Advertisement

பார்ப்பதற்கே ரௌடி போன்று இருந்தவனிடம் சில நிமிடங்களாக யாருமின்றி வாதிட்டுக்கொண்டிருந்தாள். அது வரையிலும் உள்ளுக்குள் ஒரு பயம், விஜயின் வரவை கண்டதும் அத்தனை ஆசுவாசம், ஒரு தைரியம்! 
“நீ தாமே என் வண்டியில இச்சே, எம்மா பத்திரமா பந்துஷா வச்சிருப்பேன் தெரியுமா என் வண்டியே?” என்றவன் கத்த, 
“இல்லை நான் ரிவர்ஸ் வரும் போது நீங்க தான் உள்ள வந்து இடிச்சீங்க” என்றவள் சொல்லும் போதே அருகில் வந்து நின்றான். 
“இதோட பொண்ணுக்கு ஒன்னுனா ஹீரோவாட்டம் உள்ளார வந்திடுவாங்கலே” என விஜயை பேச, “அவன் வேணும்னே வந்து இடிச்சிட்டு என் மேல தப்பு சொல்லுறான்” என ஆராதனா புகார் தெரிவித்தாள். 
“நீ தாமே இச்ச, பெய் சொல்லாதமே” என்றவன் ஏகிற, “சரி வா ஸ்டேஷன் போலாம்” என்றான் விஜய். பணத்திற்காகப் பிரச்சனை செய்கிறான் எனப் பார்த்ததுமே விஜய்க்கு புரிந்திருந்தது. 
ஒரு நொடி அரண்டவன் பின் அசட்டுத் தைரியத்துடன், “யாராண்ட இந்த ஏரியா இன்ஸ் நம்மாளு, பார்த்திடலாம் வாடா போலாம்” என்றான். 
“கிளம்பலாம் வா..” 
பார்த்துக்கொண்டிருந்த ஆராதனா பயந்தே விட்டாள். இந்த வண்டியை வாங்குவதற்கு வீட்டில் எத்தனை போராட்டம்! இது மட்டும் அவள் தந்தைக்குத் தெரிந்தது வண்டி பறிமுதல் மீண்டும் ட்ரைவரின் கண்காணிப்பில் கல்லூரி! 
“இல்லை அதெல்லாம் வேண்டாம், வண்டி சரி செய்ய எவ்வளவு ஆகும்னு சொல்லுங்க நான் தந்திடுறேன்” என்றவள் வேகமாகச் சொல்ல, 
“ஒரு த்ரீ தௌசண்ட் வேணா கொடுமே” 
“வேணா என்ன வேணா? வேணும்னே தானே இடிச்சிட்டு இப்படி பேரம் பேசுற? ஸ்டேஷன் வா நீ”  
“ஏய் என்ன ரொம்பத் துள்ற? ஒரு கீசு தான் கீசுடுவேன்” என்றவன் பாக்கெட்டிலிருந்து கத்தியை எடுத்துவிட, சட்டெனப் பயத்தில் ஆராதனா முன் சென்று பணத்தை நீட்டினாள். 
எங்கே உதவி என வந்த விஜய்க்கு எதுவுமாகி விடுமோ என்ற பயம்! 
விஜய் வேண்டாமென்று மறுக்க, அதை கேளாது அவள் பணம் கொடுக்க, அவனோ வாங்கிய மறுநொடி ஓடிவிட்டான். 
விஜய் சினத்தோடு விரைப்பாக நிற்க, “தேங்க்ஸ்..” என்றாள் அவனை நோக்கி. 
“போய் குப்பையில போடு உன் தேங்க்ஸை! என்ன உன் பணத்திமிரை காட்டுறையா நீ? உழைப்பு, பணத்தோட அருமை எல்லாம் தெரியுமா உனக்கு? அதெல்லாம் உனக்கு எங்க தெரிய போகுது, இப்போ புதுசா வசதி வந்தவங்களே ஆட்டிட்டூட் காட்டும் போது உன்னையெல்லாம் சொல்லவா வேணும்? ச்சே, இதை புரிஞ்சிக்காம உனக்காக வந்து நின்னனே என்னை சொல்லணும்!” என வெறுப்போடு அவளை பார்த்தவன் உதறிச் சென்றான். 
