ஈசன் கிருபாவும், புதுமண தம்பதியராய்.. ஒருவாரம் விருந்து விழா என சுற்றினார். சண்முகம், இந்தமுறை எல்லாம்.. தான் பார்த்துக் கொண்டார். ஒருவாரம் விடுமுறை எடுத்திருந்தார். மனைவி மகள் என அவர்களையும் விடுமுறை எடுக்க வைத்தார். திருமணம் முடிந்து இருக்கும் வேலைகளை தான் கவனித்துக் கொண்டார்.

ஒருவாரம் முழுவதும் ஈசனும் கிருபாவும் தங்கள் வீடு.. சஹா வீடு.. மற்றும் நெருங்கிய உறவுகள் என எல்லா இடங்களுக்கும் சென்று உறவுகளை காத்துக் கொண்டனர்.

வீடு இரண்டு திருமணங்கள் முடிந்து அசந்து ஓய்ந்து இருந்தது.

ஈசன் பத்துநாட்கள் விடுமுறை முடிந்து நாளை சென்னைக்கு கிளம்பும் நேரம்.

சண்முகம் தன் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தார்.. கோகிலா ஈசனுக்கு கொடுத்துவிட என நிறைய சாமான்களை கட்டிக் கொண்டிருந்தார்.

சண்முகம் “எப்போ கிளம்புறீங்க கிருபா” என்றார் ஈசனை ஒரு பார்வை பார்த்துக் கொண்டு.

கிருபா “மாமா, உங்களுக்கு தெரியாதா, அவர் கிளம்புறார். நான் அப்புறமா போவேன்..” என்றாள்.

சண்முகம் “ஏன் டா, என்ன இது.. என்ன ப்பா” என்றார் அதிர்ந்து.

கோகிலா “நாங்க எல்லோரும் சொல்லிட்டோம். ஈசன் கிருபாவை கூட்டி போக இப்போ முடியாதுன்னு சொல்லிட்டார். இங்க யாருமே துணைக்கு இல்லையாம். என்னென்னமோ சொல்றாங்க ரெண்டுபேரும்.. அப்பா நான்.. அம்மா எல்லாம் சொல்லி பார்த்துட்டோம்.” என்றார், சோகமான குரலில்.

சண்முகம் எழுந்து நின்றார் “என்ன இது, என்ன ப்பா இது. யாராவது கேட்டால் நம்மை என்ன நினைப்பாங்க. பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்தால்.. இப்படி, இங்கே விட்டு போவானா..” என்றவர் சுதாரித்து “போவாங்களா” என்றார் மரியாதையாக.

ஈசன் நமுட்டு சிரிப்பு சிரித்து தன் மீசையை நீவி கொண்டான் ‘அந்த பயமிருக்கணும்’ என எண்ணிக் கொண்டான்.

தாத்தா “இல்ல ஷண்முகா.. ஈசன், கடையை யார் பார்ப்பதுன்னு யோசிக்கிறான். அத்தோட, கிருபா இல்லாமல்.. எங்களுக்கும்” என தாத்தா வாடி போக.

சண்முகம் “அப்பா, இதென்ன கடை வியாபாரம்ன்னு காரணம் சொல்லிக்கிட்டு. அதெல்லாம் சரியில்லை அப்பா, நான் பார்த்துக்கிறேன். ஏன் அம்மா.. கோகிலா.. உங்களுக்கு சொல்ல தெரியாதா.. என்ன பொம்பளைங்க.. மீனா உனக்கு தெரியுமா” என்றார் அதட்டலாக.

பெரியவர்கள் எல்லோருக்கும்.. சண்முகம் பேசுவது சரியெனதான்.. எண்ணம். எல்லோரும் ஈசன் முகத்தை பார்த்தனர்.

ஈசனுக்கு என்ன சொல்லுவதென தெரியவில்லை. மனையாளை தன்னோடு அழைத்து செல்ல வேண்டுமெனத்தான் எண்ணம். ஆனால், சண்முகம் சொல்லுவது போல.. யாரேனும் ‘பெரியவர்களை.. இப்படி தனியே விட்டுவிட்டு சென்றுவிட்டார்களே.. அவங்க பேரன்னே. புரிஞ்சிக்காமல் கூட்டி போயிட்டானேன்னு சொல்லிட மாட்டாங்களா’ என ஈசனுக்கு எண்ணம். அத்தோடு எல்லோரும் வயதானவர்கள்.. ஏதாவது எமர்ஜென்சி என்றால் என்ன செய்வது.. வியாபாரம் இருக்கிறது. தினமும் தாத்தா, சென்று கவனித்தால்.. அவரால் முடியுமா? என இருவரும் யோசித்து இப்படி ஒரு முடிவு எடுத்திருந்தனர். எனவே, எல்லோரும் ஈசனை பார்க்க.. ஈசன் என்ன சொல்லுவது என தெரியாமல் நின்றான்.

