Advertisement

10
கோபமாய் வெளியில் சென்ற ஆதித்யன் சில மணி நேரத்திலேயே திரும்பி வீட்டிற்கு வந்திருந்தவன் விலோசனாவை தான் தேடினான்.
“அம்மா”
“சொல்லு ஆதி”
“அவ எங்கேம்மா??”
“உன் பொண்டாட்டியவா கேக்குறே??”
“வேற யாரை கேட்பேனாம்”
“முன்னெல்லாம் அம்மாவை தேடுவ, அப்பாவை தேடுவ”
“அம்மா…”
“சரி சரி உன் பொண்டாட்டி மாடிக்கு போயிருக்கா, துணி எடுக்க” என்று சொல்ல அவன் தாவி தாவி படிகளில் ஏறினான்.
“சனா”
திடிரென்று கேட்ட குரலில் திடுக்கிட்டு திரும்பியவள் பின் ஒன்றும் சொல்லாமல் திரும்பிக் கொண்டாள். அவனுக்கு சுள்ளென்று கோபம் மூண்டது அவளின் செயலில்.
அவனுக்கு எப்போதும் வராத ஒன்றான பொறுமையா கஷ்டப்பட்டு இழுத்துப் பிடித்தான். “சனா”  என்றான் மீண்டும் சன்னமான குரலில்.
“எதுக்கு என் பேரை இப்படி ஏலம் போட்டுட்டு இருக்கீங்க?? என்னன்னு தான் சொல்லுங்களேன்” என்றாள் அவள் கடுப்பாய்.
“நான் கூப்பிடுறேன்னு தெரியுதுல்ல. என்னன்னு கேட்டா என்ன குறைச்சலாம் உனக்கு” என்றான் தன் கோபத்தை மறையாது.
அவள் அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை துணியை எடுத்துக்கொண்டு அவனைத் தாண்டிச் சென்றாள்.
“திமிர் திமிரு உடம்பு பூரா திமிரு இவளுக்கு” என்று சத்தமாகவே முணுமுணுத்தான்.
“இவகிட்ட போய் பேசணும்ன்னு வந்தேன் பாரு” என்றவன் தலையில் அடித்துக்கொண்டு கோபத்துடன் அங்கிருந்து சென்றுவிட்டான்.
அவன் கோபமெல்லாம் எப்போதும் போல் தான் ஐந்து நிமிடத்திற்கு வேல் தாங்கவே தாங்காது. ஹால் சோபாவில் கோபமாய் சென்று அமர்ந்தவன் அடுத்த ஐந்து நிமிடத்தில் விலோசனாவை தேடினான். 
அவர்களின் அறையில் அவளில்லை. “எங்க போனா??” என்று யோசித்துக்கொண்டே அவன் பெற்றோரின் அறையை லேசாய் தட்டிவிட்டு திறந்தான்.
“என்ன ஆதி??”
“இல்லை அப்பா…”
“இன்னைக்கு ஏதோ கான்பிரன்ஸ் இருக்குன்னு சொன்னார் லேட்டா தான் வருவாரு ஆதி. என்ன விஷயம் எதுவும் முக்கியமா பேசணுமா??” என்றார் அவர்.
“இல்லைம்மா அப்புறம் பேசிக்கறேன்” என்றுவிட்டான் அவரிடம்.
அவன் மனைவியை தேடுவதாக சொன்னால் அவன் அன்னை மீண்டும் அவனை கேலி பேசுவார் என்று எண்ணி அப்பாவை பற்றி கேட்டுவிட்டு வெளியில் வந்துவிட்டான்.
‘எங்க தான் போனான்னு தெரியலையே’ என்று முணுமுணுத்துக் கொண்டே சமையலறையை எட்டிப் பார்க்க அவள் அடுப்பில் ஏதோ வேலையாய் இருந்தாள்.
அவன் வீட்டிற்கு வந்து இதெல்லாம் நன்றாகவே பழகி இருந்தது அவளுக்கு. தன் வீடு போல அனைத்து அறைக்கும் உரிமையாய் சென்று வருபவள் உரிமை கொண்டவனிடமும் உரிமையாய் அவள் புழங்க வேண்டிய அறையிலும் அன்னியமாகவே எண்ணினாள்.
