Advertisement

“என்ன கௌஷி நீ இங்க?” எனக் கேட்க, “ஒரு விசாரணை அண்ணி, நீங்களும் உள்ள வாங்க” என அழைத்தாள். 
உள்ளே வந்த சுபத்ராவிடம் கௌஷி நடந்த கதையை விவரிக்க, “ஏன் கௌஷி நேத்தே சொல்லலை?” எனக் கேட்டாள் சுபத்ரா. 
“விசாரிச்சிட்டு சொல்லாம்னு இருந்தேன் அண்ணி, நீங்களும் வந்துட்டீங்க வாங்க சேர்ந்தே விசாரிப்போம்” என அழைத்தாள். 
விஜயின் மீது விருப்பம், அவளைத் தவிர்க்க அவன் சொல்லிய காரணம், அதனால் அவன் வீட்டிற்குச் சென்றது, இன்று காலையில் அவன் கொட்டிய கோபம், அதில் அடிபட்டு தற்போது மருத்துவமனையில் படுத்திருப்பது வரை சொல்லிவிட்டாள். 
ஆரா விருப்பம் உரைத்த போதும் அவளிடம் எல்லை தாண்டாத அவன் உறுதியில், நம்ம பையன் கண்ணியமானவன் தான் என்ற பெருமை இருவருக்குள்ளும் இருந்தது. 
சுபத்ரா அறுதல் சொல்ல, கௌஷி ஐடியா சொல்ல வெற்றிகரமாக உருவாகியது அவர்கள் கூட்டணி. 
உஷ்ணமான அனல் காற்று மெல்ல மெல்ல குறைந்து கொண்டிருந்த அந்தி நேரம். ஆங்காங்கு அமர்ந்திருக்கும் இளம்ஜோடிகளையும், விளையாடும் பிள்ளைகளையும், நடைப்பயிற்சி செய்யும் பெரியவர்களையும் வேடிக்கை பார்த்தபடி பூங்காவில் அமர்ந்திருந்தாள் ஆராதனா. 
அவளைக் கண்டுவிட்டு சிரித்த முகமாக அருகே வந்தாள் அவள் கல்லூரித் தோழி. வெகுநாட்களுப் பின் பார்த்தால் மகிழ்ந்த ஆரா நலம் விசாரிக்க, அவளோ தனக்குத் திருமணம் என அழைப்பிதழைக் கொடுத்து அழைப்பு விடுத்துச் சென்றாள். 
அவள் செல்ல மீண்டும் அதே கல் பெஞ்சில் அமர்ந்தாள். ஏதோ கௌஷியும் சுபத்ராவும் சொல்லியதற்காக வந்திருந்தாலும் மனதின் ஓரம் சிறு எதிர்பார்ப்பு! சந்தித்து வெகுநாட்கள் கடந்ததால் ஏக்கமும் தான். 
அவனுக்கும் இந்த உணர்வு இருக்குமா? இருக்காதே! பின் எவ்வாறு அவனோடு ஒரு எதிர்காலம்? பின் ஏனிந்த பிடிவாதம்? 
ஆராவிற்கு எதிலும் பிடிவாதம் உண்டு தான், ஆனால் தன் பிடிவாதத்திற்கு அவன் தகுந்தவனா என்ற கேள்வி சமீபகாலமாக அடிக்கடி தோன்றியது. அவனுக்குப் பார்த்த வதுவாகவும் நிராகரிக்கப்பட்டிருக்கிறாள், காதல் சொல்லியும் நிராகரிக்கப்பட்டிருக்கிறாள். 
நிராகரிக்கப்படும் அளவிற்கு நான் என்ன குறைத்து விட்டேன்? என நினைக்கையில் ஒரு நியமான ஆவேசம். சிறிது கூடவா நான் அவனைப் பாதிக்கவில்லை என்னிடம் என்ன குறை? என்ன தவறு? அதிகமான வலி, விலகி இரு என அவன் சொல்லிய வார்த்தைகளால்.  
இமயத்திலிருந்து கீழே தள்ளியதை போல் வலி, உடைந்து நொறுங்கியே விட்டாள். எவ்வளவு நாளைக்கு தான் அவளும் வலிக்காதது போல் நடிப்பது உண்மையில் வலித்து. விட்டுவிடலாம் தான், யோசித்தும் பார்த்துவிட்டாள் அவனில்லாது ஒரு வாழ்க்கை வாழ்ந்து விடும் நம்பிக்கையும் இருந்தது. ஆனால் அவனிடத்தில் வேறொருவனை வைக்க இயலாது! 
