Advertisement

அத்தியாயம் 20 
வைகறை பொழுதில் பட்சிகள் படபடக்கும் ஒலியும் கீச்சொலியும், ஜன்னல் தாண்டி செவிகளில் நுழைந்த போதும் அசதியில் அயர்ந்திருக்கும் உடலை அசைத்து எழ முடியவில்லை அவளால். இன்னும் விழி திறக்காது சோம்பலில் இருந்தவளுக்கு எழும் எண்ணம் கூட இல்லை. யாரேனும் எழுப்பி, தூக்கிவிட்டால் கூட சுகமாக இருக்கும். 
கன்னத்தில் அழுத்தத் தீண்டும் கலாபம் போன்று ஏதோ ஊர, புது ஸ்பரிசத்தில் அவள் உடல் சிலிர்த்தது. தொலைவிலிருந்து கேட்பது போல் காதுக்குள் கசிந்த கந்தசஸ்டிப் பாடல், அதுவரையிலும் புது இடம் என்பதையும் உணராது அயர்ந்த உறக்கத்தில் இருந்தவளை மெல்ல சுய நினைவிற்கு மீட்டது. 
தான் இருப்பது புகுந்தகத்தில் என்பதை உணர்ந்த நொடி சட்டென ஆராதனா பதறி எழுந்தாள். அதுவரையிலும் அவளை அணைத்திருந்த கரம் சரிந்து அவள் மடியில் விழ, திரும்பிப் பார்த்தால் அவளை விடவும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள் ஸ்ரீநிதி. 
அவளைப் பார்த்ததும் இதழ் மலர்ந்தவள், தலை முடிகளை உதுக்கியபடி அவள் உறக்கம் கலையாது சற்று நகர்ந்து கொண்டாள். கட்டிலிலிருந்து இறங்க நினைத்தவள் குனிய, தரையில் அவள் கால் ஊன்றுவதற்கு சிறு இடமும் இல்லாதபடி இடத்தை அடைத்துப் படுத்திருந்தான் விஜயரூபன். 
சட்டென கால்களை தூக்கிக் கொண்டவள் உறக்கம் கலைவானா என எதிர்பார்ப்போடு அவனை உற்றுப் பார்த்தாள். சந்திரவதனத்தில் பட்டுச் சட்டையின் முதல் மூன்று பட்டன்களை திறந்து விட்டு, கலைந்த தலை மூடி காற்றில் சிலிர்க்க, மூடி விழியோடு ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான் விஜயரூபன். 
இறுக்கம் தளர, பரிபூரண நிலையில் மலர்ந்த சந்தோஷமுகம், பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவளுக்கு. வலிக்க வலிக்க கன்னத்தைக் கடிக்கும் ஆசை, கரும் மீசையைப் பிடித்திழுத்து விளையாடும் விபரீத ஆசைகளில் எல்லாம் தோன்ற தன் எண்ணத்தால் முகம் சிவந்தாள். 
நேரமாகியதை உணர்ந்தவள் மீண்டும் அவனை உற்றுப் பார்த்துவிட்டு அவன் இடது கை அருகில் தரையில் இருந்த சிறு இடத்தில் தன் ஒரு பாதத்தை ஊன்றி இறங்கினாள். அவ்வளவு தான் ஏதோ விசை அவள் காலை வார, நிலையில்லாது தடுமாறியவள் விஜயின் மீதே பொத்தென விழுந்தாள். 
விழுந்தவள் கத்தவில்லை ஆனால் அவன் தான் மெல்லிய குரலில், “அம்மா..” என அலறினான். “சாரி..சாரி..” எனப் பதறியபடி அவள் எழ முயற்சிக்க, அவள் இடையை தன்னோடு இறுக அணைத்திருந்தான் விஜயரூபன். 
“என்ன கணம்..! அரிசிமூட்டை மாதிரி இருக்கடி, வலிக்குது..” என்றவன் சுணங்க, “ஹான், அன்னைக்கு ஆபிஸ்ல என் மேல விழுந்தையே, எனக்கும் இப்படி தானே வலித்திருக்கும் புரியுதா?” என சண்டை பிடித்தாள். 
“உனக்கு எப்படியோ ஆனால் எனக்குப் பஞ்சு மெத்தையில பட்டு விரிப்புல விழுந்த மாதிரி சுகமா தான் இருந்துச்சு” எனக் கண்சிமிட்டி இதழ் குவித்தபடி அவளை நெருங்கினான். 
“விடுங்க..” என்றபடி ஆரா திமிறி எழ முயற்சிக்க, “அதென்ன அப்படியொரு பார்வை? கண் கூட சிமிட்டாம?” என்றான் விசாரணையாக. 
“எப்போ..?” புரியாது அவள் கேட்க, “இப்போ தான் சரியா ஏழு நிமிஷம் இருபது செகண்ட்ஸ் முன்னாடி, என் முகத்தையே ரசிச்சிப் பார்த்துக்கிட்டு இருந்தியே..” கீழ் உதடு சிரிப்பில் துடிக்கக் கேட்டான். 
