“பவானி… இந்த மிளகா வத்தள மாடில காய போட்டுட்டு வாயேன். பொடிக்கு அரைக்க கொடுக்கணும். எல்லாம் வதவதன்னு இருக்கு…!” என சுந்தரி பெரிய தூக்கு வாளி ஒன்றை நீட்ட, பவானி கடுப்பாக பார்த்தாள்.
“இப்போ தான காய போட்ட துணிய எடுத்துட்டு வர சொன்னீங்க… அப்போவே கொடுத்து விட்டு இருக்கலாம்ல…?”
“மறந்துட்டேன்டி. கோச்சுக்காம போயிட்டு வந்துடு!” என சுந்தரி தாஜா செய்ய,
“பண்றேன்… பண்றேன். ஏதோ நான் இருக்கதால ஜாலியா இருக்கீங்க… நான் போனா தான் என் அருமை தெரியும்!” என்று கிண்டலுக்கு சொல்ல, சுந்தரிக்கு முகம் சுருங்கி போனது. பவானியும் அதை பார்த்து,
“அதுவும் உண்மை தான. இத்தனை நாள் நீ இருக்க கண்டு என் இஷ்டத்துக்கு இருப்பேன். சமையல், வீட்ட ஒழுங்கா வச்சுகுறதுன்னு எல்லாத்தையும் கவனிச்சுப்ப… நீ போயிட்டா எனக்கு ஒரு கையே உடைஞ்ச மாதிரி இருக்க போகுது!” என்று வருந்த பவானி மறுபடியும் கேலி செய்தாள்.
“அப்போ நான் கல்யாணம் பண்ணி போறேன்னு கவலை இல்ல. வேலை செய்ய ஆள் இல்லைன்னு தான் கவலை. சரி ஒரு நல்ல ஐடியா சொல்றேன் கேளுங்க… இப்போவே கவியரச உங்க அசிஸ்ட்டண்டா மாத்திடுங்க…!” என்று கண்ணடிக்க, சுந்தரி சலித்தார்.
“அவன் தான… அவன் உதவாம இருந்தாலே பெரிய உதவி தான்!”
“தாய் அறியாத சூல் உண்டா?” என சிரித்த பவானி, “போயிட்டு வந்து உங்ககிட்ட வம்பு பண்றேன்!” என மொட்டை மாடிக்கு நடையை கட்ட, சரியாக பேப்பரில் மிளகாயை கொட்டி பரசி கொண்டிருக்கும் பொழுதே கால் வந்தது.
நம்பரை பார்க்காமல் அட்டன்ட் பண்ணி தோள்பட்டையில் வைத்து முகத்தால் அண்டம் கொடுத்தவள், “ஹெலோ…!” என கேட்க, “வாணி வம்சி பேசுறேன்…!” என்றான் அவளது வருங்கால கணவன். இருவரும் நம்பரை ஷேர் பண்ணி சில வாரங்கள் சென்று இருந்தது.
அதிகம் பேசவில்லை என்றாலும், சின்ன சின்ன வார்த்தை பரிமாற்றங்கள் நடந்திருக்க, பவானியின் முகம் சூரியனை கண்ட தாமரையாக மலர்ந்தது.
“என்ன மார்னிங் கால் பண்ணி இருக்கீங்க… வொர்க் இல்லையா…?” என அவன் அறியா புன்னகையோடு பேசினாள்.
“மேரேஜ் வொர்கா ரெண்டு நாள் லீவ் எடுத்துட்டு சென்னை வந்திருக்கேன். அன்ட் இன்னிக்கு என் கொலிக்ஸ்க்கு கொடுக்க வேண்டிய பத்திரிகை டிசைன் பார்க்கணும். உன்னையும் கூட்டிட்டு போனா பெட்டர்ன்னு பட்டது. நீ ப்ரீயா இருந்தா என் கூட வரியா வாணி… ?”
