Advertisement

அத்தியாயம் 23 
வாசலோடு கட்டப்பட்ட வாழைகள் அனைவரையும் வரவேற்க, மலர் மனமும் மங்கள இசையும் நிறைந்த சுகந்தம் அவ்வீடெங்கும் பரவியிருந்தது. எல்லாவித செல்வமும் நிம்மதியும் மகிழ்ச்சியும், புது வீட்டில் நிலைக்க வேண்டி, பூஜை நடைபெற்றது. வரவேற்பு அறையின் மையத்தில் பூஜை நடக்க, எதிரே மனையில் ரவி, கௌஷிகா, விஜயரூபன், ஆராதனா என இரு தம்பதிகளுமே மாலையோடு அமர்ந்திருந்தனர். 
பவானி ஒரு ஓரம் நின்றிருக்க, சுபத்ரா தான் ஓடி ஓடி விருந்தினரை வரவேற்பதும், பூஜை பொருட்களை எடுத்துக் கொடுப்பதுமாக இருந்தாள். தன் தந்தையின் கனவு, தமையன்களின் உழைப்பு இன்று உருப்பெற்றதில் பெருமையும் மகிழ்வும் அவளுக்கு. 
விஜயின் திருமணம் இப்போ தான் விமர்சையாக நிகழ்ந்ததால் கிரப்பிரதேஷத்தை எளிமையாக நடத்தினான் ரவி. கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாதென பவானியும் ஆமோதித்தார். 
கௌஷிகாவின் தந்தை, சுபத்ராவின் குடும்பத்தார் உடன் ஆராவின் குடும்பத்தார் என நெருங்கிய சொந்தங்கள் மட்டும் அழைத்திருந்தான் ரவி. அகில், தர்ஷினியை விஜய் அழைத்திருந்தான். 
பூஜைகள் முடிய, கௌஷிகா கையால் புது அடுப்பறையில் பால் காய்ச்ச, ஆரா அதைச் சிறு சிறு டம்பளரில் ஊற்றி அனைவருக்கும் பரிமாறினாள். பெண் கொடுத்த போது அவன் மீது கொண்ட நம்பிக்கை சரிதான் என இன்று ரவி நிரூபவித்துவிட்டதில் கௌஷியின் தந்தைக்குச் சந்தோஷம். 
அதிலும் இளைய மருமகள் வசதியான இடத்திலிருந்து வந்த போதும் தன் மகளுக்கான உரிமைகள் எதுவும் குறையாது, இருவரும் சமமாக நடத்தப்படுவதில் மனம் நிறைந்து போனார். மகிழ்வோடு மக்களை ஆசிர்வதித்தார். ஜெய்பிரகாஷும் அன்போடு வாழ்த்த, உள்ளுக்குள் கர்வம் மிளிர, முகத்தில் பணிவோடு ஏற்றான் ரவி. 
ஸ்ரீநிதி, ஆராவின் நாய்குட்டி பட்டுவுக்கும் மிதுனுக்கும் அவள் அறையைக் காட்டினாள். அதிலும் ஆரா செய்து வைத்திருந்த குட்டி மேசை, கட்டில், கார்டூன் சுவர் ஓவியங்கள், வண்ண விளக்குகள் என அனைத்தையும் தனித்தனியாக விவரித்தாள். 
அனைவருமே வீட்டின் அழகையும் வடிவமைப்பையும் அலங்காரத்தையும் பாராட்ட, சந்தோஷத்தில் பூரித்த பவானி, சின்ன மருமகளின் ஏற்பாடு என பெருமையாக உரைத்தார். 
பவானியின் பாராட்டுகள் அஸ்வினின் செவிகளிலும் விழ, என்ன தான் விஜயை முறைத்த போதும் அவன் வீட்டினர் ஆராதனாவை நடத்தும் விதத்தில் திருப்தி கொண்டான். 
தன் கையிலிருக்கும் கேமிராவில் விஜய் அனைத்து நிகழ்வுகளையும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்க, அவன் அருகே வந்த ஜெய்பிரகாஷ், “என்ன மாப்பிள்ளை எப்படியிருக்க?” என்றார். 
