Advertisement

மாலை சுபாத்ராவும், மிதுனும் கிளம்பிவிட, ஸ்ரீயும் உறங்கிவிட, ஆராதனாவை அழைத்து கொண்டு வெளியில் வந்தான் விஜய். 
பைக்கில் அவன் பின் அமர்ந்திருந்தவள், “எங்க கூட்டிட்டுப் போற விஜய்..?” என்க, “கூட்டிடா? கடத்திட்டுப் போறேன் உன்னை..” என்றான் சிரிக்காமல். 
“ஓஹோ..அப்படியா..?” என வெகு சாதாரணமாக கேட்க, “பயமேயில்லையில்லை உனக்கு..?” என்றவன் மிரட்ட, “உன்னைப் பார்த்தா..? ஸ்ரீகூட பயப்பட மாட்டாள்” என வாரினாள். 
“எல்லாம் என் நேரம்! புதுமாப்பிள்ளை எவனாவது என்னை மாதிரி பொழுது போகமா இருப்பானா?” 
“வேணா கூகுள்ல தேடிப் பாரு..” 
அவனால் சிரிக்க முடியவில்லை. அதற்குள் ஒரு புதுவீட்டின் முன் வண்டியை நிறுத்தியிருந்தான். இறங்கியவள் ஆர்வமாகப் பார்த்தபடி, முன் கேட்டைத் திறந்து உள்ளே செல்ல, பின்னே சென்றான் விஜய். 
“பிடித்திருக்கா..? நம்ம வீடு..” என்க, வேகமாக தலையாட்டியபடி, “நல்லாயிருக்குங்க..” என்றாள். 
இன்டிரியர் வொர்க் தவிர வீடு முழுவதும் தயாராகி இருந்தது. முன்புறம் பார்கிங் இடம் விட்டு, உள்ளே வர பெரிய ஹால். பிள்ளைகள் ஓடி விளையாட வசதியாக இருக்கும் மனதில் நினைத்தாள். மேற்குப்புறம் திரும்பி சிறிது நடக்க, சிறு இடைவெளி விட்டு உள்ளே செமி மாடுலர் கிச்சன். ஜன்னல்கள், ஸ்டோரேஜ் கபோர்ட் இருக்க ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்த்து அவள் வெளியே வர, அவள் பின்னே சுற்றினான் விஜய். 
கீழிருக்கும் அறைகளைப் பார்த்துவிட்டு மாடி ஏறினாள். மேல மூன்று படுக்கையறைகள் இருக்க, ஒவ்வொன்றாகப் பார்த்தபடி சென்றவள் ஓர் அறையோடு இணைந்திருந்த கதவைத் திறந்தாள். நன்கு அகலமான இடவசதி கொண்ட பால்கனி, தன் வீட்டுட்டு ரோஜாக்களுக்கு ஏற்ற இடம் எனத் தோன்றியது. 
சட்டெனத் திரும்ப, அதுவரையிலும் அவள் பின்னே வந்தவன் தற்போது வாசலில் சாய்ந்து நின்று கொண்டு அவளை வெறிக்கப் பார்த்தான். 
“என்ன..?” எனக் கேள்வியாக புருவத்தை உயர்த்தி அவள் கேட்க, அந்த அழகில் வழக்கம் போலே மனம் மயங்கியவன் பதிலின்றி மெல்ல அவளை நெருங்கி வந்தான். 
அவன் நடையிலும் முக பாவனையிலும் அவன் எண்ணம் புரிந்தவள், “சிக்குனாதானடா…” என நினைத்து, நாக்கை துருத்தி அழகு காட்டியபடி ஓடினாள். அதில் விஜயும் சிறு பரவசத்துடன் அவளை விரட்ட, வெறுமையான அறை ஆகையால் ஓடி விளையாடுவதற்கு அதிகமான இடமிருந்தது. 
வாசல் கதவின் அருகே சென்றவள் கதவைத் திறக்க முயல, அது லாக் செய்யப் பட்டிருப்பதை உணர்ந்தாள். அவன் கதவின் அருகில் இருந்ததன் காரணம் அப்போது தான் புரிந்தது. 
