Advertisement

அத்தியாயம் 02
இப்பெரும் பிரபஞ்சத்திற்குள் மகிழ்ச்சியை மட்டுமே தரும் 
பூஞ்சோலை வனம் குழந்தைகள் உலகம்!
சிறு இடம் குழந்தைகள் உலகம்! பன்னீர் எச்சிலோடு பதியும் இதழ் முத்தம் மென்சாரலிலும் கிடைக்காத குளுமை, உள்ளத்தின் தேங்கிய கொடும் நெருப்புகளையும் போக்கிவிடும் குளுமை!  கொஞ்சிக் கொஞ்சி பேசும் குதலை மொழி எந்த இசைக்கருவிகளும் தந்திடாத இன்னிசை! அறிவியலாளர்களை மிஞ்சும் ஆயிரம் கேள்விகளும், கிங்கிணியாய் ஒலிக்கும் மலர்ந்த சிரிப்பும் எதிராளியை இடைபோடாத பார்வையும், அழுகை, அடம், கொஞ்சல் சுணக்கமென அபிநயங்களைக் காட்டும் அந்த முகம் தான் சோர்வு நீக்கும் புத்துணர்ச்சி, வலி நீக்கும் நிவாரணி, நம்பிக்கை தரும் கடவுளின் ஒளி!
இரவு ஏழுமணி அளவில் பைக்கை நிறுத்திவிட்டு கையில் கவரோடு விஜய் வீட்டிற்குள் வர, ஹாலில் அமர்ந்து அவன் அன்னை பவானி காய்கறி நறுக்கிக்கொண்டிருக்க, மறுபுறம் சோஃபாவில் கால் மேல் கால் போட்டு மடியில் ஒரு நோட்டை வைத்துக்கொண்டு ஏதோ முணுமுணுத்தபடி பென்சில் பிடித்து எழுதிக்கொண்டிருந்தாள் நான்கு வயது ஸ்ரீநிதி. 
அவன் வரவை கண்டதும், “சித்தா..” என எழுந்தவள் ஆர்வமோடு எழுந்து வர, “சித்தப்பா குளிச்சிட்டு வரேன் ஸ்ரீகுட்டி” என்றவன் கையிலிருந்த ஸ்நாக்ஸ் அவளிடம் கொடுத்துவிட்டு அவனறை நோக்கி நடந்தான்.
அன்னையைப் பார்த்ததும், “என்னம்மா சமையல்?” என்ற கேள்வியோடு நிற்காமல் செல்ல, “சப்பாத்தி, வெஜ் குருமா..” என சமையலறையிலிருந்து பதிலாய் வந்தது அண்ணி கௌஷிகாவின் குரல். 
சோர்வு நீங்க குளித்து உடை மாற்றி, உதடசைய பாடல் ஒன்றை முணுமுணுத்தபடி வந்த விஜய் சோஃபாவில் பொத்தென்று அமர, எதிரே பாதி மலர்ந்தும் மலராதபடி ட்ராயிங் நோட்டில் கிடந்தது சூரியகாந்தி. அருகிலிருந்த ஸ்ரீநிதியோ அவன் வாங்கி வந்திருந்த பட்டர் பிஸ்கெட்டில் கவனமாக இருக்க, எட்டி ட்ராயிங் நோட்டை எடுத்து வரைத் தொடங்கினான் விஜய். 
“ஏன் ஸ்ரீபாப்பா நேத்து ஆரா(ஆராவமுதன்) கூட சண்டை போட்டியே சமாதானமாகியாச்சா?” என்றவன் கேள்விக்கு “இல்லை சித்தா இன்னைக்கு நானும் அவன் கூட நல்லா சண்டை போட்டு வந்துட்டேன், அடிச்சு வைச்சிட்டேன்” என்றவள் அவன் அருகில் அமர்ந்து வரைவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். 
“சூப்பர் பாப்பா” என்றவன் பாராட்ட, “ம்ம் நல்லா சொல்லிக்கொடுடா இப்போவே ஸ்கூல் ரௌடியா வர” என்றபடி கையில் கிண்ணத்துடன் வந்தாள் கௌஷிகா. 
விஜய் முன் வந்து நின்றவள் பத்திரகாளியாக முறைக்க, “மம்மி முறைக்கிறாங்க சித்தா” என காதில் ஸ்ரீ முணுமுணுக்க, “அடுத்து திட்டுவாங்க கேளு” என அவனும் அறிந்தவன் போலே மென் குரலில் உரைத்தான். 
“என்னடா இது?” 
