நஞ்சினாலான அமுதன்!

21

ஈசன் பெங்களூர் வந்து சேர்ந்தான். 

கிருபா அவன் வந்து சேர்ந்ததும் சஹாவின் எண்ணுக்கு அழைத்தாள். சஹா அண்ணனிடம் அலைபேசியை கொடுத்துவிட்டாள். ஈசன் திரையை பார்க்க.. அண்ணி.. எனதான் ஒளிர்ந்தது. ஈசன் தங்கையை பார்த்து விட்டு, அழைப்பை ஏற்றான்.

வீடியோ கால்ஸ்.. இருவருக்கும் பிரிவின் வலி தீர்ந்தும் தீராத நிலையில் ‘வந்துட்டியா..’ என அவளும், ‘வந்துட்டேன்..’ என அவனும், மௌனமாக  நிமிடங்களை உள்வாங்கிக் கொண்டனர்.. கிருபா “எப்போ இங்க வரீங்க” என்றாள்.

ஈசன் அவளை பார்த்து பேசாமலே இருந்தான். வெளிநாட்டில் இருக்கிறோம் எனும் வரை.. ஒரு உறுதியில் இருந்தவன், இந்தியா வந்துவிட்டோம் எனும் போது.. என்னமோ அவள் அருகிலேயே இருக்கிறாள்.. நான் எப்போது போய் பார்ப்பது என தோன்றிவிட்டது. பேசவே முடியவில்லை.. அப்படியே அமைதியாக அமர்ந்துக் கொண்டான் லாபியில்.

சஹா.. அண்ணனின் தோள் தொட்டு ஆறுதலாக பார்த்தாள்.

ஈசன் “நீ ஏன் வரலை..” என்றான். அவனுக்கே அந்த கேள்வி.. கொஞ்சம் அதிகமாகத்தான் தெரிந்தது. ஆனாலும், ஒரு ஆர்வம் எழுந்தது.

கிருபாவிற்கு, தொண்டையை அடைத்தது “நீங்க போங்க.. பேசாதீங்க.. இங்கதானே வரணும். சென்னை போறீங்க” என்றாள்.. கோவமாக.. ஆனால், கண்ணீர்தான் முட்டிக் கொண்டு நின்றது.

ஈசன் புன்னகைத்தான் “நான்தான் கஞ்சாம்பட்டி ஆச்சே.. அதான் போக்குவரத்து சார்ஜ் அதிகமாகுமேன்னு.. வரலை.” என்றான். அவள் முகம் வாடுவதை பார்த்து “அதான் சொன்னேனே.. அங்க போய் தலையை காண்பித்துவிட்டு வரேன். ஒரு பத்துநாள் சேர்ந்தார் போல லீவில் வரலாம்ன்னு இருக்கேன்.” என்றான்.

கிருபா “போடா..” என்றாள்.

இருவரும் கொஞ்சம்.. புன்னகைத்து தளர்ந்து அமர்ந்தனர்.

கிருபா “சாப்பிடுங்க.. சஹா வெயிட் பண்றா. சீக்கிரமாக இங்க வாங்க..” என்றாள், ஈசனும் கேட்டுக் கொண்டு விடைபெற்றான்.

ஒருநாள் அங்கேயே ஹால்ட் அவன். அவனுக்கு சென்னை  அலுவலகம் செல்ல வேண்டி இருந்தது, அதனால்.. ஊருக்கு வரவில்லை, இப்போது. 

ஈசனுக்கு நாட்கள் விரைவாக சென்றது. சென்னை அலுவலகம் சென்று.. தன் வேலைகளை முடித்தான். ஒருவாரம் அப்படியே சென்றது. அடுத்த வார விடுமுறையில்தான் காரைக்குடி வந்தான்.

கிருபாவிற்கு தெரியும்.. அவன் காலையில்தான் கிளம்புகிறான் என. இரவில் டிரைவ் வேண்டாம் எனத்தான் கிருபாவின் உத்திரவு. 

தாத்தா பாட்டி இருவரும் பேரன் வந்திடுவான்.. என வாசலையே பார்த்திருந்தனர். கோகிலா சமையலை தடபுடலாக செய்திருந்தார். கிருபா, வந்து சேர்ந்தாள்.

