Advertisement

அத்தியாயம் 19
ஒரு சுப நாளில் ரவியோடு அவன் குடும்பம் மொத்தமும் சுபத்ரா வீட்டிற்கு வந்திருந்தனர். விஜய்க்கு திருமணம் என்பதால் பவானிக்கு மகிழ்ச்சி, பள்ளி விடுமுறை என்பதால் ஸ்ரீக்கு மகிழ்ச்சி. 
சுபத்ராவின் குடும்பத்தோடு அனைவருமே நல்ல நேரம் பார்த்து ஆராவின் வீட்டிற்குச் செல்ல, ஆராவின் பெற்றோர்கள் இன்முகமாக வரவேற்றனர். சுபத்ரா தன் வீட்டினரை அறிமுகப்படுத்த பொதுவாக பேசிக் கொண்டிருக்க, ஆராவின் அன்னை சுதாராணி அனைவரையும் உபசரித்தார். 
விஜய்ரூபனுக்கு உள்ளுக்குள் ஒரு சிறு படபடப்பு, அதை வெளிக்காட்டாது இறுக்கமாக கைகளைக் கட்டியபடி அமர்ந்திருந்தான். எதிர்பார்ப்போடு திரும்ப, எதார்த்தமாகச் சற்று தொலைவில் நின்றிருந்த அஸ்வினை காண, அவன் முறைப்பது போன்றிருந்தது. 
இவனோட அறிமுகமே இல்லையே! இவங்கிட்ட நமக்கு எந்த வம்பு தும்பும் இல்லையே பின்ன ஏன் இந்த முறைப்பு? எனச் சிந்தித்தான். 
அவன் அன்னையோடு ஆராவும் வர, அவள் பின்னே வெள்ளை நிறத்தில் புஸுபுஸுவென முடிகளோடு நாய்க் குட்டி ஒன்றும் ஓடி வந்தது. சட்டென தன் சிந்தனை எல்லாம் மறைய, வெகு நாட்களுக்குப் பின் அவளைப் பார்ப்பதில் ஆர்வமாகப் பார்த்தான் விஜய். 
மலர்ந்த முகமாக, அடர் ஊதா நிறப்பட்டில் அலட்டல் இல்லாத அலங்காரத்தோடு வந்தாள். அனைவருக்கும் பொதுவாக ஒரு வணக்கம் தெரிவித்துவிட்டு அஸ்வினின் அருகில் நின்று கொண்டாள். 
ஆனால் உள்ளுக்குள் அணையிடப்பட்ட கோபம் கனன்றது. அவன் பேசிய பேச்சிற்கு ஏற்கனவே கோபம் தான், இதில் தன்னோடு திருமணம் வேண்டாம் என்று மறுத்துவிட்டு, இப்போது வீட்டினரின் கட்டாயத்தில் வந்து அமர்ந்திருக்கிறானோ? என அதற்கும் கோபம். 
“அம்மா, வொய்ட் கலர் பப்பி பாரு, க்யூட்டா இருக்கு. சுச்சு..ச்சு..” எனக் கத்தியபடியே ஸ்ரீ, கௌஷிகாவை சுரண்ட, “ஷ்ஷ், அமைதியா இரு. போகும் போது பார்த்துக்கலாம்” என அவள் அதட்ட, முகம் வாடினாள் குழந்தை. 
அனைவரின் கவனத்தையும் அவள் ஈர்த்திருக்க, ரவி அன்னையிடம் ஜாடையில் அவர் சம்மதத்தை கேட்டுவிட்டு, “எங்க எல்லாருக்கும் பரிபூரண சம்மதம் அங்கிள். உங்க வீட்டுல எல்லாருக்கும் விருப்பம்னா சொல்லுங்க கல்யாணத்தைப் பத்தி பேசலாம்” என்றான். 
“எங்க பொண்ணு முடிவு தான், எங்க விருப்பம்..” என்றபடி திரும்பியவர், “ஆரா உனக்கு சம்மதமா..?” என்றார். 
