நேச சிறகுகள் 8

திருச்சியில் திருமணம் முடிந்து பாலும் பழமும் சாப்பிடுவதற்காக வம்சியின் பெரியப்பா வீட்டுக்கு புதுமண தம்பதிகளை அழைத்து வந்திருந்தார்கள். காயத்ரி ஏதோ அவசர வேலை என்று  காலில் சுடு தண்ணீர் கொட்டியது போல் ராகவனோடு கிளம்பி விட்டாள். ஆனால் ரியா, “நான் சித்தி கூட தான் இருப்பேன் வரமாட்டேன்!” என்று பிடிவாதம் பிடித்து விட காயத்திற்கு கோபம் எல்லை கடந்தது.

ரியா பிடிவாதம் செய்து அழுததை கண்ட சுந்தரி கூட, “சரி விடுடு இன்னைக்கு எங்க கூட இருக்கட்டும். நாங்க நாளானைக்கு வந்து வீட்ல விடுறோம்!” என்று சொன்னதுக்கு காயத்ரி கோபமாய்,

“அது என்ன இவ்வளவு பிடிவாதம்… நான் போனதுக்கு அப்பறம் இங்க இருந்து நீ என்ன பண்ண போற?” என்று வலுக்கட்டாயமாய் சிரியவளை இழுத்துச் சென்றிருந்தாள். பவானிக்கும் அக்காவின் பாரா முகத்தை பார்த்து கஷ்டமாக இருந்தாலும், ரியாவிடம் சென்னையில் வந்து சந்திப்பதாக சொல்லி கன்வின்ஸ் பண்ணி சமாளித்து விட்டாள். பாலும் பழம் சாப்பிட்டு சின்ன சின்ன திருமண சடங்குகளை முடிந்த பின்னால் வம்சி மற்றும் பவானியை வேறு வேறு அறையில் ரெஸ்ட் எடுக்க வைக்க, பவானிக்கு இரவை நினைத்து படபடப்பாய் இருந்தது. பழைய தமிழ் படங்களை பார்த்து பர்ஸ்ட் நைட் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்திருந்தவள்,

‘இன்றே வாழ்வை தொடங்க வேண்டுமா?’ என்று தடுமாறினாள். கணவன் மீது எல்லையற்ற அன்பு நேசம் எல்லாம் இருந்தாலும் உடலளவில் இணைவது மட்டும் ஏதோ முரண்பாடாக இருந்தது.

“கொஞ்ச நாள் பழகலாமே… ஒருத்தர் ஒருத்தர் நல்லா புரிஞ்சுகிட்டு லைப்ப ஸ்டார்ட் பண்ணலாமே?” என்றவள் யோசித்தாலும் வம்சியின் மனதில் என்ன இருக்குமோ என்று இருந்தது. மேலும் அவன் கேட்டு தன்னால் மறுக்கவும் முடியாது என நினைத்தவள் உள்ளே இருந்த படபடப்பை மறைத்துக் கொண்டு சிரித்த முகத்தோடு இருக்க,

“ரெஸ்ட் எடுத்துக்கோ பவானி ரொம்ப டயர்டா தெரியுற!” என்று விஜயா சொல்லிவிட்டு அவளோடு இருந்த மற்ற அனைத்து பெண்களையும் வெளியே வருமாறு கூறிவிட்டார். பவானிக்கு படுத்தாலும் தூக்கம் வரவில்லை.

என்ன செய்வது என்று புரியாமல் போனை நோண்டிக் கொண்டு இருந்தவள் திடீரென யாரோ கதவை திறந்து வருவதை கண்டு, ஒருவேளை வம்சியோ என்று ஆர்வமாய் நிமிர்ந்து பார்த்தாள். ஆனால் அவள் எதிர்பார்ப்புக்கு எதிராக ரஞ்சிதம் தான் உள்ளே வர, “வாங்கண்ணி!” என எழுந்து விட்டாள்.

ரஞ்சிதம் அங்கிருந்த தன்னுடைய பெட்டியில் இருந்து ஒரு சாதாரண புடவையை எடுத்த படி, “ப்ரஷப் ஆகிட்டியா… டிரஸ் சேஞ்ச் பண்றதுன்னா  பண்ணிக்கோ!” என்று சொல்ல பவானி, “சரிங்கண்ணி!” என்று தலையாட்டினாள்.

