Advertisement

அத்தியாயம் 21 
சுபத்ராவும் அவள் வீட்டு விருந்திற்கு அழைக்க, ஏற்கனவே ஆராவின் குற்றச்சாட்டுகளில் நைந்திருந்தவன் அமைதியாகத் தங்கினான். நான் கேட்ட போது மறுத்தவன் அக்கா கேட்டதும் தங்கிவிட்டானே என அதற்கும் குமைந்து கொண்டாள். 
இரவு உடையை அணிந்தபடி குளியலறையிலிருந்து வந்தான் விஜயரூபன். ஆராவோ மௌனமாக அவள் பொருட்களை எடுத்து வைத்து பேக் செய்து கொண்டிருந்தாள். 
கேட்காமலே வந்து அவளுக்கு உதவியவன், “வேணுங்கிற ட்ரெஸ் மட்டும் கொஞ்சமா எடுத்துக்கோ, மத்தது எல்லாம் வீடு மாறவும் திரும்ப வந்து எடுத்துக்கிடலாம்” என்றான். 
அவள் வீட்டிற்கு வந்து செல்லலாம் என மறைமுகமாகத் தெரிவித்த போதும் அவளிடம் பதில் இல்லை. மௌனமாக வேலைகளை முடித்தவள் ஒரு ஓரம் சென்று படுத்துவிட்டாள். மறுபுறம் கால் நீட்டி அமர்ந்தவன், சட்டென அவளை தன்புறம் திருப்பினான். 
அவள் முகம் சுணங்க, “அதான் இங்க ஸ்டே பண்றேன்ல பின்ன ஏன் முகத்தைத் தூக்கி வைச்சுகிட்டு இருக்க?” என்றான் அதட்டலாக. 
“விடு, நீயும் தான் குரங்கு மாதிரி முகத்தை ஊர்ன்னு வைச்சிருக்க, எப்போ பாரு பிடிச்சி வைச்ச பிள்ளையார் மாதிரி இடம் கிடச்சா போதும்னு உக்காத்துக்கிற, நான் ஏதாவது கேட்டேனா?” 
“ஏய்.. நான் என்ன தப்பு செய்தேன், எப்போவும் போல தான் இருக்கேன்” 
“பொய் சொல்லாத… உங்க வீட்டுல, உங்க அக்கா வீட்டுல, ஆபிஸ்ல எல்லாம் எப்படியிருப்பேன்னு நானும் தான் பார்த்து இருக்கேனே, நீ என் அப்பா, அம்மாகிட்ட சரியா பேசலை” நேரடியாகவே குற்றம் சாட்டினாள். 
“நான் உன்னைத் தான் லவ் பண்ணேன் அவங்களை இல்லை புரியுதா? நானும் உன்னை மாதிரியே இருக்கணும் எதிர்பார்க்காதே ஆரா, என்னால முடியாது. என் இயல்பு இது தான்” 
“சரி, என் பேரன்ட்ஸை விடு. அஸ்வின் உன் வயசு தானே அவங்கிட்ட என்ன பிரச்சனை? கொஞ்சம் ஃப்ரண்ட்லியா பழக வேண்டியது தானே” 
“ஏய், லூசு மாதிரி உளறாதடி. என்னவோ முறைப்பொண்ணு மாதிரி எப்போ பாரு அவன் தான் என்னை முறைச்சிகிட்டே சுத்துறான்..”
“முறைக்கிறானே.. ஏன் முறைக்கிறேன்னு அவங்கிட்ட கேட்க வேண்டியது தானே, எல்லாம் நானே சொல்லிக் கொடுக்கணுமா என்ன..?” என்றவள் வெடுக்கெனத் திருப்பிக் கொண்டாள். 
“ம்ம், நீ தான் சொல்லிக் கொடேன்..” என கிசுகிசுப்பாகக் கேட்டபடி, அவளைத் திருப்பினான். முடித்த மட்டும் கண்களை உருட்டி முறைத்தவள் சின்ன குரல் கொடுக்க, சட்டென எங்கிருந்து தான் வந்ததோ பட்டு, அவன் கால் அருகில் அமர்ந்திருந்தபடி லொள் லொள் என குரைத்தது. 
பதறி கால்களை மடங்கியவன், இது வேற அடியாள் மாதிரி அவள் பின்னாலே சுத்துது என நொடிந்து கொண்டான். 
“ச்சு..ச்சு..” என விரட்டிப் பார்க்க, முகத்தை மட்டும் சிலுப்பியபடி நிலையாக அமர்ந்திருந்தது. 
இப்படி நாயோட பஞ்சாயத்து பண்ண தான் போராடி இவளைக் கல்யாணம் செய்துகிட்டேனா? என எரிச்சலானான். 
