Advertisement

“அம்மா, அப்பாவோட நீங்க போய் பார்த்துட்டு வாங்க. இரண்டும் பக்கமும் பிடித்திருந்தது உறுதியாகிடுச்சின்னா சண்டே நானும் விஜயும் வரோம், உனக்கும் செகேன்ட் டைம் பார்க்குற வாய்ப்புக் கிடைக்கும்” என்றாள் இலகுவாக. 
திருமணத்திற்கு முன்பு அவனோடு சின்ன சின்ன விஷயத்திற்கும் சண்டையிடுபவள் தான் ஆனால் இப்போது சிறு வாக்குவாதத்திற்கும் இஷ்டமில்லை. வார்த்தைகளைப் பார்த்து பார்த்து பேசினாள். 
“ம்ச் ஆரா, உன்னை மாதிரி இல்லை, எனக்கு பார்க்கிற பொண்ணு உனக்கும் பிடிச்சிருக்கணும்னு எதிர்பார்க்கிறேன். நீ என்னடா எனக்கு பிடிச்சிருந்தா பிறகு வந்து பார்த்துக்கிறேன்னு சொல்லுறீயே இது சரியா?” என்றான். 
விஜயரூபனை அவளாக தேர்ந்தெடுத்ததில் அவனுக்கு வருத்தம், அதை அவளும் அறிவாள். 
“அண்ணா கல்யாணம் பண்ணிக்கப் போறது நீ தான், பார்க்கிற பொண்ணு உன் மனசுக்கு பிடிக்கணுமே தவிர, அம்மா, தங்கச்சிக்குப் பிடிக்கிறது எல்லாம் இரண்டாவது தான்”
“அப்போ நீ வர மாட்ட?” 
“லூசா நீ! நான் எப்படி வர முடியும்? எங்க வீட்டு விசேஷம், இந்த வீட்டு மருமகளா நான் இங்க இருக்க வேண்டாமா?” 
“அப்போ என்னை விட, உனக்கு இவங்க எல்லாம் தான் முக்கியமா?” என்றான் ஆதங்கத்துடன். நேற்று வந்த உறவிற்கு இத்தனை முக்கியத்துவமா என்ற எண்ணம். 
“அண்ணா, உன் மேல இருக்குறது பாசம் ஆனால் நான் இங்கிருக்க வேண்டியது என் கடமையில்லையா?” என்றாள் இறங்கிய குரலில். 
“அப்போ இவங்க தான் உனக்கு முக்கியம்? இந்த கொஞ்ச நாள்லையே நீ ரொம்ப மாறிட்ட ஆரா?” என்றான் கோபமாக. 
“என்ன மாறிட்டேன்? நான் இப்பவும் அதே ஆரா தான், உன் தங்கச்சி ஆரா தான். நான் இருக்கிறது ஜாயின் பேமலி, இங்க என் உரிமைகளுக்கு வரையறை இருக்கு, என் சுதந்திரத்துக்கு எல்லைகள் இருக்கு. என்னால உங்கிட்ட தான் அட்வான்டேஜ் எடுத்துக்க முடியும். 
இத்தனை வருஷம் உன் கூடவே பிறந்து வளர்ந்தவ தானே நான், உன்னாலே என் சூழ்நிலையை புரிஞ்சிக்க முடியலை, அப்பறம் எப்படி இந்த வீட்டுல இருக்குறவுங்க புரிஞ்சிப்பாங்கன்னு நான் எதிர்பார்க்க முடியும்? 
அப்படியே நான் உனக்காக வந்துட்டா, இங்க வர சொந்த பந்தங்கள் எல்லாம் புது மருமகள் எங்கன்னு கேட்க மாட்டாங்களா? இவங்களுக்கு தானே அது அவமானம்? என்ன பொண்ணை வளர்த்திருக்காங்களோன்னு நம்ம பெத்தவுங்களை சொன்னா உனக்குச் சந்தோஷமா?” 
“எனக்காக வர முடியாதுன்னு சொல்லுறதுக்கு என்னென்ன காரணம் சொல்ல முடியுமோ அதெல்லாம் சொல்லுற, இதை விட விஜய் தான் உனக்கு முக்கியமும் ஒரு வார்த்தையில சொல்லி இருக்கலாம்” என குற்றம் சாட்டினான்.  
விஜயரூபனின் மீது இருக்கும் பிடித்தமின்மை தான் அவன் கோபத்திற்குக் காரணமென ஆராதனா நன்கு அறிவாள்.
புரிந்து கொள்ள முடியாதென பிடிவாதமாக மறுப்பவனிடம் எவ்வாறு புரிய வைப்பதென அறியாது ஆராதனா நொந்தாள். இனி இவனிடம் பேசி பயனில்லை என்பதை உணர்ந்தவள் சட்டென தன் தந்தைக்கு அலைபேசியில் அழைப்பு விடுத்தாள். 
