Advertisement

அத்தியாயம் 14
தெரு முக்கில் இருக்கும் சிறு அம்மன் கோவில். வெள்ளிக்கிழமை மாலை என்பதால் மங்களகரமான இசையாலும் சுகந்தத்தாலும் நிறைந்திருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக மக்கள், அதில் பெரும்பாலும் நடுத்தர வயது பெண்கள் தான் நெய் விளக்கேற்றுவது அம்மனுக்கு மாலை சாற்றுவது என வேண்டுதலில் இருந்தனர். 
நீல நிற சில்க் காட்டன் புடவையில், காதோர தலை முடிகளைக் கோர்த்து கிளிப் மாட்டி, நடுவில் கொஞ்சம் மல்லிகைப் பூவும் கையில் அர்ச்சனை கூடையோடு அக்கோவிலுக்குள் வந்தாள் ஆராதனா.  
மனமுருக அம்மன் சன்னதியில் வேண்டியவள், நெற்றியில் துளி குங்குமத்தை இட்டுக்கொண்டு ஒரு ஓரம் அமர்ந்தாள். சில நிமிடங்கள் என்றாலும் அவளுக்குப் பொறுமை என்பதே கிடையாது நொடிக்கும் ஒரு தரம் கோவிலின் வாசலையும் அவள் அலைபேசியையும் மாறி மாறிப் பார்த்திருந்தாள். 
சில நிமிடங்களில் பொறுமையும் பறந்துவிட, ஏமாற்றமுடன் எழுந்தவள் கோவிலை விட்டு வெளியே வந்தாள். கோவிலின் வாசலைக் கடந்து சில அடிகளே நகர்ந்திருக்க, அவள் எதிரே வந்த பெரியவரின் பின்னே பைக்கொன்று உரசுவது போல் வேகமாக வர, வேகமாக அவரை தன்னை நோக்கி இழுத்தவள் கல்லொன்றில் கால் தட்டி நிலையில்லாது தடுமாறி விழுந்தாள். 
அவள் எழுகையிலே அவளைச் சுற்றி ஒரு கூட்டமே நின்றிருக்க, தன் எதிரே இருந்த பவானியை கண்டுகொண்டவள், “ஷ்..ஷா..அம்மா..” என வலியோடு முனங்கினாள். 
முழங்கால்களில் வலியை உணர்வது போல் கால்களைப் பற்றியவள், நிற்க இயலாது தடுமாற, அருகிலிருந்த பவானி சட்டென அவளைத் தாங்கிக் கொண்டார். 
“என்னை காப்பாற்ற வரேன்னு நீ கீழ விழுந்துட்டீயேம்மா, கால் சுளுக்கி இருக்கா? வேற எங்கையும் அடி பட்டிருக்கா? ஐயோ நெத்தியில இரத்தம் வருதே! வாம்மா ஹாஸ்பிட்டல் போலாம்” என பவானி அழைத்தார். 
எது நெத்தியில இரத்தமா? வலிக்காமலா இரத்தம் வருது? என நினைத்து தொட்டுப் பார்த்தவள் கையில் ஈரத்தை உணர்த்ததும் ஐயோ.. எனப் பதறினாள். 
பவானி வேறு அவளை தாங்கி நிற்க, “இல்லை, ஐம் ஆல்ரைட், பைன் ஆன்ட்டி. ஹாஸ்பிட்டல் எல்லாம் வேண்டாம்” என வலியோடு மறுத்தாள் ஆரா. 
சுற்றி நின்றவர்கள் சற்றே விலகிச் செல்ல, “வீடு எங்கம்மா பக்கமா? நான் வேணா வீடு வரைக்கும் கூட வரட்டுமா?” எனப் பரிவோடு கேட்டார். 
“இல்லை ஆன்ட்டி தூரம் தான். இந்த கோவில்ல நெய் விளக்கு வைத்து வேண்டிக்கிட்டா வேண்டுதல் நிறைவேறிடும்னு சொன்னாங்க அதான் வந்தேன்” 
“அச்சோ! இப்போ எப்படிம்மா வீட்டுக்குப் போவ?” 