ஈசன் மதியம் வந்து சேர்ந்துவிட்டான் வீட்டிற்கு.

வெறுப்பாகவும் எரிச்சலாகவும் முன்பு வரவேற்க்கப்பட்டவன்.. இப்போது ஆசையாக அன்பாக வரவேற்க்கப்படுகிறான்.

ஈசன் நெகிழ்ந்து போனான்.. வந்ததும்.. எல்லோரும் தனக்காக காத்திருப்பதை பார்த்து. தாத்தாவின் காலில் விழுந்தான்.. அவனுக்கு பேச்சுக்கள் வரவில்லை.. தாத்தா ஆசீர்வாதம் செய்ய.. பாட்டி “ஈசா, என்ன இது எழுந்திரு” என்றார்.

அடுத்து அவரின் காலிலும் விழுந்தான்.. பாட்டி “என்ன டா இது.. முகத்தை காட்டுப்பா..” என்றார்.

ஈசன் எழுந்து நின்றான் வசீகரமான புன்னகையோடு.. கண்ணில் நெகிழ்ச்சி.. முகத்தில் மகிழ்ச்சி என பார்க்கவே அழகா இருந்தான். முன்பு இருந்த முசுட்டு தனங்கள் ஏதும் இல்லை.. கண்களில். கோபங்கள்.. கவலை ஏதுமில்லை.. புது தெம்பு தெரிந்தது அவனின் தோற்றத்தில்.. தாத்தா தன் அனுபத்தில் கண்டுகொண்டார் அவனை.

கிருபாவின் கண்களில் காதல் மட்டுமே.. ஒருமாதிரி பெருமை.. ரக்டு லுக்கில் இருந்தவன்.. குடும்ப விளக்காக.. அதாவது, அம்மாஞ்சி லுக்கில் வந்து நிற்கிறான். சார், காலம் மாற்றாத வஸ்துவே கிடையாது. ஏன் கடவுளை கூட சிலசமயம்.. ஒன்றுமில்லாமல் கட்டி வைத்துவிடும். சில சமயம்.. ஓஹோ என பிரசிப்பெற்றதாக்கிடும், எமகாதகனான காலம். இவன் காலம் செய்த அமுதன். நிரம்பி தளும்பி பாந்தமாக.. நின்றான்.

கிருபா கண்களில் நிரப்பிக் கொண்டாள்.. 

ஈசன் பெரியவர்களிடம் பேசி விட்டு, மெய்மறந்து நின்ற கிருபாவின் அருகில் வந்து குனிந்து.. “என்ன டி, இன்னும் மெய்மறந்து நிற்கிற..” என தனது டி-ஷர்ட்டினை பின்பக்கம் எடுத்து விட்டுக் கொண்டு அவளை நிமிர்ந்து பார்த்து.. “வா.. போலாம்” என சொல்லி உள்ளே பட்டாசாலைக்கு வந்தான்.

கண்ணம்மாக்கா “தம்பி என்ன ஆள் அடையாளமே தெரியாமல் ஆகிட்டிங்க” என சொல்லி நின்றார்.

ஈசன் “என்ன க்கா, இப்படி சொல்லிடீங்க.. அதே ஈசன்தான். கிருபாவை கட்டிக்கனும்ன்னே.. வந்துட்டேன். நீங்க வேற, யார் நீன்னு கேட்க்குறீங்க” என்றான் கிண்டலாக.

கண்ணம்மாக்கா “அட இது ஈசன் தம்பி.. அப்படியே அதிரடி பேச்சுதான்” என சொல்லி சிரித்தார்.

கோகிலா “சாப்பிடலாம் வா ஈசா.. எல்லோரும் உனக்காகத்தான் வெயிடிங்” என்றார்.

ஈசனும் “இதோ வரேன் அத்தை.. தாத்தா சாப்பிடுங்க.. இதோ வந்திடுறேன்” என சொல்லி தனது அறைக்கு சென்றான்.

