Advertisement

14
“வீட்டுக்கு ஏன் சொல்லலை??”
“போன் பண்ணேன்…”
“யாருக்கு??”
“அக்காவுக்கு…”
“சொல்லியாச்சா??”
“இல்லை அவ போனை எடுக்கலை”
“உங்கப்பா என்ன பண்றார் அவருக்கு தானே முதல்ல நீ போன் பண்ணியிருக்கணும்??”
“இல்லை அவர் ஊருக்கு போயிருக்கார். இன்னைக்கு நைட் தான் திருப்பூர்ல இருந்து வருவாரு”
“உன்னை தனியாவிட்டு போனாரா அவர்”
“காலையில தான் போனார், நைட் வந்திடுவார்” என்று சொல்லும் போது முகத்தில் ஒரு வலி தெரிந்தது.
ரொம்ப கேள்வி கேட்கிறோம் என்று எண்ணியவன் அமைதியானான். திடிரென்று ஞாபகம் வர “ஆதிக்கு போன் பண்ணியா??”
அவள் இல்லையென்றாள். “ஏன்??”
“மாமா ஆஸ்பிட்டல்ல இருப்பாங்க. அதான் பேசலை” என்று சொல்லும் போது கண்களில் கண்ணீர் வழிந்தது. ‘இவனுக்கு இவ்வளவு விளக்கம் சொல்ல வேண்டுமா அதுவும் இப்படி வலியில் துடிக்கிறேன், அதைவிட்டு கேள்வி கேட்கிறான்’ என்று நினைத்தாள் அவள்.
“நானே பண்றேன்” என்றவன் அடுத்து வந்த திருப்பத்தில் இருந்த மருத்துவமனையை கண்டுவிட்டு “அண்ணே இந்த ஆஸ்பிட்டல் போய்டலாம், நேரா உள்ளே போய்டுங்க” என்று சொல்ல ஆட்டோக்காரரும் உள்ளே சென்று நிறுத்தினார்.
ஆட்டோவிற்கு காசைக் கொடுத்துவிட்டு “அண்ணன் இவங்க இங்க இருக்கட்டும் நான் உள்ள போய் பேசிட்டு வந்திடறேன்” என்று உள்ளே ஓடினான்.
வரும் போது வீல் சேருடன் வந்தவன் அவளை அதில் அமர்த்தி உள்ளே சென்றான். அவளுக்கு உள்ளே மருத்துவம் நடந்துக் கொண்டிருக்க ஆதிக்கு அழைத்திருந்தான்.
முதல் இரண்டு அழைப்பை அவன் ஏற்காமலே போக இவனும் விடாமல் போன் செய்தான். ஏதோ அவசரம் என்று புரிந்தவனாய் ஆதியும் போனை ஆன் செய்திருந்தான்.
“சொல்லு கதிர் ரொம்ப முக்கியமான விஷயமா??”
“ஹ்ம்ம் ஆமா…”
“சொல்லுடா??”
“நயனாக்கு ஒரு சின்ன ஆக்சிடென்ட் ஆகிட்டு. நம்ம கடை இருக்க ரோடுல தான் நடந்திருக்கு, நான் தற்செயலா போன இவங்க, அதான் கூட்டிட்டு ஆஸ்பிட்டல் வந்திட்டேன்” என்றவன் மருத்துவமனை விலாசம் சொன்னான்.
“உன் வைப்கிட்ட சொல்லி கூட்டிட்டு வாடா. அவங்கப்பா வேற ஊருக்கு போயிருக்கார் போல, நைட் தான் வருவார்ன்னு நயனா சொன்னாங்க” என்றான் நண்பனிடம்.
“என்னடா என்னென்னவோ சொல்றே, சரி நான் வந்து பார்க்கறேன். என் வைப்க்கு போன் பண்ணி சொல்றேன், நாங்க சீக்கிரம் வர்றோம்” என்றுவிட்டு போனை வைத்தான்.