சரியாக அதே நேரம் தான் ரவி வேலை முடித்து வீட்டிற்குள் நுழைந்தான். விஸ்வநாதன் அழைப்பை ஏற்றதும் அஸ்வின்க்கும் அவளுக்குமான வாக்குவதை உரைத்தாள். தன்னால் வர இயலாது என்ற காரணத்தை விளக்கி, விஜயின் மீதிருக்கும் கோபத்தை தன்னிடம் காட்டுவதாக விம்மியபடியே தெரிவித்தாள்..
அஸ்வினிடம் பேச வேண்டுமென தந்தை தெரிவிக்க, அவனோ அலைபேசியை வாங்க மறுத்தான். பல்லை கடித்துக் கொண்டு ஸ்பீக்கர் மோடடை ஆன் செய்து டேபிளில் மீது வைத்துவிட்டு அவனின் தலையில் நறுக்கென்று கொட்டினாள்.
“என்ன அஸ்வின் இதெல்லாம்..? அவளால வர முடியலைனா அதை எங்க கிட்ட தானே சொல்லணும். அதை விட்டுட்டு அவ வீட்டுல உட்கார்ந்து அவ கிட்டையே சண்டை போடுறையா இதெல்லாம் சரியா..?” எனக் கடுமையாக கேட்டார்.
போட்டு கொடுத்துடாளே என நினைத்தபடி அஸ்வின் ஆராதனாவை முறைத்தான். 
“பொண்ணு பார்க்க அம்மா தான் அவளைக் கட்டாயம் வரணும்னு சொன்னாங்க…” என்றவன் தன் மீது தவறு இல்லை என்பது போல் உரைக்க, இடையில் நுழைந்த அவள் தான் எதற்காக வர இயலவில்லை என்ற காரணத்தை அழுத்தமாக உரைத்தாள்.
“நான் பொண்ணு வீட்டுல பேசிக்கிறேன். நீ எதுவும் நினைச்சிக்கிட வேண்டாம்மா…” என ஆராதனாவிடம் உரைத்தவர், “இதுக்கு எதுக்குடா ஆராவோட சண்டை…?” என அஸ்வினிடம் கேட்டார்.
அவளை முறைத்தபடி, “அப்படியெல்லாம் எதுவும் இல்லப்பா…” என்றவன் சமாளிக்க, “நீ சொல்லலைன்னாலும் எனக்கு புரியும். விஜய் மேல கோபம் இருந்தா அதை ஆராதனா கிட்ட காட்டுறது சரியா சொல்லு…? அவர் அவளோட கணவர், நீ அவளோட அண்ணன் இரண்டு உறவு வேற வேற தான், இதுல பாசப்போட்டி எல்லாம் எங்கிருந்து வருது? 
விஜய் நமக்கு மாப்பிள்ளை, அவர் உழைப்புல ஒரு வீடு கட்டியிருக்காரு, அதை நாம வாழ்ந்த வேண்டாமா சொல்லு? உனக்கு ஏன் வயிறு எரியுது? அப்படி உனக்கு என்ன அவரோட போட்டி?” எனக் கேட்டார். 
என்னவென்று சொல்வான் அவன் மேலும் மௌனமாக இருக்க, வாசலில் நின்றிருந்த ரவி இக்கேள்விகள் அனைத்தும் தன்னைக் கேட்பது போல் இருந்தது. 
“ஏதா இருந்தாலும் உன்னால முடிச்சா அவரோட நேரடியா பேசு, அதை விட்டு இப்படி சும்மா வார்த்தைக்கு வார்த்தை என் பொண்ணை காயப்படுத்துற வேலை வேண்டாம். இதுவே விஜய் நீ பார்த்த மாப்பிள்ளையா இருந்திருந்தால் உனக்கு இப்படித் தோன்றியிருக்குமா?” என்றவர் அஸ்வினை எச்சரிக்க, இது போல் எடுத்துச்சொல்ல தனக்கு தந்தை இல்லையே என ரவி தான் ஏங்கினான். 
“ஆராதனா நம்ம பொண்ணுடா, உன் தங்கச்சிடா. நீயே அவளை அழ வைக்கிறது சரியா? அவ அவளோட புகுந்த வீட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்குறதுல தான் நம்ம மரியாதையும் இருக்கு. அவ எங்கிருந்தாலும் சந்தோஷமா இருக்கணும். நம்ம வீட்டு தேவதை, அவ சந்தோஷமா இருந்தா தான் நம்மால நலமோட, மன நிறைவா இருக்க முடியும்” என்க, கேட்ட அஸ்வின் ரவி இவருக்குமே முகத்தில் அடித்தது போன்றிருந்தது. 