பத்து நிமிடத்தில் ஒரு ஷாட்ஸ் டி-ஷர்ட்டில் வெளியே வந்தான். தாத்தா பாட்டியோடு வந்து அமர்ந்தான்.. கிருபாவும் அமர்ந்து உண்டுக் கொண்டிருந்தாள். ஈசன் இயல்பு போல.. காட்டிக் கொண்டாலும்.. அவனால், அவளை தவிர கண்களை வேறெங்கும் செலுத்த முடியவில்லை.. தாத்தா கேள்வியாக கேட்க்கிறார். ஆனால், பதில் பேச ஆரம்பிக்கும் போதும்.. முடிக்கும் போதும் அவளை தொட்டு மீள்கின்றது பார்வை. தடுமாறினான்.. சமாளித்தான் அந்த இருபது நிமிடத்தை.

கிருபா உண்டு எழுந்து சென்றுவிட்டாள். அப்பாடா.. ஈசன் பார்வை சீரானது.

தாத்தாவும், ஈசனும் உண்டு முடித்து இன்னும் பேசி கொண்டிருந்தார். கோகிலாவும் கண்ணாம்மாவும் உண்பதற்காக அமர்ந்தனர்.

கிருபா, ஓய்வெடுக்க சென்றுவிட்டாள். 

தாத்தா அப்படியே எழுந்து சென்றார்.. பட்டாசாலையில் அமர்ந்து மீண்டும் ஈசனும் தாத்தாவும் பேசினார்.. சஹாவின் நிச்சயம் குறித்துதான் பேச்சுகள் சென்றது.

தாத்தா வீட்டிலேயே நடத்த வேண்டும் என்றார்.. ஈசன் இடம் சரியாக இருக்காதே என்றான். என்ன செலவு.. எப்படி செய்வது.. யாரை அழைப்பது.. என பேச்சுகள் சென்றது.

தாத்தாவின் வார்த்தைகளுக்கு உடன்பட்டான் ஈசன்.

அந்த நேரத்தில் மாலை காபி எடுத்து வந்தார் கண்ணம்மா அக்கா.

கோகிலா “அப்பா, அவனை கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடுங்க ப்பா, பாவம்.. அப்புறம் பேசிக்கலாம்.” என்றார்.

அதன்பிறகும் இருவரும் புன்னகைத்துக் கொண்டே.. காபி சாப்பிட்டு முடித்தனர். ஆனாலும் ஈசன் எழுந்து செல்லவில்லை.. அத்தையோடு உரையாடிக் கொண்டிருந்தான்.

கிருபாவும் எழுந்து வந்து.. பட்டாசாலையில் பார்க்க ஈசன், கண்சிமிட்டி வரவேற்ப்பாய் புன்னகைத்தான் அவளை பார்த்து.

கிருபா, பதில் புன்னகை கொடுத்தாள்.

தாத்தா “கிருபாம்மா, நாம.. சஹாவின் நிச்சயத்தை.. வீட்டிலேயே வைச்சிக்கலாம்ன்னு பேசினது ஞாபகம் இருக்கா.. இவன் இடம் இருக்கான்னு கேட்க்கிறான்” என சொல்லி சிரித்தார்.

கிருபா “தாத்தா, மேலே இடம் இருக்குன்னு தெரியாதில்ல தாத்தா..” என்றாள்.

தாத்தா “சொல்லிட்டேன்.. நீயும் இவனும் போய் மேலே பார்த்துட்டு.. எங்கே அட்டான்ஸ் போடணும்ன்னு பார்த்துட்டு வாங்க” என்றார்.

ஈசன் தயாரானான்.. அவளோடு செல்ல..

கிருபா காபி பிஸ்கெட் என பொறுமையாக உண்டுக் கொண்டிருந்தாள்.

கோகிலா “அதெல்லாம் இடம் இருக்கு தம்பி.. பெரிய ஹால்.. நாலு ரூம் மேலே இருக்கு.. மத்த இடத்தில் சாப்பாடு போட்டுக்கலாம். நீங்க போய் பாருங்க” என்றார்.

