சஹா, வந்து சேர்ந்தாள்.. ஒரு வாரம் விடுமுறையில். வீடு விழா கோலம் கொண்டது.
ஈசன், தன் அம்மாவின் நகைகள்.. சஹாவின் நகைகளை எல்லாம்.. லாக்கரிலிருந்து எடுத்து வந்திருந்தான்.
அதனை இப்போது பாட்டியின் கையில் கொடுத்தான்.
சஹா, அருகில் அமர்ந்து.. நகைகளை வரிசையாக எடுத்து எப்போது வாங்கியது என சொல்லிக் கொண்டிருந்தாள். அளவான அழகான நகைகள்.
ஈசன் “எத்தனை சவரன்னு தெரியலை தாத்தா.. சஹாவை கேட்கனும், இதெல்லாம் மாற்றி புதுசு வாங்கிக் கொள்ளுவாளா.. இல்லை இப்படியே இருக்கனுமா” என தங்கையை பார்த்தான்.
பாட்டி “எல்லாம் நல்லா இருக்கு ஈசா. அந்த தாலிக்கொடியை மட்டும், அப்படியே வைச்சிக்க கூடாது.. மாத்திடலாம். மத்தது எல்லாம் சஹா.. உன் விருப்பம் போல செய்திடலாம் டா..” என்றார்.
சஹா “அண்ணி, என்னவேனுமோ எடுத்துக்கட்டும் பாட்டி, நான் அப்புறம் எடுத்துக்கிறேன்” என்றாள்.
பாட்டி “அடி தங்கம். நல்ல மனசு. அவளுக்கு நீயாக கொடுத்தால் போதும்.” என்றார்.
சஹா “இல்லை பாட்டி.. அம்மா எப்படியும்.. என் அண்ணன் மனைவிக்குன்னு யோசிச்சிருபாங்க.. அப்படி நீங்க எடுத்துக்கோங்க.. அண்ணி” என சொல்லி கொண்டு இருந்தாள், கிருபாவை பார்த்து.
கிருபா என்ன செய்வது என தெரியாமல் நின்றாள்.
ஈசன், சுவாதீனமாக அந்த நகைகளை தட்டி தேடி பார்த்தவன்.. சின்ன மூக்குத்தி ஒன்றை எடுத்தான். பவளம் கடுகத்தனை இருக்க.. சுற்றிலும் ஐந்து முத்துகள் பதித்த.. தன் அன்னையின் மூக்குத்தியினை எடுத்து.. கிருபாவிடம் கொடுத்தான்.. “இத வைச்சிக்கோ.. அம்மாவோடது” என்றான்.
கிருபா வாங்கி பார்த்தாள்.
அழகாக இருந்தது. சஹா.. சின்ன முத்துக்களும் பவளமும் கோர்த்த மாலையை எடுத்து அவளிடம் கொடுத்தாள்… கிருபா ஏதும் மறுத்து சொல்லாமல் வாங்கிக் கொண்டாள்.
சஹாவின் நகைகள் புதிதாக அப்படியே இருந்தது.. அவளின் அம்மாவின் நகைளில் சிலதை மட்டுமே மாற்றி வேறு எடுத்துக்கலாம் என பேசினர் பெரியவர்கள்.
முதல்நாள் ஈசன் கிருபாவின் நிச்சயம். வீட்டிலேயே தொடங்கியது. முக்கிய சொந்தங்கள் எல்லோரையும் அழைத்திருந்தார் தாத்தா. கிருபாவின் தந்தை வீட்டார் காலையிலேயே வந்து.. இயல்பாக வேலையில் பங்கெடுத்துக் கொண்டனர்.
நாளை நிச்சயம் ஆகவிருக்கும்.. சஹாவின் மாப்பிள்ளை வீட்டாரும் வந்து சேர்ந்திருந்தனர். வீடே விழா கோலம் கொண்டது.
அந்தி சாயும் நேரம்.. நீலமும் மஞ்சளுமாக வானம் குடை பிடிக்க.. பிறை நிலா.. கண்சிமிட்டி ஒற்றை நட்சத்திரத்தின் துணையோடு உலா வர.. முப்பது முக்கோடி தேவர்களும்.. ஆசீவழங்க.. இனிதாக நடந்தது அவர்களின் நிச்சய விழா.