பவானி என்ன சொன்னாலும் சரி சரி என தலை ஆட்டுவது ரஞ்சிதத்திற்கு ஒரு விதத்தில் பிடித்து இருந்தது. எனவே அவள் அருகே வந்து,

“புது இடம்னு சங்கடப்படாத, இந்த வீட்ல எங்க அப்பாவுக்கும் ஒரு பங்கு இருக்கு. இது எங்க பூர்வீக வீடு!” என்று சொல்ல பவானி ஓ என்று கேட்டுக் கொண்டாள்.

“சொத்தை பிரிக்கலாம்னு அப்பா பல வருஷமா சொல்லிக்கிட்டே இருந்தாலும், என் பெரியப்பா பிடி கொடுக்கவே மாட்றாரு. என்னைக்காவது பெரிய பிரச்சனையானா தான் இதுக்கு ஒரு முடிவு தெரியும் போல! ஆனா இந்த வீட்டில வரப்போற பங்குல எனக்கும் வம்சிக்கும் சரிப்பாதியா தான் கொடுக்கணும்னு நான் அம்மா கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன். இப்பதான் பொண்ணுங்களுக்கும் சொத்துல சரிசம பங்கு இருக்குன்னு சட்டத்துல சொல்றாங்களே?” என்றவள் கேட்க பவானி என்ன சொல்லுவாள்?

“அதுவும் சரிதான் அண்ணி!” என்று அதற்கும் தலையாட்டினாள். ரஞ்சிதத்தோடு பழகிய இந்த இடைப்பட்ட நாளில் வம்சி அவளைப் பற்றி சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்று புரிந்து கொண்டு விட்டாள். அதனால் தான் வம்பை விலைக்கு வாங்காமல் தன்னளவில் சரியாகவே இருக்க ரஞ்சிதம் சற்று தயங்கி,

“அப்பறம் உன் மேல இருக்க அக்கறைல ஒன்னு சொல்றேன். தப்பா எடுத்துக்காத!” என்று பீடிகை போட பவானி என்னவென்று பார்த்தாள்.

“இந்த காலத்து பொண்ணுங்க எல்லாம், முதல்ல என்ஜாய் பண்ணனும். அப்புறம் தான் குழந்தை பெத்துக்கணும்ன்னு எல்லாத்தையும் தள்ளி போட்டுறாங்க. அப்படி பண்றதால எவ்வளவு பிரச்சனை வருது தெரியுமா? என்னையே பாரு! குழந்தை வரம் கிடைக்காம என் மாமியார் வீட்ல அவ்வளவு பிடுங்கு! ஒரு சில சமயம் தனியா உக்காந்து அழு அழுன்னு அழுவேன்!” என்று கூற அவள் கண்கள் கலங்கியது.

பவானிக்கோ சரியான சங்கடம். நாத்தனார் மிக சீரியசான ஒரு விஷயத்தை தன்னிடம் பேசுவாள் என்றவள் கனவிலும் நினைக்கவில்லை. மேலும் தாங்கள் அவ்வளவு க்ளோஸ் ஆகவும் பழகவில்லையே என நினைத்துக் கொண்டு,

“கவலைப்படாதீங்க அண்ணி… சீக்கிரமே நல்லது நடக்கும்!” என்றவள் கைகளை தயக்கமாய் பிடித்துக் கொண்டு சொல்ல, ரஞ்சிதம் தன்னை சமம் செய்து கொண்டு,

“அப்படி தான் நம்பிகிட்டு இருக்கேன்… உன்கிட்ட நான் கேட்டுக்குறது ஒன்னே ஒன்னு தான். நீயும் தள்ளி போடுறேன்னு சொல்லி என்ன மாதிரி மாட்டிக்காத. அப்பறம் கல்யாணம் ஆன உடனே எல்லா பொண்ணுங்களுக்கும் பூரிப்புல கொஞ்சம் உடம்பு ஏறும். அப்படி ஏறவும் விட்றாத… நீ இப்போ இருக்கறதே கொஞ்சம் ஓவர் வெயிட் தான்… இதுக்கு மேலயும் வெயிட் ஏறுனா அப்பறம் அதனால என்ன பிரச்சனை எல்லாம் வருமா?” என்று சொல்ல அவ்வளவு நேரம் ரஞ்சிதத்தை நினைத்து வருத்தத்தில் இருந்த பவானிக்கு அப்படியே முகம் சுருங்கி போனது.

