Advertisement

13
“வாடா புது மாப்பிள்ளை, என்ன இந்த பக்கம் விசிட் போட்டிருக்கே??”
“சும்மா தான் உன்னை பார்த்திட்டு போகலாம்ன்னு வந்தேன்” என்றவனின் முகத்தில் மருந்துக்கும் சிரிப்பில்லை. எதையோ தொலைத்தவன் போல இருந்தான். முகத்தில் அப்படியொரு இறுக்கம் இருந்தது அவனுக்கு. 
“கிளினிக் போகலையா??”
“இல்லை திறக்கலை மனசே சரியில்லை” என்றான் விட்டேத்தியாய்.
“ஆதி இது நீ இல்லை” என்றவன் கடைக்கு ஒரு கஸ்டமர் வரவும் பேச்சை நிறுத்தி அவர்களை கவனித்து அந்த வேலையை முடித்தவன் கடையில் வேலை பார்க்கும் ஒருவரை அழைத்து பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு ஆதியுடன் வெளியில் வந்தான்.
இருவரும் பொடிநடையாய் நடந்து அவர்கள் எப்போதும் செல்லும் அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தனர். இருவருக்கும் ஒரு காபியை சொல்லிவிட்டு செங்கதிர் அவனெதிரில் அமர்ந்துக் கொண்டான்.
“என்னாச்சு ஆதி??”
“ஒண்ணுமில்லை” என்றவன் தங்கள் இருவருக்குள்ளும் நடந்ததை நண்பனிடம் சொல்ல விருப்பமில்லை. 
“சரி எதுவா இருந்தாலும் ரிலாக்ஸா இரு…”
பதிலில்லை நண்பனிடத்தில். “நான் ஒண்ணு சொல்லுவேன் கோவிக்காம கேட்பியா” என்றான் கதிர்.
“என்ன??”
“உன்னோட கோபத்தை குறைச்சுக்கோ”
“நான் அனாவசியமா என்னைக்கு கோபப்பட்டிருக்கேன்” என்று அதையும் கோபமாகவே கேட்டவன் எழுந்து நின்றிருந்தான்.
“இது இது தான் வேணாங்கறேன் ஆதி. இப்படி பொசுக்கு பொசுக்குன்னு உனக்கு கோபம் வருது. அது தான் வேணாம்ன்னு சொல்றேன்”
“எனக்கு உன்னோட கோபம் எப்போ வரும் எப்படி வரும் எவ்வளவு நேரம் இருக்கும் எல்லாம் தெரியும். ஆனா எல்லாருமே அப்படி கிடையாது”
“நான் என்ன சொல்ல வர்றேன்னு உனக்கு புரியும்ன்னு நினைக்கிறேன். உன்னை எல்லாருமே புரிஞ்சு நடக்கணும்ன்னு நீ நினைச்சா நீயும் அவங்களை புரிஞ்சு நடக்கணும் ஆதி புரியுதா” என்றான்.
நின்றிருந்த ஆதி கண்ணை மூடி இருக்கையில் அமர்ந்தான். நண்பன் சொன்னதை தன் மனதிற்குள் கொண்டு வந்து மூளையில் இருத்திக் கொண்டிருந்தான். ‘அவன் சொல்வதும் சரி தான்’ என்பதை உணர்ந்தான். 
‘என்னைப்பத்தி அவளுக்கென்ன தெரியும். அதே மாதிரி அவளைப்பத்தி எனக்கென்ன தெரியும். அவளை முழுசா தெரிஞ்சுக்காம நான் எப்படி கோபப்படலாம், நான் செஞ்சது தப்பு தானே’
‘ஆனா அவ ஏன் அப்படி பேசினா. நான் அவகிட்ட என்னோட மனசை சொல்லத்தானே பேச ஆரம்பிச்சேன். அவளுக்கு ஏன் கோபம் வந்திச்சு. அவகிட்ட நிதானமா பேசிப் பார்க்கணும்’ என்ற ஆதிக்கு தெரியவில்லை அவனுக்கு நிதானமாய் பேசுவதென்றால் என்னவென்பது.
இப்போ என்ன பேசினாலும் அவகிட்ட வேலைக்கு ஆகாது. அப்பாவும் சத்தம் போட்டாச்சு. கொஞ்சம் தனியா யோசிக்கணும் என்று நினைத்தான்.
“சரி விடு கதிர் வேற பேசுவோம்” என்றவன் வேறு பொது விஷயங்களை பேசிவிட்டு வீட்டிற்கு கிளம்பினான்.