“நல்லாயிருக்கேன் மாமா..” என்க, “என்னடா பண்ற?” என்றவர் எட்டி அவன் கேமிராவை பார்த்தார். பல வித கோணங்களில் வித விதமாக அஸ்வினின் புகைப்படங்கள் இருக்க, “ஏன் மாப்பிள்ளை உன் மாச்சானுக்கு பொண்ணு எதுவும் நீ பார்க்கப் போறீயா?” என்றார் கேள்வியாக. 
“ச்சே, ச்சே இல்லை மாமா. அந்த மாங்கா மடையன் எப்போ பாரு என்னை முறைச்சிப் பார்த்துகிட்டே இருக்கான். சொன்னா என் பொண்டாட்டி நம்ப மாட்டிக்கா, அதுக்கு தான் ப்ரூப் ரெடி பண்றேன்..” 
அவன் தோளில் தட்டிக் கொடுத்தவர், “நான் கூட இப்படி தான் என் கல்யாண வீடியோவை போட்டுக் காட்டி தான் நீ என்னை முறைத்ததை உங்க அக்காவுக்கு ப்ரூப் பண்ணேன்..” என்க, முகத்தை எங்கு வைக்க, என்னும் நிலையில் இருந்தான் விஜய். 
“ம்ம், அது..அது.. இந்த ஸ்ட்ரீட் போஸ்ட் மாதிரியா? அப்போ நான் சின்ன பையன்” என்க, “சின்னவனோ பெரியவனோ காரணம் ஒன்னு தான், உனக்கு என்னை பிடிக்கலை, அவனுக்கு உன்னை பிடிக்கலை” என்றார். 
விஜய் அமைதியாக இருக்க, “கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு நாள் நைட் நீயும் ஆராவும் எங்க தெருவுல ஒன்னா நடந்து போறதையும் மரத்தடியில நின்னு பேசுறதையும் பார்த்திருக்கான். மறுநாள் என் ஆபிஸ் வந்து உங்க மச்சான் என் தங்கச்சி பின்னாடி சுத்தறது சரியில்லை, அவன் என் தங்கச்சிக்கு எந்த விதத்தலையும் சமமில்லை, தகுதி இல்லை, அவன்கிட்ட சொல்லி வைங்க இல்லை நடக்குறதே வேறன்னு கத்தினான். 
நான் பெரியவுங்ககிட்ட பேசிக்கிறேன் நீ அமைதியா போன்னு அனுப்பி வைச்சிட்டு, ஒருவேளை நீ ஆராவை விரும்புறியோன்னு நினைத்து சுபத்ராகிட்ட சொல்லி அனுப்பினா, உங்க அக்கா அறிவாளி கட்டிக்கப் போற உன்னை விட்டு உன் அண்ணன்கிட்ட வந்து கேட்டு இருக்கா. 
எப்படியோ உன் கல்யாணம் முடிந்தது. இனி ஆரா உன்னோட சந்தோஷமா வாழுறதை பார்த்தா உன்னை புரிஞ்சிப்பான், என்ன கொஞ்ச நாள் ஆகும்” என அனுபவம் கொண்டவராய் உரைத்தார். 
அடேய்! அஸ்வின் என் பின்னாடி சுத்தினது எல்லாம் உன் தங்கச்சிடா என மனதில் நினைத்தபடி பற்களைக் கடித்தவன், “தேங்க்ஸ் மாமா” என தலையாட்ட, அவன் தோளில் தட்டிவிட்டுச் சென்றார். 
மீண்டும் கேமராவை இயக்க, சற்றே தொலைவில் அரக்குப்பட்டில் ஆராவும், நீலப்பட்டில் சுபத்ராவும், தளிர்பச்சைப்பட்டில் கௌஷியும் நெருங்கி நின்று சிரித்துக் கொண்டிருந்தனர். என்ன பேசினார்களோ ஆனால் பார்ப்பதற்கே வண்ண மலர்களை அள்ளிக் கட்டிய மலர்ச் செண்டாய் அவர்கள் தோற்றம் கண் நிறைக்க, அதை தனது கேமிராவிலும் பதிபித்துக் கொண்டான்.  
