Advertisement

அத்தியாயம் 17
இரவு நேரம் மேசையின் மீதிருந்த கௌஷியின் அலைபேசி அதிர்ந்தது. யாரெனப் பார்த்தவள் ரவிக்குச் சிறு சத்தமும் கெட்டுவிடாதபடி எழுந்து முன் வாசலுக்கு வந்தாள். சுற்றும் முற்றும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டு ஆசுவாசமான மூச்சோடு அட்டென் செய்தாள். 
“ஹலோ… ஆரா.. “
“ம்ம், அக்கா தனியா தானே இருக்கீங்க? இல்லை உங்க கொழுந்து பக்கத்துல இருக்காரா?” என மறுமுனையிலிருந்து கேட்டாள் ஆராதனா. 
“ம்கூம், யாருமில்லை. நீ சொல்லு..”
“என்னத்தை சொல்ல..?” என்றவள் பெருமூச்சை விட்டுக்கொள்ள, “நான் விட்ட கதையைக் கேட்டு, புயல் வேகத்துல இன்னைக்கு உன்ன பார்க்க தானே ஓடி வந்தான், சமாதனாமாகிட்டானா? லவ் எதுவும் சொன்னானா?” என எதிர்பார்ப்போடு கேட்டாள் கௌஷிகா. 
“பார்த்தா தானே சொல்லுறதுக்கு? அவன் தான் இன்னைக்கு பார்க்க வந்த பிரண்ட்டை பார்க்காமலே போயிட்டானே..!” என இடையில் சுபத்ராவின் குரலும் கேட்க, “ஹோ.. அண்ணி நீங்களும் லைன்ல இருக்கீங்களா? அண்ணன், பையன் எல்லாம் நல்லாயிருக்காங்களா?” என்றாள் கௌஷிகா. 
“உங்க உங்க குடும்பப் பாட்டை அங்கிட்டு போய் பாடிக்கோங்க, இப்போ என் பிரச்சனைக்கு வாங்க..” என சிணுங்கினாள் ஆரா. 
“உன்னைத் தான் கொஞ்ச நாள் பொறுமையா இருன்னு சொல்லியிருக்கேன்ல..?” என கௌஷி கேட்க, “எனக்கு அவன் லவ்வ சொல்லுவான்னு நம்பிக்கையுமில்லை, இனி காத்திருக்கப் பொறுமையுமில்லை… இப்போவே அவன் குரல்வளை பிடிக்கணும்கிற அளவுக்கு கடுப்புல இருக்கேன்” என்றாள். 
“ஐயையோ…பாவம்டி என் தம்பி..” சுபத்ரா இடையில் உரைக்க, “அப்போ நான் மட்டும்..?” என்றாள் ஆரா. 
“சரி தான் அவனுக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாது..” என சுபத்ரா உரைக்கும் போதே, “அவனை சொல்லிக் குத்தமில்லை, எல்லாம் என் வீட்டுக்காரர் வளர்ப்பு அப்படி..” என குறைப்பட்டுக் கொண்டாள் கௌஷி. 
“இனி வெய்ட் பண்றது எல்லாம் வேலைக்காது, வேஸ்ட் ஆப் டைம். நீங்களே கட்டி வைக்கிறீங்களா? இல்லை நான் கடத்திட்டுப் போகவா..?” என ஆரா மிரட்ட, “நீ வேணா கடத்திட்டே போய்க்கோ..” என்றாள் கௌஷி. 
“நாங்க என்ன செய்யட்டும் ஆரா… விஜய், வீட்டுப் பெரியவுங்க முடிவு தானே..” என சுபத்ரா ஆறுதல் சொல்ல, “அப்போ பவானியம்மாகிட்ட, நானே போய் கேட்குறேன்…” என்றாள் வேகமாக. 
“ஹாஹா..அத்தைகிட்டையா..? கோவில் புளியோதரை மாதிரி தூக்கிக்கொடுத்திடுவாங்க..!” என கௌஷி சிரிக்க, “ரவிகிட்ட கேட்கணும்னு சொல்லுறா..!” விளக்கினாள் சுபத்ரா. 
