Advertisement

விஜய் மீண்டும் முறைக்க, “சரிடா, போனா போகுது போற போக்குல ஒரு லவ் தானே  பண்ணித் தொலையேன்” என்க, பொறுக்கமுடியாமல் மேசையிலிருந்த நோட் பேடை எடுத்து அவன் முதுகில் மொத்தினான். 
“போற போக்குல அந்த நாயை ஷூன்னு விரட்டிட்டு போங்குற மாதிரி அசால்டா சொல்லுற? லவ்டா..!” 
“லவ் தானே விஜய்..”
“ஏன் மச்சான் என்னைப் பத்தி தெரியாதா உனக்கு?”
“தெரியும் விஜய், ஒரு காதல்னு சொல்லுவ தானே? அந்த ஒரு காதல் ஆராவா இருக்கட்டுமே அதுல என்ன தப்பு?” 
“என் பேமிலிக்கு லவ் எல்லாம் செட்டாகுது மச்சான்” 
“அப்போ கல்யாணம் பண்ணிட்டு லவ் பண்ணு…” என்க, விஜய் முறைக்க, “ஆராவை தான் சென்னேன்..” என்றான். 
“நீ ஏன் இப்போ அவளுக்கு கட்சியே இல்லாம கொடி பிடிக்கிற?” 
“ச்சே, அண்ணான்னு சொல்லி என் பாசமலராகிட்டால அதான்” 
“பாசமலரைப் பஞ்சு பஞ்சா பிச்சி எறிஞ்சிட்டேன், நீயும் வாங்கிக் கட்டிக்காம ஓடிடுடா” என்ற மிரட்டலில், “ஹே..என்னடா பண்ண அந்த பொண்ண? அடப்பாவி உன்னைப் போய் அப்பாவி அம்பின்னு நினைச்சிருந்தேனே?” என வியந்தவன் வாயில் கை வைத்தான். 
“அடச்சீ, நீயும் உன் கற்பனையும்…” என்றவன் கையை மடக்கிக்காட்ட,  உண்மையில் அவன் கோபம் உணர்ந்த அகில் ஓடியே விட்டான். 
ஆனால் விஜயோ கடுப்பில் இருந்தான். ஆரா தான் இம்சை என்றால் அவள் புகழ் பாடும் அகில் அதனினும் இம்சையாகத் தெரிந்தான். 
விஜயரூபனுக்கு தன்னை பெண் பார்க்கச் சொன்னதும் சுபத்ராவின் நினைவிற்கு முதலில் வந்தது ஆராதனா தான். சுபத்ரா அதை ஜெய்பிரகாஷிடம் தெரிவிக்க, அவள் வீட்டில் முதலில் பேசும் படியும் அவர்கள் சம்மதம் சொல்லினால் தாமே ஆராதனா வீட்டில் கேட்கலாம் என்றார். 
சுபத்ராவிற்கு இருப்புக் கொள்ளவில்லை. அன்றே அன்னை வீட்டிற்குக் கிளம்பியும் விட்டாள். பவானிக்கு மூட்டுவலி ஆகையால் விடுமுறை எடுத்து அவரை மருத்துவமனை அழைத்துச் சென்றாள் கௌஷிகா. காலையிலே சென்றவர்கள் அப்போது தான் வீடு திரும்பி இருந்தனர். 
ரவிக்கு அன்று வார விடுமுறை ஆகையால் காலையில் வெகு தாமதமாக அப்போது தான் எழுந்தான். ஸ்ரீநிதியும், விஜயும் பள்ளிக்கும் அலுவலகத்திற்கும் சென்றுவிட்டனர். 
ரவி அவனுக்கு காஃபி கலந்து கொண்டிருக்க, இருவரும் வந்தனர். பவானி ஹாலிலே தளர்வாய் அமர, கௌஷி சமையலறைக்குள் சென்றாள். 
“எழுந்துட்டீங்களா…? தோசை ஊற்றித் தரட்டுமா..?” என அருகில் வர, “இல்லை காஃபி போதும், லஞ்ச் சேர்த்து சாப்பிட்டுக்கிறேன்” என்றவன் அவளை நெருங்கி வந்து நின்றான். 