அத்தனை பேரின் முன்னிலையில் அதுவும் சுபத்ராவின் மாமியார் முன் இருக்க, மறுத்துவிடுவாளோ என விஜயின் இதயம் உச்ச படபடப்பில் துடித்தது. அவள் மீது அவன் இமைக்காத பார்வை நிலைக்க, அவளோ அவன் புறம் திரும்பாது அஸ்வினின் காதிற்குள் ஏதோ முணுமுணுத்தாள். 
கண்டிப்போடு மெல்லிய குரலில் அஸ்வினும் ஏதோ சொல்ல, அவள் பிடிவாதமாக நிற்க, “அப்பா, ஆராவுக்கு இப்போ கல்யாணத்துல இஷ்டமில்லையாம்..” என அனைவருக்குமாக தெரிவித்தான் அஸ்வின். 
சுபத்ரா, கௌஷிகா கூட அதிர்ச்சியுற, விஜயின் அகமும் முகமும் வாடிவிட்டது. 
ஒரு கனத்த மௌனம் நிலவ, ஆண்டவா இப்போவே கண்ணக்கட்டுதே, இதுங்க பிரச்சனை இப்போதைக்குத் தீராது போல இருக்கே! என சுபத்ராவும், கௌஷியும் தான் நொந்தனர். 
கௌஷியை சுரண்டிய ஸ்ரீநிதி, “என்னதும்மா..?” என புரியாது கேட்க, “ம்ம், உன் சித்தாவ ஆராவுக்கு பிடிக்கலையாம்..!” என்றாள் அன்னை. 
“ஏன் ஆரா? என் சித்தா எவ்வளவு அழகு ஹேண்ட்சம் பாய், டெய்லி நைட் ஸ்டோரி சொல்லுவான் தெரியுமா? குட் பாய், பிடிக்கலைன்னு சொல்லாத தப்பு” என அனைவரும் கேட்கத் தயங்கியிருந்த கேள்வியை அன்னையின் மடியில் அமர்ந்த படியே உரைக்க, கேட்டாள் ஸ்ரீநிதி. 
சரியா கேளும்மா செல்லம், பிடிக்கலைன்னு சொல்லுறவ எதுக்கு அலங்காரம் செய்துகிட்டு வந்து நிக்கிறாளாம் என நினைத்து விஜயும் நொடிந்தான். 
“ஆராம்மா தெளிவா சொல்லு, இப்போதைக்குக் கல்யாணம் வேண்டாமா, இல்லை இவரை பிடிக்கலையா?” என அவள் தந்தை கேட்க, அஸ்வினை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “விஜய் பிடிக்கலைனா நேரடியாவே சொல்லிடும்மா தப்பில்லை, உனக்கு பிடிச்ச மாதிரி வேற மாப்பிள்ளை பார்க்கலாம்” என்றார் ஜெய்பிரகாஷ். 
ஆரா கைகளைப் பிசைந்து கொண்டு நிற்க, பிடிக்கலைன்னு அவ சொன்னாளா? அவளே சும்மா இருக்கா, இந்த மாமா ஏன் இப்படிக் குழப்பி விடுறாரு நொந்து கொண்டான் விஜய். 
“சொல்லு ஆரா..” மேலும் சுபத்ரா தூண்ட, மீண்டும் அஸ்வினின் காதில் தான் ஏதோ முணுமுணுத்தாள். 
அனைவரும் அவர்களை எதிர்பார்த்துக் காத்திருக்க, “கொஞ்சம் தனியா பேசணும்..” என்றான் அஸ்வின். 
கிடைத்தது வாய்ப்பு, காலில் விழுந்தோ, கட்டிப்பிடித்தோ சம்மதம் வாங்கிவிட வேண்டும் என்ற துள்ளலில் எழுந்தான் விஜய். பெரியவர் தலையசைக்க, யாரும் மறுக்கவில்லை. 
வாசலில் நிற்கும் ஆராவை நெருங்கியவன் அவளைத் தாண்டி அறைக்குள் செல்ல, அவன் பின்னே வந்தான் அஸ்வின். அடேய் கரடி நீ ஏன்டா பின்னாடி வார? உன் தங்கச்சி எங்கடா? பரிதவிப்போடு விஜய் பார்க்க, ஆரா அதே இடத்தில் தான் நின்றிருந்தாள். 
