Advertisement

அத்தியாயம் 03
இறக்கைகள் இல்லையென்றாலும் பறக்கும் உணர்வை தர, இருசக்கர வாகனங்களால் மட்டுமே இயலும். உயிரில்லை என்ற போதும் உணர்வோடு பின்னியது, இன்றைய தலைமுறையினர் ஆடம்பரம் அவசியமென்பதைத் தாண்டி சில நேரங்களில் அறுதல் தரும் அன்னை மடியாகவும் தேடுகின்றனர். இரும்பு உடலுக்குள்ளும் இருக்கும் இதயத்தின் அலைவரிசையை அதை நேசிப்பவர்களால் மட்டுமே உணர முடியும். பெரும் வலியைக் கடந்து வர உதவும் வலி நிவாரணியாய் நீண்ட தொரு பைக் பயணமே அமையும். பலவித காற்றை நுகரவும், புதுவித புத்துணர்வை உணரவும் புதியதொரு அனுபவத்தை பெற, புதிதாய் இந்த உலகைப் பார்க்க நீண்டதொரு பயணம் தேவை! 
தனது பைக்கை பார்கிங்கில் நிறுத்திவிட்டு விஜயரூபன் திரும்ப முன் வந்து நின்றாள் ஆராதனா. புன்னகை முகமாகக் காலை வணக்கம் தெரிவிக்க, ஏதோ புதுவித நறுமணம் சூழ்வது போல் அவள் உற்சாகம் அவனையும் ஈர்க்க பதிலளித்தான்.
“எதுக்கு கால் பண்ணேன்னு கேட்க மாட்டிங்களா? சரி நானே சொல்லுறேன், அதுக்கு முன்ன எதுக்கு காலையில பேசிகிட்டு இருக்கும் போதே கால் கட் பண்ணிட்டீங்க?” சின்ன உதட்டையும் பிதுக்கி கண்களை சுருக்கிக்கொண்டு கோபம் போலே கேட்டாள். 
“அது பாப்பா கட் செய்துட்டா…” என்றவன் சமாளிக்க, அவன் சமாளிப்பைக் கண்டுகொண்டவளின் மூடிய இதழ்கள் சிரிப்பில் துடித்தன.
பார்வையை இடுக்கிக்கொண்டவன் பார்க்க, தன் கேலிச்சிரிப்பை நிறுத்தியவள், “சாரிஈஈஈ…” என முன்பற்கள் தெரியப் புன்னகைத்தாள். 
“சரி என்ன விஷயம்..?” பேசியபடியே அவன் நடக்கத் தொடங்க அவனோடு அவளும் இணைத்து நடந்தாள். 
“உங்களுக்கு என்ன அமினீசியாவா?” என்க, அவள் கேலியை உணராது “இல்லையே ஏன்?” என்றான். 
“நேத்து தானே பேசினோம், நாம இரண்டுபேரும் சேர்ந்து அகில், தர்ஷினியை சேர்த்து வைக்கிறதைப் பத்தி. அதுக்கு தான் ஒரு சூப்பர் பிளனோட வந்திருக்கேன்” 
“இதென்ன பிளான் ஆபரேஷன்னு டிராமா பண்ணிட்டு இருக்க? யூ கேன் கான்சென்ரேட் யூர் வொர்க். நான் இரண்டுபேர்கிட்டையும் பேசிக்கிறேன்” 
“ஏன்? என் மேல நம்பிக்கையில்லையா விஜய்..” வெகுநாள் பழக்கம் போல் உரிமையாகக் கேட்க, சட்டென அவளை நிமிர்ந்து பார்த்தான். 
அவளோ வழக்கம் போலே புருவத்தை ஏற்றி கேள்வியாய் பார்க்க, அதில் ஒரு நொடி மயங்கி நின்றவன் தலையை குலுக்கிக்கொண்டு, “அவங்க பாண்டிங்ல நம்பிக்கையிருக்கு” என அவள் கேள்வியைத் தவிர்த்தான். 
“அதுக்குன்னு இப்படியே விட்டுடவா முடியும், ப்ரோபளமை சால்வ் பண்ண வேண்டாமா?” 