“ஏன் தான் அண்ணனும் தம்பியும் என் காதலுக்கு வில்லனா இருக்காங்களோ..!” என ஆரா நொந்து கொள்ள, தன்னாலே ரவி மறுத்ததாக சுபத்ரா வருந்தினாள். 
“அதுக்காக தான் கோபமே இல்லாத போதும் அவரோட சமரசமாகாம இருக்கேன்..” எனும் போதே, “கௌஷிக்கா..” என பல்லைக் கடித்தாள் ஆரா. 
“இந்தம்மா சட்டுப்புட்டுன்னு உன் பிரச்சனையை முடிச்சிவிடும்மா, அவர் வேற சோகமா முகத்தை வைச்சிக்கிட்டு பார்க்கவே பாவமா சுத்திக்கிட்டு இருக்கார். நான் போய் சீக்கிரம் சமாதானம் ஆகணும்..” என கௌஷி மேலும் உரைக்க, “போங்கக்கா, போய் உங்க லவ்ஸ்ஸ கன்டின்யூ பண்ணுங்க..” என டென்ஷனாள் ஆரா. 
கௌஷிகா சிரித்துவிட, “ச்ச், ஆரா..” என கண்டிப்பு காட்டினாள் சுபத்ரா. 
“சரி, இன்னைக்கு பார்க்க வந்தவன் எதுக்கு உன்னை பார்க்காமலே திரும்பிட்டான்?” என கௌஷி கேட்க, “நாளைக்குப் பார்க்க வரச் சொல்லியிருக்கார். அதைச் சொல்லத் தான் உங்க இரண்டுபேருக்கும் கால் பண்ணேன்” என்றாள் ஆரா. 
“அடடேய், என் தம்பியா..! வாழ்த்துகள் ஆரா..” என சுபத்ரா வியக்க, “அப்பாடா..! நாளைக்கு லவ்வ சொல்லி, நாளான்னைக்கு அவனே ரவிகிட்ட பேசிட்டா அதுக்கு அடுத்த நாளே உங்களுக்கு கல்யாணத்தை முடிச்சிடலாம்” என படபடவென உரைத்தாள் கௌஷிகா. 
“ம்ச், எனக்கு பயமா இருக்கு..!” எனச் சலித்துக்கொண்டாள் ஆராதனா. 
“ஏன்..?” சுபத்ரா கேட்க, “அவர் என் லவ்வ அக்செப்ட் பண்ணுவாருன்னோ இல்லை ப்ரோப்ரோஸ் பண்ணுவருன்னோ எனக்கு நம்பிக்கையில்லை. என்னவோ எனக்குப் பயமா இருக்கு நான் நாளைக்குப் போக மாட்டேன்” எனப் பள்ளி செல்ல மறுக்கும் சிறுமியைப் போல் அடம்பிடித்தாள் ஆரா. 
“போனா தானே என்ன சொல்லுவான்னு தெரியும்?” சுபத்ரா கேட்க, “கண்டிப்பா அவனுக்கு உன் மேல லவ் இருக்கு ஆரா..” என்றாள் கௌஷி. 
“என்னவோ! நீங்க தான் விரட்டிப் போகாதே விலகிப் போ, காதல் இருந்தா அவனே பின்ன வருவான்னு சொன்னீங்க, அதை நம்பி இத்தனை நாளா விஜயை பார்க்கமா, லவ் டார்சர் பண்ணாம இருந்துட்டேன். இப்போ பார்க்கணும்னு சொன்னா பயமா இருக்கு அக்கா..” என்றாள் மீண்டும். 
“அதான் என் தம்பி உன்னைத் தேடி வந்துட்டானே..!” சுபத்ரா உரைக்க, “நீ பார்க்கலை, அவனுக்கு எல்லா டெஸ்டும் வைச்சி பார்த்துட்டோம், அவன் தவிப்பையும் தடுமாற்றத்தையும் கிட்ட இருந்து பார்த்து நாங்க தான். கண்டிப்பா சொல்லுறேன் நாளைக்கு அவன் காதலை வெளிப்படுத்துவான்..” என உறுதியாக உரைத்தாள் கௌஷி. 
