“ என்ன சார் இது. வருஷமே முடிய போகுது. இன்னும் நீங்க உங்க பைலை அனுப்பாம இருந்தா என்ன அர்த்தம். போன் பண்ணி கேட்டாலும் இப்போ…அப்போன்னு எதாவது காரணம் சொல்லிட்டு இருக்கீங்க,
இப்படியே ஒவ்வொரு கிளைண்ட்டும் பண்ணுனா, லாஸ்ட் டைம்ல நான் யாரோடதுனு பார்க்குறது வேற வழி இல்லாம தான் நானே வர வேண்டியது ஆயிடுச்சு என்னதான் நினைச்சுட்டு இருக்கீங்க” என்று கோபமாக கத்திக் கொண்டிருந்தான் சத்யா.
ஆம், கோபம் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தவனுக்கு கோபத்தையும் கற்றுக் கொடுத்து சென்று இருந்தாள், அவன் மனைவி.
தேவைக்கு மட்டும் பேசிக் கொண்டும், அதிகமாக கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டும் சுற்றிக் கொண்டிருக்கும் இவன் புதிய சத்ய தேவ்தான்.
“இல்ல சார். ஓனர் சார்க்கு ரொம்ப உடம்பு முடியாம போயிடுச்சு அதனாலதான், மேடம் ஹாஸ்பிடல்கும் வீட்டுக்கும் அலைஞ்சுட்டு இருக்காங்க. அதான் இந்த லேட்.
மேடம்க்கு போன்பண்ணிட்டேன் சார். வந்துகிட்டே இருக்காங்க. அஞ்சு நிமிஷத்துல இங்க வந்துடுவாங்க. அவங்க வந்த உடனே பைல கொடுத்துடுகிறோம்.
“என்ன சார் பேசுறீங்க ஃபைல் கொடுக்கிறதுக்கு அவங்க ஏன் வரணும். நீங்க எடுத்துக் கொடுக்க முடியாதா?அவங்க வர்ற வரை நான் வெயிட் பண்ணுமா? எனக்கு வேலை இல்லைன்னு நினைச்சுட்டு இருக்கீங்களா” என்று கத்தி கொண்டிருக்க,
“சாரி சார். என் மேலதான் தப்பு. அவங்கள ஒன்னும் சொல்லாதீங்க. எல்லாம் ரெடி பண்ணிட்டேன் அனுப்பதான் லேட் ஆகிடுச்சு”என்ற பரபரப்பான குரல் காதில் விழ,
தனக்குள் அதிர்ந்தவன் புருவம் சுருக்கி திரும்பிப் பார்க்க அங்கு காட்டன் புடவையில் முன்பை விட தெளிவான முகத்துடனும், நேர் பார்வையுடனும் நின்றிருந்தாள் அவனவள்.
சத்யாவை அங்கு எதிர்பாக்காத மீனா வெளிப்படையாக அதிர, அவனோ வெளியில் எதையும் காட்டிக் கொள்ளாமல், அவளை அறிமுகமற்ற பார்வை பார்த்தான்.
அவன் பக்கத்தில் நின்றிருந்த நபர் “மேடம் வந்துட்டாங்க சார். ஒரு நிமிஷம்” என்றுவிட்டு,
மீனா அருகில் வேகமாக சென்று “மேடம் சார் ரொம்ப கோபமா இருக்காரு. நாம இன்னும் பைல் அனுப்பாததுனால” என்க,
உடனே தன்னிலை அடைந்த மீனாட்சி வேகமாக தனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்று, தன்னிடம் இருந்த சாவியை கொண்டு அங்கிருந்த அலமாரியை திறந்து உள்ளிருந்து ஒரு பைலை எடுத்தவள், கணவனிடம் பேச ஆசை கொண்டு உடன் வந்தவரிடம் “சார இங்க வர சொல்லுங்க.நான் குடுத்துக்கறேன்”என்று கூற,
அவரும் சரி என்றுவிட்டு சத்யாவிடம் சென்று “சார் மேடம் உங்கள உள்ள வர சொன்னாங்க” என்க,
அவனும் இறுகிய முகத்துடனே மீனா இருக்கும் அறை நோக்கி சென்றான்.