“இத்தனை வருஷ ரிலேஷன்ஷிப்ல இருக்குறவுங்களுக்கு தெரியாதா? நிறைய தடவை சண்டை போட்டு சமாதானம் ஆனவுங்க தான், அவங்க பார்த்துப்பாங்க”
“எதுக்கு இவங்க இத்தனை வருஷமா ப்ரஷரை தாங்கிக்கிட்டு இருக்கணும்? முதல் தடவை ப்ரோபளம் வரும் போதே ரிலேஷன்ஷிப் பிரேக் பண்ணிட்டு போயிருந்திருக்கலாமே? இப்போ பாருங்க இரண்டுபேருமே ரெஸ்ட்லஸ்ல இருக்காங்க..” 
“ஸ்டாப் திஸ் நான்சென்ஸ், அது எப்படி விட முடியும்? நம்பி உறவுல இறங்கிட்ட பிறகு விட்டுட்டு போறது துரோகம், சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு எல்லாம் பிரியுறது முட்டாள்தனம், பெத்தவுங்க, கூடபிறந்தவுங்கன்னு எந்த உறவுல தான் பிரச்சனையில்லை? அதுக்குன்னு அவங்களையெல்லாம் விட்டு பிரிந்தா இருக்கோம்? காதல்னா மட்டும் கழட்டி விட்டுடலாமா? இதென்ன நியாயம்? எந்தவொரு உறவும் ஆழம் தொடும்வரை விடாம இருக்கணும், சகிப்புத்தன்மையில்லாத சுயநலவாதிக்க எல்லாம் எதுக்கு லவ் பண்ணனும்?” 
அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே, சினமாக அவள் புறம் திரும்பியவன், காலையில் உண்டு வந்த மூன்று இட்லியும் வயிற்றில் கரையும் அளவிற்கு வசனம் பேசிவிட்டு மூச்சுவாங்கியபடி நிற்க, அவளோ கருவிழிகள் வெளிவந்துவிடும் அளவிற்கு அதிர்ந்து பார்த்தாள்.
அவன் வாதத்தை அவளால் சகித்துக்கொள்ள முடியாது போக, “ஒரு செடியில ஒரு பூ தான் பூக்கும்னு சொல்லுரவரா நீங்க?” என்றாள் இறங்கிய குரலில். 
அவள் கேலியில் மூக்கிற்கு மேல் முட்டிக்கொண்டு வந்த கோபம் அடங்க மறுக்க, “இதிலென்ன தவறு? ஒருவருக்கு ஒருவர்னு வாழ்றது தான் நம்ம கலாச்சாரம், உயர்ந்த பண்பு, எந்தவொரு நிலையிலும் கொண்ட காதலை கைவிடாம இருக்குறது தான் உண்மையான காதல். நிறை குறைகளோட ஏற்றுக்கொள்வதும், அன்பின் ஆழத்தில் அமிழ்ந்து கிடைப்பதிலும் அன்பால் ஆளப்படுவதிலும் ஒரு சுகமிருக்கு, அது சொல்லும் போது புரியாது அனுபவிக்கும் போது தான் தெரியும். வரிசையா வர எல்லாரிடமும் இந்த உணர்வு தோன்றாது, ஒரே ஒருவர்கிட்ட மட்டும் தான் உணர்ந்து பகிர்ந்துக்க முடியும்” என அவன் சொல்லிக் கொண்டிருக்க இமைக்காது அவன் இளகிய முகத்தையும், கனவு நிறைந்த விழிகளையும் பார்த்தபடி இருந்தாள். 
அவன் கண்களில் கனவாய் மின்னிய பெருவொளியில் சிறு கீற்றாய் ஊடுருவி உட்புகுந்து அவனுள் கரைந்திட பெயரறியா ஈர்ப்புவிசை இழுத்ததில் வலுவான எதிர்விசை இல்லாது வலுவிழந்து உள் விழுந்தாள். அவன் வார்த்தைகளில் சொல்லிய இன்பத்தை அவனோடு வாழ்ந்து பார்த்திடும் ஏக்கம் உள்ளத்தின் அடி அழத்தின் சிறு விதையாய் விழுந்துவிட்டதை அவளறியவில்லை. 
