Advertisement

அத்தியாயம் 12 
அன்று தன் தோற்றத்தில் அதிக கவனம் எடுத்து தன்னை அழகுபடுத்திக் கொண்டு, நடையிலொரு உற்சாகத் துள்ளலோடு காதல் பாடலொன்றை முணுமுணுத்தபடி அலுவலகம் வந்தாள் ஆராதனா. 
ஏன், எப்போது, எதனால் என்றெல்லாம் தெரியாது ஆனால் அவனை பிடித்திருந்தது. நலம் நாடும் நல்லுள்ளம், ஆளுமையல்லாத ஒரு தோழமை, அரிதாரமல்லாத வசீகரம், இது தான் என்றில்லை ஏதோ ஒன்று ஈர்த்திருந்தது. 
என்னவென்று ஆராயும் எண்ணமில்லை, அவன் எண்ணம் அறியும் ஆவல் மட்டுமே அவளுக்கு அப்போது! அவனுக்கும் தன்னை பிடிக்குமென உள் மனதில் ஒரு ஓயாத குரல், அந்த நம்பிக்கையிலே அவனை நெருங்கியுமிருந்தாள். 
அதேநேரம் அவளை எவ்வாறு எதிர்கொள்வது என்ற யோசனையோடு அலுவலகம் வந்திருந்தான் விஜய். 
கண்ட நாள் முதல் அவள் முடியிலிருந்து உடை வரை அழகென ரசித்திருந்தான்  ஆனால் வரம்பு மீறிய பார்வையில்லை. இருந்தும் அன்றைய இரவு உரிமையற்ற தன் பார்வை தவறென்ற உறுத்தல் உள்ளத்திலிருந்தது. 
அவள் காதலுரைப்பாள் என்பதை எதிர்பாராது தடுமாறினான். தன்னை தடுமாறச் செய்யும் அழகிற்காக அவள் காதலை ஏற்கும் நிலையெல்லாம் அவனுக்கு இல்லை. 
அதையும் விட, சிறு பெண்ணவள் தடுமாறும் படியான தன் நடவடிக்கைகள் எதுவும் இருந்ததோ? ஆரம்பத்திலே அவள் எண்ணமறிந்து தள்ளி நிறுத்தியிருக்க வேண்டுமோ? ஒருவேளை என் பார்வையைத் தான் கண்டுகொண்டாளோ? அதை வைத்தே அவள் கற்பனைகளுக்கு வண்ணமிட்டாளோ? என்ற குழப்பம்! அதுவே அவனைத் தவிக்க வைத்து, குற்றவுணர்வைத் தந்தது. 
காதல் சொல்லியவள் உற்சாகமாக இருக்க, அவன் தான் குற்றவுணர்வில் தவித்தான். 
அந்த யோசனையிலே நடந்தவன் மின்தூக்கியையும் கவனிக்காது படிகளில் நடக்க தொடங்கியிருந்தான். 
இரண்டாம் தளம் வருகையிலே அவன் நடையின் வேகம் குறைய, “விஜய்..” எனக் கேட்ட, குரலில் திரும்பினான். 
பால் பச்சை நிறத்தில் தங்கத் துளிகளைத் தெளித்ததை போன்ற கற்கள், முத்துக்கள் பதித்த டிசைனர் புடவையில், எப்போதும் விரிந்து நெளிந்து கொண்டிருக்கும் குழலை இன்று அடுக்காய் பின்னி இடது தோளில் முன் புறம் போட்டபடி வலதுபுற காதோரம் ஒற்றைச் சுருள் முடி கன்னம் உரச, நெற்றியில் பொட்டும், சிறு துளி குங்குமமும் ஒளிர, முகத்திலொரு புதுப் பொழிவோடு அவனை நோக்கி ஓடிவந்தாள் ஆராதனா.  
விஜய்க்கு ஒருநொடி இதயம் தாளம் தப்பி தகதிமிதாவென துடித்தது. நிலையாக இருந்திருந்தால் அந்த நேரம் ஓடி ஒழிய இடம் தேடியிருப்பான். ஆனால் மூளையின் செல்கள் செயலிழக்க, மூச்சுவிடவும் மறந்து நின்றான். 
ஆனாலும் அவன் கண்களுக்கு எப்போதும் அவளை அளக்கும் பவர் உண்டு. மைக்ரோ வினாடியில் லேசர் விழியின் ஸ்கெனிங் பார்வையில் அவளை இமைக்காது ரசித்திருந்தான். 