அவள் நின்ற சில நொடிக்குள் அவளை நெருங்கியிருந்தவன் பின்புறமாக அணைத்து தூக்கிச் சுற்றினான். 
“ஐயோ, என்ன பண்ற விஜய். பயமா இருக்கு விடுடா..” எனக் கூச்சத்தில் குலுங்கிச் சிரித்தாள். சிறு பிள்ளை போன்ற இன்பச்சிரிப்பு, வெறுமையான அறையில் இனிய கீதமாக ஒலித்தது. 
“இப்போ மட்டும் நான் வெயிட்டா இல்லையா? இறங்கி விடு?” என்க, “ஹாஹா.. இதுக்காக தானே நீ வெய்ட் குறைச்சி மெலிந்திருக்க? பம்கின்..” என்றான் சிரிப்புடன். 
எவ்வாறு அறிந்தான் ஒரு நொடி வியந்தவள், “எப்படி தெரியும்?” என்க, “அக்கா வீட்டுக்கு வரும் போதெல்லாம் கவனித்திருக்கேன், நீ இப்படி தான் மிதுனோட விளையாடுவ..” என்றான். 
அப்போவே பார்த்திருக்கானா? மேலும் வியந்தவள், “சரி, இறக்கி விடுங்க..” எனக் கெஞ்சினாள். 
“இனி எங்கிட்ட இருந்து தப்பி ஓடுவியா..?” மிரட்டல் போலக் கேட்டவன் இறங்கிவிட, அது வரை எத்தனை வட்டம் சுற்றினானோ, இறங்கிவிட்டதும் தலை சுற்ற, நிலையாக நிற்க முடியாது “நீ தானே விலகி இருன்னு சொன்ன..” என்றபடி அவன் தோள்களைப் பற்றி நெருங்கி நின்றாள். 
“ஹையோ..ஆண்டவா! இன்னும் எத்தனை தடவை தான் அதையே சொல்லிக்காட்டுவ நீ?” என அவள் இடையை இறுக்கி தன்னோடு அணைத்தான். 
“எனக்கு ஞாபகத்துல இருக்குற வரைக்கும்?” என்றவள் விலக முயல, “நான் மறக்க வைக்கட்டுமா..?” எனக் காதோரம் கிசுகிசுத்தவன் மேலும் இறுக்கமாக அணைத்து அவள் கழுத்தோரம் முகம் புதைய உரசினான். 
நிற்க இயலாது நெளிந்தவள், “கூசுது விஜய்..” எனச் சிணுங்க, அந்த குரல் அவனுக்கு மேலும் ஆசையை கூட்ட, “பரவாயில்லை பழகிக்கோ..” என்றபடி முத்தமிடத் தொடங்கினான். 
நன்கு இருள் சூழ்ந்திருக்க, தாமதமாகி விட்டதை உணர்ந்து விஜயை ஆராதனா தள்ளிக் கொண்டு வர, வீட்டுக்குச் செல்லும் உற்சாகத்தில் அவனும் வெளியேறினான். அவளோ வீட்டுக்குச் செல்ல விடாது ஷாப்பிங் செய்ய வேண்டுமென்று கடைவீதிகளுக்கு இழுத்துச் சென்றாள். 
உடைகளிலிருந்து தேவையான சில பொருட்களை வாங்கியவள், ஸ்ரீநிதிக்கும் பார்த்து பார்த்து வாங்கினாள். இரண்டு மணி நேரத்திற்கும் மேல சுற்றி, அவன் பொறுமையைச் சோதித்துக் கொண்டிருந்தாள். 
“அப்போ நான் கூப்பிட்டேன்னு எங்கூட வரலை, ஷாப்பிங் செய்ய தான் வந்தியா?”
“அதுவே இப்போ தான் புரியுதா உனக்கு?”
“உன்னை..” பல்லைக் கடித்தவன், “இதுக்கெல்லாம் அண்ணி இல்லை அக்காவோட வர வேண்டியது தானே..?” என்றான். 
“அப்போ யார் சுமக்குறது?” என்க, “அடிப்பாவி..” என வாயைப் பிளந்தான். 