அவன் குரல் பிசிறில்லாமல் இருந்தது. பவானிக்கு அவன் தன்னையும் அழைப்பது அளப்பறிய மகிழ்ச்சியை கொடுத்தாலும், வீட்டில் என்ன சொல்வார்களோ என தயக்கமாக இருக்க, “நான் ப்ரீ தான்… ஆனா அப்பாகிட்ட பெர்மிசன் கேட்கணும்!” என்றாள் பள்ளி மாணவியாக.
எதிர்கால மனைவி சொன்னதை கேட்டு சத்தமின்றி சிரித்து விட்ட வம்சி, “பெர்மிசன் கேட்டுட்டு தான் கூப்டுறேன்!” என சொல்ல, பவானி வியப்படைந்தாள்.
“ஓ… சரின்னு சொல்லிட்டாரா?” என்றாள் நம்ப முடியாமல். ஏனென்றால் காயத்ரிக்கும் ராகவனுக்கும் பேசி முடித்திருந்த பொழுது அவன் காபி சாப்பிட போகலாம் என்று ஒருநாள் சும்மா அழைத்ததிற்கே அதெல்லாம் கல்யாணம் முடிந்ததும் பழகிக்கலாம் என பட்டென மறுத்து விட்டார் கனகசபை.
காயத்ரிக்கும் அது பெரிய குறையாகி இப்பொழுது போல் எதிர்க்கவில்லை என்றாலும், அம்மா தங்கையிடம் சொல்லி புலம்பி தீர்த்தாள்.
“அங்க கூட பெர்மிசன் கிடைச்சிடும் போல… நீ ரொம்ப யோசிக்கிறியே!” என வம்சி சொல்லி விட, எங்கே தவறாக நினைத்து விடுவானோ என்ற பதட்டத்தில்,
“இல்ல இல்ல… சும்மா தான் கேட்டேன். நீங்க எங்க வரணும்ன்னு சொல்லுங்க!” என்றாள் வேகமாய். அவனோ அதற்கு பதில் சொல்லாமல் அமைதியாகி விட, பவானிக்கு மேலும் ஜெர்க் ஆனது.
“ஹெலோ… ஏங்க இருக்கீங்களா…?” என கண்ணை உருட்டியபடி கேட்க, வம்சி நேரடியாக சொன்னான்.
“பவானி… என்கூட வர கம்பர்டபுளா இருந்தா வா… இல்லையா, தெளிவா நோன்னு சொல்லு… நான் என்ன சொல்லுவேனோன்னு நீ யோசிக்க அவசியமே இல்ல. இப்பவும் சரி… எப்பவும் சரி!”
அவன் சீரியஸாக மாறி போனதை கண்ட பவானியோ, “ஐயோ நீங்க நினைக்கிற மாதிரி இல்ல. அப்பா இதுக்கெல்லாம் அக்காவ அலோ பண்ணது இல்லையா… இப்போ என்னை மட்டும் விட்டதால, வியர்டா இருந்தது. அதான் கேட்டேன். நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க… ப்ளீஸ்!” என்று உள்ளே இறங்கிய குரலில் சொல்ல, வம்சிக்கு அவளை பயமுறுத்தி விட்டோம் என புரிந்தது.
‘ஏண்டா டேய்…!’ என நெற்றியில் தட்டி கொண்டவன்,
“இட்ஸ் ஒகே…. காம் டவுன்…!” என்று புன்னைகையேடு சொல்ல, “எத்தனைக்கு மணிக்கு வரணும்?” என பவானி கேட்டாள்.
“ஒரு அரை மணி நேரத்துல பெட்டர். சோழிங்கநல்லூர்ல இருக்க லவ்லி கார்ட்ஸ் கடைக்கு வந்துடு. நான் அங்கயே வெயிட் பண்ணிட்டு இருக்கேன்!”
“சரிங்க… நான் வந்துடுறேன்!” என போனை கட் பண்ணியவள், அடுத்த நிமிடம் திடுதிடுவென கீழே ஓடி இருந்தாள்.