வெகுநாட்கள் கடந்து கணவனை பார்த்ததால் உண்டான சந்தோஷத்தில் இருந்த மீனாட்சி சத்யா உள்ளே வந்தவுடன் “எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா? அத்த மாமா எல்லாம் நல்லா இருக்காங்களா”என்று ஆர்வமாக கேட்க,
அவளை அழுத்தமாக பார்த்தவன் “ஏன்? செத்துருவான்னு நினைச்சவன் உயிரோட இருக்கானேன்னு ஆச்சரியமா இருக்கா?” என்று கேட்க,
அதிர்ந்து போனவள் கலங்கிய கண்களோடு “ஏன் இப்படி பேசுறீங்க?நான் அன்னைக்கு….” என்று ஏதோ பேச வந்தவளை, பேச வேண்டாம் என்பது போல் கைநீட்டி தடுத்தவன்.
“அந்த பைலை குடுத்தீங்கன்னா, நான் கிளம்பிடுவேன் மேடம். எனக்கு வேலை நிறைய இருக்கு”
“இதோ பைல் எடுத்துக்கோங்க, ஆனா அதுக்கு முன்னாடி நீங்க எப்படி இருக்கீங்கன்னு……”
“ஷட் அப்….. நான் எப்படி போனா உனக்கு என்ன? பார்க்க முடியாதுனு விட்டுட்டு போனவளுக்கு இப்போ என்ன திடீர் அக்கறை” என்று சீறியவன் அவள் அழுவதை கண்டு பார்வையை திருப்பி கைகளை இறுக்கி தன் கோபத்தை கட்டுபடுத்தியவன்,
“ நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோங்க மேடம். வேலை விஷயம் எதுவும் இருந்தா சொல்லுங்க. இல்லைனா நான் கிளம்பறேன். அதை தவிர வேற பேச நமக்குள்ள எதுவும் இல்ல.
பைல்பண்றது சம்மந்தம்மா எதுவும் கேட்கணுமா? இல்லை பேசணுமா” என்று அந்நிய குரலில் கேட்டவனிடம், கண்ணீருடன் இல்லை என்பது போல் அவள் தலையசைக்க, ,
அந்த பைலை எடுத்தவன் “ஓகே மேடம்.நான் கிளம்பறேன். அப்புறம் லாஸ்ட் டைம்ல பைலை குடுக்கறது இதுவே கடைசியா இருக்கட்டும்” என்று விட்டு செல்ல,
மீனா நடுங்கிய குரலில் “அவ்வளவு தானாங்க மா……” மாமா என்று சொல்லவந்தவளை அவன் எரித்து விடுவது போல் முறைத்து “அவ்வளவுதான் மேடம்….….”என்றுவிட்டு விடு விடுவென சென்றுவிட,
மீனாட்சியோ மூச்சு விடவும் மறந்து அப்படியே திகைத்து போய் நின்றிருந்தாள்.
‘துறு துறுபுடனும், காதல் நிறைந்த விழியோடும், புன்னகையோடும் தன்னை சுற்றி வரும் கணவனா இது’ என்று மலைத்துப் போய் அவள் நின்றிருக்க,
“மேடம்…. மேடம்….” என்ற ஆபிஸ் பியூனின் குரலில் தன்னிலை அடைந்தவள், அவனை என்னவென்பது போல் பார்க்க,
“நித்யஸ்ரீ மேடம் உங்களுக்காக வெளிய கார்ல வெயிட் பண்றாங்க”என்று சொல்ல,
வழிந்த கண்ணீரை துடைத்தவள் வேகமாக வெளியே சென்றாள்.
கார் அருகில் சென்றவள் “எ…. என்னாச்சுக்கா? ஏன் உள்ள வராம இங்கயே….”
