வம்சி சொல்லப் போவதை பவானி படபடப்பாய் கவனிக்க அவன் திருத்தமாக சொன்னான்.
“முதல் விஷயம்… இனிமேல் நம்ம வாழ்க்கையில என்ன பிரச்சனை வந்தாலும், அது நம்ம ரெண்டு பேரையும் தவிர்த்து வேற யாருக்கும் போக கூடாது!”
எடுத்ததும் பிரச்சனை என்று கூறுபவனை வியப்பாய் பார்த்த பவானி, “நமக்குள்ள என்னங்க ப்ரோப்ளம் வரப்போகுது?” என்று கேட்க வம்சி பட்டென சொன்னான்.
“பிரச்சனையே இல்லாத புருஷன் பொண்டாட்டி இருக்க முடியாது வாணி… ஏதாவது ஒரு கட்டத்துல நமக்குள்ள பிரச்சனை வரலாம்… ஆனா நாமளே தான் அதை பேசி தீர்த்துக்கணுமே ஒழிய, வெளியில இந்த விஷயம் போய் நாலு பேர் வாயில மெல்லுற அவலா இருக்கக் கூடாது. அடுத்த விஷயம், உனக்கும் எனக்கும் பொதுவா சொல்றேன்… எப்பவுமே நம்ம மத்தவங்கள பாத்து நம்ம நிலைமைய கம்பேர் பண்ணிக்க கூடாது. மூணாவது நம்ம ரெண்டு பேருக்குள்ள எந்த ஒளிவு மறைவும் இருக்கக் கூடாது!”
அவன் முதலில் சொன்ன இரண்டு விஷயங்களை கூட சாதாரணமாய் எடுத்துக் கொண்ட பவானி அவன் மூன்றாவதாய் சொன்ன விஷயத்தை கேட்டு சிறிது தடுமாறி போனாள்.
“எந்த விஷயத்தையும் வெளிப்படையா பேசிட்டாலே பாதி பிரச்சனை வராது வாணி… ஒரு விஷயம் தானன்னு மறைக்க ஆரம்பிச்சா பின்னாடி அது நம்ம மேல இருக்க நம்பிக்கைய குறைச்சிடும்!” என்று சொல்ல பவானி பயங்கரமாய் குழம்பினாள். காலையில் கீர்த்தனா இதைப் பற்றி சொல்லி விடாதே என்று கூறியதற்கும் தற்போது வம்சி கூறுவதற்கும் ஏகா பொருத்தமாய் இருக்க,
“உங்ககிட்ட ஒன்னு கேக்கட்டுமா?” என்று இழுத்தாள்.
“அஃப்கோர்ஸ் எதுனாலும் கேளு வாணி!” என்றவன் சொல்ல,
“நீங்க யாரையாவது லவ் பண்ணி இருக்கீங்களா?” என பவானி வினவ வம்சி சீரியஸாய், “நீ என்ன நினைக்கிற?” என்றான் அவள் முகத்தை ஆராய்ந்தபடி.
காலேஜில் இருந்தவரை வம்சிக்கு லவ்வர் இருந்ததாக யாரும் சொன்னது கிடையாது. சொல்லப்போனால் அவனுக்கு இந்த காதல் கத்திரிக்காய் மேல் எல்லாம் இன்ட்ரஸ்டே கிடையாது! அப்படிதான் பவானி கேள்விப்பட்டு இருக்கிறாள். ஆனால் ஒருவரை பற்றி அவர் சொன்னால் தானே எல்லாம் தெரியும்?
“ம்ம்… ஒரு லவ் இருந்துச்சு!” என கூற பவானியின் முகத்தில் கலவரம். “அப்போ உங்களுக்கு லவ் ஃபெயிலியரா?” என்றாள் வேகமாய். அதே நிமிடம், எதற்காக இப்படி ஒரு கேள்வியை கேட்டோம் என்று மானசிகமாய் மனதில் அடித்துக் கொண்டவள் வம்சி என்ன சொல்லப் போகிறான் என்று பீதியாக பார்க்க,
“அதை பெய்லியர்ன்னு சொல்ல முடியாது. பிகாஸ் நான் போய் என் லவ்வ சொல்லவே இல்ல!” என்றான் அவன்.