அகில், தர்ஷினியின் அருகே சென்று அமர, “என்ன மச்சான், கல்யாண வாழ்க்கை எல்லாம் எப்படி போகுது?” என அகில் கேட்க, தர்ஷினி அவன் கையில் இருக்கும் கேமிராவை பிடுங்கி ஆராய்ந்து கொண்டிருந்தாள். 
“அதை ஏன்டா கேட்குற? அன்னக்கரண்டி, குழிக்கரண்டி, தோசைக்கரண்டி, சல்லிக்கரண்டின்னு விதவிதமான கரண்டியால தினமும் வெளுத்துக் கட்ற மச்சான், அதுவும் போக, கத்துக்கிட கராத்தே வித்தையெல்லாம் என் மேல காட்றா” என உண்மையிலே பட்டவன் நொந்து உரைத்தான். 
“கிட்சன் வரைக்கும் பின்னாலே போன அப்படி தான்..” என தர்ஷினி உரைக்க, “வித்தையெல்லாம் வீணாகக் கூடாதுல அதுக்கு தான்..” என அகில் கேலி உரைத்தான். 
“ஆறுதல் சொல்லாட்டாலும் பரவாயில்லை, என்னை கேலி செய்ய மட்டும் இரண்டு பேரும் ஜோடி சேர்ந்துக்கிறீங்களே இது நியாயமாடா?” என நொந்தான் விஜய். 
சுபத்ராவை நெருங்கிய ரவி, “மாப்பிள்ளை இங்க வாங்க..” என ஜெய்பிரகாஷையும் அருகில் அழைத்தான். 
அவரும் வர, மஞ்சள் குங்குமத்தோடு பட்டும் பணமும் வைத்த தாம்பூலத்தை அவர்களிடம் நீட்ட, “இதெல்லாம் எதுக்கு அண்ணா..:” என்ற சுபத்ராவின் வார்த்தைகளுக்கு, அவள் கரங்களைப் பற்றி, “உன் சந்தோஷம் தான் எங்களுக்கு நிம்மதி வாங்கிடா..” என்றான் ரவி. 
திருமணத்திற்குப் பிறகு அவளைக் குத்திக்காட்டியே பேசியவனிடமிருந்து இப்படி ஒரு இன்சொல் வர, அவளுக்கு உள்ளம் பொங்கியது. 
அவன் செயல், எப்போதும் நான் இருக்கிறேன், உன் பிறந்த வீட்டுச் சொந்தம் இருக்கிறது என சொல்வது போல் இருக்க, பூரித்தமுகத்தில் ததும்பிய நகையோடு வாங்கி கொண்டாள். ரவி எப்போதும் அவன் கடமைகளில் தவறியதில்லை தான், ஆனால் இன்று உள்ளார்ந்த நிறைந்த மனதோடு செய்தான்.
கண்கலங்கிய சுபத்ரா அவன் தோள் சாய, தோளோடு அணைத்தவன் மெல்லத் தலை தடவிக் கொடுத்து விலக்கினான். அவர்களையே பார்த்திருந்த விஜய், “அண்ணா நானு..” என்க, கை நீட்டிய ரவி நெஞ்சோடு அணைத்து முதுகை தட்டிக் கொடுத்தான்.
“க்கும்…” என ஆரா செறுமல் குரலில் அவன் விலக, “எங்களுக்கும் அண்ணன் இருக்கான்..:” என அருகருகே நின்று கொண்டிருந்த ஆராவும் கௌஷியும் ஒரே நேரத்தில் சிலுப்பிக் கொண்டனர். 
“ஆயிரம் அண்ணன் இருந்தாலும் எங்க அண்ணன் போல வருமா?” சுபத்ரா கேட்க, “ம்ம், கேளுக்கா..” என விஜயும் கூட்டுச் சேர்ந்தான். 
