Advertisement

12
இரவு உணவுக்கு பின் வேலை எல்லாம் முடித்து அப்போது தான் அறைக்குள் நுழைந்திருந்தாள் விலோசனா.
ஆதித்யன் மொபைலில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான். இன்று அவளுடன் பேசிவிடுவது என்று அவளுக்காக காத்திருந்தான்.
குளியலறை சென்று வந்தவள் கட்டிலில் அந்த பக்கம் சென்று படுக்க ஆயத்தமாக “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றிருந்தான் அவள் கணவன்.
“சொல்லுங்க” என்று அவள் அங்கிருந்த வாக்கிலேயே சொல்ல இவன் எழுந்துச் சென்று அவளருகே அமர்ந்துக்கொண்டான்.
ஆதி அவள் கையை எடுத்து தனக்குள் வைத்துக் கொண்டான். அன்று அவள் வீட்டிற்கு சென்று வந்ததில் மனம் சற்று நெகிழ்ந்திருக்கவே அவன் செயலை எதிர்க்கவில்லை அவள்.
“என்னை பாரு சனா”
அவள் நிமிர்ந்து அவனைப் பார்க்க “இனிமே நீ எப்பவும் லென்ஸ் போடாத”
“முடியாது” என்றவளின் முகத்தில் தீவிர பாவம்.
“ப்ளீஸ்… நான் சின்ன வயசுல ஒரு பொண்ணை பார்த்தேன். அப்போல இருந்து ஒரு ஆசை அப்படி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு”
அவளிடம் சத்தமேயில்லை. அவனே தொடர்ந்தான். “அந்த பொண்ணை நான் முத முதல்ல ஆஸ்பிட்டல்ல தான் பார்த்தேன். அவளுக்கு அப்போ பதிமூணு இல்லை பதினாலு வயசு இருக்கலாம்”
“உடம்பு சரியில்லைன்னு பார்க்க வந்தா… நான் அப்போ ட்ரைனியா இருந்தேன். அப்போ தான் பார்த்தேன். எவ்வளோ அழகான நீல கண்ணு தெரியுமா அவளுக்கு, அப்புறம் அந்த சுருட்டை முடி அவ்வளவு அழகு”
“அப்போல இருந்து எனக்கு மனசுக்குல ஒரு பாட்டு தான் ஓடும். நீ கூட ஸ்கூல்ல கேட்டிருப்ப, சப்பி சீக்ஸ், டிம்பிள் சின், ரோசி லிப்ஸ், ஐஸ் ஆர் ப்ளூ, கர்லி ஹேர், வெரி ஃபேர்” என்றவன் மேலும் தொடர்ந்தான்.
அவளோ அப்படியொரு அமைதியாய் இருந்தாள், மூச்சுவிடும் சத்தம் கூட கேட்கவில்லை. “பாரேன் உன் கண்ணை இப்படி லென்ஸ் இல்லாம பார்க்கறதுக்கு எப்படி இருக்கு தெரியுமா”
“அப்படியே மயக்குது என்னை, கிறங்கடிக்குது… யூ லுக் வெரி ஹாட்” என்று அவன் ஒருவித மோன நிலையில் சொல்லிக் கொண்டிருக்க “இப்போ நிறுத்தறீங்களா இல்லையா” என்று அந்த அறையே அதிர கத்தினாள் அவள்.
“என்னாச்சு??”
“அப்… அப்போ உனக்கு என் கண்ணு பிடிச்சு இருக்கு, என் முடி பிடிச்சிருக்கு அதுக்கு தான் என்னைய கட்டிக்கிட்ட அப்படித்தானே” என்றாள் மரியாதைவிட்டு.
“ஏன் ஒரு மாதிரி பேசறே நீ??”
“வேற எப்படி பேசணும்ன்னு நீ நினைக்கிறே?? உங்களுக்குலாம் எங்களை பார்த்தா எப்படிடா தெரியுது. உன் கண்ணு பிடிக்கும் மயக்குது இப்படிலாம் பேசி தான் ஒரு பொண்ணை கவுக்கணும் நினைப்பீங்களா…”
“போதும் எனக்கு தெம்பில்லை. உங்களை எல்லாம் எந்த விதத்துலயும் நான் டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு தானே கண்ணை மறைச்சு லென்ஸ் போடுறேன். அப்புறம் ஏன்டா என்னை சாவடிக்கறீங்க??” என்றவள் வெறி வந்தவள் போல கத்தினாள்.
