Advertisement

அத்தியாயம் 04
தென்துருவத்தில் நீ! வடதுருவத்தில் நான்!
இணைக்கும் கற்பனை ரேகையாய்
அலைவரிசை இணைக்கும் அலைபேசி!
“விஜய்..” எனப் பல முறை அழைத்தும் அவனிடமிருந்து பதில் வராததால் அவன் அருகில் வந்தமர்ந்து தலைகோதினார் அன்னை பவானி. அப்போதே கலைந்தவன், “கூப்பிடீங்களாம்மா..” என்றான் மெல்லிய குரலில். 
“ம்ம், ஆறுமுறை..” என்றவர் அடுத்த கேள்வி கேட்பதற்குள், “என்ன விஷயம்?” என்றான். 
“சுபத்ராவுக்கு ஒரு ஃபோன் போட்டு கொடுடா, பேசணும்” என்றதும் தன் அலைபேசியைக் கையில் எடுத்து அக்காவிற்கு அழைப்பு விடுத்து அன்னையிடம் கொடுத்துவிட்டு எழுந்து சென்றான். 
வெகுநாட்களுக்குப்பின் அன்னையின் குரல் கேட்ட, சுபத்ரா மகிழ்வோடு அனைவரின் நலம் விசாரிக்க, அவரும் அவள் நலம் விசாரித்தார். 
“என்ன விஷியம்மா..?” 
“இந்த மாசம் இருபத்தெட்டு, அடுத்த மாசம் ஏழுன்னு இரண்டு தேதி பூமி பூஜை போடுறதுக்கு ரவி குறித்து வாங்கிட்டு வந்திருக்கான். கௌஷியும் விஜயும் இந்தமாசம் தான் தோதுபடும்னு சொல்லிட்டாங்க, உனக்கு எது வசதிபடும்னு சொல்லும்மா”
“இருபத்தெட்டாம் தேதியா..?” என இழுத்தவள், “இங்க திவ்யா மகனுக்கு பர்த்டே பார்ட்டி இருக்கேம்மா..” என்றாள் இறங்கிய குரலில். 
ரவி சொல்லிய மாதிரியே அவள் பதிலும் இருக்க, என்ன சொல்லுவதென்றே பவானிக்கு தெரியவில்லை.
“அப்போ வர முடியாதா சுபத்ரா..?” என்ற குரலிலே அவர் ஏக்கம் தெரிய, அவள் பதில் சொல்லுவதற்குள் அவள் பெயரைச் சொல்லி அழைக்கும் அவள் மாமியாரின் குரல் பவானிக்கும் கேட்க, “அவர்கிட்ட கேட்டுட்டு அப்புறமா கால் பண்ணுறேம்மா” என்றவள் அழைப்பைத் துண்டித்தாள். 
என்ன செய்வது? தேதியை மாற்றி வைக்கச் சொல்லி பெரியவனிடம் கேட்கலாமா? என யோசித்துக்கொண்டிருக்க, உடைமாற்றிவிட்டு மீண்டும் அவர் அருகில் வந்தமர்ந்திருந்தான் விஜய்.
அவன் அலைபேசியை அவனிடம் நீட்ட, “அதற்குள்ள பேசிட்டீங்களாம்மா?” என்றான். 
“ஏன்டா நீ பேசணும்னு நினைச்சு இருந்தா முதலையே பேசிட்டு கொடுத்திருக்கலாமே” என்க, “நான் நினைச்சா மட்டும் போதுமா அவங்களுக்கும் தோன்றியிருக்கும்..” என்றான். 
“அவ எல்லாரையும் விசாரிச்சாடா..”
“சரி, என்ன சொன்னாங்க…?” அவன் கேட்கும் நேரம் சரியாக ரவியும் வேலை முடிந்து வீட்டிற்குள் நுழைந்தான். 
“இருபத்தெட்டாம் தேதி அவள் கொழுந்தியா பையனுக்குப் பிறந்தநாள் கொண்டாட்டம் இருக்காம்..” அவர் சொல்லி முடிப்பதற்குள், “அதனால வர முடியாதுன்னு சொன்னாளா? இதை தான் நான் முதலையே சொன்னேனேம்மா எங்க என் பேச்சை கேட்டீங்க?” என்றான் ரவி. 