“ம்ம்…. சத்யா வந்திருக்கறதா சொன்னாங்க. அதான் நீ அவரை எப்படி சமாளிப்பன்னு….”என்று பேசியவளை வலி நிறைந்த பார்வை பார்த்தவள் “சமாளிக்க என்னக்கா இருக்கு. பைல் வாங்க வந்தாரு. வாங்கிட்டு போய்ட்டாரு” என்றவள் சொல்லும்போதே அவள் கண்களில் கண்ணீர் வடிய,
ஸ்ரீ, “என்ன மீனம்மா நீ. எதுக்கு அழற. யாரும் பார்த்தா என்ன நினைப்பாங்க. கண்ண துடை” என்றவள் வேகமாக காரின் பின் சீட்டில் மீனாவை அமர வைத்து தானும் அமர்ந்தவள் “என்னடா ஆச்சு?” என்று பரிவாக கேட்க,
உடனே அவளை தாவி அணைத்து கொண்டவள் கதறி அழ துவங்க, அவள் முதுகை தடவி சமாதானபடுத்தி கொண்டிருந்தாள் ஸ்ரீ.
“என்னாச்சுடா. எதுவும் கோபமா பேசுனாரா?”
“ம்கூம்……”
ஏன் இப்படி பண்ணுனன்னு திட்டிட்டாரா?”.
“அது மாதிரி எல்லாம் அவர் பேசியிருந்தாகூட பரவாலக்கா. யாரோ மாதிரி பாக்குறாரு. யார்கிட்டயோ பேசறா போல பேசறாரு. மனசு ரொம்ப கஷ்டமா இருக்குக்கா. அவர் கண்ணை பார்த்தாலே எனக்குள்ள ஒரு பீல் வரும்.
அது எதனாலன்னு அப்போ புரியல. இப்போ புரியுது. காதல்க்கா…காதல்…அவர் கண்ணுல எப்போவும் எனக்கான காதல் இருந்துட்டே இருக்கும். ஆனா இன்னைக்கு அதுல என்ன இருக்குன்னு எனக்கு தெரியலக்கா. சுத்தமா என்னால புரிஞ்சுக்க முடியல.
அதுவும் உங்களுக்கும் எனக்கும் இடையில வேலைய தவிர வேற எந்த சம்மந்தமும் இல்லை மேடம்னு சொன்னாரு பாருங்க, எனக்கு மூச்சுவிடவே சிரமமா, மனசு முழுக்க பாரமா ஒரு மாதிரி ஆகிட்டேன்க்கா.
என்னை முழுசா வெறுத்துட்டாருக்கா. நான் அவருக்கு வேண்டாமாம். அவ்வளவுதானானு கடைசியா கேட்டதுக்கும்.
“ஆமா அவ்வளவுதான்னு சொல்லிட்டு போயிட்டாருக்கா. எப்படிக்கா அவ்வளவுதான் ஆகும்” என்று அழுதவளை என்ன சொல்லி தேற்றுவது என்று புரியாமல் அமர்ந்திருந்தாள் ஸ்ரீ.
இருவரையும் சேர்த்து வைக்க முதல் படியாக ஸ்ரீ அண்ட் கோ எடுத்த முடிவுதான் இது. மீனாவையும் சத்யாவையும் சந்திக்க வைப்பது. இதன் மூலம் சத்யா மனதில் இருப்பதை அறிந்து அதன் படி அவர்களை சேர்த்து வைப்பதற்கான முயற்சியில் இறங்க எண்ணி இருந்தனர்.
சத்யாவின் கோபம் இவர்கள் எதிர் பார்த்ததுதான் என்பதால் அடுத்து என்ன என்ற யோசனையில் அவள் இருக்க,
ஸ்ரீ போன் அலறியது அதை எடுத்து காதில் வைத்தவள் “சரி ஓகே. நான் கிளம்பிட்டேன்” என்று சொல்லி வைக்க,
மீனா அவளை கேள்வியாக பார்த்தாள்.
“அப்பாக்கு ஆப்ரேசன் ஸ்டார்ட் பண்ணிட்டாங்களாம். நாம கிளம்பலாமா” என்று கேட்க, அவளும் சரியென்றுவிட, மதுரையை நோக்கி சென்றது அவர்களது கார்.