அதன் பின்னே சமாதானமான ஆரா சில நிமிடங்கள் பேசிவிட்டு, உறங்கச் சென்றாள். வெகு நாட்களுக்குப் பின் விஜயை காண இருப்பதால் ஓர் எதிர்பார்ப்பும், அத்தனை நாட்களாக காணாமல் போன உற்சாகமும் அவளிடம் வந்து ஒட்டிக்கொண்டது. 
ஆராதனா வந்து சென்ற அன்றே ஸ்ரீநிதியிடம் விசாரித்திருந்தாள் கௌஷிகா. ஒரு வேளை அவர்கள் உறவு நட்பாகக் கூட இருக்கலாம் குழப்பிக்கொள்ளக் கூடாது என நினைத்த போதும் ஏதோ முரணாக தோன்றியது. 
அப்போதே சுபத்ரா சொல்லிய எதிர் வீட்டுப்பெண்ணின் பெயரும் ஆராதனா என நினைவில் வர, விஜயும் சில நாட்கள் முன் நண்பனை ட்ராப் செய்ய அவள் வீட்டுப் பக்கம் சென்று வந்தாக சொல்லியதும் நினைவில் வந்ததது. 
இரண்டையும் கூட்டல் பெருக்கல் எனக் கணக்குப் போட்டுப் பார்த்த அவள் அறிவு தெளிவு கிடைக்காத விடையின் தெளிவைத் தேடியது. அடுத்த நொடியே சுபத்ராவிற்கு அழைத்திருந்தாள். 
விஜயும் ஆராவும் நேசிக்கலாம் அதை வீட்டில் தெரிவிக்காமல் சுபத்ராவிடம் தெரிவித்து கல்யாணத்திற்கு பேச முயன்றானோ? என்பதுவரை கௌஷியின் கற்பனைகள் நீண்டது. 
தன் சந்தேகத்தை நேரடியாகக் கேட்காது, சுபத்ராவிடம் பேச அவளோ ஆராதனா வளரும் பருவத்திலிருந்து அவளை கவனித்திருக்கிறேன், ஆராதனாவை தனக்குப் பிடிக்கும் அதனாலே தன் தம்பிக்கு மணமுடிக்க விரும்பியதாகத் தெரிவித்தாள். 
ரவி மறுத்ததில் சுபத்ரா வருந்த, அவளுக்கு ஆறுதல் சொல்லினாள் கௌஷி. இடையில் ஆராதனாவின் போட்டோவையும் வாட்ஸ்சப்பில் வாங்கிப் பார்த்து தன் சந்தேகத்தையும் உறுதி செய்து கொண்டாள். 
நண்பனின் திருமணத்திற்குச் சென்ற விஜயும் வந்துவிட, அன்றிலிருந்து அவனை கவனிக்க தொடங்கிவிட்டாள் கௌஷிகா. ஸ்ரீயின் மூலம் அவன் அலைபேசியிலிருந்து ஆராவின் அலைபேசி எண்ணை எடுத்து ஆராவிற்கு அழைத்த கௌஷி, அவளைச் சந்திக்க வேண்டுமென்றாள். 
அலுவலகம் முடித்து பின் மாலை சந்திக்கலாம் எனத் தெரிவித்த ஆராவிற்கு ஒரே படபடப்பு, தன்னை கண்டுகொண்டாளோ? தான் வந்து சென்றதை விஜயிடம் தெரிவித்துவிடுவாளோ? என்ற பயம் தான். 
அவள் பயந்தது போலே அன்று அலுவலகம் வந்ததுமே விஜய் உண்மையையறிந்து சண்டையிட, தவறி விழுந்து, எழுந்தவளும் மருத்துவமனையில் சென்று படுத்துக் கொண்டாள். 
பள்ளி முடித்ததும் எங்குச் சந்திக்கலாமென கேட்க கௌஷி அழைக்க, அவள் மருத்துவமனையில் இருக்கிறேன் என மறுக்க, அடுத்த இருபதாவது நிமிடம் மருத்துவமனைக்கே வந்திருந்தாள் கௌஷிகா. 
