Advertisement

11
ஐடி பார்க்கிற்கு சென்றிருந்தான் செங்கதிர் அன்று. அன்று அக்ரீமென்ட் சைன் ஆவதாக இருந்தது. அதை வைத்து தான் பேங்கில் லோன் எடுப்பதாக இருந்தான்.
புது ஆர்டர் அட்வான்ஸ் வாங்கி கடையை விஸ்தரிக்க முடிவு செய்திருந்தான். அவன் கடைக்கு அருகிலேயே சற்று தள்ளி ஒரு இடம் ஒத்திக்கு வந்தது. சற்று பெரிய இடமாக இருந்ததால் அதற்கு மாறலாம் என்ற எண்ணம் அவனுக்கு.
இப்போது இருக்கும் கடை அவன் முயற்சியில் சொந்தமாக்கியிருந்தான் ஓராண்டிற்கு முன்பு தான். அதனால் அதை முழுதாய் விட்டு வரும் எண்ணமில்லை அவனுக்கு.
கூடுதலாய் ஒரு கடை என்று தான் அந்த இடத்தை பேசி வைத்திருந்தான். இதோ அவன் வந்த வேலை முடிந்து போனது. அட்வான்ஸ் பணம் நாளை அவன் அக்கவுண்டிற்கு வந்துவிடும்.
மனதில் ஒரு உற்சாகம் பிறந்தது, நயனாவை பார்த்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது.
அன்று அவளை பார்த்த அதே இடத்தில் சென்று நிற்க அவள் வரவேயில்லை. மற்றவர்கள் எல்லாம் கடந்து செல்ல கதிரை வரச்சொல்லியிருந்த ரமேஷ் கூட தன் வேலை முடிந்து கிளம்பியிருந்தான்.
“என்ன கதிர் இங்க நிக்கறீங்க, கிளம்பலையா இன்னும்??”
“இல்லை ரமேஷ் சார் பிரண்டு ஒருத்தங்க அன்னைக்கு இங்க பார்த்தேன். அவங்க வருவாங்களான்னு வெயிட் பண்ணுறேன்” என்றான்.
“பிரண்டா?? இங்கயா வேலை செய்யறாங்க. என்ன கம்பெனி??”
“அது அது தெரியலை சார்”

“இங்க நெறைய கம்பெனி இருக்கே?? அவங்க போன் நம்பர் இருந்தா போன் பண்ணி பாருங்களேன்”
“போன் நம்பர் இல்லை சார்”
“அப்போ கஷ்டம் தான் கண்டுப்பிடிக்க. ஒரு வேளை அவங்க ஷிப்ட் பேசிஸ்ல வொர்க் பண்றதா இருந்தா ஷிப்ட் முடிஞ்சு போயிருக்கலாம், இல்லை இனிமே தான் ஷிப்ட்க்கு வருவாங்களா இருக்கலாம்” என்று அவன் சொல்ல “ஓ இதுல இவ்வளவு இருக்கா” என்று நினைத்து அவன் நகரும் வேலை அன்று நயனாவுடன் பார்த்தவன் இவனை கண்டுக்கொண்டு அருகே வந்தான்.
“என்ன உன் சொந்தகார பொண்ணை பார்க்க வந்தியா??” என்று கேட்க செங்கதிர் நின்றான்.
“இவனோட கம்பெனி தானா??” என்று அந்த ரமேஷ் கேட்க “ஹ்ம்ம்” என்று தலையசைத்தான்.
“மேடம் வேலையை விட்டுட்டாங்க” என்றான் அவன் நக்கலாய். அவன் பேச்சே ஒரு மாதிரி இருக்க செங்கதிர் அவனை முறைத்தான். 
“உன்னாலையா??” என்றான் சட்டென்று.
“அதெல்லாம் எனக்கு தெரியாதுப்பா”
“அவ இனிமே வரமாட்டா அவ்வளவு தான். அவளை அப்படியே எல்லாம் நான் விட்டிட மாட்டேன்னு அவகிட்ட சொல்லி வைங்க” என்று இவனிடம் சொல்ல கதிருக்கு அப்படியொரு கோபம் வந்தது.
