Advertisement

அத்தியாயம் 16
ரவியிடம் தேவைக்கென சுருக்கமாக இருவார்த்தைகளில் பேசுவாள் அதுவும் பவானி, விஜய் முன் மட்டும் தான் தனிமையில் எனில் ஸ்ரீயிடம் தான் சொல்லிவிடுவாள். வாரத்திற்கு ஒன்று அல்லது இரு முறை தந்தையிடம் பேசுபவள் தற்போது அடிக்கடி பேசினாள். 
பேசும் போதெல்லாம் எப்போது வருவீர்கள் அப்பா? என அடிக்கடி கௌஷி கேட்க, எதார்த்தமாக அது ரவியின் காதுகளில் கேட்கையில் நொந்து போவான். 
கௌஷிகாவின் தந்தையும் இரண்டு மாதத்தில் வந்துவிடுவதாக உரைத்திருக்க, அவளுக்குத் தன்னை எவ்வாறு புரிய வைப்பது எனத் தெரியாது குழப்பத்தில் அமைதியாக இருந்தான் ரவி. ஆகையால் இருவருக்குள்ளும் மேலும் பிரச்சனைகள் வராமலிருந்தது. 
விடுமுறை நாள் என்பதால் ஹாலில் அமர்ந்து ஸ்ரீயோடு விளையாடினான் விஜய். அவளோடு கவனம் செலுத்த முடியாது போக, அலைபேசியை அவளிடம் கொடுத்துவிட்டு அவன் சிந்தனையில் அமர்ந்திருந்தான். 
அன்றைய நாளுக்கு பின் ஆராதனாவின் தரிசனம் விஜயரூபனுக்குக் கிடைக்கவில்லை. ஆனாலும் அவள் பெயர் அவனை சுற்றிக்கொண்டு தான் இருந்தது. தியா, அகில் என யாராவது அவளைப் பற்றிப் பேசிவிட, நினைவில் வந்து நிற்பாள். 
தியா அன்றே மருத்துவமனைக்குச் சென்று பார்த்து வந்திருக்க, தர்ஷினி அவள் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்து வந்திருந்தாள். அவளுக்கு என்னவோ என்ற பயத்தில் இருந்தவன் அப்போது தான் சற்றே ஆசுவாசமானான். அவன் கண்ணில் படுவதற்கு வாய்ப்பு இல்லாது வேலையும் விட்டுவிட்டாள். 
பத்தே நாட்கள் அவள் பக்கத்தில் இல்லாத போதும் படாப் படுத்தியிருந்தாள். ஏங்க வைத்திருந்தாள், மெலிய வைத்திருந்தாள், ஏனிந்த தவிப்பும் மாற்றமும் என யோசிக்கும் நிலைக்கு அவனை அழுத்தியிருந்தாள். 
யோசித்தால் அவளை பிடிக்கும்! அவள் அழகை ரசித்திருக்கிறான், அவள் குறும்புகளைக் கவனித்திருக்கிறான், அவள் வெற்றிகளில் மகிழ்ந்திருக்கிறான், அவள் பொறுப்புணர்வை பாராட்டியிருக்கிறான். 
அவனுக்காக எதையும் செய்யும் அவளைப் பிடிக்கும், அவள் மீது மையல் உண்டு, அவள் நலனின் அக்கறை உண்டு! ஆனால் இது தானா காதல்..? அவன் மனதிலும் கேள்வி தான் இருந்தது. 
ஆனால் ஒன்று மட்டும் உண்மை, அவள் போலே எவளும் அவனை இவ்வளவு பாதித்ததில்லை. ஆம் அவள் இல்லாது அவனைச் சுற்றி என்னவோ குறைவது போன்ற வெறுமையைத் தோற்றுவிக்க, அது அவனை அழுத்தத்தில் அமுக்கியிருந்தது. என்னவோ சுவாசிக்கும் காற்றைக் கண்மூடி தேடும் உணர்வு! அவளிடம் மட்டும் தான் இளகியிருப்பது எதனால் எனத் தெரியவில்லை. 