தன் முன் நின்ற லிப்டிற்குள் நுழைந்தவன் அவள் இன்னும் உள் வராமல் சிலையாக இருக்கவே, “ஆரா..” என அழைத்தான். 
சட்டென நிமிர்ந்தவள் சிறு புன்னகையோடு உள் நுழைய, “என்ன அமைதியாகிட்ட? ஸ்டாங்கான பாயிண்ட்ஸ் கிடைக்கலையா?” என்றவனின் இதழோரம் ஒரு வெற்றிச்சிரிப்பு. 
“இல்லை, இட்ஸ் டிரமடிங். இதுல ஒருபுறம் அடிமைத்தனமும் மறுபுறம் ஆளுமையும் இருக்கு. இன்னும் எத்தனை நாளைக்கு இதை சகிச்சிக்கிட்டு இருக்க? அப்படியே வாழ்க்கை போயிடக்கூடாது, விட்டுக்கொடுத்து விட்டுக்கொடுத்து தன் சுயத்தை இழந்திடக்கூடாது. ஒத்துபோகலைன்னு தெரிந்த பிறகு சகிச்சிகிட்டு வாழ்றதுக்கு பதில் பிரிந்து போறதும் வாழ்வின் ஓட்டத்துல பிரிதோரு உறவை ஏற்கிறதும் எந்த வகையில தவறாகும்? இது தான் எதார்த்தம் விஜய். கஷ்டம்னு தெரிந்த பிறகும் அதில் அமிழ்ந்து கிடப்பது தான் சுகம், அது தான் உண்மை காதல் சொல்லுறது முட்டாள்தனம்” 
அவளின் சிறுபிள்ளைத்தனமான செயலுக்கு முன் இவ்வாறொரு முற்போக்கான சித்தாந்தத்தை அவளிடம் எதிர்பாராது சபாஷ் என்பது போல் புருவம் உயர்த்தினான். 
அவன் விழி வரைந்த பாராட்டில் முகம் செம்மையுற மலர்ந்தவள், “எதுவும் தப்பா சொல்லிட்டேனா?” என்றாள் மெல்லிய குரலில். 
ஏனென்றே தெரியாது அவன் பதிலுக்காக அவளிதயம் படபடத்துக்கொண்டிருக்க, “ச்சே, இதுல தப்பு சரின்னு என்ன இருக்கு ஆரா? உன் கருத்தைச் சொல்ல உரிமை இருக்கு ஆனால் அதை அடுத்தவர்களும் ஏத்துக்கிடணுங்கிற எதிர்பார்ப்பு இருக்கக்கூடாது” என்றான் தன்மையாக. 
ஒற்றைப்புருவம் தூக்கி பற்களைக் கடித்தவள், “இப்போ நீங்க என்ன சொல்ல வாரீங்க?” என்றாள். 
“நல்லது செய்றேன்னு என் ப்ரண்ட்ஸ்ஸை பிரித்து வைத்துவிடாதே! உனக்குப் புண்ணியம் சேரட்டும்” 
அவன் உரைத்த விதத்தில் குலுங்கிச் சிரித்தவள், “சரி சேர்த்து வைத்தால் எனக்கு என்ன செய்வீங்க?” என டீல் பேசினாள். 
பெரிதாக யோசிப்பது போலே பாவனை காட்டியவன், தோள்களை குலுக்கிவிட்டு, “அஸ் யூ விஸ், என்ன வேணும்னு நீயே கேளு” என்றான். 
அதற்கும் சிரித்தவள் சிரிப்புடன், “டீல் மட்டும் நியாபகத்துல இருக்கட்டும், என் வேலையை முடிச்சிட்டு கேட்குறேன்” என்றாள். 
