Advertisement

நறுங்கவிதை அவளோ! –மித்ரா 
அத்தியாயம் 01
எத்தனை எத்தனையோ ரகசியங்களை தன்னுள் புதைத்துக் கொண்டு இயற்கையின் அன்பிற்கும் ஆக்ரோஷத்திற்குமான மௌனசாட்சியாய், பெரும் காலத்தின் சுவடாய், ஆறாம் அறிவின் புரிதலுக்கு அப்பாற்பட்ட பிரமிப்பாய், முதல் உயிரைத் தாங்கிய கருப் பையாய், பெரும் ஈர்ப்பு விசையை தன்னுள் இழுத்துக்கொண்டு சுருங்கிய கருந்துளை போன்றே பெரும் விசையை இழுத்துக்கொண்டு சிறுதுளியாய் பிரபஞ்சத்தின் முன் சுருங்கி, பெரும் ஆழியாய் பரந்து விரிந்திருக்க, அந்த நீரில் கலக்கா நீலத்தின் வசீகரம் தான் என்ன? தெரியவில்லை! உலகிற்கே தெரியாத உலகவரலாறை ஓயாது சொல்லும் அலையோசையின் மொழிபெயர்ப்பு தெரியவில்லை! கண்காணா மறுகரை எங்கே? எத்தனை? மணல் கரைகளுக்குள் அடைத்துக் கிடக்கும் பெரும் விசையின் ஆழம் என்ன? மையம் எங்கே? பெரும் பிரமிப்பு!
கண்காணும் தூரத்தில் கடலும், கடல் காற்று தீண்டா தூரத்தில் கண்ணாடி மாளிகையுமாய் இருந்தது கிழக்குக் கடற்கரைச்சாலை! அவ்வாறான தகவல்தொழில்நுட்ப தொழிற்கூடத்தில் ஒரு பெரும் கட்டிடத்தின் எட்டாவது மாடியில் இயங்கிவரும் பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் சென்னை கிளை அலுவலகம். மென்பொறியாளர்கள் கூட்டத்தில் அவனும் ஒருவனாய் வெளியுலகை மறந்தபடி தன் முன் இருக்கும் கணினித்திரையில் கண்ணையும் கருத்தையும் பதித்தபடி அமர்ந்திருந்தான் விஜயரூபன்.
“டேய் அகில், எஸ்டர்டே நீ ஜெனரேட் பண்ண ரிப்போர்ட்ல டேட்டா லோட் ஆகலை என்னன்னு கொஞ்சம் செக் பண்ணு மச்சான்” என முகத்தைத் திருப்பாது தன் இருக்கைக்கு அருகில் இருக்கும் நண்பனுக்குக் குரலை மட்டும் பார்சல் கொடுத்தான்.
சில நிமிடங்களாகியும் அவனிடமிருந்து பதில் வராது போக, “டேய் இருக்கியா, இல்லை கனவுல மிதக்குறையா?” என்ற கேலியோடு தன் சுழல் நாற்காலியில் அகிலை நோக்கித் திரும்பினான்.
அவனோ இந்த உலகில் இல்லாது ஆழ்ந்த ஜென் நிலையில் அமர்ந்திருப்பது போலே வெறித்த பார்வையில் கவலை தோய்ந்த முகத்தோடு அமர்ந்திருக்க, சட்டென எழுந்து அவனருகில் சென்றான்.
முதுகில் தட்டி, “வாட் ஹெப்பேன் மச்சான்?” என்க, அதற்குள் “அவனுக்கென்ன காதல் மன்னன் கனவுல இருப்பான்” என்றார் அடுத்த இருக்கையிலிருந்த கார்த்திக்.
“இல்லை ஜி, சோககீதமில்ல முகத்தில் சொட்டுது” என்றபடி அகிலின் தாடையில் கை வைத்து முகத்தை நிமிர்த்தினான் விஜய். 
“ஹெனிமூனுக்கு லீவ் கிடைக்கலைன்னு சோகமா மூச்சை வைச்சு செண்டிமெண்ட் ஸீன் கிரேட் பண்றானா இருக்கும்”
“மே பி, என் மச்சான் காலேஜ் டைம்லையே நடிகர் திலகமாச்சே!”
