Advertisement

அத்தியாயம் 18
நள்ளிரவை நெருங்கும் நேரம், விஜய் இன்னும் வீடு வரவில்லை. விஜய் வரத் தாமதமாகும் எனச் சொல்லி விட்டதால் பவானியும் ஸ்ரீயும் உறங்கியிருந்தனர். கௌஷிகா வாசலை வெறித்தபடி ஹாலில் அமர்ந்திருந்தாள். 
ரவி பல முறை முயன்று பார்த்தும் அழைப்புகள் ஏற்கப்படவில்லை. பொறுப்பற்றவன் இல்லை வந்துவிடுவான் தான், இருந்தாலும் சிறு பயம். இன்று தான் ஆராவோடு சண்டையிடுவதை அவனும் பார்த்திருந்தானே! 
அவர்கள் என்ன பேசினார்கள் என்பது புரியவில்லை எனினும் கருத்துவேறுபாடு, வாங்குவாதம் என்பது அவர்களைப் பார்க்கும் போதே ரவிக்கு புரிந்தது. அறையிலிருந்து ஹாலுக்கு வந்தவன் கௌஷிகாவின் முன் சென்று நின்றான். 
நிமிர்ந்து பார்த்தவள் எதுவும் பேசவில்லை, அவள் அருகில் அமர்ந்தவன் கைகளைப் பற்றிக் கொண்டு, “விஜய் இன்னைக்கு பேசிக்கிட்டு இருந்தானே, அந்த பொண்ணு..அது, அவங்களுக்குள்ள என்னன்னு தெரியுமா? இது பத்தி எதுவும் விஜய் உங்ககிட்ட சொல்லி இருக்கானா?” என்றான். 
மறுப்பாகத் தலையசைத்தவள் மௌனமாகவே இருக்க, “விஜய் விஷயத்துல நான் ஏதோ தப்புப் பண்ணிட்டேன்னு தோனுது கௌஷி, என்னன்னு தெரியலை” குரலில் ஒரு பரிதவிப்பு. 
அமைதியாக கைகளை உருவியவள் அலைபேசியை எடுத்து அவன் முன் நீட்டினாள். வாங்கிப் பார்க்க, சுபத்ராவிடமிருந்து வந்திருந்த ஆராதனாவின் புகைப்படம். மாலையில் விஜய் பேசிக் கொண்டிருந்ததும் இவளிடம் தான் என்பதும் புரிந்தது. 
“நான் தப்புப் பண்ணிட்டேனோ கௌஷி?” என்றான் ஏக்கமாக. 
“தெரியலை, விஜய்கிட்ட தான் கேட்கணும்” 
“இது..எப்படி இந்த பொண்ணு போட்டோ?” 
“சுபத்ரா அண்ணி விஜய்காகப் பார்த்த வது… இந்த சம்பந்தம் தான் நீங்க வேண்டாம்னு சொன்னது” 
“தப்பு பண்ணிட்டேன்..” இம்முறை உறுதியாக ஒலித்தது அவன் குரல். 
அவள் ஒன்றுமே சொல்லவில்லை. “சுபத்ரா கொண்டு வந்த சம்பந்தம்கிற ஒரே காரணத்துக்காக மறுத்தேனே தவிர இவங்க ரிலேஷன்ஷிப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது கௌஷி” என்றான். 
“ஏன்? விஜய்க்கு பெண் பார்க்கும் உரிமை அண்ணிக்கு இல்லையா?” 
ரவி அமைதியாக இருக்க, “இல்லை, நீங்க அந்த உரிமையை கொடுக்க விரும்பலை அதானே?” என்றாள். அது தான் உண்மையும் கூட அவன் மறுக்கவுமில்லை. 
“இதென்னங்க நியாயம்? விஜய் மேல அவங்களுக்கும் உரிமை இருக்கு தானே..”
“இருக்கு கௌஷி, ஆனால் அதை விட்டுக்கொடுத்திட எனக்கு மனசில்லை. சுபத்ரா கூட போட்டி, இந்த மனப்பான்மை எப்படி வந்ததுன்னு தெரியலை. விஜயை வளர்த்தது, படிக்க வைச்சது, சைக்கிள், பைக்ன்னு ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து செய்தது நான் தானே? பொண்ணு மட்டும் சுபத்ரா பார்த்த கொடுக்கணுமா? அவனுக்கு எதுனாலும் நான் செய்யணும்னு பிடிவாதம்”
“இது தப்பில்லையா..”