இவை யாவையும் விட அவனை அதிகம் வருந்தச் செய்தது, அவனால் அவள் அடிபட்டது தான், அன்று தான் பேசியதும் அதிகப்படியாகத் தான் தோன்றியது. அந்த குற்றவுணர்வு தான் அவனையே உருக்கி, இதயத்தை அரித்துக் கொண்டிருந்தது. 
சிறுக சிறுக கொள்ளும் வலி கொடுமையானது. பீஷ்மர் கூட இறுதிநாட்களில் அம்புப் படுக்கையை விட குற்றவுணர்வில் தான் அதிகம் தவித்துக் கொண்டிருந்தார். குற்றவுணர்வைத் தவிர கொல்லும் வலிமையான ஆயுதம் எதுவுமில்லை! 
அந்த குற்றவுணர்வை தான் அவனுள் தந்து மறைந்திருந்தாள். ஒரு முறை அவளிடம் மன்னிப்பு வேண்டிவிட்டால் அனைத்தும் சரியாகி விடாதா என்ற ஏக்கத்தில், அதை முயற்சித்துப் பார்க்கும் முடிவிலிருந்தான். 
முடிவு செய்துவிட்டான், ஆனால் அவளை எங்கே சந்திப்பது? அக்காளின் வீட்டிற்குத் தான் செல்ல வேண்டும், என்னவென்று காரணம் கேட்டால் என்ன சொல்லுவது? அவன் யோசித்துக் கொண்டிருக்கையிலே அந்த நாள் கழிந்தது. 
வெளியில் சென்றிருந்த கௌஷி வெயிலில் வியர்க்க விறுவிறுக்க வீடு திரும்பினாள். அவளைக் கண்டதும் அலைபேசியை விடுத்து, “மம்மி, எனக்கு சாக்லேட்ஸ் வாங்கிட்டு வரேன்னு சொன்ன?” என அருகே வந்தாள் ஸ்ரீ. 
கௌஷி எடுத்துக் கொடுக்க, அதில் கவனம் கலைந்து திரும்பிய விஜய், “சண்டே அதுவுமா என்ன வேலை? அதுவும் வெயில்ல வெளிய போயிட்டு வந்திருக்க?” எனக் கடிந்தான். 
அதே நேரம் சமையலறையிலிருந்து குளிர்ந்த நீரோடு வந்த பவானி, “என்னம்மா அந்த பொண்ணு இப்போ எப்படியிருக்கு?” என்றார். 
“காப்பாத்திட்டாங்க அத்தை, உயிருக்கு ஆபத்தில்லை. ஆனால் நிறைய வலி, நிறைய இரத்தம்! கையில ஆறு தையல் போட்டு இருக்காங்க” 
“ஏன் அப்படி செய்துகிட்டா?”
“என்னனு சொல்ல, அந்த பொண்ணுக்கு எதுலையுமே பொறுமையில்லை. ஏதோ அவ சீனியர் பையனுக்கு ப்ரொபோஸ் பண்ணாலாம் அவன் பிடிக்கலைன்னு கொஞ்சம் ஹார்ஸா சொல்லிட்டான் போலே, வீட்டுக்கு வந்ததும் யாருமில்லாததால கைய கட் பண்ணிட்டா” 
“என்னவோ இந்த காலத்து பிள்ளைகளுக்கு எல்லா விஷயத்துலையும் அவசரமும் பிடிவாதமும் தான், சரி கௌஷி கை, கால் அழம்பிட்டு சாப்பிடவா..”
அதுவரை விஜயை ஓர விழியால் ஆராய்ந்த கௌஷி, “ஏன் அத்தை நான் வந்து சமைக்கிறேன்னு சொன்னேன்ல நீங்க ஏன் செய்தீங்க..?” என்றபடி பவானியோடு எழுந்து சென்றாள். 
“என் பிள்ளையும், உன் பிள்ளையும் பசி தாங்க மாட்டாங்களே அதான்..”