உடனே தன் மனைவிக்கு அழைக்க அவளோ இவன் மேலிருந்த கோபத்தில் போனை எடுக்கவில்லை. நயனா அழைத்திருந்த போது அவள் துணி காயப்போட மாடிக்கு சென்றிருந்தாள்.
அதனால் அழைப்பை அவள் தவறவிட்டிருந்தால் போனையும் எடுத்து பார்த்திருக்கவில்லை. இப்போது ஆதி அழைத்ததை பார்த்தவள் பேசாமல் இருந்துக் கொண்டாள்.
அவனும் தொடர்ந்து அழைக்க இவள் வெறுமே வேடிக்கை மட்டும் பார்த்திருந்தாள். ஏனிந்த பிடிவாதம் என்று அவளுக்கும் புரியவில்லை, போனை எடுக்கவே கூடாது என்று மட்டும் உறுதியாயிருந்தாள்.
ஏதாவது பேசி என் கோபத்தை தணிக்கப் பார்ப்பான் என்ற எண்ணம் வேறு அவளுக்கு. ஆதிக்கு புரிந்தது அவள் வேண்டுமென்றே தன்னை தவிர்க்கிறாள் என்று.
அடுத்து அவன் அழைத்தது அவன் அன்னை சந்தியாவிற்கு. அன்று அவருக்கு விடுமுறை தினம் என்பதால் வீட்டில் இருந்தார் அவர்.
“சொல்லு ஆதி” என்றார் முதல் அழைப்பிலேயே.
“அம்மா சனாகிட்ட பேசணும்”
“அவளுக்கு கூப்பிட வேண்டியது தானே”
“பண்ணேன்ம்மா போன் ஏதோ சைலென்ட் ஆகி இருக்கும் போல, அவ எடுக்கவே இல்லை. இவ்வளவு நேரம் எல்லாம் எடுக்காம இருக்க மாட்டா” என்றான் அன்னையிடம் தன் மனைவியை விட்டுக்கொடுக்காமல்.
“என்ன விஷயம் ஆதி?? என்கிட்ட சொல்லணும்ன்னா சொல்லு??”
“முக்கியமான விஷயம் தான்மா நீங்களே கூட சொல்லிடுங்க” என்றவன் நயனா விஷயத்தை அவரிடம் சொல்ல “என்ன ஆதி சொல்றே?? இப்போ அந்த பொண்ணு எப்படிப்பா இருக்கா??”
“தெரியலைம்மா நான் ஆஸ்பிட்டல் தான் போயிட்டு இருக்கேன். பார்த்திட்டு சொல்றேன்ம்மா”
“நீங்க அவளையும் கிளம்பி வரச்சொல்லுங்க” என்று சொல்லி மருத்துவமனை முகவரி சொன்னான்.
“ஆதி நானும் வர்றேன்ப்பா…”
“அம்மா நீங்க அப்புறம் வாங்க. நாங்க போய் பார்த்திட்டு சொல்றோம். மாமா வேற ஊருக்கு போயிருக்காங்க போல, நைட் தான் வருவாங்களாம். அதனால தான் சனாவை வரச்சொல்றேன்ம்மா. நீங்க வீட்டில இருங்க சாப்பாடு வேற எதுவும் தேவைன்னா நான் போன் பண்றேன்மா. அப்புறம் நீங்க கிளம்பி வாங்க” என்று சொல்ல அவருக்கும் அதுவே சரியென்று தோன்றியது.
“சரி ஆதி” என்று சொல்லி போனை வைத்தவர் மருமகளை தேடித் போனார்.
“விலோ”
அவர் குரலை கேட்டதும் “அத்தை” என்றவாறே எழுந்து வந்தாள் அவர்கள் அறையில் இருந்து.
“ஆதி போன் பண்ணான்ம்மா. உனக்கு தான் முதல்ல போட்டிருப்பான் போல நீ எடுக்கலைன்னு எனக்கு போட்டான்”
“ஹான்… அது…”
“சைலென்ட்ல போயிடுச்சாம்மா” என்று சொல்லி அவர் மருமகளின் முகத்தை பார்த்தார்.