“அம்மா… அம்மா… இங்க வாயேன்!” என கதறியவள், “ஒரு நல்ல சுடி எடுத்து வை.. நான் குளிச்சுட்டு வந்துடுறேன்!” என பாத்ரூமுக்குள் சென்று விட,
“எங்கடி போற… கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்காது நியாபகத்துல இருக்குல்ல…இனிமேல் வெளிய சுத்த கூடாது!” என்று சொல்ல,
“நான் சுத்த போகல… உன் மாப்பிள்ளை தான் வர சொன்னாரு…!” என்றாள் பவானி ஜாலியாக. மாப்பிள்ளை என்றவுடன் சீரியசான சுந்தரி, “அப்பாகிட்ட கேட்டியா பவானி?” என விசாரிக்க,
“அவர் கேட்டாராம். நீ சுடிதார் எடுத்து வைம்மா…!” என பறந்தாள் பவானி.
“உங்கப்பா ஒகே சொல்லிட்டாரா… ஆச்சிர்யமா இருக்கே. என்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லல…!” என யோசித்த சுந்தரி,
“புடவை கட்டிட்டு போ… சுடிதார் வேணாம்!” என்று ஜார்ஜெட் புடவை ஒன்றை எடுத்து வைக்க, பவானி வெளியே வந்து குதித்து விட்டாள்.
“அம்மா புடவை ஓவரா இருக்கும். அவரு சீக்கிரம் வேற வர சொன்னாரு…!”
“பரவாயில்ல நான் கட்டி விடுறேன். பொண்ணுங்க புடவை கட்டுனா தாண்டி ஆம்பிளைகளுக்கு பிடிக்கும்!” சுந்தரி அந்த காலத்து நம்பிக்கையை எடுத்து விட பவானி முறைத்தாள்.
“புடவை கட்டுனா ஸீனாடி? என்ன லாஜிக் இது?” என பவானியின் மனதை களைத்து அழகாய் ரெடி பண்ணி விட, பவானிக்கு அழுகையே வந்தது. “கண்டிப்பா அவரு ஏதாவது நினைச்சுக்க போறாரு!” என்ற புலம்பலோடு கிளம்பி செல்ல, வம்சியோ அவளை கண்டதும் குளிர்ந்து போவது போல் கமென்ட் கொடுத்தான்.
“வாணி…யூ லுக் வெரி ப்ரிட்டி இன் சேரி. ரொம்ப அழகா இருக்க!”
அவளை இம்ப்ரஸ் பண்ண வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், இயல்பாகவே அவன் சொல்லி இருக்க, பவானிக்கு இறக்கை மட்டும் தான் முளைக்கவில்லை. முகம் ஆயிரம் வார்ட்ஸ் பல்ப் போட்டது போல் மின்ன, “தாங்க்ஸ்!” என்றாள் நெளிந்தபடி.
“புடவைன்னா ரொம்ப பிடிக்குமோ… உன்னை அடிக்கடி அதுல தான் பார்க்குறேன்!”
அவன் கேட்டபடி கார்ட்ஸ் செலக்ட் பண்ண உள்ளே அழைத்து செல்ல, பவானி வாய்க்கு வந்ததை அடித்து விட்டாள்.
“ஆமா… புடவை தான் கம்பர்டபுளா இருக்கும். நான் எப்பயாவது தான் சுடிதார் போடுவேன்!”
‘பச்சை பொய் சொல்றா பாரு!’ என மனசாட்சி காரி துப்ப, அது வெளியே தெரியாமல் சிரித்த முகமாக இருந்தாள்.
“உனக்கு சேரி புடிக்குமா… புடவையே கட்ட தெரியாத உனக்கு புடவை புடிக்குமா…?” என மூளை வேறு எள்ளி நகையாட,
“இனிமேல் புடிக்கும். நான் கட்டி பழகிப்பேன்!” என சமாளித்தாள்.
