ஈசன் கிருபாவின் அருகில் வந்து நின்றான்.. கிருபாவின் பேச்சு நின்று போனது.. ஈசன் “என்ன முகமே ஒரு மாதிரி இருக்கு..” என சொல்லி அவளின் நெற்றியில் கை வைத்து பார்த்தான்.

கிருபா அவனின் கையை தட்டி விட்டால்..  

ஈசன் “என்ன டா..” என்றான்.

கிருபா “உங்க முகம்தான் சரியில்லை..” என்றாள்.

ஈசன் “அப்படி எல்லாம் இல்லை” என்றான்.

கிருபா “சஹா நிச்சயத்தப்ப.. நம்மை பற்றி பேசுறாங்களேன்னு கோவமா..” என்றாள்.

ஈசன் “ஹேய்.. அப்படி எல்லாம் இல்லை டி” என சொல்லி.. அவளின் கைகளை பற்றிக் கொண்டவன்.. “எனக்கு ஏன் இது தெரியாமல் போச்சு.. எனக்கு உடனே கல்யாணம் என்றாலும் ஓகேதான். நீதான் எங்க மாமா சம்மதம் வேண்டும்.. மாமர சம்மதம் வேணும்ன்னு நிக்குற” என்றான் கிண்டலாக.

கிருபா ஒன்றும் சொல்லாமல் அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்.

ஈசன் “தாத்தா என்ன சொல்றாரோ அப்படியே செய்துக்கலாம் கிருபா. நீ என்னை பத்தி ரொம்ப யோசிக்காத, நான் நார்மல். அவ்வளோ கேட்டவன் இல்லை நான். எனக்கு உன்கூட இருந்தால் போதும்.. அதனால், நான் ரெடி டா..” என்றான்.

கிருபா தன்னவனை இறுக்கமாக கட்டிக் கொண்டாள்.. இந்த வார்த்தையில்.

“ஆழியிலிருந்து அலசி எடுத்தேனே..

அடைக்கலம் அமைக்க..

தகுந்தவன் தானே..”

ஈசன் மனம் நிறைந்து போனது.. அவளின் உச்சியில் முத்தம் பதித்தான். எதோ ரகசிய பேச்சுகள் சென்றது அவர்களுக்குள். நேரமும் கடந்தது. கீழே வந்தனர். மனமும் தெளிவாக இருந்தது.

கிருபா கிளம்பி கடைக்கு சென்றாள்.

ஈசன் ஓய்வெடுக்க என அறைக்கு சென்றான்.

இரவே, தன் மகன் சண்முகத்திற்கு போன் செய்து, நாளை கிளம்பி வாப்பா.. என்றார்  அருணாசலம். அடுத்த வாரத்தில் சஹாவின் நிச்சயம். 

ஷண்முகம் எப்போதும் போல தட்டிகழிக்க பார்த்தார்.

தந்தையோ “ஒரு பொறுப்பை இப்படிதான் தட்டி கழிப்பியா நீ.. அதுதான் பழக்கமா” என்றார்.

ஷண்முகம் “இல்ல ப்பா.. அதான் அவன் வந்தாச்சே” என்றார்.

தந்தை “அதெல்லாம் உனக்கு தேவையில்லாதது.. நீதான் சம்பந்தம் பேசினாய்..” என்றார்.

ஷண்முகம் “அப்பா, நான் சும்மா” என சொல்ல..

தந்தையோ அமைதியானார்.

ஷண்முகத்திற்கே புரிந்தது.. நிச்சயம் வைத்திருக்கிறோம்.. அப்பா என்னை முன்னிறுத்த முயலுகிறார் என புரிகிறது. ஈசனை கண்டதும் பின்வாங்குகிறது மனது. ஆனால், எனக்கான கௌரவம் வேண்டும் என உள்மனது சொல்லுகிறது. சண்முகம் “சரி அப்பா, நான் வரேன்” என சொல்லிவிட்டார்.

தந்தைக்கோ நிம்மதி. 

மறுநாள் இரவில்தான் வந்தார் ஷண்முகம்.

ஈசன் திண்ணையில்தான் தாத்தாவோடு.. அமர்ந்திருந்தான்.

தாத்தா “வா ப்பா” என்றார் வரவேற்பாக.

ஈசன் அவரை பார்த்து “வாங்க” என்றான் முதல்முறையாக. அவரும் தலையசைத்தார்.

எல்லோரும் வரவேற்றனர் சண்முகத்தை. சண்முகம், நேராக தன் அறைக்கு சென்று ப்ரெஷ்ஷாகி வந்தார்..

எல்லோரும் உண்டு முடிந்திருந்தனர்.. கிருபாதான் ஷண்முகத்திற்கு பரிமாறினாள்.

