லை அன்னையின் கண்ணீர் பார்த்து.
தன்னையறியாமல் வாக்களித்துவிட்டான் அவர் பார்க்கும் பெண்ணைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்யமாட்டேன் என்று.
‘கடவுளே இந்த ஜாதகம், ஜோசியம், நேரம் காலம் இதெல்லாம் யாரு கண்டுப்பிடிச்சா’ என்று கோபமாக வந்தது அவனுக்கு.
அதே எண்ணத்திலேயே கடைக்கு வந்திருந்தான். அங்கு சில நிமிடம் எந்த வேலையும் அவனுக்கு பிடிபடவில்லை. மனதை இழுத்து பிடித்து அடக்கியவன், வேலையில் கவனமானான்.
மாலை ஆதித்யகரிகாலன் வந்தான். “வா ஆதி, காபி சொல்லவா” என்றான் கதிர்
“நாம வெளிய போய் சாப்பிடுவோம்”
“சாரிடா எனக்கு நிறைய வேலை இருக்கு” என்று செங்கதிர் சொல்லவும் நண்பனின் முகத்தை அப்போது தான் பார்த்தான் மற்றவன்.
அதில் அப்படியொரு சோர்வு தெரிய “என்னடா ரொம்ப டல்லா இருக்கே?? என்ன பிரச்சனை??” என்றான்.
“வேலைடா அதான்…”
“சரி பரவாயில்லை கொஞ்சம் நேரம் தான் வா போயிட்டு உடனே வந்திடலாம்” என்று நண்பனை வற்புறுத்தி அழைக்க அவனுக்கும் ஒரு இடைவேளை தேவையாயிருக்க கடையை பார்த்துக்கொள்ள சொல்லி ஒருவரிடம் சொல்லி ஆதியுடன் கிளம்பினான்.
“சரி சொல்லு என்னாச்சு உனக்கு”
“அதான் சொன்னேன்லடா கொஞ்சம் வேலை”
“அதான் என்னன்னு கேட்கறேன். உனக்கு எப்பவும் இல்லாத வேலையா புதுசா சொல்றே?? முகமும் சோர்வா இருக்கு??” என்று கேள்வியாய் பார்த்தான்.
“ஒரு பெரிய ஆர்டர்டா. சொன்னேன்ல அந்த ஐடி கம்பெனி யூனிபார்ம் தைச்சுக் கொடுக்கற ஆர்டர்”
“ஹ்ம்ம் சொன்னியே. அதுக்கென்னடா இப்போ??”
“இல்லை அவங்க முதல்ல கேட்ட நூறு பீஸ் நல்லப்படியா தைச்சுக் கொடுத்திட்டேன். அது எல்லாமே ரொம்ப நல்லா இருந்துச்சு சைஸ் எல்லாம் ரொம்ப சரியா வந்திருக்குன்னு சொன்னாங்க”
“நல்ல விஷயம் தானே…”
“அவங்க இப்போ ஆயிரம் பீஸ் கேட்குறாங்கடா. அவங்களோட எல்லா பிரான்ச்க்கும் ரெகமன்ட் பண்ணியிருக்காங்க. நான் இன்னும் போய் ஆர்டர் வாங்கலை. என்ன பண்ணன்னு எனக்கு புரியலை”
“பெரிய ஆர்டர் முடிச்சா நல்ல லாபம் கிடைக்கும். இது ஒரு நல்ல சான்ஸ் மிஸ் பண்ணவும் முடியலை. என்னால முடியுமான்னும் தெரியலை” என்றான் மற்றவன்.
“அவ்வளவு தானா” என்ற ஆதித்யன் ஏதோ யோசித்துவிட்டு “நீ நாளைக்கு என் மாமனார் வீட்டுக்கு காலையில வா” என்றான்.
“நா… நான் எதுக்குடா அங்கே??”
“வா ஒரு நல்ல விஷயம் சொல்றேன்” என்று அவன் புதிராய் முடிக்க கதிர் எச்சில் கூட்டி விழுங்கினான்.
‘நல்ல விஷயமா என்ன சொல்லுவான்’ என்று யோசித்தான் அவன். “இல்லை ஆதி நான் வரலை. வீட்டில வேற கொஞ்சம் பிரச்சனை ஓடுது”
“அம்மாகிட்ட கோவிச்சுக்கிட்டு வந்திட்டேன். நாளைக்கு அக்கா வீட்டுக்கு கூட்டிட்டு போய் அவங்களை சமாதானப்படுத்தணும்ன்னு நினைச்சுட்டு இருக்கேன்” என்றான்.
“என்னாச்சு நீ அம்மாவை கோவிச்சுக்கிட்டியா?? இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு??”