“என்னவோ, நீங்க தான் சொல்லிக்கிடுறீங்க, இப்போயெல்லாம் விஜய் சரியா சாப்பிட மாட்டிக்கான்” 
பவானி, கௌஷியின் உரையாடல்கள் எதுவும் விஜயின் செவிகளுக்குள் நுழையவில்லை. அவனுக்கு மனது திக்திக்கென அடித்துக் கொண்டிருந்தது. காதலை மறுத்ததிற்குக் கையை அறுப்பார்களா? ஆராவிற்கும் வலித்திருக்குமே! வலி போக்க என்ன செய்திருப்பாள்?
ஆராவாது அப்படி செய்வதாவது? அவளை மறுத்ததிற்கு உன்னை வேண்டுமெனில் கொலை செய்யலாம் என்றது அவளை அறிந்த அவன் அறிவு. இருந்தும் மனம் சமன்படவில்லை, பின் ஏன் என்னைத் தவிர்க்கிறாள்? நூற்றில் ஒரு பாங்காய் அவள் மனமுடைந்திருந்தால், ஆறுதல் என யாருமில்லாது இருந்திருந்தால்? இந்த எண்ணங்களே அவனை வதைத்தது. 
ஏற்கனவே அவளிடம் மன்னிப்பு வேண்டிவிடும் முடிவில் இருந்தவனை, கௌஷி வேறு பயமுறுத்திவிட, பொறுமை பறக்க, மாலை நேரம் சுபத்ராவின் வீட்டிற்குக் கிளம்பினான். 
பொதுவாக விடுமுறை நாட்களில் வீட்டை விட்டு அருகே இருக்கும் கடைக்குக் கூட செல்லா மாட்டான், என்றென்ன அதிசயமாக வெளியில் கிளம்புகிறான் என்ற சந்தேகம் தோன்றியது கௌஷிகாவிற்கு. இருந்தும் அவன் செல்லும் போது கேள்வி கேட்கக் கூடாதென அமைதியாகி விட்டாள். 
சுபத்ரா கொண்டுவந்த சம்பந்தத்தை ரவி வேண்டாமென்று சொல்லிய பின் அவள் வீட்டிற்கு வரவில்லை. ரவியின் பேச்சிற்கு மறு பேச்சில்லை ஆகையால் வீட்டில் யாரும் அது பற்றி பேசவில்லை. ஆகையால் விஜயரூபனும் அறிந்திருக்கவில்லை. 
ஆராவின் அலைபேசிக்குத் தொடர்ந்து முயன்றும் அழைப்புகள் ஏற்கப்படவில்லை. ஜெய்பிரகாஷும் வீட்டிலிருப்பாரே என்ற தயக்கமோடு சுபத்ராவின் வீட்டிற்குச் சென்றவன் உள்ளே செல்லும் முன்னே பத்து முறையாவது எதிர்வீட்டைப் பார்த்திருப்பான். அதிலும் அவள் பால்கனி ரோஜாக்கள் கூட அவனைக் காணாது முகத்தைத் திருப்பிக்கொள்ள ஏமாற்றமாக உள்ளே சென்றான். 
விஜயை பார்த்தவள் மலர்ந்த முகத்தோடு வரவேற்று நலம் விசாரிக்க, பதில் சொல்லியவன் அவள் நலம் விசாரித்தபடி, “எங்க அவர் வீட்டுல இல்லையா..?” என்றான். 
அவன் தோளில் ஒரு அடி வைத்தவள், “மாமான்னு சொல்லிப் பழகு, லஞ்ச்க்கு அப்பறம் கொஞ்ச நேரம் தூங்கினார், இப்போ எழுந்து வந்திடுவார்.. நீ வா உக்கார்…” என்றாள். 
தலையசைத்தவன் அமைதியாக அமர, “அவரை பார்க்கத் தான் வந்தியா..? என்ன விஷயம்..? வீட்டு வேலையெல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு?” என்றாள் சுபத்ரா. 
“ஐயோ இல்லக்கா, ஜெஸ்ட் பிரண்ட்ட பார்க்க வந்தேன் அப்படியே இங்கையும்…இல்லன்னா மாமா கோபித்துப்பார்ல அதான்..” என்றான். ஏற்கனவே பதிலை  யோசித்துத் தான் வந்திருந்தான்.  