“ஆ… ஆமா அத்தை அப்படித்தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன்” என்றாள் அவள்.
சந்தியாவிற்கு புரிந்தது இன்னமும் மகனுக்கும் மருமகளுக்கும் இடையில் எதுவும் சரியாய் இல்லை என்று. ஒரு எல்லைக்கு மேல் அவர்கள் அதில் தலையிட முடியாதே அதனால் பேசாமல் இருந்தார். எவ்வளவு தூரம் தான் போகிறது என்று பார்ப்போம் என்று விட்டிருந்தார்.
“நயனாக்கு ஆக்சிடென்ட் ஆகிட்டாம். ஆஸ்பிட்டல் கூட்டிட்டு போயிருக்காங்களாம். அதை சொல்லத் தான் ஆதி உனக்கு போன் பண்ணியிருக்கான். உன்னை உடனே ஆஸ்பிட்டல் வரச்சொன்னான்ம்மா…” என்று சொல்ல விலோசனாவுக்கு குற்றவுணர்வில் கண்ணில் இருந்து கரகரவென்று கண்ணீர் இறங்கியது.
தங்கைக்கு ஒன்று என்றதும் பதறியது தான். அதைவிட தான் அவனின் அழைப்பை ஏற்காமல் இருந்தது பெருங்குற்றமாக தோன்ற அழுகை இன்னும் அதிகமாகியது.
“விலோ எதுக்கும்மா அழறே?? ஒண்ணும் இருக்காது நீ உடனே கிளம்பிப் போ…”
“நானும் வந்திருப்பேன் ஆதி தான் உன்னை மட்டும் அனுப்பச் சொன்னான். உங்கப்பா வேற ஊருக்கு போயிருக்காங்களாம். ஆஸ்பிட்டல் எதுக்கு கூட்டம்ன்னு நினைச்சிருப்பான் போல. நீ போயிட்டு எனக்கு போன் பண்ணுமா, நான் சாப்பாடு கொண்டு வர்றேன்” என்று சொல்லி மருமகளை ஒருவாறு தேற்றி அங்கிருந்து கிளப்பினார் அவர்.
வண்டியை புக் செய்து அவளை அதில் ஏற்றி அனுப்பிவிட்டு ஆதிக்கு அழைத்து சொன்னார். “நான் பார்த்துக்கறேன்ம்மா” என்று சொல்லி வைத்துவிட்டான் அவன்.
ஆதி தான் முதலில் வந்திருந்தான். கதிர் இன்னமும் அறையின் வெளியில் தான் அமர்ந்திருந்தான். காலில் சின்ன தையல் போட வேண்டியிருந்தது போல மருத்துவர் வந்து சொல்லிவிட்டு சென்றார். உள்ளிருந்து நயனாவின் முனகல் குரல் கேட்டு அவனை இம்சை செய்தது.
ஒருவாறு எல்லாம் முடித்து இவனை அழைக்க உள்ளே சென்றான். அவளோ ஓய்ந்து போய் தெரிந்தாள். அருகே சென்றவன் அவள் கால் கட்டைப் பார்த்தான். கொஞ்சம் பெரிதாகத் தான் இருந்தது.
“டாக்டர் இவங்க ஒண்ணுமே சாப்பிடலைன்னு நினைக்கிறேன். என்ன கொடுக்கலாம்??”
“இப்போதைக்கு ப்ரெஷ் ஜூஸ் மாதிரி கொடுங்க. நைட் வேணா இட்லி, இடியாப்பம்ன்னு லைட் டிபன் கொடுங்க”
“வீட்டுக்கு போகலாமா டாக்டர்??”
“இன்னைக்கு இங்க பெட் ரெஸ்ட் எடுக்கட்டுமே??”
“ஓ!!” என்று இவன் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆதி அழைத்துவிட்டான்.
உடனே அழைப்பை ஏற்றவன் “சொல்லு ஆதி எங்கே இருக்கே??”
