Advertisement

அத்தியாயம் 08
அந்த வார இறுதியில் சுபத்ரா அன்னை வீட்டிற்கு வந்திருந்தாள். அவளை வரவேற்ற பவானி, “பேரனை கூட்டிட்டு வரலையா..?” என்க, “அவனுக்குக் காய்ச்சல் இப்போ தான் சரியாகியிருக்கும்மா, அதான் அலைச்சல் வேண்டாம்னு விட்டுட்டு வந்துட்டேன்” என்றாள். 
மனதில் ஏக்கமிருந்த போதும் பேரனின் நலம் விசாரிக்க, பதில் உரைத்த சுபத்ரா, “பொண்ணு வீட்டுல என்னம்மா சொன்னீங்க? அவர்கிட்ட கேட்டதுக்கு வர சனிக்கிழமை ப்ரீ தான் போகலாம்னு சொன்னார். எல்லாருமே போய் பார்த்து, பேசிட்டு வருவோம்” என்றாள். 
“தேவையில்லை சுபத்ரா..”
“ஏம்மா அவங்க எதுவும் வேண்டாம்னு சொல்லிட்டாங்களா..?”
“இல்லைடி, ரவியே போய் அவங்க வீட்டுல பேசிட்டு பொண்ணையும் பார்த்துட்டு வந்துட்டான்”
“ஏன்? நான் தான் மறுநாள் காலையிலே போன் பண்ணிச் சொன்னேனே இன்னொரு நாள் போகலாம்னு..”
“நீ சொல்லுறதுக்கு முன்னாடி நானே போன் பண்ணி இதை தான் சொன்னேன். ரவிக்குத் தெரியாது போல, வரோம்னு சொல்லிட்டு வரலைன்னு நினைச்சிப்பாங்களோ என்னவோன்னு அவனை மறுநாள் வேலை முடியவும் போயிட்டு வந்து இருக்கான். எங்களுக்கே தெரியாது வீட்டுக்கு வந்து பொண்ணு போட்டாவை காட்டும் போது தான் சொன்னான். இரு போட்டோ எடுத்துட்டு வரேன்” என்றவர் எழுந்து செல்ல, அதிர்ச்சியில் சிலையாக அமர்ந்திருந்தாள் சுபத்ரா. 
ரவியின் செய்கை எனக்கு நீங்கள் யாரும் தேவையில்லை என வீம்பாக சொல்லுவது போலிருக்க, சுபத்ராவிற்கு தெளிவாகப் புரிந்தது. ஆனால் பாவம் வெகுளி பவானிக்குப்  புரியவில்லை. 
சுபத்ரா வர இயலாது என்பதை விஜயிடம் தெரிவித்த அன்று இரவே பவானி பெண்வீட்டிற்குத் தொடர்பு கொண்டு பிறிதொரு நாள் வருவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் முகவரி ரவியிடம் இருக்க, மாலை வேலை முடித்தும் அவனே நேராகக் கிளம்பி விட்டான். 
கௌஷியின் அன்னை சில வருடங்களுக்கு முன் தவறியிருக்க, அண்ணன் வெளிநாட்டில் வேலையிலிருந்தான். நல்ல கணவன் மட்டுமல்லாது நல்லதொரு குடும்பத்தில் அவளை திருமணம் செய்து கொடுத்துவிட்டு நிம்மதியாக அவள் தந்தையும் வெளிநாடு சென்றுவிடும் முடிவிலிருந்தார். தரகரின் மூலமாகக் கடந்த வாரமே ரவியின் ஜாதகம் வந்திருக்க, நன்கு விசாரித்திருந்தார் அவள் தந்தை. 
விசாரித்த வரை, சிறுவயதிலே குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்டவன், திறமைசாலி, பொறுப்பானவன், பொறுமையானவன் என அவருக்குத் திருப்தியாக இருந்தது. 
அதே நேரம் அவனே நேரடியாக வந்து தன் வீட்டினர் வர இயலாததிற்குக் காரணம் தெரிவித்துவிட்டு கௌஷியும் பார்த்து பிடித்தும் இருக்கிறதாக தெரிவித்துவிட்டான், அவன் நேரடி அணுகுமுறை அவரை ஈர்க்க, அவன் குடும்பத்தினரை ஒருமுறை பார்த்தப் பின் நிச்சியகார்த்தம் வைத்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தார். ரவிக்கு முழு திருப்தி. 