ஆரா, ஒருபுற பார்வைக்கு ஹாலில் இருக்கும் அனைவரும், மறுபுற பார்வைக்கு அறையில் இருக்கும் விஜயும் தெரியும் படி பக்கவாட்டில் நின்றாள். 
விஜயை நெருங்கி உள்ளே வந்த அஸ்வின், “அவளுக்கு உங்களை பிடிக்கலையாம், அதான் கல்யாணம் வேண்டாம்னு சொல்லுற..” என்றான். 
“அதுக்கு..?” கேள்வியாகக் கேட்டவன், நிற்கும் இடத்திலிருந்தே அவளை ஒரு பார்வை பார்த்தான். 
“நீங்க கல்யாணம் வேண்டாம், பிடிக்கலைன்னு சொல்லிட்டு கிளம்புவீங்களாம்” என்க, “எனக்குத் தான் பிடிச்சிருக்கே..” என்றான். 
கிட்ட வந்தா என்னவாம் கடிச்சி தின்றவா போறேன்? இப்படி அனுமார் மாதிரி அண்ணனை அனுப்பி இருக்கா? சரி தான், இவன் ஏன் விரைப்பா முறைச்சிகிட்டே பேசுறான்? ஒருவேளை அவள் சொல்லாததை எல்லாம் இவன் சொல்லுறானோ? என விஜய்க்கு அஸ்வின் மீது சந்தேகம்!
“உங்க மேல கொலைவெறியில இருக்காளாம், விலகி இருங்கன்னு சொன்னா..” 
“பரவாயில்லை, கல்யாணம் செய்துகிட்டு வேணா கொலையும் செய்துகட்டும். அவ கையாள சாகுறதே வரம்” என்றவன் நெஞ்சில் கை வைத்தான். 
அவளுக்கும் கேட்க, கூறிடும் பார்வையில் முறைத்தாள். அதற்கும் இலச்சையின்றி சிரித்த விஜய், அதே இடத்தில் மண்டியிட்டு நெஞ்சைத் தொட்டு, இதயவிடிவில் இரு கரம் குவித்து, பின் பறக்கும் முத்தம் ஒன்றையும் அவளை நோக்கி வீசினான்.
இதெல்லாம் பார்க்க வேண்டியதா இருக்கே, எல்லாம் என் நேரம்! அஸ்வின் நொந்து கொள்ள, ஆராதனா கொலைவெறியானாள். யாரும் கவனிக்க இயலாது “ஷ்ஷ்..” எனச் சிறு சத்தம் மட்டுமே கொடுக்க, மறுநொடி அவள் காலையே சுற்றிக் கொண்டிருந்த நாய்க்குட்டி, மண்டியிட்டிருந்த விஜயை நோக்கிப் பாய்ந்தது. 
ஆரா அசராமல் நிற்க, விஜய் பதற, நூலிழையில் அவனை நெருங்கும் முன் பற்றித் தூங்கியிருந்தான் அஸ்வின். தனியா பேசணும்னு கூட்டிட்டு வந்து கொல்லப் பார்க்குறாங்களே பாவிகளா! நினைத்தபடி பெருமூச்சோடு எழுந்தான் விஜய். 
“பட்டு என்ன இது, பேட் பிகேவியர்..!” எனத் தலை தடவியபடி, அஸ்வின் கண்டிக்க, “இங்க பாருங்க, இப்போவே கொல்லப் பார்க்குறீங்களா? கல்யாணத்துக்குப் பிறகு வேணா கொன்னுக்கோங்கன்னு தானே சொன்னேன்? அதுக்காகவாது ஒழுங்கா கல்யாணம் செய்துக்க சொல்லுங்க..” என்றவன் விறுவிறுவென வெளியேறினான். 
