அத்தியாயம் -17

அனைவரும் கோவிலுக்கு சென்று வந்து பத்து நாட்கள் கடந்து இருந்தது. வேலை வேலை என்று அனைவருக்கும் நிற்க நேரம் இல்லாமல் பத்திரிக்கை வைப்பது, திருமண வேலைகளை பார்ப்பது என்று ஓட ஆரம்பித்தனர்.

ஸ்ரீயும் தீரனுடன் சேர்ந்து பத்திரிக்கை வைக்க செல்வது. வந்தவர்களை நன்றாக கவனித்து கொள்வது என்று மூத்த மருமகளாக பொறுப்பாக நடந்து கொண்டாள்.

தீரன் ஒவ்வொரு நொடியும் அவள் செய்கைகளை கண்டு புருவம் உயர்த்தினான். வேண்டாம் என்று விலகி போனவள், மீண்டும் வந்து குடும்பத்துடன் இணைந்து அனைத்தையும் செய்வதால்,

ஸ்ரீ பொறுப்பாக வேலை செய்தாலும், வேண்டுமென்றே “ஹப்பா…. எவ்ளோ வேலை. ம்ம்…இன்னும் ரெண்டு மாசம்தான்அப்புறம் நிம்மதியா ஜாலியா இருக்கலாம்” என்று தீரன் காதுபட சொல்ல, தீரன் கோபமாக அவளை பார்த்துவிட்டு சென்றுவிடுவான்.

ஸ்ரீ இப்படி சொல்வது தொடர் கதையாக தீரனுக்கு எரிச்சல் ஏற்படுவதை என்ன முயன்றும் தடுக்க முடியவில்லை.

இப்படிதான் அன்று பத்திரிக்கை வைக்க சென்ற இடத்தில் ஒரு பாட்டி “என்னடிம்மா விஷேசம் எதுவும் இல்லையா” என்று கேட்க,
‘இவங்களுக்கு வேற வேலை இல்லை. எப்போ பாரு எதாவது கேட்டுக்கிட்டே’ என்று நினைத்தவள் திரும்பி கணவனை பார்க்க, அவனோ அந்த வீட்டு ஆணிடம் மும்முரமாக ஏதோ பேசி கொண்டு இருந்தான்.

‘அதானே உன்கிட்ட யாரு கேட்கிறாங்க. எல்லாம் என்கிட்டதான் வந்து கேக்குறாங்க’என்று முணகி,

“ஈஈஈ….. விஷேசம்தான் பாட்டிம்மா. நாலு மாசம்…” என்று அடித்துவிட, அவள் கன்னத்தை வலித்து நெட்டி முறித்த பாட்டி “ரொம்ப சந்தோஷம் நல்லா இரு. ஆமா இந்த மாதிரி நேரத்துல எதுக்கு வெளிய அலையர வீட்ல ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே.”

“ம்ம்…. என்ன பாட்டி செய்யறது. வீட்டு மூத்தமருமகளா நான்தான் பொறுப்பா எல்லாம் செய்ய வேண்டி இருக்கு. நாத்தனார் கல்யாணம் பொறுப்பில்லாம உட்கார்ந்து இருக்கா பாருன்னு யாரும் நாக்கு மேல பல்ல போட்டு பேசிட கூடாதுல்ல . இப்போ வேலை செஞ்சுட்டு அப்புறம் ஒரு நாற்பது நாள் ரெஸ்ட் எடுத்தா எல்லாம் சரியாகிடும்”.

“அது என்னடிம்மா நாற்பது நாள் கணக்கு”.