“இங்க தான் இருக்கியா” என்றான் ஆதி நிம்மதியாய்.
“காபி வேணுமா??” என்றாள்.
“ஹ்ம்ம் கொடேன்” என்றவன் இயல்பாய் அவளருகில் வந்திருந்தான்.
அவன் அருகில் இருப்பதே அவளுக்கு என்னவோ போல் இருந்தது, எப்போதடா இவன் வெளியே போவான் என்ற நினைப்பை தான் அது கொடுத்தது அவளுக்கு. அவனை வெளியே போ என்றா சொல்ல முடியும் என்று நினைத்துக்கொண்டு வேகமாய் பாலை காய்ச்சிக் கொண்டிருந்தாள்.
“கோவில்க்கு போகலாமா??” என்றான் மெல்லிய குரலில்.
சட்டென்று அவள் முகம் இறுக்கத்தில் இருந்து இயல்புக்கு மாறியது.
“ஹ்ம்ம் போகலாம்”
“காபி சாப்பிட்டு கிளம்புவோம்”
“ஹ்ம்ம்”
“எந்த கோவிலுக்கு??”
“நீயே சொல்லு??”
“திருப்பரங்குன்றம் போகலாமா??”
“கண்டிப்பா…” என்று சொன்னவனின் முகத்தை மென்மை இருக்க ஒரு நொடி அவனை பார்த்தாள். இவனுக்கு மென்மையாகக் கூட பேச வருமா என்று.
அவர்கள் மூவருக்கும் காபி கலந்து எடுத்துக்கொண்டு வந்தவள் சந்தியாவின் அறைக்கு சென்று அவரை அழைக்க அவரும் எழுந்து வெளியில் வந்தார்.
மூவரும் ஒன்றாய் அமர்ந்து காபி பருகி முடிக்க “அத்தை நான் போய் கிளம்புறேன் நீங்களும் சீக்கிரம் கிளம்பிடுங்க” என்று விலோசனா சொல்லவும் சந்தியா திருதிருவென்று விழித்தார்.
“எங்கேம்மா கிளம்பச் சொல்றே??”
“கோவிலுக்கு அத்தை” என்று அவள் சொல்ல அவர் திரும்பி மகனைப் பார்த்தார்.
அவன் இதை எதிர்ப்பார்க்கவில்லை விலோசனா இப்படி அம்மாவையும் அழைப்பாள் என்று. அவன் ஒன்றும் சொல்லாமல் அவரைப் பார்க்க “இல்லைம்மா உங்க மாமா இன்னைக்கு சீக்கிரமே வர்றேன்னு சொன்னாங்க”
“அவங்க வரும் போது நான் வீட்டில இல்லைன்னா ரொம்ப சங்கடப்படுவாங்கம்மா. நீங்க போயிட்டு வாங்க, நாம எல்லாரும் சேர்ந்து இன்னொரு முறை ஒண்ணா போகலாம் சரியா” என்று மருமகளை சமாதானம் செய்தார் அவர்.
“நீங்க சொல்லுங்களேன் அத்தை மாமாவும் வரட்டும். நீங்க மாமாக்கு போன் பண்ணி பேசுங்களேன்” என்று ஆதித்யனை பார்த்து அவள் சொல்ல அவன் தலை தன்னைப் போல் ஆடியது அவளிடத்தில்.
அதை கண்டுக்கொண்ட சந்தியா ‘மகனே என்னைக்காச்சும் என்கிட்ட இப்படி சரின்னு சொல்லி தலையாட்டி இருக்கியாடா’ என்று தான் பார்த்தார்.
“நான் ரெடி ஆகி வர்றதுக்குள்ள பேசுங்க மாமாகிட்ட” என்றுவிட்டு அவள் உள்ளே நகர இங்கே சந்தியா மகனை பிடித்துக்கொண்டார்.