“வெல்கம் மேம்… வெல்கம் சார்!” என வரவேற்ற கடை ஊழியர்கள், அவர்கள் எதிர்பார்ப்பை கேட்டறிந்து வெடிங் கார்ட்ஸ் கேட்டகரியை நேரடியாகவும், கம்ப்யூட்டரிலும் டிசைன்ஸ் காட்ட, வம்சி பவானியின் கையில் பொறுப்பை ஒப்படைத்தான்.
“நீங்களும் பாருங்களேன்…!” என்றவள் சொன்னதிற்கு, “நீயே சூஸ் பண்ணு வாணி… இத நம்ம ரெண்டு பேர் ப்ரெண்ட்ஸ் அன்ட் கொலிக்ஸ்க்கு மட்டும் தான் கொடுக்க போறோம். எனக்கு ஒரு இருநூறு பத்திரிக்கை, உனக்கு ஒரு இருநூறு சொல்லுவோமா?” என கேட்க, பவானி யோசித்தாள்.
அவள் தனியாக பத்திரிகை அடிக்க வேண்டும் என யோசிக்கவில்லை. ‘வீட்ல அடிப்பாங்கள அதையே கொடுத்துடுவோம்!’ என நினைத்திருக்க, வம்சி கேட்டதும்,
“எனக்கு வேணாம்ங்க… உங்களுக்கு மட்டும் சொல்லுவோம்!” என மறுத்தாள். வம்சி அதற்கு,
“நம்ம ரெண்டு பேரும் ஒரே மாதிரி கொடுக்கலாம்ன்னு நினைச்சேன்…!” என்று சொல்ல, பவானியின் மண்டை தானாக ஆடி விட்டது. பவானி சில கார்ட்ஸ் சூஸ் பண்ணி அதை வம்சியிடமும் காட்டி இறுதியில் ஒன்றை சூஸ் பண்ண, வம்சி தானே கண்டன்ட்டை ஆங்கிலத்தில் சேர் பண்ணி விட்டான்.
அட்வான்ஸ் கொடுத்து நாளைக்கு வாங்கி கொள்கிறோம் என இருவரும் கிளம்ப, லேட் ஆகி விட்டதால் லஞ்ச் சாப்பிட்டு போகலாம் என்று வம்சி சொல்லி விட்டான்.
பவானிக்கு தான், ஏதோ காலேஜை கட் அடித்து விட்டு பாய் ப்ரண்டோடு ஊர் சுற்றுவது போல் இருந்தது. அருகே இருந்த ஹோட்டலுக்கு வந்து ஆர்டர் கொடுத்து விட்டு அவன் தான் பேசி கொண்டிருந்தான். ஆனால் பவானி பேசவே இல்லை.
எல்லாம் கனவு மாதிரி இருந்தது. இதோ இப்படி எல்லாம் நடக்கும் என்றவள் நினைத்தது கூட கிடையாது. எனவே அவன் பேசுவதை கிட்டத்தட்ட மெய்மறந்து ரசித்து கொண்டிருக்க, “வாணி!” என்றவள் முன்னால் சொடக்கு போட்டு விட்டான்.
“என்ன என்ன சொன்னீங்க…?” என்றவள் சமாளிக்க, “அடிக்கடி ஜோன் அவுட் ஆகிடுவியா?” என சிரித்தவன், “என்ன யோசிச்சிட்டு இருக்க?” என்றான் சாதாரணமாக.
“உங்கள பத்தி தான் யோசிச்சேன்!” என்று உளறி விட்டவள், அவன் ஒரு மாதிரி பார்ப்பதை கண்டு,
“ஐ மீன்… காலேஜ்ல பார்த்ததுக்கும் இப்ப பார்க்குறதுக்கும் உங்ககிட்ட நிறைய டிபரன்ஸ்… ஹேர் கட்ல இருந்து, உங்க ஸ்டைல்ல இருந்து எல்லாமே மாறிடுச்சு… ஒரு காதுல சின்ன வெள்ளை கலர் ஸ்டோன் வச்சு கடுக்கன் போட்டு இருப்பீங்க… கைல செம்பு காப்பு!” என வர்ணிக்க ஆரம்பித்தவள், பின்பு தான் அவன் தன்னை சுவாரசியமாக பார்ப்பதை கண்டு சிரித்து சமாளித்தாள்.