“அப்படி சொல்லலை ரவி, அவ வீட்டுகாரர்ட கேட்டு சொல்லுறேன் சொல்லிருக்கா, நாம தேதியை வேணா மாற்றி வைக்கலாமா?” 
“என்னம்மா சொல்லுறீங்க? ஏற்பாடெல்லாம் செய்த பிறகு எப்படி மாற்ற முடியும்?”
“நேத்து தான் நீ இரண்டு தேதி கொடுத்தியேப்பா?”
“கௌஷி, விஜயும் ஒரே தேதி தானே சொன்னாங்க, அதான் அந்த தேதிக்கே ஏற்பாடு செய்துட்டேன். சுபத்ரா வரதுனா வரட்டும், வரலைன்னா விடுங்க கிரகப்பிரதேஷத்துக்கு பார்த்துக்கலாம்” என முடிவாக உரைத்த ரவி தன்னறை நோக்கிச் சென்றுவிட, மகனின் வார்த்தைக்கு மறு பேச்சு பேசத்தெரியாது நின்றார் பவானி.
கணவர் இருந்தவரை அவர் சொல்லை பின்பற்றிய பவானிக்கு குடும்பத்தைத் தாண்டிய வெளியுலகம் தெரியாது. கணவருக்குப் பின் மூத்தமகன் ரவியே குடும்பப் பொறுப்புகளை ஏற்க, இப்போது அவன் சொல்லே முதன்மையானது. வீட்டில் அனைவருக்குமே அவன் முடிவுகள் சாரியானதாக தோன்றுவதால் யாரும் இதுவரை எதிர்த்துப் பேசியதில்லை. 
வாடிய பவானியின் முகத்தைக் கண்ட விஜரூபன் சற்றே நகர்ந்து அன்னையின் மடியில் தலை சாய்த்து படுக்க, அவர் கைகள் தானாக அவன் தலை கோதிவிடத் தொடங்கியது. உடன் பிறந்திருந்தவர்கள் இருவர் இருந்தாலும் அன்னை மடி என்பது அவனுக்கு மட்டுமே சொந்தம்! 
“ஏன்மா பீலிங்..” என்றவன் கேட்க, “பையன், மாப்பிள்ளையோட வந்து ஒருநாள் இருந்துட்டு போவான்னு எதிர்பார்த்தேன்டா” என்றார். 
“மாமாவும் மிதுனும் வந்தாவே அதிசயம், இதுல ஒருநாள் முழுக்க ஸ்டே பண்ணுமா? இருந்தாலும் உனக்கு இம்புட்டு ஆசை ஆகாது பவானிம்மா”
“ஒருநாள் கூட தங்கமாட்டீங்களே, மிதுன் எவ்வளவு வளர்ந்திருப்பான்..! சுபத்ராவாது வந்துட்டு போகலாமே” அவர் குரலிலே மனதின் ஆசையை உணர்ந்தான். 
“அக்காவை பூஜைக்கு கூட்டிட்டு வந்துட்டா எனக்கு என்ன செய்வம்மா?” என மலர்ந்த சிரிப்போடு கேட்க, “எப்படிடா கூட்டிட்டு வருவ?” என்றார். 
“நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லும்மா..” என்றான் கொஞ்சலாக, “சரி என்ன வேணும் கேளு” என்றார் அவரும். 
“ரவாலட்டு உன் கையால பிடிச்சு தரணும்”
“நேத்து தான விஜய் கௌஷி செய்து கொடுத்தா?”
“அது லட்டு இல்லை புட்டு, நீயே உண்மையை சொல்லும்மா?” என அவன் கேட்கும் போதே, “அந்த புட்டை தான் நீ இரண்டு கை நிறைய அள்ளித்தின்னடா” என்றபடி சமையலறையிலிருந்து வந்தாள் கௌஷிகா.