ஈசன் பட்டுவேட்டி சட்டையில் நாயகமாக அமர்ந்திருக்க.. அவனின் வலது புறம்.. சண்முகமும் மீனாட்சியும் அமர்ந்திருந்தனர். ப்ரோகிதர் லக்கனபத்திரிகை வாசித்து தாம்பூல தட்டினை.. அவர்கள் கைகளில் கொடுக்க.. சண்முகம் கொஞ்சம் மனதில்லாமல் வாங்கிக் கொண்டார்தான், அவரிடமிருந்து. ஆனால், எதிரே தன் தந்தையையும் அன்னையும் பார்த்ததும்.. அருகினிலிருந்த கிருபாவினை பார்த்ததும் புன்னகை மலர்ந்தது அவரிடத்தில்.. “மீனாட்சி.. வா.. பிடி” என தன் மனையாளையும் சேர்த்துக் கொண்டு.. தாம்பூலத் தட்டினை தன் தந்தையிடம் கொடுத்தார். அவர்களும் அதனை வாங்கிக் கொண்டு புன்னகைத்தனர்.
சண்முகம், கிருபாவினை அழைத்து தனது அருகே நிற்க வைத்தார். இயல்பாக ஈசனின் அருகாமையாகவும் அது இருந்துவிட.. தாத்தா பாட்டி இருவரும் ஈசனின் மறுபக்கம் வந்து நிற்க.. சம்பூர்ணா அனைவரையும் புகைப்படம் எடுத்தாள்.
விசாகன்.. “நீங்க போங்க, நான் போட்டோ எடுக்கிறேன்” என்றான் சஹாவிடமும்.. சம்பூர்ணாவிடமும்.
சஹா.. சம்பூர்ணா இருவரும் அதில் கலந்துக் கொள்ள.. இனிமையான தருணம் நிழலாக பதிந்தது அந்த அலைபேசியில்.
ஈசனையும் கிருபாவையும் தம்பதியராய் அமர வைத்து.. நலங்கு வைத்தனர் பெரியவர்கள். முதலில் தாத்தா பாட்டி. அடுத்து சண்முகம் தம்பதி. சண்முகம் கிருபாவிற்கு மட்டும் வீபூதி வைத்துவிட்டு தள்ளி நின்றுக் கொண்டார். மீனாட்சிதான் இருவருக்கும் குங்கும் வைத்து.. அட்சதை தூவினார்.. ஆசி வழங்கினார். ஈசன், சண்முகத்தின் பாராமுகத்தில் ஏதும் சொல்லவில்லை. ‘தெரியுமே.. இதெல்லாம் இப்படிதான் என.. அதையே ஏன் எதிர்பார்ப்பானே?’ என எண்ணி தனக்குள் புன்னகைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான் ஏதும் காட்டிக் கொள்ளாமல். கிருபாவிற்குதான் சபையில் இப்படி மாமா செய்க்கிறாரே என வருத்தமாகி போனது. சண்முகம் கிருபாவின் அருகிலேயே நின்றுக் கொண்டார்.
கோகிலாவிற்கு ஆனந்தம்.. அடுத்து தான் சென்று.. பெண் மாப்பிள்ளைக்கு ஆசி வழங்கினார்.
அடுத்து விசாகனின் பெற்றோர் வந்து ஆசி வழங்கினர்.
அடுத்து, ஈசன் கிருபாவோடு, விசாகனும் சஹாவும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
ஈசன், தாத்தாவோடு நின்றுக் கொண்டான்.. வந்தவர்களிடம் நல்லவிதமாக பேசி.. அவர்களை கவனித்து என ஈசன் தாத்தாவோடுதான் இருந்தான்.
சஹா, வாய் நிறைய அண்ணி அண்ணி.. என அழைத்து கிண்டல் செய்துக் கொண்டிருந்தாள்.
பெரிய ஹோட்டலில் ஹால் புக் செய்திருந்தான். வீட்டில் நேற்று நடந்த விழாவின் தாக்கம் இருக்குமென முன்னரே முடிவு செய்திருந்தனர். அதனால், பெரிய ஹால்.