அடுத்து தன் தந்தையை பார்த்து கோகிலா “அப்பா, இவங்க கல்யாணம் பத்தி எப்போ பேசுவது. சஹா நிச்சயத்தோட இவர்களுடையதையும் செய்திடலாமா அப்பா.. நீங்க ஏதும் இதைபத்தி பேசலை. எல்லோரும் கேட்க்கிறாங்க” என்றார்.

அருணாசலமும் “எனக்கும் அதுதான் யோசனையாக இருக்கு.. பெண் எடுத்து, பெண் கொடுப்பதுதான் முறை. சண்முகம் இப்போதுதான் சஹாவிற்கு செய்யவே அமைதியாக இருக்கான். பேசணும்மா” என்றார்.

கோகிலா “ஒரே நாளில் கூட காலையில் இவங்க நிச்சயம் செய்திடலாம் ப்பா.. கிருபா.. பெரியவள்.. க்கும்.. எல்லோரும் ஏதாவது சொல்லிட போறாங்க ப்பா.. என் நாத்த்னாரே கேட்க்கிறாங்க.. முதலில் கிருபாவிற்கு நிச்சயமாவது செய்யலாமேன்னு கேட்க்கிறாங்க” என்றார்.

கிருபா “அம்மா, என்ன ம்மா.. இது.. அவர்க்ளுக்காகவெல்லாம் ஏதும் செய்ய முடியாது” என்றாள்.

கோகிலா “நீ சும்மா இருடி.. இதெல்லாம் உனக்கு புரியாது” என சொல்லி தந்தையை பார்த்தார்.. மகளாக இல்லாமல்.. ஒரு பெண்ணை பெற்ற அன்னையாக.

ஈசனுக்கும் யோசனை சென்றது. அமைதியானான்.

கோகிலா “நான் என்ன சொல்ல வரேன்னா.. கிருபாவிக்ரும் ஈசனுக்கும் முதலில் நிச்சயம் மட்டும் முடித்திடுவோம். கல்யாணம் சஹா.. திருமணத்திற்கு பிறகு.. வைத்துக் கொள்ளலாம் ப்பா. இதை யோசிங்கப்பா” என்றார்.

கிருபா, ஒன்றும் பேசாமல்.. சாவிகளை எடுத்துக் கொண்டு.. மேலே எழுந்து சென்றாள்.

தாத்தா “ஈசா.. போய் இடம் பார்த்துட்டு வாப்பா..” என்றார்.

ஈசனும் அவர்கள் தனியே பேச விரும்புகிறார்கள் என, மேலே சென்றான்.

கோகிலா “சொந்தமெல்லாம் வருவாங்க.. கிருபாவினை எதாவது சொல்லிட போறாங்க. அத்தோட ஈசன் கிருபா சேர்ந்து பார்த்து.. அதுவேறு பேச்சு வந்திட போகுது அப்பா..” என்றார் அன்னையாக.

அருணாசலம் “கோகிலா, நானும் இதை யோசிச்சேன்.. சண்முகத்திடம் பேசிடலாம்.” என்றார். 

மேலே ஏறியதும் கீழ் போலவே.. முற்றம்.. இருபக்கமும் அறைகள்.. அதை தாண்டி பெரிய ஹால் போன்ற அமைப்பு அதற்கடுத்து.. மொட்டை மாடி போன்ற அமைப்பு.. பின்பக்கமாகவும் கீழே இறங்க படிக்கட்டுகள் இருந்தது.

கிருபா அமைதியாக எல்லா அறைகளையும் திறந்து காண்பித்தாள். ஈசனும் ஏதும் பேசவில்லை. கீழே பேசியது என்னமோ இருவர் மனதையும் வதைத்திருந்தது. அதனால் அமைதியாகவே இருந்தனர்.

கிருபா “எல்லா விசேஷமும் இங்கதான் நடக்கும் எப்போதும். கீழ சமையல் செய்ய இடமிருக்கு. ஆனால், இப்போ சமைப்பதில்லை.. இப்போவெல்லாம், கேட்டரிங்கில் ஆர்டர் செய்திடுறோம்.. வேணும்ன்னா அட்டான்ஸ்..” என ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள்.