அது பொது இடம் என்று கூட பாராமல் அவனின் சட்டையை பிடித்துவிட ரமேஷ் தான் தடுத்தான் அவனை.
“விடுங்க சார் இவனை ஒரு வழி பண்றேன். என்கிட்டயே என்ன பேச்செல்லாம் பேசறான் பாருங்க” என்ற ஆத்திரம் வந்தது அவனுக்கு.
“கதிர் எதுக்கு இப்படி பண்றீங்க விடுங்க” என்று ரமேஷ் மீண்டும் சொல்லவும் செங்கதிர் முறைத்தவாறே அவன் சட்டையை விடுவித்தான்.
“உன்னால அந்த பொண்ணுக்கு பிரச்சனைன்னு தெரிஞ்சதுன்னு வை, அன்னைக்கு சொன்னது தான் உன்னை வெட்டிட்டு போயிட்டே இருப்பேன்” என்று கடுமையாகவே எச்சரித்தான்.
“என்னாச்சு கதிர்??” என்றான் ரமேஷ்.
“எனக்கு தெரிஞ்ச பொண்ணு சார், அவங்ககிட்ட இவன் வம்பு பண்றான். தப்பா மூவ் பண்றான், அன்னைக்கு என் முன்னாடியே தப்பா பேசினான் சார்”
“விடுங்க கதிர் அவனை பார்த்தாலே தெரியுது வேணுமின்னே வந்து வம்பு பண்ணுறவன்னு அவனோட எதுக்கு பேச்சு. அவன் தான் சொன்னான்ல உங்க சொந்தக்கார பொண்ணு வேலையை விட்டுட்டாங்கன்னு அப்புறம் ஏன் கவலைப்படுறீங்க” என்று சமாதானப்படுத்தினான்.
செங்கதிருக்குள் அதே யோசனை தான் வேலையை விட்டு விட்டாளாமே என்னவாகியிருக்கும் என்று. ரமேஷிடம் விடைப்பெற்று கிளம்பியவனின் பைக் நயனாவின் வீடு இருக்கும் தெருவிற்குள் நுழைந்தது.
அன்னைக்கே ஏதோ பேசணும்ன்னு சொன்னாலே நான் தான் அவாய்ட் பண்ணிட்டேன். என்ன பேச நினைச்சிருப்பா என்னாகி இருக்கும், எதுவும் உதவி கேட்க கூப்பிட்டிருப்பாளா இப்படி பல யோசனைகள் அவனுக்குள்.
இரண்டு முறை அதே தெருவையே சுற்றி வந்தவன் இதற்கு மேல் அங்கிருப்பது சரி வராது என்று எண்ணி கிளம்பிவிட்டான்.
அவள் வீட்டை பார்த்தவாறே தான் கடந்து சென்றான். ஆனால் அங்கு யாரையும் அவனால் பார்க்க முடியவில்லை.
வீட்டில் இருப்பதே இருவர் தானே, யாராவது ஒருவராவது கண்ணில் படுவரா என்று தான் பார்த்தான்.
அன்றுமட்டுமல்ல தினமும் அதே போல் நேரத்தை மாற்றி மாற்றி அவள் தெருவையே சுற்றி வந்தான். படிக்கும் போது கூட செய்யாத ஒரு செயல். பிளஸ் ஒன் படிக்கும் போது நண்பன் ஒருவனுக்காய் அவன் விரும்பும் பெண்ணை பார்க்க இவர்கள் அனைவரும் அவனுக்கு துணையாய் சென்ற ஞாபகம்.
அதற்கு பிறகு இப்போது தான் இப்படி ஒரு பெண்ணின் பின்னால் செல்கிறோம் என்று தோன்றியது அவனுக்கு.
பத்து நாட்களாய் தினமும் வந்து செல்கிறான் ஒரு புண்ணியமும் இல்லை. அவனுக்கு தன்னை நினைத்தே எரிச்சல் வந்தது. அன்னைக்கு கூப்பிட்டவே பேசியிருக்கலாம் என்று தோன்றியது.
