Advertisement

அத்தியாயம் 10 
ரவியின் வீட்டு வேலைகளும் பெரும்பாலும் முடியும் நிலையை நெருங்கி இருந்தது. ஆராதனா வீட்டில் அவள் அண்ணன் அஸ்வினுக்கு பெண் பார்க்க தொடங்க, அவனோ தங்கைக்குப் பின்னே தான் திருமணம் செய்து கொள்வேன் என பிடிவாதாமாக உரைக்க, அவளுக்கு வரன் பார்க்கத் தொடங்கியிருந்தனர். ஆராதனாவின் பெற்றோர் அது குறித்து சுபத்ரா, ஜெயபிரகாஷிடமும் தெரிவித்திருந்தனர். 
தர்ஷினியும் ஆராதனாவும் அமர்ந்திருக்க கையில் இரு ஐகோனொடு வந்தான் அகில். இருவரும் ஆளுக்கொன்றை வாங்கி சுவைக்க, “எங்க இந்த விஜய் கண்ணுலையே பட மாட்டிக்கான், காணவில்லை போஸ்டர் தான் அடிக்கணும் போல இருக்கு” என்றாள் தர்ஷினி. 
“அதை ஏன் கேட்குற?” என்ற அகில் இழுக்க, 
“ஏன் பையன் நமக்கு தெரியாம கமிட் ஆகிட்டானா?” என்றாள். 
“கிட்டத்தட்ட அப்படி தான்” 
“யார்ரா அது?”
“நம்ம ஜூனியர் தியா நியாபகமிருக்கா?”
“ஹோ, நம்ம டிப்பார்ட்மென்ட் ப்யூட்டி”
“ம்ம், அந்த பொண்ணே தான்! இங்க இண்டர்வியூ அட்டென் பண்ண நாள்ல இருந்து அவன் கூடத் தான் சுத்துறான், அதுவும் போக எங்க டீம்ல தான் ட்ரைனியா ஜாயின் ஆகியிருக்கா கேட்கவா வேணும் இவனை கையில பிடிக்க முடியலையே..!” என்ற அகில் ஓர விழியால் ஆராதனாவை ஆராய்ந்தான். 
பெரிதான மாற்றமில்லாத போதும் அவள் மௌனம் புதிதாகத் தெரிந்தது. 
“ச்சே, நம்ம விஜய் அப்படியெல்லாம் இல்லைடா” என தர்ஷினி மறுக்க, “இப்போ நான் என்ன தப்பா சொன்னேன்? லஞ்ச் கூட ஸ்கிப் பண்ணிட்டு விழுந்து விழுந்து அந்த பொண்ணுக்கு ட்ரைனிங் கொடுக்குறான் சொன்னேன் போதுமா” என்றான். 
“என்னவோ போ, கையில மாட்டுற அன்னைக்கு ஒரு விசாரணை கமிஷன் வைச்சிடலாம்” என்ற தர்ஷினி அலைபேசியின் அழைப்பில் எழுந்து சென்றாள். 
“என்ன ஆரா மௌன விரதமா? அப்படினா சாப்பிடாமலும் இருக்கணுமே” என்றான் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த அகில். 
“நத்திங்..” என்றவள் தர்ஷினி சென்ற திசையைப் பார்த்தாள். 
“உங்க லவ் வீட்டுல எப்படி அக்செப்ட் பண்ணாங்க” 
“அதெல்லாம் இரண்டுபேரும் ரொம்ப போராடுன காலம், ஆமாம் அது எதுக்கு இப்போ விசாரிக்கிற?” என்றவனின் பார்வையும் கூர்மையானது. 
“சும்மா தான் சொல்லுங்களேன்” 
“எங்க வீட்டுல ஒரே பையன்னு அக்செப்ட் பண்ணிட்டாங்க, அவங்க வீட்டுல ரொம்ப ஸ்ட்ரகில்! தர்ஷினி தான் பிடிவாதம்! விஜய், நான் யூஜி முடிச்சிட்டு வேலைக்கு வந்திட்டோம், தர்ஷி பிஜி முடிச்சிட்டு மூனு வருஷம் வெயிட் பண்ணிப் போராட, அப்பறம் கொஞ்சம் இறங்கி வந்தாங்க”
“ரியலி தர்ஷினி கிரேட்”
“ம்ம், அவள் சந்தோஷத்துக்காகவே என்ன வேணாலும் செய்யலாம்”
“சந்தோஷத்துக்கா..! முதல் அவங்க நிம்மதியை பாருங்க”
“ஏன் அவளுக்கு என்ன அவளுக்கு பிடிச்சதெல்லாம் செயுறேனே?”