அவனை ஒரு பார்வை பார்த்தவள், “சரி..தான்..” முனங்கலோடு டீ எடுத்துவரச் சமையலறை சென்றாள். அதே சோஃபாவின் மறுபுறம் அமர்ந்து ஏதோ ஆழ்ந்த நிலையில் வரைந்து கொண்டிருந்தான் மிதுன். 
மேசையில் சுபத்ராவின் அலைபேசியில் ஒரு இயற்கைக்காட்சி படம் இருக்க, அதைப் பார்த்து வரைந்து கொண்டிருந்தவனை சுற்றிலும் கலர் பேனாக்களும் பெஞ்சில்களும் காகிதங்களும் நிறைந்து கிடந்தது. அவன் வரைவதையும் சுற்றுப் புறத்தையும் பார்த்த விஜய், வாங்கி வந்த சாக்லேட்ஸ்ஸை அவனிடம் கொடுத்தபடி மேலும் நெருங்கி அமர்ந்தான். 
“ஏன்டா உனக்கு இன்னைக்கு எதுவும் கிளாஸ் இல்லை..?” எனக் கேட்க, “காரத்தே கிளாஸ் இருக்கே.. அப்பா எழுந்து வரவும் போகணும்..” என்றான். 
“ம்ம்..டேய்..என்னடா படம் இது? ஸ்ரீ பாப்பா கூட உன்னை விட நல்ல வரைவா…?” என்க, முகத்தை சுருக்கிக்கொண்டு விஜயை பார்த்தான் மிதுன். 
“சரி, சரி அழத, மாமா சொல்லுற மாதிரி வரை…” என்றவன் சில நிமிடங்கள் வழிகாட்ட அதன் படி வரைந்த மிதுனிடம், “டேய், கிரையான்ஸ்ல தான் கலர் பண்ணனும் அப்போ தான் பெர்பெக்ட்டா இருக்கும்..” என்றான். 
“அது எங்கிட்ட இல்லையே…” என ஒரு நொடி அமைதியானவன், “ஆரா அக்காகிட்ட வாங்கிட்டு வரேன்..” என எழுந்து ஓட, அவனைப் பிடித்தவன், சுபத்ராவின் அலைபேசியை அவன் கையில் கொடுத்து, “இந்த படத்தைக் காட்டி இந்த கலர் வேணும்னு கேளு..” என அனுப்பி வைத்தான்.  
அவன் சென்ற இரண்டாம் நிமிடமே துள்ளலுடன் சுபத்ராவின் எண்ணிற்கு அழைத்தான். மிதுனால் அழைப்பு ஏற்கப் பட, “மிதுன் போனை அவங்ககிட்ட கோடு..” என்றான். 
“எதுக்கு..?” அவன் கேள்வி கேட்க, எரிச்சலானவன், “எந்தெந்த கலர்ஸ் வேணும்னு நானே கேட்குறேன்..” என்றான் மெல்லிய குரலில். 
“ம்ம்..” என்றபடி அவன் அலைபேசியைக் கைமாற்றினான். 
“ஹாலோ..” எனக் கேட்ட பெண்ணின் குரலை, ஒரு நொடி உள் வாங்கிக்கொள்ளும் பொறுமை கூட இல்லாது, “ஹே..ஆரா, எதுக்கு கால்ஸை அட்டென் செய்ய மாட்டிக்க..?” என்றான் படபடவென. 
“நான் அவ அம்மா பேசுறேன்ப்பா…” என மறுபுறமிருந்து பதில் வர, பதறியவன், ‘ஐயோ..அத்தை..ச்சே..நான் செத்தே..’ என உளறி நடுங்க, அவன் அலைபேசி கையிலிருந்து நழுவி கீழே விழுந்தது. 
அடேய் அக்கா மவனே ஒரு வார்த்தை சொல்லிருக்க கூடாதாடா? சமாளி விஜய் என நொடியில் தன்னை தைரியப்படுத்திக் கொண்டு, அலைபேசியைக் கையில் எடுத்தான். 
“ஹலோ..”
