Advertisement

அத்தியாயம் 22 
விடியல் நேரம், விடுபடாத நெருக்கத்தில் இருந்தன ஜோடிக்கிளிகள், அதிலும் ஆராதனாவின் உடல் வழக்கத்தை விடவும் அதிக குளிரை உணர்ந்து நடுங்க, இதமான உஷ்ணம் வேண்டி, சுற்றியிருக்கும் போர்வையோடு மேலும் விஜயை நெருங்கிப்படுத்தாள்.
அதே நேரம் அவள் கைகளும் விஜயின் கழுத்தை வருட, உறக்கம் கலைந்தவன், “என்ன செய்யுற நீ..?” என அவள் கரத்தைப் பற்றித் தடுத்தான். 
“இல்லை, என்னோட ஒரு முத்தத்துக்கே உனக்குக் காய்ச்சல் வந்ததே, அதான் இப்போ எப்படியிருக்கன்னு செக் பண்ணேன். சூடா தான் இருக்க” என்றவள் கண் திறக்காமலே தன் ஆராய்ச்சியின் முடிவு உரைத்தாள். 
மானத்தை வாங்குறாளே! நொந்தவன் நறுக்கென அவள் கைகளில் கிள்ள, “ஷ்ஷ்ஆ..” வலியோடு சுணங்கியவள் அவன் நெஞ்சிலே அடித்துவிட்டு மேலும் இறுக்கமாகப் புதைத்தாள். 
அதில் மொத்தமாக உறக்கம் கலைந்தவன் தன் நெஞ்சில் சுகமாக உறங்குபவளைக் குனிந்து பார்த்தான். ஒரு நொடி அரண்டு போகும் படியான தோற்றம், மொத்த சுருள் முடியும் விரிந்து கலைந்து கிடக்க, ஏதோ சினிமாவில் வரும் பேயைப் போலிருக்க, சிரித்தான். மெல்ல முடிகளைக் காதோரமாக ஒதுக்கியவன் இதமாக முதுகில் தட்டிக் கொடுத்தான். 
அதில் சிறிது உறக்கம் கலைய, அரை உரக்க நிலையில், “விஜய் பசிக்குது..” என முனங்கினாள். யோசித்து பார்த்தான், இரவு தான் அவளைச் சமைக்கவே விடவில்லையே, நேற்று மதியம் உண்டது. 
மெல்ல எழுந்து, குளித்துவிட்டு சமையலறைக்குள் சென்றான். ஸ்ரீயுக்கு பக்குவமாகப் பால் ஆற்றிக் கொடுக்கும் பழக்கம், காஃபி போட்டுக்கொள்ளும் அளவிற்கு மட்டும் சமையல் அறிந்திருந்தான். 
பால் பாக்கெட்டும் இல்லாது போக, ஒரு நொடி நின்று யோசித்தான். நேற்று அவள் எடுத்து வைத்த மாவில் தண்ணீர் விட்டுப் பிசைந்தான். தண்ணீர் கூடி விட, கொஞ்சம் மாவைச் சேர்ந்து பிசைந்தான், தற்போது மாவு கூடி விட, மீண்டும் தண்ணீர் விட்டான். பெரும் பாடுபட்டு சப்பாத்திக்கு மாவு பிசைய நினைத்து தோசை மாவு பதத்திற்குக் கரைத்து எடுத்திருந்தான். 
வேறு வழி தோசை ஊற்றி, கௌஷி வைத்துச் சென்றிருந்த காரச்சட்டினியை சூடுபடுத்தினான். இரண்டையும் எடுத்துச் சென்று ஆராதனாவை எழுப்பினான். அரை உறக்கத்தில் எழுந்து அமர்ந்தவள் அவள் முன் நீட்டப் பட்ட தட்டைப் பார்த்து அதிர, மொத்த தூக்கமும் பறந்து விட்டது. 
“என்ன விஜய் இது?” சிரிக்காமல் கேலியாகக் கேட்க, “பார்த்தா தெரியலையா..?” என்றான் அவனும். 
