Advertisement

அத்தியாயம் 11
மிதமானதொரு மழை கொட்டி அடங்கியிருந்தது. சுபத்ரா அறைக்குள் வர, “என்ன சொன்னான் உன் தம்பி?” என்றார் ஜெய்பிரகாஷ். 
“மாமாகிட்ட சொல்லிடு அக்கான்னு சொன்னான்”
“நிஜமாவா..! மாமான்னா சொன்னான்..?” அவர் சந்தேகமாகக் கேட்க, “பின்ன என்ன மங்கா மடையனா சொல்லப்போறான்?” என்றாள். 
“நல்ல யோசிச்சிப்பாரு, இத்தனை வருஷத்துல ஒருநாளும் அவன் அப்படிச் சொன்னதில்லையே..?” 
யோசித்து பார்த்தால் சுபத்ரவிற்கும் அப்படிதான் தோன்றியது, ஜெய்பிரகாஷ் நீங்க வாங்க என மரியாதையைக் காட்டி விடுபவன், அவளிடம் உன் வீட்டுக்காரர் என்று தான் சொல்லுவான். அவன் மாமா என்பது அரிதினும் அரிதான செயல்! 
இருந்தாலும் விட்டுக்கொடுக்க இயலாது, “இதுல என்ன அதிசயம்?” என்றாள். 
“அப்போ அவன் மாமான்னு சொன்னது அதிசயமில்லையா?”
“இல்லையே, உங்க முன்ன சொல்லாட்டாலும் எங்கிட்ட அடிக்கடி சொல்லுவான் தான்” 
“எனக்கு என்னவோ இன்னைக்கு விஜய் மொத்தமாவே வித்தியாசமா தான் தெரிந்தான்”
“அப்படி என்ன வித்தியாசம்? உங்கம்மாவுக்கும் உங்களுக்கும் அவகிட்ட குறை கண்டுபிடிக்கிறதே பிழைப்பு!”
“குறையில்லடி ஏதோ தப்பா தெரியுது, சரி அவன் எதுக்கு இங்க வந்தான்னு கேட்டீயா?”
“ம்ம், ஏதோ ஃப்ரண்ட்ட ட்ராப் பண்ண வந்தேன்னு சொன்னான், ஏன் உங்கிட்ட வேற எதுவும் சொன்னா?”
“இல்லை எந்த ஃப்ரண்ட்ன்னு கேட்டீயா..? அவனுக்கு ஏது இந்த ஏரியால ஃப்ரண்ட்?”
சில நொடி யோசித்த போதும் தம்பியின் மீது வேறுவித எண்ணம் தோன்றாததால், “இப்போ என்ன சந்தேகம் உங்களுக்கு? அவன் தான் புது ஃப்ரண்ட்ன்னு சொன்னானே” என்றாள். 
“அந்த புது ஃபரண்ட் அவன் கேர்ள் ஃப்ரண்ட்டா இருக்குமோங்கிற சந்தேகம் தான்” என்க, சட்டென கையிலிருக்கும் தலையணையால் அடித்தாள் சுபத்ரா. 
“உங்களுக்கு எப்பவுமே அவன் மேல நல்லெண்ணம் வராதா? உங்களுக்கு எதுக்கு அவனை பிடிக்க மாட்டிக்கு?” என்றாள் முறைப்புடன். 
“எனக்கா? அவனுக்கு தான் என்னை பிடிக்காது மறந்துடுச்சா என்ன?” 
“அப்போ அவன் ஏதோ சின்ன பிள்ளை விவரமில்லாம சொல்லிருப்பான்” என சமாளித்தாள். 
“என்ன? பதினாறு வயசு பையன் சின்னப் பையனா..?”