“அது அக்கா தான் கேட்டாங்க, நான் சுபத்ரா தம்பி..”
“ஹோ, சரிப்பா ஆரா போன் ஹோஸ்பிட்டல் மிஸ் பண்ணிட்ட, நேத்து தான் புது போன் வாங்கி கொடுத்திருக்கோம்..”
“அப்போ புது நம்பர்..?” வேகமாகக் கேட்டவன் பின்னோடு, “அக்கா கேட்டாங்க ஆன்ட்டி..” என்றான். 
அவர் சொல்ல, அந்த நொடியே மனதிலும் அலைபேசியிலும் பதிந்து கொண்டான். 
“அது..மிதுன் கிரையான்ஸ் கலர்ஸ் கேட்டு வந்தான்..”
“கொடுத்துவிடுறேன்பா..”
“தேங்க்ஸ் ஆன்ட்டி, அக்கா..சொன்னாங்க..” எனத் தெரிவித்துவிட்டு அழைப்பைக் கட் செய்தான். 
அப்பாடா! அவங்களுக்குச் சந்தேகம் வரலை, பக்கத்து இலைக்குப் பாயசம் கேட்டு நம்ம வயிற நிறைக்கிறதுக்குள்ள.. என நினைத்து பெருமூச்சு விட, “நான் என்னடா சொன்னேன்..?” என்றபடி வந்தாள் சுபத்ரா. 
ஐயோ அதுக்குள்ள அடுத்த ஆட்டம் பாமா! என நொந்தான்.  
“நத்திங், மிதுன் எதிர்வீட்டுக்கு கலர்ஸ் கேட்டுப் போனான், அதைத் தான் அக்கா சொல்லிவிட்டாங்கன்னு சொன்னேன்…” எனச் சமாளித்தான். 
“எவ்வளவு பொருள் வாங்கிக் கொடுத்தாலும் ஆராக்கிட்ட புடுங்கிறது இவனுக்கு வேலையா போச்சு, வரட்டும் இருக்கு…” என புலம்பியபடி கொண்டுவந்த டீ யை கொடுத்தாள். 
சூடோடு வேகமாக பருகியவன், வந்த வேலை முடித்ததால் வேகமாகக் கிளம்ப நினைக்க, சரியா ஜெய்பிரகாஷ் எழுந்து வந்தார். வேறு வலியின்றி அவரோடும் சில நிமிடங்கள் பேசியபடி அமர்ந்திருந்தான். 
முதலில் வீட்டின் கட்டுமான வேலைகள் பற்றி விசாரித்து விட்டு, “பெரிய மச்சான், உனக்கு பொண்ணு பார்க்கிறார் போல, கல்யாணம்னா தகவல் சொல்லுங்கப்பா..” என்றார் கேலியாக. 
சுபத்ரா சொல்லியதை மறுத்ததால் இனி ரவியே பார்த்துக்கொள்ளட்டும் என்றே எண்ணம்! 
இதை எதையும் அறியாத விஜய், மூன்றாம் மனிதர் போல் தகவல் சொல்லும்படி சொல்லவும் தன் வீட்டு விஷேகங்களில் அவர்களுக்குச் சம்பந்தமில்லை என ஒதுங்குவதாக நினைத்தான். 
அவன் சுபத்ராவை பார்க்க, அவள் ஜெய்பிரகாஷை முறைக்க, “இப்போ என்ன தப்பா சொல்லிட்டேன், நாம இல்லாம பெரிய மச்சான் அவர் கல்யாணத்தையே முடிவு செய்தவர் தானே, அது போல அவர் தம்பிக்கும் சொல்லாம செய்துட்டா அதான் முன்னவே நாங்களும் இருக்கோம்னு ஞாபகப்படுத்தினேன்” என விளக்கம் உரைத்தார். 
“இப்போ எதுக்குங்க.. பழசை எல்லாம் பேசிக்கிட்டு..” இறங்கிய குரல் சுபத்ரா வேண்ட, அதில் அமைதியானவர், விஜயின் தோள்களில் தட்டிக் கொடுத்தபடி, “மாமாவும் இருக்கேன் மறந்துடாதீங்க மச்சான்..” என எழுந்தார். 