“நடிப்புக்கு வேணா அவார்ட் கொடுப்பாங்களே தவிர லீவெல்லாம் ஜான்கிட்ட கிடைக்காது”
தன் சிந்தனை குறித்த அவர்களின் அனுமானங்களில் எரிச்சலுற்ற அகில், தன் தோளிலிருந்த விஜயின் கரத்தை விலக்கியபடி, “நத்திங் அட் சீரியஸ், தர்ஷி கூட சின்ன ப்ரோப்ளம்” என்றான்.
சட்டென கார்த்திக்கிடமிருந்து ஒரு கேலிச்சிரிப்பு எழ, சிரிப்புடனே “அகில் நீ காதலித்து கல்யாணம் பண்ணது தப்பில்லை, காதலித்த பெண்ணையே கல்யாணம் பண்ணது தான் தப்பு” என்றார்.
“தத்துவமா? உங்க ஆயா சொன்னதாஜி?” –விஜய்
“இட்ஸ் மீன் லைப்ப என்ஜாய் பண்ணும் மேன், இதுக்கு தான் என்னை மாதிரி இருக்கச் சொன்னேன்” என்றவர் தலை கோத,
“எது மொட்டத் தலையாவா?” என்றான் விஜய்.
“கல்யாணம் குழந்தை குட்டின்னு கமிட்மென்ட்ஸ்குள்ள என்ட்டராகமா இருக்கணும், பெரிய ஞானிகளெல்லாம் சொன்னது”
“யாரு நித்தி சாமியா?”
“தத்துவம் சொன்னா ஏன்டா அனுபவிக்காம ஆராய்கிறாய்?”
“சொந்தமா சொன்னா தானே தத்துவம், ஃபேஸ் புக்ல சுட்டதுமா?”
அப்பாப்பா இதற்கு மேல் இவனோடு வாதம் செய்ய இயலாதென எண்ணியவர், எழுந்து ஓடிவிட, அதுவரை மௌனமான சிரிப்புடன் பார்த்திருந்த அகில், “ஏன்டா விஜய், பாவம்டா மனுஷன்..” என்றான்.
“பின்ன என்னடா அங்கிளுக்கு பொண்ணு கிடைக்கலை, ஊரை ஏமாத்துறார். அதுக்குன்னு ஊருல எவனும் மேரேஜ் பண்ணிடக் கூடாதா?”
ஆறுதல் சொல்லாவிடினும் பரவாயில்லை, சோகத்தில் இருப்பவனைக் கேலி செய்வதென்பது விஜய்க்கு சுத்தமாகப் பிடிக்காதது. அதுமட்டுமின்றி என்னதான் நவீன இளைஞனாக இருந்த போதும், குடும்ப அமைப்புகளையும் அவன் குடும்ப உறவுகளையும் பெரிதும் விரும்புபவன்.
“சரி மச்சான், என்ன தான்டா பிரச்சனை அதுவும் லவ் பண்ணி, இரண்டுபக்க பேரன்ட்ஸ் சம்மதத்தோட மேரேஜ் பண்ண ஒன் மத்ல?”
(அதே நேரம், அதே அலுவலகத்தில் வேறொரு குழுவில் தர்ஷினி & ஆராதனா)
“மேரேஜ் பண்ணதே ப்ரோபளம் தான்” –தர்ஷினி
“ஏங்க லவ் மேரேஜ் தானே! அப்பறம் என்ன பிரச்சனை?” –ஆராதனா
“என்னை, என் குடும்பத்தைத் தெரிந்து தானே காதலித்தாள்? இப்போ வந்து பிடிக்கலைன்னு புலம்புறா!” –அகில்
“முடிலை, நான் சொல்லவரதை காது கொடுத்துக் கேட்கவே மாட்டிக்கான், புலம்பல்ன்னு சொல்லி  இக்னோர் பண்ணறான், அதுவே காதலிக்கும் போது நான் மணிக்கணக்கா பேச பேச மௌனமா கேட்டுட்டு இருப்பான்” –தர்ஷினி
“ஓவரா பேசுறா மச்சான், நான் என்ன நிலைமையில இருக்கேன் கூடா கவனிக்க மாட்டிக்கா” –அகில்
“அகில் என்னைப் புரிந்து கொள்ளவே இல்லை” –தர்ஷினி
“எங்க வீட்டுல சொல்லுற அட்வைஸ் எல்லாம் அவளுக்கு டாச்சரா தெரியுதுடா” –அகில்