அவனை உற்றுப் பார்த்தவள், “பிராடு, அப்போ தூங்குற மாதிரி நடிச்சியா?” என அடிக்க, சுகமாக வாங்கிக்கொண்டு சிரித்தான். அதே நேரம் கதவு தட்டப்பட, தன் மீதிருந்தவளை கட்டிலுக்கடியில் உருட்டிவிட்டு, “யாரு..” எனக் குரல் கொடுத்தான். 
 
“நான் தான் விஜய், காலையில இருந்தே பாப்பாவை காணும்..?” என பதட்டத்தோடு கௌஷியின் குரல் கேட்க, “உள்ள வா அண்ணி, இங்க தான் இருக்கா” என்றதும் தான் உள்ளே வந்தாள் கௌஷிகா. 
இன்னும் ஒருக்கழித்துப் படுத்திருந்தவனின் ஒரு கை ஆராவின் வாயை மூடியிருக்க, மறுகை அவளின் இரண்டு கையையும் இணைத்து அவள் வயிற்றோடு எழ விடாது, அழுத்திப் பிடித்திருந்தது. அவனை சங்கடமாகப் பார்த்தவள், “ஆரா எங்கடா?” என்க, குளியலறையை கை காட்டினான். 
“சாரிடா..” என கௌஷி உரைக்கும் போதே, “இதான் நீ பிள்ளை வளர்கிற இலட்சணமா? நைட் காணாம போனவளை காலையில தேடுற?” என குறைபட்டான். 
எது நைட்டே இங்க வந்துட்டாளா? என மேலும் சங்கோஜத்தோடு கௌஷி, “சாரிடா, என் ரூம் டோர் லாக் பண்ணாம விட்டுட்டேன் போல..” என்றபடி ஸ்ரீயை தூக்க முயன்றாள். 
திருமண அலைச்சல், அசதி அனைவருக்குமே இருந்தது. அதுவும் கௌஷிக்கு தான் அதிகபடியான வேலை, வந்திருக்கும் விருந்தினரை விழுந்து விழுந்து கவனித்தாள். 
“அதான் தூங்குறாளே, ஏன் டிஸ்டர்ப் பண்ணற? தூங்கட்டும் விடு” என அதட்ட, “எல்லாம் என் நேரம், சீக்கிரம் இரண்டுபேரும் ரெடியாகி வாங்க, கோவிலுக்குப் போகணும்னு அத்தை சொன்னாங்க” என்றவள் வெளியேறினாள். 
மீண்டும் ஆராவை வெளியே இழுத்து தன் மேலே போட்டுக் கொள்ள, “என்ன பார்த்தா எப்படித் தெரியுது?” என்றாள் மிரட்டலாக. என்னவோ உருட்டுக்கட்டை போலே தன்னை உருட்டி விளையாடுவதில் எரிச்சலானாள். 
“மெத்து மெத்துன்னு ஸாப்டா, பெரிய சைஸ் டெடிபியர் மாதிரி..” என்றவன் விளக்க, அவள் முறைத்தாள். அதையும் சட்டைசெய்யாது மீண்டும் இதழ் குவித்து அவளை நெருங்க, ஒரு கையால் அவன் முகத்தில் அமுக்கிக் கொண்டு மறுகையால் அவன் நெஞ்சில் அழுத்த கை ஊன்றி அவனிடமிருந்து எழுந்தாள். 
உதட்டை சுளித்துக்கொண்டவள், “என்ன மறந்துடுச்சா? விலகியே இரு..” என விரல் நீட்டி எச்சரித்து விலகினாள். 
“நல்லை அல்லை அம்முக்குட்டி, புது புருஷனைப் பார்த்து சொல்லுற டயலாக்கா இது?” என்றவன் சிணுங்க, “எல்லாம் நீங்க சொன்னது தான், நான் ஜெஸ்ட் ஞாபகப்படுத்தினேன்” என உள்ளிருந்து அவள் குரல் மட்டும் வந்தது. இன்னும் அவளுக்குச் சினம் குறையவில்லை போலே என நினைத்தவன் நீண்ட பெருமூச்சை விட்டான். 
விஜயரூபனுக்கு கனவா? நிஜமா என்ற அறிய முடியா ஐமிச்சம்! நிஜம் தான் என உணர்த்தியது தன் மீது ஊர்ந்து சுவாசப்பைக்குள் நிறைந்திருக்கும் அவள் வாசம். செல்வச் செழுமைகளைக் கொட்டினாலும் நிறையாத மனம் தற்போது நிறைந்த உணர்வு! 
காலை உணவிற்கு பின் ரவி வெளியில் வேலை இருப்பதாகக் கிளம்பிச் சென்றுவிட, சுபத்ரா, கௌஷிகா குழந்தைகளோடு புதுமணத்தம்பதிகளும் கோவிலுக்குக் கிளம்பினர். வெங்கடேஷப் பெருமாளை மனம் நிறைய வேண்டினான் விஜய். 
வேண்டுதல் என எதுவுமில்லை, நன்றிகள் தான் தெரிவிக்க வேண்டியிருந்தது. ரவி, கௌஷி, சுபத்ரா, ஜெய்பிரகாஷ் அத்தனை பேரின் ஆசியோடு காதல் மனைவியாக ஆராதனா தன் வாழ்வில் வந்ததால் உள்ளம் நிறைந்திருந்தான். வாழ்வின் தேவைகள் அனைத்தும் தீர்த்த பரிபூரண நிலை. 
