Advertisement

அதே நேரம் அத்தெருவின் திருப்பத்தில் கார் ஒன்று நுழைத்து அவர்களை நோக்கி வர, அதன் முகப்பு விளக்கு ஒளியில் கண்ணகள் கூசியது. அதையும் விட அவனை நோக்கி வருகையிலே ஆராவின் வீட்டினரோ அக்காவின் வீட்டினரோ என நினைக்கையிலே அவன் அருகில் வந்து நின்றிருந்தது அந்த கார். 
அக்காவின் வீட்டினர் ஒரு பார்வை அவனை கீழிறக்கிப் பார்த்தாலும் தாங்க இயலாது, அதுவும் சித்ரா மட்டும் பார்த்துவிட்டால் போதும் ஒரு காதல் படமே ஓட்டி சுபத்ராவின் வீட்டு வளர்பையே தாழ்த்தி விடுவார். 
விஜயின் பார்வையில் முன்னிருக்கையிலிருந்து இறங்கினார் ஜெய்பிரகாஷ். அவனை கண்டதும் லேசாக இதழ் மலர்ந்தவர், “வா விஜய் சௌக்கியமா?” என்க, தலையாட்டியவன், “ப்ரண்ட் ட்ராப் பண்ண வந்தேன்” என்றபடி வலதுபுறம் திரும்ப, ஆராதனா அங்கில்லை, குனிந்து பார்க்க வண்டிச் சாவியுமில்லை. அவள் வீட்டின் இரும்புக் கதவுகள் மூடியுமிருந்தது. 
அடிப்பாவி ஆட்டையப்போட்டு ஆப்பும் வைச்சிட்டு போயிட்டியே! என நொந்தான். தன் வீட்டின் முன் நிற்க, சுபத்ராவை பார்த்துவிட்டு திரும்புவதாக நினைத்திருந்த ஜெய்பிரகாஷ் அவன் பதிலில், “சரி, உள்ள வா..” என அழைத்தார். 
“இல்லை, லேட்டாகிடுச்சு. இன்னொரு நாள் வரேனே” என்றவன் மெல்லிய குரலில் மறுத்த போதும், “இவ்வளவு தூரம் வந்துட்டு வீட்டுக்கு வராம போனா சுபத்ரா வருத்தப்பட மாட்டாளா விஜய்?” என்றார். 
ரவிகூட அவரோடு இயல்பாகப் பேசிவிடுவான் ஆனால் அவர் மீது மரியாதை இருந்த போதும் ஆரம்பத்திலிருந்து விஜய்க்கு ஒரு ஒட்டுதல் வரவேயில்லை. 
அவர் கேள்வியில் வேறு வழியின்று மௌனமோடு தலையசைத்தவன் இறங்கி முன் நடந்தான். இந்த ஏரியாவுல அவனுக்கு யாரு புதுசா நண்பன் சுபத்ராவிடம் தான் கேட்கவேண்டும் என நினைத்தபடி காரை பார்க் செய்து விட்டு உள்ளே வந்தார் ஜெய்பிரகாஷ். 
குழந்தைக்கு உணவூட்டிக் கொண்டிருந்தாள் சுபத்ரா. இருவரும் இணைத்து வருவதை ஆச்சரியமாகப் பார்த்தவள், “என்னங்க என்னாச்சு?” என படபடப்போடு இருவரையும் ஆராய்ந்தபடி அருகில் வந்தாள். 
“பார்த்து கவனமா வா” என ஜெய்பிரகாஷும், “மெல்ல வாங்க அக்கா” என விஜயும் ஒரு நேரம் உரைத்தனர். 
கணவனுக்கு எதுவும் அடிபட்டு விட்டதோ என்ற பதைபதைப்பில் அருகில் வந்தவள், “நல்லாயிருகீங்கல்ல?” என்க, “ம்ம், வந்தவனை வரவேற்காம என்னை கேள்விகேட்டுகிட்டு நிற்கிற? இரண்டு பேருக்கும் சாப்பாடு எடுத்து வை போ” என தன்னறை நோக்கிச் சென்றார். 
“விஜய் நீ எதுக்கு மாமாவோட வந்த?” 
“ப்ரண்ட டார்ப் பண்ணத் தனியா தான் வந்தேன்”
“இங்க யாருடா உன் ப்ரண்ட் அதுவும் புதுசா..?” என்றவள் ஆழமாய் பார்க்க, அவஸ்தையாக நெளிந்தவன், “பக்கத்துத் தெரு ட்ராப் பண்ணிட்டு இந்த வழியா வந்தேன்” என மழுப்பினான். 