அவன் முறைக்க, பவானி சிரிக்க, “அண்ணி சொல்லிக்காட்டியதை விட நீங்க சிரிக்கிறது தான் இன்சல்டிங் மீ மம்மீஈஈஈ..” என்றவன் செல்லம் கொஞ்ச, “சாப்பிட்டு குறை சொல்லாமா?” என்றார் தன்மையாக. 
“சாப்பிடாம எப்படிம்மா கண்டுபிடிக்க முடியும்..?” அவன் கேட்க, “ம்ம், மூக்கை வைச்சு மோப்பம் பிடிக்கலாம்” என்றாள் கௌஷி. 
இருவரும் சிரித்தபடி இருக்க, “என் பாட்னர் தூங்குறதால அவள் இல்லாத தைரியத்துல ரொம்பவும் டீஸ் பண்ற அண்ணி நீ?” என்றவன் முகத்தைத் தூக்கிக்கொண்டான். 
ரவி உடைமாற்றி வர அனைவரும் இரவு உணவிற்கு அமர்ந்தனர். தன் பேசியது எதுவும் அன்னையை வருந்த செய்துவிட்டதோ என்றெண்ணத்தில் ரவி பவானியின் முகம் பார்க்க, எப்போதும் போலே இளகிய முகமாய் காண நிம்மதி கொண்டான். விஜயின் அலைபேசி அதிர, சுபத்ராவிடமிருந்து வந்த அழைப்பைக் கண்டுகொண்டு அட்டென் செய்தான். 
“சொல்லுங்கக்கா..” 
“விஜய் எனக்காகத் தேதி மாற்ற வேண்டாம், நீங்க ஏற்பாடெல்லாம் செய்யுங்க முடித்தால் நான் மட்டும் வந்துடுறேன்” 
“மாமா என்னக்கா சொன்னாங்க..”
“அவங்களுக்கு மீட்டிங் இருக்குன்னு சொல்லிட்டாங்க விஜய், வீட்டுக்கும் கெஸ்ட் வருவாங்க எவனிங் பார்த்டே பார்டி இருக்கு”
“அக்கா எவனிங் தானே பார்டி, காலையிலே பூஜை முடிச்சிடுமே, நானே உங்களை பிக் பண்ணிட்டு பூஜை முடியவும் ட்ராப் பண்ணிடுறேன்”
“சரிடா, நான் கேட்டு சொல்லுறேன். நீயும் ரவி, அம்மாகிட்ட சொல்லிடு” என்றவள் கட் செய்ய, அனைவரும் விஜயின் முகத்தைத் தான் பார்த்திருந்தனர். 
பவானி மட்டுமே ஆர்வமாக மகளின் வருகையை விசாரிக்க, அவள் உரைத்த பதிலை விஜயரூபன் தெரிவித்தான். 
“அவங்க எல்லாம் எப்படி நம்ம இடத்துக்கு வருவாங்க, இது அவங்களுக்கு கௌரவக்குறைச்சலாக இருக்குமே” என ரவி சுபத்ராவின் கணவனைக் குறிப்பிட, “அதான் மீட்டிங் இருக்குன்னு சொல்லிருக்காங்கல இல்லைன்னா வந்திடுவாங்க, இதுக்கு முன்ன நம்ம வீட்டு பாக்ஷன்னு வந்திருக்காங்களே” என கௌஷிகா உரைத்தாள். 
“எப்போ? நம்ம கல்யாணத்துக்கு தானே ஐந்து வருஷம் முன்னாடி” என ரவி உரைக்க, கௌஷி பதிலின்றி அமைதியானாள். 
விஜயின் தந்தை இரயில்வே துறையில் பணியில் இருக்கும் போதே உயிரிழக்க, அப்போது சுபத்ராவிற்கு திருமணம் முடித்து ஒரு வருடமாகி இருந்தது. ரவியும் சுபத்ராவும் ஒரு வயது வித்தியாசத்தில் இருக்க, அவர்களுக்குப் பின் பல வருடங்கள் கழித்தே விஜயரூபன் பிறக்க, அனைவருக்கும் செல்லமாய் வளர்ந்தவன். தந்தை இறப்பின் போது சுபத்ரா ஏழாம் மாதம் கருவுற்றிருக்க, ரவி கல்லூரி படிப்பை முடித்திருக்க, விஜய் பள்ளிப்படிப்பில் இருந்தான். கணவரின் எதிர்பாராத இழப்பில் அடுத்தென்ன செய்வதெனத் தெரியாது பவானி தவித்துப்போய் நிற்க, ரவி தான் குடும்பப் பொறுப்பை முழுவதுமாய் ஏற்றான். 