“பார்த்தா தெரியலை சன்பிளவர் அண்ணி” என்க, ஸ்ரீ வாயை மூடிக்கொண்டு சிரிக்க, மேலும் எரிச்சலானாள் கௌஷிகா. 
“எத்தனை தடவை சொல்லிருக்கேன் இப்படி அவள் சாப்பிடுற நேரம் ஸ்நேக்ஸ் வாங்கிட்டு வந்து கொடுக்காதேன்னு அடங்க மாட்டியா நீ, இப்போ இதை யாரு சாப்பிடுவா” என்றவள் கிண்ணத்தை நீட்ட, வாசம் பிடித்தவன் “பாப்பு புவ்வா நெய் விட்டுக் கொண்டு வந்திருக்கீயா? இங்க கொடு பசி வாயித்தைக் கிள்ளுது” என வாங்கிக்கொண்டான். 
“இது கொஞ்சம் கூட நல்லாயில்லைடா”
“நீ சமைச்சதா அப்படி தான் இருக்கும்”
“சமாளிக்கிறீயா? நான் கத்துறது புரியலை, இப்போ எதுக்கு அவ ஹோம் வொர்க்கை நீ செஞ்சிட்டு இருக்க? இப்படி அவ ஹோம் ஒர்க், ஸ்கூல் பிராஜெக்ட் எல்லாம் நீயே செய்துட்டா அவ எப்போ படிப்பா? அவளுக்குப் பதிலா பரீட்சை என்ன நீயா எழுதுவ?”
“அதையும் எழுதிட்டா போச்சு..” என்றவன் தோள்களை குலுக்க, “விஜய்..” நறுநறுவென பற்களை கடித்தாள் கௌஷிகா.
“இப்போ எதுக்கு டெண்ஷாகிற நீ? வேற வேலை வெட்டியில்லையா” எனக் கேட்டவன் ஸ்ரீநிதிவை ஒரு பார்வை பார்க்க, “லெஸ் டென்ஷன் மோர் வொர்க், மோர் வொர்க் லெஸ் டென்ஷன்” என இருவரும் ஒரே குரலில் சிரிப்புடன் ராகமிழுத்தனர். 
மேலும் டென்ஷனானவள், “உங்க கூட்டணியைக் கலைக்கவே கூடிய சீக்கிரம் உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன், இரு” என முனங்கிவிட்டு பவானியின் குரலுக்கு அடுப்படி நோக்கிச் சென்றாள். 
“அதெல்லாம் உன்னால முடியாது எங்க கூட்டணி ஆயிரம் யானை பலம், ஐந்நூறு தாக்காளிப் பழம் (பலம்), நூறு சப்போட்டாப் பழம் (பலம்) கொண்டது” என்றவிட்டு இருவரும் ஹை ஃபை கொடுத்துக்கொண்டனர். 
“அது பலமில்லை பழம்..” என அவளில்லாத போதும் சமையலறையிலிருந்து அவள் குரல் வர, “வந்துடாப்பா தமிழ் வாந்தி! அடுப்புல தீயுற வாசனை வருது முதல்ல அதை கவனி” அமர்ந்தபடி விஜய்யும் கத்தினான். 
பத்தாம் வகுப்பு படிக்கையில் தமிழ்ப் பாடத்தில் விஜய் தடுமாற, அவன் தந்தை கௌஷிகாவின் அன்னையிடம் தான் தமிழ் டியூஷன் சேர்த்திருந்தார். ஒரு வயது மூத்தவள், வெவ்வேறு பள்ளி கல்லூரி என்ற போதும் டியூஷனில் எப்போதும் அவர்களுள் போட்டி தான். அவளது மாலை சிற்றுண்டியை அவனோடும் பகிர்ந்து கொள்ளச் சொல்லும் அன்னை, சில நேரங்களில் அவளை கவனிக்கச் சொல்லும் போது வேண்டுமென்ற விஜய்க்கு வராத செய்யுள் பாடலை எழுதும் படியும் ஒப்பிக்கும் படியும் சொல்லி பலி தீர்த்துக்கொள்வாள். பின்னாளில் அண்ணியாக வருவாள் என எதிர்பாராது அன்றே நட்பாகியிருந்தனர் இருவரும்.  
தான் வரைந்திருந்த சூரியகாந்தியை ஸ்ரீநிதியிடம் காட்டியபடி கலர்பென்சிலை எடுக்க, “நானு..நானு..நான் தான் கலர் பண்ணுவேன் சித்தா” என அவனிடமிருந்து பிடிக்கிக்கொண்டு அவள் வேலையை ஆர்வமாகத் தொடர்ந்தாள். 