“தெரியலைன்னு தானே கேட்குறேன், சப்பாத்தியா..?” என்றவள் சந்தேகமாகக் கேட்க, மறுப்பாகத் தலையசைத்தவன், “தோசை..!” என்றான் சிரிக்காமல். 
ஆனால் அடக்கமாட்டாமல் சிரித்த ஆராவோ, “எது? இதான் உங்க ஊருல தோசையா..?” என்றாள், கைகளில் எடுத்து ஆராய்ந்தபடி. 
அவள் அருகில் அமர்ந்தவன், “வேணா சப்பாத்திக்கு தங்கச்சி தோசைக்கு அக்கான்னு நடுவுல வைச்சுக்கோ. புது டிஸ்னு நினைச்சிக்கோ…” என்க, இன்னும் கட்டுப்படுத்த முடியாது சிரித்தாள். 
“ரொட்டின்னு வைச்சிக்கோ..” என்க, “வரட்டினு வேணா வைச்சிக்கலாம்..” என்றாள் மறுப்பாகத் தலையசைத்து சிரித்தபடி. 
அவன் முறைக்க, தோள்களில் தட்டிக்கொடுத்தவள், “பிடிக்கலையா? வேணா ஐநா சபையில கேட்டு புதுப் பெயர் வைக்கலாம்” எனச் சமாதானம் பேசினாள். 
அவன் அதற்கும் முறைக்க, “சமையல் தெரியாதா..?” என்க, “அதையும் நீ தான் சொல்லிக் கொடுக்கணும்..” என்றான் கேலியாக. 
“ம்ம்..” என தலையாட்டியவள் சிறிது பிட்டு வாயில் வைக்க, “உனக்கு மட்டும் சமைக்க தெரியுமாக்கும்? டாட் லிட்டில் பிரின்சஸ் தானே நீ?” என்றான் கேலியாக. 
“எங்க அப்பாவுக்கு இளவரசி தான், அதுக்குன்னு சமையல் தெரியாம இருக்கணுமா? தெரியாதுன்னு நீங்களா கற்பனை செய்துபிங்களா? எதுவுமே தெரியும்னு சொல்லுறதுல தானே கர்வம், தெரியாதுன்னு சொல்லுறதுல என்ன பெருமை இருக்கு?” என்க, அவள் பக்குவமான பேச்சை ரசித்துக் கேட்டிருந்தான். 
அவன் அமைதியில், “என்னைப் பத்தி என்ன தான் உனக்குத் தெரியும்? இனி ஏதாவது இப்படி உளறின, காரச்சட்டினியை கண்ணுல வைச்சிடுவேன்” என்றாள் மிரட்டலாக. 
அதில் சிரித்தவன் கவனமோடு அவள் கைக்கு எட்டாத தூரம் தள்ளி அமர்ந்தான். சொன்னால் செய்பவள் என அவளை பற்றி பாதியாவது அறிந்திருந்தான். அவன் செயலில் அவளும் சிரித்துக் கொண்டாள்.
“ஷேப் தான் வரலை, டேஸ்ட் பரவாயில்லை..” என இன்னும் பெயரிடப்படாத அவனின் புதுவித உணவைப் பாராட்டி விட்டு எழுந்து சென்றாள். 
பாராட்டினாளோ, கேலி செய்தாளோ ஆனால் விஜய்க்கு உள்ளம் குளிர்ந்திருந்தது. தெரியாத வேலையைக் கூட தன் கணவன் தனக்காக முயன்று செய்து வந்திருக்கிறான் என்பதில் ஆராவிற்கும் மனம் நிறைய, பூரித்தாள். 
கை கழுவிவிட்டு மீண்டும் விஜயின் அருகில் வந்தவள் அமர, “கஷ்டப்பட்டு உனக்காக சமைத்தேனே பரிசு எதுவுமில்லை..?” எனக் கேள்வியாக இழுத்தவன் கண்சிமிட்ட, மலர்ந்து சிரித்தவள் பார்வையை தாழ்த்தி, இதழ் குவித்தபடி அவனை நெருங்கினாள். 