அவன் என்ன சொன்னாலும் தன்னை பாதிக்கப் போவதில்லை, என்ற உறுதியில் வந்து அமர்ந்தவளுக்கு ஏதோ ஒரு அழுத்தம், வாய்விட்டு அழுதுவிடும் வேகம், ஒரு இயலாமை நிலை, அதற்குள்ளிருந்து விடுபடவிடாத விசை!  
அடுத்த வாரத்தில் ஸ்ரீநிதிக்குப் பிறந்தநாள் வருவதால் புத்தாடை வாங்கி நினைத்த ரவி, அலுவலகத்தில் பெர்மிஷன் போட்டுவிட்டு மாலையே பள்ளிக்கு வந்திருந்தான். எப்படியாவது கௌஷிக்கு தன்னை புரிய வைத்துவிடும் எண்ணம். 
ஒருவேளை சுபத்ரா பார்த்த பெண்ணையே விஜய்க்கு திருமணம் பேசினால் சமாதானமாகிவிடுவாளா என்ற எதிர்பார்ப்பு. மனைவியும் குழந்தையும் அழைத்துக்கொண்டு கடைக்கு சென்று வந்தான். வெளியில் வர, கௌஷியிடம் சற்று பேச வேண்டும் என்றான் ரவி. 
இன்று ஆராவை சந்திக்கப் போவதால் காலையிலிருந்தே அவனையும் அறியாது அவன் உடல் சிறு உற்சாகத்தை வெளிப்படுத்தியது. சிறிது நாட்களாகக் காணாத பழைய விஜயை கண்டுவிட்ட மகிழ்வில் அகில் கூட என்ன விஷயம் என விசாரித்திருந்தான். 
அதே நினைவில் பைக்கை நிறுத்திவிட்டு பூங்காவிற்குள் வந்தான். அவளிடம் மன்னிப்பு கேட்டுவிட வேண்டும், தன் மனதின் பாரம் பாதி குறைந்துவிடும். அவளும் மன்னித்துவிட்டால், தன்னோடு முன் இயல்பாகப் பழகுவாள் என்ற எதிர்பார்ப்பு. அந்த எல்லை வரை மட்டுமே அப்போது அவன் எண்ணம்! 
தன்னை நோக்கி தொலைவிலிருந்து வருபவனைக் கண்டுவிட்டால் ஆரா. ஒரு இமைக்காத பார்வையில் அவனை அளக்க, அதே விஜய் தான் எந்தவித மாற்றமும் இல்லை. சற்றே மாலை நேரச் சோர்வு இருந்த போதும் முகத்தில் ஒரு இளகிய நகை படர்ந்திருந்தது. 
அவனிடம் எந்த வித மாற்றமும் இல்லாதது ஏமாற்றம், தன் இம்சை இல்லாமல் நிம்மதியாக இருக்கிறானோ என்ற சந்தேகம், அருகில் வருகையிலே சற்று உடல் மெலிந்திருப்பது போல் தெரிய, தன் கற்பனையோ என்றெண்ணம்! 
“ஹே ஆரா..ஹவ் ஆர் யூ..? என்றபடி அதே பெஞ்சில் மறுமுனையில் அமர்ந்தான் விஜய். 
நீ வர வரைக்கும் நல்லா தான் இருந்தேன் என மனதில் நினைக்க, அவனோ அவளை நொடியில் விழியால் அளந்திருந்தான். 
வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருப்பதால் அன்னையின் கவனிப்பில் சற்று சதைப்பற்று ஏறியிருந்தாள். மெருகேறிய வண்ணமும் மெழுகுக் கன்னமும் பளபளக்க, அழகு கூடியிருந்து. ஸ்லீவ் லெஸ் டாப்பும், லாங் ஸ்கர்ட்டும் அணிந்திருக்க, சுருள் முடிகள் தோளில் படர்ந்து விரிந்திருந்தது. அவள் நலமோடு உள்ளாள் என்பதை அறிந்ததிலே ஒரு நிம்மதி. 
“குட்..” என்ற பதிலோடு அவன் முகம் பார்த்தாள். பதிலுக்கு வார்த்தைகள் நலம் விசாரிக்கவில்லை ஆனால் பார்வை அறிந்திருந்தது. அவள் ஓர் பார்வையில் எதற்காக வந்தான் என்ற காரணமே மறந்து அமர்ந்திருந்தான். 
“எப்படி இருக்காங்க உங்க அருக்காணி?” 
“அது யார்?” சட்டெனக் கேட்க, அவள் சிரிக்க, அதன் பின்னே நினைவு வந்தவன் நெற்றியில் அறைந்து கொண்டான். 