“இனிமே கண்ணு நல்லா இருக்கு, முடி இப்படி இருக்கு, நீ அழகு அது இதுன்னு எதாச்சும் சொன்னே. நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” என்று உக்கிரமாய் சொல்ல அதுவரை அவளின் அதிரடியில் அடங்கியிருந்த ஆதியின் கோபம் சீண்டப்பட்டிருந்தது அவளின் பேச்சில்.
“ஏய் என்ன நினைச்சுட்டு இருக்கே உன் மனசுல பெரிய ரம்பைன்னா. நான் என்ன சொல்ல வர்றேன்னு தெரியாம நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு பேசுற. புருஷன்னுக்கு மரியாதை கொடுக்கணும்ன்னு இல்லாம டா போட்டு பேசறே” என்று பதிலுக்கு எகிறினான் அவன்.
“அப்படி தான் பேசுவேன். நீ கண்ணு மூக்கு மானே தேனேன்னு பேசினா அப்படித்தான்டா பேசுவேன்” என்று அவனுக்கும் மேலேயே கத்தினாள்.
“உனக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு. எதுக்கு இப்படி பேசிட்டு இருக்கே??”
“என்ன பேசினேன் ஹான் என்ன பேசினேன் நீ பேசினது விடவா. பொண்ணு பார்க்க வந்தா என்ன வேணா பேசுவியா நீ, உலக அழகியான்னு கேட்டே?? இப்போ எதுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டே”
“அப்போ உன் கண்ணுக்கு நான் அழகா தெரிஞ்சிருக்கேன் அதானே…” 
ஆதி அவளின் பேச்சில் குழம்பி போய் அமர்ந்திருந்தான். ‘என்ன பிரச்சனை?? இவளுக்கு எதுக்கு இப்படி என்னென்னவோ பேசிட்டு இருக்கா?? அப்போ இவ்வளவு நாளும் நான் பேசினதை மனசுல வைச்சுட்டு தான் இப்படி பழி வாங்குறாளா??’
‘அதுக்காக தான் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாளா’ என்று யோசித்தவனுக்கு அப்படியொரு கோபம் வர “என்னடி பேசிட்டே இருக்கே?? ஆமாடி இப்பவும் சொல்றேன் நீ என்ன உலக அழகியா??”
“உன்னை கல்யாணம் பண்ணா நீ என்ன வேணா பேசுவியா??”
“அதான் கேட்கறேன் என்னை எதுக்கு இப்போ கல்யாணம் பண்ணே”
“உன்கிட்டலாம் மனுஷன் பேச முடியாது” என்றவன் அவள் சற்று முன் கொண்டு வந்து வைத்திருந்த பால் தம்ளரை தூக்கி விசிறியடித்து அறையில் இருந்து வெளியேறினான். அவளிடம் மனதில் உள்ளதை சொல்லி புரிய வைத்து தங்கள் வாழ்வை தொடங்கலாம் என்றவன் இருக்க அவளோ அவனுக்கும் மேல் தனக்கு கோபம் வரும் என்று நிரூபித்திருந்தாள்.
அவள் அவனிடம் மரியாதையின்றி பேசியதில் அவனுக்கு அப்படியொரு வருத்தம். அவனாக சென்று அவளிடத்தில் பேசவே இல்லை. அவளும் பேச எந்த முயற்சியும் எடுக்கவும் இல்லை.
உனக்கே இவ்வளவுன்னா எனக்கு எவ்வளவு இருக்கும் என்பது போல தான் இருந்தது இருவரின் மனநிலையும். விலோசனாவும் ஆதியும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பதாகவே இல்லை. 
விலோசனாவிற்கு ஆதியின் முந்தைய புறக்கணிப்பில் இருந்து இன்னமும் வெளியில் வரமுடியவில்லை. அவனைவிட்டு வேறெதையும் யோசிக்கவும் முடியவில்லை.
அவனின் பேச்சில் சில பழைய கசப்பான நிகழ்வுகளையும் அவள் கண் முன் கொண்டு வரவே அவனிடத்தில் அப்படியொரு கோபமாய் பேசியிருந்தாள்.
பெரியவர்கள் முன் இருவரும் பெரிதாய் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. அன்று காலை மருத்துவமனை சென்றுவிட்டு கொஞ்சம் முன்னதாகவே வீட்டிற்கு வந்திருந்தான்.
சந்தியா அருள்செல்வன் இருவரும் வேலையில் இருந்து வந்திருக்கவில்லை. வீட்டில் விலோசனா தான் இருப்பாள் என்று அவனுக்கு தெரியும். இன்னொரு முறை அவளிடம் பேசலாமா என்றொரு எண்ணம் உதித்தது அவனுக்குள்.