“அது… உங்கள அடிக்கடி பார்ப்பேன். புட் பால் மேட்ச் அப்போ கூட பார்த்திருக்கேன்!” என்று இழுக்க,
“நீங்க நினைக்கிற மாதிரி இல்ல… பட் பார்த்து இருக்கேன். நீங்க என்னைய பார்த்து இருக்கீங்களா…?” என கேட்க, அவன் மறுத்து விட்டான்.
“சைன்ஸ் டிபார்ட்மென்ட் பக்கமெல்லாம் நான் வந்ததே இல்ல.!”
‘நீங்க வரல ஆனா உங்கள சைட் அடிக்க ஆர்ட்ஸ் டிபார்ட்மென்ட் பக்கம் நான் சுத்தி இருக்கேனே…!’ என பவானி நினைக்க,
“பட் நீ காலேஜ் படிக்கும் போது எப்படி இருந்தேன்னு பார்க்கனும்… பழைய பிக்சர்ஸ் வச்சிருக்கியா…?” என்றவன் கேட்க, நன்றாய் போய் கொண்டிருந்த பேச்சில் இடி விழுந்தது போலானது. காலேஜ் படிக்கும் போது தான் அவள் ஒல்லியாக அழகாக இருப்பாளே.
அதை காட்டினால் ஏதாவது நினைப்பானோ என நினைத்தவள், “இப்போ எதுவும் இல்ல… வீட்ல லேப்டாப்ல வச்சிருக்கேன். இன்னொரு நாள் காட்டுறேன்!” என வேகமாக சொன்னாள்.
“கூல்….!” என்றவன் தன்னுடைய போனை எடுத்து, “நாம தங்க போற வீடு இது… முந்தா நேத்து தான் அட்வான்ஸ் கொடுத்துட்டு வந்தேன்!” என பவானி கையில் போனை கொடுக்க, அவள் ஆர்வமாக வாங்கி பார்த்தாள்.
சின்ன ஹால், பெட் ரூம், கிட்சன் என்று ஒரு குடும்பம் வாழும் அளவிற்கு எல்லாம் அம்சமாக இருக்க, அதை பார்த்து கொண்டிருக்கும் போது கை தவறி கீழே இருந்த ஹோம் பட்டனை அழுத்தி விட, அவன் வைத்திருந்த வால் பேப்பரை பார்த்து மனசுள்ளே தீபாவளியே வந்து விட்டது.
கல்யாண புடவை எடுக்க போன பொழுது இருவரையும் நிற்க வைத்து விஜயா ஒரு போட்டோ எடுக்க சொன்னார். கல்யாணம் வம்சியின் சொந்த ஊரான திருச்சியில் என்பதால் பிளாக்ஸ் அடிக்க அவர் எடுக்க சொல்லியிருக்க, அவனோ அதே படத்தை தான் வால் பேப்பராக வைத்திருந்தான்.
கேலி என்னெவென்றால் அவள் கூட இவ்வளவு தூரம் சொல்லவில்லை. நாசுக்காய் மீண்டும் கேலரிக்கு வந்தவள், “ரொம்ப நல்லா இருக்கு…!” என போனை கொடுத்தாள். இந்த பாராட்டு நிச்சயம் வீட்டுக்கு இல்லை.
“தனியா இருந்தப்போ, ஒரு சின்ன ரூம்ல தான் ஸ்டே பண்ணி இருந்தேன்!” என்றவன் சாப்பாடு வரவே சாப்பிட்ட படி சொல்ல, “அப்போ புட்க்கு என்ன பண்ணுவீங்க?” என்றாள் பவானி.