ரவி சிரிப்போடு விலகிச் செல்ல, பார்த்திருந்த பவானிக்கு மனம் மகிழ்ச்சியில் நிறைந்தது.  
விஜய் வேறு அவன் பாசத்தைக் காட்டும் விதமாக பெரிய போட்டோ பிரேமை கொண்டு வந்து ஹாலில் மாட்டினான். அது அவர்கள் குடும்பப் புகைப்படம், அவன் திருமணத்தின் போது எடுத்த புகைப்படம். அதில் சுபத்ராவும் அவள் கணவன் குழந்தையோடு நின்றிருந்தாள். 
அவளும் இந்த வீட்டில் ஒருத்தி என அனைவருக்குமே அவன் காட்டிவிட, ரவியும் நன்றாக இருப்பதாகக் பாராட்ட, சுபத்ராவிற்கு புது வெள்ளம் பொங்கிப் பெருகும் காவேரி போல நிறைந்தது நெஞ்சம்!  
வந்தவர்கள் அனைவரும் வாழ்த்தி விருந்துண்டு கிளம்பினர். கோடை விடுமுறை ஆகையால் மிதுனோடு அங்கு இருப்பது என்றாலும் இருந்து வா என ஜெய்பிரகாஷ் விட்டுச் சென்றிருந்தார். 
இரவு நேரம் வெண்ணிலவின் ஒளியில், மென் தென்றலில் குளுமையில் அனைவரும் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தனர். பவானி கிராமத்தில் சிறுவயதில் அவர் வளர்ந்த விதத்தை ஸ்ரீயிடம் கதை கதையாக சொல்லியிருந்தார். தெருவில் விளையாடிவிட்டு தோழிகள் அனைவரும் திண்ணையில் அமர்ந்து உண்பர், அந்த உணவின் ருசியே தனி என்பது போல் தெரிவித்துவிட, ஸ்ரீயும் பிடிவாதம் செய்ய, இரவு உணவிற்கு அனைவரும் அங்கு அமர்ந்திருந்தனர். 
மனைவி, அண்ணி, மகள், அன்னை, அக்கா என விஜயரூபனின் அருகில் அவன் வீட்டுப் பெண்கள் அனைவரும் பாதி வட்டமாக அமர்ந்திருக்க, சற்று தொலைவில் பட்டுவும் சமத்தாகப் படுத்திருந்தது. இன்று விஜய்க்குப் பரிபூரணமாக மனம் நிறைந்த உணர்வு. அனைத்தும் இப்பெண்களால். இவர்கள் ஒவ்வொருவரும் அவனை இயக்கம் வெவ்வேறு சக்தி.
இவர்களில் ஒருவரை இழந்தும் அவனால் இருக்க இயலாது, பெண்கள் தான் எத்தனை இன்பம் தருகிறார்கள்? யாதுமாகி நிறைகிறார்கள்! என உயர்வாக நினைத்தான்.  
ஓடி ஆடி சுற்றித்திரிந்த அசதி, கௌஷியின் மடியில் படுத்திருந்தாள் ஸ்ரீநிதி, அவள் உறங்கி விடாது இருக்கு கௌஷி அவளோடு உரையாடிக் கொண்டிருந்தாள். சுபத்ரா அதை ஒரு ஏக்கப் பார்வை பார்த்து திரும்ப, சற்று நகர்ந்து அமர்ந்து சுபத்ராவை தன் மடியில் சாய்த்துக் கொண்டார் பவானி. 
மென்மையாக அவள் தலை வருடிக் கொடுக்க, சுபத்ரா ஆர்ப்பாட்டமில்லாத ஆழ்ந்த அமைதியை உணர்ந்தாள். அவளுக்கும் மனம் நிறைந்திருந்தது என் தமையன்கள், என் அன்னை, என் குடும்பம் என்ற உரிமை உணர்வு. உறவுகள் விட்டுப் போகவில்லை, எதுவும் மாறவில்லை, நான் எங்கும் தொலைத்திடவில்லை. 
