Advertisement

அத்தியாயம் 05 
பல வேலைகளுக்கு இடையிலும் ஆராதனா சொல்லினால் என நினைவில் வைத்துக்கொண்டு அகில், தர்ஷினி இருவருடமும் பேசிப்பார்த்தான் விஜயரூபன். ஏனடா பேச்சை ஆரம்பித்தோம் என வருந்துமளவிற்கு இருவரும் புலம்பித் தள்ள, ஆறுதல் மட்டுமே அவனால் சொல்ல முடித்தது. அவன் நிலைய அறிந்திருந்த ஆராதனா கேலிச்சிரிப்போடு சுற்றிவிட்டு அன்று ஸ்ரீயிடமும் கதை சொல்லிச் சிரித்து கொண்டிருந்தாள். 
வார இறுதி அவர்களுக்குக் கொண்டாட்ட நாளான வெள்ளிக்கிழமை. காலையில் ஆராதனா பார்கிங்கில் தர்ஷினியை பார்த்ததுமே பிடித்துக்கொண்டு அவளுடனே தான் சுற்றினாள். வேலையின் இடையே, “தர்ஷினி இன்னைக்கு எவனிங் அகில் அண்ணாவும் அவங்க டீம் ப்ரீத்தியும் டூயிட் சாங் பாடப்போறாங்களாம், அந்த பக்கமிருந்து ஒரு பட்சி சொல்லுச்சு, அண்ணா நல்லா கிட்டார் வாசிப்பாராமே?” என்றாள். 
“கிட்டார் மட்டுமா நல்லா நடிக்கவும் செய்யவன்..” என்றவள் கணினித்திரையிலிருந்து பார்வையை விலக்காது உதட்டை சுழித்துக்கொண்டாள். 
அதை கவனித்த ஆராதனா, “ஆர் யூ ஜெலஸ்..?” என்க, “நோ, லிசன் ஆரா, ஆயா சுட்ட வடைய வேணா காக்கா தூக்கிட்டு போகலாம், ஆனால் அந்த ஆயாவை எந்த காக்காவும் தூக்காது” என்றாள். 
ஆராவிற்கு சிரிப்பு பொங்கியது, நல்லவேளையாக இதைக் கேட்க அகிலும் விஜயும் அருகில் இல்லை என்ற நிம்மதியும் கொண்டாள். நெற்றியை தேத்துக்கொண்ட தர்ஷினி கணினித்திரையில் மணியை பார்த்துவிட்டு எழுந்து செல்ல, ஆராவும் அவள் பின்னே எழுந்து நடக்கத்தொடங்கினாள். 
அதே காரிடாரில் நார்த் என்ரன்ஸில் இருக்கும் காஃபி மிஷின் நோக்கி சொல்ல அங்கே அவளுக்கு முன் சிறு கூட்டமே நின்றது, தன் பின் வரும் ஆராவையும் கவனித்திருந்தவள் இருவருக்குமான காஃபி கப்போடு விலகி சற்று நகர்ந்து ஒரு மேசையின் முன் வந்து நிற்க, ஆராதனா அருகில் வந்தாள். அவளுக்கான காஃபியை அவளிடம் நகர்த்தி விட்டு தனது கப்பை கையில் எடுத்தாள். 
அதே நேரம் சரியாக விஜயும் அகிலும் வந்தனர். இவர்களை கவனித்துவிட்டு விஜய் அருகில் வர, அகில் எதிர்திசையில் காஃபிக்காக சென்றான். 
“ஹாய்..” இருவருக்கும் பொதுவாக உரைத்தவன் தர்ஷினியிடம் திரும்பி, “உனக்கு விஷயம் தெரியுமா எவனிங் அகில் ஃபெர்போர்ம் பண்ற, ஐ இன்வைட் யூ நோட் மிஸ் இட் தர்ஷினி” என்றான். 