“அதையும் விட அவங்க தேவைகள் என்னென்னனு கவனிச்சி செய்யுங்க அண்ணா. உங்களை நம்பி தானே உங்க வீட்டுக்கு வாழ வந்திருக்காங்க, அப்போ அவங்க தேவைகள் எல்லாம் உங்களை சார்த்ததில்லையா? அதை கவனிக்காம விட்டுடாதீங்க. உங்க பழக்க வழக்கம் உங்க இயல்பு எல்லாம் மாத்திக்க சொன்னா முடியுமா? ஆனால் பொண்ணுங்க மட்டும் புகுந்த வீட்டுக்கு வந்ததும் அத்தனையும் உடனே மாத்திக்கணும்னு நினைக்கிறது எந்த வகையில சரி? கொஞ்சம் டைமாவது கொடுக்கலாமே?”
“யார் அவளை மாறிக்க சொன்னா? இப்பவும் அவள் அவளா தானே இருக்கா? அதை தானே நானும் விரும்புனேன்”
“நல்லா கவனிச்சுப் பாருங்க தெரியும்..”
“ம்ம், என்னவோ சொல்லுற எங்கிட்ட தப்புங்க மாதிரி! சரி செய்யுறேன்” என்றவன் எழுந்து சென்றான். 
அதிகப்படியாக பேசுவதாக நினைத்துவிடுவானோ சரியாக புரிந்து கொள்ள வேண்டுமே என்ற பதைபதைப்பில் இருந்தவளுக்கு அப்போது தான் சற்று நிம்மதியாக இருந்தது.  
முன் போல விஜயை அதிகம் பார்க்க முடியவில்லை. பார்த்தாலும் உடன் தியாவும் தரிசனம் தந்தாள். இரவில் ஸ்ரீயுடன் மட்டுமே பேச, அப்போதும் அவனோடு அதிகம் பேச முடிவதில்லை. தான் யாரென்று அறிந்ததாலே தன்னை தவிர்ப்பதாக நினைத்தாள். என் மீதென்ன வன்மம் அன்று நன்றாகத் தானே பேசினான் இப்போது என்னவாம்? 
இல்லையில்லை தியா வந்ததாலே உன்னைத் தவிர்க்கிறான் என முரண்டிய மனதையும் அதில் பரவும் ஏமாற்றத்தையும் என்ன முயன்றும் அடக்கமுடியவில்லை. தியாவைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு லேசான பொறாமை உணர்வு புகைந்தது. தன் இடம் பறிபோன உணர்வு, எதையோ இழந்ததை போன்ற வெறுமை! 
வீட்டில் பேசப்படும் திருமணப் பேச்சுகளும் அவள் காதிற்கு வர உரிமையின்றி விஜயரூபனின் முகமே நினைவில் வர திடுக்கிட்டாள், அனைவரின் மீதும் காரணமில்லாது எரிச்சலைக் காட்டினாள். அவளுக்கே அவள் நடவடிக்கை வித்தியாசமாகத் தெரிய தன் மாற்றத்தை உணர்ந்தேயிருந்தாள். 
அன்று ஆராதனாவின் ப்ராஜெக்டில் சிறு தவறு இருப்பதாக ரிப்போர்ட் வர, அதை சரி செய்த பின்பே கிளம்பினாள். பார்க்கிங்கில் இருக்கும் தனது கரை நோக்கி நடக்க, அவள் ஹீல்ஸ் தரையில் உரசும் ஓசை மட்டுமே அவ்விடம் எங்கும் எதிரொலித்தது, இருள் சூழ்ந்த இரவு நேரம் அது. 