ஹாலில் சென்று நின்றவன், “அங்கிள் உங்க பொண்ணுக்கும் சம்மதம் தான், அண்ணா கல்யாணம் பத்திப் பேசுங்க” என்றபடி அமர்ந்தான். 
அதே வேகத்தில் உள்ளிருந்து வந்த அஸ்வின், ஆராவிற்கு விருப்பமில்லை எனத் தெரிவிக்க வர, சட்டென அவன் கைகளைப் பற்றித் தடுத்தாள் ஆராதனா. அஸ்வின் முறைக்க, ஒரு கொஞ்சல் பார்வையில் அடக்கி வைத்தாள். 
தங்கைக்கு விருப்பம் என்னும் போது அவனால் மறுக்க இயலவில்லை, என்ன வெட்கம் கெட்ட லவ்வோ! என நினைத்து எரிச்சலானான் அஸ்வின். 
“மச்சானை கூடிட்டிட்டி போயிட்டு அப்படி என்னடா மந்திரம் போட்ட?” அருகிலிருந்த விஜியிடம் கௌஷி கிசுகிசுக்க, “ஏன் அண்ணி நீ வேற, கொஞ்சம் சும்மா இரேன்” என வேண்டினான். 
அனைவரின் மனமும் பரிபூரணமாக நிறைய, திருமணப் பேச்சு வார்த்தை தொடங்கியது. 
கௌஷியும், சுபத்ராவும் இமயமலையைக் கடந்து வந்தது போல் ஆசுவாசமானர். மிதுனும் ஸ்ரீநிதியும் பட்டுவோடு விளையாடினர். 
அவர்கள் வீட்டு கிரகப்பிரதேஷத்திற்கு பின் முகூர்த்தத்தை ரவி எதிர்பார்க்க, ஆனால் அதற்கு இரு வாரம் முன்பே முகூர்த்தநாள் அமைத்துவிட்டது. அதுவும் மீனாட்சி, சுந்தரர் திருக்கல்யாண நாளில் முகூர்த்தம் அமைய, அனைவருக்கும் மனநிறைவு. 
நாற்பதே நாளில் திருமண ஏற்பாடு வெகு வேகமாக நடைபெற, விரைவாகத் திருமண நாளும் வந்ததது. திருமணத்திற்கு முதல் நாள் மாலை நிச்சியகார்த்தமும், வரவேற்பும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். 
மாங்கல்யமும், முகூர்த்தப்பட்டும் வாங்கும் நாட்களைத் தவிர, இருவரும் சந்திப்பதற்கான வாய்ப்புகள் அமையவில்லை. அப்படியே சந்திக்க நேர்ந்தாலும் அவனைத் தவிர்க்கவில்லை, அதே போல் தனிமையும் தரவில்லை. ஆனால் விஜய் இல்லாத  வாய்ப்புகளை உருவாகிக்கொண்டு சுபத்ரா வீட்டிற்கு அடிக்கடி வந்தான். 
ஏற்பாடுகளை எல்லாம் இருவீட்டிலும் மூத்தவர்கள் செய்ய, இடையில் பேசுவது ஜெய்பிரகாஷும் சுபத்ராவும் தான். திருமணத்திற்கு ஆரா அவள் நண்பர்களை அழைத்திருக்க, விஜயும் அலுவலக நண்பர்கள், கல்லூரி நண்பர்கள் என அனைவரையும் அழைத்திருந்தான். 
ரவி, கௌஷிகாவும் முன் நின்று தாம்பூலம் மாற்றிக்கொள்ள, நிச்சியப் பத்திரிக்கை வாசித்தனர். இருவரும் மேடையில் இருக்க, சுபத்ராவும் ஜெய்பிரகாஷும் விருந்தினரை இன்முகமாக வரவேற்றனர். ஸ்ரீயும், மிதுனும் ஆளுக்கொரு அலைபேசியை வைத்துக்கொண்டு புகைப்படம் எடுத்து விளையாடினர். பவானிக்குக் கடமை முடித்த திருப்தி, மனம் நிறைந்த உணர்வு. 
