Advertisement

“ஷ்..தெரியாத மாதிரி நடிக்கணும் புரியுதா..?” 
“எதுக்கு..?”
“ம்ம், நான் உன் ஆக்டிங் ஸ்கில் எப்படின்னு செக் பண்ணப் போறேன்”
“ஹே..! ஆக்டிங்ல ஹையஸ்ட் அவார்ட் என்ன ஆரா?” 
“ம்ம்..ஆஸ்கர்..”
“அப்போ எனக்கு நீ அது வங்கித் தரணும்..” என்க, இரு கட்டை விரல்களையும் உயர்த்தி சம்மதம் தெரிவித்தவள், பவானி வருவதைக் கவனித்ததும் வேகமாக எழுந்து சோஃபாவில் அமர்ந்தாள். 
“பாட்டி யார் இந்த ஆன்ட்டி?” என ஆராவை அறியாதது போலே ஸ்ரீ பவானியிடம் கேட்க, அடிப்பாவி ஆக்ட் பண்ண சொன்னதுக்கு என்னை ஆன்ட்டின்னு சொல்லி மானத்தை வாங்குறாளே! உள்ளுக்குள் நொந்தாள் ஆராதனா. 
“இது பாட்டி நியூ ஃப்ரண்ட்டு, கோவில்ல ஃப்ரண்ட்ஸானோம்” என்க, “ஹாய் ஆன்ட்டி..” என கை அசைத்தபடி அவள் அருகில் வந்து அமர, “ஹேய்..பேபி.. சோ க்யூட்..” என அவளும் தொடங்கினாள். 
இருவரும் சில நொடி பேசிக்கொள்ள, மின்னல் வேகத்தில் கிளம்பும் எண்ணத்திலிருந்தவள் பவானியின் புறம் திரும்பினாள். 
“உங்க உதவிக்கு நன்றி! இப்போ கால் வலி இல்லை. நான் கிளம்புறேன் ஆன்ட்டி..” என அவசரமாக எழுந்தவள் திரும்ப, “கொஞ்சம் இரும்மா…” என அவளை நிறுத்தியது கௌஷியின் குரல். 
வேலை முடிச்சதும் வந்த பாதையை மறக்காமா வீடு போய் சேரதை விட்டு இப்படி பில்டர் காபிக்கு சப்புக்கொட்டி உக்காத்து மாட்டிகிட்டேயே ஆரா..! மனதில் பட்சி படபடக்க, அதிர்ந்து நின்றாள். 
அருகில் வந்திருந்த கௌஷி, “இப்படி உக்கார்…” என்றதும் பொம்மை போலே மீண்டும் அதே இடத்தில் அமர்ந்தாள். 
கௌஷியோ மௌனமாக தன் கையோடு கொண்டு வந்திருந்த மருந்துப் பெட்டியைக் கீழே வந்தாள். பின் ஆராவின் நெற்றி காயத்தை ஆராய்ந்து சுத்தப்படுத்திச் சிறு கட்டும் போட்டு விட, அந்த பத்து நிமிடத்திற்குள் ஆராவின் இதயம் விண்வெளிக்கே சென்று வந்திருந்தது. 
கௌஷி முடித்ததும் சட்டென எழுந்த ஆரா, “ரொம்ப தேங்க்ஸ் அக்கா..” என அவள் கரம் பற்றி உரைத்தவள் விடை பெற்றுச் சென்றாள். 
அவள் செல்ல, “ரொம்ப நல்லாப் பொண்ணா தெரியுறா, பார்க்கவும் லட்சணமா, நிறைச்ச அழகோட இருக்க..” என்ற பவானி, “அச்சே! இவ்வளவு பேசிட்டு அந்த பொண்ணு பெயர் என்னன்னு கூட கேட்கலையே..” என வருந்தினார் பவானி. 
“ஆரா..” சட்டென, ஸ்ரீ உரைக்க, கௌஷி அவள் புறம் திரும்பினாள். 
“நீ வா.. வந்து குளிச்சிட்டு ட்ரெஸ் மாத்து..” என ஸ்ரீயை அழைத்துக் கொண்டு கௌஷி அவள் அறை செல்ல, பவானியும் அவர்களுக்கான சிற்றுண்டி எடுத்து வரச் சமையலறைக்குள் சென்றார். 
மகளை குளிப்பாட்டி உடைமாற்றும் இடைவெளியில் ஆராவை பற்றி விசாரித்துவிட்டாள். 
“என் பட்டுக்குட்டி, அந்த ஆன்ட்டிய உனக்கு முன்னாடியே தெரியுமா?” 
தன் செல்லும் வரை தன்னை தெரியாது போல் நடிக்கக் கேட்ட ஆராவின் நிபந்தனையை நினைத்துப் பார்த்தவள் அது கலாவதியாகிவிட்டதை உணர்த்து “அது ஆன்ட்டி இல்லைம்மா, ஆரா..என் ஃப்ரண்ட்..” என்றாள். 