பணத்தை விடவும் உயிர் பெரிதில்லையா? ஏன் என் மீது இத்தனை கோபம்! என்னை பற்றிய அவன் எண்ணம் தான் என்ன? புரியாது நின்றாள். 
சில மாதங்களுக்குப் பின் மிதுனின் பிறந்தநாள் வர, கொண்டாட்டத்திற்கு சுபத்ராவின் வீட்டிலிருந்து அனைவரையுமே அழைத்திருந்தாள். ஜெய்பிரகாஷ் தன் சிறுவயதின் ஏக்கங்கள் சிறிதும் மகனுக்குத் தோன்றிவிடக் கூடாதென வளரும் பொழுதே செல்வா செழிப்பாக வளர்த்தார். அவனின் சிறு சந்தோஷத்திற்கு எவ்வளவு வேண்டுமெனினும் செலவு செய்யத் தயாராய் இருப்பார். அவனின் ஒவ்வொரு பிறந்தநாளும் வெகு விமர்சையாகக் கொண்டாடி மகிழ்வார். 
அன்றும் விமர்சையாக மாலை நேரம் அவர்கள் வீட்டில் ஏற்பாடு செய்திருக்க, அனைவருமே வந்து வாழ்த்தி, பரிசு வழங்கி கொண்டாட்டத்தில் இருந்தனர். மிதுனுக்கு ரவி தங்கச்சங்கிலி அணிவிக்க, எப்போதும் அவர்கள் சீர் வரிசைகளில் நுண்ணோக்கி வைத்தாவது குறை கண்டுபிடித்துக் குத்திக்காட்டும் சித்ராவே அதை எதிர்பாராது வாயடைத்து நின்றார். ஜெய்பிரகாஷ் அனைத்தையும் கவனமாகக் கவனித்தபடி மௌனமாக இருந்தார். 
அன்றைய விழாவில் ஆராதனாவும் சிவப்பு நிற லேகாங்காவில் தேவதையாய் சுற்றி வந்து அனைவரின் பார்வையும் கவர்ந்திருந்தாள். விஜயரூபனும் அவளை கவனித்தானே தவிரப் பெரிதாக ரசிக்கவில்லை. அந்த வயதில் அவன் கவனமெல்லாம் வேலையில் ஸ்திரப்படுத்திக் கொள்வதிலே இருக்கு, யுவதிகளை ரசிக்கும் மனோபாவம் இருந்திருக்கவில்லை! 
விழா முடித்து அனைவருமே கிளம்பியிருக்க, சுபத்ராவின் குடும்பத்தினரும் அப்போது தான் கிளம்பியிருந்தனர். ரவி, கௌஷி, பவானியோடு ஆட்டோவில் சென்று விட்டான். விஜய் மட்டும் பைக்கில் வந்ததால் இறுதியாக கிளம்ப, அவனை கண்டுகொண்ட சித்ரா, “விஜய் இந்த சேர் எல்லாம் எடுத்து உள்ள வைச்சிட்டுப் போப்பா” என்றார். 
எப்படியும் காலையில் வேலையாள் வந்து சுத்தம் செய்வர் தான், இருந்தும் அவர் அவனை ஏவ, கடுப்பானான். அக்காவின் வீடு என்பதால் மறுக்க இயலாது, அதையும்  செய்தான். 
எடுத்து போட்டுவிட்டு கை கழுவவென வாஸ் பேஷன் நோக்கிச் செல்ல, பக்கத்து அறையிலிருந்து கேட்டது ஜெய்பிரகாஷின் குரல். 
“ஏன் சுபத்ரா உங்க அண்ணன் போட்ட செயின் நல்லாயிருக்குல..”
“ஆமாங்க, பெருசாவும் இருக்கு..” என்றாள் ரசித்தபடி.
“எப்படியும் ஐந்து சவரன் இருக்குமா..?”
“இல்லைங்க, கொஞ்சம் வெயிட்டாவும் இருக்கு ஏழு சவரனாவது இருக்கலாம்” 
“ஏன் சுபத்ரா, உங்க அண்ணன் கல்யாணத்துக்குத் தாலி, செயினோட எடுத்துப்போட்டோமோ அது எவ்வளவு இருக்கும்? ஏழு தானே.!”