பின் குழந்தைகளோடு அவர் வெளியில் கிளம்பிவிட, “ஏன் நீங்கச் செய்ய வேண்டியதை சரியான நேரத்திற்குச் செய்திருந்தா அண்ணா ஏன் அவனா செய்துக்க போறான்? அவர் தங்கச்சிக்கு மட்டும் நீ அவ்வளவு செய்யுற, உன் உடன்பிறந்தவர்களுக்கு அவர் செய்ய மாட்டராமாம்? இப்போ மட்டும் மாமா மச்சான்னு சொல்லுரவரு அப்போ மட்டும் அண்ணனை விட்டுட்டார் தானே..” என பொறுக்கமுடியாமல் குற்றம் சாட்டினான். 
நல்லவேளையாக இவன் கத்திய கத்தலுக்கு வீட்டில் சித்ராவும், திவ்யாவும் இல்லை என நிம்மதி மூச்சை விட்டுக்கொண்டாள் சுபத்ரா. ரவிக்குச் செய்யாதது உண்மை தான் அதற்காக இவனுக்குச் செய்ய வரும் போது செய்ய விடாது ரவி தடுக்கையில் அவர் என்ன செய்வார்? இரு பக்கமும் பேச்சுகள் வாங்குவது சுபத்ரா தானே! 
“வாயை மூடுடா, செய்தாலும் குற்றம் செய்யாட்டாலும் குற்றம்ன்னு சொன்னா அவரும் தான் என்ன செய்வார்?” என்றாள் அவளும். 
“பாருடா… வீட்டுக்காரர்க்கு சப்போர்ட்..! நீங்க ரொம்ப மாறிட்டீங்க அக்கா..” என்றான் ஆழ்ந்த குரலில். ஆனாலும் கணவனை விட்டுக்கொடுக்காது புகுந்தகத்தில் ஒன்றி வாழ்வதில் அவனுக்கு மன நிறைவு! 
பாராட்டுதலாக சொல்லிய போதும் பாகுபாடு அறியாது, நீ மாறிவிட்டாய் என ரவி அடிக்கடி குத்திக்காட்டும் வார்த்தைகளையே விஜயும் சொல்லியதில் சுபத்ராவிற்கு வருத்தம்.  
அவள் முகமே வாடிவிட, அதைக் கவனித்தவன் இலகுவாக்க நினைத்து, “ஏன் அக்கா, இப்படி மிதுனை சண்டேஸ் கூட ப்ரீயா இருக்க விடமா கிளாஸ் அனுப்புற?” எனக் கேட்டான்.
“வேற என்னடா செய்ய சொல்லுற? வீட்டிலையும் பொழுது போகணும்ல..”
“ஏன் வீட்டுலையே கொஞ்ச நேரம் விளையாடட்டுமே..”
“எங்க விளையாடுதுங்க..? போன் இல்லை லேப்டாப்ல மணிக்கணக்கா வீடியோ கேம் தான் விளைடாடுறாங்க, முன்னவாது பரவாயில்லை ஆரா கூட கொஞ்சம் நேரம் இரண்டு பேரும் விளையாடுவாங்க இனி அதுக்கும் வழியில்லை..” 
“ஏன் அவளுக்கு என்ன..?” வேகமாகக் கேட்க, சட்டென அவனைத் திரும்பிப் பார்த்தாள் சுபத்ரா. 
“நல்லா தான் இருக்க, கல்யாணம் முடிச்சி வேற வீட்டிக்குப் போகப் போறல்ல அதைச் சொன்னேன்..” என்றாள் எதர்த்தமாக. 
கல்யாணமா..! நினைக்கையில் நொடியில் அவன் முகம் கரு மேகங்கள் சூழ்ந்த வானம் போல் இருளாக, வாடினான். வாழ்ந்த வேண்டிய மனம் ஏன் பேரதிர்ச்சியில் வாடி நிற்கிறது என்ற கேள்வி! 