இரண்டாம் தளத்திலிருந்து மூன்றாம் தளம் நோக்கிச் செல்லும் படிக்கட்டில் திருப்பத்திலிருந்த படியை நோக்கி ஓடி வந்தவள், அவன் அருகில் வந்து நிற்கும் நொடி நிலையில்லாது தடுமாறினாள். 
பின்புறமாக கவிழும் நொடியில் சட்டென விஜயின் கைகள் தன்னிச்சையாக அவளிடை தாங்கி இறுக்கமாய் பற்றி நிலையாக நிற்க வைத்திருந்தது. அந்த நொடிக்குள்ளும் அவள் பொன்மேனியின் மென் ஸ்பரிசத்தை அவன் கைகள் உணர்ந்திருக்க, ஒருநொடி அவனும் உள்ளத்தால் தடுமாறினான். 
பயத்தில் அவள் இதயம் படபடவென அடித்துக்கொள்ள, பெரிதாய் மூச்சு வாங்கி தன்னை நிலைபடுத்திக் கொள்ள முயன்று கொண்டிருக்க, அவனோ “சோதிக்காதடி என்னைய..!” என மனதில் புலம்பினான். 
அவன் முகம் பார்த்திருந்தவள், “பீவர் சரியாகிடுச்சா?” என்றபடி, அவன் நெற்றியில் கை வைத்துப் பார்க்க முயல, சட்டென கையைப் பற்றித் தடுத்தான். 
“நல்லாயிருக்கேன், வழியை விடு” என்றான் குரலில் எரிச்சலைக் காட்டி. 
ஆனால் பற்றிய அவள் கைகளை இன்னும் விட்டிருக்கவில்லை, அவளும் விலக்கிக்கொள்ளவில்லை. 
“என் கேள்விக்கென்ன பதில்? மணமாலைக்கென்ன வழி?” என அவள் கண்சிமிட்டியபடி ராகமிழுக்க, “ம்ச்ச்…” எனச் சலித்துக் கொண்டான் அவன். 
கடுப்பானவள், “விஜய், ஐ லவ் யூ…” என்றாள். பதில் வேண்டிய பிடிவாதம் அவளிடம். 
“சரி..” என்றபடி அவனும் கையிரண்டையும் கட்டிக்கொண்டு அவளைப் பார்க்க, “என் கேள்விக்குப் பதில் சொல்லுங்க” என்றாள் பல்லைக்கடித்தபடி. 
“என்ன உன் கொஸ்டின்..?” 
“பிடிச்சிருந்தா பிடிச்சிருக்குன்னு சொல்லுங்க, பிடிக்கலைன்னாலும் பிடிச்சிருக்குன்னு சொல்லுங்க, தப்பில்லை…” என்றவள் மெல்லிய சிரிப்போடு எதிர்பார்த்து நின்றாள். 
புரியாத பாவனையில் விழித்தவன் “என்ன..?” என்றான். 
“ஒரு பொய்யாவது சொல் கண்ணே…கண்ணே..” என வடிவேலு ஸ்டைலில் பாடியபடி அவனை மேலும் நெருங்கினாள். 
அதில் சிரித்தவன் மறுபுறம் கிடந்த இடைவெளியில் நழுவி, படிகளில் தாவி மேல் ஏறினான். 
“இப்படியே தனியா சுவரைப் பார்த்துப் பாடிக்கிட்டு இரு, பார்க்குறவுங்க பைத்தியம்னு சொல்லட்டும்” என்க, “சொல்லட்டும் தாராளமா, விஜயரூபன் மேல பைத்தியம்னு சொல்லட்டும்” என கீழிருந்தே உயரப் பார்த்துக் கத்தினாள். 
ஓடும் நீரில் நழுவும் மீனாய் செல்பவனை நினைத்துச் சிரித்தபடி, படிகளிலிருந்து இறங்கியவள் இரண்டாம் தளத்தில் இருக்கும் மின்தூக்கியை நோக்கிச் சென்றாள். 
அன்று வெள்ளிக்கிழமை ஆகையால் மாலை நேரம் அவர்கள் அலுவலகத்தில் கேளிக்கை நேரத்தின் போது முதல் முறையாக ஆராதனா பாடினாள். விஜயரூபன் முன்பே அறிந்திருந்தால் வந்திருக்கவே மாட்டான், ஆனால் அவளோ அவன் வந்திருக்கிறான் என்பதைப் பார்த்த பின்னே பாட வந்தாள். 