தன் அன்னை தந்தையின் படத்தினை பெரிதாக்கி ஒரு டேபிளில் வைத்திருந்தான் ஈசன். அவர்களிடம் ஆசி வாங்கிக் கொண்டனர் அண்ணன் தங்கை இருவரும். மறுபடியும், தன்னவளோடு.. ஈசன் மீண்டும் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டான். தாங்கள் குடும்பமாக சேர்ந்து.. விளையாட்டாக பேசும் போதும் சரி.. காரியமாக பணம் சேர்ப்பதும் சரி.. அது சஹாவின் திருமணம் என்ற பெயர் சொல்லித்தான். எனவே, ஈசன் அம்மா அப்பா நினைவின் தாக்கத்தில் இருந்தான். முகம் இறுகி இருந்தது.. எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டுமே என டென்ஷன்தான். புன்னகையை மறந்திருந்தான்.
அன்று போலவே சண்முகம் முன்னின்று எல்லாம் செய்தார். முன்போல சுணக்கங்கள் இல்லை. ஈசன் அவரிடம் மிகவும் மரியாதையாக நடந்துக் கொண்டான். எங்கும் அவரை சீண்டவில்லை இந்த நாட்களில். அதனால் சண்முகம் அமைதியாக எல்லாம் செய்தார்.
இந்தமுறை.. சஹாவின் பக்கம் எல்லா உறவுகளும்.. நிறைந்து நின்றது. நிறைந்த சபை என்பது பொருந்தி போனது இப்போது.
ஈசன் எல்லாவற்றுக்கும் கிருபா கிருபா என அவளை தன்னோடு நிறுத்திக் கொண்டான். அதற்காக, ஆர்பாட்டம் செய்தான் என இல்லை.. யாரின் கவனத்தையும் ஈர்க்கவில்லை.. எங்கள் வீட்டில் அவள்தான் இனி எல்லாம் என.. தனக்குதானே சொல்லிக் கொண்டான், அவ்வளவுதான். அவனுக்கு அது தேவையாக இருந்தது. கைபிடித்துக் கொள்ள ஒருத்தி இருக்கிறாள். என் சந்தோஷங்களை கொண்டாட என்னோடு ஒருத்தி இருக்கிறாள்.. என் பொறுப்புகளை பகிர்ந்து கொள்ள என்னோடு சேர்ந்து.. மற்றொரு தோள்களும் இருக்கிறது என அவனுக்கு ஆறுதலாக இருந்தது. அதனால், இயல்பாக கிருபா கிருபா என அழைத்து அருகே நிறுத்திக் கொண்டான்.
சஹாவின் மாப்பிள்ளை வீட்டாரினையும், கிருபாவின் தந்தை வீட்டார்.. என எல்லோரையும் ஈசனும் கிருபாவும் சேர்ந்தே வழியனுப்பினர்.
இரு விழாக்களும் நல்லபடியாக முடிந்தது.
சஹாவின் திருமணம் முடிந்து ஒருமாதம் கடந்துதான் ஈசன் கிருபாவின் திருமணம் முடிவானது.
நாட்கள் இயல்பாக தொடங்கியது.
ஈசன் சென்னையில் வேலைக்கு சென்றான். லீசுக்கு விட்டிருந்த வீட்டினை, அவர்களிடம் பேசி காலி செய்ய வைத்தான்.
வார இறுதி நாட்களில்.. காரைக்குடி வந்தான். தங்கை திருமணத்தின் ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டான்.
தாத்தா என்ன சொன்னாலும்.. கிருபாவின் மூலமாக ஈசன் “உங்க மாமாகிட்ட பத்திரிக்கை இந்த டிசைன் ஓகேவா.. கேளு.” என சொல்லி, அவரிடமும் கலந்துக் கொண்டான்.
‘அவர் குலதெய்வம் கோவில் போக எப்போது வருகிறார் கேளு கிருபா’ என சொன்னான்.
அந்த நேரத்தில் அவனும் கிளம்பி வந்தான்.
இருவரும் சென்னையிலிருந்துதான் வந்தனர்.. ஆனால், தனித்தனியாகதான் வந்து சேர்ந்தனர். மாரியாதையை அவர் எதிர்பார்க்கிறார் என புரிந்து ஈசன், எல்லாம் அவரிடம் சொல்லும்படி.. கிருபாவிடம் சொல்லிவிட்டான்.