“போடுற ட்ரெஸ்ல இருந்து சாப்பிடுற சாப்பாடு வரைக்கும் எல்லாம் அவங்க சொல் கேட்டு மாறி இருக்கேன், என் லைப் ஸ்டைல்லே மாறிட்டு, ஐ பீல் டிப்ரஸ்ட் ஆரா” –தர்ஷினி
“என் பேரன்ட்ஸ்க்கு நான் ஒரே பையன்னு தெரிந்து தானே மேரேஜ் பண்ணா? இப்போ வந்து தனியா போகணும்னு சொல்லுறா, அதுவும் மேரேஜ் முடிந்த ஒரு மாதத்தில்!” –அகில்
“தேவைக்கானது இடம் நகர்வு, தனிக்குடித்தனக்கிறதை என்னவோ குடும்பத்தை பிரிக்க வந்த சீரியல் வில்லி ரேஞ்சுக்கு என்னை பேசுறான் ஆரா” –தர்ஷினி
“நிம்மதியே இல்லைடா மச்சான்” –அகில்
“என் தேவைகள் என்னன்னு அவனுக்குத் தெரியவே இல்லை ஆரா” –தர்ஷினி
“என் பேரன்ட்ஸ் பத்தி பேசியே என்னை கோபப்படுத்துறா, என்னை கேடுகெட்டவனாக்கிடுவா போல இருக்குடா” –அகில் 
“அடிக்க கையோங்குறான், நான் என்ன அவனுக்கு அடிமையா? ஐ ஹவ்  ஸெல்ப்ரெஸ்பெக்ட் அண்ட் ஐம் இன்டிபெண்டட்” –தர்ஷினி
“நேத்து ஈவினிங் ஆபிஸ் முடிச்சு அவளுக்காக நாய் மாதிரி காத்துக்கிட்டு இருக்கேன், அவ பாட்டு ஒரு வார்த்தை கூட சொல்லாம அவங்க அம்மா வீட்டுக்கு போயிட்டா” –அகில்
“நான் எங்க போயிட்டேன்னு தேடக் கூட இல்லை, தேவையில்லைன்னு நினைச்சிட்டான் போல” –தர்ஷினி
“தவிக்க விட்டு போயிட்டா..!” –அகில்
“ஒரு ஃபோன் கூட இல்லை, நிம்மதியா இருக்கான்” –தர்ஷினி
இருவரின் புலம்பல்களையும் கேட்டதில் விஜயும் ஆராதனாவும் தான் ஒரே நேரத்தில் பெருமூச்சு விட்டுக்கொண்டார்.
“அட இவ்வளவு தானா பிரச்சனை? இதுக்காங்க இவ்வளவு பீல் பண்ணீங்க?” என சிறு சிரிப்புடன் ஆராதனா கேட்க, அவளை விநோதமாகப் பார்த்தாள் தர்ஷினி.
“பின்ன இதென்ன சின்ன விஷயமா?”
“ஆமாங்க அசல்டு மேட்டரு சால்ட்டு வாட்டரு” என உள்ளங்கைகளை தட்டிக்கொண்டாள் ஆராதனா.
“நான்பாட்டுக்கு என் வேதனையைப் புலம்பிக்கிட்டு இருக்க, என்ன தனிக்குடித்தனம் போணுமா அதுக்கு தான் ஸீன் போடுறீயான்னு நான் கேட்காதையும் கேட்ட மாதிரி மிகைப்படுத்தி சண்டை போட்டு கையோங்கி இருக்கான். பொண்ணுன்னா பலகீனமானவங்கன்னு நினைப்பு? பொண்ணுங்க பலம் என்னனு தெரியலைல்ல அதை காட்டுறேன் அவனுக்கு” என ஆற்றாமையில் பொரிந்தாள் தர்ஷினி.
“ஏங்க பலத்தைக் காட்ட இதென்ன போர்க்களமா? வாழ்க்கைங்க அதுவும் அனுபவிக்க வேண்டிய காதல் கல்யாண வாழ்க்கைங்க”
“உனக்குப் பெண்ணியமும் பெரியாரிசமும் தெரியாது, நீ சின்ன பொண்ணு சும்மா இரு” என நெற்றியை தேய்த்த தர்ஷினி காஃபி வேண்டி எழுந்து சென்றாள்.
உண்மையான பெண்ணியம் புரியாது அரைகுறையாய் குடும்ப வாழ்கையில் குளறுபடியை பற்ற வைத்துக்கொள்கிறாளே இவள் என பரிதாபமாகத் தான் பார்த்தாள் ஆராதனா.
