Advertisement

அத்தியாயம் 07
தந்தையின் இழப்பிற்குப் பின் சற்றே குடும்பம் நிலையாய் நின்ற போதும், முன்பு போன்ற கலகலப்பு இல்லாது வெறுமையாய் இருந்தது. குழந்தைச் செல்வமே குடும்பத்திற்கு குதூகலத்தை கொடுக்குமென்று நினைத்த பவானி ரவிக்கு திருமணம் செய்யும் முடிவில் பெண் தேடத் தொடங்கினார். 
தரகர் பெண் வீட்டின் ஜாதகமும், முகவரியும் கொடுத்திருக்க, ரவியின் மூலம் அவர்களிடம் பேசிய பவானி நாளை பெண் பார்க்க வருவதாக உரைத்திருந்தார். அதை சுபத்ராவிடம் தெரிவித்துவிட்டு வரும்படி விஜயரூபனை அனுப்பினார் பவானி. 
விஜயரூபன் பி.டெக் இறுதி வருடம் அப்போது தான் முடித்திருக்க, கல்லூரி வளாகத்தேர்விலே பெரிய கம்பெனி ஒன்றில் வேலைக்குத் தேர்வாகியிருந்தான். அதையும் அக்காவிடம் தெரிவிக்கும் மகிழ்ச்சியில் அவள் வீட்டிற்குக் கிளம்பிச் சென்றான். 
அவர்களை விடவும் வசதியானவர்கள் நிறைந்திருக்கும் வீதியது. சுபத்ராவின் மாமியார் சித்ராவிற்கு எப்போதும் அவர்கள் மீது ஒரு கீழான பார்வை தான் அதுவும் அவர் மகனுக்குத் தொழில் வளர்ச்சியடைய இந்த பகுதிக்கு வீடு வாங்கி வந்ததிலிருந்து இவர்களை நோக்கிய அவர் பார்வை மேலும் இளக்காரமாகத் தான் இருக்கும். அதனாலே முன்பு அடிக்கடி வந்து சென்ற பவானி தன் வருகையைக் குறைத்துக் கொண்டு எதுவாக இருந்தாலும் விஜயிடம் மட்டுமே சொல்லி அனுப்புவார். 
தம்பியின் வருகையில் மலர்ந்த சுபத்ரா அவனை வரவேற்றாள். ஹாலில் அமர்ந்திருந்தவனிடம் அவள் நலம் விசாரிக்க, பதிலுரைத்தவன் அவள் நலம் விசாரித்துவிட்டு வேலை கிடைத்திருப்பதையும் உரைத்தான். 
அருகில் அமர்ந்திருந்தவள் “வாழ்த்துகள் விஜய், உன் திறமைக்கு கிடைச்ச வாய்ப்புடா…” என்று அவன் தலை கோதினாள். நேற்று வரையிலும் தனக்கு சிறுவனாய் தெரிந்தவன் ஒரே நாளில் பெரியவனாய் வளர்ந்தது போன்ற மாயத் தோற்றம்! 
“அண்ணனுக்கு நாளைக்கு பொண்ணு பார்க்கப் போகணுமாம், அம்மா உங்களை வரச் சொன்னாங்க” 
“நாளைக்கா…!” என இறங்கிய குரலில் கேட்டவள் ஒரு நொடி அமைதியானாள். 
“சுபத்ரா…பையன் அழுகிறான் பாரு…” எனக் குழந்தையின் அழுகுரலோடு உள்ளிருந்த வந்த சித்ரா, விஜயை கண்டதும் வேண்டா வெறுப்பாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அவளிடம் குழந்தையை கொடுத்தார். 
மூன்றரை வயது மகன் உறக்கத்திலிருந்து விழித்ததும் அன்னையைக் காணாது அழுதிருக்க, தற்போது அவள் கைகளுள் வந்ததும் அழுகை சிறிது சிறிதாகக் குறைந்தது. 
மருமகள் முன் இருக்கவே, “வாப்பா, வீட்டுல எல்லாரும் சௌக்கியமா..?” என விஜயிடம் கேட்டார். வார்த்தை தான் வந்ததே தவிர முகத்தில் சிறு புன்னகையுமில்லை. 
“நல்லாயிருக்கோம்..”
