Advertisement

அத்தியாயம் 09
அன்று காலை அலுவலகத்தில் நுழைந்ததுமே ஆராவை தேடிய விஜயின் கண்கள் எங்கும் காணாது ஏமாற்றமடைய, தன் இருக்கையில் சென்றமர்ந்தான். பக்கத்து இருக்கையிலிருந்த அகில் புறம் திரும்பியவன், “டேய் மச்சான் அந்த அராத்து எங்கடா?” என்றான். 
அகிலோ சந்தேகப் பார்வையும் மெல்லிய சிரிப்புமாய் பார்க்க, “என்ன லுக்?” என அதட்டினான் விஜய். 
“என்னடா நடக்குது உங்களுக்குள்ள?”
“நத்திங், ஓவரா இமேஜின் பண்ணிக்காத!” 
“இமேஜினா? இல்லை, தெரியாம தான் கேட்குறேன் அவளும் இப்படி தான் நேத்து நீ வரலைனு உன்னை தேடுனா? இன்னைக்கு நீ அவளை தேடுற? உண்மையை சொல்லுடா, உதவி வேணும்னா கூசாம கேளு மச்சான். தர்ஷி விடு தூது அனுப்புவோம்..” என்றவன் கண் சிமிட்டி சிரித்தான். 
விஜயோ சுட்டெரிப்பது போல் முறைக்க, “சீரியஸா தெரியலை மச்சான், தர்ஷினிட்ட வேணா கேட்டுச் சொல்லுறேன்” எனப் பம்பினான். 
பின் அவனின் கவனமும் வேலையில் திரும்பிவிட, அன்றைய நாளும் கடந்தது. மறுநாள் அகில், தர்ஷினி ட்ரீட் தருவதாக மீண்டும் அழைத்திருக்க, ஆராவும் வருவாள் என்பது நினைவிலிருந்ததால் அவனும் கிளம்பினான். 
அதற்குப் பின் சுபத்ராவின் வீட்டிற்கு அவன் செல்லும் அவசியம் வரவில்லை, அவனும் பெரும்பாலும் தவிர்த்துவிட கௌஷியும் பவானியும் மட்டுமே அவசியம் என்றால் சென்று வருவது. வெகு ஆண்டுகள் கடந்ததில் ஆராதனா என்பவள் அவன் நினைவிலேயில்லை. 
அவளுக்கும் அவ்வாறு தானா? இல்லை வேறு ஏதேனும் உள் நோக்கத்தோடு மறைத்தாளா? என்ற சந்தேகம்! 
சனிக்கிழமை மாலை நேரம் அகில் அழைத்திருந்த உணவகத்திற்குச் சென்றான். அவன் செல்லும் முன்பே, அவர்கள் இருவரும் டேபுள் புக் செய்து அமர்ந்திருக்க, அவர்களுக்கு எதிரே சென்று அமர்ந்தான். அவளைக் காணவில்லை எனக் கண்கள் தேடிய போதும், ஏற்கனவே அகில் கேலி செய்திருந்ததால் அவர்களிடம் விசாரிக்கவில்லை. 
சில நிமிடங்களிலே புன்னகை முகமாக அவர்களை நோக்கி வந்த ஆரா, “சாரி, கொஞ்சம் லேட்” என்றபடி, விஜய்க்கு எதிரே அமர்ந்தாள். 
அவன் பார்வை கூர்மையாக அவளை அளவிடத் தொடங்கியது. வழக்கம் போலே ஆரஞ்சு நிறத்தில் குர்த்தியும், கருமை நிறத்தில் ஜீனும் அணிந்திருந்தாள். அவள் அணிந்திருக்கும் உடையும் ஹீல்ஸ்யும் சிக்கென்ற உடல் வாகுடன் அவளை உயரமாகக் காட்டியது. அவள் சுருள் முடி மொத்தமும் உச்சந்தலையிலிருந்து தோளில் பாதி வரை படர்ந்திருந்தது. வளைந்த புருவமும் மையிட்ட விழிகளும் ஒரு ஈர்ப்பு! 