உள்ளங்கையை நீட்டித் தடுத்தவன், “ச்சே, அழுக்கு தள்ளிப் போ. நான் குளிச்சிட்டேன்டி..” என்றான் அசராது. 
சும்மா இருந்தவளையும் சீண்டி விட, அவளுக்கு வந்தது கட்டற்ற சினம், “யார அழுக்குன்னு சொல்லுற..?” என மிரட்டலாகக் கேட்டவள் அவன் மேலே விழுந்து தாவி, படுக்கையிலும் அவனோடு உருண்டாள். 
விஜயின் மேல் இருந்தவள் அவன் இரண்டு கன்னத்தையும் வலிக்கும் அளவிற்கு அழுத்தமாகக் கிள்ளியபடி, “அழுகுன்னு சொல்லுவியா..? இப்போ நீயும் அழுக்கு தான்டா”  எனக் கத்தினாள். 
“பின்ன அழுக்குன்னு சொல்லமா அழகுனா சொல்ல முடியும்? விடுடி குஸ்தி குப்பம்மா..” கத்தியபடி கன்னத்தில் இருக்கும் அவள் கரங்களை அழுத்தமாகப் பற்றி விடுவிக்க முயன்றான். 
அவன் மேல் அமர்ந்திருந்தவள் நைட் பேன்ட், டீசர்டில் சுருள் முடிகள் மொத்தமும் கலைந்து காற்றில் பறக்க, கோபத்தில் பெருமூச்சு வாங்கியபடி மார்டன் பத்திரகாளியாக தோற்றமளித்தாள். 
கன்னத்தை விட்டவள் அவன் உச்சிமுடியை மொத்தமாகப் பற்றி ஆட்டியபடி, குனிந்து அவன் மூக்கு, கன்னம், முகம் என இடம் பாராது கடிக்க ஆரம்பிக்க, சட்டென தன் மீதிருந்தவளை பிரட்டிப் போட்டு, அவன் எழுந்து ஓட முயன்றான். 
அதற்குள் சுதாரித்து எழுந்தவள், பாய்ந்து அவன் முதுகில் தோற்றிக்கொண்டு கைகளால் கழுத்தை நெரித்தாள். அவளைச் சமாளிக்க முடியாது தடுமாறியவன், “ஸ்ரீ கூட என்னை இவ்வளவு படுத்த மாட்டா, முதுகுல தாவியிருக்கு பாரு வேதாளம், விடுடி..” என்றபடி அவள் இடுப்பில் கூச்ச மூட்டினான். 
அவள் பலகீனம் தெரிந்து அவன் விளையாட, கூச்சத்தில் சிரிப்போடு நெளிந்தவள் அவனைப் பற்றியிருந்த பிடியை மட்டும் விடவில்லை. அவள் மொத்த எடையும் முதுகில் நெளிய, நிலையில்லாது அவனும் தடுமாற, இருவரும் மீண்டும் கட்டிலில் விழுந்தனர். 
“டேய் தடிமாடு, எருமைமாடு, வெய்ட்டா இருக்க, எழுந்திரிடா கழுதை…” அவள் கத்த, “நீ தானேடி குரங்கு மாதிரி மேல தாவின?” அவனும் கத்த, மொத்த வித்தையும் காட்டி அவனை தள்ளி அவனிடமிருந்து எழுந்திருந்தாள் ஆராதனா. 
ஒரு கையால் வலிக்கும் படி கிள்ளியவள், மறுகையால் அடித்துக் கொண்டு, “சொல்லு, நான் அழகுன்னு சொல்லு..” என மிரட்டினாள். அதற்கு மேலும் அவளோடு போராடும் எண்ணமில்லாது, “நீ அழகு தான்டி, என் அழுக்கி..” என இழுத்து அணைத்துக் கொண்டான். 
அவன் இறுகிய அணைப்பிலே பல மணி நேரமாகப் புதைத்தவள், அசதியோடு அவன் நெஞ்சில் சாய்ந்தாள். 