சமாதானமோ பிரச்சனையைத் தீர்க்கும் என்னமோ இன்றி அவனுக்குப் பதிலடி கொடுக்கும் உறுதியிலே இருப்பவளிடம் அவள் கோபம் குறையும் வரை பேசிப் பயனில்லை என்பதை நன்கு உணர்ந்தாள் ஆராதனா.
வேறு என்ன செய்ய என்றெண்ணத்துடன் திரும்பியவள் கண்ணில் பட்டது மேசையிலிருந்த தர்ஷியின் அலைபேசி.
“என்னடா ஒரு பேச்சுக்கு என்ன பிரச்சனை தானேடா கேட்டேன், அதுக்கு இப்டியா புலம்பித் தள்ளுவ? கேட்டது ஒரு குத்தமாடா?” எனப் பரிதாபமாய் விஜய் கேட்க, “நீ தானே என்னக்கு அவளை இன்ரோ கொடுத்த அனுபவி” என்றான் அகில்.
“காலேஜ் பஸ்ட் இயர்ல தெரியாம பண்ணி தொலைச்சிட்டேன், எனக்கு என்ன அப்போ ஆருடமா தெரியும் நீங்க லவ், மேரேஜ், டிவோர்ஷ்ணு பண்ணி என் கழுதருப்பிங்கன்னு”
“டிவோர்ஸா..! டேய் வாய மூடுற எருமை” என அகில் பதற, “உன் ப்லீங்ஸ் புரியுது மச்சான், என்ன செய்யலாம்னு யோசிக்கலாம் என்ன?” என ஆறுதலாகத் தட்டிக்கொடுத்த விஜயரூபனுக்கு கடலை கடப்பது போன்று பிரச்சனை தீவிரமாகத் தான் தெரிந்தது.
விஜய்க்கு இருவருமே நண்பர்கள் தான் அகிலோ கோபம் வந்தால் மூடனாகி விடுவான் தர்ஷினோ பெண்ணியம் பேசும் பெரியார்வாதி!
காலேஜ் டேஸ்ல இதுங்க லவ் ஸ்டார்ட் பண்ணும் போதே பிரேக்கப் அப் பண்ண வைச்சிருக்கணும் அதை விட்டுட்டு மேரேஜ்ல போய் விருந்து சாப்பிட்டு விஸ் பண்ணிட்டு வந்தேன் பாரு அதுக்கு தான் விதி இவனை என் தலையில கட்டியிருக்கு என நினைத்தவன் அகிலின் முத்தை பார்த்து அமைதியானான்.
“சரி ஒன்னு பண்ணு மச்சான் இன்னைக்கு ஈவினிங் பேசாமா தர்ஷினி வீட்டுக்கு போயிடு, அங்க உன் மாமனார்ட சமாதானம் பேசு”
“அடேய் கொலைகாரா…” என அதிர்ந்தான் அகில்.
“ரைட்டு, தப்பு உன் மேல இருக்கோ மறந்துட்டேன்டா”
“என்ன மச்சான்..”
“நொன்ன மச்சான், தர்ஷினி பத்தி தெரிஞ்சும் கையோங்கி இருக்கன அது தப்பில்லையா? மனைவியா இருந்தாலும் ஒரு பொண்ணுக்கிட்ட உன் வலிமையை காட்டுறது தான் ஆம்பளைங்கற வீரமா? அசிங்கமா இல்லை?”
“அதான் அடிக்கலையேடா..!”
“அதை உன் மாமனார்ட செப்பு செல்லம்”
“எதுக்கு கடுவா மீசை அருவா தீட்டவா?”
“வேற என்ன தான் செய்ய?” விஜயின் குரலில் அகிலும் அகமுமே வாடிவிட, “பொறு மச்சான் கடவுளே ஏதாவது வாய்ப்பு கொடுப்பாரு” எனத் தட்டிக்கொடுத்தான்.
மறுநொடி அகிலின் அலைபேசி அதிர, திரையில் மின்னியது தர்ஷினியின் பிம்பம். அதைக் கவனித்த விஜய், “அட, மாரியாத்தாவே மலையிறங்கி வரா, சமாதானம் செய்” என்றான்.