அவன் தந்தை அவனிடத்தில் பேசிய நிகழ்விற்கு பிறகு அவன் இன்னமும் விலோசனாவிடத்தில் பேசியிருக்கவில்லை.
அவளிடம் மட்டுமல்ல யாரிடத்திலும் அதிகம் பேசவில்லை. அன்று இவன் தந்தை திட்டியதும் அறைக்குள் வந்து முடங்கினான்.
பின்னோடே விலோசனாவும் சற்று நேரத்தில் வந்திருந்தாள். வந்திருந்தவள் எதுவும் பேசுவாள் என்று எண்ணியிருக்க அவள் இவனையே பார்த்துக் கொண்டிருந்தாலே தவிர ஒன்றும் சொல்லவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்தவன் வெறுத்தவனாக கண் மூடி சற்று நேரம் உறங்கிப் போனான்.
அவன் எழுந்த போது அவள் இன்னமும் அதே நிலையிலேயே அங்கு அமர்ந்திருப்பதை ஒரு புருவ சுளிப்புடன் பார்த்துவிட்டு குளித்து கிளினிக்கிற்கு கிளம்பினான்.
சாப்பிடாமல் இருந்தது வேறு வயிற்றை என்னவோ செய்தது. காபி வரவழைத்து சாப்பிட்டான். அவன் அன்னை கூட அழைத்திருந்தார் வீட்டிற்கு வந்து செல்லுமாறு.
முடிந்ததும் வருகிறேன் என்று சொல்லி வைத்துவிட்டிருந்தான். இரவு பத்தரை மணி போலத்தான் அவன் வீட்டிற்கே வந்தான்.
“இன்னைக்கு ஏன் ஆதி இவ்வளவு லேட்” என்றார் சந்தியா.
எப்போதும் பத்து மணிக்கு உறங்கிவிடும் அன்னை இன்னமும் விழித்துக் கொண்டிருப்பதை கண்டு லேசாய் அதிர்ந்தாலும் தன்னை சமாளித்துக் கொண்டு “நெறைய பேஷண்ட்ஸ்மா” என்றான்.
“சரி போய் ரெப்ரெஷ் பண்ணிட்டு வந்து சாப்பிடு” என்றார்.
விலோசனாவும் அங்கு தானிருந்தாள் அவன் முகத்தையே தான் அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். அதை அவன் உணர்ந்தாலும் அவளிடம் பார்வையை அவன் திருப்பவேயில்லை. நீ முதலிலா நான் முதலிலா பேச்சை தொடங்குவது என்று சடுகுடு ஆட்டம் தான் நடந்தது.
“இல்லைம்மா பசிக்கலை வேணாம்” என்றான்.
“உன்னை போய் ரெப்ரெஷ் பண்ணிட்டு வரச்சொன்னேன்” என்றார் சந்தியா அழுத்தமாய்.
“ஹ்ம்ம்” என்றவன் தங்களறைக்கு சென்று குளித்து இரவு உடைக்கு மாறி வந்தான்.
“உட்காரு”
சொன்னதை செய்யும் கிளிப்பிள்ளை போல அமர்ந்தான். வந்ததில் இருந்து தந்தையை அங்கு காணவில்லை என்பதால் அறையை சுற்றி பார்த்தான். அவர் உறங்கச் சென்றிருந்தார் போல.
இருந்தாலும் அன்னையிடம் கேட்டுக் கொண்டான் “அப்பா எங்கேம்மா??” என்று.
“தூங்கிட்டாங்க”
“சாப்பிட்டாங்களா??”
“நீங்க சாப்பிட்டீங்களா??” என்றவனின் பார்வை அன்னையிடத்தில் வைத்தாலும் கேள்வி தன் மனைவிக்கும் சேர்த்தே தான் கேட்டிருந்தான்.
“நாங்க ரெண்டு பேரும் இப்போ தான் சாப்பிட்டோம்” என்று அவரும் அதை புரிந்தவராய் பதில் கொடுத்தார்.
விலோசனாவிற்கு தான் ‘ஏன் இவர் அதை என்னைப் பார்த்து கேட்க மாட்டாராமா??’ என்றிருந்தது. கணவன் மனைவியிடத்தில் இருக்க வேண்டியது அன்னியோன்னியமும் புரிதலும், இருக்கவே கூடாதது ஈகோவும் சந்தேகமும்.
