Advertisement

1
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே
என்று சொல்லி தன் நாளை துவக்கினான் ஆதித்ய கரிகாலன். காலை எழுந்ததும் தன் இருகரம் சேர்த்து இப்பாடல் பாடி தன் கைகளில் விழிப்பது தான் அவனின் முதல் வேலை.
பின் கண் திறந்ததும் அதை மேல் நோக்கி சில நொடிகள் சுழற்றி பின் கீழ் நோக்கி சில நொடிகள் சுழற்றி அதே போல் இரு பக்கவாட்டும் செய்து முடித்த பின் தன் படுக்கையை விட்டு எழுவான்.
எதுக்கு இதெல்லாம்ன்னு தானே யோசிக்கறீங்க. கண் டாக்டராம், இவன் மட்டுமில்லை வீட்டில இருக்க அவனோட அப்பா, அம்மா எல்லாரும் இதை செஞ்சாங்களான்னு வேற கேள்வி கேட்பான்.
இந்த டாக்டருங்களே இப்படித்தாங்க ஓவரா ரூல்ஸ் பேசுவாங்க. இது அவனோட அம்மாவோட டயலாக் தான், ஆனா இதை அவரு அவங்க புருஷன்கிட்ட மட்டும் தான் சொல்வாங்க.
பிள்ளைகிட்ட சொன்னா அன்னைக்கு வீட்டில என்ன பறக்கும்ன்னு அவங்களுக்கே தெரியாது அதான். சட்டுன்னு கோபம் மூக்குக்கு மேல வரும் நம்ம நாயகனுக்கு.
“சந்தியா ஆதி எழுந்திட்டானா??” என்று கேட்டவாறே வந்தார் ஆதியின் தந்தை அருள்செல்வன்.
“அதான் மணி ஆறாகிடுச்சே டான்னு எழுந்திருப்பான் இந்நேரம்” என்றார் அவர் சமையலறையில் இருந்து குரல் கொடுத்தவாறே.
“அப்போ எனக்கு காபி கொடுத்திரு”
“இப்போ வேணாம்”
“ஏன்??”
“எந்நேரமும் வந்து நிப்பான்?? உங்களுக்கு சுகர் இருக்கு ஏன் காபி கொடுத்தேன்னு இன்னைக்கு அந்த கிளாஸ் பறக்கும், தேவையா சொல்லுங்க” என்றார் அவர் உள்ளிருந்தவாறே.
“ஓ!! தினம் இதான் நடக்குதா, நான் இல்லைன்னா அப்பாக்கு நீங்க காபி கொடுப்பீங்களா??” என்று வந்து நின்றான் அவர்களின் ஒரே சீமந்த புத்திரன் ஆதி.
“அம்மா” என்றான் ஹாலில் இருந்தே கத்தி.
‘கடவுளே இவனை கண் டாக்டருக்கு படிக்க வைச்சதுக்கு பதில் அந்த ஈஎன்டி டாக்டருக்கு படிக்க வைச்சிருக்கணும். இவனுக்கு தான் மூக்குக்கு மேல கோவம் வருதே’ என்று எண்ணிக்கொண்டே அடுப்பை அணைத்துவிட்டு வெளியில் வந்தார் அவர்.
அவன் இவரை முறைத்தவாறே நின்றிருந்தான். அவரும் பதில் பார்வையை அசால்ட்டாய் தான் பார்த்திருந்தார். ‘உன்னை பெத்தவடா நானு’ என்ற லுக் தான் கொடுத்தார் அவர்.
“என்னம்மா நடக்குது இங்க??”
“என்ன நடந்து போச்சு இப்போ??”
“அதை தானே நான் இப்போ கேட்டேன், நான் வீட்டில இல்லாத நேரம் நீங்க அப்பாக்கு காபி போட்டுக் கொடுக்கறீங்களா??”
“இல்லையே”
“இப்போ தானே நீங்க சொல்லிட்டு இருந்தீங்க நான் கேட்டேனே”
“நீ வீட்டில இல்லாத போது எல்லாம் இல்லை, நீ வீட்டில இருக்கும் போதே நான் போட்டு கொடுப்பேன் என்னடா வேணும் உனக்கு”
“அம்மா…” என்று பல்லைக் கடித்தவன் அவன் கைக்கு கிடைத்த அந்த அலாரத்தை கையில் எடுத்திருக்க “அது ஒண்ணு தான்டா இந்த வீட்டில இன்னும் உடையாம இருக்கு. அதையும் போட்டு இன்னைக்கு உடைச்சிடு” என்று அவர் சொல்ல அதை அப்படியே வைத்துவிட்டான்.
