ஈசன் “தாத்தா, என்ன இப்போ..” என எழுந்தவன்.. என்ன செய்திடுவார் என சண்முகத்தின் முன்னே நின்றான்.
ஈசன் “தாத்தா, கிருபாவை எனக்கு கல்யாணம் செய்து கொடுங்க.. நான் பார்த்துக்கிறேன்.. நல்ல விதமாக சொல்லனும்ன்னு நினைச்சேன்.. இப்படி சொல்ல வேண்டியதாக போச்சு” என தாத்தாவிற்கு சைகை காட்டி.. சண்முகத்தின் எதிரேயே பெண் கேட்டான்.
சண்முகம், இப்போது கிருபாவை பார்த்தார்.
கிருபா அங்கே தலைகுனிந்து நின்றாள். தவித்து போனாள் பெண். என்ன செய்வதென தெரியவில்லை அவளுக்கு. நான்தான் தேவையில்லாமல்.. ஈசனை மாமாவிடம் பேச சொல்லி அனுப்பிவிட்டோனோ என எண்ணினாள். இவர்கள் எப்போதுதான் அமைதியாவார்கள்.. இதென்ன இருவருக்கும் புரியாதா.. என்னதான் செய்வது.. என இயலாமையாக ஈசனையே பார்த்துக் கொண்டு நின்றாள். பேசவும் முடியவில்லை. அவனை பார்வையால் பார்ப்பதை கூட.. சண்முகத்தின் பார்வைக்கு தப்பித்தான் பார்த்தாள்.
ஈசன் கிருபாவின் பார்வையை எதிர்கொண்டான். அவளின் கலக்கம் கொஞ்சம் அவனை.. தாக்கியது. தன்னை கட்டுபடுத்திக் கொள்ள முயன்றான்.
சண்முகம் “அப்பா உங்களுக்கு தெரியுமா எல்லாம்” என்றார், அவருக்கு நேற்று தந்தை.. தான் கொண்டு வந்த வரனை வேண்டாம் என சொன்னது.. இப்போது ஈசன் பெண் கேட்பது என எல்லாம் அவரை கோவப்படுத்தியது. இன்னும் இன்னும் தான் இந்த வீட்டில் முக்கியமில்லையோ என்ற எண்ணம்தான் வருகிறது அவருக்கு. ரௌத்ரமாக நின்றார்.
ஈசன், தாத்ஹ்டாவிடம் ஷண்முகம் பேசவும்.. குறிக்கிட்டு.. “ம்.. என்ன.. என்ன.. பேசுறீங்க, நீங்க சொல்றபடிதான் எல்லோரும் நடக்கணும்ன்னு நினைக்காதீங்க. அது நடக்காது. நீங்க பேசாதீங்க.. தாத்தா பதில் சொல்லட்டும்.” என்றான், கிருபாவினை தள்ளி வைத்து மீண்டும் சத்தமிட்டான்.
சண்முகம் தந்தையை முறைத்தார் “அப்பா, நல்ல திட்டம் போடுறான். நீங்களும் பேசாமல் கேட்டுகிட்டு நிற்கிறீங்க” என்றார்.
அருணாசலம் அமர்ந்த இடத்திலிருந்து அசையவில்லை.. ஈசன் மேல்தான் கோவமாக வந்தது. ஆனால், அவன் அன்றே சொன்னானே.. நானே சொல்லிடுறேன் தாத்தா.. கெட்டபேர் என்னோட போய்டும் என்றானே.. அதனால், பேசுகிறானோ என எண்ணிக் கொண்டு.. இதை எப்படி சரி செய்வது என யோசனையில் இருந்தார்.
ஷண்முகம் “என்ன அமைதியாக இருக்கீங்க.. எல்லாம் உங்களுக்கு தெரிந்துதான் நான் கொண்டு வந்த வரனை வேண்டாம் என்றீர்களா” என்றார்.
அருணாசலம் பதில் என்ன சொன்னாலும் சங்கடம்.. தான் மாற்றி பேசுவதாக வரும் என அமைதியாகினர்.
கிருபா “மாமா, தாத்தாவை ஏன் கேட்க்குறீங்க, அவருக்கு எதுவும் தெரியாது..” என்றாள்.
சண்முகம் “அப்போ உனக்கு தெரியும்.” என்றார்.
ஈசன் “அவகிட்ட எதுக்கு போறீங்க, என்கிட்டே பேசுங்களேன்.. நான்தான் சொல்றேனே.. எனக்கு அவளை கல்யாணம் செய்து கொடுங்கன்னு.. இன்னும் என்ன வேண்டும்” என்றான் கோவமாக.