ஆக மொத்தம் அங்கு சுத்தி இங்கு சுத்தி இறுதியில் பவானிக்கு எந்த விஷயத்தில் அடித்தால் வலிக்குமோ அங்கு ரஞ்சிதம் சரியாக அடித்து விட்டாள். பவானியின் முகம் மாறுவதை கவனித்த ரஞ்சிதமும், “தப்பா நினைச்சுக்காத பவானி!” என்று சொல்ல, பவானியும் தலையசைத்து, “பரவால்ல அண்ணி!” என்று ஒற்றை வார்த்தையாக கூறினாள்.

“ஒரு பொண்ணுக்கு இன்னொரு பொண்ணு செய்யற உதவியா நினைச்சு தான், இதை சொல்றேன். மனசுல வச்சுக்கோ… எங்க அம்மா நல்ல கேரக்டர் தான். ஆனா அவங்களுமே சில சமயம் எதிர்ல இருக்கவங்க மனநிலைய புரிஞ்சுக்க மாட்டாங்க. எனக்கே குழந்தை இல்லைன்னு ஏதாவது சொல்லிட்டு இருப்பாங்க. அப்பறம் உன்னையும் சொல்லிட கூடாது பாரு!” என்று தான் செய்ததை சரி என்று வாதிட்டவள், “சரி நீ ரெஸ்ட் எடு!” என்று கிளம்பி விட பவானிக்கு தலை சுற்றி தான் போனது.

தான் இப்படி எல்லாம் மற்றவர்களிடம் பேசுவோமா? என்று யோசித்தவள் பொத்தென்று கீழே அமர்ந்து விட அதன் பின்பு எங்கிருந்து வரப்போகிறது தூக்கம்?

தூக்கம் வராமல் புரண்டு கொண்டே இருந்தாள். மணியை பார்க்காமல் எட்டு மணிக்கு மேல் அசந்த நேரம் விஜயா டீ கொண்டு வந்து கொடுத்தார். “நல்லா தூங்குனியம்மா?” என்றவர் கேட்டதற்கு கூட, ‘உங்க பொண்ணு தூங்க விட்டா தான?’ என்று எண்ணியவள்,

“இல்லத்த தூக்கம் வரல சும்மாதான் படுத்து இருந்தேன்!” என்று கூற அதன் பின்பே உடையை மாற்றிக் கொண்டு ஒரு லேசான புடவையில் வெளியே வந்தாள். அனைவரும் டயர்ட்டாக இருந்ததால் அப்பொழுதே சாப்பிட்டுக் கொண்டு இருக்க வம்சி பவானியை பார்த்ததும்,

“வாணி வா சாப்பிடலாம்!” என்று தன்னோடு அழைத்துக் கொள்ள அவன் முகத்தை பார்த்த பின்பே பவானியின் மனம் சமாதானமாய் மாறியது. இட்லி சாம்பார் என்று லைட்டான உணவாக இருந்தாலும் என்னவோ தெரியவில்லை, சாப்பாடு உள்ளே இறங்க மறுத்தது. இலையை அளந்து கொண்டு இருந்தவளை கவனித்த வம்சி,

“என்னாச்சு… பிடிக்கலையா வேற ஏதாவது பண்ண சொல்லவா?” என்று கேட்க பவானி மறுத்து,

“மதியம் சாப்பிட்டதே ஒரு மாதிரி இருக்கு!” என சொல்ல,

“அப்போ சரி… வீம்பா சாப்பிடாத விட்டுடு!” என்றாள் ரஞ்சிதம் வேகமாய்.