“அதுக்கு தான் என் ரூம் வரைக்கும் வந்தியா?” என அவள் புறம் திரும்பி அமர, கண்ணிமைத்து ஆமென்றாள். முறைக்க முயன்றான் முடியவில்லை, ஆனாலும் சிறு கோபம் இருந்தது. 
“இந்த சின்ன விஷியத்திற்கு எத்தனை பெரிய ரிஸ்க்? ஏதாவது தவறா நடந்திருந்தா? என் அண்ணி, அம்மாவிற்கு ஏதாவது சந்தேகம் வந்திருந்தால்? கொஞ்சமாவது பக்குவமா நடந்துக்க மாட்டியா? எல்லாத்துலையும் விளையாட்டு தானா?” என்றான் ஆற்றாமையில். 
அன்றும் இதே வார்த்தைகள் தான்! என்ன இன்று சற்று அமைதியாகச் சொல்கிறான் அவ்வளவு தான். 
நினச்சேன், இவனாவது காதல் சொல்லுறதாவது? ச்சே, இதுக்கா வந்தேன்? எனச் சலிப்பு தோன்றியது. 
“அன்னைக்கே திட்டுயாச்சு…” என்றவள் செவியை குடைந்துகாட்ட, அவன் சீரியஸாக முறைத்தான். 
அதில் சினம் வர, “இல்லை என்ன முறைப்பு? இப்படி கூப்பிட்டு வைச்சு திட்டத் தான் வரச் சொன்னீங்களா?” என்றாள் வேகமாக. 
என்னவோ குரலில் கொஞ்சம் உரிமை ஒட்டிக்கொண்டது போல் இருந்தது. அவள் முக பாவனைகளில் வந்த சிரிப்பை அடக்கியவன், மன்னிப்பு வேண்ட வார்த்தை வராது தடுமாறினான். 
அவள் முகத்திலிருந்து பார்வையை விலக்கிக் குனிய, அவள் மடியிலிருந்த கைப்பையும் அதன் அடியிலிருந்த அழைப்பிதழும் கண்ணில் பட்டது. 
“என்ன அது?” என்க, குனிந்து பார்த்தவள், “மேரேஜ் இன்விடேஷன்..” என்றாள் அறிவிப்பு குரலில். 
அவ்வளவு தான் அதுவரை அவனுக்கு மாயமாய் காட்சியளித்த இன்பம், மரண வலியானது. அவளுக்குத் திருமணம் என சுபத்ரா அறிவித்தது வேறு நினைவில் வந்தது. 
“ஹோ, அப்போ நான் கூப்பிட்டதுக்கு வரலை, இந்த இன்விடேஷன் கொடுக்கத் தான் வந்திருக்க..?” என வேகமாகக் கண்கள் சிவக்கக் கேட்டவன் எழுந்து நின்றான். 
என்ன உளறுகிறான், அதிர்ச்சியில் புரியாது அவளும் பார்த்தாள். ஆரா பதில் சொல்லும் முன்னே, “ச்சே, இவ்வளவு தானா உன் காதல்? நான் வேண்டாம்னு சொன்ன ஒரு மாசத்துல கல்யாணமா? இப்படி வேற ஒருத்தனை கல்யாணம் பண்றவ எதுக்கு என் பின்னாடி வந்த? எதுக்கு எங்கிட்ட காதல் சொன்ன?” என ரௌத்திரமாகக் கத்தினான். 
என்ன வார்த்தை பேசிவிட்டான்! ஆயிரம் இடிகளும் தன் இதயத்தில் இறங்கியது போல் பெரும் வலியோடு எழுந்து நின்றாள். 
 
அவள் அதிர்ச்சியில் வாயடைத்து நின்றது அவனுக்குச் சாதகமாகிவிட, “எல்லாம் பெய், உன் விளையாட்டுத்தனத்துக்கு என் உணர்வுகளை உரசிப் பார்த்திருக்கச் சரியா? என்னை ஏமாத்திட்ட ஆரா..?” என மேலும் கத்தினான். 
ஒருவாறு ஒவ்வா நிலையாகவும் அவமானமாகவும் உணர்ந்தாள். அதை விடவும் பெண்ணான என் காதலை நான் வெளிப்படுத்தியதாலே என் நேசத்தோடு என்னையும் சேர்த்து அவமானப்படுத்துகிறான் என்ற ஆற்றாமையில் அவள் நெஞ்சம் வெம்பியது. 
இவ்வளவு தானா உன் காதல்? எவ்வளவு எளிதாய் ஒரு வார்த்தையில் உயர்ந்த என் நேசத்தை உடைத்துவிட்டான்! அவன் சினத்தை விடவும் பல மடங்கு சினம் ஊற்றெடுத்தது ஆராவிற்கு. 