“இப்போ என்ன தெரியணும் உனக்கு??”
“அப்பாக்கு சுகர் இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா தெரியாதா??”
“தெரியும்”
“அவரை நீங்க அக்கறையா கவனிச்சுக்க வேண்டாமா??”

“கண்டிப்பா நான் தான் கவனிக்கணும், என்னைவிட்டா வேற யாரு கவனிப்பாங்க. இதை செய்யாத, அதை செய்யாதன்னு நீ சொல்லிட்டு போயிருவா நான் தானே செய்யணும்” என்று நொடித்தார் அவர் பேச்சினூடே
“அம்மா”
“எதுக்குடா சும்மா சும்மா அம்மா அம்மான்னு பல்லைக் கடிச்சிச்சுட்டு இருக்க, ஆமா உங்கப்பாக்கு காபி கொடுத்தேன். அதுல என்ன தப்பிருக்கு, நான் சுகர் போட்டு கொடுத்தேன்னு உனக்கு தெரியுமா??”
“சுகர் போட்டு கொடுக்கலைன்னா நான் சும்மா விட்டிருவேன்னு நினைச்சீங்களா. காபி குடிக்கறது உடம்புக்கு நல்லதில்லை, உடனே டீ கொடுக்கறேன்னு சொல்லாதீங்க. அதுவும் நல்லதில்லை”
“இங்க பாரு ஆதி நான் வாழ்க்கையில ஒரு தப்பை தெரியாம பண்ணிட்டேன்”
‘அம்மா என்ன சொல்றாங்க’ என்பது போல் பார்த்தான் ஆதி.
“உன்னை டாக்டருக்கு படிக்க வைச்சுட்டேன். முத வருஷம் கிளாஸ்க்கு போயிட்டு வந்து அது அப்படி இது இப்படின்னு ஆரம்பிச்சவன் இப்போ வரைக்கும் அதை செய்யாத இதை செய்யாதன்னு ஏன்டா கொல்றே எங்களை”
“எங்கம்மா மூச்சுக்கு மூன்னூறு வாட்டி சொல்வாங்க. நொறுங்கத் தின்றால் நூறு வயதுன்னு… நீ என்னடான்னா எதையுமே சாப்பிட விட மாட்டேங்குறே, டைம் டேபிள் போட்டு சமைக்க சொல்றே”
“உன் டைம் டேபிள் எல்லாம் உனக்கு வரப்போறவகிட்ட வைச்சுக்கோ. வேணாம் வேணாம் அவளையும் சேர்த்து படுத்துவ நீ”
“இனிமே உங்ககிட்ட நான் எதுவும் சொல்ல மாட்டேன், என்னமோ பண்ணிட்டு போங்க” என்று கத்திவிட்டு அங்கிருந்த சேரை எட்டி உதைக்க அது கீழே விழுந்ததை பொருட்ப்படுத்தாமல் அவன் அறைக்கு சென்றுவிட்டான்.
அத்தனை நேரமும் அருள்செல்வன் அங்குதானிருந்தார் நடந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டு.
“என்னங்க??”
“என்னம்மா??”
“அவன் அவ்வளவு பேசிட்டு இருக்கான். இங்க இவ்வளவு பஞ்சாயத்து நடக்குது, எனக்கென்னன்னு உட்கார்ந்து பேப்பர் படிச்சிட்டு இருக்கீங்க நீங்க…”
“அவனைப்பத்தி தான் உனக்கு தெரியும்ல. நாம காலையில பேசி அவனை டென்ஷன் பண்ணணுமா??”
“ஆமாமா நீங்க பேசாம இருந்து நல்லவர்ன்னு பேர் வாங்கிக்கோங்க. நான் பேசி கெட்டவன்னு பேர் வாங்கிக்கறேன், இதென்ன எங்களுக்கு புதுசா” என்றுவிட்டு அவர் உள்ளே நகர்ந்துவிட்டார்.
“சந்து… சந்து…” என்றவாறே பின்னோடே வந்தார் அருள்செல்வன்.