“படிப்பெல்லாம் எப்படி போகுது, அரியர் கிரியர் இல்லாம பாஸ் ஆகிடுவியா..?” என்றவர் கேட்க, “அத்தை அவன் படிச்சி முடிச்சி கேம்பஸ் இண்டர்விவ்ல பிளேஸ் ஆகியிருக்கான்..” என அவனையும் முந்திக்கொண்டு பதிலுரைத்தாள். 
என்ன இருந்தாலும் என் பையன் அளவுக்கு வந்திட முடியுமா? என மனதில் நினைத்தவர், “நல்லது தான், அந்த ஆரஞ்சைக் கொஞ்சம் ஜூஸ் போட்டுக்கொடு சுபத்ரா..” என்றவர் மீண்டும் தன் அறைக்குள் சென்றுவிட்டார். 
“நாளைக்கு அங்க திவ்யா வீட்டுல அவள் கொழுந்தனை கல்யாணம்டா, நாங்க கண்டிப்பாகப் போக வேண்டியிருக்கு, சம்மந்தி வீட்டு விஷேத்துக்கு போகலைன்னா மரியாதையா இருக்காதுடா. எங்களால வர முடியாது அடுத்தவாரம் போகலாம், அம்மாகிட்ட பொண்ணு வீட்டுல சொல்லச் சொல்லிடு” 
சுபத்ராவின் பதலில் விஜய்க்கு மனம் ஆறவில்லை. சம்மந்தி வீட்டில் விசேஷமாம்? அப்போ நாங்கள் யார்? நாங்களும் இவர்கள் வீட்டிற்கு சம்மந்தி வீடு தானே! வசதி பார்த்து தான் மரியாதையும் வரும் போலே! ரவிக்கு இவர்கள் செய்யாமல் யார் செய்வார்? நாங்கள் மட்டும் இரண்டாம்பச்சமா? அவர்கள் சரி அக்காவும் மாறிவிட்டாளே! என ஆற்றாமையில் பொங்கினான்.

விஜய்க்கு சித்ரா பேசியதிலே முகம் வாடி விட்டது அக்காவின் முன் அதைக் காட்டிவிடக் கூடாது எனப் புன்னகையை இழுத்துப்பிடித்துக் கொண்டவன் மனதை சமன்படுத்த கவனத்தைக் குழந்தையிடம் திருப்பினான். 
“மிதுன், செல்லக்குட்டி…இங்க வாங்க..” எனக் கொஞ்சியபடியே அக்காவின் கைகளுள் இருந்த குழந்தையைத் தூக்க முயற்சிக்க, அவனோ வர மறுத்து மேலும் அன்னையின் கழுத்தை கட்டிக்கொண்டு மீண்டும் அழுகையைத் தொடர்ந்தான். 
“மிது…மாமாடா கண்ணா…” என அவளும் சமாதானப்படுத்தியவாறு அவனிடம் கொடுக்க முயற்சிக்க அவன் அழுகை தான் மேலும் அதிகமாகியது. 
“இன்னும் தூக்க கலக்கத்துல தான் இருக்கான், தூங்கி எழுப்போது எப்பவும் அவனுக்கு பக்கத்துல நான் இருக்கணும் இல்லை அழுது ஊரையே கூட்டிடுவான் வாலுப்பையன்…” என்ற சுபத்ரா விஜயின் முகம் பார்க்க லேசான வாட்டம் அவன் முகத்தில் தெரியவே செய்தது. 
அவளோ பேச்சை மாற்ற நினைக்க, “சுபத்ராக்கா..” என்றபடி உள்ளே வந்தாள் ஒரு இளம் பெண். 
சுபத்ராவுமே, “வா ஆராதனா..” என வரவேற்ற, பழக்கம் போலே அவள் அருகில் அமர்ந்தவள் மிதுனை பார்த்ததுமே அவள் மடியிலிருந்து தூக்கினாள். 
“மிது, எங்கப்பா நான் கேட்ட பெங்களூர் ரோஸ் வாங்கிட்டு வந்துட்டாங்களே! எங்க வீட்டு பால்கனில வைச்சியிருக்கேன், பார்க்கப் போவோமா..” எனக் கேட்டபடியே கொஞ்சுபவளை விஜயின் பார்வை அளவிட்டது. 