முன்ன பின்ன பொய் சொல்லிப் பழக்கமிருந்தா தானே? அவன் உடல்மொழியும் குரலிலிருந்த தடுமாற்றமும் அவளுக்குப் புதிதாய் தெரிந்தது. 
“சரி கை கழுவிட்டு வா, சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்றவளை பார்த்தவன், “நான் சாப்பிட்டு தான் வந்தேன், நீ போய் குழந்தைகளை கவனி” என்றான். 
அதுவரை வாசலுக்கு முன் இருவரும் நின்றபடி பேசிக்கொண்டிருக்க சோஃபாவில் அமர்ந்து மொபைலை நோண்டியபடி இருந்த திவ்யா எழுந்து, “சுபத்ரா அம்மாவுக்குப் பாலும் டேப்லட்டும் எடுத்துகொடுத்துடு, ஹோ விஜய்யா…! வாப்பா..” என வார்த்தைக்கு வரவேற்று அவள் அறைக்குள் சென்றுவிட்டாள். 
டைனிங் டேபுளின் மேல் ஏறி அமர்ந்திருந்த திவ்யாவின் மகனும் மிதுனும், பாதி சாப்பாட்டோடு இருக்கு, புள்ளைகளையும் கவனிக்காமல் அன்னையும் கவனிக்காமல் செல்கிறாளே என்ன பெண்ணிவள் என நினைத்தான். அதை விட தன் அக்காளிடம் கட்டளையாக வேலை சொல்லியதை அவனால் சகிக்கமுடியவில்லை. 
அவனை மீண்டும் அழைத்தவள் சென்று குழந்தைகளைக் கவனிக்க, அவன் மறுக்க, இறங்கி வந்த ஜெய்பிரகாஷ், “பரவாயில்லை வா விஜய் சாப்பிட்டுப் போகலாம்” என அழைத்தார். 
சுபத்ரா சொல்லிக் கொடுத்தபடி “சாப்பிட வாங்க அங்கிள், அப்போ தான் நான் பாட்டியை பார்க்க வீட்டுக்கு வருவேனாம்” என்ற மிதுனின் குரலில் அவன் பக்கம் திரும்பியவன் சிறு சிரிப்போடு அவர்களை நோக்கிச் சென்றான். 
மௌனமாக அவன் தலையை தடவிக் கொடுத்தவன் வாஸ்பேஷன் நோக்கி நகர்ந்தான். இதுவே மத்த நாளாக இருந்திருந்தால் ஏன் யாரோ மாதிரி அங்கிள்னு சொல்லுறான் மாமான்னு ஏன் சொல்லிக் கொடுக்கலை? என அவளிடமே சண்டைக்கு நின்றிருப்பான்!
அவசரமாகச் சாவியை தரும்படி ஆராவிற்கு ஒரு மெசேஜ் அனுப்பியவன் கைகழுவி விட்டு உணவு மேசையில் வந்தமர்ந்தான். சுபத்ரா இருவருக்கும் பரிமாறிவிட்டு குழந்தைகளை அவர்கள் அறையில் விளையாட விட்டு, சமையலறையைச் சுத்தம் செய்தாள். விஜயின் ஓரப் பார்வை அலைபேசியின் மீதும் ஒரு பார்வை அக்காளின் மீதுமிருந்தது. 
சாவியை கொடுக்கிறேன் என அவள் இங்கே வந்து விடுவாளோ என்ற படபடப்பு அவனை இயல்பாக இருக்கவிடவில்லை. என்ன உண்கிறான் என்றே தெரியாது வேகவேகமாக தொண்டைக்குள் அடைக்க, ஜெய்பிரகாஷோ வீட்டின் கட்டிட வேலைகள் பற்றி விசாரித்தார். 
அவர் கேள்விக்கு பதில் சொல்லிய போதும் அவன் பார்வை நொடிக்கொரு தரம் அலைபேசியின் புறம் திரும்ப, சுபத்ரா இருந்த பரபரப்பில் அவனை கவனிக்கவில்லை. 
மாமியார் கவனித்து பின் இவர்கள் அருகில் வந்தவள், மேலும் பரிமாற வர, “போதும் அக்கா” என மறுத்தவன் உண்டு முடித்திருந்தான்.  