“இந்த சந்து பொந்துன்னு கூப்பிடற வேலை எல்லாம் வேணாம்ன்னு உங்ககிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன்”
“சாரி சந்து”
“எனக்கு எதுக்கு உங்க சாரி, போங்க போய் வேலையை பாருங்க…”
அவரோ “காபி” என்று இழுக்க சந்தியா முறைத்த முறைப்பில் அவர் வெளியே ஓடிவிட்டார். ஊருக்கே சிம்ம சொப்பனமாய் இருக்கும் கணவர், தன்னிடம் இப்படி பம்முவது பார்க்க பார்க்க சந்தியாவுக்கு ஆச்சரியமாகவே இருக்கும்.
திருமணம் முடிந்து வந்த புதிதில் சந்தியா தான் அவரை பார்த்து பயந்து பயந்து பேசுவார். அருள்செல்வன் சந்தியாவிடம் பேசிப் பேசி அவர் பயத்தை போக்கி வீட்டில் அவர் தன் மனைவிக்கு கணவன் மட்டுமே என்பதை புரிய வைத்தார்.
அருள்செல்வன் டிஜிபியாக இருக்கிறார் மதுரையில். ஆதி அரவிந்த் கண் மருத்துவமனையில் பணிபுரிகிறான். சந்தியா பள்ளி உதவி தலைமை ஆசிரியை கூடிய விரைவில் தலைமை ஆசிரியையாக பதவியேற்கப் போகிறார். 
குளித்து முடித்து மருத்துவமனை செல்ல கிளம்பி தயாராக வந்தான் ஆதித்ய கரிகாலன்.
பூஜையறை சென்று கடவுளை தொழுது வெளியில் வந்தவன் “அம்மா” என்றழைத்தான்.
‘இவனுக்கு இருக்க ஒரே நல்ல பழக்கம் இது மட்டும் தான். எவ்வளவு சண்டை போட்டாலும் அடுத்த நிமிஷம் இவனுக்கு எல்லாரும் வேணும்ன்னு நினைப்பான்’ என்று எண்ணிக்கொண்டே சமையலறையில் இருந்து வெளியில் வந்தார் அவர்.
“நீங்க இன்னும் கிளம்பலையாம்மா??”
“கிளம்பணும்ப்பா, இன்னைக்கு அப்பா என்னை ஸ்கூல்ல விட்டு போறேன்னு சொன்னாரு”
“ஏன்மா அப்பாக்கு வேலையில்லையா??” என்று அவன் கேட்டு வைக்க தாயும் தந்தையும் ஒரு சேர முறைத்தனர் அவனை.
அப்போது தான் அவர் போலீஸ் உடைக்கு மாறி அவனருகில் வந்து அமர்ந்திருந்தார்.
“இன்னைக்கு எங்க கல்யாண நாளு, கோவிலுக்கு போயிட்டு உங்கம்மாவை கூட்டிட்டு போய் ஸ்கூல்ல விடணும்ன்னு உங்கம்மா ஆர்டர் அதை எப்படி நான் மீற முடியும் ஆதி”
“அவுச்” என்று தலையில் தட்டிக்கொண்டவன் “சாரிமா, சாரிப்பா மறந்திட்டிட்டேன். நேத்து கூட ஞாபகமா தான் இருந்தேன்” என்றவன் உள்ளே ஓடினான் அவசரமாய்.
“எங்க போறான் இவன் இப்படி வேகமா??”
“எதாச்சும் கிப்ட் வாங்கி வைச்சிருப்பான், வருவான் இரு…”
அவர் சொன்னது போலவே அவர்களின் மகன் தான் வாங்கி வைத்திருந்ததை கொடுக்கத் தான் உள்ளே ஓடினான் என்பதை அவன் திரும்பி வரும் போது கொண்டு வந்த கவர்களை பார்த்து புரிந்தது.
“அம்மா உங்களுக்கு புடவை என்னோட செலெக்ஷன் ஏதோ எனக்கு தெரிஞ்ச மாதிரி வாங்கியிருக்கேன். அப்பாவை இதுவரைக்கும் நான் வேட்டி சட்டையில பார்த்தது இல்லை, சோ அப்பா இது உங்களுக்கு ராம்ராஜ் ஒட்டிக்கோ கட்டிக்கோ ஓகே வா” என்று கொடுத்தான்.
“அப்படியே என்னை கொஞ்சம் ஆசிர்வாதம் செஞ்சிடுங்க” என்று சொல்லி அவர்கள் இருவரின் காலில் விழ “நல்லாயிருப்பா அடுத்த வருஷம் நீ குடும்பமா எங்க கால்ல விழணும். ரெண்டா இருந்தாலும் சரி மூணா இருந்தாலும் சரி” என்றார் சந்தியா.