இப்படி அவளைத் தேடி செல்வதும் அவனுக்கு பிடிக்கவுமில்லை, தவறாகவே தோன்றியது. மறுநாள் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு வழக்கமான நேரம் வரவும் பரபரவென்றிருந்தது.
இன்னைக்கு போய் பார்ப்போமா என்று. “என்ன தம்பி ஏதோ கோவிலுக்கு விளக்கு போடணும்ன்னு சொல்லிட்டு இருந்தீங்க. இன்னைக்கு போகலையா” என்றார் நாச்சியப்பன்.
முதல் இரண்டு நாட்கள் இவன் எங்கோ சொல்லாமல் கொள்ளாமல் சென்ற போது அவர் அவன் வந்ததும் கேட்டிருந்தார். 
அவரை சமாளிக்க வேண்டுதல் விளக்கு போட வேண்டும் என்று வாய்க்கு வந்ததை சொல்லியிருந்தான். அதை தான் அவர் ஞாபகமாக கேட்கிறார். 
“ஹ்ம்ம் போகணும் அண்ணே, வேலையிருக்கு கொஞ்சம்” என்றான் வேலையில் கவனம் வைத்து.
மனதிற்குள்ளோ போயிட்டு வரும் இன்னைக்கு ஒரு நாள் பார்ப்போம் இல்லைன்னா இனி போக வேணாம் என்று முடிவெடுத்துக் கொண்டான்.
அரைமணி நேரம் கழித்து கிளம்ப அன்று அவளை அவனால் பார்க்க முடிந்தது. அவளின் வீட்டு மொட்டை மாடியில் துணி எடுக்க வந்திருந்தாள் போல.
சற்று தள்ளி வண்டியை நிறுத்திவிட்டு அவள் பார்வையில் விழும் வண்ணம் நின்றுக்கொண்டு அவளைத்தான் பார்த்திருந்தான்.
அவள் பார்வையில் இருந்து மறையவும் என்ன செய்து அவளை பார்க்க என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவள் வாசலில் வந்து நின்றாள்.
பின் வீட்டிற்குள் சென்றாள் பத்து நிமிடம் கழித்து மீண்டும் வெளியில் வந்தவள் வேறு உடைக்கு மாறியிருந்தாள். அவள் வண்டியை எடுத்துக்கொண்டு வந்தவள் அதை கிளப்பிச் செல்ல எதற்கென்று தெரியாமலே அவளை பின் தொடர்ந்தான் கதிர்.
அவள் வண்டி சிட்டியில் இருந்து தள்ளி பைபாஸ் சாலைக்குள் நுழைய ‘இங்க எதுக்கு வர்றா இவ, எங்க போகப் போறா’ என்று யோசித்துக்கொண்டே அவள் பின்னேயே சென்றான்.
அவள் சில கிலோமீட்டர் சென்றதும் இடது புறம் ஒரு வழி திரும்ப அந்த வழியே சென்றவள் இரண்டு கிலோமீட்டர் சென்று ஓரிடத்தில் வண்டியை நிறுத்தினாள்.
சுற்றிப்பார்க்க அது அடர்ந்த தோப்பைப் போல் இருந்தது. ‘இங்க எதுக்கு வந்திருப்பான்னு தெரியலையே’ என்று எண்ணிக்கொண்டிருக்கும் போதே அவள் இவனை திரும்பிப் பார்த்து உள்ளே வருமாறு சொன்னாள்.
அதான் பார்த்திட்டாலே பேசிட்டே போய்டுவோம் என்று தோன்ற இவனும் உள்ளே சென்று வண்டியை நிறுத்தினான்.
“வாங்க”
அவளுக்கு ஒரு தலையசைப்பை கொடுத்தான். அவள் சற்றுத்தள்ளி யாருக்கோ குரல் கொடுத்தாள். சில நொடிகளில் அவர்கள் இளநீருடன் வந்தனர்.
“அவங்களுக்கு கொடுங்க” என்று அவள் சொல்ல அவர்கள் கொடுத்துவிட்டு நகர்ந்தனர்.