ஐந்தடி உயரத்தில் மஞ்சள் நிறத்தில் மினி ஸ்கர்டும் டாப்பும் அணிந்திருந்தவள், சீரான நீட்ட முடியை கிளிப் போட்டு தோள்களில் படர விட்டிருந்தாள். பூசிய உடல்வாகும் சிவந்த நிறமும் அதிகப்படியாக தோன்றியது. உள் வருகையிலே அவளை ஆராய்ந்தவனின் பார்வை அவள் குழந்தையை கொஞ்சத் தொடங்கியதும் உஷ்ணமாக மாறியது. 
உஷ்ண மூச்சோடு சுபத்ராவின் புறம் திரும்பியவன், “இது யாரு..?” என்க, “எதிர் வீட்டுப் பொண்ணுடா..” என்றாள். அப்போது தான் புதியவனை கவனித்த ஆராதனா அவனை முதல் பார்வை பார்த்தாள்.
“ஹோ..எதிர்வீட்டுப் பொண்ணுகிட்ட எல்லாம் போவான், எங்கிட்ட வர மாட்டானா…?” எனக் குறையாத கோபத்துடன் கேட்டான். எனக்கு இல்லாத உரிமை எதிர்வீட்டுப் பெண்ணிற்காக என்ற எண்ணம்! 
“டேய், இவ அடிக்கடி வருவாடா நல்லா பழகின முகம்ல அதான்…”
“ஹோ..அப்போ நாங்க அடிக்கடி உங்களைப் பார்க்க வாரதில்லைன்னு குத்திக்காட்டுறீயா?”
“ஐயோ..அப்படி சொல்லலைடா குழந்தைகளுக்கு முகம் பழகக் கொஞ்சம் நாள் ஆகும்டா..”
“அப்படினா நீயாவது அடிக்கடி அவனை வீட்டிற்குத் தூக்கிட்டு வந்திருக்கணும்ல..” என மீண்டும் அவளையே குறை சொல்ல, ஐயோ என்றிருந்தது சுபத்ராவிற்கு. 
குழந்தை வர மறுத்ததினால் கோபமா இல்லை சுபத்ராவின் மீதிருந்த கோபமா என அவனுக்கே தெரியவில்லை. அவனுக்குக் கோபம் வருவது அரிது, வந்தால் செல்வது பெரிது!
இவர்கள் வாக்குவாதத்தைக் கண்டதில் ஆராதனா தான் அவஸ்தையோடு அமர்ந்திருந்தாள். தவறான நேரத்தில் வந்துவிட்டோமோ எனத் தோன்ற, கிளம்ப வேண்டுமென்று நினைத்தாலும் மிதுன் அவளை விடவில்லை. அவள் வளையலைப் பற்றிக்கொண்டு விளையாட தொடங்கியிருந்தான் இனி எழுந்தால் அழுவான். 
“நான் அம்மாகிட்ட பேசிக்கிடுறேன், நீ சாப்பிட வா…” என சுபத்ரா அழைக்கவே, “நான் ஒன்னும் உங்க வீட்டுக்குச் சாப்பிட வரலை..” என்றான் மூச்சை தூக்கி வைத்தபடி. 
அவளோ காதில் வாங்கிக்கொள்ளாது அவனுக்கு ஒரு கிளாஸ் பழச்சாறாவது கொடுப்போமென எழுந்துச் சென்றாள். அது என்னவோ இந்த வார்த்தைகள் எல்லாம் ரவி பேசினால் தாங்கிக்கொள்ள இயலாது, ஆனால் விஜய் பேசினால் சிறு பிள்ளையின் கோபமென நினைத்துத் தவிர்த்தாள். அன்னைக்கு அடுத்தபடியாக அவனைத் தூக்கி வளர்த்தவள் ஆகையாலே அவன் மீது தனிப் பாசம்! 
அவள் சென்ற பின்னும் உர் என முகத்தை வைத்திருந்தவனை கவனியாது குழந்தையோடு விளையாடினாள் ஆராதனா.  
எதார்ச்சியாக நிமிர்ந்தவள் தங்களையே பார்த்திருந்த விஜயின் பார்வையை கண்டுவிட்டு, “மாமாகூட விளையாடுறீயா மிதுன் குட்டி..” என்றபடி அவனை தூக்கினாள். அதுவரை குதூகலமாக விளையாடியவன் விஜயிடம் போக மறுத்து அடம் பிடித்தான். 