“ஐயோ அதெல்லாம் முடியாது, மாரியாத்தா மலையிறங்கிட்டாளான்னு கன்போர்ம்  பண்ணி சொல்லுடா” எனப் பதறி அலைபேசியை அவன் கையில் திணித்தான் அகில். 
இவனெல்லாம் பெரிய வீரனாட்டம் ஏன் சண்டை போடுறான்! என நினைத்தபடி அலைபேசியைக் காதில் வைக்க, “ஹெலோ ப்ரதர், மேரேஜ்க்கு பார்ட்டி கொடுக்குறேன்னு  கொடுக்குறேன்னு ஏமாத்திட்டு இருந்தீங்களே இப்போ பாருங்க பிரேக்அப் பார்ட்டி கொடுக்க வேண்டிய நிலைக்கு வந்துட்டு, ஹாஹா..தர்ஷினி உங்க மேல கொலைவெறில இருக்காங்க” என அவன் ஒருவார்த்தை பேசுவதற்குள் அவள் பேசிக்கொண்டே இருந்தாள்.
அந்த குரலிலே அது தர்ஷினி இல்லை என்பதை உணர்ந்து கொண்ட விஜயரூபன் யாரு இவ? ஏற்கனவே கவலையில இருக்குறவனை கடுப்படிச்சிகிட்டு இருக்கா என்ற எரிச்சலில், “அவங்க பிரிவதில் உங்களுக்குத் தான் பெரிய சந்தோஷம் போலே! விட்டா நீங்களே டிவோர்ஸ் வாங்கிக் கொடுத்துடுவீங்க போல இருக்கு?” என்றான் குத்தலாக.
விவாகரத்தா அதிர்ந்த அகில் இதயத்தில் பெரிதாய் ஏமாற்றம் பரவ, அவ்வளோ தூரம் போயிட்டாளா அவ என தர்ஷினியின் மீது சினமும் வளர்ந்தது.  
யாரென்று முகமறியாத பெண்ணிடம் அதிகபடியாகப் பேசிவிட்டோமோ! என விஜய் நினைக்கும் நொடி, “ஹெலோ, இஸ் தேர் அகில்?” என்றாள்.
மௌனமோடு அலைபேசியை அகிலிடம் கொடுத்தவன் தன்னிருக்கை நோக்கிச் சென்றான்.
விஜய் உரைத்ததில் தன் தவறும் புரிய, பிரச்சனை பெரியவர்களுக்கு தெரியும் முன் தீர்க்க நினைத்த அகில், தர்ஷினியை சமாதானம் செய்யும் முடிவில் கேஃபடீரியா அழைத்து வருமாறு ஆராதனாவிடம் கேட்டான்.
பின் தன் அலைபேசியில் மணியைப் பார்த்தவன், விஜயின் அருகில் சென்று உணவருந்த அழைத்தான். மதிய உணவு நேரம் தாண்டியும் இருவரும் உணவருந்தவில்லை என்பதால் மறுக்க இயலாது அவனும் அகிலுடன் கிளம்பினான்.
“யார்டா அந்த அராத்து? தர்ஷினி நம்பர்ல பேசுற” விஜய் கேட்க,
“அராத்து இல்லை ஆராதனாடா” என்றான் அகில்.
“க்கும், இரண்டும் ஒன்னும் தான்”
“ப்ரெஷர் ஃகேர்ள், ஜான்னாகி டூ மன்த் இருக்கும்டா, அதுக்குள்ள தர்ஷி கூட நல்லா க்ளோஸ் ஆகிட்டா”
“அதான் தர்ஷினி போன்ல பேசும் போதே தெரியுதே”
“இன்ரோ கொடுக்கவா மச்சி” என்க, வாயை மூடும் படி சைகை செய்தான் விஜய்.
பேசியபடியே உள்ளே வந்த இருவரும் ஒரு மேசையில் சென்று அமர்ந்தனர். அகில் அலைபாயும் விழியோடு வாசலைப் பார்த்தபடி இருக்க, விஜய் தலை குனிந்து அலைபேசியை கவனித்தான். சில நிமிடங்களில் அவன் முன் நிழல் படர நிமிர்ந்து பார்த்தவன் எதிரே அமர்ந்திருப்பவளைப் புதிதாகாப் பார்த்தான்!