“ஏன் காலேஜ் டைம்ல நான் பார்த்து ஏமாந்ததெல்லாம் போதாதா விஜய், நோட் ஸ்பீக் அபௌட் ஹிம்” என்ற தர்ஷினி காஃபியை பருகத்தொடங்கினாள். 
சட்டென விஜயின் முகத்திலிருந்த புன்னகை நீர் இறைத்த கோலமாய் அழியத்தொடங்க, “என்னை இன்வைட் செய்யவில்லை?” எனக் கேட்டு ஆரா சண்டைக்குத் தயாராகி நிற்க, அகில் கையில் காஃபி கப்போடு வந்தான். 
மறுநொடியே தன் கப்பை டேபுளில் வைத்துவிட்டு தர்ஷினி விலகிச் செல்ல, இருவரையும் ஒரு பார்வை பார்த்த ஆராவும் அவள் பின்னே சென்றுவிட்டாள். அகிலுக்கு சுறுசுறுவென சினம் பொங்கியது. 
“இப்போ நான் அவளை என்ன செய்திட்டேன்னு இப்படி ஓடுறா?” என்க, “ஷ்ஷ்..ஏன்டா கத்துற?” எனக் கண்டித்தான் விஜய். 
“அவகிட்டையோ இல்லை அவளை பற்றியோ ஒரு வார்த்தை பேசினேனா? ஆனால் பாரு என்னை இசெல்ட் பண்ற மாதிரி செய்துட்டு போறா?” 
“அது இருக்கட்டும் மச்சான், உனக்கு என்னடா அச்சு? திடீரென எங்கிருந்துடா உனக்கு புதுசா வந்தது இந்த ரோஷம், சூடு, சொரணையெல்லாம்?” 
அகில் பதிலின்றி விழியை உருட்டி முறைக்க, “இந்த கண்ணை அந்த பக்கம் திருப்பி பாரு, அவ ஏதோ வாஷ் ரூம் நோக்கி அர்ஜென்டா போறா, நீயா தப்பா நினைச்சிக்காதடா” என்ற போதும், தன்னை ஒரு பார்வை கூட பார்க்காமல் சென்று விட்டாளே என அகிலுக்கு மனம் பிராண்டியது. 
அந்த கோபத்திலே அவளைத் தவிர்க்க நினைத்து மதிய உணவு நேரம் விஜய் அழைக்க, அகில் செல்லவில்லை. சில மணி நேரங்களுக்குப் பின் தாமதமாகவே மிகுந்த பசியை உணர்ந்தவன் அதை தாங்காது எழுந்து சென்றான். அதே போலே அகிலை தவிர்க்க நினைத்து தாமதமாக வந்தாள் தர்ஷினி.
அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் மட்டுமே இருக்க, தனக்கான உணவை வாங்கிக்கொண்டு வந்தவன் தர்ஷினி அமர்ந்திருப்பதை கவனித்தான். அவளை கண்டுகொள்ளாது தவிர்த்தவன் வேறு மேசையில் சென்று அமர, அவளோ எழுந்து சென்றாள். 
அவள் வாஷ் ரூம் நோக்கி விரைந்து வேக நடையோடு செல்வது தெரிந்தாலும் கண்டுகொள்ளாது தன் உணவை விழுங்கினான். சில நிமிடங்கள் கடந்த பின்னும் அவள் வராது உணர, லேசாக மனம் படபடக்கத் தொடங்கியது. உணவு இறங்க மறுக்க, கிளறியபடி இருந்தவனின் பார்வை அவள் வரவை எதிர்நோக்கியே இருக்கும் நிமிடங்கள் கடந்தும் அவள் வரவில்லை. அப்போதே காலையிலும் அவள் இவ்வாறு செய்றதும் விஜய் உரைத்ததும் நினைவில் வர படபடப்போடு சட்டென மேஜையிலிருந்து எழுந்தவன் அவள் சென்ற திசை நோக்கிச் சென்றான். 
