Advertisement

அத்தியாயம் 15
நான் இல்லாத போது என்ன வேலை செய்திருக்கிறாள் இவள்? என் அன்னையிடம் அனுசரணையை பெரும் முயற்சியா? என்ன தைரியம் அவளுக்கு? பயமற்ற இவள் விளையாட்டுத்தனங்களுக்கு எல்லையே இல்லாது போயிற்று! எனக் கொதித்துக் கொண்டிருந்தவன் அவளைக் காணும் வேகத்தில் அலுவலகம் வந்திருந்தான். 
ஆராதனாவும் அவனை காணும் எண்ணத்தில் தான் இருந்தாள். பிடிக்கவில்லை என நேரடியாகச் சொல்லிவிடின் நலம், அதை விடுத்து இல்லாத ஒரு கதையைச் சொல்லி ஏன் என் உணர்வுகளை உரசிப் பார்க்கிறான்? பெண்ணான நான் வெளிப்படுத்தியதாலே என்னைக் கீழாக நினைக்கிறான், என் விருப்பத்தை விளையாட்டுப் பொருளாக்கி விட்டான்? உதைப்பவனுக்குத் தெரியாது உதை பந்தின் வலி! 
அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த ஆரா, சுற்றுப்புறம் கவனிக்காது படிகளின் பக்கம் வந்துவிட்டாள். அவள் இருக்கைக்கே அவளைத் தேடி வந்த விஜய் அவளைக் காணாது தர்ஷினியிடம் விசாரிக்க, ஆரா சென்ற திசையை கை காட்டினாள். 
“எதையுமே நீ பிளான் படி செய்யவேயில்லைடா, அத்தை வரவும் மிஸ்ட்கால் கொடுக்கணும்னு சொன்னேனே கொடுத்தியா..?”
“அதுக்கு முன்ன நீயும் தான் கோவிலை விட்டு வெளிய வந்திட்டீயேக்கா..”
“அது சரி, என்னை பாய்ன்ட் பண்ணித் தானே இடிக்கிற மாதிரி வரச் சொன்னேன். நீ ஏன் அவங்ககிட்ட வந்த?”
“யாக்கா, நான் சாரியா தான் வந்தேன். நீங்க இரண்டு பேரும் தான் திசை மாத்தி வந்துட்டீங்க..”
“ஆமா, பைக் ஸ்டன்டர்ன்னு சொல்லிக்காத வாய் மட்டும் நல்லா பேசு. உன்னால எனக்கு நெற்றியில அடி பட்டது தான் மிச்சம். எப்படியோ சமாளிச்சிட்டேன்.. சரி.. சரி.. அடுத்த தடவை மெக்கானிக் செட்க்கு வரும் போது பார்க்கலாம்டா…” 
அத்தளத்தின் முடிவில் கீழே செல்லும் படிகளைப் பார்த்ததும் பேசியபடி நீண்ட தூரம் வந்துவிட்டதை உணர்ந்து திரும்பியவள் திடுக்கிட்டாள். எதிரே கைகளை கட்டிக்கொண்டு நின்றிருந்தான் விஜயரூபன். 
ஐயோ எவ்வளவு நேரமா நிக்கிறானோ? இப்படி கவனிக்காம உளறிட்டு இருக்கியே மக்கு ஆரா! எனத் தன்னையே திட்டியவள் கண்டுக்காதா மாதிரி ஓடிடு என்ற மனதின் குரலுக்குத் தலை குனிந்தபடி அவனை தாண்டி நகர்ந்தாள். 
கற்சிலை போன்று நிற்பவனைக் கண்டுகொள்ளாது செல்ல, சினமுடன் சட்டெனத் தன்னை தாண்டிச் செல்பவளின் கரம் பற்றி தன் முன் இழுக்க, அவன் இழுத்த வேகத்திற்குத் தரையின் விளிப்பிற்கு வந்திருந்தவள் நிலையில்லாது பின்புறமாகக் கவிழ்ந்தாள். இருவருமே அதை எதிர்பாராதிருக்க, அவள் கரத்தைப் பற்றியிருந்த அவனும் அவளோடு கவிழ, இருவரும் கிட்டத்தட்ட பத்து படிகள் உருண்டு சமதளப்பரப்பில் விழுந்தனர். 