“குடிங்க பேசுவோம்” என்று அவள் சொல்ல அவன் இளநீரை பருகினான். அவளுக்கும் ஒன்று கொடுக்கப்பட்டிருக்க அவளும் பருகியதை ஓரவிழியால் பார்த்துக் கொண்டான்.
குடித்து முடிக்கவும் சில நொடி அமைதி அங்கு. “சொல்லுங்க” என்றாள் நயனா.
“என்… என்ன??”
“ஏதோ பேசணும்ன்னு தானே இத்தனை நாளா என்னைத் தேடுனீங்க??”
“அப்போ நான் தேடினேன்னு…”
“நாலஞ்சு நாளா தான் தெரியும்”
“அப்போவே…”
“வந்து பேசியிருக்கலாம் தான். ஆனா நீங்க என்னைத்தான் தேடி வந்தீங்கன்னு தெரியாம எப்படி பேசறது, சரி சொல்லுங்க என்ன விஷயம்??”
“இல்லை நீங்க வேலையை…”

“விட்டுட்டேன் அதெப்படி உங்களுக்கு தெரியும்”
“அது நான் திரும்பவும் ஐடி பார்க் வந்திருந்தேன் ஒரு வேலையா. அப்போ அவனை பார்த்தேன் அவன் தான் சொன்னான். நீங்க வேலையை விட்டத்துக்கு காரணம் அன்னைக்கு பார்த்தோமே அவனாலையா??” என்று கேட்கும் போதே அவன் முகத்தில் லேசாய் கோபத்தின் சாயல் தெரிந்ததை உணர்ந்தாள்.
“ஹ்ம்ம் அதுவும் தான்”
“அதெல்லாம் உன்னால சமாளிக்க முடியாதா??” என்று ஒருமையில் பேச ஆரம்பித்திருந்ததை உணராமல் பேசினான்.
அவன் பேச்சில் அவ்வப்போது ஒருமையும் பன்மையும் எட்டிப்பார்க்கத் தான் செய்தது.
“எனக்கு தெம்பில்லை”
“வீட்டில சொல்லி இருக்கலாம்ல”
“அன்னைக்கு இதைப்பத்தி தான் என்கிட்ட பேச வந்தீங்களா??” என்று தொடர்ந்தான்.
“உங்ககிட்ட பேச வந்தது வேற விஷயம். இவனோட விஷயம் என்னால வீட்டில எல்லாம் சொல்லிட்டு இருக்க முடியாது”
“பிடிக்கலை அதான் வேலையை விட்டுட்டேன்”
“அவனை உன்னால சமாளிக்க முடியலைன்னு என்னால நம்ப முடியலை”
“என்னாலையும் தான் நம்ப முடியலை” என்றுவிட்டு நிறுத்தியவள் “நான் மனசளவுல ரொம்ப சோர்ந்து போயிட்டேன், எனக்கு போராட தெம்பில்லை. அதுவே நான் பழைய மாதிரி இருந்திருந்தா அவன் மூக்கை உடைச்சு ரத்தம் வரவைச்சிருப்பேன்” என்றாள்.
“செஞ்சிருக்கலாம்” என்றான் இவன்.
“என்னைப்பத்தி பேச்சை விடுங்க. நீங்க என்ன பேச வந்தீங்க என்கிட்ட” என்றாள் அவள் விடாமல்.
“இல்லை அன்னைக்கு நீங்க என்கிட்ட ஏதோ பேசணும்ன்னு சொன்னீங்களே. அது… அது பத்தி தான் கேட்கலாம்ன்னு வந்தேன்”
“நிஜமா தானா…”
“புரியலை”
“நான் என்ன பேசணும்ன்னு தெரிஞ்சுக்க தான் வந்தீங்களா??”
“ஆமா…”
“அப்போ தெரிஞ்சுக்கோங்க” என்றவள் சிறிது இடைவெளி விட்டாள் பேச்சில்.