பெரிதாக சேமிப்பு எதுவும் தந்தை வைத்துவிட்டுச் செல்லாததால் ஆறு மாதங்கள் வெளிவேலைக்கு சென்று குடும்பத்தையும் பார்த்துக்கொண்டு, அரசு வேலைக்கு முயன்று கருணை அடிப்படையில் தந்தையின் வேலையும் பெற்றான். வீட்டு நிர்வாகம், தம்பியின் படிப்பு, தங்கையின் வளைகாப்பு, அவள் பிள்ளைக்கான சீர் வரைக்கும் ரவி தன் உழைப்பிலே செய்ய, பவானிக்கு மனம் நிறைந்திருந்தாலும் சிறு வயதிலே அவன் மீதும் பெரும் பொறுப்புகளை சுமத்திவிட்டதாகவும் தோன்ற பாரம் கூடியது. 
ரவி உழைப்பிற்கு அலுப்பவனோ பொறுப்புகளைத் தவிர்பவனோ அல்ல. ஆனால் ஆறுதலாக, வழிகாட்டியாய், தூக்கிவிட ஒரு கரமில்லையே என வருந்தியதுண்டு. அதுவும் குடும்பநிலை சீராவதற்கான ஒருவருடமும் வெகுவாக ஏங்கியிருந்தான். 
அதே நேரம் தான் சுபத்ராவின் கணவர் ஜெய்பிரகாஷிற்கு தொழிலில் செல்வம் செழித்தது. அவளை திருமணம் செய்யும் போது ஒரு சிறு எலெக்ட்ரீசியனாக வேலை செய்தவர் தனியாகக் கடை வைக்க பின் வேகமாகப் பல கிளைகளாகத் தொழில் பெருகியது. தாங்கள் துன்பப்படும் நிலையில் உதவியாக இல்லை எனினும் ஆதரவாக கூட உடன் உறவுகள் இல்லையே என்ற வருத்தம் இன்று வரையிலும் ரவியின் மனதில் உண்டு. 
அதிலும் தந்தை இறந்த சமயம் மூன்றாம் நபர் போல் வந்த மறுநாளே சென்றுவிட்ட சுபத்ராவின் மீது பெரும் வருத்தம். பதினாறுநாள் காரியம் முடியும் வரையும் உடன் இல்லாது தாயைத் தவிக்க விட்டு சென்றுவிட்டாளே என்ற எண்ணம் உண்டு. பவானி நாளும் பொழுதும் தன் கவலையே பெரிதென்ற நிலையில் அழுது கரைந்தபடியே இருக்க, அன்னை மடிக்கும் சுவரிற்கும் இடையான இடத்திலே விஜய் சுருண்டு கிடந்தான். 
ரவிக்கு வளர வளர அன்னையிடமிருந்து ஒரு விலகல் இருந்திருக்க, அவருக்கு அறுதல் சொல்லக்கூட அவனால் இயலவில்லை. அதையும் விட அழுது கரைந்து பசியில் மயங்கி விடுவார்களோ என்ற பயத்திலிருந்தவன் ஸ்டவை பற்ற வைக்கக் கூடத் தெரியாது தடுமாறி நின்றான். அந்த நிலையில் துணையாய் ஒரு பெண் இருந்திருந்தால், உடன் பிறந்தவள் இருந்திருந்தால் ஆறுதலாக இருந்திருக்குமே என ஏங்கியதுண்டு.
இரவு உணவிற்கு பின் மாலையில் உறங்கி தற்போது தான் விழித்திருந்த ஸ்ரீநிதிக்கு பவானி உணவு ஊட்டிக்கொண்டிருக்க, கௌஷி சமையலறையில் பத்திரங்களைக் கழுவி, ஒதுங்கு வைத்துக்கொண்டிருந்தாள். 