பெரிதான அடிகள் எதுவுமில்லை எனினும் காலில் தசைப் பிடிப்பும் வலியும் இருந்தது. சிறிது ஓய்வில் சில தினங்களில் சரியாகிவிடும் எனத் தெரிவித்திருந்தனர். அஸ்வின் அலுவலக அழைப்பை பேசிக்கொண்டு அறைக்கு வெளியே இருக்க, உள்ளே வந்த கௌஷி அவளிடம் நலம் விசாரித்துவிட்டு அமர்ந்தாள். 
“என்ன விஷயமா பார்க்கணும்னு சொன்னீங்க..?” ஒரு நெருடலோடே ஆராதனா கேட்க, “நீங்க விஜயோட ஆபிஸ்ல தானே வொர்க் பண்றீங்க? அவனோட பழக்கமா?” என்றாள் கௌஷிகா. 
என்ன அர்த்தத்தில் கேட்கிறாள்? எதற்காகக் கேட்கிறாள் என எதுவும் புரியாது ஆம் இல்லை என எட்டுத்திசைக்கும் தலையை உருட்டினாள் ஆரா. 
“அப்போ எனக்கு ஒரு உதவி பண்ணு முடியுமா..?” என கௌஷி கேட்க, உதவியா? வியந்தாள் ஆரா. 
அவன் என்னடா என்னை தள்ளிவிட்டு கண்டுக்காம போறான், அவங்க அண்ணி என்னடானா எங்கிட்டையே வந்து கேள்வி கேட்குறாங்க! குடும்பம் மொத்தமும் ஒரு மாதிரியா தான் இருக்காங்க என நினைத்தாள். 
“என்ன உதவி..?” 
“இல்லை கொஞ்ச நாளா அவன் ஒரு மாதிரியா இருக்கான், வீட்டுல கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்கிறோம் எந்த பொண்ணைப் பார்த்தாலும் வேண்டாங்கிறான். ஒரு வேளை ஆபிஸ்ல யாரையும் லவ் பண்றானா?” என கேட்ட கௌஷி, அவளை ஆழம் பார்த்தாள். 
திருடனுக்கு தேள் கொட்டிய நிலையில் திருதிருவென முழித்தாள் ஆரா. பரிதாபத்திலும் பரிதாபம்! அடேய் விஜய்… நீ செய்த வேலைக்கு நான் முழிக்க வேண்டியதா இருக்கு! மனதில் திட்டினாள். கௌஷி இப்படியொரு உதவியைக் கேட்பாள் என எதிர்பார்க்கவில்லை.
அவள் அமைதியாக இருக்க, கதவைத் தட்டியபடி உள்ளே வந்தாள் தியா. அகில் தர்ஷினிக்கு விஜயின் அண்ணி என கௌஷிகாவோடு முன்பே அறிமுகம் உண்டு, ஆனால் தியாவிற்குத் தெரியாது. 
கௌஷியை யாரோ என நினைத்தவள் சிறு சிரிப்போடு உள்ளே வந்து ஆராவிடம் நலம் விசாரித்தாள். ஆராவும் பதைபதைப்போடு பதில் சொல்ல, அவளுக்கு ஆறுதல் உரைத்தாள் தியா.
“ஏன் ஆரா நிஜமாகவே உங்களுக்கு அடிபட்டுடுச்சா?” எனச் சந்தேகமாகக் கேட்ட தியா,  பேசாதே என்ற ஆராவின் கண்ஜாடைகளை கவனிக்கவில்லை. 
வேறு வழியின்றி ஆரா தலையாட்ட, “எதுக்கு கேட்டேனா விஜயை பண்ற லவ் டாச்சர்ல இதுவும் ஒரு வகைன்னு நினைச்சேன். ஏன் நிஜமா விழுந்து அடிபடணும்? நடிச்சிருக்கலாமே..?” என தியா சந்தேகம் வேறு கேட்டாள். 
ஐயோ..! என்றிருந்தது ஆராவிற்கு. கௌஷியின் முன்பா இப்படி உளருவாள்? கோபத்தில் தியாவை முறைக்கக் கூடா இயலாத பரிதாபநிலையில் முழித்தாள். 