“அழுக்குன்னு சொன்ன இப்போ இல்லையா?” என்க, “அதான் என்னையும் அழுக்காக்கிட்டையே, திரும்ப குளிச்சிக்கிடலாம் விடு” எனக் காதோரம் கிசுகிசுத்தான்.
“ஆமா, பரிசுன்னு கேட்டியே என்ன?” என்றாள், அவனுக்காக எதையும் செய்துவிடும் வேகம்!
“என்னை எதுக்காக பிடிச்சது, அதுக்கு பதில் சொல்லு..” எனக் கேட்க, இவ்வளவு தானா என்றானது அவளுக்கு. 
“இது தான்னு வரையறை வகுத்துச் சொல்ல தெரியலை, அதான் ஆல்ரெடி சொல்லிட்டேன்னு, நீ எவ்வளவு அடிச்சாலும் தாங்குவ அந்த பொறுமை தான், அப்பறம் உன் பேமலியும்” என்க, அணைப்பின் அழுத்தம் கூட்டியவன் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்தான். 
“சரி, சரி என்னை எப்படி பிடித்தது. அதுவும் நான் பின்ன வந்த போதே பிடிக்கலைன்னு விலகிப் போன உனக்கு?” எனக் கன்னத்தில் குத்தியபடி கேட்டாள். அன்றைய செயலுக்கு இன்றைய தண்டனையாக.  
“என்னையே சுத்தி சுத்தி வர, நீ இருக்கும் போது தெரியலை. வேலைய விட்டுப் போகவும் தான் வெறுமையா உணர்ந்தேன் என்னவோ இதயத்துடிப்பே எனக்குள்ள இல்லாது போன்ற சோர்வு. அதுவும் போக அன்னைக்கு முதல் முதலா உணர்ந்த உன்னோட வாசமும் மென்மையும், ஸ்பரிசமும் என்னை தூங்கவிடுறதே இல்லை. மேலும் வேணும், அதை உணர்ந்து பார்க்கணும் தீயான ஆசை, தீய ஆசையோன்னு கூட யோசித்தேன் எனக்குத் தெரியலை. 
ஆனால் நீ வேணும் எல்லா வகையிலும் நீ வேணும்னு ஏங்கினேன், தேடினேன். எங்க வீட்டுல நடந்துகிட்டு இருக்குற பேச்சு வார்த்தைகள் எதையும் ஊன்றிக் கவனிக்காம, பைத்தியம் மாதிரி உன்னையே தேடி எங்க அக்கா வீட்டை சுத்துகிட்டு இருந்தேன். நீயும் தான் எனக்கு வலியை கொடுத்த, நான் தப்பு பண்ணிட்டேனோங்கற வலியைக் கொடுத்த, அந்த வலி எல்லாத்த விடவும் ரணமானது. ஆனாலும் நீ தான் வேணும்னு தேடி வந்தேன்” 
அவன் சொல்லி முடிக்க அடுத்த நொடி அவன் முகம் முழுவதும் முத்தமிடத் தொடங்கினாள். அடிதடியோ, அன்போ, அதிரடியாக அவள் காட்ட, சுகமோடு பொறுமையாகத் தாங்கிக் கொண்டான் அவனும். 
மறுநாளோடு அவனுக்கு விடுமுறை முடிய, கௌஷி வர மேலும் இரு தினங்களாகும் என அறிந்ததால் விடுமுறையை நீட்டித்துக் கொண்டான். 
ரவி, குழந்தையோடு கௌஷி வந்துவிட, புது வீட்டின் கிரப்பிரதேஷம் நெருங்குவதால் பவானியும் வந்துவிட்டார். மொத்த வீட்டிற்குமான இன்டியர் வொர்க்கை ஆராவே பார்த்து பார்த்து வடிவமைத்துக் கொடுக்க, வேகமாக வேலைகளும் முடித்தது. விஜய் வேலைக்குச் செல்ல, கிரப்பிரதேஷத்திற்கான ஏற்பாடு மொத்தமும் ரவி தான் பார்த்துக் கொண்டிருந்தான். 