“கொஞ்சம் நேரம் கோவில்ல உக்காந்துட்டு, ஆட்டோ பிடித்து போயிடுவேன் ஆன்ட்டி” என்றவள் கோவில் நோக்கி திரும்ப, “பக்கம் தான் என் வீடு, கொஞ்ச நேரம் வந்து ரெஸ்ட் எடுத்துட்டு போலாம். வாம்மா..” என அழைக்க, உற்சாகமாக தலையசைத்தவள் அவரோடு உரையாடியபடியே சென்றாள். 
பவானியைத் தவிர வீட்டில் யாருமில்லை. விஜய் நண்பனின் திருமணத்திற்குச் சென்றிருக்க, கௌஷி, ஸ்ரீயும் பள்ளிக்குச் சென்றிருந்தனர். 
முதல்முறை வீட்டிற்குள் வந்தவள் அதனை அழகோடு ரசித்திருந்தாள். ஹாலில் அமர வைத்த பவானி, கையில் எண்ணெய்யோடு வந்தார். 
“ஐயோ.. என்ன ஆன்ட்டி செய்யுறீங்க..?” பதறியவள் கால்களை ஒரு அடி பின்னுக்கு இழுத்துக்கொள்ள, “இரத்தக்காயமில்லை, எலும்பு முறிவா இருக்கவும் வாய்ப்பில்லை. சுளுக்கா தான் இருக்கும் எண்ணெய் தடவி அழுத்தி தேய்த்தால் சரியாப் போகிடும். என் பிள்ளைகளுக்கு எல்லாம் செய்திருகேன்மா” என அருகே அமர்ந்தார் பவானி. 
“நோ..அதெல்லாம் வேண்டாம். எனக்கு இப்போ வலியே இல்லை சரியாப் போகிடுச்சு ஆன்ட்டி. குடிக்க மட்டும் ஏதாவது கொடுத்தா போதும்” என்றவள் மறுக்க, அவரோ இன்னும் அவளை பரிதபமாகத் தான் பார்த்தார். 
“என்ன ஆன்ட்டி பார்க்குறீங்க? ஹோ… கீழ விழுந்ததுல தலையில எதுவும் அடிப்பட்டு மூளை கலங்கிடுச்சுன்னா? கவலைப் படாதீங்க நான் நார்மலாவே அப்படி தான்” என்றவள் சிரிக்க, அவள் தலை தடவியவர் எழுந்து சமையலறை நோக்கிச் சென்றார். 
‘அப்பாடா..!’ என நெஞ்சில் கை வைத்தவள் நிம்மதி பெருமூச்சை விட்டுக்கொள்ள, வந்த வேலையைக் கவனி ஆரா.. தலைக்குள் தட்டிய மூளை அவளை முடுக்கியது. 
எழுந்து சத்தமின்றி பூனை நடையில் பம்பி நகர்ந்தவள் அங்கிருந்த மூன்று அறைகளையும் ஆராய்ந்து விஜயின் அறையைக் கண்டுகொண்டாள். 
யார் கிட்ட கதை விடுற? இன்னைக்கு யார் அந்த அருக்காணின்னு கண்டுபிடிக்கலை நான் ஆராதனா இல்லை என நினைத்தவள் இருபுஜங்களையும் தட்டிக்கொண்டு உள்ளே சென்றாள். 
அறை முழுவதையும் பார்வையால் ஒரு முறை அலச, அதற்குள், “அம்மாடி காஃபியா? இல்லை டீ போடவா?” என சமையலறையிலிருந்து குரல் கொடுத்தார் பவானி. 
ஆளில்லாத அந்த நிசப்தமான சிறுவீட்டில் பவானியின் குரல் துல்லியமாக எதிரொலிக்க, பதறியவள், “ஆன்ட்டி..டீ..” என பதிலுக்குக் கத்தினாள்.  
அவன் படுக்கைக்கு எதிரே சுவரில் குடும்ப புகைப்படம் மட்டுமே இருக்க, மெத்தையைத் திருப்பி, படுக்கையை உதறியும் பார்த்தாள். அவள் தேடல் ஏமாற்றம், கதவிடுக்கில் சமையலறையும் எட்டிப் பார்த்தவள், “ஆன்ட்டி டீ வேண்டாம், கொஞ்சம் காம்ப்ளான் கலக்கிக் கொண்டு வாங்க ப்ளீஸ்” என்றாள். 