“ஆஸ்பிட்டல்ல தான் இருக்கேன் கதிர், நீ எங்க இருக்க??”
அவன் வழி சொல்ல ஆதி நேராய் வந்துவிட்டான். நயனாவிடம் எப்படி நடந்தது என்ன ஏதென்று விபரம் கேட்டுக் கொண்டான்.
“ஏன்மா நயனா நீ எனக்கு முதல்ல போன் பண்ணியிருக்கலாம்ல. கதிர் பார்க்கலைன்னா என்னாகியிருக்கும் சொல்லு. மாமாவும் ஊர்ல இல்லையாமே, நீ பேசாம எங்க கூட வந்து இருந்திருக்கலாம்ல” என்று கடிந்தான்.
“இல்லை மாமா அப்பா இன்னைக்கு காலையில தான் ஊருக்கு போனாங்க. நைட் வந்திடுவாங்க மாமா அதான் நானும் ஒண்ணும் சொல்லலை”
“அடிப்பட்டதும் எனக்கு ஏன் போன் பண்ணலை??” என்று கோபமாகவே கேட்டான்.
“நீங்க ஆஸ்பிட்டல்ல இருப்பீங்கன்னு தெரியும் மாமா அதான் பண்ணலை. அக்காக்கு போன் பண்ணேன் அவ எடுக்கலை. எப்படியும் பார்த்ததும் கூப்பிடுவான்னு தான் இருந்தேன்”
“எப்படியும் கொஞ்ச நேரம் பார்த்திட்டு நான் உங்களுக்கு தான் போன் பண்ணியிருப்பேன் மாமா” என்றாள் அவனை சமாதானம் செய்யும் குரலில்.
“என்ன சொல்லு நீ செஞ்சது சரியில்லை. எனக்கு கோபம் தான்” என்றான் பிடிவாத குரலில்.
கதிரும் அவளை முறைத்து தானிருந்தான். “டாக்டர் என்ன சொன்னார் கதிர்??” என்று கேட்க அவன் சொன்னதை கேட்டுக் கொண்டான்.
“இப்போ தான் டாக்டர் வெளிய போனார்” என்று சொல்லவும் “சரி நான் போய் பார்த்திட்டு வந்திடறேன். நீ இங்க துணைக்கு இருடா” என்றுவிட்டு நகர்ந்தான் ஆதி.
அவன் செல்லவும் இவன் அவளை பிடித்துக் கொண்டான். “நீ ஏன் அவனுக்கு போன் பண்ணலை உண்மையை சொல்லு. உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா??” என்று திட்டவும் செய்தான்.
“நான் மாமாகிட்ட சொன்னது உண்மை தான்” என்றாள்.
“என் நம்பர் கூடவா உனக்கு தெரியாது??” என்று கேட்டே விட்டான்.
டேபிளில் இருந்த தன் ஹான்ட் பேக்கை எட்டி எடுத்தவள் அதிலிருந்த கைபேசி எடுத்து இவன் எண்ணை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
“அப்புறம் ஏன்??”
“எதுக்கு கூப்பிடணும்??”
“லூசா நீ?? தனியா இருக்கே ஹெல்ப்க்கு ஆளில்லாம இருக்கே?? ஒரு வார்த்தை சொல்ல வேணாமா யாருக்காச்சும்”
“உங்களுக்கு ஏன் நான் சொல்லணும்??”
“நீ அடி தான் வாங்க போறே??”
“என்னை அடிக்க நீங்க யாரு??”
“எதுக்கு இப்படி என்னை இம்சை பண்றே??”
“நானா??”
“பதிலை மட்டும் சொல்ல மாட்டியா?? கேள்வியா கேட்கறே??”
“என்ன பதில் எதிர்பார்க்கறீங்க நீங்க??”
“ஏன் எனக்கு பேசலை??”
“நமக்குள்ள என்ன இருக்கு?? நான் ஏன் உங்களுக்கு சொல்லணும்ன்னு தோணிச்சு அதான் பண்ணலை…”
“அப்போ எதுக்கு என் கூட வந்தே??”