இங்கு தான் என் அன்னை மடியில் இருக்கிறேன். எனக்கு உரிமையான இடத்தில் இருக்கிறேன். அவள் கைகளின் கதகதப்பும், மடியின் அரவணைப்பும், முந்தி சேலையில் உணரும் அவள் வாசமும் தன்னை சிறுமியாக மாற்றிய மாயை! நெகிழ்ந்திருந்த சுபத்ராவின் கண்கள் லேசாகக் கசிய, இறுகக் கண்களை மூடினாள். 
அவளையே விஜய் இமைக்காது பார்த்திருக்க, அவன் தோளில் இடித்த ஆராதனா, “என்ன லுக்?” என்றாள் மென்குரலில் விசாரணையாக. 
“என் அக்கா..” என்றான் பூரிப்புடன், “அதுக்கு என்ன?” என்றாள் அவளும். 
“என் அக்கா அழகான நறுங்கவிதை..!” என்க, “உன் அக்கா மட்டும் நறுங்கவிதை, அப்போ நாங்க எல்லாம் என்ன நஞ்ச கவிதையா? இரு கௌஷிக்கா கிட்ட சொல்லுறேன்” என மிரட்டியவள் திரும்ப, “நீங்களும் தான்..” சட்டென ஏற்றக்கொண்டான். 
அது..! என்பது போல் பார்த்தவள், “அப்படினா..?” எனப் புரியாது கேட்டாள். 
சின்ன சிரிப்போடு அவள் காதோரம் தொங்கிய சுருள் முடியைப் பற்றி இழுத்தவன், “மண்டையில நூடுல்ஸ் ஹேரை தவிர எதுவும் இருந்தால் தானே” என்றான் கேலியாக. 
“செந்தமிழ் நகி மாலும்..” என்றவள் முறைக்க, கண்டுகொள்ளாதவன், “செந்தமிழா..!” வியப்பாகக் கேட்டபடி, “நறுமணத்தை வார்த்தைகளில் வர்ணிக்கவோ, உணர வைக்கவோ இயலாது, அது போலே அவளும் (பெண்) மொழிகளின் வர்ணனைகளுக்கு அப்பாற்பட்ட கவிதை..!” என்றான். 
“இன்னைக்கு ரொம்ப தான் பாசமலர் படம் காட்ற..” என்க, “ரூம்புக்கு வா காதல் படமும் காட்றேன்” எனக் கண்சிமிட்டினான். 
“எது? தலைய சொறிஞ்சிகிட்டு சட்டையை கிழிச்சிட்டு சுத்தப் போறீயா?” என்றாள் கேலியாக. 
விஜய் முறைக்க, சரியாக அதே நேரம் மிதுனும் ரவியும் இருகைளிலும் உணவு பார்சலோடு மாடியேறினர். 
பெண்கள் அனைவருக்குமே அதிகப்படியான வேலை, அலுப்பாக இருப்பதை உணர்ந்தவன் இரவு உணவு சமைக்க வேண்டாம், உணவகத்தில் வாங்கி வருகிறேன் என மிதுனோடு சென்றிருந்தான். 
”கொஞ்சம் லேட் ஆகிடுச்சி, நீங்க ஏம்மா மாடி ஏறி வந்தீங்க?” எனப் பவானியிடம் பரிவாகக் கேட்டபடி அமர, “ஒரு நாள்ல என்னடா இருக்கு? என் பேத்தி ஆசை” என்றார் பவானி. 
சுபத்ரா எழுந்து கொள்ள, ஆரா அனைவருக்கும் உணவைப் பிரித்து தட்டில் வைத்துக் கொடுக்க, கௌஷியிடமிருந்து ஸ்ரீயை வாங்கிக் கொண்ட ரவி முதலில் மகளுக்கு ஊட்டத் தொடங்கினான். 
அனைவரும் பேசியபடியே உண்டு முடிக்க, மேலும் சிறிது நேரம் பேசியபடியே அமர்ந்திருந்தனர். ஸ்ரீ கௌஷியின் மடியிலே உறங்கிவிட, பாவனியும், “போதும்பா, லேட் ஆகிடுச்சு எல்லாரும் போய் படுங்க” என்றபடி தடுமாறி எழுந்தார். 