இங்கு விலோசனாவிற்கு ஈகோ வந்திருந்தது. அன்னையிடத்தில் பேசுகிறான் தன்னிடத்தில் பேசவில்லை என்று.
ஆதி அவளிடத்தில் ஈகோ பார்க்கவில்லை ஆனால் அவன் அவளிடத்தில் பேசி மனதை புண்ணாக்கி கொள்ள விரும்பவில்லை. அதனாலேயே எதையும் அவன் பேசியிருக்கவில்லை.
“சரிம்மா எனக்கு பால் மட்டும் கொடுங்க நான் குடிச்சுட்டு போய் படுக்கறேன்”
“ஒழுங்கா சாப்பிடு ஆதி” என்று அதட்டியவர் மருமகளை ஒரு பார்வை பார்த்தார்.
அதை புரிந்தவளாய் தட்டைக் கொண்டு வந்து அவன் முன் வைத்தவள் அவனுக்கு பரிமாறினாள். வேண்டாமென்றாலும் அன்னைக்காக உணவை விழுங்கியிருந்தான்.
சாப்பிட ஆரம்பித்த பின்னே தான் புரிந்தது அவனுக்கு. தான் எவ்வளவு பசியில் இருந்திருக்கிறோம் என்று. அவ்வளவு வேகமாக தட்டை காலி செய்திருந்தான்.
“அவனுக்கு பாலை காய்ச்சிக் கொடுத்திட்டு நீயும் குடிச்சுட்டு தூங்க போம்மா” என்றார் சந்தியா.
“சரி அத்தை” என்றவள் அவர் சொன்னதை செய்தாள்.
“அத்தை ஒரு நிமிஷம் நீங்களும் குடிச்சுட்டு போங்க” என்றார் அப்போது தான் அங்கிருந்து செல்ல கிளம்ப ஆரம்பித்த சந்தியாவை பார்த்து.
டைனிங் டேபிளில் அமர்ந்து மூவருமே பாலைக் குடித்து முடித்தனர். அப்படியொரு அமைதி யாரும் எதுவும் பேசவில்லை. அன்னை எதுவாவது பேசுவார் என்று நினைத்த ஆதிக்கு ஏமாற்றமே அவர் எதுவுமே கேட்கவில்லை.
அவனுக்கு அவரிடத்தில் பேச வேண்டும் என்ற எண்ணம் அதனால் எழுந்து செல்லாமல் அங்கேயே அமர்ந்திருந்தான்.
“சரி போய் படுங்க” என்று சந்தியா எழுந்திருந்தார்.
விலோசனா ஆதியை தான் பார்த்திருந்தாள். அவன் மனநிலையை கணிக்க முயன்றாள். அவன் பார்வை அன்னையை சுற்றி வருவதை கண்டவள் தானில்லாமல் அவரிடத்தில் பேச நினைக்கிறான் என்று புரிந்தது அவளுக்கு.
மனதின் ஓரத்தில் ஓர் வலி, என்ன கஷ்டமா இருந்தாலும் என்கிட்ட சொல்லக் கூடாதா என்ற கேள்வி வேறு. அவனும் அவளிடத்தில் சரியாய் பேசியிருக்கவில்லை அவளும் பேசியிருக்கவில்லை.
இதில் அவனை மட்டும் அவள் வசதியாக குற்றம் சாட்டிக் கொண்டாள். “குட் நைட் அத்தை” என்றுவிட்டு அவள் நகர சந்தியா அறைக்கு செல்ல திரும்பினார்.
“அம்மா” என்று அழைத்துவிட்டான் ஆதி.
“சொல்லு ஆதி”
“சாரிம்மா”
“எதுக்கு??”
“அப்பா சொல்லலையா??”
“என்ன சொல்லணும்??”
“அம்மா ப்ளீஸ்…”
“உங்களுக்குள்ள என்ன பிரச்சனை??”