“மாமாடா…” என்றவள் சமாதானம் செய்ய, 
“நீ ஒன்னும் சொல்ல தேவையில்லை..” என்றான் பட்டென. 
“இதோ பயந்த மாதிரி இருக்கான், இல்லை வருவான்..” என விஜய்கே சமாதானம் சொல்ல, 
“நான் உங்கிட்ட கேட்டேனா..?” என்றான். 
“இல்லை, அவனுக்கு மாமான்னு…”
“என் அக்கா பையன் தான், நான் அவனுக்கு மாமா தான். அதை நீ வந்து சொல்லித்தரணும்னு அவசியமில்லை புரிஞ்சதா..?”
“நான் எதுவும் சொல்லைங்க..”
“என்ன நீ சொல்லலை? நீ வெளியாள் ஆனால் என்னை விட உனக்குத் தான் அவங்கிட்ட உரிமை இருக்குன்னு காட்டுறீயே..”
அவன் சொல்லிய வேகமும் குரலும் முகத்திலடிபப்து போன்றிருக்க தீயில்பட்ட மலராய் வாடினாள். அவள் வீட்டின் செல்ல இளவரசி, உறவுகள், நட்புகளுக்கு மத்தியில் பட்டாம்பூச்சியாகச் சுற்றி வந்தவளிடம் இதுவரை யாரும் அப்படிப் பேசியதில்லை. அதுவும் அறிமுகமற்றவன் முதல் சந்திப்பிலே இப்படிப் பேசியதைத் தாங்க முடியவில்லை. வேறு யாராக இருப்பினும் பதில் பேசி சண்டையிட்டு விடுவாள் தான் ஆனால் இவனிடம் சுபத்ராவின் மீதுள்ள மரியாதை தட்டுக்க மௌனமானாள். 
இப்போது எதற்கு யாரென்ற தெரியாத உறவற்றவளிடம் சிறு குழந்தையை வந்து உரிமை போராட்டம் நடத்துகிறான்! அவளுக்குப் புரியவில்லை. கிளம்பிவிடு என மனம் சொல்ல, எழுந்தவள் குழந்தையை அவன் அருகே அமர்த்திவிட்டு நகர முயன்றாள். 
அதுவோ வீலென கத்தி அழ, ஒரு அடி நகர்ந்திருந்தவளின் கையை மறு நொடி அழுத்திப் பிடித்திருந்தான். திடீரென கரம் பற்றுவான் என்பதை எதிர்பாராது அதிர்ந்த ஆரா திரும்ப, கோபத்திடம் அவளை முறைத்தான். அனலைக் கக்கும் ட்ரேகன் போன்ற அவன் பார்வையில் அத்தனை உஷ்ணம்!
அந்த பார்வை ஒரு பயத்தைத் தர, யாரும் பார்த்துவிடுவார்களோ என்ற படபடப்பும் சேர, கரத்தை உருவிக்கொள்ள முயன்றாள். அவனின் அழுத்தமான பிடியிலிருந்து இம்மியும் இயலவில்லை! 
“குழந்தையை முதல்ல தூக்கு..” என்ற அடிக்குரலில் அதட்டலிட, சட்டென மறுகையால் நெஞ்சோடு அணைத்து கஷ்டப்பட்டு கவனமோடு தூக்கிக்கொள்ள, அதன் பின்னே அவன் விட, எதிர் இருக்கையில் அமர்ந்தாள். 
பூச்சாண்டி என்றாலே அலறும் குழந்தை போலே ஏற்கனவே சுபத்ராவின் கையிலிருந்து வர மறுத்தவனை மீண்டும் தூக்கித்தருகிறாள் முட்டாள் பெண். என் அக்கா மகனுக்கு என்னை அறிமுகப்படுத்த யாரிவள்? என்ற கோபம் வேற மூக்கை முட்டிக் கொண்டு வந்தது. உண்மையில் அவன் கோபம் சுபத்ராவின் மீது தான்! ஏற்கனவே எரிச்சலில் இருப்பவனைக் கேலி செய்கிறாள் என அவள் மீது திசை திரும்பியிருந்தது. 
“இஞ்சி தின்ன மங்கி மாதிரி இப்படி மூச்சை வைச்சிருந்தா குழந்தை எப்படி வருவானாம்” என முணுமுணுப்போடு எதிர்புறம் திரும்பிக்கொண்டாள். 