வாஷ் ரூம்பிற்கும் வெளியே சுவரில் சரிந்தபடி நிலையில்லாது தடுமாறியபடி அவள் நிற்க, அதிர்ந்தவன் சட்டென சென்று அவளைத் தாங்கிப்பிடித்தான். கொண்ட கோபங்கள் சென்ற இடம் தெரியவில்லை. 
“ஹே தர்ஷி, ஆர் யூ ஓகே?” என்க,  “நோ ஐம் நாட்” என்றவள் அவன் தோளிலே சரிந்தாள். 
“என்ன பண்ணுது தர்ஷி?” என்றவனின் குரலிலும் இதயத்துடிப்பிலும் அவன் பதட்டத்தை நன்கு உணர்ந்தாள். 
“ஐ பீல் நாட் குட், மார்னிங்ல இருந்தே வோமிட்டிங்கா இருக்கு, எல்லாம் இந்த..” என்றவள் உரைக்கும் போதே, “சரிவா ஹாஸ்பிட்டல் போய்டலாம்” என்றவன் தோள் சாய்த்தபடியே நகர்த்திச் சென்றிட, கண்கள் சொருக அவன் மேலே மேலும் அழுத்தமாக சாய்ந்துக் கொண்டாள். 
தன் காரில் அமர்த்தியவன் தனது தலைமைக்கு பெர்மிஷன் மெயிலை தட்டிவிட்டு மருத்துவமனை நோக்கிக் கிளம்பினான். 
மாலை வேலைநேரம் முடிய பார்கிங் நோக்கி விஜய் நடக்க, எங்கிருந்த வந்தாளோ ஆராதனாவும் தன் தோள் பையை மாட்டியபடி அவனோடு நடக்கத் தொடங்கினாள். காலையிலிருந்தே அவளை தர்ஷினியோடு பார்த்த நியாபகத்தில், “எங்கே தர்ஷினி..” என்றான். 
“அகில் அண்ணா எங்கே?” அவளும் கேட்க, அப்போதே அவனும் சில மணிநேரம் முன்பே சென்றுவிட்ட நியாபகம் வர, “அகேன் எதுவும் பிளான் பண்ணிட்டீயா?” என்றான் இறங்கிய சுவாசத்துடன். 
“நாளைக்கு பாருங்க இரண்டுபேரும் சேர்ந்து வாரதை..” என்றவள் கெத்தாக சொல்ல, “நடந்தா நல்லது..” என முடித்தான். 
“அப்போ நம்ம டீல்..” என்றவள் கேள்வியாய் புருவத்தைத் தூக்கியபடி இடுப்பில் கைவைத்து நின்றுவிட, இரண்டடி முன்னே சென்றிருந்தவன் நின்று திரும்பிப்பார்த்தான். 
அவள் எதிர்பார்ப்பென்ன என்பதை அறியும் ஆவல் தோன்றிட, “ம்ம், என்ன வேணும் கேள்?” என்றான். 
“ஸ்ரீயை பார்க்கணும், சோ உங்க வீட்டுக்கு இன்வைட் பண்ணுங்க” என்றவள் கேட்க, இதென்ன வினோத ஆசை என வியந்தவன், “ஸ்ரீயை தானே பார்க்கணும் நீ?” என்றான் சந்தேகக் குரலில். 
முகம் சுருக்கியவள் தலையை மட்டும் ஆமேன ஆட்ட, “நாளைக்கு அவங்க சேர்ந்து வந்தா பார்க்கலாம்” என முடித்துக்கொண்டான். 
“நாளைக்கு இருக்கு…” என முனங்கியவள் ஹீல்ஸ் தரையில் உரசி அதிர, அவனுக்கு முன்னே கடந்து சென்று லிப்பிடில் நுழைந்தாள். 