உயர் அழுத்தத்தை தாங்காது வெடித்த உலைகலன் போன்ற நிலையில் அவன் சட்டையைப் பிடிக்க கைகளை உயர்த்தியவள் பொது இடம் கருதி கைகளை மடக்கிக் கட்டுப் படுத்த முயன்றாள். 
“என்ன சொன்ன? ஏமாத்திட்டேனா? எப்படி ஏமாத்தினேன் அதையும் சொல்லேன்? உனக்கு ஏதாவது பொய்யான நம்பிக்கைகளை கொடுத்தேனா? உன் நேசத்துக்கு ஏங்கி தானே நின்னேன்? உன்னோட வாழ அனுமதி கேட்டு தானே நின்னேன்? ஒருவகையில ஏமாந்தது நான் தானே?” எனக் கத்தினாள். 
அவள் குரலில் சிலர் திரும்பிப் பார்க்க, அவனுக்கு அசூயையாக இருந்தது. 
“சத்தமிடாதே ஆரா, மெல்லப் பேசு..” அவன் அடிக்குரலில் கண்டிக்க, “அப்படி தான் பேசுவேன், ஏன் நீ பேசும் போது அது தெரியலையா?” என்றாள் அதிலும் அவளுக்குக் கோபம் தான். 
எரிச்சலில் பின்னத்தலையை அவன் அழுத்திக் கோத, மேலும் அவனை நெருங்கி வந்து நின்றாள். 
“இவ்வளவு தானா உன் காதல்னு எவ்வளவு எளிதா கேட்குற? இல்லை எத்தனை முறை தான் சோதித்துப் பார்ப்ப? என்ன செய்து என் நேசத்தை நிரூபவிக்கணும்னு எதிர்பார்க்கிற? எவ்வளவு அடிச்சாலும் சுவத்துல அடிச்ச பந்தா உங்ககிட்ட திருப்பி வருவேங்கிற எண்ணமா?”
ரவி பேச வேண்டுமென்றதும் பூங்காவிற்கு அழைத்து வந்தாள் கெளஷிகா, உள்ளே வந்ததுமே அவர்களை பார்த்துவிட்ட ஸ்ரீ, “சித்தா…” என்றபடி அவனை நோக்கி ஓட முயன்றாள். அதற்குள் சட்டென அவளைத் தடுத்துத் தூங்கிக்கொண்டாள் கௌஷி. 
விஜயின் முகம் பார்த்து, “விலகி இருன்னு சொல்லிட்டீங்க பின்ன என்ன உரிமை இருக்கு என்னைக் கேள்வி கேட்க? நான் ப்ரபோஸ் பண்ணேன் நீங்க ரிஜெக்ட் பண்ணீங்க அவ்வளவு தான். அதுக்கு அப்பறமும் காலத்துக்கும் உன்னையே நினைச்சு வாழணும்னு எதிர்பார்க்கிறது எந்த வகையில நியாயம்? நான் என்ன கல்ல மண்ணா? பொண்ணுங்களுக்கு என்ன உணர்ச்சிகள் இல்லையா? இல்ல இருந்தா தான் தப்பா? 
உன்னையே நினைச்சி வாழ்ந்திட்டா மட்டும் இந்த சமூகம் என்னைத் தெய்வமா கூம்பிடுமா? இல்லை என்னென்ன மாதிரியான பேச்சு வரும் தெரியுமா? நீ தான் என்னை காதலிக்கலையே பின்ன நான் வேற ஒருவனைக் கல்யாணம் பண்ணிக்கிறதுல என்ன தப்பு? சொல்லு, என்ன தப்பு?” எனப் பதில் வேண்டிய பிடிவாதத்தில் சட்டையைப் பிடிக்காத குறையாகக் கத்தினாள். 
“ஏன்னா நான் உன்னை காதலிக்கிறேன்..” என்றான் பட்டென. 
துள்ளும் அலைகள் நின்றதை போல், அசையும் மரங்கள் நின்றது போல் ஆராவும் அதிர்ந்து நின்றாள். ஒரு வேகத்தில் சொல்லிவிட்ட போதும் உணர்ந்தே சொல்லியிருந்த விஜய், எட்டி அவள் கரங்களை பற்றினான். 
பற்றிய நொடியே வெடுக்கெனக் கரத்தை பறித்தவள், “அப்படியொரு காதல் எனக்குத் தேவையில்லை..” என உதறிவிட்டு கைப்பையை எடுத்துச் சென்றாள்.
அவன் காலடியில் விழுந்த அழைப்பிதழைப் பார்த்தவன் கலங்க, அவள் தூரம் சென்றிருந்தாள். 

Advertisement