“என் பையன் எல்லா விதத்துலையும் உயர்ந்தவன்னு உன்னை பெருமையா தான் இது வரை நினைச்சிருந்தேன் உங்கிட்ட இருந்து இப்படி ஒரு செயலை எதிர்ப்பார்கலை அஸ்வின்” என்க, “சாரிப்பா..” என்றான் கலங்கியபடி. 
“சரி எதுவும் பிரச்சனை செய்யாம கிளம்பி வா..” என்றவர் அழைப்பைத் துண்டிக்க, “சாரி ஆராம்மா..” என அவள் முகம் பார்த்துக் கேட்டான். 
“உன் சாரி ஒன்னும் வேண்டாம் போ, என் பட்டு கூட இப்போயெல்லாம் அவரோட பிரண்ட்டாகிடுச்சி தெரியுமா..?” என்றவள் முறுக்கிக் கொள்ள, சிரித்தான் அஸ்வின். 
உள்ளே வந்த ரவி, அஸ்வினை வரவேற்று நலம் விசாரிக்க, “வாங்க மாமா, நீங்களே நியாயம் சொல்லுங்க?” என ஆரம்பித்த ஆரா அனைத்தையும் சொல்லி அவனிடம் நியாயம் கேட்டான். 
அண்ணனாக அஸ்வினின் பக்கமா, வீட்டுத் தலைவனாக ஆராவின் பக்கமா?
என்னவென்று சொல்வான்? தவறு செய்தவன் நீதி சொல்லத் தகுதியற்றவன்! அவனே தவறு செய்த மனநிலையில் இருக்க, நெஞ்சே பாரமான உணர்வு! 
சங்கடத்தோடு நெளிந்த அஸ்வின், “அதான் தப்புன்னு சாரி கேட்டேன்ல இன்னும் என்ன ஆரா?” என்க, “என்ன நடந்தாலும் இரத்த சொந்தங்கிறது உடையாத உறவு தான், உன் மேல அவன் வைச்சிருக்கிற பாசம் உண்மை தான் விடும்மா” என தன்னறைக்கு சென்றான், ரவி.  
அன்றைய இரவு ரவிக்கு உறக்கமென்பதே வரவில்லை. ஜெய்பிரகாஷ் தந்தையின் தேர்வு தானே? ஒருவேளை நான் தேர்வு செய்திருந்தால் அவ்வாறு தோன்றி இருக்காதோ? அவர் வளர்ச்சியில் எனக்கு ஏன் பொறாமை? ஒருவேளை அவள் கஷ்டப்பட்டிருந்தால் எனக்கு இவ்வாறு தோன்றி இருக்காதே, நானும் அவளைக் கஷ்டத்தில் விட்டுவிட மாட்டேனே! 
ஆனால் நலமோடு இருக்கையில் மட்டும் எனக்கு ஏன் இந்த பொறாமை? அதையும் நேரடியாகக் காட்டாது சுபத்ராவிடம் காட்டி விட்டேனே, எனக்காக அவள் வரவில்லை எனில் அன்றைய அவள் சூழ்நிலை, ஆராவின் நிலையை போல் எவ்வாறு இருந்ததோ? இதை ஏன் உணராமல் போனேன். 
என் தந்தை இருந்திருந்தால் அவளைக் காயப்படுத்த என்னை அனுமதிப்பாரா? தந்தையின் இடத்தில் இருக்கும் நான் அவளுக்குக் கடமைப்பட்டவன் தானே, உண்மை தான் இவ்வீட்டில் பிறந்தவள், அவள் சந்தோஷமாக இருந்தால் தான் எங்களால் நிம்மதியாக இருக்க இயலும்! என அவள் சந்தோஷத்திற்கு வேண்டினான். 
பவானியின் அறையிலே விளையாடிவிட்டு ஸ்ரீ உறங்கியிருக்க, ஆராவிற்காக காத்திருந்தான் விஜய். கௌஷி, ஆரா இருவரும் சமையலறையை ஒதுங்கு வைத்துக் கொண்டிருக்க, பொறுமை பறந்த விஜய் எழுந்து வந்தான். 
“ஒரு வழியா விஜய் கூட சமாதானமாகிட்ட போல?” கௌஷி கேட்க, “ஆமாக்கா, நல்லா வேளை நீங்கச் சொன்ன பேச்சை கேட்டேன். இல்லை இன்னும் இவனை கரெட் பண்ணியிருக்க முடியாது” என்றாள் சிரிப்புடன். 
“நான் என்ன சொன்னேன்?”
கிளம்பும் போதும் விஜயை தான் கேலி செய்தோம் இவளிடம் எதுவும் தெரிவிக்கவில்லையே என்ற யோசனையில் கேட்டாள் கௌஷி.