“அப்போ அவன் மனசுல இருந்ததெல்லாம் ஒன்னு தான் நீங்க எனக்கு கம்மிங்கிற எண்ணம்! அக்கா நீ இரண்டு டிகிரி முடிச்சிருக்க, அவர் ஸ்கூல் தான், நீ ரொம்ப கலரு, அவரு கருப்பா இருக்காரு பாரு, நீ லட்சணமா இருக்க, அவர் மூஞ்சியைப் பார்த்தா குரங்கு மாதிரி இருக்கு, ஜோடிப் பொருத்தமேயில்லை. உனக்கு வேண்டாம்னு சொல்லுக்கானு பொண்ணுப் பார்த்துட்டுப் போன நாள்ல இருந்து கல்யாணத்துக்கு முதல் நாள் வரையும் சொல்லிட்டே இருந்தான்”
“அப்பறமும் சொல்லிட்டுத் தானே இருந்தான் நானும் தான் கேட்டிருக்கேனே..?”
“அது..நீங்கன்னு இல்லை யாரை மாப்பிள்ளையா பார்த்தாலும் இப்படி தான் சொல்லியிருந்திருப்பான், அவனுக்கு எப்பவுமே என்மேல ஒரு அக்கறையிருக்கும், என்னை முன்னையெல்லாம் யுவர் அ ஏஞ்சல்ன்னு தான் சொல்லுவான்” 
“அவன் சொன்னாலும் சொல்லாட்டாலும் நீ தேவதை தான் எனக்கு சுபத்ரா” என உள்ளத்திலிருந்து உரைத்தவர் அவள் கைகளைப் பற்ற, நறுக்கெனக் கிள்ளிவிட்டு வெட்கப் புன்னகையுடன் எழுந்து சென்றாள். 
விஜயின் எண்ணம் போல் திருமணத்தின் போது ஜெய்பிரகாஷின் தகுதி அவளுக்கு குறைவு தான் ஆனாலும் அவரின் உழைப்பையும் ஒழுக்கத்தையும் நம்பியே பெண் கொடுத்திருந்தார் சுபத்ராவின் தந்தை! 
திருமண சமயத்திலே அவளுக்கான நகை, அவளோடு வரும் சீர்வரிசை என சித்ரா அளவிலும் அதிகம் எதிர்பார்த்துவிட, ஜெய்பிராக்ஷின் உறுதியில் தான் திருமணம் நடந்ததே! அதிலிருந்த ஏமாற்றம் ஆரம்பத்தில் அவளை, அவள் வீட்டினரை குத்திக்காட்டுவது மற்றும் தனக்கு இயலவில்லை என வீட்டு வேலைகள் முதல் பொறுப்புகள் வரை அனைத்தும் அவளிடம் தள்ளியும் விட்டார். இதில் அவள் நாத்தனார் திவ்யாவும் அன்னையை பின்பற்றுபவளாக இருந்தாள். 
திணறி சுபத்ராவிற்கு அப்போதெல்லாம் ஆறுதல் என அன்னை வீடு செல்வதற்குக் கூட நேரமிருக்கவில்லை. இதற்கிடையில் ஜெய்பிரகாஷ் தன் சக்திக்கும் மீறிய முதலீட்டில் தொழில் தொடங்கிவிட, தொழிலை ஸ்திரப்படுத்திக்கொள்வதிலே அவர் ஆரம்பக் காலங்கள் இருந்தது. தன் வீட்டிலிருக்கும் நேரங்களே அரிதாகிப் போக, பின் எங்கே அவள் வீட்டைக் கவனிப்பார். 
வெற்றி மட்டும் அவர் இலக்காக ஓடிக்கொண்டிருந்தவர். பெரிய இடத்தில் வெளிநாட்டு வேலையில் இருக்கும் மாப்பிள்ளையை தங்கைக்கு வரனாகப் பார்க்க, சுபத்ரா உதவியுடன் திவ்யாவின் திருமணம் இனிதே முடித்து வெளிநாடும் சென்றுவிட்டாள். 
சுபத்ரா கருவுற்றிருந்த ஏழாம் மாதம் அவள் தந்தை இறந்துவிட, அதே நேரம் இங்கு சித்ராவும் கருப்பை புற்றுநோயில் மருத்துவமனை, அறுவைசிகிச்சை என நலிந்து போனார். அந்நிலையில் அவர் அதிகம் எதிர்பார்த்து மகள் திவ்யாவைத் தான், ஆனால் அவளோ தானும் இப்போது தான் கருவுற்று இருக்கிறேன் தொலை தூர விமானப் பயணமெல்லாம் செய்ய இயலாது என மறுத்துவிட்டாள். 