அழகுக்கு அழகு கூட்டும் அலங்காரம், அளவான வெட்கம் கலந்த புன்னகை, மலர்ந்த முகம் எனப் பரிபூரணமாக நின்றிருந்தாள் ஆராதனா. எப்போதுமே அவளை ரசிக்கும் விஜயரூபனுக்கு இப்போது இமைகள் இம்சையாகத் தோன்றியது. 
இளசுகள் பாட்டும் ஆட்டமுமாக ஆராவாரம் செய்ய, வரவேற்பில் நின்றிருந்த தம்பதிகள் வாழ்த்தியவர்களுக்கு இன்முகமாக விடை கொடுத்தனர். ஆரா இயல்பாக இருந்ததால் விஜயரூபனாலும் அந்த சூழலை அனுபவிக்க முடித்தது. 
அவள் தோளில் உரசும்படி நெருங்கி நின்றவன், காதோரம் “தேங்க்ஸ் பேபி..” என கிசுகிசுக்க, “உனக்காக ஒன்னுமில்லை, என் மேரேஜ் ஆல்பத்துல நான் அழகா இருக்கணும் அதுக்காக தான்” என உதடு சுளித்தாள்.
நிலைத்த பார்வையில், “சரி தான், திரும்பக் கிடைக்காத தருணங்களை இன்பமாக அனுபவிக்கணும். அழகா இருக்க அம்முகுட்டி” எனக் கண் சிமிட்ட, தன்னாலே முகம் சிவந்தவள் தரை பார்த்துக் குனிந்தாள். 
வெகு நாட்களுக்குப் பின் அகில், தர்ஷினி, தியா அனைவரையும் பார்த்ததில் ஆராவிற்கு அத்தனை மகிழ்ச்சி. இவர்கள் காதல் கலாட்டாக்களை அறிந்தவர் ஆகையால் அதை மற்ற நண்பர்களோடும் பகிர, கேலி, கிண்டலில் விஜயை நாண வைத்தனர். ஆராவோ கிடைத்த சிறு இடைவேளை நேரத்தில் ஓடியே விட்டாள். 
அதிகாலையில் முகூர்த்தம் இருக்க, பின் இரவு வரை கொண்டாடிவிட்டு அதன் பின்னே கலைந்தனர். வரவேற்பு உடையைக் கலைய நினைத்த ஆரா, புடவையில் பின்னை விடுவிக்க, அறையின் கதவுகள் மெலிதாகத் தட்டப்பட்டது. 
இப்போது தானே அனைவரையும் அனுப்பினேன், அதற்குள் யார்? என நினைத்தபடி சோர்வாகக் கதவைத் திறக்க, சட்டென அவளைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்த விஜய், கதவையும் தாழிட்டான். 
எதிர்பாராத நிகழ்வு ஆகையால் அதிர்ந்தவள், “ஏய்.. நீ எதுக்கு இப்போ வந்த? டோர் எதுக்கு லாக் பண்ற?” எனப் படபடத்தாள். 
மன்னிப்பு வேண்ட வந்தவன் வேறு எதையும் எதிர்பார்த்து வந்திருக்கவில்லை ஆனால் அவள் படபடப்பு விஜய்க்கு உற்சாகத்தைத் தர, மையல் விழியோடு நெருங்கினான். நகராது அதே இடத்தில் நிலையாக நின்றவள், “எதுக்கு கிட்ட வர?” என்றாள் மென் குரலில். 
அந்த குரலில் இருந்த கொஞ்சல் அவனை மேலும் ஈர்க்க, உரசும் அளவு நெருங்கியவன் சட்டென ஒரு கையால் அவள் இடை வளைத்து அணைத்தான். சுற்றுப்புறத்தில் இருக்கும் காற்று மொத்தத்தையும் சுவாசப்பைக்குள் இழுத்துக் கொண்டதை போல் அவள் விரைத்து நிற்க, தன் கையணைப்பில் அவள் உடலை சுற்றியவன் சுவரில் சரித்தபடி அணைத்து நின்றான். 