“சரி கிளம்பு..” என்றவன் அழைக்க, “ம்கூம், நீ வேணா உன் க்ரீடிட் கார்டை கொடுத்துட்டுப் போ..” என விரட்டினாள். 
“ஆராகுட்டி, பசிக்குதும்மா வீட்டுக்குப் போவோமா?” எனக் கெஞ்சிய பிறகே, பாவம் பார்த்து உடன் கிளம்பினாள். 
பவானி ஆராவை எதிர்பார்த்து விதவிதமாக சமைத்து வைத்திருக்க, வந்ததும் விஜய் தான் வயிறு முட்ட உண்டான். அதன் பின் அறைக்குள் வர, வாங்கிய பொருட்களைக் கட்டிலில் கடை பரப்பி ஸ்ரீயிடம் விளக்கிக் கொண்டிருந்தாள் ஆரா. 
ஸ்ரீ வேறு மாலையிலே தூங்கியிருந்தாள் ஆகையால் இப்போதைக்கு இருவரும் தூங்க மாட்டார்கள் என உணர்ந்தவன் தன்னை உறங்க விட்டால் போதுமென தன்னிடத்தில் படுத்துக் கொண்டான். 
மறுநாள் ஆராவின் வீட்டிலிருந்து அஸ்வின் மறுவீட்டு விருந்திற்கு அழைக்க வர,  பவானி இருவரையும் அனுப்பி வைத்தார். 
ஆரா வீட்டிற்குள் நுழையும் போதே அவள் முன் ஓடி வந்து நின்று வாலாட்டியபடி தாவியது அவள் பட்டு. மண்டியிட்டு அமர்ந்தவள் கொஞ்ச, “இரண்டு நாள் தான் நீ வீட்டுல இல்லை, என்னவோ ரொம்ப நாள் இல்லாது போல இருக்கு ஆராம்மா” என விம்மிய குரலில் உரைத்தார் அவள் அன்னை சுதாராணி.  
கையோடு தூக்கிக்கொண்டு எழுந்தவள், “பொய் சொல்லாதம்மா, நான் இல்லாம உனக்குப் பாதி வேலை கம்மியாகிருக்கும். நிம்மதியா இருப்ப..” என என்றாள். 
அதற்குள் அவள் அருகில் நிற்கும் விஜயைக் கண்ட அவள் நாய்க்குட்டி சின்ன குரலில் குரைக்க, தன் போலே இரண்டடி அவன் விலகி நிற்க, பட்டுவை அதட்டியபடி அவனையும் அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள். 
ஆராவின் வீட்டில் விஜயை ஆர்பாட்டமாகக் கவனிக்க, அவனால் தான் இயல்பாகப் பழக முடியவில்லை. அவள் பட்டுவேறு அவனைப் பார்க்கும் போதெல்லாம் குறைக்க, அஸ்வின் வேறு அதற்கு இணையாக முறைத்தபடியே சுற்றினான். 
சிறிது நேரம் அவள் தந்தையோடு உரையாடியவனுக்குப் பின் பொழுதே போகவில்லை, எப்போதுடா தன் வீட்டிற்கு செல்வோம் எனும் நிலைக்கு வந்துவிட்டான். இதற்காகத் தான் மாமா கூட தன் வீட்டிற்கு வருவதில்லையோ என ஜெய்பிரகாஷைப் பற்றி நினைத்தான். 
ஆனால் ஆராவோ அவன் வீட்டிலிருந்ததை விடவும் உற்சாகமாகச் சுற்றி வந்தாள். அவளுக்குப் பிடித்தவை அவனுக்குப் பிடித்தவை எனப் பட்டியலிட்டு சமைக்கச் சொல்லினாள். அன்னையின் மடியில் படுத்துக் கொண்டு பவானியின் சமையலைப் பாராட்டினாள். அவள் ரோஜாக்களுக்கு தண்ணீர் தெளிக்கவில்லை என அஸ்வினை விரட்டி விரட்டி அடித்தாள். 
தந்தையிடம் திருமணச் சீராக தன் தேவைகளை உரிமையோடு பட்டியல் வாசிக்க, விட்டால் இவ்வீட்டிற்கு நடுவில் கோடு போட்டுவிடுவாள் போலே என நினைத்துச் சிரித்தான் விஜய். 