ஆனால் மகள் போல் உடனிருந்து அந்நிலையிலும் முகம் சுளிக்காது கவனித்துக்கொண்ட சுபத்ராவை அப்போது தான் பிடித்துப் போனது. அவளும் தான் ஏழாம் மாதம் தந்தையை இழந்த கவலை, வேதனையில் வாடும் அன்னை, மருத்துவமனையில் மாமியார் என ஓயாது ஓட்டத்தில் ஓய்ந்து போனாள். 
அந்நிலையிலும் ஜெய்பிரகாஷ் எந்தவித மன அழுத்தமின்றி தொழிலைக் கவனிக்க இயன்றது அவளால் தான். மகன் பிறக்க அதன் பின் லாபம் மட்டுமே! ஆரம்பத்தில் வேலைகள் என சுபத்ராவின் தலையில் கட்டப்பட்ட வீட்டு நிர்வாகம், பொருளாதாரம் அனைத்தையும் கடமைகளாக அவளும் சிரத்தையோடு ஏற்றுக் கொள்ள, இப்போது அவர் தொழிலில் பாதி அதிகாரம் அவளாகிப் போனாள்! 
வெளிநாட்டிலும் இருக்கப் பிடிக்கவில்லை என திவ்யா குழந்தையோடு வந்துவிட, சுபத்ரா எதுவும் சொல்லாது ஏற்றுக்கொண்டாள். வருடத்திற்கு ஒருமுறை அவள் கணவன் வரும் போது மட்டுமே மாமியார் வீட்டிற்குச் செல்பவள் மற்ற நாட்களில் எல்லாம் அலைபேசியில் அவனோடு! 
சுபத்ராவிற்குத் தன் குழந்தையோடு அவள் குழந்தையும் சேர்ந்து வளர்க்கும் நிலையானது. புகுந்த வீட்டின் கடமைகளில் அவள் ஒருபோதும் தவறியதில்லை. குறை பேசும் சித்ராவின் பேச்சுகள் உடல் நிலை குறைந்து மீண்டதில் பாதி குறைந்திருக்க, அவள் கையில் தான் மொத்த பொருளாதாரம் என தாமதமாக அறிந்ததில் மீதியும் குறைந்திருந்தது. இப்போதெல்லாம் வெளியில் சென்றால் கூட மகன், மருமகள் பெருமைகள் தான் பேசுவார், திவ்யாவும் அவ்வாறு தான்! 
விஜய் என்றோ சொன்ன வார்த்தைகளே இன்னும் உள்ளுக்குள் ஒரு ஓரம் உறுத்திக்கொண்டிருக்க, இவளுக்கு மட்டும் எவ்வாறு இவ்வளவு பொறுமை! என இரு குழந்தைகளை இடையில் விட்டு சற்று தொலைவில் தூங்கும் மனைவியை பார்த்தார் ஜெய்பிரகாஷ். 
என் வாழ்வின் வசந்தமிவள் என எப்போதும் அவர் உள்ளத்தில் தோன்றுவது தான். அதிக சண்டை சச்சரவுகள் இல்லாது தன் பொறுமையால் தங்கள் வாழ்வை வடிவமைத்து அழகுபடுத்திக் கொண்டாள். உவகை பொங்கக் காதலோடுப் பார்த்தவர் எக்கி அவள் நெற்றியில் இதழ் பதித்து விலகினார். 
சோர்வே உருவாய் சோகமே நிழலாய் சுற்றி வந்தாள் ஆராதனா. விஜயிடம் பேசி மூன்று நாட்கள் கடந்திருந்தது, பதில் சொல்லவில்லை எனினும் அலுவலகத்திற்கே வராமல் விடுமுறையில் இருக்கவே தன்னை தவிர்கிறானோ இல்லை வேறேதும் காரணமா எனப் புரியாது குழப்பத்திலிருந்தாள். 