அவள் குரல் கேட்கவில்லை எனினும் உதட்டசைவில் அவள் உரைத்ததை உணர்ந்து கொண்டவன் அவன் அமர்ந்திருந்த சோஃபாவில் இருந்து எழுந்து அவள் அருகில் வந்து, “என்ன சொன்ன..?” என்றான்.
காதோரத்தில் கேட்ட அவன் குரலில் திடுக்கிட்டுத் திரும்பியவள் நெருக்கத்தில் இருந்தவனைப் பார்த்துப் பயந்து விழித்தாள். 
அதை உணர்த்தவன் சற்றே நகர்ந்து, “என்ன சொன்ன..?” என்றான் மீண்டும். 
அவனிடம் பயமில்லை எனினும் வம்பு வேண்டாம் என்பதே அவள் எண்ணமாக இருக்க, அவனோ விடுவதாயில்லை. 
“ஒன்னும் சொல்லையே..”
“இல்லை நீ சொன்ன…”
“அப்போ என்ன சொன்னேன்?”
“இஞ்சி தின்ன மங்கின்னு…”
“ம்ம், சரியா தானே சொல்லியிருக்கேன்..” என்றவள் உதட்டைத் சுளித்துக்கொள்ள, 
“ஹே..யார குரங்குன்னு சொன்ன? என்னைப் பார்த்தா குரங்கு மாதிரியா தெரியுது..?” என எகிறினான். 
அவன் பின் எதையோ தேடுவது போலே பார்த்தவள், “வால் மட்டும் தான் இல்லை மத்தபடி மங்கிக்கான பத்து பொருத்தமும் பக்காவா இருக்கு” என கைகளில் அபிநயம் காட்டினாள். 
“போடி பூசணிக்கா, இனி ஒருதடவை சொல்லிப்பாரு அப்போ தெரியும் இந்த விஜய் யார்னு…” 
சிறுபிள்ளையை மிரட்டுவது போன்றே அவன் அதட்டிக்கொண்டு இருக்க, “என்ன விஜய்…” என்ற கண்டிப்போடு வந்தாள் சுபத்ரா. 
கையிலிருந்த பழச்சாற்றை அவனிடம் நீட்ட, “ஓவரா பேசுறாக்கா, சொல்லி வைங்க…” என்றவன் ஒரே மூச்சாக மொத்தத்தையும் குடித்துவிட்டு நில்லாது சென்றுவிட்டான். 
அவன் சொல்லாவிடினும் சுபத்ரா அதை தான் செய்து கொண்டிருந்தாள். பொதுவாக அவள் பேசினாலே பத்தில் ஒரு வார்த்தை விஜயை பற்றியதாகத் தான் இருக்கும். ஆராவிடம் மட்டுமல்ல வீட்டில் உள்ள அனைவரிடமும், மிதுன் செய்யும் சேட்டைகளைப் பார்க்கும் போது, விஜய் கூட இவ்வாறு தான் எனப் பழங்கதை ஒன்றை ஆரம்பிப்பாள். 
விஜய் வந்து சென்ற அன்று மாலையே மிதுனுக்கு காய்ச்சல் வந்துவிட, மகனைக் கவனிப்பதிலே கருத்தாய் இருந்த சுபத்ரா பவானியிடம் பேசவேண்டுமென்று இருந்ததையே மறந்துவிட்டாள். 
சுபத்ரா வர இயலாததை விஜய் வீட்டில் தெரிவித்திருக்க, “அவ வரலைனா இருக்கட்டுமா, இதுல அட்ரெஸ் இருக்கு நீங்களும் விஜயும் போய் பார்த்து பேசிட்டு வாங்க. உங்களுக்கு பிடிச்சிருந்தா எனக்கு சம்மதம் தான்” என்றான் ரவி. 
“அவளும் மாப்பிள்ளையும் வந்தா தானே நல்லாயிருக்கும், நான் மட்டும் எப்படிடா முன்ன போய் நல்ல காரியம் பேச முடியும்…” என்றார். 
சாஸ்திர சம்பிரதாயங்களைப் பெரிதும் கடைபிடிப்பவர், மகனுக்கு நல் இல்லறம் அமைத்துவிட வேண்டுமென்றும் நினைப்பவர் கணவர் இல்லாத தன் இயலாமையில் சுபகாரியம் பேசத் தயங்கினார். 