வெகுவாக மெலிந்து, அவள் தானா இவள் என சந்தேகம் கொள்ளும் அளவிற்கு மொத்தமாக மாறியிருந்தாள். ஆராய்ச்சியாய் தொடங்கிய பார்வை அவனையும் அறியாது ரசனையாய் மாற, அவள் கவனிக்கவில்லை எனினும் அகில் கவனித்திருந்தான். 
“மச்சான் உனக்கு வேணுங்கிறதை ஆடர் பண்ணுடா” என்றபடி மேனுக்கார்டை அவனிடம் நீட்டிய அகிலின் குரலில் களைத்தவன் சட்டென விழிகளைத் திரும்பினான். அந்த நொடி ஆராதனாவும் அவனை கவனித்திருந்தாள். 
விஜய் அவனுக்கான உணவை ஆடர் சொல்லிவிட்டு அவர்கள் உரையாடலில் கலந்துவிட்டான். ஆராதனா இருந்தால் அந்த இடத்தில் கலகலப்பிற்குப் பஞ்சமில்லை என்னும் படி சிரிப்பும் கேலியுமாகத் தொடர்ந்தது. இடையில் உணவு வர, உண்டபடியே மேலும் அரட்டையைத் தொடர்ந்தனர். 
அவர்கள் காதலின் தொடக்கமான கல்லூரிக் கதையிலிருந்து நேற்றைய அலுவலக கொண்டாட்டம் வரை கேலியும் கிண்டலுமாகத் தொடர, கல்லூரிக் கதைகள் பேசும் போதே விஜய் பற்றியும் எடுத்துவிட்டான் அகில். 
நேரம் செல்ல, உண்டு முடித்திருந்திருந்தவர்கள் சினிமாவிற்குச் செல்வதாக முன் விடைப்பெற்றுக் கிளம்பினர். தங்கள் வண்டியை நோக்கி விஜயும் ஆராதனாவும் நடக்கத் தொடங்கினர். 
“ஆரா, உங்க வீடு எங்க?” என்றவன் விசாரணையைத் தொடக்க, ஒரு நொடி திருதிருவென விழித்து நின்றாள். 
இவ முழியே சரியில்லையே அவன் நினைக்கும் போதே, “நான் என் கார்லையே போய்கிறேன், நீங்க ட்ராப் பண்ணனும்னு அவசியமில்லை. தேங்க்ஸ்..” எனச் சமாளித்தவள் சட்டென ஓடப் பார்க்க, அவள் கைகளை எட்டிப் பிடித்தான். 
போச்சு! வசமா மாட்டிக்கிட்டத் திட்டப் போறான்! அவள் மனசாட்சி படபடக்க, “எங்க அக்கா வீட்டுக்கு எதிர் வீடு ரைட்?” என்றான் கேள்வியாக. 
அவளோ ஆம் இல்லை என்காது எட்டுத் திசைக்குத் தலையை உருட்ட, அவள் செயலில் சிரித்தவன், “தலையாட்டிப் பொம்மை” என முணுமுணுத்துக் கொண்டான். 
அப்பாடா! கேள்வி எதுவும் கேட்கலை, என ஆசுவாசமானவள் நிம்மதியாய் மூச்சை விட்டுக்கொள்ள, அவள் காதோரம் தோளில் தொங்கிய முடிகளைப் பற்றி இழுத்தவன், “என்னதிது நூடுல்ஸ் மண்டை?” என்றான். 
“இது மாறுவேஷம், எப்படி?” என்றவள் கெத்தாகக் காலரைத் தூக்கியபடி கேட்க, “இதான் மாறுவேஷமா..? கன்னத்துல மச்சம், ஒட்டு மீசை இதெல்லாம் காணும்?” எனப் பொங்கிச் சிரித்தான். 