அவள் கேள்வியாய் பார்க்க, “இன்னைக்கு லீவ் தானே எங்கேயாவது வெளிய போவோமா?” என்றவன் அவள் கைகளை பற்றினான். 
வீண் செலவுகளை ஒரு போதும் விரும்பாதவன் இன்றைக்கு என்னாவிற்று இவனுக்கு! சந்தேகம் தோன்றியது. 
“எதுக்கு..?”
 
“ம்ச்ச், உனக்காக தான். எப்பவும் வேலை செய்துகிட்டே இருக்கியே, கொஞ்சம் வெளிய போயிட்டு வந்தா ரிலாக்ஸ்ஸா இருப்பியேன்னு கூப்பிட்டேன்” 
பதிலின்றி பார்த்திருந்தவள், அவன் நெஞ்சில் சாய அணைத்துக் கொண்டான் ரவி. 
“உனக்கு எங்க போகணும்னு தோணுதோ சொல்லு..” என்றவன் கேட்க, “வேண்டாம், ரிலாக்சேஷன விட ஐ நீட் ரெஸ்ட்” என்றாள். 
குரலும் நலிந்திருக்க, உடலும் சோர்ந்திருந்தாள். அவளும் ஓயாது உழைப்பவள் தானே? உண்மையில் அவள் தேவை ஓய்வு தான்! 
இன்னும் நெருக்கமாய் அணைத்தவன் ஆறுதலாய் தலை தடவினான். அதற்குள் அடுப்பிலிருந்த பால் பொங்க, அவனிடமிருந்து விலகியவள் அடுப்பை அணைத்தாள். 
அவள் கைகளிலிருந்து வாங்கியவன் அவனே காஃபி கலக்க, சமையல் மேடையில் சாய்ந்து கைகளை கட்டிக்கொண்டு அவனையே பார்த்தபடி நின்றாள் கௌஷிகா. 
“என்ன லுக்? இன்னைக்கு லஞ்ச்சே நான் சமைக்கிறது தான்..” என்றவன் கண் சிமிட்ட, குலுங்கிச் சிரித்தாள். 
ரவிக்குச் சமையலறை பழக்கமில்லாத இடம். அவன் சமையலறைக்குள் வருவதென்பது திருமணமான புதிதில் வீட்டில் யாருமில்லை எனில் அவளை நெருங்குவதற்காக மட்டுமே! 
“சுபத்ரா…” என வரவேற்பாய் அழைக்கும் பவானியின் குரல் ஹாலில் கேட்க, இருவரும் வெளியே வந்தார். 
உள்ளே வந்த சுபத்ரா பவானியின் அருகில் சென்ற அமர, .கௌஷி அவள் கையிலிருக்கும் காஃபியை அவளிடம் கொடுத்தபடி வரவேற்க, “வா சுபத்ரா..” என்றான் ரவியும். 
“சௌக்கியமா ரவி?..” அவளும் நலம் விசாரிக்க, பதிலுரைத்தவன் பவானியைப் பார்த்தான். 
அவர் கவனிக்கவில்லலை, அவளோ கௌஷியுடனும் பவானியுடனும் அவர் நலம் பற்றி விசாரித்துக் கொண்டிருக்க, “என்ன சுபத்ரா இப்போயெல்லாம் அடிக்கடி இங்க வர?” எனக் கேட்டான் ரவி. 
“ஏன் ரவி நான் வரக்கூடாதுன்னு சொல்லுறையா?” 
“ச்சே, அப்படியில்லை உனக்கு நேரமேது இங்கெல்லாம் வந்து போக? லாஸ்ட் வீக் தான் நீ வந்துட்டுப் போனேன்னு அம்மா சொன்னாங்க இப்போ மறுபடியும் வந்திருக்கியே எதுவும் முக்கியமான விஷயமான்னு கேட்டேன்” என்றவன் விளக்க, சுபத்ரா முகம் வாடினாள். 