ஆம், மதுரையில் பேரன் காது குத்திற்கு சென்ற இடத்தில் நந்தனுக்கு மூச்சு திணறல் வந்துவிட, அங்கிருக்கும் ஹாஸ்பிடலில் அவரை சேர்த்து கவனிக்குமாறு ஆகிவிட்டது.
ஸ்கூலில் இருந்து போன் வந்து கொண்டே இருக்கவும் அதை அட்டென்ட் செய்து பேசிய மீனாவிற்கு அப்போதுதான் பைலைபற்றிய நினைவு வர தலையில் அடித்து கொண்டவள்,
குழைந்தையை ஸ்ரீயிடம் விட்டுவிட்டு வந்திருந்தாள். மீனா ஸ்ரீயிடம் “அக்கா தம்பிங்க….”
“ம்ம்…ரெண்டு பேரும் விளையாடிட்டு இருக்காங்க. ஒன்னும் பிரச்சனை இல்லை” என்றவுடன் நிம்மதி ஆனவள் ஜன்னலில் சாய்ந்து கொண்டு கடந்த காலத்தை எண்ண துவங்கினாள்.
இரண்டு வருடங்கள் அவள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.
ஸ்ரீ சொன்னது போல் நந்தனின் பள்ளி நிர்வாகம் அனைத்தையும் மீனாட்சிக்கு சொல்லித் தர அவளும் பொறுப்பாக அனைத்தையும் கற்று கொண்டாள்.
ஒரு மாதம் மீனா உடனே இருந்து சொல்லி தந்தவள், நந்தனை தன்னோடு இருக்க அழைக்க, அவரோ மனைவியோடு வாழ்ந்த வீட்டைவிட்டு வரமாட்டேன். என்று பிடிவாதமாக சொல்லிவிட, வேறு வழி இல்லாமல் பள்ளியையும் தந்தையையும் மீனா பொறுப்பில் விட்டுவிட்டு கணவனோடு மதுரை சென்றுவிட்டாள்.
மீனா பள்ளியை சிறப்பாக நிர்வாகம் செய்ய துவங்கினாள். வார கடைசியில் இரண்டு நாட்கள் ஸ்ரீ திருச்சி வந்து தந்தையை பார்த்துவிட்டு செல்வாள்.
ஸ்ரீயும் அப்படியே அஷ்வினுடன் மருத்துவமனை செல்ல துவங்கினாள்.
மீனாவிற்கு ஏழாவது மாத துவக்கத்திலேயே ஸ்ரீ அவளை பள்ளிக்கு செல்ல வேண்டாம் ரெஸ்ட் எடு என்க,
அவளோ “இல்லக்கா பரவால்ல. நான் என்ன மண்ணு வெட்டவா போறேன். எங்க ஊர்ல ஒன்பது மாசத்துல கூட களவெட்ட போவாங்க. நான் பார்த்துக்கறேன்க்கா” என்றுவிட,
ஸ்ரீயும் சொல்லி சொல்லி பார்த்து சலித்து போனவள் என்னவோ செய் என்றுவிட்டுவிட்டாள்.
ஒன்பதாவது மாதம் செக் செய்ய வந்தவளை லெப்ட் ரைட் வாங்கி கொண்டு இருந்தாள் ஸ்ரீ “இதுதான் உன்னை நீ பார்த்துக்கற லட்சணமா? ஹெச் பி ஏழுதான் இருக்கு. வெயிட்டும் குறைஞ்சுட்டே போற, சொல்றது எதையும் காதுல வாங்காத.
நீ ஸ்கூல் போனதும் போதும், உன் உடம்பை பார்த்துக்கிட்டதும் போதும். குழந்தை பிறக்கற வரை ஒழுங்கா இங்க என் கூடவே இரு.
அப்பாட்ட நான் பேசிக்கறேன்” என்று கோபமாக சொல்ல, அப்போதைக்கு அவளிடம் எதுவும் பேசாமல் வந்துவிட்டாள் மீனா.