“சில்க் இந்த சிலுப்புற வேலையெல்லாம் எங்கிட்ட வேண்டாம்” என விரல் நீட்டி எச்சரிக்க, அது மேலும் குரைக்க, “இப்படியே கத்திகிட்டு இருந்தா தெரு நாயின்னு கார்ஃப்ரேஷன்ல பிடித்து கொடுத்துடுவேன் பார்த்துக்கோ” என மிரட்டினான். 
அதற்குப் புரிந்ததோ என்னவோ அந்த அறை அதிரும் படி, செவி இரண்டும் இரையும் படி குரைக்க, விழி மூடி படுத்திருந்த ஆராதனா டென்ஷனானாள். 
“இப்போ இரண்டு பேரும் படுக்கப் போறீங்களா என்ன வேணும்..?” எனக் கத்தலாக மிரட்டல் விட, பட்டு வாலை சுருட்டிக்கொண்டு அதன் இடத்திற்கு ஓடிவிட்டது. 
“என்ன வேணுமா? நீ தான் வேணும்…” என முனங்கியபடி விஜயும் தன் தலையணையில் முகம் புதைத்தான். விழி மூடியிருந்த போதும் அவளிற்குக் கேட்க, இதழ்கள் தானாகச் சிரிப்பில் விரிந்தது. 
அட ஆண்டவா என்னை காப்பாற்றேன் நொந்து போய் வேண்டினான். இவ குடும்பம் மொத்தமும் என் வாழ்கையில கும்மியாடிக்கிறானுங்க, இனி ஒரு நாள் இங்கிருந்தேன் விவாகரத்தே வாங்கிக் கொடுத்தாலும் கொடுத்துடுவாங்க. 
நாளைக்கு எப்படியாவது இவளை பார்சல் செய்து தூக்கிட்டுப் போய்டணும் என்ற உறுதியோடு தான் உறங்கினான்.
மறுநாள் காலை உணவே சுபத்ரா வீட்டில் தான் நிகழ்ந்து கொண்டிருந்தது. மற்றவர்கள் யாரும் இன்னும் எழாமல் இருக்க, ஆராவும் விஜயும் உண்டு கொண்டிருக்க, சுபத்ரா பரிமாறினாள். 
சரியாக அதே நேரம் கௌஷிகாவிடமிருந்து அழைப்பு வர, ஆன் செய்து ஸ்பீக்கர் மோடில் போட்டு விட்டு உணவில் கவனம் செலுத்தினாள் ஆராதனா. 
“குட் மார்னிங் ஆரா? எழுந்தாச்சா?” எனக் கேட்க, “எழுதாச்சாவா..? சுபத்ராக்கா வீட்டுல மார்னிங் விருந்தே நடந்துகிட்டு இருக்கு, இட்லியும், மீன் குழம்பும்..” என்றாள்.  
ஆராவின் கவனமெல்லாம் மீன் துண்டுகளிலிருந்து முள் நீக்கி உண்பதிலே இருந்தது. 
“அஹா..! அண்ணி வீட்டுல விருந்தா..? அதுவும் இவ்வளவு காலையிலே…நடக்கட்டும் நடக்கட்டும்” என்க, “எல்லாம் இந்த விஜய் தான், காலையிலே எழுப்பி விட்டான் சீக்கிரம் விருந்து முடிச்சி கிளம்புற எண்ணம்” என அவனைப் போட்டுக் கொடுக்க, விஜய் முறைத்தாள். 
“நீ லக்கி தான் ஆரா, அண்ணி பார்த்த பொண்ணு வேற அதான் தடபுடலா விருந்தெல்லாம் நடக்கு. எனக்கெல்லாம் பொண்ணு பார்க்க கூட யாரும் வரலை. அவர் மட்டும் தான் வந்தாரு” என அவளையும் மீறி அவள் மனதிலிருந்த குறை வெளிப்பட்டு விட, சட்டென சுபத்ரா பார்த்தாள் ஆரா. 
சூழ்நிலை கனமானதை உணர்ந்த போதும் கையாளத் தெரியாது விஜய் ஆராவை முறைக்க, அலைபேசியை அணைக்கும் எண்ணத்தில் ஆரா கையில் எடுக்க, அவள் கையை தட்டிவிட்டு சுபத்ரா எடுத்திருந்தாள். 