“மலர்களை அள்ளி வந்து மகிழ்வுடன் கையில் தந்து
மனதினை பகிர்ந்திடவே ஆசை கொள்கின்றேன்

தடுப்பது என்ன என்று தவிக்குது நெஞ்சம் இன்று
நதியினில் இலை என நான் தோய்ந்து செல்கின்றேன்

அரும்புகள் பூவாகும் அழகிய மாற்றம்
ஆயிரம் ஆண்டாக பழகிய தோற்றம்

ஒரு வெள்ளி கொலுசு போல இந்த மனசு சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல புது நாணம் மினுங்கும் மேல..”

அமுதமான குரலில் ஆராதனா பாடி முடிக்க, அங்கிருந்த அனைவரிடமிருந்தும் ஒரு கைத்தட்டல் வந்திருந்தது. பாடும் போதும், அதன் பின்பும் கூட விஜயை விடுத்து அவள் பார்வை இம்மியும் நகராது, இமைக்காது பார்த்திருக்க, அவனிடம் சொல்லும்படியான எந்தவித மாற்றமுமில்லை. 
மயங்கவில்லை எனினும் ஒரு பாராட்டுதலைக் கூட அவன் முகம் வெளிபடித்தி விடாதிருக்க, எதிர்பார்ப்புடன் இருந்தவளுக்கு ஏமாற்றமே! அந்த வலி சுருக்கென்று குத்த, அவன் சட்டியைப் பிடிக்கும் கோபத்தில் வேகமுடன் அவர்கள் மேசையை நோக்கி வந்தாள். 
விஜயோடு தியா, அகில், தர்ஷினி ஜோடிகளும் ஒரே மேசையில் அமர்ந்திருக்க, புஸுபுஸுவென பூச்சு வாங்க முறைத்தபடி அவர்கள் டேபுளில் வந்தமர்ந்தாள். 
தர்ஷினி ஜூஸ் கிளாஸை அவளிடம் நகர்த்த, வாங்கி ஒரு மடக்கில் மண்டிக் கொண்டிருந்தாள் ஓர விழியால் அவனையும் முறைத்தாள்.  
விஜய் வராத இரண்டு நாட்களாக அவளிடமிருந்த சோர்வும், இன்று முற்றிலும் வேறாய் அவளிடமிருக்கும் உற்சாகமும் அகிலுக்கு முரணாகத் தோன்றியது. 
“நல்ல பாடின ஆரா, ஆமாம் இன்னைக்கு என்ன ஸ்பெஷல் ஆளே மாறியிருக்க?” என தர்ஷினி கேட்க, “வெள்ளிக்கிழமைல அதான் ஆத்தா வந்திருக்கா?” என்றாள் கேலியாக.  
“என்னடா நடக்குது உங்களுக்குள்ள?” என அகிலும் விஜயிடம் கேட்க, அவளோடு சேர்த்து அனைவருமே அவன் பதிலை எதிர்பார்த்துப் பார்த்திருக்க, “நத்திங்..” என்றான். 
உண்மையிலே ஆரா வேப்பிலையில்லாமல் சாமியாடும் நிலையில் உக்கிரமாய் இருந்தாள்.
“டேய், பொய் சொல்லாத, எனக்கு தெரியாம உங்களுக்குள்ள என்னவோ நடந்திருக்க?” 
திடுக்கிட்ட விஜய், “லூசு மாதிரி உளறாத..” என குரலில் கடுமை காட்ட, “பின்ன என்ன? ஆராவுக்கு ஒன்றைக் கண்ணா உன்னைய பார்க்க?” என்றான் அகிலும்.
“அதை நீ அவளைத் தான் கேட்கும்” என்ற விஜய் தனக்குச் சம்பந்தமே இல்லை என்பது போல் தோள்களைக் குலுக்க, அகிலின் பார்வை ஆராவிடம் சென்றது. 
 
ஆரா ஓர விழியால் விஜயை பார்க்க, அவனோ தலையைக் கூட அவள் புறம் திரும்பாதிருக்க, “நான் அவருக்கு ப்ரபோஸ் பண்ணேன், அவர் பதில் சொல்லலை அண்ணா” சட்டென உரைத்தாள். 