:”ஆமாங்க..?” என்றவளின் குரலே உள் இறங்கியது. என்ன பூகம்பம் வரப் போகிறதோ என மனம் பதைபதைத்தது. 
“ம்ம், நாம உறவா நினைச்சி செஞ்சதை பொருளா நினைச்சு திருப்பி செஞ்சிட்டுப் போறான், அப்போ நம்ம உறவு வேண்டாம்னு முடிவு செய்துட்டேன். அப்படி தானே?”
“ஐயையோ, இல்லைங்க ரவி அப்படியெல்லாம் நினைக்க மாட்டான்” என்றாள் சட்டென. 
“ஆனால் நான் அப்படி தான் நினைப்பேன். ஏன் நம்ம பையன் முதல் பிறந்தநாளுக்கோ அதுக்கு அடுத்து வந்த விசேஷத்துக்கோ இவ்வளவு செஞ்சது இல்லையே! இந்த முறை மட்டும் ஏன் இவ்வளவு அதுவும் கணக்கா? அப்போ என்ன அர்த்தம், நாம செஞ்சதை திருப்பி செஞ்சி இருக்கான்!”
“அப்படி எல்லாம் இல்லைங்க, முன்ன கொஞ்சம் கஷ்டம். இப்போ தான் விஜயும் வேலைக்கு போறான்ல அதனால இரண்டுபேருமா சேர்ந்து செய்து இருக்காங்க”
“நோ, சுபத்ரா! நீயே கல்குலேட் பண்ணிப்பாரு. நம்ம வசதிக்கு நாம செஞ்சது சாதாரணம். அதுவே உங்க வீட்டு நிலைமையில இருந்து இது அதிகம் தான். அதுலையும் இப்போ தான் அவனுக்கு கல்யாணம் முடிச்சி இருக்கு. அந்த செலவே இன்னும் சரி செய்திருக்க முடியாதே!” 
சுபத்ரா பதிலின்றி வாயடைத்து விட்டாள். ரவி இவ்வாறு நினைத்து தான் செய்துள்ளானோ என நினைக்க, நெஞ்சினோரத்தில் ஒரு வலியோடு கண்களில் கண்ணீர் நிறைத்தது. 
அது வரை தன் வாதமே சரியெனப் பிடிவாதமாக நின்ற ஜெய்பிரகாஷ், அவள் கலக்கம் கண்டதும், “ஏய் சுபத்ரா இப்போ என்ன சொல்லிட்டேன்னு நல்லநாள் அதுவுமா கண்ணைக் கசக்குற?” என்றபடி அருகில் வந்து ஆறுதலாய் அணைத்தார். 
“விடுங்க, நீங்க எப்படி எங்கண்ணன் பாசத்தைக் கணக்கு பார்க்கலாம்..?” என விசும்பியபடி அவளும், “மக்கு, இவ்வளவு நேரம் என்ன கதையா சொன்னேன்? உன் பாசத்தை அவன் தான் நிறுத்துப் பார்க்குறான். எப்படி பாசத்தைக் கணக்கா பார்க்கலாம்கிறதை அவங்கிட்ட போய் கேளு” என்றார் அவரும். 
விஜய்க்கு அதற்கு மேல் நொடி கூட அவர்கள் உரையாடலைக் கேட்டுக்கொண்டு நிற்க முடியவில்லை. அவன் பெரிய பிஸ்னஸ் மேன்னாக இருக்கலாம் அதற்கான அனைத்தையும் கணக்கிடும் கண்ணால் பார்ப்பதா? அவனாலும் ரவியின் அன்பை அளவிடுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 
தந்தைக்குப் பின் தன்னலமின்றி குடும்பத்தைத் தாங்குபவனே அவன் தானே அவன் மீதே சந்தேகிப்பதா? ஜெய்பிரகாஷின் சட்டையைப் பிடிக்கும் அளவிற்கு ரௌத்திரம் பொங்கியது. அக்காளின் கணவனை என்ன செய்ய இயலும்? அக்காவாது அழுத்தமாகச் சொல்ல வேண்டாமா? என்ன செய்வாள் அவளும் தான் மாறிவிட்டாளே ஆத்திரத்துடன் விறுவிறுவென வெளியேறினான். 