“சரி எந்த கோவிலுக்கு”
“திருப்பரங்குன்றம்”
“என்ன ஆதி இதெல்லாம்??”
“அம்மா”
“என்ன அம்மா நொம்மான்னுட்டு”
“அம்மா அவ கூட கோவிலுக்கு போகலாம்ன்னு கூப்பிட்டேன், வர்றேன்னு சொன்னா. ஆனா இப்படி செய்வான்னு நானே எதிர்ப்பார்க்கலை”
“அப்போ எங்களை கழட்டிவிட்டு அவளை மட்டும் கூட்டிட்டு போகத் தான் பிளான் பண்ணியா”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை, ஏற்கனவே எங்களுக்குள்ள எந்த பஞ்சயாத்தும் சரியாகலை. சரி கோவிலுக்கு கூட்டிட்டு போய் கொஞ்சம் சமாதானம் செய்யலாம்ன்னு பார்த்தேன்”
“உனக்கு இதெல்லாம் கூட வருமா”
“எதெல்லாம்”
“சமாதானம் செய்யறது எல்லாம்”
“ஏன்மா என்னை பார்த்தா உங்களுக்கு வில்லன் மாதிரி தெரியுதா. நான் உங்க பிள்ளை தானே”
“இத்தனை நாளா நீ இப்படி இல்லையே, எதையாச்சும் என்கிட்டே இருந்து மறைக்கறியா ஆதி”
“எதுவும் மறைக்கலைம்மா, என்னை ஆளை விடுங்க. நான் அப்பாவுக்கு போன் பண்றேன்”
“அதெல்லாம் எதுவும் வேணாம். உங்கப்பாக்கிட்ட நான் பேசிக்கறேன், நீ போய் கிளம்பு”
“அவ வந்து கேட்பாம்மா…”
“நான் பேசிக்கறேன் அவகிட்ட”
“அம்மா நான் உங்களை கூப்பிடலைன்னு”
“கோவமெல்லாம் இல்லை ஆதி, ஐ நோ ஆதி. அந்த வயசை எல்லாம் நாங்க கடந்து தானே வந்திருக்கோம். நீ அவளை கூப்பிட்டதிலும் தப்பில்லை, அவளோட எதிர்ப்பார்ப்பும் தப்பில்லை”
“தேங்க்ஸ் மா”
“போடா” என்று அவர் சொல்லி முடிக்கவும் பட்டுப்புடவை கட்டி வெளியில் வந்தாள் விலோசனா.
ஆதி அவளை கண்டு அப்படியே மூச்செடுக்காமல் நின்றுவிட்டான் ஓரிரு நொடிகள்.
மகனை பார்த்து சிரித்துவிட்டு மருமகளை பார்த்தார் சந்தியா. “விலோம்மா நான் உங்க மாமாகிட்ட பேசினேன்டா. சொன்னேன்ல அவங்களுக்கு கொஞ்சம் வேலை இருக்காம்”
“முடிச்சுட்டு வர்றதுக்கு லேட் ஆகுமாம். சோ நீங்க போயிட்டு வாங்கன்னு சொல்லிட்டார்”
“அப்போ நீங்களாச்சும் வரலாம்ல அத்தை”

“இல்லைம்மா அவங்க வரும் போது நான் இங்க இருக்கணும்ன்னு சொன்னேன்ல. ஸ்கூல் அட்மிஷன் வேலை எல்லாம் வேற போயிட்டு இருக்கும்மா. அதையெல்லாம் பார்த்தாகணும்” என்று அவர் சொல்ல அவள் முகம் வாடிய போதும் “சரி அத்தை” என்றாள்.
‘இவர் கூட நான் மட்டும் தனியா போகவா’ என்று ஒரு புறம் தோன்றினாலும் எப்போதும் எல்லாரும் கூட வரமாட்டர் தானே என்று புரிய அமைதியாக இருந்தாள்.