அன்று இரவு மொட்டை மாடியில் அமர்ந்து நிலவை வெறித்து கொண்டிருந்தவளின் தோளில் யாரோ கை வைக்க, பதறி போய் திரும்பியவள் அங்கு ஸ்ரீ நிற்பதை கண்டு நிம்மதி மூச்சுவிட்டவள்.
“அக்கா இந்த நேரத்துல இங்க என்ன பண்ணுறீங்க?”
“அதை நான் கேட்கணும். காத்து பயங்கரமா அடிக்குது. இங்க எதுக்கு நிக்கற?”
“இல்லக்கா. ரொம்ப புழுக்கமா இருந்தது அதான்….”
“உண்மைய சொல்ல விருப்பம் இல்லைனா பரவால்ல விடு. போய் உள்ள படு. காய்ச்சல் வந்திட போகுது” என்றவளை அணைத்து கொண்ட மீனா.
“அக்கா எனக்கு மனசுல ஏதேதோ பயம் எல்லாம் வருதுக்கா. அதுமட்டும் இல்லாம அது பேராசைதான்னு மூளைக்கு புரியுது. ஆனா மனசு கேட்க மாட்டிக்குதுக்கா” என்று அழ,
சற்று நேரம் அவளை அழவிட்ட ஸ்ரீ “என்ன ஆசைனு என்கிட்ட சொல்லு மீனு. நான் செய்யறேன். அக்கா…அக்கான்னு வாய் வார்த்தைக்குதான் சொல்றியா”.
“அப்படி இல்லக்கா. ஏன் இப்படி எல்லாம் சொல்லறீங்க. ஏற்கனவே நீங்க……” என்று ஏதோ சொல்ல வந்தவளை முறைத்த ஸ்ரீ “ம்ம்…சொல்லு…. ஏன் நிறுத்திட்ட” என்று கோபமாக கேட்க,
அவளோ தலை குனிந்து அமைதியாக இருந்தாள்.
“ஏன் மீனம்மா உன்னை நீயே கஷ்டபடுத்திக்கற. அப்படி உனக்கு என்னதான் ஆசை சொல்லு என்னால முடிஞ்சா கண்டிப்பா நான் செய்யறேன்” என்று தனது மேடிட்ட வயிற்றுடன் அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்தாள்.
ஆம், ஸ்ரீயும் கருவுற்று இருந்தாள். மீனாவிற்கும் ஸ்ரீக்கும் நான்கு மாத இடைவெளி மட்டுமே இருந்தது.
மீனா தேம்பி தேம்பி அழ துவங்கினாள்.
அதில் பதறி போன ஸ்ரீ “ஹேய் என்ன ஆச்சு உனக்கு. ஏன் அழற? சொல்லுன்னு சொல்றேன்ல” என்று மிரட்டவும் ஒருவழியாக வாயை திறந்தவள் தன் ஆசையை சொல்ல,
ஸ்ரீக்கு கண்ணீர் வடிய துவங்கிவிட்டது. அவளுக்கு மட்டும் இல்லை மனைவியை காணாமல் தேடி வந்த தீரனின் காதிலும் மீனாவின் வார்த்தைகள் விழ, ஆறடி ஆண் மகனுமே சற்று கலங்கிதான் போனான்.
மீனா, “எனக்கு தெரியும். இது நடக்காதுனு. ஆனா எப்படியாவது நடந்தா நல்லா இருக்குமேன்னு தோணுதுக்கா” என்று சொல்ல,
அப்போது அங்கு வந்த தீரன் “என்ன அக்காக்கும் தங்கச்சிக்கும் நேரம் போறது தெரியாதா. மணி என்ன ஆச்சு தெரியுமா” என்று கேட்க,
ஸ்ரீயோ கணவனை பார்த்து மென்மையாக சிரிக்க,
மீனாவோ “இதோ இப்போ போறோம் அண்ணா. நீங்க அக்காவை கூட்டிட்டு போங்க. நான் கொஞ்ச நேரம்……”
தீரன், “ஒன்னும் வேண்டாம். நீதான் முதல்ல போய் தூங்கி ரெஸ்ட் எடுக்கணும். போ போய் தூங்கு” என்று கூற,
அவளும் மனமே இல்லாமல் ஸ்ரீயை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே செல்ல,
தன்னை தாண்டி செல்லும் மீனாவிடம் “அண்ணன் நான் இருக்கும்போது எதுக்கும்மா நீ கவலைப்படற. இப்போ என்ன குழந்தை பிறந்தவுடன் முதல்ல சத்யாதான் வாங்கணும் அதானே கவலைப்படாத உன் ஆசை நிறைவேறும்.