வாசலிலிருந்து வெளி கேட் நோக்கி இருளான பகுதியில் நடந்து வந்தவன் வீட்டின் பக்கவாட்டுத் தோட்டத்திலிருந்து வந்த ஆராதானாவின் மீது மோதிவிட, எதிர்பாராது திடீரென பெரும் விசையில் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்திருந்தான். 
மோதியதில் அவள் நிலையாக நின்றிருக்க, கீழே விழுந்தவன் தான் பரிதாபமாக இடுப்பைப் பிடித்துக்கொண்டு எழுந்தான். அவன் விழுந்த நிலையும் எழுந்த கோலமும் பார்த்து அவளோ அடக்க முடியாமல் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தாள்.  
அதில் அடக்க முடியாமல் அவனுக்குச் சினம் வர, முறைத்தபடி நிலையாக நின்றான். ஏற்கனவே கவலையில் இருப்பவனை நோக்கி என்ன கேலிச்சிரிப்பு? என அந்த சினமும் சேர்ந்து கொண்டது. 
“உனக்கு என்ன கண்ணா தெரியலை..?” எனக் கத்தினான். 
இவனா வந்து மோதிட்டு என்னைத் திட்டுறான் என அவளும் புரியாது நிற்க, “தெரியாது, அது எப்படி தெரியும்? உங்க கண்ணுக்குப் பாசத்தை விடப் பணம் தானே தெரியும்!” என மேலும் கத்தினான். 
என்ன பாசம், பாயசம்னு உளறுறான்? புரியாது விழித்தாள். 
“பார்த்துப் பேசுங்க, நீங்களே மோதிட்டு நீங்களே திட்டவும் செய்வீங்களா?” அவளும் ரோஷமுடன் நிமிர்ந்து நின்றாள். 
“ஏது நான் மோதுனனா?”
“பின்ன நானா..?” 
இவன் மேல மோதணும்னு எனெக்கென்ன ஆசையா! லூசா இவன்? எதிர்பாராது நடந்ததிற்கு அவனே அர்த்தம் கற்பித்துக்கொண்டு உளறுகிறான். இருந்தும் அவன் தவறுக்கு என்னை எப்படி அவ்வாறு சொல்லலாம் என்ற ஆத்திரம் அவளுக்குள்ளும் இருந்தது. 
“ஆமாம் நீ தான், பாதிப்புகளையே பழியையோ நீ ஏத்துக்கிடப் போறதில்லை. மோதிட்டு பணம் கொடுத்துச் சரி கட்டுறது தான் உனக்கு பழக்கமாச்சே!” என்றவனின் கடுமையான வார்த்தைகளை தாங்க இயலாது வாடினாள். கண்கள் கூட லேசாகக் கலங்கிவிட்டது. 
என்னைப் பற்றிய நல்லெண்ணமே இவனுக்கு வராத? நெஞ்சம் விம்மியது! 
“அது..அன்னைக்கு ஏதோ ஒரு தடவை தெரியாம…” என்றவளின் வார்த்தைகளை முழுதாக முடிக்கக் கூட விடாது, “ச்சே! பேசாத நீ, உங்க முகத்துல முழிக்கவே வெறுப்பா இருக்கு” என்றவன் நில்லாது சென்றும் விட்டான்.   
அந்த வார்த்தைகளும் அவளுக்கு முகத்திலடித்தது போன்றிருக்க வாடினாள். யாருமே இதுவரை அவள் முகம் பார்த்து இவ்வாறு பேசியதில்லை. அவளிடம் விரும்பி வந்து நட்பு பாராட்டுவர்! 
என் மீது கோபமா? இல்லை என் மீது தவறான புரிதலா? ஏதோ ஒன்று போகிறேன், இவனிடம் நற்சான்றிதழ் தேவையுமில்லை, இவன் என்னைப் பாதிக்கப் போறதுமில்லை! என்று சொல்லிய வலித்த மனதை சமன் செய்ய முயன்றாள். 

Advertisement