அவனுக்கு ஒன்றுமில்லை, பஞ்சு படுக்கையில் விழுந்ததை போல், மொத்த உடலோடு அவள் மீது கவிழ்ந்திருந்திருக்க, அவள் தான் பெரும் அழுத்தத்தை உணர்ந்தாள். நொடியில் சட்டென எழுந்தவன் சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு ஆசுவாசமானான். 
பின்பு தரையில் பார்க்க, ஆராதனா படுத்தவாக்கிலே இருந்தாள். அதிலும் பழைய நெற்றிக் காயத்தில் மீண்டும் இரத்தம் கசிய, அவனுக்குக் கண் மண் தெரியாத அளவிற்கு ரௌத்திரம். 
அதென்ன அத்தனை எளிதாக உயிரோடு ஒரு விளையாட்டு? தன் அன்னைக்கோ அவளுக்கோ தவறுதாலாக ஏதாவது நடந்திருந்தால் தன்னால் தாங்க இயலுமா? தன் அன்னையிடம் அறிமுகமாக இவ்வளவு பெரிய ரிஸ்க் தேவையா? ஒரு உயிரின் மதிப்பு அறியாத முட்டாளே! 
அந்த கோபத்தில் நொடியும் அவளை கவனிக்காது, “கொஞ்சமாவது அறிவிருக்கா உனக்கு? என் உயிரை வாங்கன்னே பிறந்து வந்திருக்கியா நீ? முதல்ல எதுக்கு என் வீட்டுக்கு வந்த? என் ரூம் வரைக்கும் வர வேண்டிய அவசியமென்ன? இதெல்லாம் நாகரிகமான செயலா ஆரா? இதெல்லாம் திட்டம் போட்டு வேற செய்திருக்கியே என்ன தைரியம் உனக்கு?” என அவன் வாய்க்கு வந்தபடி எல்லாம் கத்திக்கொண்டிருந்தான்.
தன்னை கவனிப்பான், தூக்கி விடுவான் என்ற கற்பனையெல்லாம் இல்லாது சிரமப்பட்டு எழுந்தவள் முதல் படியில் சுவர் ஓரமாக ஒடுங்கிப் போய் அமர்ந்தாள். 
“நான் தான் உன்னை பிடிக்கலைன்னு ஆவாய்ட் பண்ணுறேன்னே பின்ன ஏன் என் பின்னையே வந்து என்னை இம்சை படுத்துற? எதையுமே சீரியஸா எடுத்துக்க மாட்டியா நீ? ஏதாவது தவறுதால நடந்திருந்தா உனக்கோ எங்கம்மாவுக்கோ ஏதாவது ஆகியிருந்தா என்ன செய்திருப்ப? இல்லை அப்படி நடக்கணும்கிற தான் திட்டமா?” என்க, அதிர்ந்தாள்.  கடுமையான வார்த்தைகள் வலிகொண்ட இதயத்திற்கு மேலும் வலியைக் கொடுத்தது. 
“எதற்குமே ஒரு எல்லை இருக்கு, நீ அதை கடந்து எனக்குள்ள வரணும்னு முயற்சிக்கிறது வீண்! நமக்குள்ள உறவு இருக்கோ இல்லையோ ஆனால் அதை பொதுவுல நீ வெளிக்காட்டுறது பிடிக்கலை. நீ எந்த நேரம் என்ன செய்வியோங்கிற பயத்தோடவும் டென்ஷனோடவும் என்னாலே ஒரு வாழ்கையை வாழவே முடியாது. கடைசியா சொல்லுறேன், உன்னைப் பார்க்கவே பிடிக்கலை, இனியாவது எங்கிட்ட இருந்து விலகி இரு” படபடவென பேசினான். 
நெற்றியில் கை வைத்தபடி கண்ணை மூடிக்கொண்டு கத்தியவன் பின் நீண்ட மூச்சு விட்டுவிட்டு கண்களைத் திறந்தான். அவளோ சுவரோடு ஒட்டி, ஒடுங்கிப் போய் இருந்தாள். வேக வேகமாய் பார்வையால் தழுவி ஆராய்ந்தான், கண்ணில் படும் படியான இரத்தக்காயம் எதுவுமில்லை, நெற்றியை தவிர! 