“அம்மா…”
“சொல்லு ஆதி”
“அப்படியெல்லாம் எதுவுமில்லைம்மா”
“இருக்கக்கூடாதுன்னு தான் நானும் நினைக்கிறேன். ஆனா ஏதோ இருக்கு, அதுக்கு நீயும் ஒரு காரணம்ன்னு எனக்கு தெரியும்”
“அவளை உனக்கு பிடிச்சிருக்கு தானே. அப்போ பொறுத்து போ, உன்னை அவளுக்கு புரிய வை. இப்படி உன் கோவத்தை எல்லாம் பொருளை தூக்கி போட்டு உடைக்கிறதுல காட்டாத”
“கோபமே வராத மனுஷன் அவருக்கே நீ செஞ்சதை பார்த்து கோபம் வந்திடுச்சு. வேணாம்ப்பா இவ்வளவு கோபம் நல்லதில்லை”
“உங்க சண்டை பத்தி எனக்கு தெரிய தேவையில்லை. எதுவா இருந்தாலும் அந்த ரூமைவிட்டு வெளிய வரக்கூடாது. அங்கவே பேசி தீர்க்கணும். நீ விரும்பின வாழ்க்கை இது அதை குறை சொல்லாத அளவுக்கு வாழ்ந்துக் காட்டு”
“இதுக்கு மேல எனக்கு சொல்ல எதுவுமில்லை ஆதி” என்று முடித்தார் அவர்.
“அம்மா உங்களுக்கு என் மேல கோவமில்லையா??”
அவர் தலையசைத்தார் இல்லையென்று. “அம்மா” என்றவன் அவர் கையை பிடித்துக் கொண்டான் ஒன்றும் சொல்லாமல்.
“போ ஆதி போய் உன் பொண்டாட்டியை சமாதானம் பண்ணு” என்று மகனின் தலை கோதினார்.
“எங்களுக்கு உன்னை தெரியும் ஆதி. அவ புதுசு புரிய வை, இல்லையா அவளுக்கு ஏத்த மாதிரி நீ மாறிக்கோ. புருஷன் பொண்டாட்டிகுள்ள நீயா நானா போட்டி வரக்கூடாது” என்றார் இறுதியாய்.
ஆதியும் யோசிக்க ஆரம்பித்தான். கதிர் சொன்னது போலவே தான் அன்னையும் சொல்லியிருந்தார். அவளுக்கு என்னை தெரியாது தானே, நான் தானே புரிய வைக்க வேண்டும் என்ற யோசனையோடு அறைக்குள் நுழைந்தான்.
விலோசனா கண்ணை மூடி படுத்திருந்தாள். அருகே வந்து படுத்தவன் அவள் தோளை தொட்டான். அதை உணர்ந்தாலும் அசையாமல் படுத்திருந்தாள் அவள்.
“சனா”
பதிலில்லை மீண்டும் அழைத்தான். அப்போதும் ஒன்றும் சொல்லவில்லை அவள்.
“சனா எனக்கு தெரியும் நீ இன்னும் தூங்கலை”
“தெரியுது தானே அப்புறம் எதுக்கு கூப்பிடறீங்க??” என்றாள் வெடுக்கென்று.
ஆதி அயர்ந்து போனான். எனக்கு மேல இவளுக்கு கோபம் வருதே என்று நினைக்கவும் செய்தான். ஆனால் அதை வெளியில் சொல்லவில்லை அவன்.
“உன்கிட்ட பேசணும்”
“என்ன பேசணும்??”
“நீ ஏன் என்கிட்ட சண்டை போடுற மாதிரியே பேசறே??”
“என்னை பார்த்தா சண்டைக்காரியா தெரியுதா உங்களுக்கு” என்று எழுந்தமர்ந்திருந்தாள்.
“இங்க பாரு விலோசனா உன்கிட்ட வார்த்தைக்கு வார்த்தை என்னால பேச முடியாது. சொல்லு உனக்கு என்ன பிரச்சனை??”
“எனக்கு என்ன பிரச்சனை??”
“கோவமா இருக்கியா??”
“எனக்கு ஏன் அதெல்லாம் வரணும்??”
எப்படி போனாலும் அவள் திருப்பி அடிக்க அவன் நொந்து போனான். அவளின் அயராத கேள்வியில்.
“சாரி”
“மன்னிப்பு கேட்டா எல்லாம் சரியாகிடுமா”
“என் மேல என்ன கோபம் இருந்தாலும் நான் என்ன பண்ணியிருந்தாலும் அதுக்கெல்லாம் சேர்த்து மொத்தமா சாரி கேட்கறேன். முடிஞ்சா மன்னிச்சுக்கோ” என்றவன் பேசாமல் படுத்துக்கொண்டான்.
“அவ்வளவு தான்ல” என்று ஆரம்பித்தாள் அவள்.
“வேணாம் நைட்ல எந்த பிரச்சனையும் பண்ணிக்க வேணாம், அப்புறம் பேசுவோம்” என்று முடித்தான்.