மின் விளக்கு ஒளியில் அவ்விடம் வெளிச்சமாக இருந்த போதும், யாருமற்ற தனிமையும் அங்கிருந்த அதீத அமைதியும் அவளைப் பயமுறுத்தியது. முடித்த அளவு வேக நடையோடு காரை அடைந்தவள் ஏறி அமர்ந்தாள். 
காரை ஸ்டார்ட் செய்ய அது இயங்கவேயில்லை. அவளின் படபடப்பு மேலும் அதிகரித்தது. அதீத கற்பனை இதுக்கு தான் திரில்லர் ஹாரர் மூவியெல்லாம் அதிகம் பார்க்காதேன்னு சொல்லுறது என்ற மனதை கேட்கவில்லை. எரிச்சலில் கையை ஸ்டேரிங்கில் குத்தியவள் வலியோடு கையை உதறிக்கொண்டாள். 
கைப்பையை எடுத்துக்கொண்டு காரை விட்டு இறங்கியவள் அதை லாக் செய்துவிட்டு நடக்கத் தொடங்கினாள். அவ்விடத்திலிருந்து வெளியில் வர, தனது டூவிலரோடு விஜய் வருவது தெரிந்தது. ஆரா நிற்பதை கவனித்துவிட்டவன், அவனே அவள் முன் வந்து நின்றான். 
“ஹே, என்ன ஆரா இப்போ தான் கிளம்புறீயா?” என்க, ஏன் உனக்கு என்ன கண்ணு தெரியலையா என கேட்ட வேண்டுமென்று வந்த வேகத்தை கட்டுப்படுத்திக்கொண்டு தலையை மட்டும் ஆட்டினாள். 
“அது சரி ஏன் இங்க நிக்கிற?” என்க, எல்லாம் என் நேரம் என மனதில் நொந்து கொண்டான். 
“கார் ஸ்டார்ட் ஆகலை” 
“நான் வேணா கேப் புக் பண்ணட்டுமா..?” என்றபடி தனது பக்கெட்டில் அலைபேசியை துழாவ, சிறு முறைப்புடன் தன் கையிலிருந்த அவள் அலைபேசியைக் கட்டினாள். 
“ஓஹோ ஆல்ரெடி புக் பண்ணிட்டியா? ஓகே டேக் கேர்” என்க, இதுவே தியா என்றால் இவ்வாறு இவ்வாறு விட்டுச் செல்வனா என்ற கேள்வி எழ, சினம் கொண்டாள். 
அவனருகில் நின்றிருந்தவள் அவன் பைக்கை ஸ்டார்ட் செய்யும் முன்னே சட்டென சாவியை எடுத்துக்கொண்டாள். 
“ஹே..என்ன பண்ற ஆரா..?” 
“என் வீட்டுல என்னை ட்ராப் பண்ணிடுப்போங்க”
:”ஹே, வாட்ஸ் யுவர் ப்ரோபளம்? அதான் வண்டி வேணா புக் பண்ணிறேன்னு கேட்டேனே..?” 
“இல்லை எனக்கு பயமா இருக்கு விஜய்”
“என்னதிது சின்னப் பிள்ளை மாதிரி, இந்த நூடுல்ஸ் மண்டை கேர் ஸ்டைல்லோட தரையில விழுகிற நிழலை பார்த்தாவே பயமா தான் இருக்கும். கிவ் மீ அ கீ”
“இட்ஸ் நாட் அ ஜோக், ஐம் சீரியஸ் விஜய்”  
தன் பயத்தை வெளிப்படுத்தியும் அவன் பெரிதாக நினைக்காததில் அவள் பிடிவாதம் அதிகரிக்க, அவன் அனுமதியின்றியே பின் இருக்கையில் ஏறி அமர்ந்தாள். அவள் நடவடிக்கைகள் புதிதாய் தெரிய, உரிமையான அவள் செயலில் அதிர்ச்சியுற்றான். 
“என்ன விளையாட்டு இது? என்னால அந்த பக்கம் வர முடியாது எங்க அக்கா வீடு அங்க தான் இருக்கு நியாபகமில்லையா?”
“அதனால என்ன? பயமா?”