அவன் முகத்தை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. சிவந்த முகம் மேலும் வலியில் சிவந்திருக்க, கண்களில் கண்ணீர் கோடாய் வழிந்தது. நீர் தேங்கிய பொய்கை போலே சிவந்து செந்நீர் தேங்கியிருக்கும் கலங்கிய விழி தான் அவனைக் கலவரப் படுத்தியது. 
சட்டென அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவன், “ஆ..ஆரா..நல்லாயிருக்கயில்ல..?” என்றான் கேள்வியாக. 
அவளிடம் பதிலில்லை. அவள் கலங்கிய விழி வேறு அவனைப் பாவி எனக் குற்றம் சாட்ட, அவள் முகம் நிமிர்த்த எத்தனித்து அவள் கன்னம் நோக்கி கைகளைக் கொண்டு செல்ல, சட்டென தட்டிவிட்டாள். 
“எங்கிட்ட இருந்து விலகி இரு..” தன் வலியோடு எவ்வளவு முடியுமோ அவ்வளவு அழுத்தமோடு கத்தினாள். 
மீண்டும் அவன் நெருங்க முயல, வலுவிழந்த நிலையிலும் வேகமோடு அவனை விலக்கிவிட்டாள். அவள் முன் மண்டியிட்டு அமர்ந்திருந்தவன் இரண்டடி தள்ளி தரையில் விழுந்தான். 
அவள் பிடிவாதமும் வீம்பும் உணர்ந்தவன் விறுவிறுவென எழுந்து மேல சென்றுவிட்டான். அவன் செல்ல ஆராவிற்கு அப்படியொரு அழுகை! 
உடல் வலியா மனதின் வலியா எனத் தெரியவில்லை. இரண்டிலும் வலி தான்! அவனோடு விழுந்ததில் பின்னத் தலை, கழுத்து, இடுப்பு எலும்பு எனப் பின்புறம் மொத்தமும் ஒரு அழுத்தம், தசைப் பிடிப்பு போன்ற வலி. நெற்றியிலும் தெறிக்கும் வலி. வாழ்வில் இப்படியொரு வலியை அனுபவித்ததே இல்லை. ரோஜா முள்ளும் தீண்டியறியாத மலரவள்!
தள்ளிவிட்டால் அப்படியே விட்டுவிட்டுச் சென்று விடுவானா? ஆறுதல் உரைக்க மாட்டானா? எவ்வாறு உரைப்பான், என் மீது அவனுக்குத் துளி கூட நேசமில்லையே! அவன் தானே இந்நிலைக்கு காரணம் அந்த குற்றவுணர்வு கூட இல்லையா? தனிமையில் விட்டுவிட்டு யாரோ போல் செல்கிறான். 
புதையலுக்கு காத்திருந்து பூதத்திடம் அடிபட்டது போல் அப்படியொரு ஏமாற்றம்! ஏங்கி ஏங்கி மூச்சு முட்டும் படி அழுதாள். தன் வாழ்நாளில் இவ்வாறு அழுதே நினைவே அவளுக்கு இல்லை. 
எழ வேண்டுமென்ற எண்ணமில்லை, எழவும் முடியவில்லை. அடுத்த சில நொடியிலே கையில் தண்ணீர் பாட்டிலோடு தர்ஷினி ஓடி வந்தாள். 
“ஆரா என்னாச்சு..? நீ கீழ விழுந்துட்டேன்னு விஜய் சொன்னான்..இந்த தண்ணீர் குடி..” என தண்ணீர் பாட்டிலைத் திறந்தபடி ஓடி வந்தவள் அவள் அருகில் அமர, அவளே எதிர்பாராது சட்டென அவள் தோளில் சாய்ந்தவள் மேலும் விம்பி விம்பி அழுதாள். 
நிகழ்ந்தது எதையும் அறியாது, “ரொம்ப முடியலையா..? ஹாஸ்பிட்டல் போலாம் வா..? எழ முடியுமா இல்லை அகில், விஜயை கூப்பிடட்டுமா..?” என்றபடி ஆறுதலாய் அவள் தலை தடவிக் கொடுக்க, மறுப்பாய் தலையசைத்தவள் மேலும் அவள் தோளிலே விசும்பினாள். 