“நான் வர்றேன் உங்க கூடன்னு சொன்னேனா?? நீங்களா வந்தீங்க பார்த்தீங்க, என்னால முடியலைன்னு சொல்லவும் கூட்டிட்டு வந்தீங்க… சாரி தூக்கிட்டு வந்தீங்க…” என்று அழுத்தம் கொடுத்து சொல்லவும் செங்கதிர் அமைதியானான்.
“என்ன தான் நினைச்சுட்டு இருக்கே நீ??”
“அது தான் உங்களுக்கே தெரியுமே??”
“ப்ளீஸ் நயனா என்னை சோதிக்காத, என்ன சொல்ல வர்றே?? ஏன் அப்படி பண்ணே?? எனக்கு தண்டனை கொடுக்கறதா நினைச்சு வலியோட இருந்திருக்கே ஏன்??”
“நான் வேணுமின்னு ஆக்சிடென்ட் பண்ணலை??”
“யாராச்சும் அப்படி செய்வாங்களா??”
“நீங்க அப்படி நினைச்சுடக் கூடாதுன்னு தான் சொல்றேன். உங்க கடை இருக்கற ரோடு நீங்க அப்படி நினைச்சிட்டா அதான் விளக்கம் சொன்னேன்”
கதிர் அவளின் தாக்குதலில் அயர்ந்து போனான். “நான் அப்படி நினைக்கலை, நினைக்கவும் மாட்டேன்”
“நீங்க வரணும்ன்னு எதிர்பார்த்தேன்”
“அப்போ போன் பண்ணி இருக்கலாம் தானே”
“நான் போன் பண்ணாமலே நீங்க வந்தீங்களே??” என்றாள் வலியை மீறி அழகாய் புன்னகைத்து.
“நீ என்ன நினைச்சுட்டு இப்படி செய்யறே??”
“அதான் உங்களுக்கே தெரியுமே…”
“அன்னைக்கு எதுவும் வேணாம் நீங்க போங்கன்னு சொன்னே??”
“இப்பவும் அதான் சொல்றேன். நான் உங்களை கூப்பிடலை நீங்களா தான் வந்தீங்க. பேசாம விட்டிருங்க என்னை இப்படியே”
“இதென்ன பிடிவாதம்??”
“நான் எந்த பிடிவாதமும் பிடிக்கலை. நான் நானா தான் இருக்கேன், இனிமேலும் அப்படி தான் இருப்பேன்”
“உனக்கு நாளைக்கு கல்யாணம் காட்சின்னு…”
அவள் கையமர்த்தி அவன் பேச்சை நிறுத்துமாறு சொன்னாள்.
“என் கல்யாணத்தை பத்தி உங்களுக்கென்ன அக்கறை?? நீங்க பண்ண ஹெல்ப்க்கு ரொம்ப தேங்க்ஸ், நீங்க கிளம்பலாம்” என்றாள் இப்போது முகத்தில் அடித்து போலவே.
‘தான் அவ்வளவு கீழிறங்கி விட்டோமா, நான் என்ன இவனிடம் கெஞ்சினேனா என்னை ஏற்றுக் கொள் என்று. என் பிடித்தம் சொன்னேன், வேணாம் என்றான் விட்டுவிட்டேன் தானே’
அவளுக்கு அவன் மீது அவ்வளவு கோபம் வந்தது. ச்சே இந்த காதல் ஏன் வந்து தொலைத்தது எனக்கு, அதுவும் இவன் மேல் என்று தன் மேலேயே ஆத்திரம் கொண்டாள்.
கதிருக்கு அவமானமாக இருந்தது. என்ன வார்த்தை சொல்லிவிட்டாள் நான் அவள் நல்லதுக்காக தானே சொல்கிறேன், அதை ஏன் புரிந்துக்கொள்ள மறுக்கிறாள் என்று தான் எண்ணினான் அவன்.