சிரிப்புடனே “பட் பாராட்டியே ஆகணும்! இத்தனை நாள்ல என்னாலையே அடையாளம் கண்டு பிடிக்க முடியலையே! சரி, எதுக்கு இந்த வேஷம்? எனக்காகவா?” என்றான். 
என்னவோ அவளுடன் இருக்கும் போது மனவிட்டுச் சிரிப்பதையும் மனது இலகுவதையும் அவனால் உணர முடித்தது. முகம் மலர சிரிக்கும் அழகை கண்ணிமைக்காது பார்த்து நின்றவள், இவங்க அக்கா சொன்னது உண்மை தான் போல இவங்ககிட்ட என்னவோ ஒரு வசீகரம் இருக்கு! என நினைத்து நின்றாள். 
“நீங்க எப்பவும் சொல்லுவீங்களே பணத்திமிர்னு அதான்! எங்க வீட்டுல கொட்டிக்கிடக்குல அதனால ஜிம்முக்கும் பார்லர்க்கும் அள்ளிக்கொடுத்துகிட்டு இருக்கேன்” என்றவள் உதட்டை சுளித்துக்கொண்டாள். 
“ஓஹோ, அப்போ என்னை நியாபம் இருக்கு..?” என்றவன் சிரிப்பு மறைய, அவள் முன் தலை சாய்த்து கேட்க, அவன் முன்னே நெற்றியில் அடித்துக்கொண்டவள், உளறிட்டியே ஆரா என நினைத்தாள். 
“அப்பறம் ஏன் பஸ்ட் டைம் பார்க்கிற மாதிரி பெயர் எல்லாம் கேட்ட?” என்றவன் அடுத்த கேள்வியும் கேட்டான். 
“ஹான், நீங்களும் தான் என்னை புதுசா பார்க்கிற மாதிரி பார்த்தீங்க?”
“உன் மாறுவேஷத்துல நிஜமாவே நீ தாங்கிறது எனக்குத் தெரியலை. அதுவும் போக மறந்துட்டேன்”
“சரி தான் திட்டுன நீங்க மறக்கலாம், திட்டு வாங்கினது நான் தானே!”

“அப்போ உனக்கு நியாபகம் இருக்கு, அப்பறம் ஏன் காட்டிக்கிடலை” 
“அதான் நீங்களே சொல்லீட்டிங்களே, உங்களுக்கே என்னை நியாபகம் இல்லாத போது நானா எதுக்கு நியாபகப்படுத்தி வாங்கிக்கட்டிக்கணும்னு அமைதியா இருந்துட்டேன்”
“ஏன் நான் என்ன செஞ்சேன் உன்னை?”
“பார்க்கும் போதெல்லாம் திட்டிட்டு என்ன செஞ்சேன்னு கேள்வி வேற?”
அவனோ யோசிப்பது போல் பாவனை காட்டிவிட்டு, “அதெல்லாம் திட்டுக்களா..?” என்க, “பின்ன அதென்ன கொஞ்சல்ஸா?” என்றாள் அவளும் வேகமாக. 
ஐயோ இவன்கிட்ட மட்டும் இப்படி உளறுரையே ஆரா உன்னைப் பத்தி என்ன நினைப்பான்? என மனதிற்குள் நொந்துக்கொண்டாள். விஜயோ பதிலின்றி ஒரு நொடி மௌனமானவன் மனத்திற்குள் கொஞ்சம் ஓவரா தான் திட்டி இருக்கேனா இந்த அளவுக்கு பயப்படுறா? என நினைத்தான். 
“சாரி..” சட்டென அவனிடமிருந்து வந்த மன்னிப்புகளை அவள் எதிர்பார்க்கவில்லை. இவன் தானா அவன் என்ற சந்தேகம் தான் அவளுக்கு இப்போது! 
அவனையே பார்த்தபடி இருக்க, “கண்டிப்பா அதெல்லாம் உன் மேல மட்டும் இருந்த கோபமில்லை” என்க, “அப்போ என் மேலையும் கொஞ்சம் இருந்து இருக்கு, என்ன கோபம்?” என்றாள் கேள்வியாகப் புருவம் உயற்றி. 