மாலை நேரம் அஸ்வின் வந்திருக்க, இன்முகமாக வரவேற்றாள் ஆராதனா. பவானி அருகில் இருக்கும் கோவிலுக்குச் சென்றிருக்க, ஸ்ரீநிதியை அவள் அறையில் குளிக்க வைத்துக் கொண்டிருந்தாள் கௌஷிகா. வீட்டு வேலை விஷயமாக விடுமுறை நாளில் ரவி வெளியே சென்றிருக்க, விஜய் அலுவலகம் சென்றிருந்தான். 
அஸ்வின் வந்ததுமே குடும்பத்தாரின் நலம் விசாரித்து, அவனையும் உபசரித்தாள். சட்டென அவன் தங்கை வளர்ந்து விட்டதை போல், பக்குவம் கொண்ட பெண்ணாக மாறியதை போன்ற மாயத்தோற்றம். அவனுக்குத் தெரியவில்லை, இயல்பிலே பெண்களுக்கு இடத்திற்கு தகுத்தாற்போல் மாறிக் கொள்ளும் பண்பும் பொறுப்புணர்வும் உண்டு என்று. 
தொழில் பற்றி விசாரித்தாள். அஸ்வினின் நிறுவனத்தோடு இணைத்து பெண்களுக்கான பிரேத்தேக பொருட்கள், உடைகள், மேலைநாட்டு பேஷன் உடைகள், வடிவமைப்பு மற்றும் விற்பனை நிறுவனம் ஒன்றை அவன் உதவியோடு தொடங்க இருந்தாள். அந்த எண்ணத்தில் தான் வேலையையும் விட்டுவிட்டு அதற்கான முதல் கட்ட ஏற்பாடுகளையும் செய்திருந்தாள். 
இடையில் அவள் திருமணம் நிகழ, தற்போது அது பற்றி அஸ்வினிடம் விசாரித்துவிட்டு அடுத்து செய்ய வேண்டிய ஏற்பாடுகளையும் தெரிவித்தாள். 
“வர வெள்ளிக்கிழமை எனக்கு பொண்ணு பார்க்கப் போறோம், அம்மா உன்னையும் விஜயும் அழைக்கச் சொன்னாங்க” என அவன் வந்த விஷயத்தை தெரிவிக்க, “வெள்ளிக்கிழமையா..?” என வியந்தாள் ஆராதனா. 
“ஏன் விஜய்க்கு ஆபிஸ்ல எதுவும் முக்கியமான வேலையிருக்கா? ஒரு நாள் லீவ் போட மாட்டாராமா?” என விஜய் மீதே எண்ணம் வைத்துக் கேட்டான். 
“எங்க வீடு கிரப்பிரதேஷம் அன்னைக்குத் தான் அஸ்வின். என்னை பொண்ணு பார்க்க வந்த அப்போவே சொன்னாங்களே மறந்துட்டீங்களா?” என எரிச்சலானவள் நெற்றியைப் பற்றியவாறு அமர்ந்தாள். 
“திரும்ப நீங்க ஞாபகப்படுத்தி இருக்கணும், இல்லை நீ தேதியை மாற்றி வைக்கச் சொல்லு” என்க, என்ன பேசுகிறான் இவன் என்பது போல் பார்த்தான். 
“அண்ணா, நான் எப்படி அதை சொல்ல முடியும்? அதுமட்டுமில்லாம, எல்லா ஏற்பாடும் செய்த பிறகு எப்படி மாற்ற முடியும்? கிரப்பிரதேஷத்துக்கான தேதி தான் முதல்ல குறிச்சது, உனக்கு பொண்ணு பார்க்கிறது எல்லாம் இப்போ ஏற்பாடானது. இதுல நான் என்ன செய்ய முடியும்?” 
“சரி, இப்போ என்னை என்ன செய்யச் சொல்லுற?” 

Advertisement