வீடு கட்டத் தொடங்கியதும் தான் அடிக்கடி வந்து செல்கிறாள். தங்களைக் கீழாகப் பார்த்ததினால் தங்களோடு பழகத் தயங்கியவள் இப்போ தயக்கத்தைத் தளர்த்திக் கொண்டாளோ என்ற எண்ணம். அதுவும் போக, வீடு கட்டுவது அண்ணனும் தம்பியும் இணைந்து தான் எனினும் இவ்விடம் தந்தை வாங்கி வைத்தது தான். அதில் எதுவும் உரிமை வேண்டுகிறாளோ என்ற சந்தேகம் அவனுக்கு! 
பவானி அமைதியாக இருக்க, மகனைக் கண்டிக்கவில்லை எனினும் தனக்காக ஒரு வார்த்தை பேசவில்லையே என மேலும் சுபத்ரா வருந்த, கௌஷி தான் ரவியைக் கண்டிப்பது போல் முறைத்தாள். 
“என்ன விஷயம் கண்ணு..?” பவானி சுபத்ராவிடம் கேட்க, “விஜய் கல்யாண விஷயமா தான் பேச வந்தேன்..” என்றாள் மெல்லிய குரலில்.
“சொல்லு சுபத்ரா…”
“அம்மா எங்க வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரங்க நியாபகமிருக்க? அவங்க பொண்ணுக்கும் மாப்பிள்ளை பார்க்குறாங்க, ஆரா ரொம்ப நல்ல பொண்ணும்மா! நீங்க சரின்னு சொன்னா நாங்க கேட்குறோம்” 
“வேண்டாம்..” சட்டென ரவியிடமிருந்து மறுப்பு வர, 
“ஏன் ரவி..?” என்றாள் சுபத்ரா. 
“இன்னும் ஒரு வருஷம் பின்ன தான் விஜய்க்குக் கல்யாணம் செய்றதா இருக்கோம்”
“அப்போ அவனுக்கு பொண்ணுப் பார்க்கிறதா கௌஷி சொன்னாளே?”
சட்டென கௌஷியை பார்த்தவன், “இப்போ பார்த்தா தான் ஒரு வருஷத்துல அமையும்னு சொன்னாள். அதற்கு தான் சரின்னு சொன்னேன்” என்றான். 
“ஆராதனா ரொம்ப நல்லப் பொண்ணு ரவி” 
“இருக்கட்டும், அதுக்காக ஒரு வருஷம் காத்திருங்கன்னு நாம சொல்ல முடியாது இல்லையா?” 
“ஏன் விஜய்க்கு இப்போ கல்யாணம் பண்றதுல என்ன பிரச்சனை உனக்கு? அம்மா நீங்க தானேம்மா என்னை அவனுக்கு பொண்ணு பார்க்கச் சொன்னீங்க?” என்ற சுபத்ரா தாயிடம் திரும்பினாள். 
பவானியின் புறம் திரும்பிய ரவியும் “நம்ம தகுதிக்குப் பாருன்னு சொல்ல மறந்துட்டீங்கம்மா நீங்க” என்க, அவருக்கும் தான் சொல்லத் தவறியதாலே பிள்ளைகளுக்குள் வாக்குவாதமோ என்றும் தோன்றியது. 
“அப்படியொன்னும் நாமா குறைஞ்சிப் போயிடலை ரவி, அதுவும் போக அவங்க நல்ல பையனா, பண்பனவனா, நல்ல குடும்பமான்னு தான் பார்ப்பாங்களே தவிர, ஸ்டேட்டஸ் பார்க்க மாட்டாங்க” 
சுபத்ரா மன்றாடிக் கொண்டிருக்க, அவனோ குரலில் கோபமோ அழுத்தமோ காட்டாது சிறு பிள்ளைக்குச் சொல்லும் அறிவுரை போன்றே பேச, பவானிக்கு வித்தியாசம் தெரியவில்லை. 