“உவக்..இட்லி வேணாம் பாட்டி”
“வேற என்னடா குட்டிம்மா வேணும்”
“ம்ம், மேகி நூடுல்ஸ் வேணும்..” என ஸ்ரீ கேட்கும் போதே விஜயின் உதடுகள் நூடுல்ஸ் மண்டை என தன்னால் முனுமுனுத்துக்கொள்ள நினைவில் வந்தாள் ஆராதனா.  
“நாளைக்கு பாட்டி செய்து தாரேன், கௌசிம்மா பாவம், வீட்டு வேலையும் பார்த்து ஸ்கூலுக்கும் போயிட்டு வந்து எம்புட்டு வேலை செய்யுற..! நான் செய்யுறேன்னு சொன்னாலும் கேட்க மாட்டிக்க..” என்றவரின் புலம்பல் எல்லாம் அருகில் அமர்ந்து அலைபேசியில் கவனம் பதித்திருந்த விஜயின் காதுகளில் விழவே செய்தது. 
பவானிக்கு மூட்டு வலி இருப்பதால் நின்று கொண்டு செய்யும் வேலைகளை பெரும்பாலும் தவிர்ந்து குழந்தையை அவள் பொறுப்பில் விட்டுவிட்டு கௌஷிகாவே வேலைகளைப் பார்த்துக்கொள்வாள். 
“நான் வேணா கிளின் பண்ணுறேன்னு சொல்லுறேன் விட மாட்டிக்கீங்க, வேற என்ன தான் நானும் செய்ய?” என விஜய் கேட்க, “ம்ம், சீக்கிரம் உனக்குக் கல்யாணம் செய்யணும்” என்றார் பவானி. 
“உனக்கு கல்யாணம்னா எனக்கு ஸ்கூல் லீவ் தானே சித்தா” எனக் காலாட்டிக்கொண்டு ஸ்ரீநிதியும் கேட்க, பல்லைக்கடித்தவன் கௌஷி வேலைதானா இது என நினைத்தான். 
“அம்மா புதுவீடு கட்டி முடியட்டும் அப்பறம் பார்த்துக்கொள்ளலாம்..” என்றவன் எழுந்து அறை நோக்கிச் சென்றான். 
அறைக்குள் வரச் சரியாக ஆராதனாவிடமிருந்து அழைப்பு வந்தது, எப்போது தானே நினைத்தேன் அவளுக்கு எவ்வாறு தெரிந்தது உடனே அழைக்கிறாளே ஒரு பரவசத்தோடு அட்டென் செய்தான். 
நடந்த குளறுபடிகளுக்கு அகிலின் கோபமுமே காரணமென அறிந்த போதும் தேவையில்லாது ஆராதனாவை திட்டுவிட்டது அவள் வருந்திச் சென்ற போதே அவனை வருந்த வைத்தது. நண்பர்கள் மீதிருந்த அக்கறையில் அவளை வருந்தச் செய்வது எவ்வாறு சரியாகும்? 
வெகு நேரமா அலைபேசியை கையில் வைத்துக்கொண்டு அவள் எண்ணிற்கு அழைக்க, நினைத்துத் தயங்கித் தடுமாறிக் கொண்டிருந்தவனுக்கு அவளே அழைக்க பொங்கியது உவகை!
அழுது கரைவளோ? திட்டுவாளோ? சண்டையிட வேண்டுமா? சமாதானம் செய்ய வேண்டுமா? என்ற பலவித குழப்பத்திலிருந்தவன், அட்டென் செய்ததும் ஒரு நொடி மௌனமாகிவிட, “ஹோலோ ஆராதனா பேசுறேன்” என்றாள்.
அவள் குரலில் கோபம் புரிந்த போதும், “சொல்லு..” என்றான். 
பார்த்த இந்த சில நாட்களிலே அவர்களுள் வெகு சாதாரணமான உரையாடல் வந்திருந்தது, இல்லை ஆராதனா உருவாக்கியிருந்தாள். விஜய்க்கு வித்தியாசமாக எதுவும் தோன்றவில்லை. 