“அறிவு ஜீவி ஆராதனா, நீ எதுவும் செய்து சொதப்பிட வேண்டாங்கிறது தான் என் ரெக்வெஸ்ட்” சிரிப்புடன் அவன் உரைக்க, பல்லோடு உதட்டையும் கடித்தவளிடம் இந்த அவமானம் உனக்கு தேவையா என்றது மனசாட்சி.  
மறுப்பாய் தலையசைத்தவள், “எங்க லஞ்ச் டைம்ல ஐ சென்ட்ட மெசேஜ் அகில் அண்ணாவை கூட்டிட்டு கேஃபடீரியா வாங்க” என்றாள். 
விஜய் தலையாட்ட, “சும்மாயில்லை நான் சொல்லுற மாதிரி அகில் அண்ணாவை ரெடி பண்ணிக்கூட்டிட்டு வரணும்” என்க, “அவன் என்ன ஸ்கூல் போற குழந்தையா அவனை ரெடி பண்ணி கூட்டிட்டு வர?” என்றான் புரியாது. 
“பிளான் நம்பர் ஒன், இப்போ நாம தர்ஷினியை சென்டிமென்ட்ல கவுக்கப் போறோம்” என்றவள் திட்டத்தை விளக்க, மூச்சை பிடித்துக்கொண்டு கேட்டவன், இறுதியில் லூசா நீ என்பது போலே பார்க்க, அவளோ அவன் பதிலுக்கு நிற்காமல் தாமதமாகியதால் சென்றுவிட்டாள்.
தன் இருக்கைக்கு வந்தவள், தர்ஷினியிடம் காலை வணக்கம் தெரிவிக்க, வாடிய முகத்தோடு இருந்தவள் மெல்லிய குரலில் வெறும் வார்த்தைக்கு மட்டும் பதில் கொடுத்தாள். வந்து மூன்று நாட்களாகிய நிலையில் காலையிலே தர்ஷினியின் அன்னை அவள் கணவரோடு பிரச்சனையா? புகுந்தகத்தில் பிரச்சனையா? எனக் கேள்விகளால் குடைய, அவளோ பல்லை கடித்துக்கொண்டு மௌனம் சாதிக்க, தங்கள் அறிவுரையும் கேட்காமல் பிடிவாதமாகக் காதல் திருமணம் செய்து கொண்டாயே இப்போது பார் உன் வாழ்கையை! என்னும் படியாக அவர் பேச, அவளோ பேசமுடியாது உணவைத் தவிர்த்து அலுவலகம் வந்துவிட்டாள். 
“நீங்களும் டல்லா இருக்கீங்க, அங்க அகில் அண்ணாவும் கையில கட்டு, நெற்றியில காயம்னு இருக்காங்க! வாட் ஹேப்பேன் தர்ஷினி?” என்க, சட்டென நிமிர்ந்து பார்த்தவள் தலையைப் பற்றியபடி, “ஹெட்டேக் ஆரா…” என்றாள்.
பதற்றமோ, படபடப்போ சிறிதுமின்றி அகிலைப் பற்றி ஒரு வார்த்தையும் விசாரிக்காதது ஏமாற்றத்தை தர, எழுந்து சென்றவள் தர்ஷினிக்கான காஃபியோடு மீண்டும் வந்தாள். 
மேசையில் தலையைத் தாங்கியபடி அமர்ந்திருந்த தர்ஷினி முன் காஃபி கோப்பையை வைக்க, நிமிர்ந்து ஆராதனாவை பார்த்தவள் நன்றியுரைத்தபடி எடுத்துக்கொள்ள, மெல்லிய புன்னகையோடு தன்னிருக்கை நோக்கிச் சென்றாள் ஆராதனா. 
இங்கு அகிலும் பசலைநோயில் வாடியது போலே சோர்வோடு வேலையைக் கவனிக்க, விஜயும் அவன் வேலையை கவனித்தான். அகிலைக் கவனித்த போதும் விஜய் எதுவும் கேட்கவில்லை. 