“ஒன்னரை மாசம்னு நீங்க சொல்லுவீங்கள பாட்டி அதான். அதுக்கு மேல ரெஸ்ட் எடுத்தா அவர் திட்டுவாரு பாட்டி. ஓடி ஆடி வேல செஞ்சாதான் நல்லதாம்”

“கூறு கெட்டவன். இன்னும் பழைய பஞ்சாங்கத்த பேசிட்டு இருக்கான். நீ பத்து மாசமும் நல்லா ரெஸ்ட் எடு. நான் பேரன்கிட்ட பேசறேன்” என்றவர் சொல்ல,

‘ஹையோ…. பாட்டி என்ன உளற போகுதுனு தெரியலையே. நாம வேற காசா பணமான்னு அடிச்சு விட்டோமே’ என்றவள் விழிக்க,

நேராக தீரனிடம் சென்ற பாட்டி “என்னப்பா தீரா. நாற்பது நாள்தானாம்ல, இது எல்லாம் நல்லாவா இருக்கு”. என்க,

தீரனோ ஸ்ரீயை உறுத்து விழித்தான்.

“அங்க என்ன பார்வை. கேட்ட என்கிட்ட பதில் சொல்லு. புள்ள எவ்ளோ வருத்தபடுது. நாம நினைக்கறதுதான் நடக்கணும்னு பிடிவாதமா இருக்க கூடாது. நாற்பது நாளுக்கு அப்புறம் என்ன செய்றதா உத்தேசம்.

“இல்ல பாட்டி அது……”

ஒன்னும் பேசாத.படிச்சவன், நாலு தொழில் பாக்குறவன் நீயே இப்படி இருக்கலாமா. இந்த புள்ளைக்கு ஒன்னும் தெரியாமையா இருக்கும் . டாக்டர் அதுக்கு தெரியாதது என்ன இருக்கு. என்னமோ போ” என்று சடைந்து கொள்ள,

தீரன் என்ன சொல்வது என்று புரியாமல் விழிக்க,ஸ்ரீக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ஒரே நான் சிங்க்கா போகுதே. ஆனாலும் இது ஜாலியாதான் இருக்கு என்று வந்த சிரிப்பை அடக்கி கொண்டு அமர்ந்திருந்தாள்.

ஒரு வழியாக பாட்டியை சமாளித்து பத்திரிக்கை வைத்துவிட்டு காரில் ஏறிய பின் தீரன் கோபமாக “பாட்டிகிட்ட என்ன சொன்ன?” என்று கேட்க,

அவளோ “நான் ஏன் அதை உங்க கிட்ட சொல்லணும். நாற்பது நாள் புருஷன்கிட்ட எதுக்கு நான் எல்லாம் சொல்லணும். கிளம்புங்க. அப்புறம் போற வழில பேக்கரி இருந்தா நிப்பாட்டுங்க லைட்டா பசிக்கற மாதிரி இருக்கு” என்றுவிட்டு சீட்டில் சாய்ந்து தூங்க துவங்க,

தீரன் வந்த கோபத்தை ஸ்டீரிங்கை அழுத்தி பிடித்து காட்ட, அவளோ அதை கண்டும் காணாமல் அமர்ந்திருந்தாள்.

வீட்டிற்கு வந்த உடன் “உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? அந்த பாட்டி…….” என்று பேசவந்தவளின் பேச்சை நிறுத்தியவன்.

“எனக்கு தலை வலிக்குது எதுவும் பேசாம கொஞ்சம் அமைதியா இரு” என்றுவிட்டு தலையை பிடித்து கொண்டு அமர,

அதில் கடுப்பானவள் “ஹலோ நாற்பது நாள் புருஷன் சொல்றதை எல்லாம் கேட்க மு……” என்றவள் பேசி முடிக்கும் முன் அங்கிருந்த பூ ஜாடி உடைந்தது.

ஸ்ரீ அதிர்ந்து போய் நிற்க, அவளை நெருங்கி சென்றவன் “இப்போ எதுக்கு நாற்பது நாள் நாற்பது நாள்னு எல்லார்கிட்டயும் ஏலம் விட்டுட்டு இருக்க. எனக்கு தெரியாதா? இல்ல ஞாபகப்படுத்துறியா” என்று கேட்க,

அவளோ தன் அதிர்வை உடனே சரி செய்து கொண்டு “உங்களுக்கு ஏன் சார் இவ்வளவு கோவம் வருது?” என்றவள் ‘சார்…’ என்ற வார்த்தையை அழுத்தி சொல்ல, அவன் முறைத்தான்.

