Advertisement

“அதுங்க, இரண்டு பேரும் விரும்புனது உண்மை தான். நீங்க சம்பந்தம் வேண்டாம்னு சொன்னதால எங்க அண்ணனுக்கு பிடிக்கலை அதனால காதல் வேண்டாம்னு இவன் சொல்ல, அவளும் போடான்னு கோபப்பட்டு கத்திட்டு போயிட்டா. பெண் பாவம் பொல்லாதது சும்மா விடுமா? அதான் இப்போ இவன் தவிக்கிறான்” என அசராது வெடியைக் கொளுத்திப் போட்டாள். 
ரவி அதிர்ந்தே விட்டான்! விஜய் ஒரு பெண்ணை ஏமாற்றியிருப்பான் என்பதை நம்பமுடியவில்லை. அதையும் விட, தன்னால் தான் என்பது நெஞ்சில் நெருஞ்சியாகக் குத்தியது. 
இவ்வாறு நிகழ்ந்துவிடக் கூடாது என்ற முன் எச்சரிக்கை உணர்விலும் பயத்திலும் தான் விஜய் ஆரம்பத்தில் அவள் காதலை ஏற்காது அவளைத் தள்ளி நிறுத்தியிருந்தான். 
“அந்த பொண்ணு வீட்டுல பேச முடியுமா? நாம வேண்டாம்னு சொன்னதை அவங்க வீட்டுல சொல்லிட்டாளா? அங்க நிலவரம் என்னன்னு சுபத்ராகிட்ட கேளேன்” என கௌஷிகாவைச் சுரண்டினான். 
“வேண்டாம்னு சொல்லுறது மட்டும் நீங்க, வேணும்னு கேட்கிறது மட்டும் நானா? நல்ல கதையா இருக்கே?” என மிஞ்சினாள். 
“ப்ளீஸ் கௌஷிம்மா..” அவன் கொஞ்ச, “உங்க தம்பிக்காக தானே, உங்க தங்கச்சிகிட்ட தானே நீங்களே பேசுங்க..” எனக் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டாள். 
உடன் பிறந்தவன் கண்முன்னே உருகிக் கரைவதை, அவனால் காணச் சகிக்கமுடியவில்லை. தவறு செய்தது நான் தானே சரி செய்ய வேண்டியதும் என் பொறுப்பு. 
ரவிக்கு எதையுமே யாரிடமும் கேட்டுப் பழக்கமில்லை. அதுவும் சுபத்ராவிடம் கேட்பதில், வேண்டாம் என்று மறுத்ததை மீண்டும் கேட்பதில் பெரும் தயக்கம். ஆனாலும் விஜயரூபனுக்காக முயன்றான். 
உடனே சுபத்ராவிற்கு அழைத்தான், வெகு நாட்களுக்குப் பின் அவன் அலைபேசியிலிருந்து அவளுக்கு சென்ற அழைப்பு. பவானி அடிக்கடி ரவி, விஜயின் அலைபேசியிலிருந்து பேசுவார் ஆகையாலே அன்னை என்ற எதிர்பார்ப்பிலே அட்டென் செய்தாள் சுபத்ரா. 
.பொதுவான நலம் விசாரிப்பிற்குப் பின், “சுபத்ரா நீயொரு சம்பந்தம் சொன்னீயே, அது.. அவங்க வீட்டுல வேண்டாம்னு சொல்லிட்டீயா?” எனத் தயக்கமாகக் கேட்டான். 
“இல்லை அண்ணா, முதல்ல நம்ம வீட்டுல கேட்டுட்டு பேசலாம்னு அவர் சொன்னதால தான் உங்க கிட்டக் கேட்டேன். நீங்க வேண்டாம்னு சொல்லிட்டதால அவங்க வீட்டுல பேசவேயில்லை. அவங்களுக்கு இது பத்தி தெரியாது” என்றவள் விளக்க, ரவி ஆசுவாசமானான். 
“சரிம்மா இப்போ அந்த பொண்ணுக்கு வேற எங்கும் நிச்சியம் பண்ணிட்டாங்களா?” சந்தேகமாக் கேட்க, “இல்லை ரவி..” என்றாள். 
“நல்லது, அப்போ விஜய்க்கு பெண் கேட்கலாமா?”
“விஜய்க்கு சம்மதம்னா சொல்லு, நான் அவர்கிட்ட சொல்லுறேன்..” என்க, அவனும் சரியென்றான். 