அக்காவின் மீதிருந்த மனத்தாங்கலை அவளிடம் பகிர்ந்து கொள்ள விருப்பமில்லை. அது மட்டுமின்று அவர்கள் மீதான கோபத்தை இடையில் வந்த இவள் மீது எந்த உரிமையில் காட்டினேன்? என்ற கேள்விக்கும் அவனிடம் பதில்லலை!
“அதான் சாரி கேட்டேனே?” 
“இது அல்லவே என் கேள்விக்கான பதில்?” 
அவன் மௌனமாகிவிட “இட்ஸ் ஓகே, இப்போ இவ்வளவு நல்லவிதமா பேசுற நீங்க, முன்னலாம் எதுக்கு டாபர்மேன் மாதிரி வல்லுவல்லுன்னு விழுந்தீங்க?” என அதே கேள்வியை வேறுவிதமாக கேட்டாள். 
“இப்போ நீ என்னை நாயின்னு சொல்லுற?” எனப் பதிலைத் தவிர்த்த அவன் கேள்வியில்,  கண்டுகொண்டானே நாக்கை கடித்தவள் ஒற்றை கண்ணை மூடிச் சிரித்தாள். 
இருவரும் அவள் காரருகே வந்திருக்க, கதவை அவன் திறக்க, கையசைத்து விடைபெற்றாள். 
அவன் மனதில் தோன்றிய குற்றவுணர்ச்சியில் வாடித்தான் நின்றான். யாரும் அவனைத் தவிர்த்ததில்லை. அவனுக்கான நட்பு வட்டம் சிறிதென்றாலும் அனைவரின் நலனிலும் அக்கறை கொண்டவன் அவனை தவிர்த்து ஓடியிருக்கிறாள். 
இரவு உணவிற்கு பின் கௌஷி அவள் அறைக்குள் வர, ரவி கட்டிலில் அமர்ந்து அவன் டைரி குறிப்புகளில் இருந்த கணக்கு வழக்குகளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
புது வீட்டின் கட்டிட வேலைகளும் தொடங்கி நடந்து கொண்டிருக்க, ரவி தான் அதையும் கவனித்து வந்தான். வெளி வேலைகளை கவனித்துக்கொள்ளும் விஜய் விடுமுறை நாட்களுக்கு மட்டுமே சென்று வருவான். 
அழுத்தமான அவன் முக பாவனைகளை ஆராய்ந்தபடி படுத்தவள், “என்னாச்சு?” என்க, “ஒன்னுமில்லை..” என்றபடி டைரியை முடி வைத்து விட்டு அவனும் படுத்தான். 
“ஏங்க விஜய்க்கு கல்யாண வயசு தானே பொண்ணுப் பார்ப்போமா?” 
“என்ன திடீர்னு..?”
“திடீர்னு எல்லாம் இல்லை, கொஞ்ச நாளாவே அத்தைக்கும் எனக்கும் இந்த எண்ணம் தான். அதுவும் போக அவனும் ஸ்ரீயும் செய்ற அட்டகாசத்தை என்னால தாங்க முடியலை” 
“முதல்ல வீடு காட்டி முடியட்டும், அதுக்கு அடுத்து கல்யாணத்தை வைச்சிக்கலாம்”
“அப்போ பொண்ணு பார்க்க ஸ்டார்ட் பண்றோம்”
“ஏன் இவ்வளவு அவசரம்?”