“அம்மா ரெண்டாவது கல்யாணம் தப்பும்மா” என்றான் ஆதி.
‘இவன் எதுக்கு இதை சொல்றான்’ என்று பார்த்தவர் அவன் சொல்ல வருவது புரியவும் “டேய் மவனே நான் நீ உன் பொண்டாட்டி புள்ளைன்னு சேர்த்து சொன்னா, உனக்கு ரெண்டாவது கேட்குதா”
“ஆனா பாரு ஆதி இங்க ஒண்ணுக்கே வழியை காணோம். தவிர நீ அதுக்கெல்லாம் செட் ஆகா மாட்டேடா” என்றார் சந்தியா.
“அம்மா”
“இன்னைக்கு ஈவினிங் கிளினிக் திறக்க வேண்டாம்”
“எதுக்கு??”
“அதான் நேத்தே சொன்னேன்ல பொண்ணு பார்க்க போறோம் இன்னைக்கு”
“அம்மா என்னை விட்டிடுங்க”
“ஆதி இப்போவே உனக்கு இருபத்தி எட்டு ஆகுது. இதுக்கு மேல டிலே பண்ண முடியாது”
சந்தியா பேசிக்கொண்டிருக்க ஆதி தன் நினைவடுக்கில் இருந்த அந்த நீல நயன அழகியை தேடிக் கொண்டிருந்தான்.
அவள் கண்களை தவிர வேறொன்றும் அவன் மனதில் பதிந்திருக்கவேயில்லை. கல்லூரி நான்காம் ஆண்டில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்துக் கொண்டிருந்த வேளை அது.
பதின்ம வயது சிறுமி அவள், அவன் பணிபுரிந்து கொண்டிருந்த மருத்துவமனைக்கு வந்திருந்தாள். உடன் தன் அன்னையுடன், சாதாரண ஜுரம் தான் அவளுக்கு.
இவன் தான் பரிசோதித்துக் கொண்டிருந்தான். “கண்ணை திறம்மா” என்று அவள் அன்னையின் மீது சாய்ந்து கண் மூடிக் கிடந்தவளை பார்த்து சொல்ல மெதுவாய் கண் திறந்தாள் அப்பெண்.
‘என்ன கண்ணுடா இது??’ என்று தான் ஓடியது அவனுக்கு. அந்த நீலவண்ண கண்ணனின் நிறம் அவள் கரு விழிகளில் இல்லையில்லை நீல விழிகளில் என்று தான் சொல்ல வேண்டும்.
“டாக்டர் என் பொண்ணு கண்ணே திறக்க மாட்டேங்குறா. ரொம்ப அனலா கொதிக்குது, சாப்பிடவே மாட்டேங்குறா” என்று அவள் அன்னை சொல்வது காதில் விழ அவரை திரும்பி பார்த்தான் அவன். 
“இல்லை சாதாரண காய்ச்சல் தான் சரியாகிடும். கஞ்சி கொடுங்க, எதுவும் சாப்பிடாம இருக்க வேணாம். சாப்பிடாதது தான் சோர்வா இருக்கு”
“பால் ஐட்டம் எல்லாம் எதுவும் கொடுக்காதீங்க ஒரு ரெண்டு நாளைக்கு. கஞ்சி, இட்லி, ரசம் இப்படி கொடுங்க… இதுல எழுதி இருக்க மாத்திரையை வாங்கி போடுங்க” என்று சொன்னான் அவன்.
“டேய் ஆதி” என்று சந்தியா உலுக்க தன் நினைவு கலைந்தான் அவன்.
“என்னம்மா??”
“இன்னைக்கு பொண்ணு பார்க்கப் போறோம்” என்று சொல்லவும் போன வருடம் அவன் பார்த்த பெண்ணின் நினைவும் வந்தது அவனுக்கு.
நீல விழிப் பெண்ணும், சென்ற வருடம் பெண் பார்க்க போனவளும் அவன் முன்னே வந்து இம்சை செய்தனர். அதன் பொருட்டு “அம்மா ப்ளீஸ் எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்” என்றான் அவன்.