மொத்த அதிர்விலிருந்து வெளிவர, அவளுக்கு சில நிமிடங்கள் தேவையானது. மெல்ல தெளிந்தவள் தர்ஷினியைப் பற்றிக்கொண்டு எழுந்தாள். தர்ஷினினைப் பற்றியபடியே மேல் ஏறினாள். நடந்தால் நடையில் ஒரு வலியையும் உணர்ந்தாள். 
ரெஸ்ட்ரூம் சென்று தன்னை நிலைப்படுத்திக்கொண்டு வந்தவள், தன் இருக்கையில் அமர்ந்தாள். விடுமுறைக்கு விண்ணப்பித்து விட்டு, முடிக்க வேண்டிய முக்கிய வேலைகளை மட்டும் முடித்துவிட்டு தன் குழு நண்பர்களிடம் மீதியைப் பகிர்ந்தாள். 
உணவு இடைவேளை நேரம் அகிலும், தியாவும் வந்து நலம் விசாரிக்க, அகிலை மருத்துவமனையில் விட்டுவிட்டும் படி கேட்டாள். பின்புறம் வலி இருந்ததால் உடல் குறித்த பயம் அவளிற்கு. அகிலும் சரியென்று அவள் காரிலே அழைத்துச் செல்ல, செல்லும் வழியில் சகோதரன் அஸ்வினுக்கு அழைத்து மருத்துவமனைக்கு வரும்படி தெரிவித்தாள். 
அஸ்வின் பதறி அவளுக்கு முன்பே வந்திருக்க, அகிலிடம் விடைபெற்று அண்ணனோடு உள்ளே சென்றாள். 
தர்ஷினிக்கு மட்டும் விஜயின் மீது சிறு சந்தேகம், ஆனால் ஆரா இடைப்பட்ட அத்தனை பேரிடமும் தானே அலைபேசியில் பேசியபடி கவனக்குறைவாக தவறி விழுந்தாக தெரிவித்திருந்தாள். அதே போல் அதிக கேள்விகள் கேட்கவும் அனுமதிக்கவில்லை. 
ஆரா வராது இரண்டு நாட்கள் பொறுத்துப் பார்த்த தர்ஷினி. “என்னடா செய்த அவளை?” எனச் சட்டையைப் பிடிக்காத குறையாக விஜயின் முன் நின்று கேட்டாள். 
அவனிடம் பதில் இல்லை. “அன்னைக்கு நீ தானே அவளைத் தேடி வந்த, நீ தான் அவள் விழுந்துட்டதாவும் சொன்ன, என்ன பிரச்சனை விஜய் உங்களுக்குள்ள..?” என, தன்மையாகக் கேட்க, “அதை விடு, இப்போ அவ எப்படி இருக்கா?” எனப் பதில் கேள்வி தான் கேட்டான். 
“க்கூம், என்னை கேட்டா? எனக்கு என்ன தெரியும்? ஒன்னு சொல்லுறேன் விஜய், ஆரா ரொம்ப நல்ல பொண்ணு, இல்லைன்னு மறக்க முடியாது. என்னதான் விளையாட்டுத்தனமா ஜாலியா இருந்தாலும் ரொம்பவும் பொறுப்பான, பக்குவமான பொண்ணு தான். எனக்கே அட்வைஸ் சொல்லுவா! நீ அவளை அக்செப்ட் பண்ணாட்டாலும் பரவாயில்லை, ஹார்ட் பண்ணிடாத..” என்றவள் நில்லாது சென்றுவிட்டாள். 
ஏற்கனவே அவன் மனதிலிருந்த குற்றவுணர்ச்சியை மேலும் அதிகப் படுத்தியிருந்தாள் தர்ஷினி. தொடர்ந்து அதன் பின்னான நாட்களிலும் அவள் அலுவலகம் வராமலிருக்க, அவளுக்கு என்னவோ என்ற பயம் அதிகமாகியது. 
இரவு ஸ்ரீயை காரணியாக வைத்து அவளோடு பேசிவிடலாம் என நினைத்தவன் அவள் அலைபேசிக்கு முயல, அழைப்புகள் ஏற்கப்படவில்லை. அப்போது தான் ஸ்ரீ தன்னோடு இல்லை என்பதையும் கவனித்தான். 