அடுத்து புடவை எடுக்க போவதற்கும்.. எல்லோரும் சென்னை வந்தனர். சண்முகம் வீட்டில்தான் எல்லோரும் தங்கினர். ஈசனும், வருந்தி அழைக்கவில்லை, தன் வீட்டிற்கு. சண்முகம் ஏதாவது சொல்லுவார்.. என ஈசன் அமைதியாகிவிட்டான்.
மறுநாள் காலையில், சண்முகம் மீனாட்சி, சம்மு.. கிருபா என நால்வர் மட்டும் கிளம்பினர் கடைக்கு. பாட்டி தாத்தா கோகிலா என இவர்கள் சென்னையில் இருக்கும் சொந்தங்களுக்கு பத்திரிக்கை வைக்க என கிளம்பினர்.
ஈசனும் சஹாவும் கடைக்கு வந்துவிட்டனர்.
குடும்பமாக சஹாவின் மாப்பிள்ளை வீட்டாரும் வந்து சேர.. இரு மணமக்களுக்கும் முகூர்த்த புடவை எடுத்தனர்.
ஈசன் தங்கைக்கு என்ன வேண்டும்.. விசாகன் எப்படி விரும்புகிறான் என பார்த்து அருகிலேயே நின்று எடுத்து கொடுத்தான்.
கிருபாவிற்கு எடுக்கும் போது.. ஷண்முகம் அருகில் நிற்க.. ஈசன் முகம் புன்னகையை தொலைத்தது.
சண்முகம் “உனக்கு பிடித்தார் போல எடுடா..” என்றார்.
ஈசன் தள்ளி சென்றுவிட்டான்.
கிருபா கண்களால் தன்னவனை தேட.. ஈசன் விசாகனோடு பேசிக் கொண்டிருந்தான். கண்கள் இவளிடமேதான் இருந்தது.
கிருபா, இமைக்காமல் ஈசனையே பார்த்தாள். ஈசனும் அப்படியே பார்த்திருந்தான். ‘அருகில் வரமாட்டாயா’ என்ற கேள்விதான் அவள் மனதில். ஈசனுக்கு சண்முகம் இருப்பதால் செல்லுவதற்கு தயக்கம். என்ன சொல்லுவது என தெரியாமல் நின்றான்.
மீனாட்சி புடவைகளை அவள் மேல் வைத்து பார்ப்பது.. தன் கணவனிடம் யோசனை கேட்பது.. மகளிடம் காட்டுவது என.. கிருபாவை சுற்றி பரபரப்பாக நடந்துக் கொண்டிருந்தார்.
கிருபாவிற்கு.. ஏதும் பேச முடியவில்லை.
சஹா, தனக்கான புடவை எடுத்து முடித்ததில்.. தன் மாமியாரோடு.. அவர்களின் உறவுகளுக்கு புடவை எடுக்க என சென்றுவிட்டாள்.
கிருபாவிற்கு என்ன செய்வது என தெரியவில்லை. மாமாவின் மனம் கோணாமல் எப்படி ஈசனை அழைப்பது என நின்றிருந்தாள்.
மீனாட்சி “என்ன கிருபா.. இவ்வளவு பார்த்தாச்சு..” என்றார் சலிப்பாக.
கிருபா பாவமாகதான் தன் அத்தையை பார்த்து நின்றாள்.
சண்முகம் “இரு.. மீனாட்சி, கிருபா.. நீ பொறுமையாக பாரு.. மீனா, நீ வா” என சொல்லி தன் மனையாளை அழைத்து கொண்டே.. “சம்மு, உன் அண்ணனை கூப்பிடு.. எங்க அவன்..” என சத்தம் போட்டவர்.
சம்பூர்ணா அண்ணனை காண சென்றாள்.
சண்முகம், மனைவியிடம் சின்ன குரலில் “புடவை எடுக்கும் போது இவ கூட இருக்கும்ன்னு தெரியாதா.. தங்கைக்கு மட்டும் பார்த்து எடுக்க தெரியுதுள்ள..” என கடிந்துக் கொண்டே அங்கும் இங்கும் பார்த்தார்.
என்னமோ அவர் கண்ணில் ஈசன் தென்படவேயில்லை.