“ம்ம், நான் உங்க அப்பாவை பார்க்க வந்த அன்னைக்கு உன்னைத் தான் முதல்ல பார்த்தேன். பார்த்ததுமே பிடிச்சிருச்சி உங்க அப்பா என்ன கண்டிஷன் போட்டாலும் தலையாட்டி உன்னை எப்படியும் கட்டிக்கிடணும் உறுதியா இருந்தேன். 
மற்றபடி உன் அநாதரவான நிலைய பார்த்து ஏத்துக்கிடலை, அது உன்னோட தவறான புரிதல் கௌஷி. ஏன் எங்கம்மாகிட்டையே கூட அம்மா இல்லாத பொண்ணு அந்த ஏக்கம் வராத அளவுக்கு நல்ல பார்த்துக்கணும்மான்னு தான் சொல்லி வைத்திருந்தேன். இங்க எல்லாருக்கும் உன்னை பிடிக்கும் கௌஷி” என்க, அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். 
அவன் சொல்லாவிடினும் இவை அனைத்தும் தெரியும் தான், ஆனால் சொல்லிக் கேட்கையில் ஒரு ஆனந்தம்! 
“அதுனால தான் எங்கம்மா சின்ன மருமகளும் உன்னை மாதிரி அமையணும்னு சொன்னாங்க. நான் தான் எங்கம்மா எப்போவோ சொல்லி வைத்த வார்த்தைகளை சுபத்ரா பார்த்த பொண்ணை தவிர்க்கிறதுக்கு எல்லார் முன்னாடியும் யூஸ் பண்ணிக்கிட்டேன். அந்த பொண்ணைப் பத்தி எதுவுமே தெரியாம, விசாரிக்காம தவிர்த்தது தப்பு தான். விஜய்க்கு பிடிக்கும்னு எனக்குத் தெரியாது, தெரிஞ்சிருந்தா நான் மறுத்திருக்க மாட்டேன்” 
“இப்போ தான் தெரிஞ்சிட்டே, மறுக்க மாட்டீங்க தானே..?” எதிர்பார்ப்போடு கேட்க, மேலும் இறுக்கமாக அணைத்தவன், இல்லை எனத் தலையசைத்தான். 
“இன்னைக்கு உங்கிட்ட பேசணும்னு சொன்னது இதுக்கு தான், சுபத்ரா பார்த்த பொண்ணை ஏத்துகிட்டா நீ சமாதானமாகிடுவியோன்னு எதிர்பார்த்த்தேன். இப்போ விஜய்க்கும் பிடிக்கும்னு சொல்லும் போது இனி மறுக்க என்ன இருக்கு?” என்க, அவன் நெஞ்சில் சுகமாக சாய்ந்தாள். 
விஜயின் பைக் சத்தம் கேட்க, இருவரும் சட்டென விலகினர். வாடிய தோற்றத்தோடு உள்ளே வந்த விஜய், அமைதியாக அறை நோக்கிச் சென்றான். 
“வந்ததே லேட், சாப்பிட்டாம வேற போற?” எனக் கண்டிப்போடு கௌஷி அழைக்க, “வேண்டாம் சாப்பிட்டேன் அண்ணி” என தன் அறைக்குள் சென்றுவிட்டான். 
ரவி முன் வாசல் கதவை மூடிவிட்டு அவன் அறைக்குச் செல்ல, கௌஷி தட்டில் இரண்டு இட்லியை எடுத்துக்கொண்டு விஜயின் அறைக்குச் சென்றாள். 
அவன் உண்ண மறுக்க, அவள் விடுவதாயில்லை. கௌஷியின் அடம் அறிந்தவன் போராடும் எண்ணமில்லாது அமைதியாக வாங்கி உண்டான். 
“எதுவும் பிரச்சனையா விஜய்..?” இந்த ஒரு கேள்வியையே வேறுவேறு விதங்களில் கேட்டுப் பார்த்தும் அவன் சொல்லவில்லை, அவளும் சென்றுவிட்டான். 
ஆரோவோடு பிரச்சனை எனத் தெரியும், ஆனால் என்ன பிரச்சனை என்று தான் தெரியாது. சந்திக்க மறுத்தவளை நாம் தானே அனுப்பி வைத்தோம் என்ற எண்ணம்! ரவியும் மாலையிலிருந்து அவளுடனே இருப்பதால் ஆராவிடமும் பேச முடியவில்லை. சுபத்ராவை ஆராவிடம் விசாரிக்கும் படி மெசேஜ் செய்துவிட்டு உறங்கச் சென்றாள். 
மறுநாள் சுபத்ரா ஆராவை பார்க்க அவள் வீட்டிற்கு வந்திருந்தாள். அறையில் இருப்பதாக அவள் அன்னை தெரிவிக்க, கௌஷிகாவை அலைபேசியில் அழைத்தபடி அவள் அறைக்குள் சென்றாள். 