இதென்ன உரிமை? தன்னை நெருங்க முயற்சிக்கிறாளா? இவளுக்கும் தனக்குமான நெருக்கும் எவ்வாறு உருவாகியது? இல்லை உருவாக்கினாளா என்ற குழப்பம்? 
மூச்சு திணறடிக்க தடையாய் நின்றவள் விலகியது போலே அசுவாசமாக உணர்ந்தவன் எதையும் நினைத்து குழம்பி சலனம் கொள்ளக் கூடாதென்ற முடிவோடு நேராக நடந்தான். 
மருத்துவமனையின் இருக்கையில் தளர்வோடு அமர்ந்திருந்த தர்ஷினியின் முன் கையில் பழச்சாற்றோடு வந்து நின்றான் அகில். உணவு ஒவ்வாமையில் வாந்தியும் அதில் ஏற்பட்ட சோர்வே மயன்கமென்றே மருத்துவர் சொல்லிவிட, என்னவோ அவனுக்கு ஏமாற்ற உணர்வு! 
“டிரிங் இட்..” என்றவன் நீட்ட, அவன் கை பற்றியபடி எழுந்தவள் “இங்க வேணாம் போகலாம்..” என்றாள்.
சரியென அவள் நடையின் வேகத்திற்கு மெல்ல அவளோடு நடந்தவன் அவள் காரில் ஏறி அமரவும் அவள் கையில் பழச்சாற்றைக் கொடுத்துவிட்டு மறுபுறம் சுற்றி வந்து ட்ரைவிங் சீட்டில் அமர்ந்தான். 
அவளோ பழச்சாற்றை பருகியபடி இருக்க, “தாலி வரம் கேட்டு விரதமா..?” என அவள் பசியலிருந்ததைக் கிண்டலாக அவன் கேட்க, கையில் இருந்த காலியான பாட்டிலால் அவன் தலையில் அடித்தாள் தர்ஷினி. 
“எல்லாம் உன்னால தான்டா எருமை, எங்கம்மாட்ட நான் படுற டாச்சர் உனக்குக் கிண்டலா இருக்கா?” என்றவள் மேலும் அடிக்க, தாங்க முடியாமல் தடுத்தான். 
“அதுக்குன்னு ஹெல்த் ஸ்பாயில் பண்ணிப்பியா? இடியட்! நான் கூட நீ சிக்கா இருக்கவும் வேற எதிர்பார்த்து வந்தேன் தெரியுமா?” என்றவனின் குரலிலே சிறு ஏமாற்றம் தெரித்தது. 
“வேற என்ன?” அவள் புரியாது கேட்டுவிட, “செக்கப் முடிச்சு வந்து நீ வெக்கப்படுக்கிட்டே அகில் நீ அப்பாவாகப் போறடான்னு சொல்லுவேன்னு எதிர்பார்த்தேன்” என்றவனின் குரலில் வெட்கம் வழிய, மீண்டும் அவன் தலையில் அடித்தாள். 
அடித்தவளின் கரங்களைத் தடுத்து அழுத்திப்பிடித்தவன் அவளே எதிர்பாராது நெஞ்சோடு அணைத்துக்கொள்ள, “நான் எங்கம்மா வீட்டுக்குப் போய் ஒன் வீக்காச்சு” என இறங்கிய குரலில் உரைத்தவள், வெகுநாட்களுக்குப்பின் அவன் நெஞ்சில் சுகமாய் சாய்ந்து கொண்டாள். 
“நானா போகச் சொன்னேன்..?” சொல்லாமல் சென்ற கோபத்தில் அவன் கேட்க, “அம்மா வீட்டுக்கு வர வேண்டாம்னு நானா சொன்னேன்?” என்றாள் தர்ஷினி. 