மச்சான குண்டு கட்டா தூக்கிட்டு வந்திர மாட்டேன்” என்க,
மீனா வேகமாக அவனை திரும்பி பார்த்தாள் அவன் முகமோ சாதாரணமாகதான் இருந்தது. இப்போ அண்ணா பேசுனாரா…. இல்லையா…என்ற குழப்பதோடு நின்றிருந்தவளின் அருகில் சென்றவன் அவள் தலையில் கை வைத்து “உன் ஆசை நிறைவேறும் கவலைப்படாம போ” என்றுவிட்டு சென்றுவிட,
கண்கள் கலங்க செல்லும் தீரனின் முதுகையே பார்த்து கொண்டிருந்தாள் மீனா.
ஆம், அவள் மனதில் இருக்கும் ஒரே ஆசை குழந்தை பிறந்தவுடன் அதை முதலில் தன் கணவன்தான் வாங்க வேண்டும் என்பதுதான்.
கணவன் செல்லவும் மீனா அருகில் வந்த ஸ்ரீ “அப்புறம் என்னம்மா. அதான் உன் அண்ணன் வாக்கு குடுத்துட்டாரே அவர் சொன்னா கண்டிப்பா செய்வார். கவலைப்படாம வா” என்று கீழே அவள் அறைக்கு அழைத்து சென்ற ஸ்ரீ. அவளை படுக்க வைத்து, போர்த்திவிட்டு “நல்லா தூங்கு அப்போதான் என் மகன் நல்லா ஸ்ட்ரோங்கா வளருவான் சரியா” என்றுவிட்டு செல்ல,
இந்த அன்பும், அரவணைப்பும் கிடைக்க, என்ன தவம் செய்தேன் என்று கண் கலங்கி போனாள்
சொந்த குடும்பமே ஒன்றாய் சேர்ந்து அப்பாவி பெண்ணின் வாழ்க்கையை அழிக்க, எங்கிருந்தோ வந்த குடும்பம் அவள் நலனுக்காக, வாழ்க்கைக்காக அனைத்து முயற்சியும் செய்கிறது.
ஸ்ரீ அறைக்கு வரும்போது தீரன் முகம் இறுகி போய் அமர்ந்திருந்தான்.
“என்னங்க யோசனை பலமா இருக்கு?”
“ஒரு பொண்ணுக்கு சாதாரணமா இருக்க ஆசை. மீனாவுக்கு எவ்ளோ சிரமமா இருக்கு இல்ல.
இருபது வயசுல அந்த பொண்ணு எவ்ளோ கஷ்டப்படணும்னு இருக்கு. இதுக்கு யாரை காரணம் சொல்றது.
அப்பாவை எதிர்த்து கணவனோட இருக்காத மீனாவையா, இல்லை பிளாக் மெயிலுக்கு பயந்த அவள் குணத்தையா.நான்கு மாதத்தில் மனைவியின் மனதை புரிந்து கொள்ளாத அவள் கணவனையா.
கவுரவம்…. கவுரவம்னு சொந்த பொண்ணு வாழ்க்கையை அழிச்ச அந்த ஜென்மங்களையா யாரைனு சொல்றது” என்று கேட்டவன்,
மேலும் “மீனா ஆசையை கண்டிப்பா நிறைவேத்தணும் நிதிம்மா”என்று தீவிரமான குரலில் சொல்ல,
ஸ்ரீயும் ஆமோதிப்பாக தலையசைத்து கணவனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.
ஸ்ரீ, தீரன் எப்படி சத்யாவை அழைத்து வருவார்கள். மீனா ஆசை நிறைவேறுமா அடுத்த எபியில் பார்க்கலாம்……