இவ்வாறு பொதுவில் சட்டென சொல்லிவிடுவாள் என்பதை எதிர்பாராது அசால்டாக இருந்தவன் திடுக்கிட்டு அவள் புறம் திரும்ப, தர்ஷினி குடித்துக் கொண்டிருந்த தண்ணீர் புரையேறியது. தியாவோ சிறு பிள்ளை போல் தான் அனைத்தையும் பார்த்திருந்தாள். 
“வாவ்..கன்க்ராட்ஸ் மச்சான், எனக்கு ஆரம்பத்துல இந்த சந்தேகம் தான்” என்றவன் விஜயின் தோள்களில் இடிக்க, “இது எப்போ? எப்படி?” என வியப்பு விலகாமல் கேட்டாள் தர்ஷினி. 
அதற்கும் சட்டென உண்மையை உளறிவிடுவாளோ என்ற பதைபதைப்பில் அவர்கள் பக்கம் திரும்பிய விஜய், “இப்போ அதுவா முக்கியம்? அவளுக்கு ஏதாவது நல்லதா நாலு வார்த்தை அட்வைஸ் சொல்லி அனுப்பு தர்ஷினி” என்றான். 
“ஆமா தர்ஷினி. நானே கேட்கணும் நினைச்சேன், இவரை எப்படி கரெட் பண்றதுன்னு நல்லதா நாலு ஐடியா சொல்லுங்க” என நெற்றியில் அறைந்தபடி ஆரா கேட்டதில், விஜயை தவிர அனைவரும் சிரித்துவிட்டார். 
அவனோ கொலைவெறியோடு முறைக்க, இந்த பார்வைக்கெல்லாம் அசரமாட்டேன் என்பது போல் சளைக்காது எதிர்பார்வை பார்த்தாள். 
“ஏன் மச்சான்? உனக்கும் தான் ஆராவை பிடிக்குமே?” அகில் கேட்க, “பிடிக்குமா! நான் எப்போ சொன்னேன்?” என்றான் விஜய்.  
“சரி, இப்போ சொல்லுங்க, பிடிக்கும்னு சொல்லுங்க” என டேபுளில் இருகையூன்றி அதில் முகத்தை தாங்கியபடி, அவனைப் பார்த்து இரு கண்களையும் சிமிட்டிக் கேட்டாள் ஆரா. 
விஜய் மனதிலிருந்த குற்றவுணர்வு எல்லாம் ஆராவின் அட்டகாசத்தில் காணாமல் போன மாயம் அவனறியவில்லை. 
“இப்படி டாச்சர் செய்றதே பிடிக்கலை, இனியாவது என்னை டிஸ்டர்ப் பண்ணாம இரு” என்றவன் எழுந்து செல்ல, “டேய் நில்லுடா மச்சான்..” அகில் அழைக்க, அவளோ நொடியில் முகம் வாடினான். 
“அவன் பொய் சொல்லுறாம்மா, அவனுக்கு உன்னை பிடிக்கும்” 
“இல்லை, நீங்க சொல்லறது தான் பொய்”
“நிஜம் தான் ஆரா, இத்தனை வருஷம் அவனோட இருந்ததுல அவன் பிகேவியர் வைச்சு சொல்லுறேன். அவன் உன்னை தவிர, எந்த பொண்ணுகிட்டையும் அதிகம் பேசியதில்லை. பழகினதுமில்லை” 
ஆராவின் பார்வை சட்டென தியாவின் மீது பாய, “ஐயோ, சத்தியமா சொல்லுறேன் ஆரா சீனியர் எனக்கு அண்ணா மாதிரி” எனப் படபடத்தாள். 
ஆராவிற்கு அந்த நிலையிலும் சிரிப்பு வர, “அப்பறம் ஏன் அண்ணா அக்செப்ட் பண்ண மாட்டிக்காங்க?” என கேட்க, குரலில் சிறு ஏக்கம் ஒளிந்திருந்தது. 
“அதான் எனக்கும் தெரியலை..” என அகிலின் குரல் இறங்கியது. 
“எங்க போயிறப் போறான் விடாத ஆரா, மனம் தளராத விக்கிரமாதித்தன் மாதிரி முயற்சி செய்துகிட்டே இரு” என்ற  தர்ஷினி அவள் கைகளில் தட்டிக்கொடுக்க, “ஆமாம் எப்படியும் அந்த வேதாளத்தை உன் தோள்ல ஏத்திடலாம்” என்றான் அகிலும். 