சுபத்ரா தாங்கிப் பிடித்து அழைத்துச் செல்ல, கௌஷிகாவின் மடியிலிருந்த குழந்தை தூக்கி தோளில் போட்டுக்கொண்டு, அவளுக்கும் எழுவதற்கு ஒரு கை கொடுத்தான் ரவி. அனைவரும் எழுந்து நடக்க, விஜய் இரண்டடி நகர்ந்திருக்க, “விஜய்…” என அழைத்தாள், ஆராதனா. 
அனைவருமே அவள் குரலில் திரும்பிவிட, சிறு பிள்ளை போல் அவனை நோக்கி கைகளைக் தூக்கியபடி தரையில் அமர்ந்திருந்தாள். தன்னை தூக்கும்படி பிடிவாதம்! அன்னையும் ரவியும் சிரித்தபடி முன்னே சென்றுவிட, ஐயோ என் மானம் போச்சே…! என நொந்த விஜய், ஓடிச் சென்று அவளைத் தூக்கினான்.  
“இம்சை, உசுர வாங்குற நீ..” என்றபடி அவளை கைகளில் தூக்க, அவன் கழுத்தைச் சுற்றி ஒரு கை போட்டவள், “கல்யாணத்துக்கு முன்னாடியே உன்னை கொல்லறதுக்கான முழு உரிமையும் எனக்குக் கொடுத்திருக்க, ஞாபகம் இருக்கட்டும்” என்றாள். 
“அப்படியா..!” என ஆச்சரியம் காட்டியவன், “எனக்கு நினைவில்லையே..” என்றபடி மாடியிலிருந்து இறங்கினான். 
“அதானே, அது எப்படி உனக்கு ஞாபாகம் இருக்கும்? உன் அக்கா மட்டும் உனக்கு நறுங்கவிதை..!” என்றவள் சிலுப்பிக் கொள்ள, “நீயும் தான் எனக்குக் கவிதை, சொல்லடா?” என்றான். 
அவள் சம்மதம் சொல்லும் முன், “அன்பே ஆராதனா..! நீ அல்வா தானா..!” என்றவன் ஆரம்பிக்க, “விட்டுடு வேணா.. செத்துடுவ வீணா..!” என எதிர்ப்பாட்டால் மிரட்டினாள். 
“விட்டுவா..?” என்ற கேள்வியோடு அவளை தாங்கியிருந்த கையை சட்டென அவன் கீழிறக்க, கீழே வளைந்து செல்லும் படிகளை பார்த்தவள் பயத்தில் அவன் நெஞ்சோடு ஒட்டிக்கொண்டு, கழுத்தை இறுகக் கட்டிக் கொண்டாள். 
அவள் செயலில் சிரித்தவன் அறையில் வந்து இறக்கிவிட, மேசையிலிருந்த கேமிராவை எடுத்து இயக்கி, அதிலிருக்கும் புகைப்படங்களைப் பார்க்கத் தொடங்கினாள்.
அவனோ பின்னோடு அவளை அணைத்து பெருமூச்சு வாங்க, “என்ன கனம் கனக்குற நீ, கல்யாணத்துக்கு அப்பறம் டையட் மெயின்டன் பண்றதில்லை, நல்லா வெய்ட் போட்ட நீ, இங்க பாரு கொஞ்சம் தொப்பை கூட வந்துருச்சி” என்றபடி புடவை மேலே அவள் வயிற்றில் தடவிக் கட்டினான். 
சட்டென அவன் கைகளில் அடித்தவள், “எங்க அண்ணனை எதுக்குங்க இத்தனை போட்டோ எடுத்து வைச்சிருக்கீங்க?” என்றாள். 
இறுக்கி அணைத்தவன் அவள் கழுத்தை உரசியபடி எட்டிப்பார்த்து, “நல்லாப்பாரு, எப்படி முறைச்சிப் பார்க்கிறான் பாரு” என்க, “ஹே, அவன் போட்டோ போஸ் கொடுத்திருக்கிறான்” என்றாள். 