“என்ன முறைக்கறீங்க சார்தானே இன்னும்……” என்று யோசித்தவள் மேலும் “அந்த பக்கம் ஒரு முப்பது இந்த பக்கம் ஒரு பத்து மொத்தம் நாற்பது நாள் இருக்க கூடிய உறவுக்கு சார்னு கூப்பிட்டா போதும்”.

“ஸ்டாப் இட். கொஞ்சம் அமைதியா இருன்னு சொன்னேனா இல்லையா. முதல்ல ரூம்ல இருந்து வெளிய போ” என்றவன் கத்த,

அவளோ வேண்டுமென்றே பிடிவாதமாக “மாட்டேன். என்ன பண்ணுவீங்க. இருக்க நாற்பது……” என்றவள் பேசி முடிக்கும் முன் அறையைவிட்டு வெளியில் சென்றவன் கதவை ‘டொம்மென்று….’ மூடிவிட்டு போக,

ஸ்ரீ செல்லும் கணவனையே யோசனையாக பார்த்து கொண்டு இருந்தாள்.

நாட்கள் அதன்போக்கில் செல்ல இருவரும் சேர்ந்து திருமண வேலைகள் செய்தாலும்,எலியும் பூனையும் போலவே நின்றிருந்தனர்.

தீரன் மனம் ஏனோ இப்போது எல்லாம் ஸ்ரீ அருகில் இருக்க வேண்டும் என்று ஆசை கொண்டது.

ஆம், இருவரும் பிரிந்திருந்த சமயத்தில் அவனது தாய் அழைத்து அமர வைத்து பேசினார். அதில் ஓரளவு மனம் தெளிந்தவனுக்கு, ஸ்ரீயை ஏற்று கொள்ள நேரம் தேவைப்பட்டது. அதற்காக இந்த பிரிவை பயன்படுத்தி கொண்டான்.

இன்னுமே ஸ்ரீயை முழுமையாக தன் மனைவியாக ஏற்று கொண்டானா என்று அவனுக்கே தெரியவில்லை. இருந்தாலும் அவள் பிரிந்து செல்கிறேன் என்று சொல்லும்போது மனதில் வருத்தம் எழுவது என்னவோ உண்மை.

இப்பொழுதெல்லாம் மனதில் இருந்த சந்தியா நினைவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, அந்த இடத்தில் ஸ்ரீ அமர்ந்துவிட்டது போல எண்ணம் தோன்றியது.

ஆம். அவள் பிரிய போகிறோம், பிரிய போகிறோம் என்று சொல்லியே அவன் மனதில் இடம் பிடித்தாள்.

‘காதல் இரண்டாவது முறை வருமா. அப்போ நான் சந்தியாவை காதலித்தது உண்மையான காதல் இல்லையா? அவள் இல்லை என்றால் இன்னொருவள் என்று செல்லும் ஆளா நான்’ என்று தன்னை தானே கேவலமாக நினைத்தவன் ‘இனி ஸ்ரீயிடம் விலகி இருக்க வேண்டும். எனக்கு எப்போதும் சந்தியாதான். அவள் இல்லை என்றாலும். அவள் நினைவுகள் எனக்கு போதும்’ என்று முடிவெடுத்தவன் ஸ்ரீ என்ன பேசினாலும் உணர்வில்லாத ஒரு பார்வையை செலுத்திவிட்டு செல்ல துவங்கினான்.

அவனது அந்த பார்வை அவளுக்கு எதை உணர்த்தியதோ அதன்பின் அவளும் அமைதியாகிவிடுவாள்.

திருமண வேலைகள் வேகமாக நடக்க. அனைவரும் எதிர்பார்த்த திருமண நாளும் அழகாக விடிந்தது.

இரவு மண்டபத்தில் வேலைகளை முடித்துவிட்டு தீரன் இரவு தாமதமாகவே வீட்டிற்கு வந்து உறங்க ஆரம்பித்தான். காலை எழுந்த ஸ்ரீ குளித்துவிட்டு பாத்ரூமினுள் எப்படி புடவை கட்டுவது என்று தயங்கி வெளியே எட்டி பார்க்க, தீரன் நல்ல உறக்கத்தில் இருந்தான்.