அடுத்த வார இறுத்தில் அவர் வர இருப்பதைத் தெரிவித்தபடி, சுபத்ராவிடம் கௌஷிகாவின் புகைப்படத்தை நீட்டினார். வாங்கிப் பார்த்தவளுக்கு முதல் பார்வையிலே கௌஷியை பிடித்திருந்தது, தன் உடன் பிறந்தவனுக்குப் பொருத்தமான ஜோடியாக இருப்பாள் என உள் மனம் உரைக்க திருப்தியுற்றாள். 
ஆனால் தன் பிறந்தகத்தில் இரண்டு நாட்களில் இத்தனை நடந்திருக்கிறது, தன்னிடம் தெரிவிக்கக்கூட இல்லையே என்கையில் மனதில் பெரிதும் வலித்தது. யாருமே இல்லாது போல் ரவியே சென்று பேசியிருப்பது உடன் பிறந்தவளான உன் உறவு இருந்தும் எனக்கு வீண், நீ எந்த வகையிலும் எனக்குத் தேவையில்லை. உன்னைச் சார்ந்து, உன்னை எதிர்பார்த்து நான் இல்லை என முகத்தில் அறைவது போல் நிரூபித்து விட்டான். 
நான் தான் வருகிறேன் என்றிருந்தேனே அதற்குள் என்ன அவசரம் அவனிற்கு? என ஆற்றாமையில் பொங்கினாள். ரவியின் மீது கோபமில்லை, ஆனால் தன் இயலாமையை  எண்ணித் தவித்தாள். 
சரியாக அதே நேரம் வெளியே சென்ற ரவி வர, ஆற்றாமையில் நேரடியாகக் கேட்டே விட்டாள். 
“ஏன் ரவி நாங்க தான் வரேன்னு சொல்லியிருந்தோமோ? அதற்குள்ள என்ன அவசரமென பெண் வீட்டிற்கு நீயே சென்றாய்?” 
“எதுக்குனா? உன் ஹஸ்பென்ட்க்கு முக்கியமான வேலைகள் நிறைய இருக்கும் அதையும் விட உன் பேமலில முக்கியமான ஃபங்க்ஷன் எல்லாம் இருக்கும், அதான் உன்னை எதுக்கும் தொந்தரவு செய்யக் கூடாதுன்னு நினைச்சேன்” 
அவன் வெகு சாதாரணமான முகபாவனையில் உரைக்க, பவானிக்குப் புரியவில்லை எனினும் சுபத்ராவிற்கு குத்தியது. 
“அது திவ்யா வீட்டுக் கல்யாணம் முக்கியமா போக வேண்டியிருந்தது உங்களுக்குத் தான் தெரியுமே என் மாமியார் என்ன பேச்சு பேசும்னு..”
“உங்கிட்ட நான் காரணம் கேட்கலையே…”
“அதுக்குன்னு இப்படியா செய்வ?”
“பின்ன என்ன செய்யணும்? உனக்குக் கல்யாணம் பேச அப்பா இருந்தார், எனக்கு யார் இருக்கா?”
“ரவி…” குரல் கரகரக்க, கண்களில் கண்ணீரோடு நின்றாள். 
அவனுக்கு அதே வலி தான் ஆனால் அதை அவன் வெளிக்காட்டவில்லை. அது வரை அமைதியாக இருந்த பவானிக்கு அப்போது தான் பிள்ளைகள் வாதத்தின் அர்த்தமே புரிந்தது. புரிந்தும் யார் பக்கம் பேசுவதெனத் தெரியாத நிலையில் நின்றார். 
அறியாமலே சுபத்ராவின் செயல் ரவியைக் காயப்படுத்தியிருக்க, ரவியின் செயல் அதற்குக் குறைவில்லாத பதிலடியாய் இருந்தது சுபத்ராவிற்கு. உடன் பிறப்புகள் ஒரே உதிரம் தானே! 