கடை சிப்பந்தி “நான் உங்களுக்கு புடைவையை கட்டி காட்டுறேன்.. அப்போ, ஈசியா உங்களால் செலக்ட் பண்ண முடியும்” என சொல்லி.. கிருபாவின் எதிரே இருந்த.. புடவையை எடுத்தார்.
ஈசன் வந்து நின்றான் இப்போது சம்முவோடு.
சண்முகம் போனை எடுத்துக் கொண்டு.. அவனை எவ்வளவு முடியுமோ அவ்வளவு, பார்வையால் எரித்துக் கொண்டு.. தள்ளி சென்றார்.
ஈசனும் தனது மீசையை நீவிக் கொண்டு.. அவரை முறைத்தபடி கிருபாவின் அருகில் நின்றான் திமிராக.
ஷண்முகத்திற்கு கோவமாகதான் வந்தது. ஒன்றும் செல்லாமல் போய்விட்டார்.
கிருபாவின் முகத்தில் புன்னகை.. தன்னவனை பார்த்ததும். வாடிய முகம் மலர்ந்தது சட்டென.. பணியாளர் புடவையை வைக்க.. அழகாக மிளிர்ந்தாள் பெண்.
ஈசன் எல்லாம் மறந்து அவளையே பார்த்திருந்தான்.
நான்கு புடவைகள் வைக்க.. ஈசனின் கண்கள், ஒரு பாக்குநிற புடவையை அவள் மீது வைத்தும்.. ஒளிர்ந்தது.
கிருபா, புருவம் உயர்த்தி “நல்லா இருக்கா” என கண்களால் கேட்க்க.. ஈசனும் தன் விரல்கள் சேர்த்து.. “பெர்பெக்ட்” என்றான் சத்தமில்லாமல்.
இருவருமாக சேர்ந்து அந்த புடவையை பில் செய்ய சொல்லினர். ஈசன் அதற்கான தொகையை செலுத்திவிட்டு, அவளோடு சேர்ந்து.. மேலே எல்லோரும் இருக்கும், இடத்திற்கு சென்றனர்.
கிருபாவிற்கு, அடுத்தவர்கள் தன்னை கவனிப்பது பிடிக்காது. ஈசன் அப்படி அல்ல.. எல்லோரும் தன்னை கவனிக்கணும்.. அதிலும், சண்முகம் தன்னை கவனிக்க வேண்டுமென்றே இப்படி சில பல வேலைகள் செய்வான். கிருபாவிற்கு, கோவம் வரும்.. ஆனால், ஈசன்.. ஷண்முகத்திற்கு என ஒதுங்கி செல்லும் பல சமயங்களை நினைத்து அமைதியாகிடுவாள்.
மதிய உணவு உண்டு.. சஹாவின் வீட்டாரினை வழியனுப்பி வைத்துவிட்டு.. ஈசன் பொதுவாக “சம்பூர்ணா, உங்க அண்ணிக்கு, ஜூவ்வெல் வாங்கணும்.” என்றான்.
சண்முகம் இதை காதில் வாங்கிக் கொண்டு.. “மீனாட்சி, நீங்க பார்த்து வாங்கிட்டு வந்திடுங்க.. எனக்கு வேலை இருக்கு, நான் கிளம்பறேன்” என்றார்.
கிருபா “என்னங்க இது.. எதுக்கு இப்போ” என முறைத்தவள்.
மாமா “இருங்க மாமா, நாம சேர்ந்தே போலாம்” என்றாள்.
ஈசன் அவளிடம் “இங்க பாரு, நான் நிச்சயத்திற்கே உனக்கு ஏதும் செய்யலை. சஹாவிற்கு, அவங்க வீட்டில் போட்டாங்களே.. எனக்கு தெரியாது. யாருமே சொல்லை” என்றான், முறைப்பாக பார்த்து.
சண்முகம் தடுமாறினார்.
மீனாட்சி ஒன்றும் சொல்ல முடியாமல்.. நின்றார்.
கிருபா “இப்போ நிறைய செலவு இருக்குல்ல.. எதுக்கு இப்போ..” என ஈசனை தனியாக அழைத்து சென்றாள்.
எல்லோரும் பார்த்தனர்.