“அது மாதிரி நாங்களும் அந்த பொண்ணு எங்க குடும்பத்தோட ஒத்துப் போவாளான்னு பார்க்கணும்ல? திடீர்னு வசதி வந்தவங்களே எங்களைத் தள்ளி வைச்சுப் பார்க்குறதும் பழகத் தயங்குறதுமா இருக்கும் போது பிறந்ததுல இருந்தே பகட்டா வாழ்ந்த பொண்ணு எப்படி எங்க வாழ்கையோட ஒட்டுவா?” என்கையிலே சுருக்கெனத் தைத்ததை போன்று வலித்தது சுபத்ராவிற்கு.  
அதையும் விட எங்கள் குடும்பம் என்ற வார்த்தையில் அவளை தள்ளி வைத்தது சொந்த நாட்டில் உரிமைகள் பறிக்கப்பட்ட அகதியின் வலி உள்ளத்தில்! 
சுபத்ரா கண்கள் இரண்டும் கலங்கி நிற்க, “இந்த வீட்டுக்கு மருமகளா வர பொண்ணு கண்டிப்பா இந்த குடும்ப சூழ்நிலைக்குப் பொருந்திப் போற மாதிரி இருக்கணும். எங்க தகுதிக்கு இணையா பார்க்க முடிச்சா பாரு, இல்லை தள்ளியே நில்லு” என்றவன் அறிவுரை போன்று மென்மையான குரலில் உரைத்தவன் சென்றுவிட்டான். 
கௌஷி சற்றே அதிர்ந்தபடி நிற்க, அவன் அறிவுரை தான் சொல்லுவதாக நினைத்த பவானி, “அண்ணன் சொன்ன படியே பாரு சுபத்ரா, சாப்பிட்டியம்மா? மிதுன் ஸ்கூல் போயிட்டானா?” என அவளைப் பற்றி விசாரிக்க, அன்னை தவிர்க்காது பதில் உரைத்த போதும் சில நிமிடங்களிலே கிளம்பிச் சென்றுவிட்டாள். 
விஜயின் பார்வை படும் இடமெல்லாம் ஆராதனா இருந்தாள் ஆனால் அவனோடு பேசுவதில்லை. அவன் தொந்தரவு என்றதும் தூர நிற்கப் பழகிக் கொண்டாள். சிறு சோகம் அவளோடு இருந்த போதும் அவன் முன் காட்டிவிடக் கூடாதென முயன்று இயல்பாக இருந்தாள். 
ஆனால் விஜய் தான் அவளை உன்னிப்பாகக் கவனிப்பவனாயிற்றே அந்த மாற்றத்தையும் அறிந்தே இருந்தான். ஆனாலும் அவளுக்காக ஏங்கவுமில்லை, அவள் இம்சையில்லை என நிம்மதி கொள்ளவுமில்லை. 
“தியா, நீயும் எங்களோட வாயேன், இரண்டு நாள் நல்ல என்ஜாமென்ட் இருக்கு. நம்ம காலேஜ்ல பாதி அங்க தான் இருக்கும்” என தர்ஷினி அழைக்க, “எனக்கும் ஆசை தான் ஆனால் எங்க அக்கா வீட்டுல பாக்ஷன் இருக்கே, அம்மா கண்டிப்பா வரணும்னு சொல்லிட்டாங்க” என்றாள். 
“விடு தர்ஷினி..” விஜய் உரைக்க, “என் சார்பா ஹரிஸ் அண்ணாவுக்கு விஸ் பண்ணிடுங்க, அண்ட் என்ஜாய் தி ட்ரிப்” என்றாள் தியா. 
அகில் ஆராதனாவை பார்க்க, அவளோ தனக்கும் அவர்கள் பேச்சிக்கும் சம்மதமில்லை என பிஸாவை பிய்த்து கொண்டிருந்தாள். 
“நீ எப்படிடா காலையில எழுந்திடுவியா? இல்லை சேவல் கூவுற மாதிரி கால் பண்ணி எழுப்பி விடணுமா?” என விஜய் அகிலிடம் கேட்க, “ஏய் யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்ட மச்சான்..!” என்றபடி வியந்தான் அகில். 