‘என்னை நிஜமாவே பிடிக்கலையா அவளுக்கு. என் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டா இப்படி பேச மாட்டா தானே. நான் அவளை பார்க்கும் போது அவ கண்ணை பார்த்தா ஓகே சொன்னேன்’
‘அன்னைக்கு என்னல்லாம் பேசிட்டா, அவளை நிஜமாவே பிடிச்சு போய் தானே தேடித் போனேன். நான் சொல்ல வர்றதை முழுசா கேட்காம என்னென்னவோ பேசி ச்சே!! எனக்கும் கோபம் ரொம்ப தான் வருது’ என்று நினைத்துக்கொண்டே காலிங்பெல்லை அழுத்தினான்.
விலோசனா தான் திறந்தாள் முகம் முழுதும் வியர்வை துளிகள். அந்த நேரத்தில் அவனை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.
“காபி வேணும்”
“சாப்பிடற நேரம் தானே முதல்ல சாப்பிடுங்க” என்றாள்.
“அப்போ குளிச்சுட்டு வர்றேன்” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தவன் அவர்கள் அறைக்குள் நுழைந்தான்.
பத்து நிமிடத்தில் குளித்து வேறு உடைக்கு மாறி வந்தவனுக்கு அப்படியொரு சோர்வாக இருந்தது. காய்ச்சல் வரும் போல ஒரு உணர்வு.
“சாப்பிட வாங்க” என்று விலோசனா அழைக்கவும் டைனிங் டேபிளுக்கு சென்றான்.
அவள் பரிமாற தடுத்தவன் “ரசம் போதும்” என்றுவிட்டு அதை ஊற்றிக்கொண்டான்.
“ஏன் நாங்க குழம்பு வைச்சா சாப்பிட மாட்டீங்களா??” என்று பட்டென்று அவள் கேட்டுவிட அவனுக்கு சுர்ரென்று கோபம் வந்தது. 
“நான் அப்படி சொன்னேனா இப்போ??” என்றான் தன் கோபத்தை உள்ளடக்கி.
“அப்போ ஊத்திக்க வேண்டியது தானே, எதுக்கு ரசம் மட்டும் ஊத்திக்கறீங்க??”
“கொஞ்சம் உடம்பு சரியில்லை”
“சும்மா சொல்லாதீங்க… நீங்க எப்பவும் இப்படித்தான், முன்னுக்கு பின் முரணாவே பேசவேண்டியது”
“என்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டு போயிட்டு திரும்ப வந்து கட்டிக்கறேன்னு சொன்ன ஆளு தானே நீங்க” என்று அவள் வார்த்தையை விட வந்த கோபத்தில் தட்டை எடுத்து அவன் வீசி அடிக்க அது வாயிலில் சென்று விழுந்தது.
அருள்செல்வன் உள்ளே வந்துக் கொண்டிருந்தார் அப்போது. சத்தம் கேட்டு விரைந்து வந்தவர் லேசாய் மூடியிருந்த கதவை தள்ளித் திறக்க காலில் தட்டுப்பட்டது மகன் வீசி எறிந்த தட்டு.
ஆதியை எரித்துவிடும் பார்வை பார்த்தார். இதுவரை மகனை அவர் கண்டித்து ஒரு வார்த்தை சொன்னதில்லை எப்போதும்.
இன்றைய அவன் செயலை அவரால் மன்னிக்க முடியவில்லை. “என்ன ஆதி இதெல்லாம்??” என்று கடுமையாகவே கேட்டார்.
அவரின் இந்த கோபம் அவனுக்கு புதிது. கோபமாக இருந்தாலும் ஒரு வார்த்தை அவர் சொன்னதில்லை. இன்று கேள்வி வேறு கேட்கவும் அவன் செய்த செயல் உணர்ந்தான்.
ஆனாலும் மன்னிப்பு கேட்கவெல்லாம் தோன்றவில்லை. பேசாமலே நின்றிருந்தான். ஆசிரியர் திட்டும் போது பேசாமல் எழுந்து நின்று கேட்டுக்கொள்ளும் பிள்ளை போலவே நின்றிருந்தான்.
“கேட்கிறேன் ஆதி பதில் சொல்லு, என்ன இதெல்லாம் அப்படி என்ன உனக்கு கோபம்?? சாப்பிடுற சாப்பாட்டை வீசி அடிக்கற அளவுக்கு தப்பில்லையா…”
“அப்பா…” என்றானே தவிர இப்போதும் வேறொன்றும் அவன் சொல்ல முற்படவில்லை. தங்கள் சண்டை தங்களுக்குள் என்று தான் பேசாமல் நின்றிருந்தான்.