விஜயரூபனுக்கு அவளைப் பிடிக்கும்! அவள் அழகின் மீதான ஈர்ப்பு வெகு காலம் நிலைப்பதில்லை என அவன் மனதிற்கு சப்பைகட்டுக் கட்டி அடக்கி வைத்திருந்தான். ஏனெனில் பெண்ணவளின் வாழ்க்கையும் எதிர்காலமும் விளையாட்டுப் பொருளல்லவே.  
ஆராதனாவின் காதல் மீது விஜய்க்கு நம்பிக்கைக் குறைவு, அவளை ஈர்க்கும்படியான தன் நடவடிக்கை எதுவுமில்லை, ஏன் ஆரம்பக்கால சந்திப்பிலே அவளை குறைவாகப் பேசி திட்டியுமிருக்கிறேன் பின் எவ்வாறு என் மீது காதல் வரும்?
தன் மீதிருப்பது சிறு சலனம் தான் காலத்தால் அதுவும் கரைந்துவிடும் என நினைத்தான். ஏற்கனவே அதை அவள் சொல்லியுமிருக்கிறாள் ஒன்றில்லை என்றால் மற்றொன்று என்னும்படியாக. ஆனால் அவனுக்கு அவ்வாறில்லை ஒரு காதல் தான், அந்த காதல் தான் அவன் வாழ்க்கை! 
தன் குடும்பத்தையும் ரவியையும் முன்னிறுத்துகையில் ஆராதனா தன் எதிர்காலமாக அமைவது சாத்தியமில்லாத ஒன்று! பின் ஏன் தேவையில்லாத ரசவாதங்களும் மனஸ்தாபங்களும் வலிகளும் என நினைத்தான். அவனே அறுதியாய் அறியாத ஒன்றின் மீது பொய்யான நம்பிக்கையை அவளுக்குத் தர இயலாது. விருப்பங்கள் வளரும் முன் விலகி நிற்பது நல்லது என்ற முடிவில் உறுதியாக இருந்தான். 
வார இறுதியில் மகனுக்குக் கொடுத்திருந்த வாக்குப்படி அவனையும் அழைத்துக்கொண்டு  அன்னை வீட்டிற்கு வந்திருந்தாள் சுபத்ரா. கௌஷி வரவேற்க, பவானிக்கு அத்தனை சந்தோஷம்! மகள் வருவதே அதுவும் பேரனோடு வருவது அரிதிலும் அரிது! 
ரவிக்கு அன்றும் வேலைநாள், விஜய் வீட்டில் தான் இருந்தான். அவனோடு விளையாடிக் கொண்டிருந்த ஸ்ரீயும் அவன் அருகில் வந்து நின்றாள். 
“என்ன விஜய் காய்ச்சல்ன்னு அம்மா சொன்னாங்க இப்போ எப்படி இருக்க?” என சுபத்ரா நலம் விசாரிக்க, “நல்லாயிருக்கேன் அக்கா” என்றான்.
“என் வீட்டுக்கு வந்த அன்னைக்கு மழையில நனைச்சிட்டியா?” என்றவளின் கேள்விக்கு அவன் ஆமென தலையாட்ட, “என்ன உங்க வீட்டுக்கு வந்தானா? எப்போ அண்ணி?” என வியப்பாக கேட்டாள் கௌஷிகா. 
“நாலு நாள் முன்ன?” சுபத்ரா பதில் சொல்ல, கௌஷி அவனை ஆராயும்படி பார்த்தாள். ஏனெனில் அவர்களே என்றேனும் சுபத்ராவின் வீட்டிற்கு அழைத்தால் கூட  வரமாட்டான், இன்று அவனாக சென்றிருக்கிறான் அதையும் வீட்டில் சொல்லவில்லை! 
அவள் பார்வையில் அர்த்தம் அறிந்தவன், “அவங்க வீட்டுக்குன்னு போகலை, அங்க என் ஃப்ரண்ட் ட்ராப் செய்ய போனேன்” என சமாளித்தான். 