கிருபா “இல்ல மாமா, அ..து.. முன்னாடியே பேசிட்டோம் மாமா. அவர் வீக்எண்டில் வந்திடுவார். தாத்தாவினால் தினமும் கடைக்கு போக முடியாதே..”  என தயங்கி தயங்கி பேசினாள்.

பாட்டி “ரெண்டு கல்யாணத்தினை முடித்து வைத்திருக்கார் உங்க தாத்தா.. என்ன வயசாகுதுன்னு சொல்ற” என்றார் பாட்டி.. கண்ணில் நீர் நிறைந்ததை முந்தானையில் துடைத்துக் கொண்டார்.

சண்முகம் மீனாட்சி கோகிலா என எல்லோரும்.. புன்னகைத்தனர்.

சண்முகம் “அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்..” என்றார், திடமான குரலில்.

அருணாசலம் மகனை நிமிர்ந்து பார்த்தார். இதே வார்த்தைகள்தான் அப்போதும்.. என் மகன் இவன்.. என பெருமையாக பார்த்தார்.

சண்முகம் தொடர்ந்தார் “இன்னும் கொஞ்ச வருஷம்தான்.. ரிடைர்டாகிடுவேன். அதற்கு பிறகு நான் புல் ரெஸ்ட்தான். கடையை நான் பார்த்துக்கிறேன். இப்போது ராம் இருக்கான்.. நான் ஒருவாரம் வரேன்.. நீ ஒருவாரம் வா கிருபா. அப்பா ரெண்டு நாளைக்கு ஒருதரம் போகட்டும். பில்லிங் ஆன்லைன் செய்துக்கலாம்.. இப்படி ஏதாவது செய்யலாம். ஆனால், இ..ப்படி.. கல்யாணம் செய்துகிட்டு.. தனியா எல்லாம் இருக்க கூடாது. கேட்க்க யாருமில்லேன்னு நினைப்போ..” என்றார் கடைசி வார்த்தை ஈசனை முறைத்து பார்த்தவாறு.

அருணாசலம் “சின்ன பிள்ளைகள், குடும்பத்தை யோசித்து.. எதோ செய்றாங்க. பொறுப்பா இருக்காங்க. அதை பார்ப்பியா” என்றார்.

சண்முகம் “அதற்கு எல்லாம் நேரம் இருக்கு.. இப்போது, என்ன முக்கியம். அதை பார்க்கணுமில்ல அப்பா, ஏற்கனவே நம்ம வீட்டில்.. கல்யாண யோகமே.. சிக்கலாகத்தான் இருக்கு. இதில், இதெல்லாம் செய்ய கூடாது” என்றார் கரார்  குரலில்.

பெரியவர்கள் எல்லோருக்கும் சண்முகம் சொல்லுவது புரிய.. ஈசனை பார்த்தனர்.

ஈசன் கிருபாவை பார்த்தான்.

கிருபா ஈசனை பார்த்தாள்.

மீனாட்சி “மாமா இவர் சொல்றா மாதிரி, அவங்க இப்போ சேர்ந்துதானே இருக்கணும். நாம எல்லோரும் போய் பெண்ணை விட்டுட்டு வருவோம். சின்ன பிள்ளைகள் நமக்காக யோசிக்கிறாங்க. நாம அப்படியே இருக்க கூடாதுல்ல” என்றார்.. கணவனுக்கு ஆதரவாக.

கோகிலா வாயடைத்து போனானர். மீனாட்சி இப்படி யோசிப்பார்.. பேசுவார்.. என அவரால் நம்ப முடியவில்லை.

அருணாசலம் “ம்.. நீ சொல்றது சரிதான் ம்மா, ஈசா.. சேர்ந்துதான் இருக்கணும். சரிதானே.. நாங்க ஏற்பாடு செய்கிறோம்.. சரிதானே சண்முகம்” என்றார்.. பேரனிடம்.. பேசி, மகனிடமும் வந்து சந்தோஷமாக உத்தரவு கேட்டார்.