“உங்களுக்கு ஒரு விஷயம் தெரியும் தானே. தெரியலைன்னாலும் இப்போ இனி தெரிஞ்சுக்கோங்க. எனக்கு உங்களை பிடிச்சிருக்கு, எந்தளவுக்குன்னா உங்களோட கடைசி வரைக்கும் சேர்ந்து வாழணுங்கற அளவுக்கு” என்றாள்.
உள்ளுக்குள் சந்தோசமாகவும் பெருமிதமாகவும் உணர்ந்தாலும் செங்கதிரால் வெளிப்படையாக சந்தோசப்பட முடியவில்லை. தன் உணர்வை அவளிடம் காட்டிக்கொள்ள கூட அவனால் முடியவில்லை.
“என் அக்காவோட கல்யாணத்துல நான் உங்கம்மாகிட்டையும் அக்காகிட்டையும் பேசினதுக்கு காரணம் அவங்க உங்களோட சம்மந்தப்பட்டவங்கன்னு தான். வேற எந்த காரணமும் இல்லை”
“அன்னைக்கு நீங்க பேசினது என்னால இப்பவும் மறக்க முடியலை. நீங்க என்னை அவாய்ட் பண்றீங்கன்னு புரிஞ்சது”
“எதுக்கும் ஒரு முறை என் மனசுல இருக்கறதை உங்களுக்கு தெளிவா புரிய வைச்சிடலாம்ன்னு தான் உங்ககிட்ட பேசணும்ன்னு சொல்லியிருந்தேன். உங்களை பார்த்த அன்னைக்கு ஏதோவொரு விதத்துல நீங்க என் மனசுல பதிஞ்சு போயிட்டீங்க”
“அன்னைக்கு பிடிச்சிருக்குன்னு மட்டும் தான் சொன்னேன். அதுக்கு அப்புறம் நிறைய முறை உங்க கடையை தாண்டி போகும் போது உங்களை பார்த்திருக்கேன். கொஞ்சம் கொஞ்சமா என் மனசுக்குள்ள வந்து முழுசா இறங்கிட்டீங்க”
“நான் என்ன சொல்றேன்னு உங்களுக்கு புரிஞ்சுதா” என்றாள் அவன் அமைதியாய் நிற்பதை பார்த்து.
“ஹ்ம்ம்” என்றான்.
“நீங்க என்ன பதில்…” என்று அவள் முடிக்கும் முன்னேயே “இது நடக்காது” என்றான்.
“ஏன்??”
“நான் எங்கம்மாக்கு ஒரு சத்தியம் பண்ணி கொடுத்திருக்கேன்”
அவள் என்னவென்று கேட்கவில்லை. அமைதியாய் அவனை ஏறிட்டாள் அவனே சொல்லட்டும் என்று.
“அவங்க பார்க்கற பொண்ணை தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு”
‘இவ்வளவு தானா’ என்று அவள் மனம் ஆசுவாசம் கொண்டது.
“நான் லவ் பண்ண மாட்டேன்னு சொல்லி இருக்கேன்”
“ஏன் உங்க குடும்பத்துல யாராச்சும் லவ் பண்ணி ஓடிப்போய்ட்டாங்களா அதனால தான் உங்களுக்கு இந்த லவ் எல்லாம் பிடிக்கலையா”
“நெறைய சினிமா பார்ப்பீங்க போல. அப்படியெல்லாம் இல்லை. ஆனா கொஞ்சம் உண்மை தான், அதெல்லாம் நான் இப்போ உங்ககிட்ட பேச முடியாது” என்றான்.
“அப்போ உங்களோட பதில்”
“அதான் சொன்னேனே நடக்காதுன்னு. நீங்க இதெல்லாம் மறந்துட்டு நல்ல மா…” அவன் முடிக்கும் முன்னே போதும் என்பது போல கையை காட்டினாள் அவள்.
“நடக்காதுன்னு சொல்லிட்டீங்கல்ல சந்தோசம். உங்க பதிலை நான் மதிக்கறேன்” என்று கரம் கூப்பினாள்.
“இல்லை நீங்…”
“வேணாம் என் கல்யாணம் பத்தி நீங்க பேச வேணாம். உங்களுக்கு விருப்பமில்லைன்னு சொல்லியாச்சுல்ல அப்போ நீங்க கிளம்புங்க. என்னைப் பத்தி கவலைப்பட நீங்க யாரு” என்றாள்.