“விலகிப் போ அவன் தேடி வருவாருன்னு சொன்னீங்களே, அதுல தான் அவருக்கு என் மேல இருந்த காதலே புரிஞ்சியிருக்கு, எங்க கல்யாணமும் நடந்திருக்கு. உங்க திட்டம் வெற்றி” 
“ஹாஹா, எல்லாம் அனுபவம் தான். அண்ணனும் தம்பியும் ஒன்னு தான்” 
“போங்க அக்கா, அவர் இங்க உருகி, கரைந்துகிட்டு இருக்காரு நாமா மூனுபேரும் நல்லா அரட்டை அடிச்சிட்டு இருந்திருக்கோம். நீங்க தான் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே இல்லை, சுபத்ரா அக்காவாது சொல்லி இருக்கலாமே? அவர் பாவம்” என்றவளுக்கு விஜயின் மீது பரிதாபம்! 
“பாருடா, கல்யாணத்துக்கு அப்பறமும் அவனை அலைய விட்ட போதெல்லாம் இந்த பரிதாபம் எங்க போச்சாம்?” என கேலியுரைக்க, “அடிப்பாவிங்களா..!” எனக் கேட்ட விஜயின் குரலில் இருவரும் ஒரு சேர திரும்பினர். 
விறுவிறுவென உள்ளே வந்தவன், “இதெல்லாம் திட்டம் போட்டுத் தான் செய்தீங்களா..?” பல்லைக் கடித்தபடி கேட்க, “அதுவே உனக்கு இப்போ தான் புரிஞ்சதா கொழுந்து” என்றாள் கௌஷி. 
“நல்லா தான் திட்டம் போட்டு என்னை அலற விட்டுருக்கிங்க, இதுல எங்க அக்காவும் கூட்டு வேற..” 
“அதனால தான் நம்ம கல்யாணமே நடந்தது..” ஆராதனா தெரிவிக்க, “இல்லை உனக்கு அறுபதாவது கல்யாணம் ஆகுறது கூட சந்தேகம் தான்..” என்றாள் கௌஷி. 
உண்மையில் நன்மை செய்திருக்கிறார்கள் எனப் புரிந்ததால் அவனுக்குக் கோபமில்லை. அதை விடவும் அக்கா, அண்ணி, மனைவி அனைவரிடமும் இருக்கும் ஒற்றுமை அவனுக்கு மனநிறைவைத் தந்தது. 
கௌஷியை பார்த்து, “அண்ணி…” எனப் பல்லைக் கடித்தவன், ஆராவிடம் திரும்பி, “ரூம்புக்கு வா, உன்னை கவனிச்சிக்கிறேன்..” என முன்னே சென்றான். அவன் கவனிப்பெல்லாம் எவ்விதம் என்ற ரகசியம் அவள் தானே அறிவாள். 
கௌஷி கலவரமாக, மானம் போச்சே! என நினைத்த ஆரா ஒன்றைக் கண்ணைச் சிமிட்டிவிட்டு, நமட்டுச் சிரிப்போடு அவன் பின்னே ஓடினாள். 
அறைக்குள் வந்தவள் வாசலிலே நின்றுவிட, “கிட்ட தான் வாயேன், இங்க ஒரு மனுஷன் கொலை செஞ்சிட்ட ரேஞ்சுக்கு பீல் பண்ணிக்கிட்டு இருக்கேன். நீங்க திட்டம் போட்டு கூடி கொண்டாடி இருக்கீங்க” என மிரட்டலாகக் கேட்டபடி அருகில் வர, நிலையாக நின்றாள். 
“பயமில்லை..?” என்றவன் கேட்க, “எனக்குக் கராத்தே தெரியும், அது உனக்கும் தெரியும்..” என மிரட்டல் விட்டாள். 
அவன் சிரிக்க, அவள் யோசித்தாள். அப்போ தான் புரிந்தது திருமணத்திற்குப் பிறகு அவன் அணைப்புகள் எல்லாம் கையோடு சேர்ந்து அவளைச் செயல்படவிடாத இறுகிய அணைப்பு. 
அவ்வளவு பயமா? அவள் நினைத்துச் சிரிக்க, அதற்குள் அவன் இறுக்கி அணைத்திருந்தான். மெல்ல ஒற்றை விரலால் அவனை சுரண்டிவள் முகத்தை நிமிர்த்திப் பார்த்தாள். 
அவனும் குனிந்து அவள் முகம் பார்க்க, “கை மட்டுமில்ல, காலாலையும் கவுக்கலாம்…” என்றவள் உரைக்க, இப்போ என்ன செய்வ? எனக் கேட்பது போலே அவளை மொத்தமாக கைகளில் தூக்கியிருந்தவன் இதழோடு இதழ் பதிக்க, சுகமாக அவன் நெஞ்சோடு ஒட்டிக் கொண்டாள்.  

Advertisement