“விஜய் வேற ரொம்ப பயந்துட்டாங்க முகமே ஒரு மாதிரியாகிடுச்சு, ஹாஸ்பிட்டல்ல ஆராவை பார்த்தும் கால் பண்ணுன்னு சொன்னாங்க, நல்லாயிருக்கீங்கன்னு ஒரு கால் பண்ணி சொல்லிடட்டுமா?” எனப் பயந்தவள் போல் அனுமதி வேண்ட, ஆராவிற்கு சுவரில் முட்டிக் கொள்ளலாம் போல் இருந்தது. 
இவ ஒருத்தி, மத்த நாள் எல்லாம் சீனியர்ன்னு சொல்லுறவ இன்னைக்குன்னு பார்த்து  வார்த்தைக்கு வார்த்தை விஜய்ன்னு சொல்லுறாளே! நான் யாருக்கு என்ன தீங்கு செய்தேன் எனக்கு மட்டும் ஏன் இப்படி? என நொந்து கொண்டாள் ஆரா. 
தியா ஆராவின் பதில் எதிர்பார்த்திருக்க, “செல்ல வேண்டாம்..” என்றாள் கௌஷி. 
“ஏன் சொல்லைன்னு கேட்டா..?”
“மறந்துட்டேன்னு சொல்லிடுங்க, இல்லை ஆரா தான் சொல்ல வேண்டாம்னு சொன்னான்னு சொல்லிடுங்க” என்றாள் கௌஷிகா. 
“உனக்கு ஹாஸ்டல் க்ளோஸ் டைம்மாகல, கிளம்பு தியா..” எனத் தள்ளாத குறையாக விரட்டினாள் ஆரா. 
“ஹான், வெளியில நிற்கிறது உங்க அண்ணன்னா? தெரியாம மோதிட்டேன். சாரி சொன்னேன்னு சொல்லிடுங்க ப்ளீஸ்..” என்றவள் ஓடினாள். 
கௌஷி அவளையே பார்க்க, அவள் பார்வையில் தடுமாறியவள், “தியா என் ப்ரண்ட், எப்பவுமே இப்படி தான் விளையாட்டுக்கு எதையாவது சொல்லுவா… நீங்க.. எதையும்..” என்னும் போதே, “முழுசா நனைந்த பிறகு முக்காடு எதுக்கு ஆரா?” என்றாள் கௌஷிகா. 
சரி தான் இனி மறைத்தென்ன பயன்? மறைக்கத் தான் என்ன இருக்கிறது? எனத் தோன்றியது.
இருந்தும் விஜயை எதுவும் தவறாக நினைத்துவிடுவாரோ என்ற பதைபதைப்பில், “நான் தான் அவரை விரும்புறேன், அவர் அப்படி எதுவுமில்லை..” என்றாள் வேகவேகமாக. 
“அதுக்கு தான் அத்தையை இம்ராஸ் பண்ண வீடு வரைக்கும் வந்தீயா..?” என கௌஷி சிறு சிரிப்போடு கேட்டாள். 
அதுவரையிலும் அழுத்தமான முகத்தில் விசாரிக்கும் தோரணையில் இருந்தவள் சிரித்துவிட, சற்றே இலகுவாக உணர்ந்தாள் ஆராதனா. 
“அப்போ அத்தை இம்ரேஸ் ஆகிட்டாங்களா..?” வேகமாகக் கேட்க, கௌஷி தலையாட்ட, “ஆரா, என்னாடாச்சு? எப்படி விழுந்த?” என்ற கேள்வியோடு உள்ளே வந்தாள் சுபத்ரா. 
சித்ராவின் மெடிகல் ரிப்போர்டை வாங்கிவிட்டுத் திரும்பிய சுபத்ரா, வழியில் அஸ்வினைப் பார்த்ததும் என்னவென்று விசாரித்தாள். ஆராவிற்கு அடிபட்டதைத் தெரிவித்தவன் அவள் அறைக்குள் இருப்பதையும் அறிவித்தான். 
நலம் விசாரிக்க, உள்ளே வந்தவள் உடன் கௌஷி இருப்பதை கண்டு வியந்தாள். ஆனாலும் சுபத்ராவை விட அவளை கண்டு அதிர்ந்தது ஆராதனா தான். 
ஹையோ..! ஒரே நாள்ல எத்தனை சோதனை? சோதனை மேல் சோதனை போதுமடா சாமி வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது மீ! என நொந்தாள்.

Advertisement