கிருபா “கல்யாண செலவு.. சஹாவிற்கு பொருட்கள் வாங்கணும். வீட்டையும் ரெனேவேட் செய்துட்டு இருக்கீங்க.. ப்ளீஸ் ஈசன். கொஞ்சம் நிதானமாக செய்யலாம். எனக்கு நிறைய நகை இருக்கு.. எங்க பாட்டியோட நகை.. அம்மாவோடது.. எல்லாம் நிறையவே இருக்கு. இந்த முறையெல்லாம் நம்மக்குள் வேண்டாமே ஈசன்.” என்றாள்.
ஈசன், தலையை கோதிக்கு கொண்டு தன்னை சந்தேகத்தோடு பார்க்கிறாளோ என எண்ணி “ஏன், என்னால் முடியாதுன்னு” என முடிக்க கூட இல்லை, கிருபா குறுக்கிட்டாள் “இல்ல, அப்படி இல்ல… நமக்கு சஹாவின் கல்யாணம் முக்கியம். எப்படி, எந்த நேரத்தில் பணம் தேவைப்படும்ன்னு தெரியாது.. அதனால் சொன்னேன்” என்றாள்.. அவனின் சந்தேக பார்வையை எதிர்கொள்ள முடியாமல்.
ஈசன் கொஞ்சம் அமைதியானான்.. இருந்தும் “கிறுக்கி.. என்கிட்டே இருக்கு. நீ இவ்வளோ யோசிக்கிற அளவில் நம்ம நிலை இல்லை டா..” என்றான் புரிய வைக்கும் குரலில்.
கிருபாவின் முகம் லேசாக தெளிந்தது.. ஆனாலும், ஒத்துக் கொள்ளவில்லை.. “சரிங்க, இப்போது செலவு நிறைய இருக்கு.. நான் வாங்கிக்கிறேன். கண்டிப்பா எனக்கு நீங்கதானே செய்யனும். இப்போது, நாம.. கொஞ்சம்.. ம்.. என் பேச்சை கேட்கனும்.” என்றாள். என்ன செய்வது என தெரியாமல்.
ஈசன் “அதெல்லாம் முடியாது.. உன் மாமா என்னை பார்வையாலேயே சாவடிச்சிடுவார். வா, நான் உனக்கு வாங்கி கொடுத்தே ஆகணும். இ..இது.. என் பெர்ஸ்டீஜ் இஸ்ஸு. அவர பார்க்குற பார்வையை பாரேன்” என்றான், சண்முகத்தை பார்த்துக் கொண்டே.
ஈசன் “கிறுக்கி.. நீதான் என்னை பேச வைக்கிற.. நான் எனக்காகத்தான் வாங்கிக்க சொன்னேன். நீதான் ஓவர் திங்க்ஸ் பண்ணி.. என்னையும்.. ஓவரா பேச வைக்கிற.. வா” என சொல்லி அவளின் கைபிடித்து அழைத்து சென்றான்.
ஈசன் “போலாமா..” என்றான் பொதுவாக.
கிருபா தன் கையை விளக்கி கொள்ள பார்த்தாள். ஈசன் வேண்டுமென்றே இரண்டு நிமிடம் விடாமல் பிடித்துக் கொண்டிருந்தான்.
மீனாட்சி “சரி ப்பா, நாம எப்போதும் இந்த கடையில்தான் வாங்குவோம்.. போலாமா” என்றார்.
ஈசன் இப்போதுதான் சின்ன நக்கல் புன்னகையோடு.. தன்னவளின் கையை விட்டான்.
எல்லோரும் மீண்டும் அந்த கடைக்கு வந்தனர்.
சண்முகம், சென்று அமர்ந்துக் கொண்டார் விசிட்டர்ஸ் ஏரியாவில்.
மீனாட்சி சம்மு.. சஹா கிருபா ஈசன் என ஐவர் மட்டுமே சென்றனர். கிருபாவிற்கு என ஈசன் ஒரு ஹாரம் தேர்வு செய்தான். அவன் மட்டுமே தேர்வு செய்தான். கிருபா அருகினில் நின்றாள்.. அவ்வளவுதான். எல்லோரிடத்திலும், நல்லா இருக்கா என கிருபா கேட்க்க.. எல்லோரும் தலையசைத்தனர்.
ஈசன், யாரின் விருப்பத்தையும் கேட்கவில்லை. அவன் இப்போதும் தனியாட்சிதான்.