கிருபா “அத்தை எப்படி இருக்காங்க மாமா..” என்றாள்.

சண்முகம் “ம்..” என்றார்.. அவ்வளவுதான்.

கிருபாவும் அமைதியாகிவிட்டாள்.

உண்டு முடித்து சண்முகம் வந்து பட்டாசாலையில் அமர்ந்தார்.

திண்ணையில் அமர்ந்திருந்த ஈசன்.. எழுந்து தன் அறைக்கு சென்றுவிட்டான்.

தாத்தா “ஷண்முகா” என அழைத்தார் மகனை.

சண்முகம் வந்தார்.

தந்தை பொதுவாக குடும்பத்தை பற்றி கேட்டுக் கொண்டார். பேத்தி வகுப்பிற்கு செல்லுகிறாளா.. வேலை எப்படி இருக்கு என பேசி முடித்தார்.

கோகிலா வந்தார்.

இப்போது தாத்தா “சண்முகம், கிருபா ஈசன்.. பத்தி ஏதாவது முடிவு சொல்லுப்பா.. நம் பிள்ளை உன் வாயால் கேட்கணும்ன்னு நினைக்கிறா” என சொல்ல.. சொல்ல.. கிருபா வந்து சேர்ந்தாள் அங்கே.

கிருபா சென்றதும்.. ஈசன், பட்டாசாலையில் வந்து அமர்ந்துக் கொண்டான். அவனுக்கு  இந்த பேச்சு வார்த்தையினை கவனிக்க.. ஆசையாக இருந்தது. அமைதியாக வேடிக்கை பார்ப்பவன் போல அமர்ந்துக் கொண்டான்.

சண்முகம் கிருபவினை பார்த்தார்.. “நான் என்ன அப்பா.. சொல்றது. ஆக வேண்டியதை பாருங்க. நீங்க சொல்றபடி நான் செய்கிறேன்” என்றார்.

கிருபா “எனக்கு புரியலை மாமா.. இன்னுமா உங்களுக்கு ஈசனை பிடிக்கலை” என்றாள்.

சண்முகம் “அப்பா, அவளுக்கு என்ன விருப்பமோ, நடக்கட்டும்” என்றார், பட்டும் படாமல்.

கிருபா “எனக்கும் அதேதான் தாத்தா. எங்க மாமா இப்படி எதையோ தொலைச்சது போல இருப்பதை பார்க்க முடியலை. எனக்கு இப்போ எந்த ஏற்பாடும் வேண்டாம். சஹாவின் நிச்சயம் நல்லபடியாக முடியட்டும் தாத்தா.” என்றாள்.

சண்முகம் என்னவென பார்த்தார் தந்தையை.

கோகிலா “அது அண்ணா..” என தயங்க.

அருணாசலம் “கிருபாதான் பெரியவ.. முதலில் அவளுக்குத்தான் வரன் பார்த்தோம். எல்லோரிடமும் சொல்லியாச்சு.. நாளைக்கு.. ஈசனையும் இவளையும் ஒன்றாக பார்க்கிறவங்க.. ஏதும் சொல்ல கூடாதில்ல.. அவளுக்கு நிச்சயம் செய்திடலாம்ன்னு, எங்களுக்கு யோசனை. அவ, நீ சொன்னால்தான் ஆச்சுன்னு சொல்றா” என்றார் கிருபாவினை பார்த்து.

சண்முகம் ஓய்ந்து போனார். முன்பிருந்த கோவம் இப்போது இல்லைதான் ஈசன் மேல்.. ஆனாலும், எங்க கிருபா எப்படி வாழ வேண்டியவ!.. என அவருக்குள் ஒரு கற்பனை. இப்படி, இவனை போய் கல்யாணம் செய்துக்கனுமா என எண்ணம். ஆனால், தன் ஒருவனால் ஏதும் தடைபட கூடாது என.. இந்த நாட்களில் யோசித்துதான் இருந்தார். எப்படி பேசுவது என தெரியவில்லை. இப்போது கிருபா கேட்க்கும் போது.. ஒரு பதிலை சொல்லிவிட்டார். ஆனாலும், தன் ஆழ்மனதில் இன்னமும் ஈசன்.. எங்கள் கிருபாவிற்கு இரண்டாம் பட்சமே.. எனத்தான் எண்ணம். கிருபாவின் முகத்தை பார்த்தார்.. கிருபா தன் அறை நோக்கி நடந்துக் கொண்டிருந்தாள்.

சண்முகம் “கிருபா..” என்றார்.

கிருபா காது கேட்க்காதவள் போல் சென்றாள்.

தாத்தா “கிருபா, மாமா கூப்பிடுறான்” என்றார்.