சிறு சிரிப்புடன் கௌஷிகா வைத்துவிட்டுச் சென்றிருந்த பருப்பு சாதத்தைக் கையில் எடுத்து, “பேசும் சூரியகாந்தி கதை தெரியுமா பாப்பா” எனக் கேட்டவன் கதை சொல்லியபடி ஊட்டிவிட்டான். 
ஸ்ரீநிதி பிறந்ததிலிருந்து விஜய் வீட்டிலிருக்கும் நேரங்கள் எல்லாம் அவளோடு தான். கௌஷிகாவின் அன்னை அப்போது இல்லாததால் பிரசவத்தின் போதும் கௌஷிகா இங்கே இருக்க, பவானி தான் கவனித்துக்கொண்டார். பவானிக்கு அவளை கவனிப்பதற்கே நேரம் சரியாக இருக்க, ஸ்ரீநிதி பசியாறிய நேரம் போக பெரும்பாலும் கைக்குழந்தையாய் அவன் கைகளுள் தான் இருந்தாள். என்னவோ முதல் முறை கைகளில் தூக்கிய போதே நெஞ்சில் ஒட்டிக்கொண்டவள் வளர வளர அவன் நிழல் போலானாள். அதிலும் கௌஷிகாவை கடுப்பேற்றிப் பார்ப்பதில் இருவருக்கும் அவ்வளவு குஷி.
சூரியகாந்திக்கு கலர்த் தீட்டி முடித்திருந்தவள் அவன் ஊட்டிவிட்ட உணவையும் முடித்திருந்தாள். 
“நல்லாயிருக்கா..?” எனக் கேட்டவள் அவன் பதில் சொல்லும் முன் “பாட்டிக்கிட்ட காட்டிட்டு வரேன்” சமையலறை நோக்கி ஓடினாள். 
சிறு சிரிப்புடன் பறந்து சென்ற பட்டாம்பூச்சியாய் அவளை பார்த்திருந்தவனுக்கு உள்ளுக்குள் ஒரு ஏக்கம் விம்மி எழுந்து அழுத்தியது. 
அவன் அண்ணன் ரவியும் வேலை முடித்து வந்துவிட, இரவு உணவிற்கு அனைவரும் ஒன்றாக அமர்ந்தனர். ஸ்ரீநிதி மட்டும் கார்டூன் பார்த்தபடி சோஃபாவில் அமர்ந்திருந்தாள்.
“அம்மா பூமி பூஜை போடுறதுக்கு நல்லநாள் குறித்து வாங்கி வந்திருக்கேன், இந்த மாசம் இருபத்தெட்டு அடுத்த மாசம் ஏழாம் தேதி இரண்டுநாள் இருக்கு எல்லாரும் வசதிபடுற மாதிரி ஒரு நாள் முடிவு பண்ணி சொல்லுங்க. லீவ் போடணும் ஏற்பாடு செய்யணும் இன்னும் கொஞ்சம் வேலையிருக்கு” 
ரவியின் கேள்வியில், “எந்த நாளா இருந்தாலும் எனக்கு வசதி தான்” என உரைத்த பவானி, மருமகள் மற்றும் இளைய மகனின் முகம் பார்த்தார். 
“நெக்ஸ்ட் மன்த் பேரன்ட்ஸ் டீச்சர் மீட் இருக்கு, மன்த் என்ட் எனக்கு ஓகே” 
“எனக்கும் ட்வென்டிஎயித் ஓகே தான் அண்ணா” 
“அப்போ சரி அதே தேதியை முடிவு செய்திடலாம்” என முடிவாக ரவி உரைக்கும் முன் இடை புகுந்த பவானி, “எதுக்கும் சுபத்ரா கிட்டையும் ஒரு வார்த்தை கேட்டுடலாம் ரவி” என்றார். 
“நம்ம வீட்டு ஆளுங்களை வைத்து சிம்பிளா பூஜையை முடிச்சிடத் தான் நினைத்திருந்தேம்மா”
“ரவி, அவளும் நம்ம வீட்டுப் பொண்ணு தானேப்பா”
“நீங்க கேட்டா மட்டும் என்ன சொல்லிடப் போறா? மாமியாரை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகணும், பையனைப் பாட்டு கிளாஸ் கூட்டிட்டு போகணும், கொழுந்தியா வீட்டுல விஷேம்னு சாக்கு தான் சொல்லுவா, சரி விடுங்க எதுக்கு உங்க ஆசையை எதுக்கு கெடுப்பானேன் நீங்களே அவகிட்டையும் கேட்டு முடிவா சொல்லுங்க”
விஜயரூபன் எதுவும் இடையிடவில்லை. தந்தைக்குப் பின் குடும்பப் பொறுப்புகள் அத்தனையும் அண்ணனே பார்த்துக்கொள்ள, அவன் சரியாகத் தான் செய்வான் என்ற நம்பிக்கை! 