ஜெயபிரகாஷ் கை கழுவ எழுந்து சென்றிருக்க, அப்போது தன் வேலைகளை முடித்திருந்தவள் வீட்டினரைப் பற்றி விசாரிக்க நினைத்து, “இப்படி உக்காருரா” என்றாள் சோஃபாவைக் காட்டி. 
அவன் நிலை எங்கே அவள் அறிய, “பொறுமையா உக்கார எல்லாம் நேரமில்லை மழை வேற வர மாதிரி இருக்கு, ரொம்ப லேட் வீட்டுல இன்னும் சொல்லைக்கா. நான் கிளம்புறேன், மாமாட்ட சொல்லிடுங்க” என விரைந்தான். 
ஒரு போன் செய்து சொன்னால் போதாதா? எதற்கு இத்தனை விரைவாக ஓடுகிறான்? எனப் புரியாது நின்றாள் சுபத்ரா. 
ஏன் இந்த பதைபதைப்பு, தடுமாற்றம்? குற்றமில்லாமல் ஏன் இந்த குறுகுறுப்பு? எல்லாம் அந்த ஆராவினால் தான், அவள் மீது எரிச்சல்! 
வெளியே வந்தவன் சாலையில் நின்ற பைக்கின் அருகே வந்த நின்றபடி ஆராதனாவிற்கு அழைக்க, கால் கட் ஆனது. ஆனால் அவன் அழைப்பிற்கே உட்புறம் காத்திருந்தது போல் இரும்புக் கேட்டை திறந்து கொண்டு வெளியே வந்தாள் அவள். 
அந்நேரம் தேகம் நடுநடுங்கக் குளிர் காற்றில் வெட்டியது ஒரு மின்னல்! மெல்லிய பால் நிறத்திலும் கடல் நீல நிறத்திலும் டீசர்ட், பாட்டம் என நைட் வேர் உடையில் மொத்த முடியும் தூக்கி கிளிப் மாட்டியபடி வந்தாள். அந்த நிலையிலும் அவனின் கருத்தில் அது நன்றாகவே பதிந்தது. 
ஒருநொடியும் அங்கு நிற்காத என மூளை எச்சரிக்க, பைக்கை தள்ளியபடி நடக்கத் தொடங்கினான். சாவி இன்னும் ஆராவின் கைகளில் இருக்க, எதற்கு அவளை அழைத்தோம் என்பதையே மறந்துவிடும் அளவிற்கு அவள் மேல் எரிச்சலிருந்தான். 
அவன் வேகத்திற்கு அவளும் நடக்கத் தொடங்கியிருக்க, “உதவி செய்தா நன்றி சொல்லணும் இப்படி உபத்தரம் செய்யக்கூடாது” என்றான் கடுமையாக. 
“நான் செய்தது உபத்திரமில்லை உதவி தான்” என்றாள் செல்லக் கோபத்தில் சிணுங்கிய முகமாக!
“ஏது உதவியா..?”
“உங்க மாமா வரும் போது சரியான நேரம் மறைஞ்சி நின்னேன்ல”
“உன்னால இவ்வளவு தூரம் வந்ததால தான் பிரச்சனையே..!” 
“நான் ஒன்னும் இவ்வளவு தூரம் வரச் சொல்லலையே மெயின்ல இறக்கி விட்டுடுங்கன்னு தானே சொல்லியிருந்தேன்” 
அவன் மீது தவறென குற்றம் சாட்டினாள். 
“எல்லாம் என் நேரம்..!” எனப் புலம்பியவனின் எரிச்சல் சிறிது தூரம் நடந்து வந்திருந்த குளிர் காற்றில் குறைந்திருந்தது. 
நடந்து கொண்டிருந்த படியே, லேசான மண்வாசம் வரவும், “சரி சாவியைக் கொடு, கிளம்பு நீ” என்க, “இது எங்க எரியா, அதனால நான் உங்க பாதுகாப்புக்குக் கொஞ்ச தூரம் வரேன்..ப்ளீஸ்..ப்ளீஸ்…” என கைவிரல்களையும் இதழ்களையும் குவித்து கண்களை சுருக்கி, கொஞ்சலாக் கேட்டவளின் குரலில் குழைவு. 