“என்னடா..என்னாச்சு..?” சுபத்ரா அவனை உலுக்கியபடி கேட்க, “ஒன்னுமில்லை, சரி நான் வீட்டுக் கிளம்புறேன்..” என எழுந்தான். 
அவளும் விடைகொடுக்க, அங்கிருந்து கிளம்பினான். வரும் போது இருந்த மனநிலைக்கும் அதிகமாக அழுத்தத்தை சுமப்பதைப் போன்ற திணறல். அவனையும் அறியாது தெரு முக்கில் இருக்கும் மரத்தடியில் வந்து நின்றான். ஆரா காதல் உரைத்த இடம், இன்றும் அழியாச் சித்திரமாக அவன் முன் காட்சியானது. 
சட்டென அவள் எண்ணிற்கு அழைத்து விட்டு காரணமறியாது படபடக்கும் இதயத்தோடு நின்றான். மைக்ரோ செகேன்ட்களையும் அவன் எண்ணிக்கொண்டிருக்க, ஆராதனா அழைப்பை ஏற்றிருந்தாள். 
அவள் அழைப்பை ஏற்றத்தைக் கூட அறியாது அவன் மௌனமாக இருக்க, அந்த நெடிய மௌனத்தில், “விஜய்..?” என்றாள் கேள்வியாக. 
அவனுக்கு திக்கென்று இருந்தது, எவ்வாறு அறிந்தாள்? என் சுவாசத்தின் அலைவரிசையைக் கூட அறிவாளா? 
“ம்ம்..” என்றவனுக்கு என்ன பேசவென்று தெரியவில்லை. 
“அப்பாடா..! எங்க நீங்க என்னை மறந்துட்டீங்களோ? இம்சை விட்டதுன்னு நிம்மதியா இருந்துட்டீங்களோன்னு நினைச்சேன்” என வெகு எளிதாக உரைத்தாள். 
எங்கே தன்னிடம் பேச மறுப்பாளோ எனத் தவித்திருந்தவன் அவளின் எளிதான அணுகுமுறையை எதிர்பாராது இன்பமாய் அதிர்ந்தான். மன பாரத்தில் பாதி நொடியில் குறைய, மாயம் அவள் என அறிந்தான். 
“உனக்கு ஞாபகம் இருந்திருந்தா நீ கால் பண்ணியிருக்கலாமே..?” என்றான். இத்தனை நாள் தவிப்பில் சட்டென உரிமையாக வந்திருந்தது வார்த்தைகள்!  
“இருக்கலாம் தான், நீங்க தான் விலகியே இருக்க சொன்னீங்க..?” என்றவளின் சிணுங்கல் குரலே குற்றம் சாட்டியது. 
மந்தகாசமாக மலர்ந்த இதழோடு பூரித்தவன், சிகை கோதினான். 
“சிரிக்கிறீங்களா..?” பார்த்தது போன்றே அவள் கேட்க, அவன் சிரிப்பு மேலும் விரிந்தது. 
“நான் என்ன சொன்னாலும் செய்திடுவியா..?” என்றவன் கேட்க, “ஆமாம்ன்னு சொல்லி மாட்டிக்கவா? க்கும்.. ஆசை தான்..” என உதடு சுளித்தாள்.
அதற்கும் அவன் சிரிக்க, மனதிலோ இவளோடு ஒரு வாழ்க்கை நாளொரு இன்பமாகவும் பொழுதொரு சுவாரஸ்யமாகவும் இருக்குமென்று தோன்றியது. 
“விவரம் தான்! சரி.. சரி.. பார்க்கு வா..” 
“எதுக்கு..?”
“உங்கிட்ட கொஞ்சம் பேசணும்..”
“விலகி நின்னு தான் பேசணும் சரியா..?” அவன் மறந்ததை நினைவுபடுத்தி கண்டிஷன் போட, அதற்கும் சிரித்தான். 
“சரி வா..?”
“நவ்…?”
“ம்ம்..”
“ம்கூம்.. நாளைக்கு வரேன். இப்போ அஸ்வின் ஆபிஸ்ல இருக்கேன்..டாடா..” என்றவள் அழைப்பையும் கட் செய்துவிட்டாள். 

Advertisement