விலோசனா தான் அருள்செல்வனை இமைகொட்டாமல் பார்த்திருந்தாள். அவள் அந்த வீட்டிற்கு வந்து இந்த மூன்று மாதத்தில் இன்று தான் அவரை இப்படி கோபமாய் பார்க்கிறாள்.
சத்தம் போட்டு பேசியும் இன்று தான் கேட்கிறாள். எப்போதும் மாமியாரின் குரல் தான் அந்த வீட்டில் ஓங்கி ஒலிக்கும், அதைவிட்டால் ஆதி பேசுவான் ஆனாலும் இவ்வளவு சத்தமாக எல்லாம் அவனும் பேசியதில்லை.
அவர் விடாமல் தொடர்ந்து அவனை பேசி தீர்த்துவிட்டார் அன்று. அந்த வீட்டில் அதிசயம் நிகழ்ந்துக் கொண்டிருந்தது பேசாதவர் பேசுகிறார், முன்கோபியவன் அமைதியாய் எந்த எதிர்ப்புமில்லாமல் அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறான்.
அவனின் தோற்றத்தை கண்டவளுக்கு திகிலாக இருந்தது. தான் கொஞ்சம் நிதானமாக பேசியிருக்க வேண்டும், தன்னால் தான் அவன் ஆத்திரமடைந்தான் என்பதை நேரம் கழித்தே உணர்ந்தாள்.
அருள்செல்வனோ மருமகள் அங்கிருக்கிறாள் என்பது உணர்ந்தும் அவனிடம் பேசிக் கொண்டிருந்தார். “நான் இவ்வளவு பேசறேன் நீ அமைதியா இருந்தா என்ன அர்த்தம்” என்றார் கடைசியாய்.
“நீங்க பேசும் போது குறுக்க பேச வேணாம்ன்னு இருந்தேன்ப்பா. மன்னிச்சிடுங்கப்பா இனிமே இப்படி எப்பவும் நடக்காது” என்றவன் திரும்பி தன் மனைவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு கீழே விழுந்திருந்த தட்டை எடுக்கச் சென்றான்.
விலோசனாவோ சிலைப் போலவே நின்றாள். அவன் தட்டை எடுக்கச் செல்லவும் உணர்வு வந்தவளாக அவன் பின்னேயே சென்றாள்.
“கொடுங்க” என்று கேட்க அவன் எடுத்திருந்தவன் அவளை பாராது கீழே சிந்தியிருந்ததையும் எடுத்து சுத்தப்படுத்தியவன் நேரே சமையலறை சென்று அதை வைத்துவிட்டு வந்து வீட்டை துடைத்துவிட்டான்.
மகனின் இந்த செயலில் அருள்செல்வனின் கோபம் சற்று மட்டுப்பட்டது. விலோசனாவை எதையும் செய்யவிடாது அவனே எல்லாம் துடைத்து சுத்தம் செய்து அவன் அறைக்கு சென்றுவிட்டான்.
வீடே போர்க்களமாகி அமைதியும் அடைந்திருந்தது சந்தியா மாலை வீட்டிற்கு வந்த போது. அருள்செல்வனே மனைவிக்கு அழைத்து நடந்ததை சொல்லியிருந்தார். அவரால் எப்போதும் எதையும் மனைவியிடத்தில் சொல்லாதிருக்க முடியாது.
அவர் வீட்டிற்கு வந்த போது உணவு மேஜையில் உணவு அப்படியே இருந்தது. யாரும் சாப்பிட்டிருக்கவில்லை. 
சந்தியா வீட்டிற்குள் நுழைந்தவர் ஹாலில் யாருமில்லாதது கண்டு நேராக தங்கள் அறைக்கு சென்றார். கையில் இருந்ததை மேஜையில் வைத்துவிட்டு கணவரின் அருகில் சென்று அமர்ந்தார்.
“ரொம்ப சத்தம் போட்டீங்களா??”
“நான் தான் உனக்கு அப்போவே போன் பண்ணி சொன்னேன்ல”
“சொன்னீங்க ஆனா வீடே அமைதியா இருக்கு. விலோ இருக்கும் போதே பேசினீங்களா”
“பின்னே பேசாம என்ன செய்வேன். அந்த பொண்ணுகிட்ட அப்படி கோபத்தை காட்டணுமா அவன். புருஷன் பொண்டாட்டி சண்டை எதுவா இருந்தாலும் நாலு சுவத்துக்குள்ளன்னு தெரியாதா அவனுக்கு”
“இப்படி நடுவீட்டில உட்கார்ந்துக்கிட்டு தட்டை தூக்கி அடிப்பாங்களா” என்றார் இன்னமும் உஷ்ணமான குரலில்.