நிமிர்ந்து ஆதியை பார்க்க “ஒரு அஞ்சு நிமிஷம் நான் ரெடி ஆகிட்டு வந்திடறேன்” என்று அறைக்குள் சென்றவன் வெள்ளை வேட்டி உடுத்தி ஊதா நிறத்தில் முழுக்கை சட்டை அணிந்து அதை மடித்துக்கொண்டே வெளியில் வந்தான்.
“போகலாமா” என்று கேட்க அவளோ அவன் உடையையும் அவனையும் தன்னையுமறியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இருட்டுறதுக்குள்ள வீட்டுக்கு வந்திடுங்க”
“ஹ்ம்ம் சரிம்மா” என்றான் ஆதி.
விலோசனாவை பார்த்து “கிளம்பலாமா” என்று அவன் மீண்டும் குரல் கொடுக்கவும் தான் ஹ்ம்ம் என்று தலையாட்டினாள் அவள்.
“ஆதி” என்று இடையிட்டார் சந்தியா.
“என்னம்மா??”
“பூ இன்னும் வரலைடா நான் ஆறு மணிக்கு மேல தான் கொண்டு வரச் சொன்னேன். நீ போகும் போது பூ வாங்கி கொடு அவளுக்கு” என்றார் அவர்.
அதில் அவன் மனம் உற்சாகமாக காரை எடுக்கச் சென்றவன் அவளை திரும்பிப் பார்த்து “பைக்ல போகலாமா??” என்று கேட்க அவள் தலை தானாய் ஆடியது.
மீண்டும் ஆதி உள்ளே வரவும் “என்னாச்சு ஆதி??” என்றார் சந்தியா.
“பைக்கில போலாம்ன்னு” என்றவன் மேற்கொண்டு ஒன்றும் சொல்லாமல் அவனறைக்கு சென்று பைக் கீ எடுத்துக்கொண்டு வெளியில் வந்தான்.
“பைக்கில போறே, மெதுவா போ, பார்த்து ஓட்டு” என்று மீண்டும் அறிவுரை சொன்னார்.
அவருக்கு தலையாட்டி வெளியில் வந்தவன் உள்ளே தள்ளி நிறுத்தியிருந்த அவன் பைக்கை வெளியே கொண்டு வந்தான்.
“ரொம்ப பழைய வண்டியா??”
“அப்படியா தெரியுது. இது அப்பாச்சிம்மா”
“உங்க அப்பச்சி வண்டி அப்போ பழசு தான்” என்று அவள் சொல்ல அவன் தலையில் அடித்துக் கொண்டான்.
“அப்பச்சி வண்டியில்லை அப்பாச்சி வண்டியோட பேரு” என்றவன் அந்த எழுத்தை சுட்டிக்காட்ட “சாரி எனக்கு தெரியாது”
“ஓகே விடு” என்றவன் “ஹ்ம்ம் ஏறிக்கோ” என்று சொல்ல அவள் அமர்ந்து அவன் தோளைப் பிடித்துக்கொண்டாள்.
உள்ளே லட்சம் பட்டாம்ப்பூச்சிகள் பறந்து அவனை சந்தோசப்படுத்தியது. கோவிலுக்கு செல்லும் வரை தன்னை மாதவனாகவே நினைத்துக் கொண்டு என்றென்றும் புன்னகை என்று அவன் மனதில் பாடிக்கொண்டு தான் வண்டியை ஓட்டினான்.
அவசரமாய் ஒரு கவிதை வேறு அவனுக்குள் ஓடியது.
நீலவிழி பாவையின்
நீங்காத பார்வை
நீக்கமற நெஞ்சில்
நீங்காமல் உறைந்ததேனோ!!
——————–
நயனாவை எல்காட்டில் பார்த்து வந்ததில் இருந்து மனதிற்குள் சஞ்சலமாகவே இருந்தது அவனுக்கு.
கைகள் தாமாய் அவன் குறிக்க வேண்டிய அளவுகளை குறித்து பின் கத்திரியை எடுத்து குறித்த அளவை வெட்டிக் கொண்டிருந்தது.