“உனக்கு வேணுமா வேணாமான்னு எல்லாம் நான் கேட்கலை ஆதி. இன்னைக்கு போறோம், நீ வந்திடு…”

“அம்மா போன முறை மாதிரி”
“அது நீ பண்ணி வைச்ச திருதாளம். அதை சரிபண்ணி நான் மன்னிப்பு கேட்டு இப்போ தான் மறுபடியும் உனக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிருக்கேன். இந்த முறை நாம பார்க்க போற பொண்ணுக்கு சுருட்டை முடிடா ஆதி நீ கேட்ட மாதிரி” என்றார் சந்தியா.
‘ஒரு வேளை இது நாம தேடுற பொண்ணா இருந்தா’ என்ற எண்ணம் ஓடியதும் ஆதி தன் அன்னையிடம் சரியென்று தலையசைக்க அத்துனை நேரமும் அவனின் முகத்தில் வந்து போன பாவனைகளையே நோட்டம் செய்துக் கொண்டிருந்த அருள்செல்வன் மகன் சாப்பிட்டு கிளம்பி சென்ற பின்னே தன் மனைவிடம் பேசினார்.
“சந்தியா பையன் எங்கயோ விழுந்திட்டான்னு நினைக்கிறேன்”
“அவனுக்கு அவ்வளவு சமத்து எல்லாம் பத்தாதுங்க”
“இல்லை உறுதியா சொல்றேன் விழுந்துட்டான்”
“பொண்ணு யார்ன்னு சொன்னா நாம என்ன வேணாம்ன்னா சொல்லப் போறோம்”
“அங்க தான் எனக்கும் இடிக்குது, நம்ம பையன் நம்மகிட்ட பேச தயங்குறவன் எல்லாம் இல்லை. ஆனா…”
“உங்க போலீஸ் மூளை எல்லாம் வீட்டுக்கு வெளியவே இருக்கட்டும். நாம இப்போ கோவிலுக்கு கிளம்புவோம்” என்று சொல்ல இருவருமாய் கிளம்பினர்.
——————–
“விலோ”
“அப்பா” என்று வந்து நின்றாள் விலோசனா.
“இன்னைக்கு ஒரு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றேன்னு சொல்லியிருக்காங்கடா”
“அப்பா…” என்று முகம் சுருக்கினாள் அவள்.
“போன முறை மாதிரி ஆகாது. அந்த மாப்பிள்ளை அப்படி பேசுவான்னு நானும் நினைக்கலைடா” என்றார் வருத்தமாய்.
“இவனும் அப்படி முகத்துக்கு நேரே பிடிக்கலைன்னு சொன்னா என்னப்பா செய்யறது” என்றவளின் கண்கள் லேசாய் கலங்கிவிட அத்தந்தைக்கு உள்ளம் உருகிப் போனது.
“இல்லைம்மா அப்படி யாரும் உன்னைப் பேச அப்பா விட்டிற மாட்டேன். நம்பிக்கை வைடா, உனக்கு முடிக்கவும் அடுத்து நயனா நிக்கறா, அவளுக்கும் முடிக்கணும்”
“சரிப்பா வரச்சொல்லுங்க…”

“நீ சீக்கிரம் வந்திடறியா??”
“ஹ்ம்ம் வர்றேன்ப்பா” என்றாள் அவள்.
விலோசனா, நயனா உடன் பிறந்தவர்கள். இருவருக்கும் ஒரு வருட இடைவெளி மட்டுமே. அவர்களின் தந்தை இளவரசன் தாய் யமுனா. தாய் தற்போது உயிருடன் இல்லை தந்தை மட்டுமே.
அவர் ஒரு கார்மெண்ட்சை நிர்வகிக்கிறார். விலோசனா ஒரு பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரிகிறாள். நயனா ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு துறையில் வேலை செய்கிறாள். இது தான் நம் நாயகியரின் குடும்பம்.
——————–
“வெட்டிட்டியா?? கையை வெட்ட உனக்கு எவ்வளவு நேரமாகுது. நீயெல்லாம் அதுக்கு லாயக்கே இல்லைடா, கையை நம்ம சிவாவை வெட்டச் சொல்லு”
“காலா அதை நீ ஒழுங்கா வெட்டிருவியா, நேத்து தண்ணி போட்டிருப்ப. போதை இன்னும் உனக்கு தெளியலை அதான் கை காலெல்லாம் உனக்கு நடுங்குது”
“காலும் கையும் ஒழுங்கா வெட்டத் தெரியலை நீயெல்லாம் எதுக்குடா இந்த வேலைக்கு வந்தே??” என்று போனில் கத்திக் கொண்டிருந்தான் செங்கதிர்.

Advertisement