இரவு உணவிற்குப் பின் தன் அறையில் படுத்துவிட்டவன் கையில் மொபைலை எடுக்க அதே நேரம் குடுகுடுவென அவன் அறைக்குள் ஓடி வந்த ஸ்ரீநிதி கதவை மூடினாள். எழுந்து வந்து அவளை கையில் தூக்கியவன், “என்ன குட்டிம்மா என்னாச்சு?” என்றான். 
“வாத்தி கமிங் ஒத்து..”
அவள் பதிலில் சிரித்தவன், “என்ன சேட்டை செய்த?” எனக் கேட்டபடி வெளியே எட்டிப்பார்க்க ரேணுகாவின் அறைக்கதவு மூடியிருந்தது. 
“அஹேன் ஹோம் வொர்க் செய்ய சொல்லுறாங்க சித்தா!” என்றவள் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, “அதான் எஸ்கேப்பாகிட்டேன்..” என்றாள் பொங்கிய சிரிப்புடன். 
அன்னை எவ்வளவு கண்டிப்போ அவ்வளவுக்குச் செல்லம் அவள் சித்தப்பா! 
தூக்கிவந்து தன் கட்டிலில் படுக்க வைத்துக்கொண்டவன் கதை சொல்லியபடி தட்டிக்கொடுத்து உறங்க வைப்பதற்குள் தானும் உறங்கியிருந்தான். ஸ்ரீநிதி வீட்டிலிருந்தால் அவன் கவனம் அலைபேசி, தொலைக்காட்சி பக்கம் கூட திரும்புவதில்லை! 
காலையில் அப்போது தான் அவன் எழ, சின்னவளோ ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, “ஸ்ரீ இந்தா பாலை குடி” என கிளாஸில் பாலை ஆற்றியபடி உள்ளே வந்த கௌஷிகா முறைத்தாள். 
“டேய் தூக்குறான்னா எழுப்பி விடமா அழகு பார்த்துகிட்டு இருக்க? இன்னும் அரை மணி நேரத்துல ஸ்கூல் பஸ் வந்திடும், அவளைக் கிளப்பிவிட்டு நான் எப்போ கிளம்ப?” என்றவளின் சுப்ரபாதத்தில் மெல்லக் குழந்தை உறக்கம் கலைய, “நேத்து ரூம்மை விட்டு விரட்டிவிட்டு கதவை மூடிட்டு இப்போ வந்து கத்துற? இதெல்லாம் ரொம்ப தவறுங்க அண்ணி” என்றான் சிறு சிரிப்புடன். 
“மானத்தை வாங்காத வாயை மூடுடா, இப்போ டைமாகுது ஸ்ரீ எழுந்திருடி” என முதுகில் அடித்து எழுப்பப் போக, அதை தடுத்தவன், “அதான் அரைமணி நேரமிருக்கே நீ கிளம்பிப் போய்கிட்டே இரு, நான் வேணா பாப்பாவை ஸ்கூல்ல ட்ராப் பண்ணிடுறேன், போ” என உரைத்தான். 
இவனோடு இதற்கும் மேல் வாதிட்டுக்கொண்டிருந்தாள் ஸ்கூல் பஸ் வந்துவிடும் என உணர்ந்தவள், “என்னவோ போ..” என சென்றுவிட்டாள். 
கௌஷிகா மெட்ரிகுலேஷன் ஸ்கூல் ஒன்றில் தமிழாசிரியை, அதே பள்ளியில் தான் ஸ்ரீநிதிவும் சேர்த்திருந்தனர். காலை மாலை இரு வேலையும் பள்ளி வாகனத்திலே இருவரும் சென்றுவருவர், வீட்டில் மட்டுமில்லாது பள்ளியிலும் அவள் பார்வைக்குள்ளே ஸ்ரீ இருக்க, அவள் செய்யும் சேட்டைகள் அனைத்தும் உடனுக்குடன் கௌஷிகாவிற்கு தெரிவிக்கப்பட்டுவிடும். 
குழந்தையை எழுப்பி தன் அன்னையிடம் சென்று கிளம்பி வருமாறு அனுப்பிவிட்டு தானும் குளியலறை நோக்கிச் சென்றான். 