“அப்போ நான் தான் எல்லா பிரச்சனையும் பண்றேனா?? என்னை நீங்க என்னன்னு நினைச்சுட்டு இருக்கீங்க” என்று அவள் தொடர “என்னை விட்டிரு நான் எதுவும் பேச தயாரா இல்லை”
“பேசணும்ன்னு சொல்லிட்டு எதுக்கு என்னை எழுப்பினீங்க”
“அதை கேட்க நீ தயாரா இருந்தியா” என்றான் இவனும் சற்று சத்தமாகவே.
“பெரிசா என்ன சொல்லிட போறீங்க”
ஆதி கையெடுத்து கும்பிட்டான். “பேசாம படும்மா, ஏற்கனவே நான் ரொம்ப நொந்து போயிருக்கேன். அப்பா திட்டினார், அடுத்து எங்கம்மாவும் என்னை திட்டணுமா, இதுவரை எங்கப்பா என்னை எதுவுமே சொன்னதில்லை”
“நான் செஞ்சது எந்தளவுக்கு தப்போ அப்படித்தான் நீ சொன்னதும் தப்பு அது உனக்கு புரியுதா இல்லையா. ஆமா நான் உன்னை பார்க்க வந்தப்போ பிடிக்கலைன்னு சொன்னேன்”
“அது ஏதோ நீ என்னை பார்க்கலைன்னு ஒரு ஆதங்கத்துல சொல்லிட்டேன். உன்னை பிடிக்க போய் தானேடி திரும்ப வந்தேன் அப்புறமும் அதை புரிஞ்சுக்காம ஏன் இப்படி என்னை கொல்ற??”
“இன்னைக்கு எனக்கு உடம்பு முடியாம தான் ஆஸ்பிட்டல் இருந்து சீக்கிரமே வீட்டுக்கு வந்தேன். அது கூட உனக்கு புரியலை ஓகே, நான் தான் சொன்னேன்ல உடம்பு முடியலைன்னு அப்புறமும் நீ தானே என்னை வம்பிழுத்தே சொல்லு நீ தானே வம்பு பண்ணே”
“என்னால இப்போ என்ன சொல்லியும் உனக்கு புரிய வைக்க முடியாது. சோ நாம பேசாம இருக்கறதே நல்லது. எனக்கு இப்போ தூங்கணும் டேப்லெட் போட்டிருக்கேன்” என்றவன் கண்ணை இறுக மூடிக் கொண்டான். விலோசனாவும் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.
——————–
செங்கதிர் அவனின் புதுக்கடைக்கு வந்திருந்தான். அவர்கள் முன்பிருந்த கடைக்கு சற்று தள்ளி ஒத்திக்கு எடுத்திருந்தான் அந்த கடையை.
சற்று பெரிதாய் விஸ்தாரமாய் இருந்தது அந்த கடை. பெண்களுக்கும் தைக்க தனியே ஆள் போட்டிருந்தான். காலையில் எப்போதும் பழைய கடையில் தான் இருப்பான். மதியம் உணவு வேளைக்கு பிறகு புதுக்கடைக்கு ஒரு விசிட் செய்வான்.
இப்போதும் அதற்காக தான் வந்திருந்தான். அந்த கடை முதல் மாடியிலிருந்தது. உள்ளே ஒரு பார்வையை ஓட்டி முடித்து வெளியே வந்து எட்டிப் பார்த்தான்.
சற்று தள்ளி தெருவில் ஓரிடத்தில் கூட்டமாய் இருந்தது. ‘ஏதோ பிரச்சனை போல’ என்று எண்ணிக்கொண்டான். “அண்ணே டீ இன்னும் வரலையா. இங்க எத்தனை மணிக்கு கொண்டு வருவாங்க” என்று இங்கிருந்தே உள்ளே குரல் கொடுத்தான்.
“இனிமே தான் வருவாருப்பா. அங்க கடைக்கு முதோ கொடுத்திட்டு தான் இங்க வருவான் பையன்”
“ஓ!!” என்றவன் “சரி நான் கீழே கடையில போய் குடிச்சுட்டு வர்றேன். தலைவலிக்கிற மாதிரி இருக்கு” என்று சொல்லிவிட்டு கீழே இறங்கினான்.
ரோட்டிற்கு அந்த புறம் தான் டீ கடை இருந்தது. அந்த கூட்டத்தை தாண்டி தான் சென்றான். டீ குடித்துவிட்டு மீண்டும் கடைக்கு வர அவன் கடையில் வேலை பார்ப்பவர் கூட்டத்தை பார்வையிட்டு அங்கு வந்துக் கொண்டிருந்தார்.