கோகிலா “ஈசா, கொஞ்சம் பொறுமையாக பேசுப்பா, அவர் உன்னோட பெரியப்பா.. சொல்றேன்னு தப்பாக நினைக்காதே.. இப்படி எல்லாம் இந்த வீட்டில் பேசி பழக்கமில்லை.” என்றார்.
ஈசன் தலை தாழ்ந்து அமர்ந்தான்.
ஷண்முகம் “வளர்ப்பு அப்படி” என்றார், யோசியாமல்.
ஈசன் கோகிலாவை பார்த்து “இப்படிதான் பேசி பழக்கமோ” என்றான் எரிச்சலான குரலில்.
கோகிலா “ஷண்முகா, என்னான்னு விசாரிப்பா.. உனக்கு கிருபா மேல அக்கறை இருந்தால். ஈசனை மட்டும் குற்றம் சொல்லாத.” என்றார்.
ஈசனும் சண்முகத்தை பார்த்தான்.. ‘என்னிடம் விசாரிக்கிறாரா எப்படின்னு பார்க்கிறேன்..’ என அழுத்தமாக அமர்ந்தான்.
சண்முகத்திற்கு கோவமாக வந்தது.. “அப்பா எனக்கு புரியலை ப்பா, நான்.. இதுவரை இந்த குடும்பத்தை.. கடையை என எல்லாவற்றையும் நல்லவிதமாக தானே பாதுகாத்தேன்.. இப்போ என்னமோ எல்லாம்.. மாறி போகிடுச்சோ.. என்ன ப்பா நடக்குது.” என்றார்.
கோகிலாவிற்கு ஒருமாதிரி ஆனது.
பாட்டி இப்போது “ஷண்முகா.. எதுவும் மாறலைடா. காலம் தன் வேலையை செய்யுது. ஷங்கர் தப்பு செய்திட்டான்னு போதும்.. நீ இருந்த எங்களுக்கு பலமாக. இப்போதும் அதேதான்.. நீதான் இருக்கணும் எங்களுக்கு. இப்போ ஷங்கர் சார்பா.. ஈசன் வந்திருக்கான்.. அவ்வளவுதான் மாற்றம். அவனுக்கும் நீதான் பொறுப்பு ப்பா.. இன்னும் வீட்டில் நீயும் அப்பாவும்தான் பொறுப்பு. கடைக்கும் அப்படிதான்.
இப்போது ஈசனும் நம்மகிட்ட கேட்க்கிறான்.. காலம் மாறுது அவ்வளவுதான். மனதின் விசாலமும் தேவை ஷண்முகா..
ம்.. சின்ன பசங்க.. ஆசப்படுறாங்க போல.. நம்மகிட்ட கேட்க்கிறாங்க. மறுக்கவோ.. எதிர்க்கவோ.. எந்த காரணமும் இல்லையே.. என்னாங்க.. நீங்க சொல்லுங்க” என்றார்.
அருணாசலம் “ம்.. சரிதான், காலத்துக்கு தக்க மாறிக்கனுமே ஷண்முகா.. “ என்றார்.
சண்முகம் “என்னால் அப்படி எல்லாம் மாற முடியாதுப்பா. சிலதை என்னால் ஏற்க முடியலை” என்றார்.
அமைதி சூழ்ந்தது அந்த இடத்தில்.
தாத்தா “சரி, அப்புறம் பேசலாம் இதை. எல்லோரும் பொறுமையாக இருங்க.. இப்போதான் ஷங்கரின் திவசம் முடிந்திருக்கு. எல்லோரும் வேலையை பாருங்க. மற்றதை, அப்புறம் பேசலாம். நேரம் இருக்கு நமக்கு.” என்றார்.
சண்முகம் “ஆக, எல்லோருக்கும் என்னை தவிர.. மற்றவர்கள் முக்கியமாகிட்டாங்க” என்றவர் வேகமாக தன் அறைக்கு செல்ல போக..
சண்முகம் திரும்பாமல் நின்றார் “அப்படி எல்லாம் இல்லைங்க.. உங்களை யாரும் ஒதுக்கலை. நீங்களாக எதோ நினைத்துக் கொண்டு பேசுறீங்க. கொஞ்சம் சொல்லுவதை கேளுங்க. நான் இங்க அப்பாவிற்காகதான் வந்தேன்.” என சொல்ல சொல்ல..
சண்முகம் திரும்பி ஈசனை பார்த்து.. “எதுக்கு இன்னமும் இந்த கதை. அதான் உன் தாளத்திற்கு தப்பாமல்.. எல்லோரும் நடக்கிறாங்களே..” என எதோ அவரும் சொல்ல சொல்ல..