“கதிரு இந்த ஸ்கூல் யூனிபார்ம் வேற தைக்க வந்திருக்கு. கொஞ்சம் நீயும் ஹெல்ப் பண்றியாப்பா??” என்று வந்து நின்றார் அவன் கடையில் வேலை செய்யும் நாச்சியப்பன்.
“ஹ்ம்ம் இதோ வர்றேன் அண்ணே. இதை எல்லாம் வெட்டி வைச்சுட்டா முத்து வந்து தைச்சுக்குவான் நாளைக்கு. ஒரு பத்து நிமிஷ வேலை தான் வந்திடறேன்” என்று தன் வேலையில் கவனமானான் அவன்.
அதன் பின் வேலை ரெக்கைகட்டி பறந்தது அவனுக்கு. இரண்டு நாட்களாய் வீட்டிற்கு கூட போக முடியாத அளவிற்கு ஸ்கூல் யூனிபார்ம் தைக்கவே நேரம் சரியாக இருந்தது.
இதோ இன்று தான் சற்று வேலை ஓய்ந்தது. ஆசுவாசமாய் நின்று டீயை குடித்துக் கொண்டிருந்தவனின் மனம் நயனாவையே சுற்றி சுற்றி வந்தது.
அவள் அவனை சுற்றி வந்த போது கண்டுக்கொள்ளாதது போல இருந்தவனுக்கு அவளை பார்க்காத பொழுதுகள் ஏனோ எதையோ இழந்த ஒரு உணர்வு.
ஒரு ஆவல் உந்தியது நேரே ஐடி பார்க் சென்று அவளை பார்த்துவிடலாமா என்று. முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவன் கடைசி வாய் டீயை உறிஞ்சவும் அவன் எண்ணத்தின் நாயகி அவன் முன்னே நின்றாள்.
கண்களில் அப்படியொரு சோர்வு முகமும் வாடியிருந்தது. அவளிடம் என்னவென்று கேட்க வேண்டும் என்று ஆவல் பிறந்தாலும் தனக்கென்ன உரிமையிருக்கிறது அவளிடத்தில் என்று அமைதியாய் பார்த்தான்.
அவளும் ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்த்துக் கொண்டிருக்க இப்படியே இருந்தா வேலைக்கு ஆகாது என்று எண்ணி அவள் பார்வையை கட்டுப்படுத்தும் பொருட்டு “என்ன வேணும்??” என்றான்.
“ஒண்ணுமில்லை” என்று சொல்லிவிட்டு அவள் பாட்டிற்க்கு திரும்பி நடந்து சென்றுவிட அவனுக்கு தான் என்னவோ போலானது. ‘என்னன்னு கேட்டிருக்கணுமோ’ என்று தோன்றியது. 
செல்லும் அவளைத் தான் பார்த்திருந்தான் அவள் பார்வையில் இருந்து மறையும் வரை.
——————–
ஒரு வழியாய் திருப்பரங்குன்றத்திற்கு வந்து சேர்ந்தனர் இருவரும். அவன் வண்டியை நிறுத்திவிட்டு வர இருவருமாய் மேலே ஏறப் போக “சனா” என்று அவளை அழைத்தான் ஆதி.
“என்ன??”
“ஒரு நிமிஷம் இங்க வா” என்று சொல்ல அவனருகே சென்றாள்.
“பூ வாங்க மறந்திட்டேன், இரு” என்றவன் பூ விற்கும் பெண்ணிடம் பூவை வாங்கி அவளிடம் கொடுத்தான். அதில் அப்படியொரு நிறைவு அவனுக்கு.
அவளுக்குமே ஏதோவொரு இதம் மனதில் தோன்றத்தான் செய்தது. பூவை வாங்கி தலையில் வைத்துக்கொண்டாள்.
“சாமிக்கு??”
“மாலை வாங்கிக்கலாமே”
“சரி” என்று அவள் சொல்ல அங்கேயே மாலை வாங்கிக்கொண்டு சென்றனர்.
நிறைவான சாமி தரிசனம் இருவரும் ஒன்றுமே பேசிக்கொள்ளவில்லை. ஓரிடத்தில் வந்து அமர்ந்தனர். ஒருவர் அருகாமையை மற்றவர்கள் உள்வாங்கி கொண்டு அமர்ந்திருந்தனர்.