கட்டிலில் சோர்ந்து படுத்திருந்தவளின் அருகே சென்று, அமர, “சுபத்ராக்கா..” எனத் தலைமுடிகளை கோதியபடி சோர்வாக எழுந்தாள் ஆராதனா. 
நேற்று எல்லாம் அழுதிருப்பாள் போலும், முகமே சற்று சிவந்து உப்பி இருக்க, பரிவாக அவள் தலை தடவினாள் சுபத்ரா. அதற்குள் கௌஷி அழைப்பை ஏற்றிருக்க, “அண்ணி, அவளை பார்த்தீங்களா எப்படியிருக்கா?” என விசாரித்தாள். 
“அவ ரூம்ல தான் இருக்கேன் கௌஷி, நீயே கேளு” என்றபடி ஸ்பீக்கர் மோடில் போட்டு கீழே வைத்தாள். 
“ஆரா என்ன தான் நேத்து உங்களுக்குள்ள பிரச்சனை?”
“அப்படி எதுவுமில்லை, கௌஷிக்கா..” என அவள் தவிர்க்கப் பார்க்க, “நானும் பார்த்தேனே..! ஏதோ சண்டை போட்டுக்கிட மாதிரி தெரிந்தது, இங்க விஜயும் சரியில்லை” என்றாள். 
“என் தம்பிக்கு என்ன..?” சுபத்ரா பதறியபடி கேட்க, “ஆமாம் தம்பி, தகரக் கம்பி…க்கும்..” என சிலுப்பிக் கொண்டாள் ஆரா. விஜய் என்ற பெயரிலே ஆக்ரோஷம் பற்றிக் கொண்டு வந்தது ஆராவிற்கு. 
“நீங்க இரண்டுபேரும் இனி எங்கிட்ட பேச வேண்டாம் அக்கா..” என ரோஷமாக உரைக்க, “என்னாச்சு ஆரா..?” எனப் பதட்டமாகக் கேட்டாள் கௌஷி. 
“ம்ம், நீங்க அவரோட அக்கா, அண்ணி தானே, அவருக்காகத் தான் பேசுவீங்க. அவரும் தேவையில்லை, அவருக்காக வர உறவும் தேவையில்லை”  
“அடியே தலையுமில்லாம, வாலுமில்லாம என்ன உளறல் இது? முதல்ல என்ன நடந்ததுன்னு தெளிவா சொல்லு” என சுபத்ரா கண்டிப்போடு கேட்க, மூக்கு விடைக்க முறைத்தபடியே அனைத்தையும் உரைத்தாள். 
இத்தனைக்கும் இடையில் அவன் எப்படி என்னை அப்படி கேட்கலாம் என்ற கேள்வியை ஆற்றாமையில் அடிக்கடிக் கேட்க, சுபத்ரா தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள். 
“சரி தானே, நான் சொன்ன மாதிரி தான் நடந்து இருக்கு, விஜய் அவன் காதலை வெளிப்படுத்திட்டான். உனக்கு கல்யாணம்னு தப்பா புரிஞ்சிகிட்டாலும் அவனால அதை தாங்க முடியலை தான் அப்படி ரியாக்ட் பண்ணியிருக்கான்..” என கௌஷி ஆராய்ந்து உரைக்க, ஆராதனா அதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. 
“மண்ணாங்கட்டி, நான் வேற ஒருத்தனை கல்யாணாம் பண்ணிப்பேன்னு எப்படி அவன் நினைக்கலாம்? அப்போ என் காதல் மேல அவனுக்கு நம்பிக்கையில்லை தானே? அப்போ எனக்கும் அதை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை” என்றாள் வீம்பாக. 
இவ்வளவு தானா உன் காதல் என அவன் கேட்ட கேள்வி ஆறாத காயமானது ஆராவின் நெஞ்சில்.  
“ரைட்டு, இதே கோபத்தை குறையாம வைச்சிக்கோ, மத்ததை நாங்க பார்த்துக்கிறோம்” என கௌஷி உரைக்க, “நீ அமைதியா இருந்தா மட்டும் போதும்..” என்ற சுபத்ரா விடைப் பெற்று எழுந்து வந்தாள். 
“போங்க, இனி அவனுக்காக நான் எதுவும் செய்யுறதா இல்லை, அவன் ஒன்னும் எனக்கு தேவையுமில்லை” என சிலுத்துக் கொண்டாள். 
அவளை இப்போதைக்கு சரிக்கட்ட முடியாது என இருவரும் உணர்ந்திருந்தனர். 