இருபதே வினாடிகளில் பாட்டியின் கையால் தயாராகி மீண்டும் விஜயரூபனின் அறைக்குள் ஓடி வர, அவனில்லாது அவன் அலைபேசி மட்டும் கட்டிலில் அதிர்ந்து கொண்டிருந்தது. 
அதை அட்டென் செய்தவள், “ஹெலோ யாரு பேசுறது? சித்தா குளிச்சிக்கிட்டு இருக்கு” என கேட்காத தகவலையும் சொல்லி விசாரித்தாள். 
மறுபுறம் விஜயின் அலைபேசியில் இப்படியொரு மழலை குரலை எதிர்பாராத ஆரா, அவளின் கொஞ்சலான மிரட்டல் விசாரணையில் சிரித்தபடி, “நான் ஆரா பேசுறேன்” என்றாள்.
“ஏய் ஆரா நேத்து தானே நான் உன்னை அடிச்சிட்டு வந்தேன், இப்போ எதுக்கு ஃபோன் செய்த?” என்றவள் அறிந்த ஆரா அவள் பள்ளித் தோழன் ஆராவமுதன் மட்டமே! 
பேசும் குரல் இளம்பெண்ணின் குரல் என்றெல்லாம் கருத்தில் பதியவில்லை சிறியவளுக்கு. 
“நேத்து எதுக்கு என்னை நீங்க அடிச்சீங்க?” ஆராதனாவும் ஆர்வமோடு மெல்லிய குரலில் உரையாடலைத் தொடங்கினாள். 
“ம்ம், அதுக்கு முதல் நாள் நீ என்னை அடிச்சில..” 
“ஹோ..அப்போ சரி, நான் இப்போ பேசிட்டேன்ல..”
“அப்போ நானும் பேசுவேன்”
“ஸ்கூல்ல வந்தும் பேசணும்”
“அதான் பேசுவேன்னு சொன்னேன்ல சும்மா கேட்டதையே கேட்குற லூசு!”
ஆரா சிரிக்க, “ஈ.வி.ஸ்ல சன்பிளவர் ட்ராயிக் வரைத்துட்டியா? எனக்கு என் சித்தா வரைந்து கொடுத்தாங்களே” என்னும் போதே, குளியலறையிலிருந்து வந்தான் விஜய்.  
“யாருக்கிட்ட பேசிக்கிட்டு இருக்கீங்க ஸ்ரீகுட்டி..” என்றபடி அலைபேசி அவளிடமிருந்து வாங்க, “என் ஃப்ரண்ட் சித்தா..” என்றவள் பாட்டி டிஃபன் சாப்பிட அழைக்கவும் ஓடிவிட்டாள் சிறுமி. 
“ஹெலோ…” என்ற விஜயின் குரலுக்கு பதிலிருந்து மறுபுறம் சிரிப்பு சத்தம் மட்டுமே கேட்க, ஒரு நொடி மௌனமாய் நின்றான். 
“நான் ஆராதனா..”
“ஹோ, சொல்லு..”
“கிளம்பிட்டீங்களா…?”
இவ எதுக்கு இதெல்லாம் விசாரிக்கிறாள் எனத் தோன்றிய போதும், “ம்ம்..” என பதிலளித்தான்.
“நானும் கிளம்பிட்டேன், பார்க்கிங்ல வெய்ட் பண்றேன் வாங்க..”
“எதுக்கு..?”
“என்ன விஜய் அதுக்குள்ள மறந்துட்டீங்களா? தர்ஷினியை சமாதானம் செய்யணுமே, நம்ம ஆப்பரேஷன் ஸ்டார்ட், பிரமாதமான பிளானோட வரேன்..”
“ஹாஹா..” அவள் சிறுபிள்ளைத் தனத்தில் அவனால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. 
அதற்குள் மீண்டும் அறைக்குள் ஓடிவந்த ஸ்ரீநிதி, “என்ன சித்தா..இன்னும் ட்ரெஸ் பண்ணாம அப்படியே போஸ் கொடுத்துட்டு நிக்கிற? லேட்டாகுது சித்தா..” எனக் கத்தினாள். 
சட்டென அவன் சிரிப்பு நின்றுவிட, ஆராதனா சிரிக்கத் தொடங்க அழைப்பைக் கட் செய்தான். தன்னை பற்றி என்ன நினைத்திருப்பாள்? எனத் தோன்ற இதழில் பூத்த மெல்லிய புன்னகையோடு நெற்றியில் அறைந்து கொண்டான். 

Advertisement