ஈசன் ஏதும் சொல்லாமல் எழுந்து நின்றான், கிருபாவை பார்த்து தோள் உலுக்கினான். கிருபா சின்ன குரலில் “என் மாமா” என்றாள்.. ஷண்முகத்தினை பார்த்தவாறே. 

ஈசன் ஏதும் சொல்லாமல்  தலையை மட்டும் ‘சரி’ என அசைத்தான் பொதுவாக. 

சம்பூர்ணா “அண்ணி, இனி சென்னையில்தான் இருக்க போறீங்களா.. நாம அப்போ எல்லா சண்டேவும் வெளிய போறோம்” என்றாள். 

எல்லோர் முகத்திலும் நிறைவு. சந்தோஷமான உணர்வுகளால் அந்த இடம் சூழ்ந்து இருந்தது இப்போது. 

இப்போது கிருபாவின் சித்தப்பா வீட்டிற்கு தகவல் சொல்லினர். முன்பு காரைகுடிதான் கிருபாவின் புகுந்த வீடு என தாத்தா அவர்களிடம் சொல்லிவிட்டார். அதனால், அவர்கள் முறைகள் பற்றி ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை. இப்போது சென்னை போகிறோம்.. நாம், புதுமண தம்பதிகளை தனியாக வைக்க என முடிவான பின் அவர்களிடம் ஒருவாரத்தை சொல்ல வேண்டும் என்றார் பாட்டி. அதனால், அழைத்தனர்.

அவர்களுக்கும் வேலை இருக்குமே.. கிருபாவின் சித்தி சித்தப்பா மட்டும் வருகிறோம் என்றனர்.

எல்லோரும் எப்படி செல்லுவது கார் ட்ரைன் எதில் செல்லுவது என முடிவு செய்தனர்.

சண்முகம் “முதலில் நம்ம வீட்டுக்கு போய்டலாம் அப்பா. அதன்பிறகு நல்ல நேரம் பார்த்து அங்கே போகலாம். என்ன தேவையோ வாங்கி கொடுத்திடலாம். “ என்றார்.

பெரியவர்கள் எல்லாம் சரி என்றனர்.

உண்டு முடித்து.. இரவு, தாத்தா.. தன் மகனின் வருகைக்காக காத்திருந்தார்.

சண்முகம், தந்தை திண்ணையில் அமர்ந்திருப்பதை பார்த்து அங்கே வந்தார்.. “என்ன ப்பா, நாளைக்கு சீக்கிரமாக கிளம்பனும்.. தூங்கலை” என்றார்.

தந்தை நேராக விஷயத்திற்கு வந்தார் “ஏன் சண்முகம்.. இவ்வளவு செய்கிறவன்.. அப்போது ஏன்.. அப்படி ஒரு வரனை கிருபாவிற்கு கொண்டு வந்த” என்றார்.

சண்முகம் “என்ன அப்பா.. இது.. இப்போ கேட்க்குறீங்க” என்றார்.

தந்தை “சொல்லு ப்பா, எனக்கு புரியலை.” என்றார்.

சண்முகம் “அப்பா, அந்த வரன் நல்ல பையன். நல்லா படிச்சிருக்கான்..பாரீன் வாழ்க்கை.. நமக்கு தெரிந்த இடம்.. இப்படிதான் யோசித்தேன். எனக்கு தெரியலை.. அவங்க முதல்முறை.. ஏன் கிருபாவை கேட்க்கலை.. அப்போதே அவளுக்கு பார்த்துக் கொண்டிருந்தோமே.. என அதெல்லாம், எனக்கு தெரியலை அப்பா.. நல்ல வரன்.. எப்போது கேட்டால் என்ன.. எங்களை உணர்ந்து வந்து கேட்க்கிறார்கள் என எண்ணினேன் அவ்வளவுதான்.” என்றார் புன்னகை முகமாக.

தந்தை “சரிதான். எ..எனக்கு அப்போ வருத்தம் என் பையன் ஏன்  யோசிக்கலைன்னு.  நீ சொல்றதும் சரிதான் ப்பா” என்றார்.

அருணாசலத்திற்கு நிம்மதி.. என் மகன் அப்படியேதான் இருக்கிறான் என.

திட்டமிட்டபடி எல்லாம் நடந்தது.