தன் நெஞ்சிலிருந்த அவள் முகத்தை நிமிர்த்தியவன், “அப்போ இன்னைக்கு நைட் உங்க வீட்டுல ஸ்டே பண்ணிக்கட்டுமா?” என்றவன் கண் சிமிட்டியபடியே கேட்க, “வேண்டாம், நம்ம வீட்டுக்கே போயிறலாம், எங்கம்மாவுக்கு ஆன்ட்டியே மேல்” என்றவள் விலகி அமர, அவள் நெற்றியில் இதழ் பதித்து விடுவித்தான். 
அகிலின் முகமே மகிழ்ச்சியில் மலர, அவள் கைகளைப் பற்றிக்கொண்டவன், “இனி எங்கம்மா என்ன சொன்னாலும் சரி, மாமியாரும் மருமகளுமா எவ்வளவு வேணாலும் சண்டை போட்டுக்கோங்க. ஆனால் என்னை விட்டு மட்டும் போக தர்ஷி, நீ இல்லாம என்னால இருக்க முடியாதுடி, இன்னைக்கு உன்னை அப்படிப் பார்க்கவும் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா?” என்றான். 
அவன் பயத்தையும் படபடப்பையும் நன்கறிந்தவள் தானே! தற்போதும் அவன் வருத்தம் கண்டவள், “அது வேற ஒன்னுமில்லை இந்த ஆரா செய்த வேலை தான்..” என்க, அவன் நிமிர்ந்து பார்த்தான்.
“ஏற்கனவே மோர்னிங் சாப்பிடாம தான் வந்தேன், வந்து வண்டியைத் தான் நிறுத்துனேன் ஆரா ஆல்ரெடி வெயிட் பண்ணிட்டு இருந்திருப்பா போலே கோயில் பிரசாதம்னு புளியோதரையும், தயிர்சாதமும் வேண்டாம்னு சொல்லுறதுக்குள்ள ஊட்டி விட்டுட்டா. எனக்கு தான் புளிப்பு ஆகாதே, அதான் அப்பறம் சாப்பிட்ட எதுவும் ஒத்துக்கிடலை” 
அகில் மனதில் ஆராதனாவிற்கு ஆயிரம் நன்றிகளை உரைத்துவிட்டு காரை ஸ்டார்ட் பண்ணினான். சில நிமிடங்கள் கடற்கரையில் உலாவிவிட்டு, ஹோட்டலில் இரவு உணவை முடித்துவிட்டு இன்பமான வார இறுதி நாளை எதிர்பார்த்தபடி இருவரும் வீடு சென்றனர். 
ஆரா அறியாது அல்ல, அறிந்தே தான் செய்திருந்தாள். திட்டத்தை விஜயரூபனிடமும் தெரிவிக்காது அவளே வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்திருந்தாள். 
சனிக்கிழமை அன்று ரவியைத் தவிர அனைவருக்கும் விடுமுறை நாளாக இருக்க, மாலை தன் தோழியின் மகளுக்குப் பிறந்தநாள் கொண்டாட்டம் இருப்பதால் பரிசுப்பொருள் ஒன்றை வாங்கி வருமாறு காலையிலிருந்தே கௌஷி, விஜயிடம் கேட்டுக்கொண்டே இருந்தாள்.
அவன் மறுக்க, “ஒரு சின்ன ஹெல்ப் இதைக் கூட செய்ய மாட்டியா விஜய்? நான் உனக்கு எவ்வளவு பெரிய உதவியெல்லாம் செய்திருக்கேன் கொஞ்சம் நினைச்சிப்பாரு, டியூசன் டைம்ல ஹரிணிக்கு லவ் லெட்டர் எழுதினேயேடா அதுல எவ்வளவு மிஸ்டேக்ஸ் இருந்தது நான் தானே திருத்திக்கொடுத்தேன், அது மட்டுமா அந்த லெட்டர் எங்கம்மா கையில கிடைக்கும் போது எங்கப்பா தான் அம்மாவுக்கு எழுதினதுன்னு சொல்லி காப்பாத்தினேனடா அதெல்லாம் உனக்கு நியாபகம் இல்லையா?” என்றவள் பவானியின் முன்னே கண்ணில் இல்லாத கண்ணீரைத் துடைத்தாள். 