ஆலிவ் நிறத்தில் க்ளோஸ்ட் நெக், த்ரீ ஃபோர்த் ஹேன்ட் குர்த்தியில் சுருள் கேசம் காற்றிலாட, கதி லாடும் பெரிய வளையமும், மையிட்டு நீண்டி வளைந்த புருவங்களோடும் சிநேக சிரிப்பில் விரித்த இதழ்களோடும் அமர்ந்திருந்தாள் ஆராதனா.  
புதுப்பார்வை அவன் பார்க்க, புரியாத பார்வை அவள் பார்க்க, “தர்ஷி எங்கே..?” என்ற அகிலின் குரல் இருவரையும் கலைத்தது.
“வரலைண்ணா..” பார்வையை அகிலிடம் திருப்பி மெல்லிய குரலில் பதிலளித்தாள்.
அகிலின் முகம் கோபத்தில் சிவக்க, “நான் கூப்பிட்டேன்னு சொன்னீயா ஆரா..?” எனக் கேட்டான்.
ஆமென அவள் தலையாட்ட, விஜயின் பார்வை அவளை வருட, பெங்களூர் தக்காளி வித் நூடுல்ஸ் மண்ட அழகா தான் இருக்கா என்றெண்ணியது அவன் மனது!
சிவந்த நிறம், முதல் பார்வையில் யாரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் திருத்தமான அழகு! கல்லூரிப்பெண் போன்ற தோற்றம்.
“அதான் வரலை, தெரியும் எப்பவும் இப்படி தான்! என்னை அலைய விடுறதே அவளுக்கு வேலையா போச்சு” என்றவனின் குரலில் கோபமிருந்த போதும் உள்ளத்தில் பெரும் வலி இருந்தது.
தான் மட்டுமே தங்கள் உறவை சரிப்படுத்திக்கொள்ள முனைய, அவளோ உறவுக்கான சிறு  மரியாதை கூட தரவில்லை. மன்னிப்பு வேண்ட, சமாதானம் பேச அழைக்கிறேன் எனத் தெரிந்தும் தவிர்க்கிறாள் எனில் தன்னை அலைய விடுவது தானே அவள் நோக்கம் எனக் கற்பித்துக்கொண்டவனுக்குச் சினம் துளிர்த்தது. அவள் கோபம் கொள்கையில் காதலனாக இருந்த போது கிலோ மீட்டர் கணக்கில் அலைந்தவன் கணவனான போது ஒருபடி இறங்கி வர இயலவில்லை!
“அப்படியில்லை அண்ணா கொஞ்சம் உங்க மேல கோபமா இருக்காங்கல்ல அதான்..” என்றவளின் சமாதானம் அகிலின் காதில் ஏறினாலும் மூளையில் பதியவில்லை.
“ஏன் அவளுக்கு மட்டும் தான் கோபம், சூடு சொரணையெல்லாம் இருக்குமா? எனக்கும் இருக்கு, இனி அவளா பேச வந்தாலும் நான் பேசுறதா இல்லை. இதை அவகிட்ட மறக்காம சொல்லிடு ஆரா” எனக் கத்திவிட்டு எழுந்தவன் நண்பனையும் மறந்துவிட்டு விறுவிறுவென சென்று விட்டான்.
“டேய் அகில் கொஞ்சம் நில்டா..” என்ற விஜயின் அழைப்பு காற்றில் கரைந்த கற்பூரம் தான்.
இன்ரோ கொடுக்குறேன்னு சொல்லிட்டு இப்படி ஓடிட்டான் கடக்காரப் பாவி மனதில் திட்டிக்கொண்டான்.
அகில் நில்லாது சென்றுவிட, அவள் புறம் பார்வையை திருப்ப, அவள் விழிகளும் அவனை நேராக மோத, “ஒரு ப்ரேக்கப் பார்டி மட்டன் பிரியாணிக்காக உன்னால என்ன செய்ய முடியுமோ அதை சிறப்பா செய்துட்ட!” என்றான்.
சற்று முன் அலைபேசியில் பேசிய போதும் இதை உரைத்தது நினைவில் வர, அவன் உசுப்பேத்திவிடுவதை உணராது  “நான் அவங்களை சேர்ந்து வைக்கத் தான் முயற்சித்தேன்” என்றாள் ரோஷமாக!
அவள் கோபம் அறிந்தும், அவன் அழைத்ததை அவளிடமும் அவள் மறுத்ததை அவனிடமும் போட்டுக்கொடுத்துவிட்டு இப்போது பாவமாக முகத்தை வைத்திருப்பதைப் பார்!