“என்ன கமல் பிரச்சனை அங்க??”
“நானும் பிரச்சனைன்னு நினைச்சு தான்ண்ணே போனேன். ஆனா அது வேற” என்றான் அவன்.
“அப்புறம் அங்க எதுக்கு போய் பார்த்தீங்க??”
“அது வந்துண்ணே அங்க ஒரு பொண்ணுக்கு சின்ன ஆக்சிடென்ட் ஆகிப்போச்சு. கால்ல லேசா அடி போல, டாக்டர்கிட்ட போகச்சொல்லி சொன்னா வீட்டில இருந்து வருவாங்க. அப்புறம் போய்க்கறேன்னு சொல்லிட்டு அங்கவே உட்கார்ந்திருக்கு வீம்பா…” என்றான் அவன்.
“அவ என்ன லூசா வீட்டில இருந்து எப்போ வருவாங்க இவ எப்போ போவ, அதுக்குள்ளே பெரிசா எதுவும் ஆகிட்டா என்ன செய்வாளாம்” என்றான் இவன்.
“அது எதுக்குண்ணே நமக்கு, அது அதோ திமிர் பிடிச்ச பொண்ணு போல எல்லாம் சொல்றாங்க கேட்காம அடமா உட்கார்ந்திருக்கு” என்றுவிட்டு அவன் உள்ளே சென்றான்.
‘ரொம்ப கொழுப்பு பிடிச்சவ போல’ என்று நினைத்துக்கொண்டு இவனும் மேலே செல்லப் போனவன் ‘நாம போய் சொல்லிப் பார்ப்போமா, பாவம் அந்த பொண்ணு வீட்டிலையும் பயப்படுவாங்கல’ என்ற யோசனையோடு சாலையை கடந்து அந்த கூட்டத்திற்குள் நுழைய அதிர்ச்சி அவனுக்கு.
நயனா தான் அங்கு ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தாள் காலை பிடித்துக்கொண்டு. வலியுடன் இருக்கிறாள் என்பது அவள் முகத்திலேயே தெரிந்தது.
அருகிருப்பவர்களை தள்ளிக்கொண்டு அவளிடம் சென்றான். “என்னாச்சு??” என்று.
பழகிய குரலில் நிமிர்ந்து பார்த்தவள் பின் திரும்பிக் கொண்டாள். “ரொம்ப ராங்கி பிடிச்சவ” என்று அருகேசிலர் சொல்லக் கேட்டவனுக்கு கோபம் வந்தது.
“உன்னை தான் கேட்டேன் என்னாச்சு” என்றான் அழுத்தமாய்.
“சின்ன ஆக்சிடென்ட்” என்று முடித்துக் கொண்டாள்.
“எழுந்திரு”
“இல்லை வீட்டுக்கு போன் பண்ணியிருக்கேன், வரவும் போகறேன்” என்றாள்.
கதிர் யாருக்கோ போனில் அழைத்தான். பேசிவிட்டு மீண்டும் யாருக்கோ அழைத்தான் சற்று நேரத்தில் அவன் அழைத்தவர் வந்துவிட “வண்டி சாவியை கொடு” என்றான்.
“எதுக்கு??”
“கொடு” என்று அதிகாரமாய் சொல்லவும் அதை எடுத்து நீட்டிவிட்டாள். “நம்ம கடையில விட்டிரு, உள்ள ஏத்திவிடு, லாக் போட்டிரு. சாவியை என்னோட டேபிள்ள வைச்சுடு” என்றான்.
“நீங்க தான் அவங்களோட சொந்தக்காரங்களா, எமமா இப்போவாச்சும் டாக்டர்கிட்ட போம்மா” என்றார் ஒருவர்.
அதற்குள் ஆட்டோ ஒன்று வரவும் “வா” என்று கையை நீட்ட “நான் வரலை”
“வான்னு சொன்னேன்”
“என்னால முடியலை” என்று சொல்லும் போது கண்களில் நீர் நிறைந்துவிட அவனுக்கு என்னவோ போலானது.
“எழுந்துக்க முடியலையா” என்று கேட்க அவள் வீழி நீர் வெளியே வழிந்தது. சட்டென்று அவளை தூக்கிவந்து ஆட்டோவில் அமர வைத்தான்.

Advertisement