“அப்படி இல்லை, இந்த நேரம் நம்மைச் சேர்ந்து பார்த்தா தேவையில்லாத பேச்சு வரும், எதுக்கு பிரச்சனை நீ இறங்கு”
“அப்போ எங்க ஏரியா மெயின்லையாவது ட்ராப் பண்ணிட்டுப் போங்க”
“ஒரு தடவை சொன்னாப் புரியாதா? ஃபஸ்ட் கீயை கொடு”
“நோ, என்னை ட்ராப் பண்ணிட்டு போங்க. இல்லை நீங்க இறங்கிக்கோங்க இன்னைக்கு நான் வண்டியை எடுத்துட்டுப் போறேன்” 
என் வண்டியிலிருந்து என்னையே இறங்கச் சொல்வாளா? என நினைத்தவன் பல்லைக் கடித்தான். 
மழை வரும் காலநிலை! அவன் தோளில் கை வைத்தவள், “ப்ளீஸ் விஜய்..” என்றாள் இறங்கிய குரலில். அவள் குரலைவிடவும் அவன் உணர்ந்த அவள் ஸ்பரிசத்திலிருந்த படபடப்பு அவனை அசைத்தது. சாவியை வாங்கியவன் அமைதியாக வண்டியை ஸ்டார்ட் செய்தான். 
ஏகாந்த குளிர் இரவில் நூலிழையாய் உரசும் நெருக்கத்தில் எதிர்பாராதொரு நெடுச் சாலையில் பைக் பயணம், இனிமையான சுகம்! பிரபஞ்ச பெருவெளியில் தாரகைகளைத் தழுவி மிதப்பதை போன்றதொரு உணர்வு! தன்னிலை மறக்கச் செய்யும் இன்னிசை, தன்னை மயக்கும் சுகந்த வாசம் போன்றே அவனை மறக்கச் செய்த பயணத்தில் அவள் வீட்டு வாசல் வரை வந்திருந்தான். 
அவ்விடம் விட்டு நகர்ந்த சில நிமிடங்களிலே ஆராதனாவின் பயம் சிறுக சிறுக குறைந்திருந்திருக்க, அந்த தட்ப நிலையை அவளும் ரசித்திருந்தாள். ஆனால் அவனை போன்ற தன்னை மறந்த நிலையில்லை, வீடு வரை வர அவள் தான் அவனுக்குத் தெரியப் படுத்தினாள். 
சட்டென பைக்கை நிறுத்தியவனிடமிருந்து தழுவி இறங்கியவள் அவன் முன் வந்து நின்று, “தேங்க்ஸ் விஜய்” என்றாள் சின்னச் சிரிப்புடன். 
அந்த மௌவல் இதழ் மயக்கவே, நொடியில் சுதாரித்து தலை சிலுப்பிக் கொண்டவன், பரபரப்போடு பைக்கைத் திருப்பினான். அவன் பரபரப்பிலும் படபடப்பிலும் ஆராதனாவிற்கு குறுப்பும் ஒருவித உற்சாகமும் பிறந்தது. 
அவன் கிளம்பும் முன், “ஒரு செகண்ட் விஜய், இவ்வளவு தூரம் வந்து இருக்கீங்க. வீட்டுக்கு வந்திட்டுப் போங்க” எனக் குறும்பாக அழைக்க, அவன் பார்வையெல்லாம் சுபத்ராவின் வீட்டின் மீது தான் இருந்தது. 
அவள் பெற்றோர் ஏற்கனவே அறிமுகம் தான் ஆனால் அதிக பழக்கமில்லை. விட்டால் ஓடிவிடும் வேகத்தில் அவனிருக்க, அவளோ குறும்பாகச் செய்தாள். 
மீண்டும் எதிர் வீட்டில் பார்வையைப் பதித்தபடி, “இனியொரு நாள் வரேன் ஆரா” என்றவன் ஸ்டார்ட் செய்வதற்குள், பழக்கம் போலே அவள் சாவியைப் பறிக்க முயல, அதை புரிந்தவன் தடுக்க நினைத்து அவள் கைகளை பற்றியிருந்தான். 

Advertisement