சில மாதங்களாக வீட்டில் பெண் பார்ப்பது பற்றிய பேச்சுகள் இருந்த போதும் யாரும் ஆராதனா என்ற பெயரை சொல்லாததால் விஜயரூபன் அறிந்திருக்கவில்லை. இதில் ரவியும் தெளிவில்லாது, “சுபத்ரா சொல்லிய பெண்ணை, பெண் பார்க்கச் சொல்வோமா? உனக்குச் சம்மதமா?” என்று தான் கேட்டான். 
அவன் திருமண பேச்சே இப்போது வேண்டாமென மொத்தமாக மறுத்துவிட, அந்த பெண்ணின் மீதிருந்த மனஸ்தாபத்தில் தான் மறுக்கிறான் என நினைத்தான் ரவி. அதை கௌஷிகா சுபத்ராவிடம் தெரிவித்திருக்க, ஆராவை மீண்டும் மறுத்ததில் விஜயின் மீது கோபத்தில் இருந்தாள் சுபத்ரா. 
இது எதையும் அறியாது ஆராதனாவைப் பார்க்க வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும், சமரசம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அக்கா வீட்டிற்கு வந்தான். உள்ளே வரும் போதே, வழக்கம் போல் எதிர்வீட்டின் மீது ஒரு பார்வை தான். 
எவ்வளவு கோபமா இருக்காளோ தெரியாது, எவ்வளவு அடிச்சாலும் வலிக்காத மாதிரி வாங்கிக்கணும், கால்ல விழுந்தோ கட்டிபிடிச்சோ சமாதானம் செய்துட்டு தான் இந்த ஏரியாவ விட்டு செல்லணும் என்ற முடிவோடு வந்தான். 
விஜய் ஆராதனாவின் சினத்தை எதிர்பார்த்து வர, சுபத்ரா தான் கோபத்தோடு எதிர்கொண்டாள். உள்ளே வந்தவனை வரவேற்றவளின் கோப முகத்தைப் புரியாது பார்த்தான். 
சித்ராவும் ஜெய்பிரகாஷும் ஹாலில் அமர்ந்திருக்க, அதனால் வார்த்தையை விடாது அவள் மௌனம் காக்க, நலம் விசாரித்த விஜய் இருவரோடும் பேசிக் கொண்டிருந்தான். 
“மிதுன் எங்க?” 
“மாடியில விளையாடுறான்..” என்றார் ஜெய்பிரகாஷ். 
“என்ன விஷயம் விஜய் இவ்வளவு தூரம்?” என அவர் கேட்க, 
“வேறென்ன ஃப்ரண்டை பார்க்க வந்திருப்பான்…” சட்டென உரைத்தாள் சுபத்ரா.  
“இப்போ எல்லாம் அடிக்கடி ஃப்ரண்டை பார்க்க வர மாதிரி தெரியுது?” என ஜெய்பிரகாஷ் அவனைப் பார்த்தபடி கேட்க, அவர் பார்வையில் படபடத்தவன், “இல்லை, அக்காவை பார்க்கத் தான் வந்தேன்” என்றான் வேகமாக. 
அவன் விருப்பத்தை அனைவரிடமும் வெளிப்படுத்துவதில் தயக்கமில்லை, ஆனால் அதற்கு முன் ஆராவை சமாதானம் செய்திட வேண்டுமே! அதற்காக அமைதியாக இருந்தான். 
என் மேல அவ்வளவு பாசமா? என நினைத்து சுபத்ரா வியந்து பார்க்க, “ஏன் அக்கா இப்போ எல்லாம் வீட்டுக்கே வரதில்லை?” என உரிமையாகக் கேட்டான்.
“ம்ம், இந்த வாரம் வரலாம்னு நினைச்சேன், நீயே வந்துட்ட..!” என்றபடி அவனை உபசரித்த சுபத்ரா, மாமியார் எழுந்து செல்லவும் அவன் அருகில் வந்து அமர்ந்தாள். 
“என்ன தான்டா உன் எதிர்பார்ப்பு? கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இருக்கா? இல்லை சந்நியாசம் போறீய?” என முன்னுரை, விளக்கவுரை எதுவுமின்றி அவனை எரித்தாள். 
அவள் சினம் எதற்கென்று தெரியாது அவன் திரு திருவென முழிக்க, “சுபத்ரா அமைதியா பேசும்மா..” என ஜெய்பிரகாஷ் அமைதிப்படுத்த முயன்றார்.