அவள் அவளாக அவள் இயல்போடு இருக்க, அவனால் அனைத்தையும் ரசிக்க முடித்ததே தவிர, அவளோடு ஒன்ற முடியவில்லை. இவளால் மட்டும் எப்படி என் வீட்டினரோடு இயல்பாக ஒன்றிப்போக முடிகிறது என்ற ஆராய்ச்சி. 
எப்படியோ நேரத்தைத் தள்ளியவன் இரவு உணவிற்கு பிறகு கிளம்பலாம் என்க, “ஒரு நாள் கூட எங்க வீட்டுல நான் தங்கக் கூடாதா?” எனச் சண்டைக்கு நின்றாள். 
“அப்படியில்லை ஆராகுட்டி, எனக்கு கொஞ்சம் வேலை இப்போ என்னோட வா, அப்பறம் உனக்கு எப்போ தோனுதோ உடனே இங்க வந்துக்கோ”
அவள் வீட்டில் இருப்பதால் இயல்பாக அவள் உரக்க பேச, அவனுக்கு அவளிடம் சண்டையிட விருப்பமில்லை தழைந்து தான் போனான். 
“எனக்கு இப்போ தான் இங்க இருக்கணும்னு தோனுது. ஒரு இரண்டுநாள் இருப்போமே..” அடம் பிடித்தாள். 
“எனக்கு வேலையிருக்கு ஆரா..” 
“பொய் சொல்லாத உனக்கு இன்னும் மூனு நாள் லீவ் இருக்கு..” 
“எனக்கு இங்க பொழுது போகலை ஆரா, புரிஞ்சிக்கோயேன்..”
“ஏன்? டிவி இருக்கு, இல்லை என் லேப், சிஸ்டம் வேணாலும் யூஸ் பண்ணிக்கோ, பட்டு இருக்கா, மிதுன் இருக்கான் விளையாடலாம். இல்லை இங்க உன் வசதிக்கு எதுவும் குறைச்சலா?” அவனை இருக்க வைக்கும் பிடிவாதம். 
“என்னால வெட்டியா எல்லாம் இருக்க முடியாது ஆரா” 
“அப்போ சீன அதிபருக்கு ஆலோசனை சொல்லப் போ” கேலியுரைக்க, முறைத்தவன் “ம்ச், ஆரா எனக்கு இங்க கம்ஃபர்டபுல இல்லை நாளைக்குக் கிளம்பலாம்” என்றான் உறுதியாக. 
“முடியாது போ, அஸ்வின் தான் கேட்டுகிட்டான், இதுவே உங்க அக்கா உங்க வீட்டுக்கு வந்தா மட்டும் என்ஜாய் பண்ணுவ, வரலைனா வீடு தேடி வந்து கேள்வி கேட்ப? உனக்கு ஒரு நியாயம் எங்க அண்ணனுக்கொரு நியாயமா? உங்க அம்மா, மகள் வந்தா எவ்வளவு சீராட்டி கொண்டாடுறாங்க, வரலைன்னா ஏங்குறாங்க தானே? எங்கம்மாவுக்கும் அப்படி இருக்காதா? 
விருந்துக்கு வந்த ஒரு நாள் கூட தங்காம போனா என்ன நினைப்பாங்க? நீ மாறிட்ட, எங்களை எல்லாம் மறந்திட்ட, எங்களை விட உனக்கு மாமியார் வீடு தான் பெருசா போச்சா? இவ்வளவு தானா உன் பாசம்? இப்படியெல்லாம் எங்கண்ணன் என்னைக் கேட்க மாட்டானா?” படபடவென கேட்டாள். 
விஜயால் பதில் பேச முடியவில்லை, “உனக்கு வந்தா இரத்தம், எனக்கு வந்தா தக்காளிச் சட்டினியாக்கும்” என முனங்கி விட்டுச் சென்றாள் ஆரா.  
வியஜரூபன் வாயடைத்து நின்றான். இதே குற்றச்சாட்டை தானே ரவியும் அவனும் சுபத்ராவின் மீது சொல்வது! 

Advertisement