“இல்ல மதியமே அவ சரியா சாப்பிடல இன்னும் கொஞ்சம் சாப்பிடு பவானி. இன்னும் ஒரே ஒரு இட்லி!” என்றவன் நேரடியாகச் சொல்லி விட பவானியாலும் மறுக்க முடியவில்லை. “சரிங்க!” என்று கஷ்டப்பட்டு உள்ளே தள்ளியவள் கணவன் தன்னை ஓர கண்ணால் பார்ப்பதை கவனிக்காமல் விட்டு விட்டாள். சாப்பிட்டு முடித்துவிட்டு சிறிது நேரம் பேசியபடி இருக்க,

“நேரமாச்சு… நல்ல நேரம் முடியறதுக்குள்ள எல்லாத்தையும் பார்த்துப்போம்!” என்று விஜயா சூசகமாக சொல்ல, பவானிக்கு ஏற்கனவே இருந்த டென்ஷன் போய் இந்த டென்ஷன் பிடித்துக் கொண்டது. அவள் லேசான புடவை தான் கட்டி இருந்ததால் அதை மாற்றாமல் சின்னதாக ஒப்பனை செய்து விட்டு தலை நிறைய மல்லிகை பூவை சூடி விட்டார்கள். “கைல பால் சொம்ப மட்டும் தான் கொடுக்கல… கொடுத்தா படத்துல பார்த்ததுக்கு, இப்போ இருக்குறதுக்கும் பத்து பொருத்தம் பக்காவா இருக்கும்!” என்று பவானி நினைக்க பார்வதி பவானியின் இடுப்புச் செயலையை லேசாக இறக்கிவிட்டு,

“ஒன்னும் தெரியாத அளவுக்கு சின்ன பொண்ணு இல்ல நீ… பார்த்து நடந்துக்கோ! சந்தோஷமா இருங்க!” என்று சொல்ல பவானிக்கு முகம் சிவந்தது. “அத்த….!” என்றவள் உள்ளே போன குரலில் சொல்ல விஜயாவும்,

“இன்னைக்கே வாழ்க்கைய ஆரம்பிச்சா தான் நல்லது பவானி. அது அது அந்த நேரத்துல நடந்திடனும்!” என்று அழுத்தம் கொடுக்க பவானிக்கு இவர்களோடு இருப்பதைவிட வம்சியிடம் சென்று விட்டால் பெட்டர் என தோன்றி விட்டது. அனைவரிடமும் தலையாட்டி பொம்மையாக இருந்தவள், விஜயா கொடுத்த ப்ளாஸ்கை வாங்கிக் கொள்ள ‘பால் சிம்பு மிஸ்ஸிங்!’ என்றவள் மனம் நக்கல் பண்ணியது.

“அத்த காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோ!” என்ற பார்வதி ஏற்றி விட, ‘இதுக்கெல்லாம் ஆசீர்வாதம் வாங்கணுமா என்ன?’ என்று யோசனையாய் காலில் விழுந்தவள் தன்னுடைய அம்மாவின் காலிலும் விழ சுந்தரி முகத்தில் அப்பட்டமான நிம்மதி தெரிந்தது.

‘எப்படியோ இத்தனை காலம் வெயிட் பண்ணியதற்கு கரை சேர்த்து விட்டோம்!’ என்ற நிம்மதியில்,

“நல்லா இருப்படி பவானி… சீக்கிரம் போ மாப்பிள்ளை காத்துட்டு இருப்பாரு!” என்று வம்சியின் அறைக்கு அனுப்பி வைக்க மற்றவர்களும் தூங்குவதற்கு சென்று விட்டார்கள். பவானி தனியாக நடந்து செல்லும் பொழுது அவள் கொலுசு சத்தமே ஜல் ஜல் என்று சத்தமாய் கேட்க பவானிக்கு இதயம் துடித்தது. போருக்கு செல்லும் வீராங்கனை போல் நெஞ்சை பிடித்துக் கொண்டு சென்றவள் வம்சியின் ரூம் முன்னால் நின்று, “பயப்படாத உன் விருப்பம் இல்லாம ஒன்னும் பண்ணிட மாட்டாரு.  பீம் பத்தி உனக்கு தெரியாதா?” என்று பெருமூச்சை இழுத்து விட, சரியாக அவனே கதவை திறந்து விட்டான். வெளியில் திருட்டு முழியோடு நிற்கும் மனைவியை பார்த்தவன்,

“கதவ தட்டுவோமா? இல்ல இப்படியே ரிட்டன் போயிடலாமான்னு  யோசிச்சிட்டு இருந்தியா?” என்று கேலியாக கேட்டான்.