“நான் உங்ககிட்ட பேச விரும்பலை..”
“அதை சொல்ல தான் ஃபோன் பண்ணியா?”
“இல்லை, பாப்பாகிட்ட பேச..” அவள் கேட்கும் போதே ஸ்ரீநிதியும் உள்ளே வர, அவளிடம் அலைபேசியை கொடுத்தான். 
பள்ளிக்கதையிலிருந்து தற்போது உண்ட உணவு வரை அனைத்தையும் ஸ்ரீநிதி சொல்ல அவள் என்ன கதை சொன்னாளோ சிரிப்பும் வியப்புமாய் ஆயிரம் முக பாவனைகளைக் காட்டி ஒரு மணி நேரத்திருக்கு மேலுமாகப் பேசியபடி இருந்தாள். சில நேரங்கள் அவளை வேடிக்கை பார்த்து, சில நேரங்கள் வெறும் சுவரைச் சுற்றி சுற்றி பார்த்து என பொழுதைத் தள்ளியவன் கடிகாரத்தைப் பார்த்தபடி காத்திருக்க, ஸ்ரீநிதிக்கு கண்கள் சொக்கும் வரையும் பேசிக்கொண்டே இருந்தாள். 
அடிப்பாவி ஒரே நாள்ல இவ்வளவு நெருக்கமா? அப்படியென்ன தான் வசியம் பண்றாளோ! சாரி கேட்க நினைச்சா எங்கிட்ட மட்டும் பேச மாட்டாளாம்! சிறு பொறாமையோடு பார்த்திருந்தான். 
பொறுமையெல்லாம் பறக்க, அவளிடமிருந்து அலைபேசியை பிடுங்கி, “ஸ்ரீக்கு தூங்கும் வருது நாளைக்கு பேசிக்கோ” என்க, “எனக்கு தூக்கம் வரலையே” என்றாள் அவள். 
“கண்ணை மூடிட்டு வேற ஏதாவது யோசி தன்னால தூக்கம் வரும் போ”
“என்ன யோசிக்க..? ம்ம், அகில், தர்ஷினியை சேர்த்து வைக்க நெக்ஸ்ட் பிளான் ரெடி பண்ணுறேன்”
“ஏய்..இவ்வளவு வாங்கியும் திருந்தலையா நீ?”
“திருந்துறதுக்கு இப்போ என்ன தப்பு செய்துட்டேன் மிஸ்டர் விஜய்?”
“கோபமா..?”
“இல்லை, குளுகுளுன்னு இருக்கேன், என்னை சொன்னீங்களே நீங்க ஏதாவது செய்து அவங்களை சேர்த்து வையுங்க பார்ப்போம், அன்ட் ஒன் டே தான் உங்களுக்கு டைம்” என்றவள் கட் செய்து விட, எவ்வளவு அழகா பாலை என் பக்கம் அடிச்சிவிட்டா என வியந்தபடி விழி விரிய நின்றான். 
இதை நான் ஆரம்பத்திலே செய்திருப்பேனே, அவள் உள்ளே புகுந்து பிரச்சனையைப் பெரிதாக்கிவிட்டு எப்போது விலகியோடவும் பார்க்கிறாளா? என நினைத்தபடியே, ஸ்ரீயை படுக்க வைத்தான். 
“பாப்பா அது உன் ப்ரண்ட் ஆரா இல்லை” என விளக்க, “தெரியும் சித்தா உன் ப்ரண்ட் ஆராதனாவாம், உன் ப்ரண்ட் எனக்கும் ப்ரண்ட்” என்றாள் அவள். 
“பாப்பா அவ என் ப்ரண்ட் இல்லை எனிமிடா” 
“அப்படியெல்லாம் சொல்லாத சித்தா ஆரா குட் கேர்ள்” என்றவள் விழி மூட, அடிப்பாவி ஒரே நாள்ல என் பொண்ணையே உனக்கு சாதகமா மாத்திட்டியா? என வியந்தவன் சிரிப்போடு விழி மூடினான்.

Advertisement