“ஏன் தான் இதுங்க இப்படி இருக்காங்களோ..?” சுபத்ரா நொந்து கொள்ள, “இவனுக்கு மட்டும் எதுக்கு இப்படி மூக்குக்கு மேல கோபம் வருது, இன்விட்டேஷனை பார்க்கம, சரியா புரிஞ்சிக்காம சொதப்பிட்டு வந்திருக்கானே..” எனப் புலம்பினாள் கௌஷிகா. 
“இப்போ என்ன செய்யுறது கௌஷி..?” சுபத்ரா கேட்க, “இதுங்க இப்படியே இருக்கட்டும் அண்ணி, நம்ம வேலையைப் பார்ப்போம். நான் ஆல்ரெடி ரவி கூப்பிட்டுப் போய் காட்டி, அவரை குழம்பி விட்டுறேக்கேன் அண்ணி..” என்றாள். 
“என்ன ரவிக்கு தெரியுமா..?” சுபத்ரா அதிர, “பதறாதீங்க அண்ணி, ஒரு வாரத்துக்குள்ள எப்படியும் அவரே உங்ககிட்ட பேசுவார். பொறுத்திருந்து பாருங்க” என்றாள் ஆறுதலாக. 
“என்ன சொல்லியிருக்க கௌஷி..” என மேலும் பதற, “உங்களைப் பத்தி இல்லை அண்ணி, அவங்க கல்யாணம் பத்தி பேசுவாரா இருக்கும்” என்றாள். 
“என்னவோ கௌஷி, கல்யாணம் செய்து வைக்கிறது தான் நம்ம பொறுப்பு, அதுக்கு மேல அடிச்சிக்கிடுறதும், பிடிச்சிகிறதும் அவங்க பிரச்சனை” 
“ஆமாங்க அண்ணி, அவர் பேசுனா அடுத்து நீங்க மூவ் பண்ணுங்க” என்க, சரியென அழைப்பைத் துண்டித்தாள் சுபத்ரா. 
ஆரா இவர்களோடு பேசுவதையே தவிர்த்தாள், அப்படியே பேசினாலும் விஜயை பற்றிப் பேச மறுத்தாள். விஜயரூபனும் கண்ணீர் சொட்டும் சோக கீதமாக முகத்தை வைத்திருந்தான். 
“நேத்து நல்லாயிருந்த இன்னைக்கு டல்லா இருக்க? இப்படி நொடிக்கு நொடி அந்நியனா மாறிடுறீயே, எப்படி மச்சி?” என அகிலும் கேலியாக் கேட்டுப் பார்த்தான். கௌஷிகாவும் கவனித்தாள் தான் ஆனால் கொஞ்ச நாளாவது படட்டும் என விட்டுவிட்டாள். 
சுபத்ராவிற்கு கவலை இருந்த போதும் எதுவும் செய்ய இயலாத நிலை. துறுதுறு பட்டாம்பூச்சியாகச் சுற்றி வந்த பெண்ணை வாட வைத்துவிட்டானே என விஜயின் மீது ஆதங்கம். 
தன் மீது ஒரு பெண் எல்லையில்லா நேசம் வைத்துள்ளாள், விடாது துரத்துகிறாள். தனக்காக எதுவும் செய்வாள், தன்னை எப்போதும் விட்டுவிட மாட்டாள் என்ற எண்ணம்! தனக்கு மட்டுமே அவள் என்ற உரிமை உணர்வு, தான் அவளால் நேசிக்கப்படுவதில் ஒரு கர்வம்! 
ஆனால் அவ்வாறு இல்லை என்பது போல் திருமண அழைப்பிதழோடு அவள் வந்திருக்க, அவன் நம்பிக்கையில் பெரிய அடி. அவன் கர்வம் உடைத்து அழிந்தது! அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை, நொடியும் யோசிக்கவுமில்லை தாமதிக்கவுமில்லை சட்டென வார்த்தைகளை விட்டுவிட்டான். 
என் தவறு தான், அதை நானே சரி செய்திட வேண்டும் என்ற உறுதியில் இருந்தான். இனி அவள் எத்தனை தூரம் சென்றாலும் அவன் விடுவதாயில்லை. எப்போதும் போலே அவன் அழைப்புகள் அவளால் ஏற்கப்படுவதில்லை. 
இதற்கிடையில் ரவி, “விஜய்க்கு என்ன பிரச்சனை எதுவும் சொன்னானா?” என கௌஷியிடம் கேட்க, அவனை ஏற இறங்க ஒரு பார்வைப் பார்த்தாள். 

Advertisement