முன்பு போல் ஸ்ரீநிதி அதிக நேரம் அவனோடு விளையாடுவதில்லை. இரவிலும் அவன் அறையில் உறங்குவதில்லை, அவன் தான் அவளைக் கவனிக்காது தன் கவலை,  சிந்தனையிலே அமிழ்ந்துவிட, அவளோ கௌஷியோடு ஒட்டிக்கொண்டாள். அவளோடு விளையாண்டால் மனம் சற்று இலகுவாகும் என அவளைத் தேடினான். 
அறையிலிருந்து ஹாலில் வந்து அமர, பவானி உறங்கியிருக்க, கௌஷியும் ஸ்ரீயும் ஸ்கூல் ஏதோ தெர்மோகோலை வெட்டுவதும் ஒட்டுவதுமாகக் கிறுக்கிக் கொண்டிருந்தனர். 
மாலை கௌஷி வேலை முடியவும் தோழியைப் பார்க்கச் சென்று வந்ததால் இரவில் அமர்ந்து ஸ்ரீயின் வீட்டுப் பாடங்களை கவனித்துக் கொண்டிருந்தாள். ரவி தாமதமாக அப்போது தான் வந்தான். 
“என்னது ஸ்ரீம்மா இது..?” என்றபடி அவள் அருகில் அமர, “கிரீன் ஹவுஸ் சித்தா, ஸ்கூல் ப்ராஜெட்…மம்மி சூப்பரா செய்திருக்காங்களே..” என ராகமிழுத்தாள். 
அதை ஒரு நொடி பாராட்டுதலாகப் பார்த்தவன், “என்ன அண்ணி இது? நான் செய்து கொடுத்தாலே என்னை திட்டுவ, இன்னைக்கு நீயே செய்து கொடுக்குற..என்னவோ சரியில்லையே..?” என்றான். 
“ஒன்னுமில்லை, பொழுது போகலை அதான்..” என தன் வேலைகளிலே கவனமாக இருந்தவள் நிமிர்ந்தும் பார்க்கவில்லை. 
இதென்னடா புதுசா இருக்கு! வியந்தவன், “டைம் பத்தலையேன்னு சொல்லுகிற, உனக்கா பொழுது போகலை..!” என்றான் குரலில் வியப்பைக் காட்டி. 
நீ கொஞ்சம் அமைதியாக இரு, என்பது போல் கௌஷி சைகையில் காட்ட, உடைமாற்றி அறையிலிருந்து வந்த ரவி உணவு மேசையில் அமர்ந்தான். 
சில நிமிடங்கள் அவன் அமர்ந்திருக்க, ஸ்ரீ ப்ராஜெக்ட்டை தூக்கிக்கொண்டு தந்தையிடம் காட்ட ஓடினாள். ஸ்ரீநிதியை பாராட்டியபடி ரவியாக உணவினை எடுத்து வைத்து உண்ணத் தொடங்க, அவன் பக்கம் திரும்ப கூட இல்லாது, ஸ்ரீயின் பொருட்களை ஒதுங்கு வைத்துக் கொண்டிருந்தாள் கௌஷி. 
கௌஷிகா ஒருபோதும் இவ்வாறு நடந்து கொண்டதில்லை. ரவி தாமதமாக வந்தால், நான்கு மணிக்குக் குடித்த டீயைத் தவிர எதுவும் உட்கொண்டிருக்க மாட்டான் என உணவை சூடுபடுத்திக் கொடுப்பாள், பார்த்து பார்த்துக் கவனிப்பாள். 
அனைத்தையும் பார்த்திருந்த விஜய்க்கு என்னவோ சரியில்லை எனத் தோன்ற, “என்ன அண்ணி, உங்களுக்குள்ள எதுவும் பிரச்சனையா..?” எனக் கேட்டான் மெல்லிய குரலில்.
“இல்லையே..”
“அப்பறம் என் நீ அண்ணனை கவனிக்கலை..?” 
“ஏன் உங்க அண்ணனுக்கு கை இல்லையா? ரொம்ப அக்கறை இருக்குனா நீ போய் கவனி…?” என்றாள் பட்டென. 