இருவரும் வேலையில் ஆழ்ந்துவிட, சிலமணிநேரங்களில் ஆராதனாவிடமிருந்து விஜயின் அலைபேசிக்குக் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதை கவனித்தவன் எழுந்து சென்று அகிலை லஞ்ச்சிற்கு அழைத்தான். காலையிலிருந்து உணவும் காஃபியும் இல்லாது வயிறும் வாட எழுந்து சென்றான். 
“ஹே..விஜய் நான் கேட்ட ரிப்போர்ட் எங்க மேன்?” என கார்த்திக் கேட்ட, “கேன் ஐ செட் இட் ஆப்டர் மை லஞ்ச்?” எனக் கேட்டான்.
“ஓகே கேரி ஆன்..” என்றவர் அகிலைக் கண்டதும், “என்ன மேன் இரண்டுபேரும் இப்போல்லாம் ஒன்னாவே சுத்துறீங்க?” என்றார் மூக்கு வியர்க்க.  
இதை எதிர்பார்த்தேன் என்பது போல் பார்த்த விஜய், “பீச்சல பஞ்சுமிட்டாய் வாங்க போறோம், உங்களுக்கும் வேணுமாஜி” என்றான். 
பஞ்சுமிட்டாய் போன்று உச்சியில் நீட்டிக்கொண்டிருக்கும் முடியைத் தலையோடு  தடவிக்கொண்டவர் இவனிடம் ஏன்டா வாயைக் கொடுத்தோம் என நினைத்தபடி தன் கணினியை நோக்கித் திரும்ப, இருவரும் சிறு சிரிப்புடன் நகர்ந்தனர். 
“இத்தனை நாளா தன்னால தான் தர்ஷினி வீட்டைவிட்டு போய்டாலோன்னு நினைச்சி அமைதியா இருந்த என் அம்மா இன்னைக்கு காலையிலே அது வேலையை ஆரம்பிச்சிட்டுடா. பொண்ணா அவ? கொஞ்சமாவது மருமகள் மாதிரி நடந்துக்கிடுறாளா? நாங்க பார்த்திருந்தா அப்படிப் பார்த்திருப்போமே, இப்படி பார்த்திருப்போமேன்னு அவங்க கத்த, தர்ஷி அப்படியெல்லாம் சொல்லாதீங்கன்னு நான் கத்த வீடே ரணகமாகிட்டுச்சு…” என அகில் சொல்லும் போதே, “அடேய் யப்பா போதும், உன் கதையைக் கேட்குற அளவுக்கு உடம்புல தெம்பில்லை..” எனப் பதறினான் விஜய். 
“போடா…” எனக் கோபமான அகில் முகத்தைத் திருப்ப, அப்போது தான் நியாபகம் வந்தவனாக, அவனை நிறுத்தினான் விஜய். 
தன் பேன்ட் பாக்கேட்டிலிருந்து பேன்ட்எய்டை எடுத்து அகிலின் நெற்றியில் ஓட்டிவிட்டு வெள்ளை நிற கைக்குட்டையை எடுத்து அகிலின் இடது கையில் கட்ட, “டேய் என்னடா செய்கிற, எதா இருந்தாலும் சொல்லிட்டு செய்டா” என அகில் படபடக்க, “ஷ்ஷ்..நீ கொஞ்சம் சும்மா இரு. உன் நடிப்புத் திறமையெல்லாம் காட்ட வேண்டிய நேரமிது அமைதியா என்னோட வா” என மேலும் கேள்வி கேட்க விடாது அவனை இழுத்துக்கொண்டு கேஃப்டீரியா நோக்கி நடந்தான் விஜய். 
ஆராதனா தர்ஷினியும் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு எதிரே அகிலையும் இழுத்துச் சென்று விஜய் அமர, அவர்களை நிமிர்ந்து பார்த்தாள் தர்ஷினி. 
“டேய், எருமை வயசாகுது ஒழுங்கா பைக் ஓட்டத் தெரியுதா? கண்ணை கடன் கொடுத்து கனவு கண்டுட்டு ஒரு நாய் குறுக்க வந்துச்சுன்னு இப்படி விழுந்து வாரிட்டு வந்திருக்கையே கொஞ்சமாவது அறிவிருக்கா? சரி இப்போ எப்படிச் சாப்பிடுவ? ஒரு ஸ்பூனைத் தூக்க முடியுமா உன்னால? நான் வேணா ஊட்டுவிடவா?” என படபடவென விஜய் பேச, மூவரும் அவனை பார்த்தனர். 