செங்கதிருக்கு என்னவோ போலானது அவள் பேச்சு. உள்ளுக்குள் உடைந்து போனாலும் அதை காட்டாது திரும்பியவன் அதற்கு மேல் அங்கிருப்பதை உசிதமாக கருதவில்லை.
பைக்கில் ஏறி ஸ்டார்ட் செய்தவன் திரும்பி அவளை பார்த்தான் ஒரு முறை. அவளிடம் சென்று எனக்கும் உன்னை பிடித்திருக்கிறது என்று சொல்லிவிடலாமா என்று கூட அவனுக்கு தோன்றியது ஒரு நொடி. உடனே தன் தாயின் முகம் நினைவில் வரவும் அவரின் பயமும் அவன் அளித்த வாக்கும் நினைவிற்கு வர திரும்பிப்பாராமல் சென்றுவிட்டான்.
——————–
வாசலில் ஏதோ வண்டி சத்தம் கேட்க உள்ளிருந்தே எட்டிப்பார்த்தாள் நயனா. அங்கு விலோசனாவும் ஆதியும் வந்துக் கொண்டிருப்பதை பார்த்து விரைந்து ஓடிவந்தாள்.
“ஹேய் விலோ சொல்லவேயில்லை வரப்போறேன்னு” என்றாள் நயனா.
“சும்மா ஒரு சர்ப்ரைஸ் பண்ணலாம்ன்னு தான்” என்றாள் தமக்கை.
“வாங்க மாமா” என்றாள் ஆதியிடம்.
“சனா…” என்று ஆதி அழைக்க திரும்பி பார்த்தாள் அவன் மனைவி.
“இதை கொடு” என்று அவன் கையில் இருந்த கவரை அவளிடம் நீட்டினான்.
“ஆமா மறந்திட்டேன்” என்றவள் அதை வாங்கி தங்கையிடம் கொடுத்தாள்.
“என்னது இதெல்லாம் இங்க என்ன சின்ன புள்ளைங்களா இருக்காங்க இதெல்லாம் வாங்கிட்டு வந்திருக்கீங்க. ஸ்வீட் எல்லாம் அப்பா சாப்பிட மாட்டார்ன்னு தெரியும்ல”
“இது சர்க்கரையில பண்ணது இல்லை நயனா. மாமாக்கு சுகர் இருக்குன்னு எனக்கு தெரியாதா என்ன” என்றான் ஆதி.
“அதானே பார்த்தேன் டாக்டராவது மறக்கறதாவது” என்ற நயனா அவனுடன் இயல்பாகவே பேசினாள். வந்தவர்களை அவள் உபசரித்துக் கொண்டிருக்கும் போதே இளவரசனும் வந்துவிட சிறிது நேரம் அங்கிருந்து பேசிவிட்டு தன் மனைவியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றான் ஆதித்யன்.
விலோசனாவிற்கு முகம் கொள்ளா புன்னகை தாய் வீட்டிற்கு சென்று வந்தால் எந்த பெண்ணுக்குமே இருக்கும் மகிழ்வு தானே அது. அதுவுமில்லாமல் திருமணமான புதிதில் தாய் வீட்டை அதிகம் தேடும் தானே.
இயல்பான கணவன் மனைவியாய் இருந்தால் அவளின் தேடுதலை கணவன் மறக்கடித்திருப்பான். இங்கே தான் இருவரும் ஆளுக்கொரு திசையில் நிற்கிறார்களே. விலோசனாவிற்கு அவனின் அன்றைய பேச்சு இன்னமும் மறந்திருக்கவில்லை. அது வடுவாக இருந்தது அவள் நெஞ்சில்.
அதை அவளிடம் பேசி சரி செய்வதற்கு முன்னே தன் மனதில் இருந்ததை அவளிடம் பகிரப்போக இதோ பிரச்சனை இன்னும் சற்று நேரத்தில் அவர்களுக்குள் தொடங்க போகிறது.

Advertisement