“என்ன..? காம்ப்ளானா..?” அதிர்ச்சியில் பவானியின் குரல் எதிரொலிக்க, “ஹான், நான் இன்னும் வளர வேண்டிய பிள்ளை தான்! நீங்க கொஞ்சம் பொறுமையா கலக்கி, சூடா கொண்டு வாங்க ஆன்ட்டி..ப்ளீஸ்..!” என தன் தேடலைத் தொடர்ந்தபடியே உளறினாள். 
என்ன காரியம் செய்யுற நீ மனசாட்சி வேறு கேள்வி கேட்க, என் வாழ்க்கையை தேடுறேன்! நீ கொஞ்சம் அமைதியா இரு என அடக்கிவிட்டு தன் தேடலைத் தொடர்ந்தாள். இருந்தும் இதயம் படபடவென அடித்துக்கொள்ள, உடல் அசாத்தியமாய் வியர்த்து அருவியாய் வழிந்தது. 
அந்த சின்ன அறையில் பெரும்பகுதி ஸ்ரீயின் உடைமைகளும் அவள் விளையாட்டுப் பொருட்களும் தான் நிறைந்து கிடந்தது. அசராது அவன் கபோர்டில் தேடியவள் மீண்டும் சமையலறையை எட்டிப் பார்த்து, “ஐயோ..ஆன்ட்டி இன்னைக்கு வெள்ளிக்கிழமைங்கிறதே மறந்துட்டேன். இன்னைக்கு காம்ப்ளான் குடிக்கக் கூடாது நீங்க சூடா ஒரு பில்டர் காஃபி போட்டு நுரை பொங்க ஆத்திக் சீக்கிரம் கொண்டு வாங்களேன் ப்ளீஸ்..” என மணிக்கொரு முறை கூவும் கடிகாரக் குருவி போலே அடுத்த ஐந்தாம் நிமிடம் கூவினாள். 
பவானி இது எதையும் உணராது, அவள் கேட்டதையே விருந்தோம்பலாய் செய்து கொண்டிருந்தார். தன் தேடலில் அசதியுற்ற ஆராவிற்கு விஜயின் கூற்றை நம்பும்படியான எந்த வித ஆதாரங்களும் சிக்கவில்லை. அது மட்டுமின்றி வரும் வழியிலே பவானியிடம் பேச்சுக் கொடுத்து அவர் பிறந்தகம் பற்றி விசாரித்திருக்க, விஜய்க்குத் தாய்மாமா இருக்கிறார்கள் என்றும் அவருக்குப் பெண்பிள்ளை இல்லை என்றும் பவானி உரைக்க, கேட்டிருந்தாள். 
அவன் அறை சுவர் முதல் அவன் அணியும் டீசர்ட் வரை நிறைந்திருக்கும் கார்டூன் ஸ்டிக்கர்களும், லேப்டாப்பில் இருக்கும் வீடியோ கேம்களும் அவனை மகிழ்ச்சியுற வாழும் சிறுவனாக தான் காட்டியது. மகிழ்ச்சியாக வாழும் ஒருவனால் தான் தன்னை சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க இயலும். 
அடப்பாவி! பொய்யா சொன்ன நீ? ச்சே.. இது தெரியாம கடந்த ஒரு வாரமா உன்னைத் தொந்தரவு செய்யாம கொஞ்சம் நல்ல புள்ளையா இருந்துட்டேனே! ஒரு முத்தத்துக்கே மூனு நாள் காய்ச்சல்ல விழுந்தவன் தானே நீ! எனக்கு அப்போவே உன் மேல கொஞ்சம் சந்தேகமிருந்தது, நீ இதுகெல்லாம் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டேன்னு, சரி தான்! 
நீண்ட மூச்சை விட்டுக்கொண்டவள் நெற்றி வியர்வை புறங்கையால் துடைத்தபடி திரும்ப, மேசையிலிருக்கும் விஜயின் போட்டோ பிரேம் ஒன்று கண்ணில் பட்டது. நீல நிறச் சட்டையில் சிரித்த முகமாக இருந்தான். 