“ஆரா, ஆர் யூ ஓகே..? இஸ் தேர் எனி ப்ரோபளம்” என தர்ஷினி கூட கேட்டாள் தான் ஆனால் அவள் பதில் சொல்லவில்லை, பதிலும் அவளிடமில்லை. 
ஆனால் விஜய் பற்றி கேட்கும் ஆவலிருந்தது. இருக்கும் மனநிலையில் அவன் எண்ணமறியாது ஏதும் உளறி விடக்கூடாதென அமைதியாக இருந்தாள்.
அகிலும் கவனித்தான். அவன் வராமல் இருப்பதும் இவள் சோர்வும் இவர்களுள் என்னவோ நிகழ்ந்திருக்காலம் என்ற சந்தேகத்தை மேலும் அதிகப் படுத்திய போதும் அவனாக எதுவும் கேட்கவில்லை. அவளே ஒரு தெளிவுக்கு வரட்டுமென விட்டுவிட்டான். 
எதையும் மனதிற்குள் போட்டு அழுத்திக் கொள்ளும் பழக்கமில்லாதவள் ஆராதனா. தன் மனதை வெளிப்படுத்தியதில் எந்தவித தவறும் தோன்றவில்லை அவளுக்கு, ஆனால் தவறான நேரம் வெளிப்படுத்தி விட்டோமோ என வருந்தினாள். 
காதல் தான் என்பதில் உறுதியிருந்த போதும் சொல்லிவிடும் எண்ணமில்லை, சொல்லிவிட வேண்டுமென்ற திட்டமிடலுமில்லை குறும்பாகத் தான் அவனிடம் பேசிக் கொண்டிருந்தாள். அந்த இடமும், அந்த நேரம், அந்த சூழலும், அந்த இயற்கையும் தான் அவளை இயக்கியிருக்க வேண்டும் அல்லது உத்தியிருக்க வேண்டும். அவள் சொல்லியும் உள்ளிலும் உறுதியிருந்தது. 
நடந்ததை இல்லை என மாற்றுவது இயலாது, திடமாக எதிர்கொண்டு தானே ஆகவேண்டும். எங்கு சென்றான்? தலையைப் பற்றியபடி அமர்ந்திருந்தவளின் முன் நிழல் படர்ந்தது. 
அதை உணராத போதும், “ஹலோ ஆராதனா…!” என்ற குரலில் நிமிர, எதிரே நின்றிருந்தாள் தியா. 
அந்தநொடியே காரணமேயில்லாது தலைவலி அதிகமாவது போல் தோன்ற எரிச்சலானாள். 
“என்ன..?” சட்டென அவளிடமிருந்து வந்தது வார்த்தைகள். 
விஜயோடு இருக்கையில் அவன் ஒன்றிரண்டு முறை ஆராதனாவோடு பேசுவதைப் பார்த்திருக்கிறாள். ஆனால் அவன் அறிமுகப்படுத்தவில்லை ஆகையால் இருவருக்குள்ளும் அறிமுகமில்லை. முதல் முறை பேசுகையிலே இவ்வாறு பேசுவாள் என எதிர்பாராது தவறு செய்துவிட்டு குழந்தை போன்ற முகத்துடன் பயத்தில் நின்றாள் தியா. 
“சா..சாரிங்க..” என வார்த்தை தடுமாறி அவள் நிற்க, “எதுக்கு..?” புரியாத போதும் வேகமாகக் கேட்டாள். 
“இ..இல்லை..உ..உங்களை, ஐ..டிஸ்டர்ப்ட் பண்ணிட்டேன்” எனக் குழறி விழித்து நின்றாள். 
அவள் பயம் ஆராதனாவிற்கு ஒரு உற்சாகத்தைத் தர, அவளுள் இருக்கும் குறும்புத்தனம் துள்ளி வந்தது. குழந்தைகளுடன் விளையாடிய பழக்கம், மிரட்சியில் இருப்பளிடம் மிரட்டலாக தான் பேசினாள். 
“ம்ம், யெஸ்..யூ டிஸ்டர்ப்ட் மீ” என்றவள் அழுத்தமோடு ஒருமுறை கண்களை மூடித் திறக்க, அவள் முகபாவனையில் கலவரமானாள் தியா. 