அமைதியை உடைத்து ஆதியே ஆரம்பித்தான் “நாளையில இருந்து ஆஸ்பிட்டல் போறேன்”
“அதான் காலையிலவே சொன்னீங்களே”
“ஹ்ம்ம் ஆமா சொன்னேன். காலையில போனா மூணு மணிக்கு தான் வருவேன். அப்புறம் நம்ம வீட்டு பக்கத்துல ஒரு கிளினிக் இருக்கு அங்க ஆறு மணிக்கு போவேன். ஒன்பது மணி சமயத்துல ஒன்பதரை மணி கூட ஆகும் வர்றதுக்கு”
இதெல்லாம் எதுக்கு என்கிட்ட சொல்றாரு என்று தான் பார்த்தாள் அவள்.
“இதெல்லாம் எதுக்கு இப்போ சொல்றேன்னு யோசிக்கறியா??” என்றான் அவள் மனதை படித்தது போல்.
அவள் தலை உருட்டலில் அவள் அதை தான் நினைத்திருக்கிறாள் என்று அவளுக்கு விளக்கம் கொடுத்தான்.
“நான் என்ன வேலை பார்க்கிறேன்னு உனக்கு தெரியும் தானே”
“தெரியும்”
“என் வேலை பத்தி என்னைப்பத்தி நீ தானே இனி தெரிஞ்சுக்கணும். அதுக்காகத்தான் சொன்னேன்” என்றான் அவன்.
அவனின் பதில் அவளை திருப்தியடையச் செய்தது. இதுவரை அவனிடத்தில் காணாத ஒரு இயல்பான பேச்சை கேட்டாள்.
ஆனாலும் அவன் மேல் அவளுக்கிருந்த வருத்தம் இன்னமும் அவள் மனதை விட்டு அகன்றிருக்கவில்லை.
“கிளம்பலாமா” என்றாள்.
“உங்க வீட்டுக்கு போயிட்டு அப்புறம் போகலாம்” என்று அவன் சொல்ல அவள் முகத்தில் அப்படியொரு பொலிவு தோன்றியதை குறித்துக் கொண்டான்.
“நிஜமாவா??” என்று வாய்விட்டு கேட்டே விட்டாள்.
“நான் பொய் சொன்னதில்லை”
“தேங்க்ஸ்”
“எதுக்கு??”
“எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னீங்களே அதுக்கு”
“அது என்னோட கடமை அதுக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்லக் கூடாது. உனக்கு என்ன விருப்பமோ அதை என்கிட்ட சொல்லணும்” என்றான் சேர்த்து.
“ஹ்ம்ம்”
“இந்த ஹ்ம்ம் தவிர வேற எதனாச்சும் கூட நீ என்கிட்ட பேசலாம்”
அதற்கும் அவள் “ஹ்ம்ம்” என்று தான் சொன்னாள்.
கோபம் மீண்டும் தலை தோக்கிய போதும் அதை கட்டுப்படுத்திக்கொண்டு எழுந்தான்.
“நயன்கிட்ட கூட இப்படி தான் ஹ்ம்ம் கொட்டுவேன். என்னை திட்டுவா” என்றாள் திடிரென்று.
‘ஓ!! நாம கோவமா இருக்கோம்ன்னு கண்டுப்பிடிச்சுட்டா போல அதான் விளக்கம் கொடுக்கறா’ என்று புரிய மனம் சற்று அமைதி கொண்டது. அவளுக்கு சற்று அவகாசம் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. 
ஆனாலும் அதற்கு முன் அவன் மனதில் உள்ளதை அவளிடத்தில் சொல்லிவிட வேண்டுமே என்றிருந்தது அவனுக்கு. 
அவன் அதை சொல்லும் நாள் அவள் இன்னமும் ருத்ர தாண்டவமாடுவாள் என்றறிந்திருந்தால் அவன் சொல்லும் எண்ணத்தையே கைவிட்டிருப்பான்.

Advertisement