நடப்பதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பது போல் தர்ஷினி ஒரு வெற்றுப்பார்வை பார்க்க, என்னை சொல்லிட்டு இவங்க இப்படி ஓவர் அக்ட் பண்ணி சொதப்புறாங்களே என ஆரா நெற்றியில் கை வைத்தபடி பார்க்க, நான் எப்போட கீழ விழுந்தேன், இது என்னடா புதுக்கதை? என்பது போலே அகில் அதிர்ந்து பார்த்தான். 
அவனைப் பார்வையால் அடக்கிய விஜய், “பதில் சொல்லுடா..” என அதட்டலாகக் கேட்க, “வேண்டாம் மச்சான் நான் வலது கையாள தான் சாப்பிடுவேன்” எனப் பற்களைக் கடித்தபடி உரைத்தான் அகில். 
அப்போதே அவன் இடது கையில் தான் கட்டிய கட்டை கவனித்த விஜய், ஆராவைப் பார்க்க, அவள் முறைக்க, உணவு வாங்கி வருவது போலே எழுந்து ஓடிவிட்டான். 
அடுத்த நொடியே ஆராதனாவின் அலைபேசி அதிர அதை அட்டென் செய்தவள் காதில் வைத்துக்கொண்டு தர்ஷினியை ஓர் பார்வை பார்த்தபடி எழுந்து சென்றாள். 
இருவரும் சென்றுவிட, தர்ஷினியும் அகிலும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி சில நொடிகள் மௌனமாக இருந்தனர். அகிலோ அலைபேசியில் கவனத்தைப் பதித்தபடி தலைகுனிய அவனையே ஆராய்வது போலே கூர்மையாகப் பார்த்தாள் தர்ஷினி. அவள் பார்வையை உணர்ந்த அகில் வாய் திறந்த ஒரு வார்த்தைக்காவது விசாரிக்கிறாளா! கல்நெஞ்சக்காரி என மனதில் திட்டினான். 
“அடி பலமா..?” என்றவளின் குரலில் அவன் நிமிர, “அந்த நாய்க்கு..?” எனக் கேலியாகக் கேட்ட அடுத்த வார்த்தையில் முகம் சுருங்கினான். 
இவளுக்காகவா காலையில் அன்னையிடம் சண்டையிட்டு வந்தாய்? என நினைக்கையில் அவன் மீதே அவனுக்கு கோபம் வந்தது. 
கோபத்தை கட்டுப்படுத்தும் எண்ணமெல்லாம் இல்லாதவன், “ரொம்ப அக்கறை தான் கண்ட நாய்மேலையெல்லாம்..!” என்றான் சிடுசிடுப்பாக. 
“என்னை அடிக்க கை நீட்டுனல அதுக்கு கடவுள் கொடுத்த தண்டனை தான் இது, இந்த அடியும் வலியும் தேவை தான்டா உனக்கு” என இளக்காரமான சிரிப்போடு அவள் உரைக்க, அவன் சினம் எல்லை தாண்டி இருந்தது. 
“எதுடி தண்டனை..? கடவுள் நல்லவங்களுக்கு நல்லது தான் செய்வார், என் கை நல்லா தான் இருக்கு, நல்லாப் பாரு” எனக் கத்தியவன் பொங்கிய கோபமுடன் கை கட்டையும் அவிழ்த்துவிட, அதிர்ந்தாள் தர்ஷினி. 
ஏமாற்றப்பட்ட உணர்வு எழ, “நல்லா நடிக்குறடா, காலேஜ்ல இந்த நடிப்பை காதல்னு நம்பி நான் தான் ஏமாந்துட்டேன். ஃப்ராடு” என்க, நீயா பேசியது என்ற கேள்வியை விழித்தாங்கிபடி அதிர்ந்து பார்த்தான். 