“உன் ஃப்ரண்டா..! எப்படி? எப்போ இருந்து?” என்ற கௌஷியின் சந்தேகம் அவள் பதில் சொல்லும் முன் உறுதி செய்துவிட்டாள். 
“சித்தாவோட எனிமில டெய்லி போன்ல சண்டை போடுவாள, அப்போ எனக்கு ஃப்ரண்டாகிட்டாங்க..”’ என்றாள் மழலை தொகுத்த வாக்கியமாக. 
கௌஷிகாவோ விடாது மேலும் சில கேள்விகளைக் கேட்க, அவர்கள் பேசியதிலிருந்து சந்தித்தது வரை தன் அறிந்ததை குதழை மொழியில் மழலை உரைத்தாள். கௌஷிகாவிற்கு அவர்கள் உறவில் சந்தேகம் இருந்த போதும், விஜயின் மீது நம்பிக்கை இருந்தது, ஒருவேளை நண்பர்களாக இருக்கலாம் என அனுமானித்து அமைதியானாள். 
இரண்டு நாட்கள் நண்பர்களோடு உல்லாசமாக கழித்துவிட்டு, அசதியோடு ஞாயிறு மாலை வீடு வந்தான் விஜயரூபன். தன் பயணம், நண்பனின் திருமணம் பற்றி வீட்டினரோடு பகிர்ந்து கொண்டவன், இரவு உணவிற்கு பின் தன் அறைக்குள் சென்றான். 
மாலையில் விளையாடிவிட்டு அசதியில் உறங்கியிருந்த ஸ்ரீநிதி அப்போது தான் எழுந்திருந்தாள். விஜய் வந்துவிட்டதை அறிந்து அவனை ஒரு வழியாக்கிவிட்டு தனக்கு என்ன வாங்கி வந்தாய் என அவன் உடைமைகளைக் களைத்துப் போட்டுக் கொண்டிருந்தாள். 
விஜயோ வாங்கிவந்திருந்த சாக்லேட் பாக்ஸை மறைந்து வைத்துவிட்டு அவளிடம் விளையாட்டு காட்டிக்கொண்டிருக்க, உள்ளே வந்தாள் கௌஷிகா. 
“ஸ்ரீ, தூக்கலாம் வா..” என அழைக்க, அவளோ காதிலே வாங்கவில்லை. 
“உன் சித்தப்பா என்ன புதையலும் பொக்கிஷமுமா கொண்டு வந்திருக்கான்? எல்லாம் அழுக்குத் துணி தான்டி..” 
அவள் அப்பொழுதும் கண்டுகொள்ளாமல் துணிகளை கிளறிக் கொண்டிருக்க, கௌஷி சென்று தூக்க, வரமாட்டேன் என அடம்பிடித்தாள். 
“அவள் தான் வரலைன்னு சொல்லுறாலே விடு அண்ணி..”
“அவளை விட்டா விடியிற வரைக்கும் விளையாண்டுக்கிட்டு தான் இருப்பாள், நீ டயர்டா இருக்க அப்பறம் எப்போ தூங்கவ..?”
“இட்ஸ் ஓகே, விளையாண்டுட்டு தூங்கிக்கிறோம், விடு..”
“அடேய் உனக்கு விளையாடப் பிள்ளை வேணும்னா சீக்கிரம் கல்யாணம் முடிச்சிட்டு பிள்ளை பெத்துக்கோ..” என கேலியுரைத்தவள் நில்லாது குழந்தை தூக்கிச் செல்ல, இடையில் வந்தவன் சாக்லேட்ஸ்ஸை கொடுக்க, சிரிப்போடு வாங்கிச் சென்றாள் ஸ்ரீநிதி. 
இரண்டு நாட்களுக்குப் பின் ஆராவின் நினைவு அப்போது தான் வர, சிறு சிரிப்புடன் நித்திரைக்குச் சென்றான். 
ரவி வெகு நேரமாக கௌஷிகாவின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்க, அவளோ குழந்தையோடு வர அவனுக்கு ஏமாற்றம்! அதிலும் அவள் ரவியின் முகத்தை ஏற்றெடுத்தும் பார்க்காது, மகளுக்கு ஏதோ நீதிக்கதை ஒன்றை சொல்லிக் கொண்டிருந்தாள். 
அவனோ ஸ்ரீ உறங்க காத்திருக்க, தட்டிக்கொடுத்துக் கதை சொல்லிக்கொண்டிருந்த கௌஷி தான் முதலில் உறங்கியிருந்தாள். அவள் முகத்தை ஏக்கமாய் பார்த்திருக்க, இத்தனை வருடங்கிலில் இல்லாத புதிதான அவளின் நிராகரிப்பு அவனுக்கொரு வலியைக் கொடுத்தது. 