அங்கு இவனுக்கு நண்பனா! கௌஷியின் பார்வை இன்னும் தெளியவில்லை. ஒரே ஒரு தடவை அவளை விடச் சென்றதற்கு எத்தனை பேரிடம் பதிலலிக்க வேண்டிய நிலை! எல்லாம் என் சோதனை காலம்! என நொந்து கொண்டான். 
அதற்கு மேலும் அங்கு நிற்காது ஸ்ரீயை தூங்கிக்கொண்டு மிதுனையும் விளையாடவென தன் அறைக்குள் அழைத்துச் சென்றுவிட்டான். 
பெண்கள் மூவருமே சமையலறை நோக்கிச் செல்ல, பவானி அன்றிருந்த சந்தோஷத்தில் மகளுக்குப் பிடித்ததையும், மகளிடம் கேட்டு பேரனுக்குப் பிடித்ததையும் தானே சமைக்கத் தொடங்கினார். கௌஷியும் அவருக்கு உதவ, அவரிருந்த உற்சாகத்தில் கால் வலியெல்லாம் மறந்தே போனது. 
சுபத்ராவும் அவர்களோடு கிட்சனில் அமர்ந்து பேச ஆரம்பித்து விட்டாள். பெண்கள் கூடுகையில் பேசுவதற்கு விஷயமல்ல நேரம் தான் பற்றாது. 
இடையில் கௌஷிக்கு போன் வர, அட்டென் செய்து பேசி முடித்தவள், “தரகர் பேசினார் அத்தை விஜயோட ஜாதகம் ஒரு காபியும், ஒரு போட்டோவும் கேட்டார் அத்தை” என பவானியிடம் தகவல் தெரிவித்தாள். 
“அப்போ சரி, ரவி நாளைக்கு வேலைக்குப் போகும் போதே கொடுத்துவிடு கௌஷி” 
“இல்லை அத்தை வாட்ஸப்ல அனுப்பினா போதுமாம், நானே நைட் அனுப்பிடுறேன்”
பவானி சரியென்க, இருவர் பேசுவதையும் கேட்டுக் கொண்டிருந்த சுபத்ரா, “ஏம்மா விஜய்க்குப் பெண் பார்க்க ஆரம்பிச்சிட்டீங்களா?” என்றாள். 
“இன்னும் இல்லை, கல்யாண நேரம் வந்திட்டுன்னு ஜோசியர் சொல்லிருக்காரு, இனி தான் தரகர்ட கொடுக்கணும்” என்க, “ஏம்மா எங்கிட்டசொல்லவே இல்லை, விட்டா கல்யாணத்துக்கு முதல் நாள் தான் சொல்லுவீங்க போல..” என்றாள் குறையாக. 
தன் வீட்டில் தானே அந்நியப்பட்டுப் போன உணர்வு சட்டென அவளைப் பேச வைத்திருந்தது. 
சொல்லிருக்க வேண்டுமோ! தன் தவறு தானோ? என நினைத்து கௌஷி கைகளைப் பிசைந்து கொண்டிருந்தாள். நட்பாகப் பழகினாலும் நட்பாக அமைத்து விடுவதில்லை அண்ணி, நாத்தனார் உறவு. 
“இப்போ என்ன? நீயும் உங்க சொந்தத்துல, உனக்கு தெரிஞ்ச இடத்துல… நல்ல பொண்ணு இருந்தா சொல்லு. உனக்கு இல்லாத உரிமையா..?” என்ற பவானியின் கூற்றில் சற்றே சமாதானம் அடைந்தாள் சுபத்ரா. 
கௌஷி நிம்மதியாய் மூச்சு விட்டுக்கொள்ள, பவானி சமையலை முடித்து அனைவரையும் சாப்பிட அழைத்தாள். கௌஷி சாப்பாட்டு மேசையில் உணவுகளை எடுத்து வைக்க, சுபத்ரா விஜயையும் பிள்ளைகளையும் அழைக்கச் சென்றாள். 
விஜயொரு குரங்கு முகமூடியை அணிந்து கொண்டு பிள்ளைகளுக்கு விளையாட்டுக்காட்ட, ஸ்ரீ சரித்தபடி அவனிடமிருந்து ஓடித் தப்பிக்க, மிதுன் அவளைப் பிடித்து வந்து விஜயின் முன் நிறுத்தினான். அவ்வறை எங்கும் ஸ்ரீயின் மழலைச் சிரிப்பு தான் சிதறிய வெள்ளி நாணயங்களை போல் ஒலித்தது. 