ஐயோ இவ அண்ணியா வந்து எனக்கு தான் அப்பு வைக்கிறா! என மனதில் புலம்பியவன் எரிச்சலோடு நிற்க, “புள்ளை வீட்டுல எவ்வளவு வேலை பார்க்குற, நீ ப்ரீயா தானே இருக்க போயிட்டுவா விஜய்” எனப் பவானியும் மருமகளுக்கு பரிந்துகொண்டு வந்தார். 
அவள் உண்மையில் வருந்துவதாக நினைத்த பவானி “அவன் போவான் கௌஷி, இது எதுக்கும்மா கசக்கிக்கிட்டு நிக்குற?” என கௌஷிகாவிற்கு ஆறுதல் உரைத்தார். 
அவன் அப்போதும் பிடிவாதமா நிற்க, மீண்டும் விம்மிய மூச்சோடு, “அப்போ உனக்கு பதினைந்தாவது பர்த்டே வந்த போது நானே எங்க வீட்டுல கேக்…” என அவள் முடிக்கும் போதே சரண்டர் என்பது போல் கையை தூக்கினான். 
அவள் கேட்டதுமே செய்ய நினைத்தவன் தான் சிறிது நேரம் அவளைக் கெஞ்ச வைக்கலாமென பிகு செய்ய அவளோ கெஞ்சல் என்ற பெயரில் அவன் மானத்தை வாங்க விழித்துக்கொண்டவன் பல்லைக் கடித்தான். 
“ஐயோ போதும் அண்ணி இப்படி பழசை எல்லாம் கிண்டிக் கிளறி என் மானத்தை வாங்காதே” 
“அப்போ கிஃபிட் வாங்கிட்டு வா..”
யாருக்கிட்ட! என்பது போல் அவனைப் பார்க்க, அவன் முகம் போன போக்கில் கௌஷிகாவிற்கு வெடித்துக்கொண்டு சிரிப்பு வர, அத்தையின் முன் கட்டுப்படுத்திக்கொண்டு பாவமாகச் சோகம் சொட்டும் நிலையில் முகத்தை வைத்திருந்தாள். 
“கண்றாவி, உன் செண்டிமெண்டல் டிராமாவை பார்க்குறதுக்கு அதுவே பெட்டர்” என்றவன் குளியலறை நோக்கிச் செல்ல, கேலியும் வெற்றியும் கலந்த சிரிப்போடு வெளியேறினாள் கௌஷிகா. 
விஜய் கிளம்பிய நேரம் ஸ்ரீயும் அவனோடு வருகிறேன் என அடம்பிடிக்கச் சரியென அழைத்துக்கொண்டு சென்றான். செல்லும் வழியிலே ஸ்ரீயை பார்க்க வேண்டுமென்று கேட்ட ஆராதனாவின் நினைவு வர, அவள் என்ன எண்ணத்தில் கேட்டாலென அறியாது நெருக்குவது நல்லதல்ல என எச்சரித்தது மூளை. 
இதிலென்ன உள்நோக்கம், அனைவரிடமும் சிநேகமாக பழகுபவள் அதிலும் குழந்தைகள் என்னும் போது கூடுதல் பிரியம் வரும் தானே! அதுமட்டுமின்றி ஸ்ரீயோடு இத்தனை நாள் அன்பாகப் பேசியுமிருக்கிறாள் என மனம் அவளுக்காக பேச, இப்போதே எதுவும் வேண்டாம் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்றது அறிவின் பதிலை ஏற்றான். 