அதற்கு மேல் ரவி எதுவும் கேட்கவில்லை, அனைவருக்கும் செய்தே பழகியவனுக்கு தனக்கென எதுவும் கேட்டுப் பழக்கமில்லை. அதுவும் அன்னையே ஒரு முறை சொல்லிய பின் மௌனமாக ஏற்றுக்கொண்டான். 
தன் அறையில் படுத்திருந்த ரவியின் மனமோ ஆற்றாமையில் பொங்கியது. குடும்பத்தின் மற்ற தேவைகள் அனைத்தையும் நானே கவனித்து விடினும் என் திருமணத்திற்கு எவ்வாறு நானே முன் நின்று பேசுவது? உடன்பிறந்தவளின் உறவென்பது இவ்வளவு தானா? எனக்காக என்னும் போது தானே வர மறுக்கிறாள், எனில் எனக்கு யாரும் தேவையில்லை. 
பவானி மடியில் வாகாய் தலை சாய்த்துப் படுத்துக்கொண்ட விஜயரூபன், “ம்மா, நான் பார்க்க எப்படி இருக்கேன்..?” என்றான். 
“உனக்கென்னடா ராஜா மாதிரி கம்பீரமா அழகா இருக்க” என்றபடி சிகை கோதினார். 
“சரி தான் அவளுக்குத் தான் கண்ணு தெரியலை, ஆளும் அவ ட்ரெஸூம்! நல்லா உருட்டி வைச்ச திருஷ்டி பூசணிக்காய் மாதிரி இருந்துட்டு என்னை சொல்லுறா. இன்னொரு தடவை மட்டும் சொல்லட்டும் தூக்கிப்போட்டு உடைச்சிடுவேன்” என மனதில் ஆராதனாவைத் திட்டி முடித்ததில் மனம் ஆறுதல் அடைய அன்றோடு மறந்துவிட்டான். 
ஆனால் ஆராதனாவிற்கு அன்றிரவு தூக்கமே போய்விட்டது. தன்னறையில் கண்ணாடி முன்பு நின்றிருந்தவள் முன்னும் பின்னுமாகத் திரும்பிப் பார்த்து எந்த கோணத்தில் தான் பருமனாகத் தெரிகிறோம் என ஆராய்ந்து கொண்டிருந்தாள். 
அத்தனை கோணத்திலும் அவள் பருமன் தான் ஆனால் அதை யாரும் அவள் முகம் முன்பு கேலியாகக் கூட சொல்லிக்காட்டியதில்லை விஜயரூபனைத் தவிர. கல்லூரி இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருப்பவள், பதினெட்டு வயதென்ற போதும் அளவிற்கு மீறிய உடல்வாகுடன் இருந்தாள். 
விஜயை இன்று தான் பார்த்திருந்த போதும் சுபத்ராவின் வாய் வழித் தகவலாக அவன் குணநலன்களை சிறிது அறிந்திருந்தாள். சுபத்ராவின் குடும்பத்தினர் அங்குக் குடி வந்ததிலிருந்து அவர்களுக்கு நன்கு பழக்கம். அதிலும் மிதுன் பிறந்த பின் அவனுக்கு விளையாட்டுப் பொருள் ஆராதனா தான். 
ஆராதனாவின் தந்தை ஆடிட்டராக இருந்தவர், அவள் அண்ணன் அஸ்வின் படிப்பு முடித்ததுமே சொத்தமாகத் தொழில் துடங்கி வெற்றிகரமாக நடத்த, தந்தையும் தற்போது அவனுக்கு உதவியாய் இருக்கிறார். 
பெற்றவர்களுக்கும் உடன் பிறந்தவனுக்கும் அவளே செல்லமாக இருக்க, அவள் ஆசைகளுக்கு மறுப்பு என்பதேயில்லை. பள்ளியிலிருந்து கல்லூரி வரை அவளைச் சுற்றியொரு பெரும் நட்பு வட்டத்தையே ஈர்த்து வைத்திருந்தாள். உடுத்தும் உடையிலிருந்து படிக்கும் படிப்பு வரை அவள் விருப்பமே! அவள் செல்லச் சேட்டையும் குறும்புச்சிரிப்பும் தான் அவர்கள் வீட்டிற்கான உயிரோட்டம்! 

Advertisement