“நிஜம் தான்டா. எனக்கு பொண்ணு பார்க்க ஜாதகத்தை தூக்கிட்டு பொருத்தம் பார்க்க போனாங்களாம். வழக்கம் போல அவன் எனக்கு லவ் மேரேஜ்ன்னு சொல்லிட்டான் போல. அதைச் சொல்லி வீட்டில புலம்பல் எனக்கு கோவம் வந்திட்டு”
“என் மேல நம்பிக்கை இல்லையான்னு கேட்டேன். நான் கல்யாணமே பண்ணிக்கப் போறதில்லைன்னு சொல்லிட்டு வந்திட்டேன்”
“இன்னுமாடா உங்கம்மா அந்த லவ் மேரேஜ் பிடிச்சுட்டு தொங்குறாங்க. இல்ல தெரியாம தான் கேட்கறேன், லவ் மேரேஜ் செஞ்சா தப்பா. லவ் என்ன நம்மளை கேட்டுகிட்டா வருது”
“இப்போ நீ லவ் மேரேஜ் செஞ்சுட்டா தான் என்ன. நீயுமா இதெல்லாம் நம்புற??”
“இதுல நம்பிக்கை அவநம்பிக்கைன்னு எதுவும் இல்லைடா. எனக்குமே இது சில்லியான விஷயமா தான் இருக்கு. ஆனா அம்மா அவங்க அதை நம்புறாங்களே”
“சப்போஸ் உனக்கு ஒரு பொண்ணை பிடிச்சு போச்சு, விரும்பறேன்னு வைச்சுக்குவோம். உங்கம்மாவுக்காக வேண்டாம்ன்னு சொல்லிடுவியா என்ன” என்றான் ஆதி.
“ஆதி அப்… அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை. என… எனக்கு யாரையும்… நா… நான் யாரையும் விரும்பமாட்டேன்”
“இது முட்டாள்த்தனமா தெரியலையா உனக்கு??”
“எனக்கும் தெரியுது. ஆனா என்னை என்ன செய்ய சொல்றே?? அம்மா இதைப்பத்தி என்கிட்ட சொல்லும் போது எனக்கு அதை பத்தி பெரிசா எந்த எண்ணமும் இல்லை”
“அக்கா கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கும் போதே இது நடக்க ஆரம்பிச்சது. அப்போ என்னோட வயசு வெறும் இருபத்திரண்டு எனக்கு என்ன பெரிசா தெரிஞ்சிருக்கும் சொல்லு”
“காதல், கல்யாணம் இதெல்லாம் எனக்கு யோசிக்க கூட முடியலை. அம்மா அழுதாங்க அது மட்டும் தான் தெரிஞ்சது. அவங்களுக்கு நான் அவங்களைவிட்டு போயடுவனோன்னு ஒரு பயம் போல”
“அவங்களோட கண்ணீரை பார்த்ததும் நான் அந்த நிமிஷமே முடிவு பண்ணி அவங்களுக்கு வாக்கு கொடுத்திட்டேன். அவங்க பார்க்கற பொண்ணை தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு”
“ரப்பிஷ்”
“உனக்கு இது ரப்பிஷா இருக்கலாம் ஆதி. எனக்கு அப்படியில்லை”
“அன்னைக்கு மனநிலையில தான் இன்னைக்கு வரைக்கும் நீ இருக்கியா??”
“ஹ்ம்ம்…”
“எனக்கு ஒண்ணு புரியலை. உன் மனசுக்கு பிடிச்சு கல்யாணம் பண்ண என்ன தப்பு நடந்திடும்ன்னு அவங்க நினைக்கிறாங்க…”
“அவங்க காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டு கஷ்டப்பட்ட மாதிரி நானும் படுவனோன்னு கவலை, அவங்களைவிட்டு போய்டுவேன்னு கவலை”
“நீ தப்பு பண்ணிட்டே??”
“ஆதி”
“உன்னை நீ அவங்களுக்கு புரிய வைக்காம நீ தப்பு பண்ணிட்டே”
செங்கதிர் விரக்தியா சிரித்தான். “என்ன கதிர் நமக்கு இவன் அட்வைஸ் பண்றான்னு நினைக்கறியா??”
“உனக்கு தோணலாம், நானும் ரொம்ப சரியானவன்னு எல்லாம் சொல்லிட முடியாது. ஒரு மனுஷனுக்கு அவனோட பிரச்சனைக்கு தான் தீர்வு தெரியாது. ஆனா அடுத்தவன் பிரச்சனைக்கு ஆயிரம் தீர்வு சொல்லுவான்…”
“உனக்கும் அதான் சொல்றேன். என்னோட பிரச்சனைக்கு நீ சுலபமா தீர்வு சொல்வே, இட்ஸ் பேக்ட்”
“அந்த பேச்சை விடு ஆதி. அதை அப்புறம் பார்த்துக்கலாம்” என்று பேச்சை தவிர்த்தான் செங்கதிர்.
“சரி நான் பேசலை. ஆனா நாளைக்கு நீ என் மாமனார் வீட்டுக்கு வர்றே. உன்னோட பிரச்சனைக்கு ஒரு தீர்வு அங்க கிடைக்கும்”
“எந்த பிரச்சனைக்கு??”
“எல்லா பிரச்சனைக்கும்”
“வேணாம் ஆதி நான் வரலை”
“வர்றே கதிர். உன் நல்லதுக்கு தான் சொல்றேன்” என்று சொல்லி கிளம்பிவிட்டான் அவன்.

Advertisement