தன் காதலை நடிப்பென்றதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அதுவும் தன்னை பற்றி நன்கறிந்தவளும் அக்காதலை அனுபவித்தவளும் உரைக்க, தாங்க இயலாத இடியை இதயத்தில் தாங்கியவன் அவள் முகம் பார்க்கவும் விருப்பமின்றி கோபமாகச் சென்றுவிட்டான். 
சற்று தொலைவில் அவர்கள் பார்வை மறைவிலிருந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த ஆராதனா தலையில் அடித்துக்கொள்ள, எரிச்சலுடன் அவள் புறம் திரும்பினான் விஜயரூபன்.
“அகில் அண்ணாட்ட பிளான் எக்ஸ்பிளைன் செய்து ஃபெர்போர்ம் பண்ணச் சொல்லி கூட்டிட்டி வரைலயா நீங்க?” என அவனை முந்திக்கொண்டு அவன் மீது குற்றம் சாட்ட, “உண்மைய சொல்லு ஆரா, அவங்களை பிரிக்கிறதுக்குத் தான் இந்த திட்டமா?” என்றான் அவன்.
“என்னை நம்மவே மாட்டீங்களா நீங்க?” 
“லூசா நீ, நான் தான் எதுவும் செய்ய வேண்டாம்னு சொன்னேனே கேட்டியா?”
“நான் எல்லாம் சரியா தான் பிளான் செய்தேன், அகில் அண்ணா எதுக்கு கட்டை கழட்டினாங்க, அதுக்கும் முன்ன நீங்க வேற வலது கை, இடது கைன்னு உளறி வைச்சிட்டீங்களே”
“செய்றதெல்லாம் செய்துட்டு எங்களை சொல்லுறீயா? அவங்களுக்கு இருந்த சின்ன பிரச்சனையை சும்மா கொளுத்திப்போட்டு இவ்வளவு பெருசாக்கிட்ட பாரு, காலையில வந்து உன் மொக்க பிளானை எக்ஸ்ப்ளைன் பண்ணியே அப்பவே வொர்க் அவுட் ஆகுமான்னு எங்கிட்ட ஒரு வார்த்தை கேட்டியா? என் பிரண்ட்ஸ் பத்தி என்ன தெரியும் உனக்கு? நேத்தும் இப்படி தான் உளறி வைச்சு அவனை கோபப்படுத்திட்ட, சரி செய்றேன்னு சரி செய்றேன்னு சொல்லி இப்படி பிரச்சனையை பெருசாக்கினா என்ன அர்த்தம், இனி என்ன செய்து இதைச் சரி செய்ய?” என நொந்து போனவன் கோபத்தில் கத்திவிட்டான். 
எப்படி எனினும் அவர்களுக்குள் சமாதானமாகிடுவர் என நினைத்திருந்த விஜயின் நம்பிக்கை தற்போது மொத்தமாக நொறுங்கியிருந்தது. நண்பர்கள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டவனுக்கு பிரச்சனை தீர வேண்டும் என்பது மட்டுமே எண்ணமாக இருக்க எப்படித் தீர்க்க வேண்டுமென்று வழி தெரியவில்லை. உதவுகிறேன் என வந்தவளும் உபத்திரமாகி விட தன்னையும் மீறி கடுமையாகப் பேசிவிட்டான். 
“சாரி..” என நடுநடுங்கிய மெல்லிய குரலில் அவள் முகம் பார்த்தவன் அதிர்ந்தான். சுருங்கிய முகத்தின் சிவந்த கண்களில் கண்ணீர் திரண்டிருக்க, அழுகையை அடக்கியதால் துடித்த உதடுகளும், விம்மிக்கொண்டிருந்த நெஞ்சமும் ஏனென்றே தெரியாத குற்றவுணர்வை அவனுள் தந்தது. 
காலையில் சிரித்த முகமாக அவன் முன் வந்து நின்றவள் இப்போது கலங்கிய முகமாக அவன் விழி விட்டு விலகினாள். 
அந்த கலங்கிய விழியை எங்கேயோ பார்த்த நியாபகம்! 

Advertisement