‘ஹப்பா நல்லா தூங்கிட்டு இருக்காரு. வெளிய போய் சீக்கிரமா புடவையை கட்டிடலாம்’ என்று நினைத்தவள் வெளியில் வந்து புடவையை கட்ட துவங்கினாள்.

தொடர்ந்து வலையலோசை கேட்கவும் முகம் சுழித்தவன்,’என்ன சத்தம்’ என்று எண்ணியவாறு கண்களை திறக்க, திகைத்து போனான்.

ஸ்ரீ அவன் எதிரில் இருக்கும் கண்ணாடியை பார்த்தவாறு இவனுக்கு முதுகு காட்டி நின்றவாறு பிளவுசின் மேல் கொக்கியை மாட்டி கொண்டிருந்தாள்.

மனைவியை அந்த கோலத்தில் பார்த்தவன் இமைக்க மறந்து அப்படியே இருக்க, அவன் மனையாளோ அங்கு ஒரு ஜீவன் இருக்கிறது என்பதையே மறந்து போய் தன் வேலையில் மும்முரமாக இருந்தாள்.

அடுத்து புடவையை கட்ட துவங்கியவளின் இளமை அழகுகள் அனைத்தும் அவனை பாடாய் படுத்த, கைகளை இறுக்கி தன்னை நிலைப்படுத்தி கொண்டான்.

மனையாளின் நடு வயிற்றில் இருக்கும் மச்சம் அவன் இளமையை சோதிக்க, அதையே வெறித்து பார்த்து கொண்டு படுத்திருந்தான்.

ஸ்ரீ புடவை கட்டி முடிப்பதற்கும் அவள் அறை கதவு தட்டபடவும் சரியாக இருக்க,

“இதோ வந்துட்டேன்…” என்று கத்தி கொண்டே சென்றவள் கதவை திறக்க, குமாரிதான் அங்கு நின்றிருந்தார்.

“என்ன அத்தம்மா. இந்த நேரத்துல”.

“அதும்மா…..தீரன்கிட்ட ஒன்னு கேட்கணும். அதான் வந்தேன். எங்க அவன். எழுந்துட்டானா? நீ கிளம்பிட்டியா.” என்றவர் கேள்விக்கு அவள் பதில் சொல்லும் முன்,

“சொல்லுங்கம்மா…” என்றவாறு வந்து நின்றான் தீரன்.

ஸ்ரீ விதிர் விதிர்த்து போய் திரும்ப, அவன் மார்பில் மோதி நின்றாள். “ஹப்பா…. “ என்று தலையை தேய்த்தவள். இவ்ளோ பக்கத்துலதான் வந்து நிற்கணுமா. எப்போ எழுந்தாருனு வேற தெரியலையே. ஒரு வேலை பார்த்துருப்பாரோ….” என்று கலவரமாக அவனை பார்க்க,

அவனோ குமாரியிடம் சாதாரணமாக பேசி கொண்டு இருந்தான்.தீரன் தாயிடம் பேசி கொண்டு இருந்தாலும் ஓர கண்ணால் மனைவியை கவனித்து கொண்டுதான் இருந்தான். அவள் முகம் போகும் போக்கை கண்டு தனக்குள் சிரித்து கொண்டவன் தாயிடம் “காய்கறி எல்லாம் நைட்டே கட்பண்ணிட்டு இருந்தாங்கம்மா. ஒன்னும் லேட் ஆகாது. கரெக்ட்டான டைம்ல சாப்பாடு போட்டிரலாம். நீங்க கிளம்பி போய் மண்டபத்துல முன்னாடி நின்னு எல்லாரையும் வரவேர்க்கற வழிய பாருங்க. போங்க”

“சரிப்பா. என்ன ஆனாலும் சாப்பாட்டுல எந்த குறையும் இருக்க கூடாதுப்பா. அப்புறம் உன் அப்பா. ஆடு ஆடுன்னு ஆடிருவாரு. நான் கிளம்பறேன். நீயும் சீக்கிரம் குளிச்சிட்டு மண்டபத்துக்கு வா” என்றவர் சென்றுவிட,