தன் உடையை ஒருமுறை பார்த்தவள் ஆசையோடு அருகில் சென்று எடுத்து தன் கன்னத்தோடு புகைப்படத்தை வைத்துக்கொண்டு தன் அலைபேசி முகப்பு கேமராவை கிளிக் செய்தாள். 
இதழ் குவித்து புகைப்படத்தில் இருந்த தூசியை ஊதியவள் அழுத்தமாய் முத்தமொன்றைப் பதித்துவிட்டு ரசனையாகப் பார்த்திருந்தாள். 
“சிரிக்காதேட, உன்னை காதலிச்ச பாவத்துக்கு ஹையோ..! என் நிலைமை வடிவேலை விடவும் பரிதாபமா அதலபாதாளத்துல இறங்கிட்டு இருக்கே! இதுல உனக்கு மட்டும் என்ன சிரிப்பு வேண்டி இருக்கு” என புகைப்படத்தைத் தடவியபடி முணுமுணுக்க, “யாரு..?” எனக் கேட்ட புதிய குரலில் திடுக்கிட்டுத் திரும்பினாள் ஆராதனா. 
அறைவாசலில் நின்றிருந்த கௌஷி, விஜயின் அறையில் தனிமையில் இருக்கும் புதியவளையும் அவள் கையிலிருக்கும் விஜயின் புகைப்படத்தையும் வினோதமாகப் பார்த்தாள். 
அவள் பார்வையை உணர்ந்த ஆராதனா சட்டென போட்டோ பிரேமை மேசையில் வைத்துவிட்டு, “நான்.. ஆன்ட்டி தான் கூட்டிட்டு வந்தாங்க, ஐ..ஜஸ்ட் யூஸ்ட் திஸ் ரெஸ்ட்ரூம்..” என்றாள் படபடப்போடு. 
திடீரென கௌஷியை எதிர்பார்க்கவில்லை அவள் தடுமாற்றத்தை மறைக்க, முயன்றாலும் குரலிலும் உடல் மொழியிலும் வெளி வந்திருந்தது. 
“ம்ம்..” என தலையசைத்த கௌஷி அவளை ஆழமாகப் பார்க்க, அறையிலிருந்து வெளி வந்தாள் ஆராதனா. 
சரியாகப் பவானியும் கையில் காஃபியோடு அறை வாசலில் நிற்கும் இருவரையும் நோக்கி வந்தார். ஆராதனாவிடம் நீட்ட, “தேங்க்ஸ் ஆன்ட்டி..” என வாங்கிக் கொண்டவள் தாங்கி தாங்கி ஹால் நோக்கி நகர்ந்தாள். 
மெல்லிய குரலில் கெளஷி பவானியிடம் விசாரித்து விட்டு அடுத்ததாக இருக்கும் தன்னறைக்குள் சென்றாள். 
ஆரா ஹாலுக்கு வர, பிஸ்கட் கொறித்தபடி டிவி முன் பள்ளிச் சீருடையில் அமர்ந்திருந்தாள் ஸ்ரீநிதி. அவளை கண்டதும் இன்பமாய் அதிர்ந்த ஸ்ரீ, “ஹேய்..ஆரா..” என கூவியபடி அவளை நோக்கி ஓடி வர, பதறியவள் கையிலிருக்கும் காஃபியை மேசையின் மீது வைத்தாள். 
ஹையோ மண்ட மேல இருக்குற கொண்டைய மறந்துட்டோமே! என நினைத்தவள் சமாளிப்போம் என மனதை திடப்படுத்தினாள்.
குழந்தையின் முன் மண்டியிட்டு அமர்ந்தவள், “உஷ்..ஷ்ஷ்..” என உதட்டில் விரல் வைத்து அமைதியாக இருக்கும்படி சைகை காட்டி, சுற்றிலும் ஒரு பார்வை பார்த்தாள். 
“இங்க பாரு ஸ்ரீம்மா, நான் இங்கிருந்து போற வரைக்கும் இந்த ஆரா யாருன்னு உனக்குத் தெரியாது சரியா?” என்க, அவள் தாடையைப் பற்றியவள், “எனக்குத் தான் உன்னைத் தெரியுமே ஆரா..” என்றாள்.

Advertisement