“ரைட்டு..விடு..” என்றவன் வாயை மூடிக் கொண்டான். அவள் ஏதோ கோபத்தில் இருக்கிறாள் என்பது வரை புரிந்தது ஆனால் எதனால் என்று தான் தெரியவில்லை. 
ரவி பொறுப்பானவன், கௌஷி பொறுமையானவள் இருவருக்குள்ளும் பிரச்சனைகளுக்கான வாய்ப்புகளே குறைவே என்ற யோசனையில் இருந்தான். 
அகில், தர்ஷினி போன்றில்லாது பக்குவமான, அன்னியோனியமான தம்பதிகள் தான் இடையில் ஆள் வரவேண்டிய அவசியமில்லை. அடித்துப் பிடித்து அவர்களே சமாதானமாகிக் கொள்ளட்டும் என நினைத்தவன் கௌஷியின் முறைப்பைக் கண்டுகொள்ளாது ஸ்ரீயை தன்னோடு அழைத்துச் சென்றுவிட்டான். 
“லூசுப் பையன் ரொம்ப தான் அக்கறை, அந்த அளவு அக்கறை இங்க இல்லையே…” எனப் புலம்பியபடி, உணவு மேசையைச் சுத்தப்படுத்திவிட்டு சமையலறையும் சுத்தப் படுத்தத் தொடங்கினாள் கௌஷி. 
“அப்படியெல்லாம் இல்லை கௌஷி.. நீ புரியாம பேசாத, நான் விஜய் நல்லதுக்குத் தான் செய்வேன்..” 
“ஐயையோ நான் இப்போ என்ன தப்பா சொல்லிடேன்? உங்க தங்கச்சி, உங்க தம்பி நீங்க அவங்களுக்கு நல்லது தானே செய்வீங்க..!” என நக்கலாக் கேட்டுவிட்டுச் சென்றாள். 
“அப்படியே இருந்தாலும் எனக்கென்ன கேள்வி கேட்க உரிமை இருக்கு? அம்மா இல்லை, போக புகல் இல்லைன்னு தானே என்னை கட்டிக்கிட்டாரு, பின்ன நான் கேட்கலாமா..?” எனப் புலம்பலோடு சமையலறைக்குள் கண்ணைக் கசக்கிக் கொண்டு நின்றாள். 
வாசலில் நின்று பார்த்த ரவிக்கு நெஞ்சில் அடித்தது போன்று வலித்து. சமாதானம் செய்யப் போனால் சண்டையிடுவாள், அதற்கான தெம்பு இருவருக்குமில்லை என்பதால் அமைதியாக விலகிச் சென்றான். 
அவன் செல்லவே, திரும்பி வெற்றிடத்தைப் பார்த்தவள் கண்ணீரோடு தரையில் அமர்ந்தாள். 
சுபத்ராவிடம் வேண்டாமென்று சொல்லிவிட்டுச் சென்ற ரவியின் முன் வந்து நின்ற கௌஷிகா, “ஏன் அண்ணி சொன்ன சம்பந்தம் வேண்டாம்னு சொன்னீங்க..?” எனக் கேட்டாள். 
“அதான் வெளியவே சொன்னேனே, பெரிய வீட்டுப்பொண்ணு வேண்டாம், நம்ம குடும்பத்துக்கு செட்டாக மாட்டான்னு..” 
“அதான் ஏன்..?”
“ம்ச், கௌஷி நாளைக்கு அந்த பொண்ணு இங்க வந்த பின்ன விஜயை மதிக்காமா நடந்துக்கிட்டா, நம்ம சொல் பேச்சுக் கேட்காம நடந்துக்கிட்டா என்ன செய்ய முடியும்? குடும்ப நிம்மதியே கேட்டுப் போயிடும்” 
“அதுக்கு, நம்மை விட குறைச்ச இடத்துல பொண்ணு எடுக்கணும், அப்போ தான் அந்த பொண்ணு பேச மாட்டாள். விஜய் உங்களை விட அதிகம் சம்பாதிக்கிறான் தனியாப் போயிடக் கூடாது, அப்படியே இங்க இருந்தாலும் அவள் குரல் ஓங்கிடக் கூடாது ஊமையாவே இருந்திடணும். விஜய் உங்க கைக்குள்ளே இருக்கணும், இதானே உங்க திட்டம்?” 