ஷாபிக் மால் ஒன்றில் கிஃபிட் ஷாப்பில் பரிசுப்பொருளைப் பார்த்துக்கொண்டிருக்க, அவன் தூக்கி வைத்திருந்த போதும் அவன் கைகளுக்குள் நில்லாது துள்ளிக்கொண்டிருந்த ஸ்ரீநிதி பொறுமையில்லாது அவன் கைகளிலிருந்து இறங்கியே விட்டாள். எதிர் வரிசையில் நடமாடியபடி இருக்கும் பொம்மையொன்று அவள் கருத்தினை கவர, அதை நோக்கிச் சென்றவளைக் கண்ட விஜய், “ஸ்ரீம்மா..” என வந்து அவள் கைகளைப் பற்றினான். 
அவன் குரலை உணர்ந்து அடுத்த வரிசையில் இருந்த ஆராதனா சட்டென வளைவில் திரும்பி அவன் முன் வந்து நிற்க, அவனைச் சிறிதும் எதிர்பாராதவன் கையில் பற்றியிருந்த குழந்தையை சட்டென தன் பின் நிறுத்தி மறைத்தான். 
அதுவரை எதிர்பாராத சந்திப்பில் அலர்ந்திருந்த அவள் முகம் வாட, அதை உணர்ந்ததும் தவறு செய்துவிட்டோமோ என அவன் நினைக்க, மீண்டும் அவள் முகம் சிறு சிரிப்பில் மலரும் மல்லிகை போலே மலர்ந்தது. அவன் பின்னே மறைத்த போதும் யாரென்று பார்க்கும் ஆர்வத்தில் அவன் ஜீனை இறுக பற்றியபடி முகத்தை மட்டும் வெளியே நீட்டி எட்டிப்பார்த்திருந்தாள் ஸ்ரீநிதி. 
“ஹே..க்யூட் பேபி, ஸ்ரீநிதி தானே நீங்க?” எனக் கேட்டபடியே, குழந்தையிடம் பேசும் ஆர்வத்தில் அவன் முன் மண்டியிட்டு அவள் அமர, லோ கட் நேக்காக இருந்த அவள் குர்த்தி மேலும் கீழிறங்கித் தோற்றமளித்தது. 
சட்டெனப் பார்வை விலக்கியவன் சுற்றிலும் பார்க்க, ஆங்காங்கு சில செக்யூரிட்டி கேமராக்களும் சில பணியாளர்களும் சில கஸ்டமர்களும் இருப்பதை கண்டவன் அவள் அமர்ந்த மறுநொடியில் தன் பின் நின்றிருந்த ஸ்ரீயை கைகளில் தூக்க, ஆராதனாவும் எழுந்து விட்டாள்.
இப்படியா கவனக்குறைவா இருப்பாள்? ஒரு துப்பட்டா போட்டுகிட்டா என்னவாம், சுமையா இருக்குமோ? அலுவலக உடை எல்லாம் க்ளோஸ் நெக்கா தானே போடுறா? என்றெல்லாம் நொடியில் மனதில் தோன்ற, கிளர்ந்த சினம் முகத்தில் வெக்கையாய் படர, இறுகிப்போய் நின்றான்.
இதை எதையும் உணராதா ஆராதனா தன் வந்ததும் குழந்தையை மறைத்து, பேச முயன்ற நொடியில் கைகளில் தூக்கிக்கொண்டவனின் செயலில் அடிபட்டு மனதோடு, வாடிய முகமாய், வலி தாங்கிய விழியோடு பார்த்தாள். 
அவள் உடல் அதை உலகிற்கு எவ்வாறு தோற்றப்படுத்திக்கொள்ள வேண்டுமென்பதும் அவள் விருப்பம்! என்ற எண்ணம் கொண்டவன் இதுவரையும் யாரையும் குறை சொல்லியதில்லை, ஆனால் இவளிடம் சொல்லத் தோன்றுவதும் இவள் மீது எரிச்சல் பரவுவதும் ஏனென்றே தெரியாது நின்றான். உரிமையில்லாது கருத்து மட்டும் எவ்வாறு சொல்வது என்ற தன் இயலாமையும் சேர்ந்து அவன் எரிச்சலை மேலும் அதிகப்படுத்தியது. 