அவன் அவளிடம் மேற்கொண்டு ஒன்றும் பேசவில்லை. அறையில் போடப்பட்டிருந்த பெஞ்சில் சென்று அமர்ந்துக்கொண்டான் ஆதியின் வருகைக்காக.
சில நொடிகளிலேயே ஆதி உள்ளே நுழைந்திருந்தான். “என்னடா டாக்டர்கிட்ட பேசிட்டியா??” என்று எழுந்து வந்தான் கதிர்.
“ஹ்ம்ம் பேசிட்டேன்டா??”
“என்ன சொன்னார்?? வீட்டுக்கு போகலாம்ன்னு எதுவும் சொன்னாரா??”
“இன்னைக்கு நைட் இங்க இருக்கட்டும்ன்னு சொல்றார்”
“ஓ!! அதுவும் சரி தான்” என்றவன் “இவங்கப்பாக்கு தகவல் சொல்லிட்டியாடா ஆதி”
“நல்ல வேளை ஞாபகப்படுத்தினே கதிர்” என்றவன் போனை எடுக்கப் போக நயனாவின் குரல் தடுத்தது.
“மாமா வேணாம் மாமா ப்ளீஸ். இப்போ அப்பாக்கு எதுவும் சொல்ல வேண்டாம். அவங்க வரட்டும் அப்புறம் சொல்லிக்கலாம். அவங்க வேலையா போயிருக்காங்க. அப்பா டென்ஷன் ஆகிடுவார் இதை கேட்டா”
“அவ்வளவு தூரத்தில இருந்து வண்டியில வேற வருவார் மாமா ப்ளீஸ்” என்று சொல்ல ஆதியும் புரிந்து அமைதியானான்.
“அக்கா இன்னும் வரலையே மாமா” என்றாள் நயனா.
“வந்திட்டே இருக்காம்மா…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே விலோசனா ஆதிக்கு அழைத்தாள்.
“உங்கக்கா தான் வந்திட்டான்னு நினைக்கிறேன். நான் போய் கூட்டிட்டு வர்றேன்” என்று வெளியில் சென்றவன் அவள் போனை மட்டும் எடுக்கவில்லை.
வாயிலில் வந்து நிற்க விலோசனா உள்ளே வந்துக் கொண்டிருந்தாள் போனை காதில் வைத்தவாறே. எதிரில் நின்றவனை பார்த்ததும் மீண்டும் குற்றவுணர்வு தலைதூக்கியது அவளுக்கு.
அதை கஷ்டப்பட்டு ஒதுக்கி வைத்துவிட்டு அவனை நோக்கி வந்தாள். “நயன் எங்க இருக்கா?? எப்படி இருக்கா??” என்று கேட்கும் போது கண்களில் கண்ணீர் கசிந்தது.
“ஷி இஸ் ஓகே, உள்ள தான் இருக்கா” என்றவன் முன்னே நடக்க எட்டி நடைப்போட்டு அவனுடன் சேர்ந்து நடந்தாள்.
நயனாவின் அறைக்குள் வந்ததும் பாய்ந்து வந்து தங்கையை கட்டிக் கொண்டாள். அவள் கட்டை கண்டு கண்ணீர் வடித்தாள், பின் அவளிடம் சண்டைப்போட்டு திட்டி பரிதவித்து என்று அனைத்து உணர்வுகளையும் காட்டினாள்.
ஆதி பார்த்துக் கொண்டே தானிருந்தான் ஒன்றும் சொல்லவில்லை. கதிர் தான் முன்னே வந்தான், “ஆதி நான் கிளம்பறேன்” என்று.
“சரிடா நீ போயிட்டு வா… ரொம்ப தேங்க்ஸ்டா” என்று அவன் சொல்ல “தேங்க்ஸ் நீ சொல்லணுமா எனக்கு” என்று நண்பனை முறைத்திருந்தான் கதிர்.
அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினான். நயனாவின் புறம் பார்வையை திருப்ப அவளோ பிடிவாதமாய் அவனை பார்க்க மறுத்து படுத்துக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டாள்.

Advertisement