விஜயிடம் இவற்றை எதிர்பார்க்காதவளுக்கு உடலே சிலிர்க்க, இழுத்த மூச்சை விடாது நிலையாக நின்றாள். தள்ளிப் போடா என இதழ்களைக் கூட திறக்காது இறுக மூடியபடி விழிகளால் பேச, விஜய்க்கு அவள் நிலை நகைப்பைத் தந்த போதும் மேலும் சீண்ட நினைத்தான். 
உதட்டுச் சாயத்தில் சிவந்த உதடுகள் அவள் இறுக மூடியதில் பாதி வெளிப்பட்டு அவன் கவனத்தை ஈர்க்க, விழி மூடியபடி அவளிதழ் நோக்கிக் குனிந்தான். மறுநொடி அடிவயிற்றில் சுளீரென்ற வலி, “அம்மா..” என்ற மெல்லிய அலறலோடு அவளை விட்டு இரண்டடி தள்ளி நின்றான். 
ஆரா மூச்சை விட்டுக்கொள்ள, கண்களைத் திறந்த விஜய், “கராத்தே தெரியுமா? சொல்லவே இல்லை நீ..” என்றான் சுணங்கிய முகமாக. 
குஸ்தி பயில்வான் போல் புஜங்களை உயர்த்திக் காட்டியவள், “என்ன பத்தி கொஞ்சமாவது தெரிஞ்சி வைச்சிருந்தா தானே?” எனக் குறைபட்டுக் கொண்டாள். 
இனி இவ கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும் விஜய், கொஞ்சம் அசந்தாலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லைடா என உள்ளுக்குள் உறுதி கொண்டான். 
“தெரிஞ்சிக்க தான் கொஞ்ச நாள் லவ் பண்ணாலாம்னு நினைச்சேன், அதுக்குள்ள எங்க வீட்டு தாய்க்குலங்கள் மேரேஜ்க்கு அரேஜ் பண்ணிட்டாங்க” என்றான் சோகம் போலே. 
ரசித்திருக்கிறான் தான் ஆனால் அவள் அவனை அறிந்திருக்கும் அளவிற்கு அவன் அவளை அறிந்திருக்கவில்லை. 
“லவ்.. நீ..?” என ஏற இறங்கப் பார்த்தவள், “நல்ல பண்ணுவ..!” என்றாள் கேலியாக. 
“ஹே, கல்யாணத்துக்கு அப்பறம் பார்ப்ப பேபி, என் லவ்வை..!” என்றவன் கெத்தாகச் சட்டையின் ஸ்லீவ்ஸை உயர்த்திவிட்டுக் கொள்ள, “அப்போ இப்போ லவ் இல்லை அப்படி தானே? சரி தான் நீங்க கல்யாணம் வேண்டாம்னு சொன்னவர் தானே? நான் தான் ரோஷமில்லாம உங்ககிட்டையே திரும்ப திரும்ப வரேன்” என்றாள் கலங்கிய குரலில். 
தரை பார்த்து குனிந்திருந்தவளின் முகம் நிமிர்த்தியவன், “இங்க பாரு அம்முக்குட்டி, அரை குறையா கேட்டுட்டு நீயா உளறக்கூடாது. நான் வேண்டாம்னு சொன்னது உண்மை தான் ஆனால் அந்த பொண்ணு நீ தான்னு எனக்குத் தெரியாது, அதுக்கு காரணம் உன்னைத் தவிர வேற எந்த பொண்ணுக்கும் என்னோட வாழ்கையை பகிர்ந்துக்கிற உரிமையில்லைன்னு உறுதியா இருந்தேன் புரியுதா?” என்றான். 
ஏதோ அவன் சொல்லியதைப் பொறுமையாக் கேட்டாளே தவிர, மனம் சமாதானம் அடையவில்லை. தனக்கே தனக்காக என்னை முழுதாக தேடி வரவில்லை என்ற ஏமாற்றம் அவளிற்கு. 
சுபத்ரா ஏற்பாட்டால் நடக்கும் திருமணம் என நினைத்திருந்தவளுக்கு அவன் ஜெய்பிரகாஷிடம் வேண்டியது எதுவும் தெரியாது. 