“வராதது தப்பு தான் மன்னிச்சிடு கௌஷி. இத்தனை நாள்ல இந்த வருந்தம் உன் மனசுல இருக்கும்னு புரிஞ்சிக்காம இருந்திட்டேன்” என சுபத்ரா வருத்தம் தெரிவிக்க, அவள் குரலைக் கேட்ட கௌஷி, “அண்ணி..” என அதிர்ந்தாள், 
“நீ எதுவும் தப்பா சொல்லலை கௌஷி, அந்த சமயம் இவர் சொந்ததுல ஒரு கல்யாணம் என்னால கல்யாணத்தை நிறுத்தவோ, மாத்தி வைக்கவோ, இல்லை மறுக்கவோ முடியுமா சொல்லு? ஆனால் உன்னை பொண்ணு பார்க்கப் போற தேதியைக் கூட ரவி எங்கிட்ட கேட்டு முடிவு செய்யலை தெரியுமா? முன்னவே சொல்லியிருந்தா நான் அதுக்கு ஏற்ப தயாராகி இருப்பேன். 
அந்த ஒரு விஷேத்துக்கு தான் நான் வரலை, ஆனால் அதுக்கு அடுத்து நடந்த விசேஷங்களுக்கு எல்லாம் ரவி தான் என்னைத் தள்ளி வைச்சான். நானா விலகிப் போகலை, அவனா விலக்கி வைக்கும் போது நான் என்ன செய்யட்டும் சொல்லு? 
நான் வரலைன்னு சொல்லுறவுங்களுக்கு என்னைக் கேட்டு முடிவு உறுதி செய்யணும்னு மட்டும் தோன மாட்டிக்கே! என்னை வெளியில கொடுத்துட்டா நான் வெளியாள் ஆகிடுவேணா? அவ்வளவு தானா என் பிறந்த வீட்டு உறவுன்னு மனசு வலிக்கும் கௌஷி.  
எங்கம்மா இருக்குற வரைக்கும் தான் அந்த வீட்டோட உறவு எனக்குனா, அந்த காலங்கள் எனக்கு நீண்டதா இருக்கணும்னு வேண்டிக்கிட்டு இருக்கேன் கௌஷி” என்றாள் குரல் கரகரக்க. 
அம்மா இல்லாததால் இல்லாது போன தன் பிறந்த வீட்டு உறவையும், அதன் வலியையும் கௌஷி உணர்ந்தவள் ஆகையால் சுபத்ராவைப் புரிந்து கொண்டாள். அதுவும் போக ரவியின் கடுமையான வார்த்தைகளைக் கேட்ட பின்னும் முகம் திருப்பாது அடிக்கடி வருபவள் தானே! 
நேற்று ஆரா கேட்ட கேள்விகளும் இன்றைய சுபத்ராவின் விளக்கமும் விஜய் மனதைக் கனக்கச் செய்தது. ஆதரவற்ற நிலையை உணரும் படி உடன் பிறந்தவளை வைத்து விட்டோமோ என வருந்தினான். 
“விஜய்க்கு செய்த மாதிரி ரவிக்கும் செய்யணும்னு ஆசை தான், ரவியும் உன் கூடப் பிறந்தவன் தானே? ஆனால் அவன் என்னைச் செய்ய விடலை. ஏதோ விஜய்க்கு செய்ற உரிமையாவது விட்டுக் கொடுத்தானே அந்த அளவிற்குச் சந்தோஷம் தான்” என சுபத்ரா கலங்க, அந்த உரிமையும் தான் போராடிப் பெற்றதென்பதை கௌஷி உணர்ந்திருந்தாள். 
கௌஷி ஆறுதல் உரைக்க, கை கழுவி எழுந்து வந்த விஜயும் ஆறுதல் உரைத்தான். அதற்குள் வெளியே வந்த ஜெய்பிரகாஷ், குமுறி அழுகும் மனைவியையும் எதிரே நிற்கும் விஜயும் பார்த்துவிட்டு நெருங்கி வந்தார். 
“என்னடா சொன்ன அவளை? இப்படி அவளை அழ வைச்சி, என்னைச் சீண்டிப் பார்க்கிறதே, உனக்கும் உன் அண்ணனுக்கும் வேலையா போச்சி?” என இலகுவாக அவன் மீது குற்றம் சாட்டினார். 
விருந்தோம்பல் என்பதாலே அவரிடம் இத்தனை மென்மை, இது வேறு இடமாக, அதுவும் ரவியாக இருந்திருந்தால் அவர் எதிர்வினையும் வேறு விதம் தான். 
“நீங்க வேணா கூட்டிட்டிப் போய் கொஞ்சி சமாதானப் படுத்துங்களேன் பார்ப்போம்” என விஜய் உரைக்க, “ஏன் மாட்டேன்னு நினைச்சியா? என் பொண்டாட்டி தானே?” என்றார் அவரும். 
கண்ணைத் துடைத்து விட்டு எழுந்த சுபத்ரா, விஜயின் தோளில் அடித்து விட்டு, கணவரைப் பார்த்து முறைத்தாள். 