தீரன் எதுவும் நடக்காதது போல் குளியலறை நோக்கி சென்றான். அவனிடம் எப்படி கேட்பது என்று கையை பிசைந்து கொண்டு இருந்த ஸ்ரீ “நில்லுங்க. நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்” என்று ஒருவாறு தைரியத்தை வரவழைத்து கொண்டு அவனை நிற்க சொல்ல,

அவள் கணவனோ “இன்னும் முப்பது நாள் பொண்டாட்டி சொல்றது எல்லாம் கேட்க முடியாது” என்றவாறு நடக்க,

‘ம்கூம்…. நிலைமைய. புரிஞ்சுக்காம ரிவன்ஞ் எடுப்பாரு’ என்று முணகி, அவன் முன் வேகமாக போய் நின்று “நில்லுங்கன்னு சொல்றேன்ல. எனக்கு உண்மை தெரிஞ்சாகனும்” என்க,

அவனோ” இப்போ என்ன உண்மை தெரியணும் உனக்கு?” என்றான் எரிச்ச லாக.

“எனக்கு தெரிய வேண்டாம். ஆனா……”

“ஆனா,……”

“உங்களுக்கு தெரிஞ்சுதான்னு எனக்கு தெரியணும்”.

“என்ன……தெரிஞ்சுதா. காலைலயே சரக்கடிச்சுட்டியா? எதுக்கு உளர்ற”.

“உளர்றன்னா….”என்றவனை அவள் முறைக்க, அவனோ கண்டு கொள்ளாமல் பாத்ரூம் கதவை திறக்க, போக,

“இருங்க…. இருங்க…. எனக்கு பதில் சொல்லிட்டு போங்க”.

“இதையேதான் ரொம்ப நேரமா சொல்ற. ஆனா என்னன்னு சொல்ல மாட்டிக்கிற”.

“சரி இப்போ கேட்கறேன். நீங்க எப்போ பார்க்க ஆரம்பிச்சீங்க.”

“நான் பிறந்ததுல இருந்தே பார்த்துட்டுதான் இருக்கேன். இப்போ இதுதான் உனக்கு தெரியனுமா. மண்டபத்துக்கு போகணும். லேட் ஆகிடுச்சு. நான் குளிக்க போறேன்” என்றவன் அவள் அவஸ்தையை ரசிக்க துவங்கினான்.

சந்தன நிறத்தில் ரோஜா வண்ண பார்டர் இருக்கும் அந்த புடவை அவளுக்கு அழகாக பொருந்தி இருக்க, எப்படி அவனிடம் கேட்பது என்று கன்னம் சிவக்க பட படக்கும் கண்களோடு நின்றவளின் அழகு அவனை அசரடிக்கதான் செய்தது.

அவள் அமைதியை கண்டு தனக்குள் சிரித்து கொண்டவன் “இப்போ நான் போகலாமா”என்று கேட்க,

“நீங்க எப்போ எழுந்தீங்க……” என்று ஒருவாறு கேட்டுவிட்டு அவன் பதிலுக்காக ஆர்வமாக பார்க்க,

அவனோ கூலாக “நீ பிளவுஸ் கொக்கி மாட்டும்போதே எழுந்துட்டேன்” என்றுவிட்டு செல்ல,

“எதே……அப்போவேவா……” என்று முணு முணுத்த பெண்ணவளோ விக்கித்து போய் நின்றாள்.

எவ்வளவு நேரம் அப்படியே நின்றாளோ, பாத்ரூம் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்த தீரன்.

“கொஞ்சம் வெளிய போறியா. நான் ட்ரெஸ் மாத்தணும்”. என்ற குரலில் தன்னிலை அடைந்து அவனை பார்க்க, ஆணவனோ ஒன்றுமே நடக்காதது போல் தன் கப்போர்டை நோக்கி சென்று கொண்டிருந்தான்.