“ஓஹோ அப்போ ஒன் சைடு லவ்வோ?” என்று பவானி நிம்மதியாக வம்சி தொடர்ந்து, “ஏன்னா நான் லவ்வ சொல்றதுக்குள்ள, அந்த அக்காக்கு வேற கல்யாணம் ஆகிடுச்சு!” என்க பவானி வியப்பாக,
“கல்யாணம் ஆகிடுச்சா…அதுவும் அக்காவா? புரியலையே!” என்று கேட்க,
“ஆமா நான் ஆறாவது படிக்கிறப்போ, என் டியூஷன் அக்கா மேல கண்ணா பின்னா லவ். என் மேல ரொம்ப பாசமா இருப்பாங்க… அதனால கல்யாணம் பண்ணா அவங்கள தான் பண்ணனும்னு ரொம்ப உறுதியா இருந்தேன். பட் என்ன பண்றது? நான் போய் லவ்வ சொல்றதுக்கு முன்னாடியே அவங்க கல்யாணம் ஆகி போயிட்டாங்க. அதுக்கு அப்பறம் தான் எனக்கு காதல் மேல நம்பிக்கையே போயிடுச்சு!” என்றவன் சோகமாக சொன்னதைக் கேட்டு குபீர் என்று சிரிப்பு தான் வந்தது.
“டியூஷன் அக்காவ லவ் பண்ணீங்களா?” என்று கேட்டு பவானி சிரிக்க ஆரம்பித்து விட, வம்சி உடனே,
“இதுல சிரிக்கிறதுக்கு என்ன இருக்கு? நீதான் கேட்ட… அதனால தான் சொன்னேன். சரி இப்ப நீ சொல்லு நீ யாரையாவது லவ் பண்ணி இருக்கியா?” என்றவன் கேட்க பவானி சிரிப்பதை நிறுத்தாமலே, “நான்… நானா?” என்று இழுத்தாள்.
“ஆமா நீ கேட்டதுக்கு நான் உண்மைய சொன்னேன்ல்ல… இப்ப நான் கேட்குறேன். நீ உண்மைய சொல்லணும். இதுக்கு முன்னாடி யாரையாவது லவ் பண்ணி இருக்கியா?” என்று கேட்க பவானி அப்பொழுதாவது உண்மையை சொல்லி இருக்கலாம். மறுபடியும் கீர்த்தனா சொன்னது ஞாபகம் வரவே,
‘எதுக்காக நல்லா இருக்க ரிலேஷன்ஷிப்ப கெடுக்கணும்?’ என்ற எண்ணத்தில், “இல்ல நான் யாரையும் லவ் பண்ணது கிடையாது!” என்று சொல்ல வம்சி அதற்கு மேல் தோண்டி துருவவில்லை. ஒருவகையில் பவானி கேரக்டருக்கு அவள் கூறிய விஷயம் ஒத்துப் போவதாகவே இருக்க,
“இட்ஸ் ஓகே. கடந்த காலத்தை திரும்பிப் பார்த்து நம்ம எதுவும் பண்ணப் போறது கிடையாது. இனி நம்ம எதிர்காலம் தான் நிஜம்… அதை மட்டுமே ஃபோக்கஸ் பண்ணுவோம்! அப்பறம் நான் சொன்ன இந்த மூணு விஷயத்தையும் மறந்திட வேணாம்!” என்று மூன்று விரல்களை ஆட்ட பவானி புன்னகையோடு,
“கண்டிப்பா ஃபாலோ பண்ணுவேன் ப்ராமிஸ்!” என்று சொல்ல வம்சி கலாய்த்தான்.
“நான் ஏதோ சீரியசா சொல்ல போறேன்னு பயந்துட்டல?”
“ஆமா நீங்க மொட்டையா சொன்னா நான் என்னன்னு நினைக்கிறது?”
“சில விஷயத்தை முன்னாடியே பேசிட்டா எப்பவுமே பெட்டர் வாணி. அதனாலதான் சொன்னேன். எனக்கு மத்தவங்க எப்படி மேரேஜ் லைஃப டெலீட் பண்ணுவாங்கன்னு தெரியல. ஆனா நம்மளோடது பேருக்குன்னு பண்ணிக்கிட்டதா இருந்திட கூடாது!” என்று சொல்ல பவானி அதற்கு,
“நீங்க ரொம்ப மெச்சூர்டா இருக்கீங்க… சில சமயம் எனக்கு அதுதான் பயமாவும் இருக்கு!” என்றாள்.
“எதுக்கு பயம்?” என வம்சி புருவம் சுருக்க,
“தெரியல நீங்க எதிர்பார்க்குற வைஃபா என்னால இருக்க முடியுமா?”
“பவானி நீ இப்படித்தான் இருக்கணும்னு நான் எதுவும் எதிர்பார்க்கல… உன்னோட இயல்ப நீ யாருக்காகவும் மாத்திக்க வேணாம். நீ நீயா இரு… நான் நானா இருக்கேன்!” என்று சொல்ல பவானி நிம்மதியாக தலையாட்டினாள்.