“இல்லைங்க ரொம்ப ஓவரா பண்றான் இவன், அப்படி என்ன இவனுக்கு மனசுல பெரிய மன்மதன்னு நினைப்பா? பெரிய இவன்..! ஆரா எவ்வளவு நல்ல பொண்ணு வேண்டாம்னு சொல்லிட்டானே” என ஆற்றாமையில் பொங்கினாள். 
அதுவரையிலும் புரியாது இருந்தவன், ஆராவின் பெயரில் அதிர்ந்தான். அத்தனையும் அக்காவிடம் சொல்லிவிட்டாளோ என்ற சந்தேகம் வேறு தோன்றியது. 
“அக்கா என்ன உளறுற நீ..?”
“எது? நியாயம் கேட்டா உனக்கு உளறலா தெரியுதா? அப்படி என்னடா நான் உங்களுக்கு வேண்டாம போயிட்டேன்? நான் சொன்னேன் என்கிற காரணத்துக்காகவே முதல்ல ரவி ஆராவை மறுத்தான், இப்போ நீயுமா? அப்படி என்னடா அந்த பொண்ணு உனக்கு இளக்காரமா தெரியுது? அதுவும் அண்ணனே சரின்னு சொன்ன பிறகும் உனக்கு பிடிக்கலையாக்கும்?” என்னும் போதே, “சுபத்ரா..ஷ்ஷ்..” என ஜெய்பிரகாஷின் குரலை அவன் கண்டுகொள்ளவே இல்லை. 
சரியாக அதே நேரம் தான் குழந்தைகளோடு மாடியிலிருந்து கீழ் இறங்கினாள் ஆராதனா. விஜயும், சுபத்ராவும் அமர்ந்திருந்த சோஃபாவிற்கு பின் புறம் என்பதால் அவர்கள் கவனித்திருக்கவில்லை ஆனால் எதிரே இருந்த ஜெய்பிரகாஷ் பார்த்திருந்தார். 
தன் வீட்டிற்குள் அவள் பற்றிய பேச்சுகளை, அவளே கேட்கும் படி பேசுவது நாகரிகமன்று என நினைத்த ஜெய்பிரகாஷ் சுபத்ராவை அமைதிப்படுத்த முயன்றார். ஆனால் இன்றேனோ வழக்கத்தை விடவும் சுபத்ரா கோபத்தில் அதிகம் பேசியிருக்க, ஆராதனாவும் இறங்கி வருகையிலே அதை கேட்டிருந்தாள். 
அப்போது தான் விஜய்க்கு ஏதோ புரிவது போல் இருக்க, சந்தோஷ குமிழிகள் நெஞ்சில் குழுமத் துள்ளலோடு எழுந்தான். எழுந்த பின்னே அங்கு நிற்கும் ஆராதனாவைக் கண்டு அதிர, அவளோ ஒரு பார்வைக்குக் கூட அங்கு நில்லாது வெளிவாசலை நோக்கிச் சென்றுவிட்டாள். 
மின்னல் ஒளியில் நொடியில் ஜொலித்து மறைந்த கரு வானம் போலானது விஜயின் முகம். 
அவள் செல்கையிலே கவனித்த சுபத்ரா, “இவ எப்போங்க வந்தா?” என ஜெய்பிரகாஷிடம் கேட்க, “இரண்டு மணிநேரமா பிள்ளைகளோட தான் மேல விளையாண்டுகிட்டு இருந்தா” என்றார் அவர். 
“எனக்கு தெரியாதுங்களே..! நான் பேசுனதைக் கேட்டிருப்பாளா?” அவள் கைகளைப் பிசைய, விஜய்க்கு சுவரில் முட்டிக் கொள்ளலாம் போல் இருந்தது. ஏற்கனவே அவள் என் மேல கோபத்துல இருக்க, இதுல இவங்க வேற கொளுத்திப் போட்டுடாங்களே என நொந்தான். 
“அக்கா நீங்க சொன்ன பொண்ணு, இந்த ஆரா தானா?” என தன் புரிதலைத் தெளிவுபடுத்திக் கொள்ள கேட்க, “அதான் வேண்டாம்னு சொல்லிட்டியே இப்போ என்ன கேள்வி?” எனச் சிலுப்பினாள். 
ஐயோ..போச்சா..! என நெஞ்சில் அடித்துக் கொள்ளும் நிலையிலிருந்தான்.
“சாரிக்கா, எங்கிட்ட யாருமே ஆரா தான்னு சொல்லையே..”