ஈசனும் “இருங்க.. அவசரப்படாதீங்க, நீங்க பெரியவங்க.. கொஞ்சம்.. கொஞ்சம்.. கேளுங்க அடுத்தவர் சொல்லுவதையும். சில வருடத்திற்கு முன் அப்பா பேனில் பேசும் போதும் இப்படிதான் அவசர அவசரமாக.. ஏதேதோ திட்டுனீங்கலாம்.. ஏன்னு இப்போது புரியுது. உங்களின் வார்த்தைக்கு எல்லோரும் கட்டுப்பட வேண்டும்.. நீங்கள் சொல்லுவதுதான் சரியென இருக்க வேண்டும் என நினைக்கிறீங்க.. தப்பில்லை சரிதான்.
கிருபா சொல்லியிருக்கா உங்களை பற்றி.. நீங்க கல்யாணம் கூட லேட்டாகத்தான் செய்துகிட்டீங்கன்னு.. அத்தைக்கு நீங்கதான் கல்யாணம் செய்து வைச்சீங்க.. கிருபாவை நீங்கதான் வளர்த்தீங்கன்னு சொல்லிருக்கா.. எல்லாவற்றுக்கும் பதிலாக நன்றியோ.. பணமோ.. சொல்லிடவோ.. கொடுத்திடவோ முடியாது. நீங்க உங்கள் குடும்பத்தை காத்துதான் நின்னீங்க. பெரிய விஷயம் அந்த நேரத்தில்.. என் அப்பா செய்த.. செயலால்.. குடும்பம்.. தாத்தா எப்படி உடைந்திருப்பார் என இப்போது புரிகிறது எனக்கு.. நீங்கதான் பார்த்துகிட்டீங்க.. ம்.. கிரேட்.” என்றான்.
சண்முகம் சற்று தணிந்தார்.. அவர் சுற்றி சுற்றி பார்த்தார். கிருபா கோகிலா பாட்டி என எல்லோர் கண்களிலும் லேசான கலக்கம். அதே நேரம் ஒரு நன்றியுணர்வு. ஷண்முகத்திற்கு திருப்தியோ திருப்தி. அவருக்கு ‘அவர்தான் செய்தார்’ என்ற புகழ் வேண்டும்.. எல்லோரிடமும் என் பெரியமகன்தான் பார்த்தான் எல்லாம் என சொல்ல வேண்டும் என எதிர்பார்த்தார். இப்போது ஈசன்.. மொழியால் அதை கேட்க்கிறார். தன் காலரினை பின்பக்கம் மேலே ஏற்றிக் கொண்டு.. “என்ன சொல்ல வர” என்றார் கொஞ்சம் தணிந்த குரலில்.
ஈசன் “இப்போதும் நீங்கதான் சொல்லனும் எங்கள் விஷயத்தை பற்றி. முடிவு நீங்களே எடுங்கள்.” என்றான் கிருபாவினை ஆறுதலாக பார்த்துக் கொண்டு.
சண்முகம் “ம்… சந்தோஷம்..” என எதோ சொல்ல வர.
ஈசன் “இருங்க முடிக்கலை” என்றவன் “அப்பாவிற்காக வந்தேன். அப்பா எங்களுக்காக உங்களை தேடினார் போல.. இறுதியில் நல்லதே நடந்தது. எங்களுக்கு இந்த வீட்டில் இடம் இருக்கிறது சந்தோஷம். ஆரம்பத்தில் ஏதேதோ நடந்துவிட்டது.. அது அப்பாவின் உடல்நிலையை கண்டு.. பயந்து.. நான் எடுத்த தவறான முடிவுதான். முழுவதும் என்னுடைய தவறுதான். சாரி” என்றான் அவரை பார்த்து..
கிருபாவிற்கே என்னமோ போலானது. அவனா இறங்கி போகிறான் என.. அவனுக்கு எப்போதும் இறங்கி போக தெரியாதே.. நீ அரிவாள் என்றால், நான் கடப்பாரை என்றே நிற்பானே.. என எண்ணிக் கொண்டு நின்றாள்.
தாத்தா.. ஈசனை வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தார்.
சண்முகத்தின் முகத்தில் புன்னகை.. சாரி என்ற சொல் கொடுத்த புன்னகை. ம்.. ஈசனின் மொழியாலேயே நான் செய்தது தவறு என ஒத்துக் கொண்டானே என அத்தனை ஆனந்தம்.
ஈசனை எள்ளலாக ஏறிட்டார் சண்முகம் “புரிஞ்சிடுச்சா உனக்கு. நான்தான் சொன்னேனே நீ வந்த வழி தவறு, வந்ததே தவறுன்னு. இப்போது புரிகிறதா எல்லோருக்கும்.. அதனால், தவறான வழியில் வந்தவனுக்கு.. பெண்ணை கொடுக்கமாட்டேன்.” என்றார், தயவு தாச்சண்யமே இல்லாமல்.