“உங்களுக்கு என்ன தெரியும்? இப்போல்லாம் பொண்ணு கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம்னு அதுவும் போக பொண்ணுங்களை அவங்க அப்பாம்மா கேட்குற குலிபிகேஷன்ல கேட்ட தலை சுத்துது. இப்போ ஜாதகத்தை எடுத்தா தான் வீடு கட்டி முடியவும் நல்லா இடமா அமையவும் சரியா இருக்கும்”
“அப்போ சரி, செய்யுங்க. எதுக்கும் அவங்கிட்டையும் ஒரு வார்த்தை மறக்காம கேட்டுக்கோங்க” 
“ம்ம், சொல்ல மறந்துட்டேன் கையிருப்பு எதுவும் பத்தலைனா வாங்கிக்க சொல்லி அண்ணி சொல்லிட்டு போயிருக்காங்க” 
“என்ன? அவகிட்ட இருக்குன்னு காட்டுறாளா?”
“ஏங்க அப்படி நினைக்கிறீங்க? உதவியா நினைச்சு சொல்லியிருக்கலாமே?”
 
“யார்ட சொன்னா..?”
“அத்தைகிட்டையும் விஜய்கிட்டையும் தான்”
“தேவையிருக்காது பார்த்துக்காலம்”
“வாங்கக் கூடாதுன்னு நினைக்கிறீங்க, அப்படி தானே?”
“ஆமாம், கஷ்டம்னாலும் அவகிட்ட வாங்குறதா இல்லை” 
“ஏங்க..? சொந்தத்துல கொடுக்கல் வாங்கல் வேண்டாம்னா இல்லை சுபத்ரா அண்ணி கையால வாங்கக்கூடாதுன்னா?”
“இரண்டும் தான்..” என்றவன் விழிகளை மூடிக்கொள்ள, அவனையே பார்த்தபடி சிந்தனையிலிருந்தாள் கௌஷிகா. 
ரவிக்கு தன் தன்மானம் விட்டு சுபத்ராவிடம் வாங்குவதில் துளியும் விருப்பமில்லை. அதுவும் போக கட்டப்படும் வீடானது அவனின் முழு முயற்சியாக இருக்க வேண்டும் தவிர, அவளின் பங்களிப்பு இருக்கக்கூடாது என உறுதியாக நினைத்திருந்தான். 
விஜய் ஆராதனாவிற்கு இடையான உறவு இயல்பாக நகர்ந்தது. அன்று காலையிலிருந்து அகில் வழக்கம் போலே சுற்றி வர, அதற்கு மாறாக தர்ஷினியின் முகமே வாடியிருக்க, ஆராதனா நன்கு கவனித்திருந்தாள். இருதினங்களுக்கு முன்பு வரை நன்றாகத் தானே இருந்தாள் என்னவாயிற்று இப்பொழுது? என நினைத்தாள். 
மதிய உணவையும் தர்ஷினி தவிர்த்திருப்பதை அறிந்திருந்த ஆராதனா மாலை நேரம் காஃபியோடு அவள் அருகில் வந்தமர்ந்தாள். 
“நான் உங்கிட்ட கேட்டேனா?” சட்டென தர்ஷினி எரித்து விழுந்தாள். 
அதிக படியான உரிமை எடுத்துக்கொண்டோமோ என நினைத்து முகம் வாடிய ஆராதனா, “சாரி..” என எழுந்து செல்ல பார்க்க, அவள் கைகளைப் பற்றிய தர்ஷினி அதே இருக்கையிலே அமர்த்தினாள். 
“நான் தான் சாரி கேட்கணும், டென்ஷன்ல அப்படி சொல்லிட்டேன்” 
“லீவ் இட், லீவ் இட் ஹேவ டிரிங்”
தர்ஷினியின் முகம் தெளியவேயில்லை. 
“உடம்புக்கு எதுவும் முடியலையா அகில் அண்ணாட்ட இன்போர்ம் பண்ணவா?”
“நத்திங், வீட்டுல தான் ப்ரோபளம்” என்ற தர்ஷினிக்கு யாரிடமேனும் மனக்கவலையைக் கொட்டிவிடும் வேகம் வந்தது. ஆரா தந்த ஆறுதலைப் பற்றிக் கொண்டவளுக்கு அத்தனை ஆசுவாசம்! 