“உங்க டிராமா முடிச்சிடுச்சுன்னா எனக்கு வந்து கொஞ்சம் மீன் குழம்பு ஊத்துங்க அக்கா” என்ற ஆராவின் குரலில் சிரிப்போடு அவளிடம் சென்றாள். 
அன்றைய நாள் முழுவதும் அவர்கள் வீட்டில் விருந்து முடிய, விஜயும் முடிவு செய்திருந்தது போலே ஆராவை கெஞ்சி கொஞ்சி வீட்டிற்கே அழைத்து வந்துவிட்டான். இரு வீட்டிலுமே சிறப்பான கவனிப்போடு, தாம்பூலம், பட்டாடையோடு சீரும் தர, மறுப்பேதும் இல்லாது ஆசியோடு ஏற்றுக்கொண்டனர் இருவரும். 
தன் வீட்டிற்கு வந்த பிறகும் பொழுது போகமால் டிவியின் முன் அமர்ந்திருந்தான் விஜய், வேலைக்கு சென்றிருக்கலாம் பொழுதாவது கழிந்திருக்கும் என்ற புலம்பல் வேறு. 
என்ன தான் டிவியின் முன் அமர்ந்திருந்த போதும் அவன் கண்கள் அடிக்கடி சமையலறை பக்கம் தான் சென்றது. கோடைவிடுமுறை ஆகையால் முழு நேரமும் ஸ்ரீநிதி வீட்டில் இருக்க, தற்போது அவளோடு பிஸா செய்கிறேன் எனச் சமையலறை கலவரப்படுத்திக் கொண்டிருந்தாள் ஆராதனா. 
அகில் வேறு கால் செய்து தர்ஷினி கருவுற்றிருக்கிறாள் என்ற இன்பச்செய்தியை சொல்லிவிட்டு, புது மாப்பிள்ளை என அவனையும் கேலி செய்ய விஜய்க்குக் கடுப்பு ஏறியது. 
அவனுக்கு மறுபுறம் வந்தமர்ந்த கௌஷிகா சேனலை மாற்றியபடி, “என்ன கொழுந்து குதுகலமா இருக்கீங்க போல..” என்றாள். 
“ஏன் அண்ணி நீ வேற, நானே கடுப்புல இருக்கேன்..” என்றவன் சலித்துக் கொள்ள, கலகலவென சிரித்தாள். 
“என்ன? என் பிழைப்பு உனக்குச் சிரிப்பா இருக்கா?” என்றவன் முறைக்க, “நான் என்னடா செய்தேன். உன் ஸ்ரீகுட்டியும், ஆராகுட்டியும் தானே..” என்றாள் மேலும் சிரிப்புடன். 
“எல்லாம் நீ தான், கூடிய சீக்கிரம் எனக்குக் கல்யாணம் செய்து வைத்து என்னையும் ஸ்ரீயும் பிரிக்கிறேன்னு சொன்ன, சொன்ன படியே செய்திட்ட..! இப்போ எல்லாம் என்னை விட ஸ்ரீ அவ கூட தான் சுத்துக்கிட்டு இருக்கா” எனக் கோபம் போலே உரைத்தான். 
“வாழ்கை ஒரு வட்டம் விஜய்..”
“வட்டமோ, சதுரமோ நீ தமிழ் வத்தி தானே உனக்கு எதுக்கு அதெல்லாம்” 
“என் மகளை வைச்சே என்னை கடுப்பேத்துனையே, இப்போ அனுபவி..” 
“சிரிக்காத அண்ணி, ஏதாவது ஹெல்ப் பண்ணேன்..” என பாவம் போலே கேட்க, “சரிடா, சரி.. முகத்தை இப்படி வைச்சிக்காதே பார்க்கவே ரொம்பவும் பரிதாபமா இருக்கு..” என்றவள் சரியென ஏற்றுக் கொண்டாள். 
பவானியின் ஊரில் திருவிழா என அவர் உடன் உடன்பிறந்தவரிடமிருந்து அழைப்பு வர, அவரை கிராமத்திற்கு அனுப்பி வைத்தாள் கௌஷிகா. பிள்ளைகள், வீடு தவிர வெளியுலகமே அறியாது, கொண்டாட்டங்களையும் உற்சாகங்களையும் அனுபவிக்காது இருந்துவிட்டார் என்பதால் ஆராவும் அனுப்பி வைத்தாள். எத்தனை காலமான போதும் தாய் வீடு செல்வதில் சிறு ஆனந்தம் இருக்கவே செய்தது.  
பின் கௌஷிகா, தன் தந்தை அன்று வருவதாகத் தெரிவித்தவள் ரவியையும் வேலை முடித்து அங்கே வரச் சொல்லிவிட்டு குழந்தையோடு பிறந்தகத்திற்குச் சென்றுவிட்டாள். 

Advertisement