“அவன் என்ன சொன்னான்”
“நீ என்ன திரும்ப முதல்ல இருந்து ஆரம்பிக்கறே, அதான் நான் எல்லாமே உனக்கு போன் பண்ணி சொன்னேன்ல”

“நான் அதை கேட்கலை அப்போ அவன் முகம் எப்படி இருந்துச்சு” என்றார் அவர்.
எந்தவொரு தாய்க்கும் இருக்கும் பதைப்பு தான் அது. அவர்கள் அடித்தாலும் திட்டினாலும் அது பெரிய விஷயமாக இருக்காது. வேறு யாரும் தங்கள் மக்களை சொன்னால் முகம் வாடித்தானே போகும். அது கணவரேன்றாலும் கூடத்தானே. 
“சந்து” என்றார் மனைவியின் அமைதியில்.
“ஹ்ம்ம்”

“என்னாச்சு”
“அவன் எதுவும் பேசலைன்னு சொன்னீங்களா அதான் கவலையா இருக்கு”
“செஞ்சது தப்பு அதுல அவன் திருப்பி வேற பேசுவானா” என்றார் அவர்.
மேற்கொண்டு அவரிடம் மகனைப் வேறு பேச்சை வளர்த்தவில்லை அவர். “நீங்க எதுவும் சாப்பிட்டீங்களா??” என்று கேட்டார்.
“இல்லை” என்று அவர் சொல்லவும் வேகமாய் எழுந்து சென்று குளித்துவிட்டு சமையலறை புகுந்திருந்தார். டைனிங் டேபிளில் இருந்தவற்றை எடுத்து ஒழுங்குப்படுத்திவிட்டு மாலை சிற்றுண்டி செய்தார்.
முதலில் கணவருக்கு காபி கொடுத்து சிற்றுண்டி கொடுத்தவர் மகனின் அறைக்கு சென்றார். அவர்கள் அறைக்கதவை சாத்தியிருந்தது. மெதுவாய் கதவை தட்ட விலோசனா எழுந்து வந்திருந்தாள்.
“அத்தை எப்போ வந்தீங்க” என்றவள் அப்போது தான் நேரம் பார்த்து “சாரி அத்தை டைம் பார்க்கலை” என்று நெளிய “முகத்தை கழுவிட்டு போய் விளக்கேத்தும்மா” என்றவர் மகனைத் தேடினார்.
அவன் அங்கிருக்கவில்லை. “ஆதி எங்கேம்மா??”
“வெளிய போனாங்க அத்தை”
“எப்போ??”
“கொஞ்ச நேரம் முன்னாடி தான்” என்று அவள் சொல்ல அவர் வேறொன்றும் கேட்டுக்கொள்ளவில்லை. என்ன பிரச்சனை என்றாலும் அது அவர்களே பேசிக் கொள்ளட்டும் என்றுவிட்டார். 
மகனுக்கு உடனே போன் செய்தார். “சொல்லுங்கம்மா” என்றான்.
“வீட்டுக்கு வா ஆதி”
“கிளினிக் வந்தேம்மா வேலை இருக்கு முடிச்சுட்டு வர்றேன்”
“எவ்வளவு பேஷண்ட்ஸ் வந்திருக்காங்க??”
“அது இருப்பாங்கம்மா இருபது பேருக்கு மேல”
“இது நீ கிளினிக் திறக்கற நேரமில்லையே??”
“கொஞ்சம் சீக்கிரம் வந்திட்டேன்ம்மா” என்று சொல்ல கவலையாகிப் போனது அவருக்கு. சரியென்று போனை வைத்துவிட்டார்.
விலோசனா விளக்கேற்றி சாமி கும்பிட்டு வரவும் “மதியம் சாப்பிடலை போல” என்றவாறே அவளிடம் காபியையும் சிற்றுண்டியையும் நீட்டினார்.
“அது வந்து அத்தை…” என்று திணறினாள் அவள்.
“எனக்கு எதுவும் தெரிய வேணாம். என்ன கோபம் இருந்தாலும் எப்பவும் வயித்தை காயவிடக் கூடாதும்மா. அதுவும் பெண்கள் அன்னபூரணின்னு சொல்வாங்க”
“யார் வயிறும் வாடாம பார்த்துக்க வேண்டிய பொறுப்பு அவங்களுக்கு இருக்கு. நான் சொல்றது உனக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்” என்றுவிட்டு அவர் காபியை பருகினார்.

Advertisement