“எனக்கும் அகிலுக்கும் இடையில ப்ரோபளமே இல்லை, ஆன்ட்டிக்கு தான் என்னைப் பிடிக்க மாட்டிக்கு. அன்னைக்கு நம்ம எல்லாரும் டின்னர் போனோம்லையா அன்னைக்கு அவங்க ஏதோ கோவிலுக்குப் போகணும்னு வேண்டுதல் வந்திருந்தாங்களாம், அது எனக்குத் தெரியாது, நானும் அகிலும் வெளிய வந்துட்டோம். அதுக்கு அடுத்த நாளே வீட்டுல எதுவும் எங்கிட்ட சொல்லாம நீயா முடிவெடுத்துக்கிடுறன்னு உன் இஷ்டத்துக்கு இருக்கேன்னு என் மேல குறை சொல்லுறாங்க. 
நான் என்ன செய்தாலும் அவங்களுக்கு தப்பா தான் தெரியுது. எங்க ரூம் இன்டிரியர் மாத்தணும்னா கூட அவங்ககிட்ட பெர்மிஷன் கேட்க வேண்டியிருக்கு, அவளுக்கு அதெல்லாம் வெட்டி, ஆடம்பரச் செலவுன்னு தோணுது. இது எல்லாம் கூட பரவாயில்லை ஏதோ ஒரு தடவை சொல்லாம போயிட்டேன் அதை எத்தனை தடவை தான் குத்திக்காட்டுவாங்களோ அம்மா வீட்டுக்கே போக விட மாட்டிக்காங்க! தாங்க முடியலை. எனக்கும் ஸெல்ப் ரெஸ்பெக்ட் இருக்கு தானே ஏதாவது கூடுதலா ஒரு வார்த்தை பேசிட்டாலும் சம்பாதிக்கிற திமிரான்னு கேட்குறாங்க!”
“அகில் அண்ணாட்ட ஒரு வார்த்தை சொல்லி வைக்க வேண்டியது தானே!”
“நோ யூஸ், அவன்கிட்ட சொன்னதுக்குத் தான் என்ன தனிக்குடித்தனம் போறதுக்கு பிளன்னான்னு கேட்குறான் இடியட். அன்ட் அவன் முன்னாடி பெருசா எதுவும் சொல்ல மாட்டாங்க. ஒரு வார்த்தை எனக்கு ஃபேவரா பேசிட்டாலும் கல்யாணத்துக்கு முன்னாடி என்மகன் எப்படி இருந்தான் தெரியுமா, இப்போ நீ தான் அவனை மாத்திட்டேன்னு அதுக்கும் என்னைத் தான் குறை சொல்லுவாங்க!
சொல்லலாமே போயிட்டேன்னு இங்கையும், ஏன் வந்தேன்னு அங்கையும் கேட்டா நான் எங்க தான் போறது? ஏன்டா இந்த வாழ்கைன்னு தோணுது, இதுக்கு தான் லவ் பண்ணி, வெயிட் பண்ணி கல்யாணம் பண்ணேனா?” 
“ஏன் தர்ஷினி இப்படியெல்லாம் நினைக்கிறீங்க”
“பின்ன லவ் பண்ணி மேர்ஜ் பண்ணிக்கிட்டது தவறா? சுதந்திரமா வளர்ந்தவ, இப்போ ஒரு முடிவு கூட என்னால எடுக்க முடியலை”
“லவ் மேர்ஜ்ன்னு இல்லை பொதுவாவே கல்யாணமான எல்லா பொண்ணுங்களுக்குமே ஆரம்பத்துல இந்த பிரச்சனை இருக்கும். மேரேஜான புதுசு தானே! அடிக்கடி போகலைன்னா அம்மா வீட்டுல நம்ம பாசம் கேள்விக்குறியாகும். போனோம்னா இங்க நம்ம கடமைகளை கேள்விகுறியாக்குவாங்க!” 