கௌஷிகா உறங்கிவிடவே அவளைத் தொந்தரவு செய்யாது, ஸ்ரீயை தன் புறம் திருப்பிக் கொண்டான். தன் அலைபேசியை ஸ்ரீயிடம் கொடுத்துவிட்டு, உறங்கும் வரை அவள் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டே இருந்தான்.
ஸ்ரீயும் உறங்கிவிட அவனை மட்டும் நித்திராதேவி திந்தித்துக் கொண்டிருந்தாள். 
இச்சமூகம் ஒரு ஆணுக்கு எத்தனை விதமான அழுத்தத்தைத் தருகிறது. வளரும் போதே திறமையும் வீரமும் கொண்டவனாக காட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயம், இருபத்தியொன்றில் ஒரு அரியர் இல்லாதா பட்டப்படிப்பு, இருபத்தி ஐந்திற்குள் வேலை, முப்பதிற்குள், முன் தலை வழுக்கை விழும் முன் திருமணம், அதற்கு முன்னே சேர்த்து வந்திருக்க வேண்டிய சொந்தவீடும் ஒரு நிரந்தர வேலையும், அதற்குப் பின்னும் சந்ததிகளுக்கான ஓயாத உழைப்பு. 
வாழ்வின் எட்டு கட்டத்திற்கும் எட்டாத இலக்கும், அதை நோக்கிய அழுத்தமும். அதுவும் தந்தை இல்லாத தலைமகனாக இருந்து விட்டால் காத்திருக்கும் கடமைகளுக்கு எல்லையே இல்லை! உழைக்கும் இயந்திரமாகிய உடல், இளமையிலே வந்துவிட்ட முதிர்ச்சி!  
கௌஷிகா மட்டும் அவன் வாழ்வில் வரவில்லை எனில் கல்லையும் மண்ணையும் போல் உணர்ச்சிகள் மரத்து குடும்ப உறவையும் கடமையாகப் பார்த்திருப்பான், அவனுக்கு உணர்வூட்டியவள் கௌஷி. அவனை மட்டுமல்லாது அவன் அன்னை தம்பியையும் ஏற்றுக்கொண்டவள், இம்மணல் வீட்டை உதிராது கட்டி வைத்திருக்கும் ஈரப்பதம் அவள்! 
ரவிக்கு மாதச் சம்பளம் சிறுக சிறுக குருவி சேமிக்கும் சிறு சேமிப்பு. தனியார் பள்ளியில் குறைவான சம்பளம் என்ற போதும் அவன் பாரத்தில் துளி குறையும், பிள்ளைக்கான கல்விச் செலவில் பாதி குறையுமென செல்கிறாள். 
மறுநாள் திங்களன்று காலையில் வீட்டில் அனைவருமே பரபரப்பாகக் கிளம்பிக் கொண்டிருக்க, விஜய்க்கு தன் அறையில் அனைத்தும் வித்தியாசமாகத் தெரிந்ததது. என்ன தான் குப்பையாக இருந்தாலும் எந்த குப்பை எங்கிருந்தது என அவனுக்கு நன்கு நினைவில் உண்டு. 
கிளம்பி வந்தவன் உணவு மேசையில் உட்கார, எப்போதும் போலே கிளம்பியிருந்த கௌஷி, அப்போது தான் எழுந்திருந்த மகளோடு போராடிக் கொண்டிருந்தாள். 
ரவி எதையும் கண்டுகொள்ளாது வேலைக்குச் சென்றுவிட, “அம்மா கிளம்பி விடுவாங்க, நான் பாப்பாவை ஸ்கூல்ல கொண்டு வந்துவிட்டுறேன். ஸ்கூல் பஸ் வந்துடுச்சி நீ கிளம்பு அண்ணி..” என்ற விஜய் அவளை அனுப்பி வைத்தான். 
உண்ணும் போது, “அம்மா நான் இல்லாத போது வீட்டுக்கு யாரும் வந்தாங்களா?” என்க, “இல்லையே..” என்ற பவானி, பின் நினைவு வந்தவராக ஆராவின் வருகை பற்றி உரைத்தார். அதுவும் நல்ல பெண் என்பது மாதிரியான புகழுரையாகவே இருந்தது. 
பவானி பெயர் சொல்லாததில் அது ஆராவாக இருக்குமோ என்ற சந்தேகத்திலிருந்தவன், ஸ்ரீ அழைத்து சென்று பள்ளியில் விடும் இடைவெளியில் அவளிடம் கேட்டறிந்து முடிவே செய்து விட்டான். 
ஸ்ரீயை இறக்கி விட்ட நொடி, விஜயின் பைக் அதீத வேகத்தில் அலுவலகம் நோக்கிப் பறந்தது. 

Advertisement