“ஐயோ..நான் எதுவும் செய்யலைங்க..” என்றவள் படபடக்க, “நீ தானே இப்போ சொன்ன?” எனக் கேட்டாள் ஆரா. 
“ஐயோ..அது இல்லைங்க…”
“இல்லையா..?” சற்றே கண்களை உருட்டிக்கேட்டதில்,
“இப்போ சொன்னது உண்மை தாங்க, சா..சாரி ஆனால் இதுக்கு முன்ன எதுவும் செய்திடலை” 
ஒருவழியாக தடுமாற்றத்தோடு விளக்கிவிட, ஆராதனாவிற்குச் சிரிப்பு பொங்கியது. இருந்தும் சிரித்துவிட்டால் கெத்து என்னாவது? அடக்கிக்கொண்டு அமைதியானாள். 
“சரி இங்க எதுக்கு வந்த..?”
“காஃபிக்கு..?”
“நான் என்ன காஃபி மிஷினா?”
“இல்லை உங்ககிட்ட பேச தான் வந்தேன்”
“அப்போ ஏன் காஃபிக்காக வந்தேன்னு பொய் சொன்ன?” என அதட்ட, தியாவிற்கு ஐயோ என்றிருந்தது. 
“காஃபிகாக தான் வந்தேன் வழியில உங்களை பார்த்தேனா அதான் உங்கிட்ட பேசலாம்னு வந்தேன்” 
“பேசலாமே அதுக்கு முதல்ல எனக்கு காஃபி வேணுமே” 
“நான் போறேங்க, நான் வாங்கிட்டு வரேன்..” 
எழுந்து இரண்டடி நகர்ந்திருந்த தியா, “கோல்ட் ஆர் ஹாட் காஃபி? மில்க் ஆர் பிளாக், வித் சுகர் ஆர் வித் அவுட் சுகர்?” என்றாள் ஆராவிடம் மீண்டும் திரும்பி.
அவளோ முறைத்தபடியே, “என்ன கிண்டலா..?” என்க, படபடத்தவள், “ஐயோ இல்லைங்க, நார்மல் காஃபி” என்றபடி ஓடியே விட்டாள். 
ஆராதனாவே அதுவரை சிறைபடுத்தியிருந்த சிரிப்பை வெளிவிட்டுப் பொங்கிச் சிரித்தாள். அவளைப் பார்த்தவுடன் இருந்த டென்ஷனெல்லாம் சென்ற இடம் தெரியவில்லை. கல்லூரியில் முதலாமாண்டு மாணவியை ரேக் செய்வது போன்று சிறு உற்சாகம் வேறு! 
இப்படி புள்ளப்பூச்சியா இருக்காளே! சரி தான் எனக்கொரு அடிமை சிக்கிவிட்டாள் என நினைக்கையில் உல்லாசம் முகத்தில் ஊஞ்சலாடியது. 
ஒரு வேளை நான் பார்க்கப் பயங்கரமா குஸ்தி பயில்வான் போல இருக்கேனா? விஜய் கூட முதல் தடவை பார்க்கும் போது பம்கின் தானே சொன்னான் என்றெண்ணத்தில் அலைபேசியின் முகப்பு கேமராவை ஆன் செய்து தன்னை ஆராய்ந்தாள். 
அதே நேரம் தியா வர, காஃபியை வாங்கிக்கொண்டு அவளை எதிர் இருக்கையில் அமரும்படி உரைத்தாள். 
“சரி என்ன பேச வந்த..?” என மிடுக்கோடு விசாரணையாய் கேட்டாள். 
“அதுங்க..வி.விஜய்..மூனு நாள்லா ஆபிஸ் வரலையே..அதான் அவருக்கு என்னனு..உ.உங்களுக்கு தெரியுமான்னு…” என்றவளின் வார்த்தைகள் எல்லாம் ஆராதனாவின் கடுமையான பார்வையில் காற்றில் கரைந்து நின்றது. 
“நீ எதுக்கு விசாரிக்கிற?” பொறுக்க முடியாமல் கேட்டேவிட்டாள். 

Advertisement