“கௌஷிகா..” அதட்டலாகக் கேட்டது, ரவியின் கோபக் குரல். 
அவனுக்கு சுபத்ராவின் மீது போட்டியோ? பொறாமையோ? தெளிவாகத் தெரியாத போதும் விஜயின் மீது இருந்தது தெளித்த நீர் போன்ற தூய தந்தை அன்பு மட்டுமே! விஜயின் சிறு சிறு வெற்றிகளிலும் பெருமை கொண்டு மகிழ்வான். எத்தனை உயரம் சென்றாலும் ஏற்றி விட்டவன் நான் தான் எனக் கர்வம் கொள்வானே தவிர, பொறாமை சிறிதும் தோன்றியதில்லை. 
தன் கண்முன்னே, தன் கைகளுக்குள் வளர்ந்தவன் ஆகையால் மூத்த பிள்ளை போன்றே பார்ப்பான். அவன் நலம்நாடும் அன்பை அவள் குறைவாகச் சொல்லியதை அவனால் ஏற்க முடியவில்லை. 
“கத்தாதீங்க, உண்மைய தானே சொன்னேன்..”
“எது உண்மை? இது ஏற்கனவே நாங்க பேசி வைத்தது தான், விஜய்க்கு பார்க்குற பொண்ணு உன்னை மாதிரி தான் இருக்கணும். கஷ்டம் நஷ்டம் தெரிந்த நம்ம குடும்பத்துக்கு ஏத்த பொண்ணா இருக்கணும்னு அம்மா சொன்னாங்க. எனக்கும் அது தான் சரின்னு தோனுச்சு, இந்த வீட்டுக்கு வர பொண்ணு உனக்குச் சமமா இருக்கணும் அப்போ தான் உங்களுக்குள்ள ஒற்றுமை இருக்கும். 
விஜயும் அப்போவே சரின்னு சொல்லிட்டான். அதனால தான் சுபத்ராகிட்டையும், இந்த வீட்டுக்கு மருமகளா வர பொண்ணு கண்டிப்பா இந்த குடும்ப சூழ்நிலைக்குப் பொருந்திப் போற மாதிரி இருக்கணும். எங்க தகுதிக்கு இணையா பார்க்க முடிச்சா பாரு, இல்லை தள்ளியே நில்லுன்னு சொன்னேன்” 
“திரும்ப திரும்ப இந்த வார்த்தைகளைச் சொல்லி என்னை காயப்படுத்துறீங்க ரவி..” என்றவளின் விழி இரண்டிலும் கண்ணீர் நிறைந்திருந்த இருந்த போதும் குரலில் ஆதங்கம். 
“ஏய்..கௌஷி உன்னை என்ன தப்பா சொன்னேன்? லூசா நீ..?” என்றவன் அருகே வர, பின்னே நகர்ந்தவள், “ஆமாம், நான் லூசு தான், நீங்க ரொம்ப தெளிவா இருந்திருக்கீங்க அதைக் கூட புரிஞ்சிக்காம போயிட்டேனே..!” என்றாள். ரவிக்கு அப்போதும் புரியவில்லை. 
“உங்க தம்பிக்கு இவ்வளவு யோசிக்கிற நீங்க என்னைத் தேர்வு செய்யும் போது என்ன நினைச்சிங்க? அம்மா இல்லாத பொண்ணு, அப்பாவும் ஃபாரின் போயிடுவாரு… என்ன நடந்தாலும் அவளுக்குப் போக புகலிடம் இல்லை, எப்பவும் அடங்கி அமைதியாவே இருந்திடுவான்னு தானே என்னைத் தேர்வு செய்தீங்க…?” என்றவள் அவன் சட்டையைப் பற்றி உலுக்கிக் கொண்டிருந்தாள். 
ரவி அதிர்ந்து சிலையாக நின்றான். அவன் அமைதியை அவ்வாறு தான் என அவளே அர்த்தப்படுத்திக் கொண்டு விலகினாள். 
சுபத்ராவை குத்திக்காட்ட சொல்லிய வார்த்தைகள் திசை மாறி கௌஷிகாவைப் பாதிக்குமென அவன் எதிர்பார்க்கவில்லை. 
இயற்கையின் விதியில் எவ்விசைக்கும் ஓர் எதிர்விசை உண்டு! 

Advertisement