பெண்கள் மூவருமே பிரகாரத்தில் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருக்க, மிதுனும், ஸ்ரீயும் கூட ஏதோ அலைபேசியை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். விஜயரூபனுக்கு உள்ளுக்குள் புகைத்தது. 
கொஞ்சமாவது கண்டுகிடுறாளா பாரு, இவ எல்லாம் எதுக்கு என்னை கல்யாணம் பண்ண? எங்க அக்கா, அண்ணியோட கொஞ்சிக்கவா? இப்படி கோவில்ல சாமியாருக்குச் சமமா உக்கார வைச்சிட்டாளே? என மௌனமாகப் புலம்பினான். 
“ஏன் ஆரா..? எங்க மேல எதுவும் கோபமா..?” என கௌஷி கேட்க, “இல்லைக்கா, நீங்க எனக்கு உதவி தான் செய்திருக்கிங்க உங்க மேல எதுக்கு கோபப்படப் போறேன்?” என்றாள். 
“இல்லை எங்கிட்ட நீ சரியா பேசலையே அதான் கேட்டேன்..”
“அது விஜய் மேல இருந்த கோபம்…” 
“இன்னும் அவன் மேல கோபமா தான் இருக்கியா?” என கௌஷி, தான் அறிந்து கொள்ள வேண்டிய விஷயத்தைக் கேட்க, அப்போது தான் சுபத்ராவிற்கும் அவள் விசாரணை எது குறித்து என்பது புரிந்தது. 
“லைட்டா..” என விரல்களை சுருக்கி அளவு காட்டினாள். 
“அப்போ ஏன் அவனை கல்யாணம் செய்துகிட்ட? வேண்டாம்னு சொல்லியிருக்கலாமே?” எனப் புரியாதது போலே சுபத்ரா கேட்க, “கோபம் இருக்குங்கிறதுக்காக வேண்டாம்னு சொல்ல நான் என்ன உங்க தப்பி மாதிரி லூசா? அவர் தான் முகத்துல முழிக்காத, விலகி இருன்னு சொல்லுவார். எனக்கு இருக்கிற கோபத்துக்கு நல்லா உரைக்கிற மாதிரி நாலு அறை விடுவேன். அதுவும் போக அவரே என்னை தேடி வரும் போது என் கோபம் எங்கேயோ காணமப்போயிடுது அக்கா” என்றாள் சிணுங்கலாக. 
“அப்போ காலம் முழுக்க வைச்சு அடிக்கத் தான் கட்டிக்கிடீயா?” கௌஷி கேலியாகக் கேட்க, “கட்டுப்பிடிச்சிட்டீங்களே வாத்திம்மா…” எனக் கண் சிமிட்டினாள் ஆராதனா. 
“ரைட்டு, அலைய விடுனும்னு முடிவு பண்ணிட்ட, என் தம்பி தான் பாவம்..” என விஜயரூபனுக்காக பரிதாபப்பட்டது சுபத்ரா மட்டும் தான்.  
என்ன தான் பேசிக் கொண்டிருந்த போதும் அவனைக் கள்ளப்பார்வையில் கண்ட ஆராவிற்கு அவன் அமர்ந்திருக்கும் தோற்றத்தில் நகைப்பு பொங்கியது, உள்ளுள் மேலும் ரசித்தாள். அலைபேசியில் கவனம் பதியாது சலிப்புத் தோன்ற இதற்கு தான் வீட்டுப் பொண்ணுங்களோட வெளிய வரக் கூடாது போலே என நினைத்தான். 
போதும் போதுமென பொறுமை பறக்க, “வீட்டுக்குக் கிளம்பலாமா?” என முன் வந்து நின்றான். “நாங்க கிளம்புறோம், நீ அவளை எங்கேயாவது வெளிய கூட்டிட்டி போயிட்டு வா..” என்றாள் சுபத்ரா. 
விஜயின் முகம் சட்டென பிரகாஷமாக, “வேண்டாம்க்கா ஈவினிங் வேணா போய்கிறோம்..” என ஆராதனா மறுத்தாள். 
“சரி தான், லஞ்ச் முடிச்சிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு ஈவினிங் போலே போய்கோங்க..” என்ற கௌஷி, அவளையும் கிளம்பிக் கொண்டு செல்ல, பின்னாலே சென்றான் விஜயரூபன். 
வீட்டிற்குச் சென்ற பின்னும் சிறிதாகக் கூட அவன் பக்கம் பார்வை இல்லாது, பிள்ளைகளோடு ஐக்கியமாகிவிட்டாள் ஆராதனா. அதிலும் ஸ்ரீநிதிக்கு அவளை ஒத்த தோழமை கிடைக்க, சந்தோஷ துள்ளலில் இருந்தாள். வேறு வழியின்றி ஹாலில் டிவியை பார்த்தபடி அமர்ந்துவிட்டான் விஜய். 

Advertisement