“ஐயோ அப்படி எல்லாம் இல்ல!” என்று பவானி மறுக்க, “ம்ம்… உள்ள வா வாணி!” என்று மென்மையாக அழைத்தான். சின்ன தலையசைப்போடு உள்ளே வந்தவள், ஓவராக இல்லை என்றாலும் ஃபர்ஸ்ட் நைட் செட்டப்போடு இருந்த அறையைப் பார்த்துவிட்டு வம்சியையும் திரும்பி பார்க்க அவனே,

“எனக்கே இங்க இருக்கது வியர்டா இருக்கு!” என்று சொல்லிவிட பவானி சிரித்து விட்டாள்.

“எனக்கு புரியுது பட் என்ன பண்றது? பழக்கவழக்கம் நம்பிக்கைன்னு எதையாவது சொல்லி நம்ம வேணாம்னு சொன்னாலும் போர்ஸ் பண்ணிடுவாங்க. சரி எதுக்கு நிக்கிற வா வந்து உட்காரு!” என்று மெத்தைக்கு அருகே இருந்த ஒரு நாற்காலியில் அவன் அமர்ந்து கொள்ள பவானியும் கையில் இருந்த ஃப்ளாஸ்கை டேபிளில் வைத்து விட்டு மெத்தையில் ஒரு ஓரமாக அமர்ந்தாள். அப்பொழுதும் படபடப்பு குறையாததால், என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருக்க வம்சி குரலை செருமி கொண்டு கூறினான்.

“சின்ன வயசுல நாங்களும் இங்கதான் இருந்தோம்… நான் 8th ஸ்டாண்டர்ட் போனதுக்கப்பறம் தான் சென்னைக்கு ஷிபிட் ஆனோம். சோ இந்த வீட்ல என்னோட பழைய மெமரிஸ் நிறைய இருக்கு… அதுல சிலது மனசுக்கு பிடிக்காம இருந்தாலும், இங்க சந்தோஷமா இருந்த தருணங்கள் ஏராளம்!” என்று கூற பவானி ஆர்வமாய் பார்த்தாள்.

“எங்க பழைய ஆல்பம்ஸ் கூட இங்க இருக்கு பாக்குறியா?” என்றவன் கேட்க பவானி வேகமாய் தலையாட்டினாள்.

“ஓகே வெயிட்!” என்று புன்னகையோடு எழுந்து சென்று அங்கிருந்த அலமாரியை திறந்தவன் பெரிது பெரிதாக இருந்த இரண்டு மூன்று ஆல்பங்களை தூக்கி வந்து மெத்தையில் வைக்க அவனும் பவானிக்கு எதிராக அமர்ந்து கொண்டான். “இதோ சின்ன வயசுல இப்படித்தான் இருந்தேன்!” என்றவன் கிருஷ்ணன் வேடமிட்டு இருந்த ஒரு சிறுவனை காட்ட பார்ப்பதற்கு கமலக்கண்ணனை போல் அத்தனை க்யூட்டாக இருந்தான். அந்த படத்தை தொட்டுப் பார்த்த பவானி,

“ரொம்ப அழகா இருக்கீங்க!” என்று சொல்ல, “பொய் சொல்லாத… எல்லாரும் நான் ரொம்ப கருப்பன்னு கிண்டல் தான் பண்ணுவாங்க!” என்றவன் கூற பவானி உடனே,

“கருப்பா இருந்தா என்னவாம்? அழகுக்கும் நிறத்துக்கும் சம்பந்தமே கிடையாது!” என்று சொல்ல வம்சி அவளைப் பார்த்து, “உண்மைதான்! அழகுக்கும் உடல் அமைப்புக்கும், நம்ம ஆரோக்கியதுக்கும் கூட சம்பந்தமே கிடையாது!” என்று கூற பவானி அதை சரியாக காதில் வாங்காமல் மற்ற படங்களை பார்த்துக் கொண்டிருக்க, வம்சி மெதுவாய் அவள் கையைப் பற்றினான்.