“ஏன் என்ன தப்பா கேட்டேன்?” 
“அடேய் நான் இரண்டு, மூனு மணிக்கெல்லாம் வாட்ஸப் ஸ்டேட்டஸ் வைக்கிற ஆளுடா நான், என்னை போய்..ச்சே…நீ இந்த கேள்வியை தர்ஷி பார்த்துத் தான் கேட்கணும். பகலெது இரவெதுன்னு தெரியாம தூங்குறது அவள் தான்” என்ற அகிலை பார்த்து விஜய் வாய் மூடிச் சிரிக்க, அவன் பார்வை சென்ற திசையில் திரும்ப தர்ஷினி கொலைவெறியில் முறைத்தாள். 
முன் பற்களை காட்டிச் சிரித்தவன், “பேபி…” என அவளை நெருங்க, அவன் கைகளைத் தட்டி விட்டவள், “உன் மனசாட்சியை தொட்டுச் சொல்லு, இப்படியெல்லாம் உங்க வீட்டுக்கு வந்தபிறகு தூங்கியிருக்கேனா? நான் அலாரம் வைச்சாவது உங்க அம்மாவுக்கு முன்ன எழுந்திருப்பேனேடா..” என்றவள் அவன் சட்டையைப் பிடிக்காத குறையாக சண்டைக்கு நின்றாள். 
“அடேய் கிராதகா! உனக்கு என்னடா பாவம் செய்தேன்? இப்படி என் வாயை பிடுக்குறீயேடா! நாளைக்கு காலையில ஐந்து மணிக்கு உங்க தெருவுல சுப்ரபாதம் பாடுறதுக்கு முன்னாடி வந்து நிப்பேன் போதுமா..” என்றவன், “பேபி…” என தர்ஷினி புறம் திரும்பி சமாதானம் சொல்லத் தொடங்கினான். 
விஜயும் தியாவும் சிரிக்க, அதுவரையும் அமைதியாக அமர்ந்திருந்த ஆராதனா சட்டென எழுந்து சென்றுவிட்டாள். 
கோவையில் நடைபெறும் அவர்கள் கல்லூரி நண்பன் ஹரிஸ் திருமணத்திற்குக் கிளம்பும் திட்டமிட்டுக் கொண்டிருந்தனர். வெள்ளிக்கிழமையோடு வார இறுதியும் சேர்ந்து கொள்ள, திருமணம் முடிய, நண்பர்கள் சுற்றுலா செல்லும் திட்டமும் இருக்க மூவரும் அந்த உற்சாகத்தில் இருந்தனர். 
“என்னடா? ஆரா அரைமணி நேரம் அமைதியா இருக்கிறதெல்லாம் வரலாற்றுலையே இல்லாத புது நிகழ்வுடா” என்ற அகில் கேட்க, “அந்த அமைதி தான் எனக்கு பயத்தை கொடுக்குதுடா..” என மனதிலிருந்ததை சொல்லியே விட்டான் விஜய். 
சிரித்த அகில், “உன் பயமும் சரி தான், ஆரா அப்படி செய்றவ தான்…” என்க, “என்னடா செய்யப் போறா?” என பதறினான் விஜயரூபன். 
“எனக்கென்னவோ இந்த சினிமால எல்லாம் வர மாதிரி நாம போறதுக்கு முன்னாடியே ஹரிஸ் வீட்டுக்குப் போய் விஜயோடு கேர்ள் பிரண்ட்ன்னு இன்ரோவாகி நம்ம பிரண்ட்ஸ் சர்க்கிள்ல மிங்கிளாகப் போறான்னு தோனுது” 
“அடேய்..” என விஜய் பதற, “பதறாத, நடந்தா தானே? எதற்கும் காத்திருந்து பார்ப்போம்” என தோளில் ஆதராவாகத் தட்டிக்கொடுத்தான் அகில். 
ஆராதனாவின் அமைதியில் என்ன பூகம்பம் வரக் காத்திருக்கோ என்ற பயம் விஜயிடம் இருந்தது உண்மையே! 

Advertisement