புதிதாய் பார்த்தான் இல்லையில்லை ரசித்தான் அவனுள் ஒரு தடுமாற்றம்! ஆழ்ந்த நிசப்தமும் இன்னிசையானது! யாருமில்லா வீதியோரம், கரு இருளும் வெண்ணிலவும் கவிபாடும் நேரம், தழுவிச் சென்ற குளிர்காற்றும் உஷ்ணமாய் அவன் உடல் தீண்டியது போன்ற வெட்கை! 
அவள் வெண் உடையும் மென் நடையும், நீரில் நீந்தும் அன்னமாய், சிறகில்லா தேவதையாய், உயிர் கொண்ட சிற்பமாய், உடல் கொண்ட மலர் மெத்தையாய் தோன்றினாள். அவள் லாவண்யத்தில் லயிந்தவனுக்கு ஒரு நொடியாவது அழுத்தமாய் அள்ளி அணைத்துக்கொள்ளும் ஆசை தான்! 
யாதொரு பெண்ணையும் இத்தனை உன்னிப்பாய் கவனித்ததில்லை. தேகம் சிலிர்க்க உணர்விலிருந்து வெளிவந்தவனுக்கு தன் எண்ணம் தவறென்று தோன்றியது! 
“எனக்குப் பயமில்லை, மழை வரும் நீ கிளம்பு..” என மீண்டும் அவளை விரட்ட, வெளிப்படுத்தப்படாத அவன் தடுமாற்றத்தை அவள் அறிந்திருக்கவில்லை. 
“தனியா போறது சேப் இல்லை..” சிறு குழந்தை போலே அவனிடம் சொல்ல, 
“என்ன பயம்..?” என்றான் வேகமாக. 
“எனக்குத் தான் பயம்…” என்றவள் நானும் உடன் வருவேன் எனப் பிடிவாதம் போலே சிறிது தூரம் மௌனமாக நடந்தாள். 
வளவளவென பேசும் ஆராதனாவிற்கு நெடிய மௌனங்கள் கூட அழகானது அவனோடு பயணிக்கையில், இந்த அழகுகளை வாழ்வின் எல்லை வரை பற்றிச் செல்லும் விருப்பம் அவளிற்கு! 
அத்தெருவின் இறுதி வரை வந்திருந்தனர். திரும்பிப் பார்த்தான் அவன் கண்ணில் பட்டது, தூரத்தில் தெரிந்த அவள் வீடு ஆள் அரூபமற்ற சாலையும். 
“சரி, போதும் இதுக்கு மேல நீ வரவேண்டாம் கிளம்பு” என்றபடி நின்றவன் எட்டி அவள் கையிலிருந்த சாவியைப் பறிக்க முயன்றான். 
அந்த சிறு ஸ்பரிசத்தை முழுதுமாய் தனக்கென உரிமை பத்திரம் எழுதிக்கொள்ளும் வேகம் பிறக்க, “எனக்கு இப்படியே விட்டுப் போக விருப்பமில்லை, நீங்க சொன்ன மாதிரியான வாழ்கையை உங்களோட வாழ விருப்பம்…உங்க மேல விருப்பம் விஜய்..! எப்போல இருந்துன்னு தெரியாது பட் ரீசண்டா தான் பீல் பண்ணேன். அ..ஐ..லவ்..யூ..” என கடைசி வாரத்தையைத் தவிர, திணறாது நேராக அவன் முகம் பார்த்து நிலவின் உதயம் போல் நிதானமாக உரைத்தாள். 
அவனுக்கோ மின்னல் தாக்கியது போல், அவளிடம் அதை எதிர்பாராது, அந்த நொடியே பற்றியிருந்த கையை சட்டென சாவியோடு விலக்கியவன் அதிர்ந்த நிலையிலே இருந்தான். 
“ஆரா..” அதிர்ச்சியில் அழைக்க, “நீங்க இப்போவே பதில் சொல்லணும்னு கட்டாயமில்லை, டேக் கேர்” என்றவள் மயிலிறகின் வருடல் போலே மிக மெல்லிதாய் கன்னத்தில் இதழ் பதித்தாள். 
மண்வாசத்தோடு வரும் முதல் தளி போலே இதயத்தை நனைத்தது நிலைத்தது! 
அவனுக்கு ஒரு நொடி இதயமே நின்று துடிக்க, மேலும் அதிர்ச்சியில் அவன் திரும்பிப் பார்க்க, அவளோ மின்னல் ஒளியில், துள்ளல் நடையில் உற்சாகமாகச் சென்று கொண்டிருந்தாள். 

Advertisement