கிருபா திரும்பி வந்தாள்.. 

ஷண்முகம் “இங்க வா” என்றார்.

கிருபா அவரின் அருகே அமர்ந்தாள்.

சண்முகம் “என்ன அவனைத்தான் கட்டிப்பியா” என்றார் புன்னகையோடு.

இந்த நேரடி பேச்சில் கிருபா அதிர்ந்தாலும், புன்னகைத்தாள்.

சண்முகம் “உனக்கு அவன் கொஞ்சம் குறைச்சல்தான். அவன் பழக்க வழக்கம் எப்படின்னு தெரியலை.. ட்ரிங்க்ஸ் எடுப்பானோ..” என்றார்.

கிருபா “அதெல்லாம் எப்போவாது.. “ என்றாள்.

சண்முகம் “ம்.. அதுவும் வேண்டாம்ன்னு சொல்லு.. ஒரே இடத்தில் உட்கார்ந்துகிட்டு.. என்ன வேலை இது. ஆபீஸ் போகிற வேலையாக பார்க்க சொல்லு..” என்றார்.

கிருபா நிரம்பிய புன்னகையை அடக்கிக் கொண்டு.. “ம்..” என்றாள்.

சண்முகம் தொடர்ந்தார் “உங்க அத்தை சொன்னால்.. நல்லாத்தான் சம்பூர்ணாவிடம் பேசுரானாம். போக போக நம்ம வீட்டுக்கு பழகிடுவான்.. தனியா வளர்ந்ததால்.. எப்படி பேசனும்ன்னு தெரியலை.. மற்றபடி ஒன்னும் பிரச்சனையிலைன்னு சொன்னால். அதெல்லாம் இல்ல, அவன் கொஞ்சம் ரவுடிதான். ம்.. உனக்கு பாரின் மாப்பிள்ளைதான் பார்த்தேன்.. நல்ல பெரிய வீடு.. கார்.. ஹூம்.. விடு.” என்றவர் பெருமூச்சு விட்டார்.

மீண்டும் அவரே “எங்க கிருபா எங்க கூடவே இருப்பா.. அதனால், ஒத்துக்கிறேன். நல்லா பார்த்துப்பானா.. இப்போவெல்லாம் ஒழுங்கா இருப்பது போல தெரியுது.. சரின்னு சொல்றேன். எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு இருக்க கூடாது.. சொல்லிட்டேன்.” என்றார்.

கிருபா விழிவிரித்து பார்த்தாள்.. தன் மாமாவை.. வளர்த்தவனின்.. கோணங்கள் வேறுதானே. கிருபா “அதெல்லாம் நல்லவங்க மாமா” என்றாள்.

சண்முகம் கிருபாவின் தலையை வருடியவர்.. “நீ நிம்மதியா சந்தோஷமா இருக்கணும்.” என்றார்.

கிருபா கண்கலங்க தலையசைத்தார்.

தந்தையை பார்த்தவர் “என்ன ப்பா, எப்படி செய்யலாம்ன்னு சொல்லுங்க.. கிரான்டா, செய்யறோம். என்ன செய்யலாம் சொல்லுங்க” என்றார்.

ஈசனின் காதில் அதிகம் சண்முகம் பேசியது விழவில்லை.. ஆனால், அவளை அருகமர்ந்த்தி அவர் பேசியது பார்க்க நன்றாக இருந்தது.

கிருபா ஈசனை அழைக்க வந்தாள்.. “வாங்க” என்றாள்.

ஈசனும் எழுந்து அவளோடு சென்றான்.

கிருபா “மாமா, நீங்களே சொல்லுங்க” என்றாள்.

சண்முகம் அதிர்ந்தார்.. தடுமாறினார்.. பின் கணீர் குரலில் “கிருபா கிடைக்க நீ கொடுத்து வைத்திருக்கனும். பார்த்துக்கோ” என்றார்.

ஈசன் “ஏன் தாத்தா, நானென்ன அவ்வளவு மோசமாகவா இருக்கேன். சொல்லுங்க, அந்த பொறுப்பானவளுக்கு என்னைத்தான் பிடிச்சிருக்குன்னு..” என்றான் திமிராக.

கிருபா, முறைத்தாள்.

கோகிலா சிரித்தார்.

ஷண்முகம் “அதான் சொன்னேனே.. மரியாதை தெரியாதவன்” என்றார்.

அருணாசலம் “ஈசா, இதென்ன அமைதியா இருங்க” என்றார்.

ஈசன் புன்னகையோடு.. தாத்தாவின் அருகே அமர்ந்தான்.

தாத்தா திட்டமிட தொடங்கினார். சண்முகமும் ஈசனும் கேட்டுக் கொண்டனர்.