ஏமாற்றத்தில் அவள் கண்கள் கலங்கக் கண்டவன், அந்த சிப்பி விழிகளில் முத்து முத்தங்களைப் பதித்தான். கண்ணீரின் ஈரத்தோடு கலந்த இதழ் ஈரம் அவளைக் குளிர்விக்க, உருகும் பனியாய் கரைந்து நின்றாள். அணைப்பின் அழுத்தம் அதிகரிக்க, மருந்தின் வீரியத்தில் கண்கள் சொக்குவது போல சிறுக சிறுக தன்னை மறந்த மயக்க நிலை, இந்த தடுமாற்றங்கள் அவன் தந்த மாயம்! 
கண்களில் ஆரம்பித்த இதழொற்றல் மெல்ல ஊர்ந்து எப்போது உதடுகளுக்கு வந்ததது என அவனும் அறியாத மயக்கத்திலிருந்தான். புதிதான புது சுவை, அறியாத ஆசைகளை அவனுள் துளிரச் செய்தது. அவள் சுவாசத்திற்குத் திண்டாடுகிறாள் என்பதையும் உணராது அவன் அழுத்தமான இதழொற்றலில் அமிழ்ந்திருக்க, வெளியே கதவு தட்டும் ஓசை கேட்டது. 
அதில் சட்டென கலைந்தவன் விலகி கதவை நோக்கிச் செல்ல, சில நொடிகளுக்கு பின்னே உயிர் வந்த சிலை போலே அதிர்ந்தாள். தன் அறையிலிருந்து கொண்டு மறைந்து கொள்ளாமல் கதவை திறக்கச் செல்கிறானே என நொந்தவள், நழுவிய புடவையை சரிபடுத்திக்கொண்டு விஜயின் பின்னே ஓடினாள். 
கையில் தாம்பூலத் தட்டுகளோடு நின்றிருந்த சுபத்ராவும், கௌஷிகாவும் கதவைத் திருந்த விஜயை கண்டு வியந்தனர். பொன்முகம் மருதாணி அப்பியதை போல் சிவக்க, அவன் முதுகின் பின் வந்து நின்றாள் ஆராதனா. 
“அப்பாடா…நீங்க தானா..” அவன் நிம்மதி பெரும்மூச்சை விட்டுக்கொள்ள, “நீ என்னடா பண்ற இங்க?” என கௌஷி அதட்லாகக் கேட்க, “பொறுப்பே இல்லையா விஜய் யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க?” என்றாள் சுபத்ரா. 
“சும்மா பேசிக்கிட்டு இருந்தேன்..” என்றவன் முன்பற்களை காட்டிச் சிரிக்க, “நீ பேசுன இலட்சணம் அவ முகத்துல தெரியுது..” என கௌஷிகா கேலி உரைக்க, ஆராதனாவோ முடித்தால் முகத்தை முநூற்றி அறுபது டிகிரி திருப்பி விடும் நிலையிலிருந்தாள். 
“விடிச்சா கல்யாணம், பேசுற நேரமா இது? யாரும் பார்க்கிறதுக்குள்ள கிளம்புடா..” எனக் கண்டித்து அனுப்ப, “என்னை லவ் பண்ண விடமா தடுக்கிறதே, உங்களுக்கு வேலையாப் போச்சு..” என முனங்கியபடி விரைந்தான். 
புது விடியல் புதுமையோடு, புது உறவாய் அவர்கள் வாழ்கையை இணைத்தது. அதிகாலை முகூர்த்தத்தில் உறவுகள் ஆசிர்வதிக்க, நட்புகள் வாழ்ந்த, நல் உள்ளங்கள் சூழ, திருமாங்கல்யம் சூடி ஆராதனாவைத் தன்னுயிரின் பாதியாக ஏற்றான் விஜயரூபன். 
போராடிப் பெற்ற காதல் ஆகையால் அந்த நொடி, அவளும் மனம் நிறைந்து ஏற்க, இனிதே நிறைவடைந்தது அவர்கள் திருமணம். 

Advertisement