“சரி…. இப்ப போட்டோஸ் பாத்து முடிச்சுட்டு தூங்கலாமா?” என்றவன் கேட்க பவானி முகத்தில் மீண்டும் வியப்பு. அவள் பார்வையின் வைத்து அர்த்தத்தை புரிந்து கொண்டவன்,
“வெளிய அவங்க சொன்னாங்கன்றதுக்காக எல்லாத்தையும் இன்னைக்கே ஸ்டார்ட் பண்ணிட முடியாது வாணி. நானுமே இதுக்கு ரெடி கிடையாது. ஒருத்தர ஒருத்தர் இன்னும் நல்லா புரிஞ்சுகிட்டு அப்பறம் இதெல்லாம் பார்த்துப்போம்!” என்று சொல்ல பவானி அவனையே பார்த்து,
“ரொம்ப தேங்க்ஸ்!” என்றாள்.
“அப்போ உனக்கும் தான் நான் தேங்க்ஸ் சொல்லணும்!” என கிண்டல் செய்தவன் மனைவியோடு சேர்ந்து மொத்த ஆல்பத்தையும் பார்த்து முடித்து சிறிது நேரம் சிறுவயது ஞாபகங்களை பேசிக் கொண்டிருந்தான். பின்பு அப்படியே அசந்து தூங்கிவிட பவானியும் இன்னொரு பக்கமாய் கண்ணசந்து விட்டாள்.
மறுநாள் வம்சியின் குலதெய்வ கோயிலுக்கு சென்று விட்டு அங்கு பூஜை செய்து பொங்கல் வைக்கவென்று ஒரு நாள் ஓடிப் போக மறுநாளே சென்னைக்கு மறு வீட்டின் பொருட்டு கிளம்பினார்கள். பவானியில் வீட்டில் 4 நாட்கள் சென்றுவிட அவர்கள் வம்சியின் வீட்டுக்கு செல்லும் முன்பு அருள் பவானியை காண வந்தான். திருமணம் திருச்சியில் நடைபெற்றதால் அவனால் அங்கு செல்ல முடியவில்லை எனவே இங்கு சந்தித்து திருமண பரிசு கொடுத்தவன் வம்சியிடம் உளமாற கூறினான்.
“ரொம்ப கெட்டிக்கார பொண்ணு சார் பவானி நல்லா பாத்துக்கோங்க!” அவன் அன்பு புரியவே வம்சியும்,
“கண்டிப்பா சார்! நல்லா பார்த்துப்பேன். நீங்க சிவகங்கை வந்தா கண்டிப்பா நம்ம வீட்டுக்கு வரணும்!” என்று கேட்டுக்கொள்ள அருளும் ஒப்புக் கொண்டு, டீ மட்டும் குடித்துவிட்டு கிளம்பினான். ஆனால் செல்வதற்கு முன்பு பவானியிடம்,
“மேரேஜ் ஆகிடுச்சுன்னு டீச் பண்றத விட்டுறாத பவானி. அங்க முடிஞ்சா ஸ்கூல்ல சேர்ந்து ஒர்க் பண்ண பாரு… இல்லாட்டி நான் கூட நீ ஆன்லைன்ல கண்டின்யூ பண்றதுக்கு ஹெல்ப் பண்றேன்!” என்று கூற பவானியும் இன்முகமாய்,
“ரொம்ப தேங்க்ஸ் சார்.. நான் ஏதாவது ட்ரை பண்ண பாக்குறேன்!” என்று கூற அருள் அத்தோடு விடை பெற்றுக் கொண்டான். ஒரு மனம் பவானி திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து சந்தோஷப்பட்டாலும், அவளை இழந்து விட்டோமே என்று இன்னொரு மனம் உள்ளே சத்தம் இல்லாமல் அழுக தான் செய்தது. வம்சி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் பேரூராட்சியில் தான் பணிபுரிந்து கொண்டிருந்தான். ஏற்கனவே கல்யாணத்திற்கு 20 நாட்கள் விடுமுறை எடுத்து வந்திருந்தவன், மறு வீடு, பின்பு சொந்தங்களின் விருந்திற்கு செல்வது என்று அனைத்தையும் முடித்துவிட்டு, 15 நாட்களிலே திருப்புவனத்திற்கு திரும்பி விட்டான்.