அவள் கண்ணீரோடு நிற்பதைக் காணச் சகிக்காது, “அம்மா இப்படி அழுது டிராமா பண்ணாம கிளம்பச் சொல்லுமா..! புதுசா பணம் வந்துட்டா உடன் பிறப்பு, பந்த பாசமெல்லாம் பறந்து போய்டும் போலே” என்றான். சுபத்ரா அழுதே விட்டாள். 
“ரவி அப்படி சொல்லாத, எதுவுமே செய்ய முடியாத நிலையில நான் என்ன செய்திருக்க முடியும்?”
“ம்ம், உன் மாமியார்ட சொல்லிட்டு நீ இங்க வந்திருக்கணும்”
“அது எப்படி ரவி முடியும்?”
“அப்போ உனக்கே என்னை விட அவங்க தானே முக்கியம்..!”
“உனக்கு சொன்னா புரியாது, அந்த வீட்டு மருமகளா நான் அங்க நிற்க வேண்டியது என் கடமை”
“எனக்குப் புரியவே வேண்டாம், நான் யாரையும் எதிர்பார்த்து இல்லை” என்றவன் தன்னறை நோக்கிச் சென்றுவிட, சுபத்ரா கண்ணீரோடு நின்றாள். 
சிறிது நேரம் அன்னையின் மடியில் படுத்து அழவேண்டும் போல் இருந்தது, அவரோ அவளுக்கு சமாதானம் சொல்லாமல் கோபமாகச் சென்ற மகனின் பின் சென்றுவிட, அவள் கைப்பேசியோ கடமை என அவளை அழைத்தது.  
ரவியிடம் வந்த பவானி, “என்ன இருந்தாலும் பாப்பாவை நீ அப்படிப் பேசியிருக்கக் கூடாதுப்பா” என கண்டிப்பில்லாது வருத்தமாக உரைத்தார். 
“உண்மையை தானேம்மா சொன்னேன், சொல்லிக்காட்டக் கூடாதுன்னு தான் இருந்தேன் இருந்தாலும் என்னால முடியலைம்மா. நம்ம பாசம் அவங்களுக்கு செல்லாக்காசு தான்!  உங்க மாப்பிள்ளையும் பேரனும் ஒரு நாளாவது நம்ம வீட்டுல வந்து தங்கியிருக்காங்களா? வர மாட்டாங்க ஏன்னா நம்ம வீடு அவங்களுக்கு வசதி படாது. இப்போ தானே அவருக்குத் தொழில் நல்லாப் போகுது அதான் புதுசா வந்த வசதியில சுகம் பார்த்துட்டாங்க, அவங்க கூட பரவாயில்லை சுபத்ராவும் மாறிட்டாலேம்மா..! இல்லைன்னு சொல்ல முடியுமா? அப்பா இறந்த மறுநாளே விட்டுட்டு போனவ தானே?” என தன் மனதிலிருந்ததைக் கொட்ட, பதில்லாது மௌனமானார் பவானி. 
வசதி வாய்ப்புகள் இருந்தால் என்ன இல்லையென்றால் என்ன பெரும்பாலும் திருமணமான பெண்கள் கடமைக்கும் பாசத்துக்குமிடையில் தவிக்கின்றனர் என்பதை அவன் உணரவில்லை.  
வீட்டிற்கு வந்திருந்த சுபத்ரா அன்றிரவு கணவனில் நெஞ்சில் விழுந்து அழுது தீர்த்தாள். ஒரு நாளும் ஜெய்பிரகாஷ் அவளை அப்படிப் பார்த்ததில்லை, அப்படி ஒரு அழுகை! சுபத்ராவை எந்த உறவு புரிந்து கொண்டதோ இல்லையோ ஆனால் ஜெய்பிரகாஷ் நன்கு புரிந்து கொண்டிருந்தார். 
ஒன்றுமே இல்லாதவராய் இருந்து இத்தனை தூரம் தொழிலில் வளர்ந்திருக்க, கண்டிப்பாகக் காரணம் சுபத்ராவை என்று தான் சொல்லுவர்! குடும்ப அமைதியால் மட்டுமே அவரால் தொழில் முழுவதுமாக கவனம் செலுத்த முடித்தது. அவர் நம்பிக்கை என்பதே அவள் தான். நிம்மதி என்பதே அவருக்கு நிழலாக அவள் உருவில் தான்  தொடர்ந்தது.  