இதில் உடல் சிலிர்த்த பவானி அவனை மெதுவாய் நிமிர்ந்து பார்க்க, “அக்கா உன்கிட்ட பேசுனதை கேட்டேன்!” என்று கூற பவானியின் முகத்தில் அதுவரை இருந்த புன்னகை மறைந்தது.

“இல்ல அவங்க சும்மாதான் பேசிக்கிட்டு இருந்தாங்க!” என்றவள் சொல்ல, “எனக்கு தெரியும் பவானி… ரஞ்சிதம் உன்கிட்ட அப்படி பேசி இருக்கக் கூடாது. நீயும் அப்படி பேச அனுமதிச்சு இருக்க கூடாது!” என்று சொல்ல பவானி என்ன சொல்லுவாள்?

“இல்லங்க அவங்க சொன்னதும் சரிதான?” என்று கேட்க வம்சி புருவம் உயர்த்தி,

“என்ன உண்மை? நமக்கு குழந்தை பிறக்குமா பிறக்காதான்னு அவ என்ன முடிவு பண்றது?” என்று கேட்க அவன் குரலில் சிறிது கடுமை தெரிந்தது. “நம்ம மேல இருக்க அக்கறைல தான்!” என்று பவானி என்னவோ சொல்ல வர,

“அக்கறை கூட ஒரு அளவுக்கு தான் இருக்கணும் பவானி. நம்மளோட ப்ரைவசில எல்லாம் மூக்கை நுழைக்கிற மாதிரி, என் அம்மாவோ அக்காவோ யார் என்ன சொன்னாலும் நீ அமைதியா இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. அவங்களுக்கு புரிய வைக்கிற மாதிரி நறுக்குன்னு பதில் சொல்லிடு… நீ அமைதியா போனா அவங்க அமைதியா இருக்க மாட்டாங்க. நான் என் குடும்பத்தை பத்தி ஏற்கனவே சொல்லி இருக்கேன்ல்ல?” என்று கேட்க, பவானி ம்ம் என்றாள்.

“உன்னோட மெண்டல் பீஸ்க்காக சொல்றேன் பவானி… அடுத்தவங்க நம்மள பத்தி ஆயிரம் பேசலாம். ஆனா நம்மளை ஹர்ட் பண்ற அளவுக்கு அவங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. கணவன் மனைவி உறவாவே இருந்தாலும் அதுல ஒரு மரியாதை இருக்கணும்னு எதிர்பார்க்குறவன் நான். அப்படி இருக்கப்போ, என்னோட பொண்டாட்டி மத்தவங்க முன்னாடி சங்கடப்பட்டு பதில் சொல்றத நான் விரும்ப மாட்டேன்!” என்று சொல்ல பவானிக்கு ஒரு பக்கம் அவன் தனக்கு சப்போர்ட் பண்ணி பேசுவதை பார்த்து சந்தோஷமாகவும் இருந்தது, இன்னொரு பக்கம் இதை சென்று ரஞ்சிதத்திடம் கேட்டு விடுவானோ என்று பயமாகவும் இருந்தது.

“இனிமேல் நான் பாத்துக்குறேங்க!” என்று சொன்னவள், “உங்க அக்கா கிட்ட எதுவும் கேட்டுக்காதீங்க!” என்றும் சொல்ல வம்சியும் ஒப்புக் கொண்டான். அதில் நார்மலான பவானி மறுபடியும் போட்டோவை திருப்ப முயன்ற பொழுது தான் தன்னுடைய கை வம்சியிடம் அகப்பட்டு இருப்பது புரிய, அவனை என்னவென நிமிர்ந்து பார்த்தாள்.

அவனோ அவளது இரண்டு கைகளையும் தன்னுடைய கைக்குள் அடக்கி, “உன்கிட்ட மூணு முக்கியமான விஷயம் சொல்லணும்!” என்றவள் கண்ணை பார்க்க பவானிக்கு மீண்டும் இதயம் கடகடவென்று துடிக்க ஆரம்பித்தது.