அத்தனை அழகாய் குலுங்கி சிரிப்பாள், அவள் சிரிப்பிற்கு அனைவரையுமே வசியப்படுத்தும் சக்தி உண்டு தான். மிதுன் அளவாகத் தான் பேசுவான், அவ்வளவு எளிதாக யாருடனும் ஒட்டிக் கொள்வதுமில்லை. ஆனால் ஸ்ரீ அவனுக்கு எதிர்ப்பதம்! பெண்பிள்ளைகள் இருக்கும் வீடே தனி அழகு! 
சுபத்ராவிற்கும் பெண்பிள்ளைக்கான ஏக்கமிருந்தது. ஸ்ரீயை பார்த்தபடி நின்றுவிட, விஜய் தான் அவளை கவனித்து பின் குழந்தைகளை அழைத்து வந்தான். அனைவருமே உணவு மேசையில் அமர, கௌஷி பரிமாற, ரசித்து உண்டனர். 
“சாப்பாடு பிடிச்சிருக்கா கண்ணா..?” மிதுனிடம் பவானி கேட்க, 
“ம்ம், பாயசம் டேஸ்டா இருக்கு பாட்டி..” என்றான் தலையை ஆட்டியபடி. 
“டூ யூ க்நொவ் எங்க பாட்டி எக் நூடுல்ஸ் கூட சூப்பரா செய்வாங்களே, எனக்கு இன்னும் நிறைய செய்வாங்களே..” எனக் கையை விரித்துக்காட்டி ராகமிழுத்த ஸ்ரீ, தன் பாட்டி என்ற உரிமையும் காட்டிவிட்டாள். 
“நீ ரொம்ப லக்கி, தினம் சாப்பிடலாம்..” என மிதுன் உரைக்க, “அதுக்கு என்ன கண்ணா நீ வார வாரம் வா, பாட்டி உனக்கும் செய்து தரேன்” என்றார் பவானி. 
“எனக்குத் தான் கராத்தே கிளாஸ் இருக்கே, கண்டிப்பா போகணும்னு டாடி சொல்லுவாங்க” என்றவன் சோகமாக, பவானி சுபத்ராவைப் பார்த்தார். 
“ஆமாம்மா, ஆல்ரெடி இன்னைக்கு கூட்டிட்டு வரேன்னு சொல்லியிருந்ததால அவர்கிட்ட கேட்டு கூட்டிட்டு வந்தேன். அவனுக்கு இன்னைக்கும் கிளாஸ் இருக்கு தான்” என்க, பவானி பரிவோடு அவன் தலை தடவினார். 
மிதுன் பள்ளிப்படிப்பு போக, திறமைகளை வளர்த்துக்கொள்ளவென சிறப்பு வகுப்புகளுக்கும் செல்வதுண்டு. தனக்கு கிடைக்காத வாழ்க்கையின் வழமைகளை மகன் அனுபவிக்க வேண்டுமென்று நினைத்தார் ஜெய்பிரகாஷ். அவரின் ஏற்பாடு என்ற போதும் மகனின் எதிர்காலம் என்பதால் சுபத்ராவால் தடுக்க இயலவில்லை. அதனாலே மிதுனை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லும் வாய்ப்புகளும் நேரங்களும் குறைவு. 
குழந்தைகள் வெளியே செல்ல வேண்டுமென்று கேட்க, மாலை அனைவரும் கோவிலுக்குச் சென்றுவிட்டு பின் கடற்கரைக்குச் சென்றார். ஸ்ரீக்கு தண்ணீரைக் கண்டதும் அவ்வளவு உற்சாகம் உடை நனைய சிரித்து விளையாடியவள் மிதுனையும் ஒரு பாடு படுத்த, இருவரையும் கண்காணிப்பதே விஜய்க்கு வேலையாகிப் போனது. 
இருளவும் சுபத்ரா மகனோடு அவள் வீடு கிளம்பினாள். அன்னையும் அண்ணியும் கலைத்திருப்பதாய் தெரிய, அனைவரையும் அழைத்துச் சென்று ஹோட்டலில் உணவருந்திவிட்டு ரவிக்கு ஒரு பார்சல் உணவு வாங்கினர். ஸ்ரீயும் உறங்கிவிட விஜய் அவளைத் தூக்கிக்கொள்ள அனைவரும் வீடு வந்தனர். 

Advertisement