அன்றைய சுபத்ராவின் அழுகை அவருக்கு நெஞ்சைப் பிசைய, அவளின் இந்த அழுகைக்கான காரணியைத் தள்ளி வைக்கவே நினைத்தார். அவள் உயரமென்ன ரவிக்கு காட்டிவிடும் வேகம்!  
ஒரு வழியாக ரவியின் திருமணம் முடிவாகி திருமண ஏற்பாடுகள் தொடங்கியது. சுபத்ரா அடிக்கடி அன்னையின் வீடு செல்ல வேண்டியிருந்தது. மீண்டும் மனம் நோகும்படி பேசி விடுவார்களோ என எண்ணி ஜெய்பிரகாஷ் தடுக்க நினைக்க, அவளோ தவறிய இடத்திலிருந்தே சரி செய்ய முயன்றாள். பிறந்தகத்தின் உறவுகளை அத்தனை எளிதாக முறித்து விட அவளால் இயலவில்லை.  
வீட்டிற்கு வந்தால் வாவென ரவி வரவேற்பான ஆனால் அதற்கு மேல் பேசிக்கொள்வதில்லை. இயல்பிலே அவன் அதிகம் பேச மாட்டான் தான் ஆனாலும் சுபத்ராவிற்குப் புரிந்தது. 
நிச்சியகார்த்தம் தனியாக இல்லாமல் திருமணத்திற்கு முதல் நாள் என்றே முடிவானது. மணப்பெண்ணிற்கு மாங்கல்யமும் பட்டும் சுபத்ரா எடுக்க வேண்டும் அது தான் முறை என்று விட, அன்று மட்டுமே ஜெய்பிரகாஷ் உடன் வந்திருந்தார். ரவி வராது, கௌஷி வந்திருந்தாள். 
அத்தனையும் எதிர்பார்த்ததை விடவும் அதிக விலையில் எடுக்க, பிறர் மறுப்புகளை அவர் கேட்கவேயில்லை. “என் மச்சானுக்கு நான் செய்யாம வேற யார் செய்வா?” எனச் சிரித்த முகமாக அவர் சொல்லியதில், பவானிக்கு மருமகனை எண்ணி பெருமை தான்! ரவி வராத கவலையில் கௌஷிக்கு எதிலுமே பெரிதாகக் கவனமில்லை!
அதுவும் போக அனைவருக்குமே உடை எடுக்க, சுபத்ரா கேட்டுவிட்டாள், “எதுக்கு இவ்வளவு செலவு? அத்தை ஏதாவது சொல்லப் போறாங்க” என்றாள். அவள் கவலை எல்லாம் மாமியாரை நினைத்து தானே தவிர, ரவியை நினைத்து அல்ல! 
“அவங்களுக்குத் தெரியாது, தெரிந்தாலும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க, நான் பார்த்துக்கிறேன்” என மெல்லிய குரலில் அடக்கிவிட, கணக்கு வழக்குகளும் அவள் கையில் தான் என்பதால் அமைதியானாள். 
ரவியும் எதுவும் சொல்லிவிடவில்லை. அவன் திருமணம் என்பதிலே அமைதியாக இருக்க, வெகு நாட்களுக்குப் பின் அவர்கள் வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சி என்பதால் அனைவர் உள்ளமும் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது. 
விஜயரூபனின் கல்லூரித் தோழன் கோவையிலிருந்து வேலை விஷியமாகச் சென்னை வந்திருக்க, விடுமுறை நாள் என்பதால் அவனை அழைக்கக் காலையில் ஸ்டேஷன் சென்றிருந்தான் விஜய். அவனை அழைத்துக்கொண்டு வந்தவன் காலை உணவு உண்டு செல்வதென அருகே இருக்கும் உணவகத்திற்கு சென்றனர். 
நண்பனை உணவகத்திற்குள் அனுப்பிவிட்டு அவன் பைக்கை பார்கிங்கில் நிறுத்தச் செல்ல, அங்கே இருவர் சண்டையிட்டுக்கொள்ளும் குரல் கேட்டது. அவர்களை கடந்து வந்தவன் ஆராவைக் கண்டதும் நின்றுவிட்டான். சில நாட்களுக்கு முன் அக்காவின் வீட்டில் பார்த்து நன்றாக நினைவிலிருந்தது. 

Advertisement