பார்த்தான், ரோஷமாக இறுகிய, குவிந்த உதடுகளிலில் புன்னகை மறைய, மூக்கின் நுனியில் ஏறியிருந்த சிவப்பு கிள்ளிவிட தோன்றியது. கைவிரல்களை உள்ளுக்குள் மடக்கிக்கொண்டு, தன் இயலாமையில் அவன் மீது எழுந்த எரிச்சலை கட்டுப்படுத்துவது போன்ற தோற்றம்!
உஷ்ணமாய் பார்த்த அவன் பார்வையை ஓரம் தள்ளியது என்னை புரிந்துகொள்ளேன் எனக் கெஞ்சிய அவள் அஞ்சல் பார்வை!
இவள் எதற்கு உள்ளே வந்தாள்? எங்குப் பிரச்சனை என்றாலும் செம்பு இல்லாத லேடி நாட்டாமையாகக் களத்தில் குத்தி விடுவாளோ! என்றெண்ணிய நொடி அவனிதழில் மெல்லிய புன்னகை உதிக்க, “சரி எப்படி சேர்த்து வைப்ப?” என்றான் இளகிய குரலில்.
“அதுக்கு உங்க ஹெல்ப் வேணுமே?”
“நானா..! என்ன ஹெல்ப்?”
“அதுங்க, தர்ஷினியை நான் கூப்பிட்டா இனி வர மாட்டாங்க சோ எங்க லஞ்ச் டைம்ல உங்களுக்கு இன்போர்ம் பண்றேன் நீங்க அகில் அண்ணாவை கூட்டிட்டு வாங்க”
எங்கு தவறினாலோ அங்கே திருத்திக்கொள்ள முயன்றாள்.
எரிமலையை என் தலையில தூக்கி வைக்கிறாளே ரொம்பவும் விவரம் தான்! என நினைத்த போதும் அவன் தலை அவனையும் மீறி சம்மதம் தெரிவிக்க, அவன் அலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டாள்.
தன் அலைபேசியில் பதிவு செய்து கொண்டிருந்தவள் தலை குனிந்திருந்தபடியே, “யுவர் ஸ்வீட் நேம் ப்ளீஸ்?” என்றாள்.
இதற்கு முன்னும் அவர்களுள் பிரச்சனை வரும் தான் ஆனால் பெரியவர்களைக் காரணமாகக் கொண்டு இதுபோன்ற பிரச்சனைகள் வந்ததில்லை, அதுவும் போக, ஒரே நாளில் அவர்களுக்குள்ளே சமாதானம் செய்து கொள்பவர்கள் இந்த முறையோ கணவன் மனைவியாக மூன்று நாட்கள் பிரித்து இருக்கின்றனர் என்பது விஜயை வருந்தச் செய்தது. இவனிடம் இதுவரை பிரச்சனையைக் கொண்டு வந்ததில்லை, உதவுகிறேன், தீர்த்து வைக்கிறேன் என உதவியும் பழக்கமில்லை. நண்பர்கள் இருவருமே இத்தனை பிடிவாதத்தில் இருக்கையில் எவ்வாறு பிரச்சனை தீர்ப்பது என நொந்துபோய் இருந்தவனுக்கு இவளாகவே உள்ளே வர, கிடைத்த வாய்ப்பாக பற்றிக்கொண்டான்.
அவன் மௌனத்தில் நிமிர்ந்தவள் வார்த்தையின்றி புருவங்களை ஏற்றி கேள்வியை நிறுத்தி வைக்க, அச்செயலில் மிளிர்ந்த அழகும் அருங்கவிதையா தோன்றியது அவனுக்கு!
“விஜயரூபன்..” அவன் பதிலில் அவளும் ஒருமுறை சொல்லியபடி, “நைஸ் நேம்..” என்ற முனங்கலோடு அலைபேசியில் பதிவு செய்து கொண்டாள்.
அது அவன் காதுகளிலும் தெளிவாக விழ, அவன் பார்வை விரிய, எழுந்தவள், “ஹார்ட்லி தேங்க்ஸ் ஃபார் யுவர் ஹெல்ப்..” என முறுவலோடு விடை பெற்றுத் திரும்பினாள்.
அவள் சென்று மறைந்த பின்பும் விழி விலகவில்லை அவள் பிம்பம்!
ஆனால் அவள், அந்த பிம்பம் எங்கையோ பார்த்த நியாபகம்!

Advertisement