அவனை முறைத்தவள் “நீங்க எப்படி தூக்கத்துல இருந்து அப்போ எழுந்துக்கலாம்” என்று கேட்க, அவனோ அவளை கண்டு கொள்ளாமல் அணிய கூடிய உடையை தேர்ந்தெடுத்து கொண்டு இருக்க,

உங்ககிட்டதான் கேட்குறேன். நீங்க எப்படி கரெக்ட்டா அந்த நேரத்துல விழிக்கலாம். பதில் சொல்லுங்க” என்றவள் கேள்விக்கு, அவனிடம் அமைதியே பதிலாக கிடைத்தது.

“நீங்க இப்போ பதில் சொல்லல நான் இங்க இருந்து போக மாட்டேன்” என்றவள் கைகளை கட்டியவாறு பெட்டில் அமர,

அவனோ அவளை கண்டு கொள்ளாமல் உடை மாற்ற ஆரம்பித்தான்.

‘கல்லூளி மங்கன் வாய திறக்கறானா பாரு’ என்று புளு புளுத்து கொண்டு இருந்தவள். அடுத்து அவன் இடுப்பில் கட்டியிருந்த துண்டில் கை வைக்க,

“ஆஆ….” என்று அலறி “விவஸ்தை கெட்ட மனுஷன் வாய திறந்தா முத்து உதிர்ந்துடும்னு நினைக்கற மனுஷன்கிட்ட பதில எதிர் பார்த்த என்ன சொல்லணும்’ என்று கணவனை திட்டி கொண்டே மீனா அறைக்கு சென்றாள்.

மீனாட்சி அறையில் சோர்ந்து போய் அமர்ந்திருந்தாள். கதவு திறக்கும் சத்தத்தில் திரும்பி பார்க்க, ஸ்ரீதான் வந்தாள். அவள் முகத்தில் இருக்கும் கடுப்பை பார்த்தவள் “என்ன ஆச்சுக்கா? ரொம்ப கோவமா இருக்கீங்க போல? யார் மேல கோவம்”

“வேற யாரு புதுசா அண்ணன்னு நீ ஒரு ஜீவன தத்தெடுத்தியே, அவன் மேல தான். வாய திறக்க கூலி கேட்குறான். கத்தியே என் உயிர் போயிடும் போல” என்றவள் பின் மீனா கிளம்பாமல் இருப்பதை யோசனையாக பார்த்து “அவன் கெடக்குறான் டொமட்டோ. நீ என்ன கிளம்பாம உட்கார்ந்து இருக்க”.

“அதுக்கா…. நான் வரணுமா. நீங்க போயிட்டு வாங்களேன். நான் வீட்ல இருக்க வேலைய பார்க்கறேன்”.

“ம்ம்…. அதுவும் சரிதான். வீட்ட யாரும் தூக்கிட்டு போகாம பத்திரமா பார்த்துக்கோ என்ன சரியா?”.

“ஓகே….” என்று வேகமாக தலையாட்டியவள். பின் அவள் கூறியதை யோசித்து புரிந்து கொண்டு ஸ்ரீயை அவள் முறைக்க,

அவளோ “என்ன முறைக்குற. ஒழுங்கா கிளம்பு. சும்மா எப்போ பாரு வயலின் வாசிச்சுக்கிட்டு. நீ நல்ல பொண்ணா நான் சொல்றது எல்லாம் இன்னைக்கு கேட்டினா. உனக்கு தேவையான ஒரு விஷயத்தை நான் சொல்லுவேன்”.

“என்னக்கா விஷயம்? அவரைபத்தியா?”.

“ஆ…ஆ…ம்ம்ம்ம்…. நான் சொன்னதை செய். அப்போதான் சொல்லுவேன். போ போய் நல்ல பிள்ளையா சீக்கிரம் கிளம்பி வா பார்க்கலாம்” என்றவள் மீனாவை அனுப்பிவிட்டு, தானும் அங்கேயே தலை சீவி தயாரானாள்.

மீனாட்சிகிட்ட என்ன விஷயம் ஸ்ரீ சொல்ல போறா…. அடுத்த எபியில் பார்க்கலாம்.