அவனும் பவானியும் தங்கப் போகும் வீட்டில் பெயிண்டிங் ஒர்க் நடந்து கொண்டிருப்பதால், அவன் சென்ற இரண்டு நாட்களுக்குப் பின்பே பவானியை வந்து அழைத்துச் செல்வதாய் சொல்லி இருக்க அவளோ, “இல்லங்க நீங்க பாருங்க நான் அம்மா கூடயும் அத்தை கூடயும் வந்துடறேன்!” என்று சொல்லி விட்டாள். பிளான் பண்ண படி சுந்தரி மற்றும் விஜயாவோடு அங்கு சென்று விட, வழக்கம் போல் இவர்களோடு ஒட்டிக் கொண்டு ரஞ்சிதமும் வந்துவிட்டாள்.
இரண்டு பேர் தங்குவதற்கு என்று இல்லாமல் வீடு பெரிதாகவே இருக்க பின்புறம் சின்ன முற்றமும் இருந்தது. ரஞ்சிதம் குணமாறாமல் தம்பியிடம் வந்து, “ரெண்டு பேத்துக்கு எதுக்கு இவ்ளோ பெரிய வீடு? வாடகை நிறைய கேப்பாங்களே?” என்று இழுக்க வம்சி பட்டென்று சொன்னான்.
“வாடகை கொடுக்க கட்டுபடியாகாது. அதுனால ஒத்திக்கு எழுதி வாங்கி இருக்கேன்!”
“என்னது ஒத்தியா இவ்ளோ பெரிய வீடுன்னா ஒரு எட்டு லட்சமாது கேட்டிருப்பாங்களே? அவ்ளோ பணத்தை எப்படி புரட்டின? அம்மாகிட்ட எதுவும் கடன் வாங்கினியா? அம்மா நகைய வச்சு கொடுத்தாங்களா?” என்று தீவிர விசாரணை செய்ய வம்சிக்கு முகம் மாறியது.
“நான் உன்கிட்ட வந்து கேட்டேனா ரஞ்சிதம்?” என்றவன் முகத்தில் அடித்தது போல் கேட்க ரஞ்சிதமோ விடாமல்,
“என்கிட்ட கேட்டாலும் என்னால எப்படிப்பா கொடுக்க முடியும்? நீங்க தான் கவர்மெண்ட் உத்தியோகத்துல இருக்கவரு… எங்களுக்கு தெரியாம எவ்வளவு பதுக்கி வச்சிருப்பீங்களோ?” என்று வார்த்தையை விட விஜயா வேகமாய்,
“ரஞ்சிதா என்ன பேசுற… கொஞ்சம் சும்மா இருக்கியா?” என்று அதட்ட ரஞ்சிதம் விடாமல்,
“இல்லம்மா இதெல்லாம் முன்னாடியே சொல்லணும். அவன் பாட்டுக்கு புது பொண்டாட்டி வந்த சோக்குல உங்கள கண்டுக்காம விட்டுட்டா என்ன பண்றது? இங்க பாருடா! நீங்க எப்படி வேணாலும் இருந்துக்கோங்க.. ஆனா அம்மா அப்பாவ மறந்துடாத. உன்னை படிக்க வச்சு இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது அவங்க தான். பெத்த கடன்னு ஒன்னு இருக்குல்ல…?” என்று பகுமானம் பேசிக் கொண்டிருக்க நல்ல வேலையாக கிச்சனில் இருந்ததால் பவானி மற்றும் சுந்தரி காதுகளுக்கு இந்த விஷயம் செல்லாமல் நின்று விட்டது. ரஞ்சிதம் சொன்ன வார்த்தைகளில் ட்ரிகர் ஆன வம்சியோ,
“பெத்த கடமைய விட அதிகமாவே கொட்டி கொடுத்தாச்சு… இதுக்கு மேலயும் குடுக்கணும்னா என் உயிரை தான் கொடுக்கணும். இப்போதைக்கு அது மட்டும் தான் இருக்கு!” என்று ஆத்திரமாய் சொல்ல அவன் குரல் கொஞ்சம் கொஞ்சமாக உயர ஆரம்பித்தது.
“இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு கத்திக்கிட்டு இருக்க?” இன்று ரஞ்சிதம் வேறு ஏற்றி விட விஜயா அவர்கள் இருவரையும் தடுத்து, “போதும் சாமிகளா. ரெண்டு பேரும் வாய மூடிட்டு இருக்கீங்களா… வம்சி நீயும் ஏன்டா இப்படி பண்ற? கொஞ்சம் பொறுத்துதான் போயேன். அவ உன் அக்கா தான?” என்று கேட்க வம்சி தன் அன்னையை எரிச்சலாக பார்த்து,
“இதுக்கு மேலயும் எந்த மனுஷனால பொறுத்துக்க முடியும்னு தெரியலம்மா… ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோங்க. முன்னாடி நான் தனி ஆளு… நீங்க என்ன பண்ணாலும் வாயை மூடிட்டு அமைதியா போயிட்டேன். ஆனா இப்போ என்ன நம்பி ஒருத்தி வந்திருக்கா. அவள பாத்துக்க வேண்டிய பொறுப்பு என்னோடது. அதுல சங்கடம் வர்ற மாதிரி ஏதாவது பண்ணிட்டு இருந்தீங்கன்னா குடும்பமே வேண்டாம்னு தூக்கி எறிஞ்சிட்டு போயிடுவேன்!” என்று மிரட்ட சரியாக பவானி உள்ளே வந்து விட்டாள். கண்கள் சிவக்க வம்சி நின்றதை பார்த்தவள்,
“சாப்பிட கூப்பிடலாம்னு!” என்று இழுக்க, வம்சி தன்னை நிலை நிறுத்திக் கொண்டு, “போ வாணி வரேன்!” என்று அனுப்பி வைத்தான். நிச்சயமாக ஏதோ சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தாலும் பவானியால் தலையிட முடியவில்லை. எனவே அவள் அமைதியாக விலகிச் செல்ல வம்சி ரஞ்சிதத்தை பார்த்து,
“அம்மா வீட்டுக்கு வந்தேனா அதோட உன் ராஜாங்கத்தை நிறுத்திக்கணும். இது என் வீடு… மரியாதையோட இருக்கனும்னா வந்தமா போனோமானு இருக்கணும். அத விட்டுட்டு என்கிட்டையோ, இல்ல என் பொண்டாட்டி கிட்டயோ தேவையில்லாம பேசிட்டு இருந்த…. அவ்வளவுதான்!” என்று எச்சரித்து விட்டு செல்ல ரஞ்சிதம் கோபமாக தன் அம்மாவை பார்த்தாள்.
அன்று பவானியிடம் ரஞ்சிதம் மனம் கஷ்டப்படும்படி பேசியதை வம்சியால் அவ்வளவு எளிதாக விட முடியவில்லை. பவானி எதுவும் கேட்க வேண்டாம் என்று சொன்ன காரணத்தினால் வாயை மூடி கொண்டிருந்தவன் இங்கு வந்தும் ரஞ்சிதம் தன்னுடைய வேலையை காட்ட ஆரம்பித்ததும் தானுமே நிதானம் தவறி கத்தி விட்டான்.
“பார்த்தியாம்மா எப்படி பேசிட்டு போறான்னு? கல்யாணமான ரெண்டு வாரத்துலேயே இந்த ஆட்டம் ஆடுனான்னா, பின்னாடி என்ன எல்லாம் பண்ண மாட்டான்? அடிக்கடி நீயும் அப்பாவும் இங்க வந்து போக இருந்தா தான் உங்கள பாத்துக்கணும்ற அக்கறை அப்படியே இருக்கும். இல்லைன்னு வைங்க… மொத்தமா பொண்டாட்டி தாசனா மாறி உங்கள அம்போன்னு விட்டுட்டு போயிடுவான்!”
“ரஞ்சிதா நீயா எதையாவது சொல்லிட்டு இருக்காத… அவன் இதுவரைக்கும் பார்க்காத கஷ்டம் ஏதாவது இருக்கா சொல்லு? அவனோட கனவே உங்க அப்பாவால தான் சிதைஞ்சு போச்சு. இத்தனை வருஷம் நிம்மதி இல்லாம ஓடிக்கிட்டு இருந்தவன், இப்பதான் கல்யாணம் பண்ணி பொண்டாட்டி குடும்பம்னு வாழ ஆரம்பிக்க போறான். அவனுக்கு உன்னால எந்த உதவியும் பண்ண முடியாட்டியும் சரி! எந்த உபத்திரமும் பண்ணிடாத. என் புள்ளையை பத்தி எனக்கு தெரியும்… நீ முதல்ல நாளைக்கு உன் வீட்டுக்கு கிளம்புற வழிய பாரு!” என்று சொல்லிவிட ரஞ்சிதம் வேகமாய்,
“நான் சொல்றத சொல்லிட்டேன். அப்பறம் கேட்குறதும் கேட்காததும் உங்க விருப்பம்!” என்று விலகிச் செல்ல அதே நேரம் கிச்சனில் சாப்பிடுவதற்காக தட்டுகளை எடுத்துக் கொண்டிருந்த பவானி மனதிலோ வம்சியின் கோபமான முகமே வந்து நின்று இம்சை செய்தது.