அதற்குள், “சித்தா..” என அவன் கன்னத்தில் தட்டிய ஸ்ரீநிதியின் அழைப்பில் கலைந்தவன், ஆராவின் தோற்றத்தைக் கண்டு, “இது ஆராதனா, நீ ஃபோன்ல பேசுவியே அது இவங்க தான்” என அறிமுகப்படுத்தினான். 
அதில் ஆராவின் முகம் மலர, “ம்ம்…உன் எனிமி தானே சித்தா?” என அவள் அடுத்துக்கேட்ட சந்தேகத்தில் நெற்றியில் அறைந்து கொள்ளாலாம் போலே இருந்தது அவனுக்கு! 
அவள் முறைக்க, “பாப்பா நீ அந்நியன் மாதிரி அப்பப்போ கௌஷியா மாறிடுற?” என்றவன் முனுமுனுக்க, “உனக்கு நான் ஃப்ரண்ட் தானே ஸ்ரீ” எனக் கேட்டாள் ஆராதனா. 
ஸ்ரீ ஆமென்க, சிரித்த ஆராவின் வித்தியாசமான சுருள் முடியைப் பற்றி அவள் இழுக்க, “ஷ்ஷா…” என்றபடி அவள் கையிலிருந்து விடுவித்துக்கொள்ள ஆரா போராட, விஜயும் போராடி ஸ்ரீயின் கரங்களை மீட்டான். 
“சித்தா பிளாக் நூடுல்ஸ்…” என்றவள் கை கட்ட, “இட்ஸ் மை ஒரிஜினல் ஹேர் பேபி..” என்றாள் ஆரா. 
ஸ்ரீயிடம் பேசுபவள் அவனை நெருங்கி நின்றிருக்க, அதை உணர்ந்தவன், “வாங்க சாப்பிட்டுகிட்டே பேசலாம்” என விலகியவன் அங்கிருக்கும் உணவகம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றான். 
சில நிமிடங்களிலே ஆராதனாவோடு அவ்வளவு நெருக்கமாகி விட, அவளும் குழந்தை போலே விளையாடி, ரைம்ஸ் பாடி, அவளைக் கொஞ்சி, ஐஸ்க்கீரிமும் சாக்லேட்டும் உண்டு, அவனோடும் சேர்த்து செல்ஃபியும் எடுத்துக்கொள்ள அனைத்தையும் ரசிகனாய் வேடிக்கை மட்டுமே பார்த்தான்.
 
தன் போலே ஸ்ரீநிதியை அவளுக்கும் பிடித்ததில் ஏனென்றே தெரியாத இதம் இதயத்தில் பரவ, குழந்தையை மடியில் வைத்தபடி சிரித்துக்கொண்டிருந்தவளை இமைக்காது பார்த்தான். 
எங்கேயோ பார்த்த நியாபகம்? அடிக்கடி அவளோடு முகம் பார்த்துப் பேசுகையில் எல்லாம் தோன்றும் எண்ணம் தான்! ஆனால் எங்கு பார்த்தமொன்ற நியாபகம் வரவில்லை. 
சந்தித்திருக்கலாம், சிறிதும் தன்னை பாதிக்கவில்லை போலே அதனாலே நினைவில் இல்லை என நினைத்திருந்தான். இதுவரையும் யோசித்து யோசித்து குழப்பிக் கொள்ளத் தோன்றவில்லை, அந்தளவிற்கு முக்கியமாகவும் தோன்றவில்லை. 
ஆனால் இப்போது தோன்றியது? எங்குப் பார்த்தோம் என்ற கேள்வி தோன்ற, யோசிக்கச் சொல்லி மூளையை கசக்கினான். 

Advertisement