“சொன்னா மட்டும்.. நீ சரின்னா சொல்லப் போற? போடா” 
“சரிக்கா எனக்கு சம்மதம், அவங்க வீட்டுல பேசுங்கக்கா..” என இறங்கிய குரலில் வேண்ட, “அதெல்லாம் முடியாது போ, இப்போ நீ சரின்னு சொல்லுவ ரவி வேண்டாம்னு சொல்லுவான், அவன் சரின்னு சொன்னா நீ வேண்டாம்னு சொல்லுவ, என்னால உங்களோட போராட முடியாதுப்பா..” என்றவள் மீண்டும் சோஃபாவில் அமர்ந்தாள்.
இனி இவளிடம் பேசி வேலையாகாது என்பது புரிய ஜெய்பிரகாஷிடம் திரும்பினான். 
அவள் தனக்கென தேர்வு செய்த பெண்ணைப் பற்றியே அனைவரும் பேசுகின்றனர் என நினைத்திருந்தவனுக்கு அவன் காதல் விவகாரம் தெரியும் என்பது தெரியாது. 
“ஹெல்ப் பண்ணுங்க மாமா, அவங்க வீட்டுல பேசுங்க, பொண்ணு கேளுங்க மாமா” எனக் கேட்டான். 
ஆராதனா மட்டுமே நினைவில் இருக்க, ஜெய்பிரகாஷ் மீதிருந்த மனக்கசப்புகள் எதுவும் நினைவில் இல்லை. ஈகோ பாராது வார்த்தைக்கு வார்த்தை மாமா என உரிமையோடு கேட்டான். 
உதவி என்பதையும் அதிகாரம் போல் அவன் கேட்க, சுபத்ராவின் முகம் பார்த்துத் திரும்பியவர் நிறைந்த புன்னகையொன்றை உதிர்த்தார்.  
“எப்போவோ முடிய வேண்டிய கல்யாணம் உன் உடன்பிறப்புகள் செய்த சொதப்பல் இவ்வளவு லேட்டாகிடுச்சு” என கேலி பேச, சுபத்ரா முறைத்தாள். 
“என்ன செய்ய? உங்களை மாதிரி தெளிவா பேசுற ஆளே இல்லையே மாமா” எனப் பெருமை கூற, அவனையும் முறைத்த சுபத்ரா, “என்னடா புதுக் கூட்டணியா?” என்றாள் மிரட்டலாக. 
சட்டென அருகில் நின்ற விஜயின் தோளில் கரம் போட்டவர், “ம்ம், எப்படியிருக்கு எங்க கூட்டணி?” என மனைவியைப் பார்த்துக் கண்சிமிட்டிக் கேட்க, அவளோ முகத்தை சுளித்துவிட்டுச் சென்றாள்.
சுபத்ரா, ஜெய்பிரகாஷிடம் பேசி, ரவியிடம் பேசி, ஆராதனா வீட்டில் பேச வைத்து என நொந்து போனான் விஜய். இதை விடவும் காத்திருக்கும் பெரிய சோதனை ஆராதனாவைச் சமாதானம் செய்வதும் சம்மதிக்க வைப்பதுமே என நினைத்தான். 
ரவிக்கு செய்ய தவறிய கடமைகள் நெஞ்சில் சிறு பாரமாய் அழுத்த, அதானலே சுபத்ராவையும் அவ்வப்போது குத்திக்காட்டிப் பேசுவதாகவும் நினைத்தார் ஜெய்பிரகாஷ். 
அதை விஜய்க்கு செய்து சரி செய்தார். அதை விடவும் சுபத்ராவிற்கும் அவருக்கும் மனம் நிறைந்த உணர்வு.
ஜெய்பிரகாஷ் கேட்டதால் ஆராதனாவின் தந்தை விஸ்வநாதன் பெண்பார்க்க வரச் சொல்லியிருந்தார். சுபத்ராவின் தம்பி எனும் போது அவன் நற்பண்புகளில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. அதனால் அவர் பெண்ணிற்கு இஷ்டமெனில் மேலே பேசிக் கொள்ளாலாம் என்றிருந்தார். 
அவள் வேண்டும் என்றால் இவர்கள் மறுக்கப் போவதில்லை, அவள் வேண்டாமென்றால் அவள் வற்புறுத்தப் போவதுமில்லை. அனைத்தும் ஆராவின் விரும்பம் தான். 

Advertisement