“க்கும், அவனை சொன்னா மட்டும் நீ நம்ப மாட்டியே..” என்றவன் குறைபட, “இன்னைக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா? விஜயை விட உனக்கொரு நல்ல மாப்பிள்ளையை எங்களால பார்த்திருக்க முடியும், ஆனால் இதை விட நல்ல குடும்பம் தேடினாலும் அமையாது, உன் தேர்வு சரி தான்னு பாராட்டினான்” என்றாள் பெருமையாக. 
“அப்பவும் என்னைச் சொல்லையே..!” என்றவன், “சரி உங்கண்ணை இம்ரேஸ் பண்ண ஏதாவது ஐடியா கொடேன்..” என்றான். 
“தேவையில்லை, எனக்கு பிடிச்சா என் அண்ணனுக்கும் பிடிக்கும்” என்படி அடுத்த புகைப்படத்தைத் திருப்ப, அதிலிற்கும் வீடியோவை கண்டு பிளே செய்தாள். 
அகில், தர்ஷினியோடு பேசிய உரையாடல் பதிவாகி இருக்க, “அடிப்பாவி தர்ஷினி, வைச்சிட்டியே ஆப்பு..” என உள்ளே புலம்பினான். 
உசாரானவன் அணைப்பை விடுத்து விலகி ஓட, “ஏன்டா? நான் உன்னை விதவிதமான கரண்டிகளால அடிச்சேனா? அடிச்சாலும் இப்படி வெளியே சொல்லுவியா?” எனக் கேட்டபடி அவனை விரட்டினாள், ஆராதனா. 
அவன் வேகத்திற்கு அவளால் விரட்டிப் பிடிக்க இயலாது, மேலும் வேகமுடன் ஓடினாள். அவனோ கைகளில் சிக்காது கட்டிலைச் சுற்றியே ஓடி விளையாட்டு காட்டி, அவளையும் ஓட வைத்துக் கொண்டிருந்தான். 
தன்னை துரத்தி வருபவளின் வேகம் உணர்ந்தவன் சட்டென நின்று திரும்பி விட, வந்த வேகத்திற்கு அவன் மேலே மோதினாள், ஆராதனா.
“அம்மா..” என்ற வலி முனங்கலோடு, தன் மேல் பொத்தென விழுந்தவளைத் தாங்கியபடி அவனும் கீழே விழ, “பிராடு…” அவள் திட்டத் தொடங்க, அவளை இறுக அணைத்திருந்தான். 
இடையோடு அவள் கைகளையும் அவன் அணைத்திருக்க, அடிக்க முடியாது முழித்தவள், சட்டென அவன் கன்னத்தில் ஈரம் படர, பற்கள் பதிய கடித்தாள். வலியோடு வாங்கிக் கொண்டவன் அவள் முகத்தை விலக்க முயல, அந்த சந்தர்பத்தில் அவள் கைகளை உருவிக் கொண்டு அவன் நெஞ்சில் அடிக்க, அவனோ அவள் இதழோடு இதழ் பதித்திருந்தான். 
அவ்வளவு தான் ஆராதனாவின் அடித்த கரங்கள் அன்போடு விஜயரூபனை அணைத்திருந்தது. தித்திப்பாய் ஊடல், திகட்ட திகட்டக் காதல் என அவளுடனான இனிய வாழ்வு, அவன் வாழ்நாளின் இறுதிவரை வேண்டுமென்ற வேண்டுதலை ரகசியமாய் நெஞ்சோரம் வைத்தான். 
அவன் சுவாசத்திற்குத் திண்டாடுகையில் அவள் சுவாசமாக, அவள் திண்டாடுகையில் அவன் சுவாசமாக, மீளாத இதழ் மலர்கள், நேசத்தின் நறுமணத்தை அவர்களுக்கு கொடுத்துக்கொண்டே இருக்கும் என்றென்றும்! 
*****

Advertisement