அவர்களுக்குப் பின் இருக்கையில் இருந்தவனிடம் வேலை விஷயமாக  பேசிக்கொண்டிருந்த விஜயரூபனின் காதுகளில் ஆராதனாவின் குரல் கேட்க, திரும்பிப் பார்த்தான்.
“குழந்தைகள், பொருளாதார சூழல்ன்னு நாம தலையெடுக்குற வரைக்கும் அவங்க கை பிடிச்சி நடக்குற குழந்தைன்னு தான் நம்மை பார்ப்பாங்க. இதுவே நம்ம வீட்டுல சொன்னா ஏத்துக்க மாட்டீங்களா? நம்ம நன்மைக்குத் தான் பாருங்க தர்ஷினி”
“எது நன்மை? என் ட்ரெஸ்ல இருந்து ஃபூட் வரைக்கு மாத்துறது எனக்கு ப்ரசரை தான் கொடுக்குது”
“உங்ககிட்ட குழந்தை எதிர்பார்த்து அதனால உங்க ஃபூட்ல கான்சியஸா இருந்திருக்கலாம், அன்ட் அவங்களுக்குப் பெண்பிள்ளை இல்லையில்லையா அதனால உங்களை அழகு படுத்திப்பார்த்திருக்கலாம். இப்படியும் கொஞ்சம் யோசிங்க தர்ஷினி!”
“இருந்தாலும் என் செயல் எல்லாத்துலையும் குறை சொல்லுறதை ஏத்துக்க முடியலை” 
“ஸ்டார்டிங்ல எதுலையுமே பெர்பாக்ஷன் எதிர்பார்க்க முடியாதுல்ல, இது தப்பு அது தப்புன்னு சொல்லறது குறையா இருக்கலாம். அதுவே இப்படி செய்திருக்கலாம் இல்லை இப்படி செய்ன்னு சொல்றது அட்வைஸ் அன்ட் கைடன்ஸ் தானே, யோசிக்கப் புரியும்”
“ம்ம், யோசிக்கிறேன்”
“குட், காஃபி ரொம்ப நேரமா வெயிட் பண்றது, இதெல்லாம் ரொம்ப தவறுங்க” என்றவள் எடுத்துக்கொடுத்தபடி சிரிக்க, இளகிய தர்ஷினி நன்றியோடு வாங்கினாள். 
பருகியபடி, “ஆமா உனக்கு தான் இன்னும் கல்யாணமாகலையே அப்பறம் எப்படி இப்படி எக்ஸ்பிரியஸ் பெர்சன் மாதிரி பேசுற?” என்றாள் கேலியாக. 
“பட்டுத்தெரியுறது மட்டுமில்லைங்க பார்த்து புரிஞ்சிக்கிறதும் அனுபவம் தான்” 
“எது சீரியல் பார்த்தா?” என்றவளின் கேலியில் இருவருமே மலர்ந்து சிரித்தனர். 
கேட்டுக்கொண்டிருந்த விஜயக்கு சுபத்ராவை குறிப்பிட்டே ஆராதனா இவ்வாறு பேசியிருக்கக் கூடுமெனத் தோன்றியது. சுபத்ராவை குறித்த தன் எண்ணம் தவறு என்றும் தோன்ற ஆராதனாவை ஒரு ஆராதிக்கும் பார்வை பார்த்தவன் மௌனமாக நகர்ந்தான். 
திருமணமான புதிதில் அவளுக்கும் இவ்வாறெல்லாம் இருந்திருக்குமோ ஆனால் அவள் தர்ஷினி போல் வெளிப்படுத்தியது கூட இல்லையே! வேதனையைக் கொட்டிவிட வேண்டி வந்தாலும் ரவி வேதனையை கொடுத்து தானே அனுப்புகிறான் பின் எவ்வாறு சொல்வாள்? புரிந்து கொள்ள தவறிவிட்டேன்! என நினைக்கிலே விஜய்க்கு ஒரு அழுத்தம் நெஞ்சில் அழுத்தியது! 

Advertisement