பவானி இயல்பை மீறி பேசி விட்டு, “சாரி…!” என்று மெதுவாய் சொல்ல, வம்சி அதை பெரிது படுத்தாமல்,
“என்ன படிச்சிருக்க….?” என்றான்.
நல்ல வேளை எதுவும் சொல்லல என நினைத்தவள், “எம்எஸ்சி மேக்ஸ்… அப்பறம் பிஎட் முடிச்சிருக்கேன்!” என்றாள்.
“இங்க டியூசன் எடுக்குறேன்னு சொன்னாங்க… ஏன் ஸ்கூல்ஸ்ல ட்ரை பண்ணல….?”
“அது சேலரி ரொம்ப கம்மியா இருந்தது அதான்!” என்றவள் அவனிடம் எதுவுமே கேட்கவில்லை. ஏனென்றால் அவனுக்கு இதில் விருப்பமா இல்லையா என்றே தெரியாமல் என்ன கேட்பது.
“நான்…!” என ஆரம்பித்தவன், சிறிது இடைவெளிக்கு பின்பு, “உன்கிட்ட என்ன சொல்லி, இதுக்கு ஒத்துக்க வச்சாங்கன்னு தெரியல… ஆனா என்னை பத்தி நானே எல்லாத்தையும் சொல்லிடுறேன். கவனமா கேட்டுக்கோ. கவர்மென்ட்ல வேலைன்னாலும் எனக்கு சம்பளம் நார்மல் தான். ரெண்டு வருசத்துக்கு முன்னாடி தான் டிஎன்பிஎஸ்சி க்ரூப் டூ பாஸ் பண்ணேன். சோ, சேலரி ரேன்ஜ் ஆரம்பத்துல தான் இருக்கு. அன்ட் என் வொர்க்க மிஸ் யூஸ் பண்ண மாட்டேன். சோ, நான் நேர்மையா உழைச்ச காசுல தான் குடும்பத்தை நடத்தனும். சொந்த வீடு, நிலம், பேங்க் பேலன்ஸ்ன்னு என் கைல பெருசா எதுவும் கிடையாது. பைக் கூட இப்போ தான் வாங்குனேன்!” என அடுக்கி கொண்டே போக, பவானி பொறுமையாக கேட்டு கொண்டிருந்தாள்.
“உன் வீட்ல, மாப்பிள்ள சேலரி கம்மியா வாங்குனாலும் கிம்பளம் வாங்குவாரு, காசு பணம் நிறைய சேர்த்து வச்சிருப்பாருன்னு ஆசை வார்த்தை காட்டி கன்வின்ஸ் பண்ணி இருந்தா, தட்ஸ் அ லை! இப்படியே போய் என்னைய பிடிக்கலைன்னு சொல்லிடு. அப்பறம் என் வீட்டு ஆளுங்க ரொம்ப ஸ்வீட்டா பழகுவாங்க. பட், யாரும் அத்தனை லேசுப்பட்ட ஆட்கள் கிடையாது. எங்கப்பாக்கு குடி பழக்கம் இருக்கு… வேலைக்கும் போகல… அம்மாவும் ஹவுஸ் ஒயிப் தான். என்னோட சேலரில இருந்து மாசம் மாசம் அவங்களும் ஒரு பகுதிய கொடுத்துடுவேன். என் அக்காவோ வருசத்துல பாதி நாள் எங்கம்மா வீட்ல தான் இருப்பா… அதிக பொரணி பேசுற குணம் உள்ளவ. நார்மலா ஒரு விஷயத்த பண்ணி அவளுக்கு அது பிடிக்கலைன்னா கூட உன்ன பத்தியும் எடக்குமடக்கா பேசுவா!” என்று அக்குவேராய் ஆணி வேராய் டைசக்ட் பண்ணி காட்ட, பவானிக்கு நெஞ்சம் திக்கென்று இருந்தது.
இந்த விஷயத்தை எல்லாம் கல்யாணத்துக்கு முன்பே பேச வேண்டுமா என்றும் சந்தேகம் வந்தது.
பவானி பதில் சொல்லாமல் யோசிப்பதை பார்த்தவன், “நான் தங்கி வேலை பார்க்குற லோகேசன் சின்ன டவுன். அங்க ஒன்னு ரெண்டு ப்ரைவேட் ஸ்கூல்ஸ் இருந்தாலும், சேலரி இங்க பே பண்றத விட கம்மியா இருக்கும். டியூசனும் எடுக்க வசதி இருக்காது!” என்று கூற, மொத்தமாக அவன் சம்பளத்தில் தான் டிபன்ட் பண்ணி இருக்க வேண்டும் என புரிந்தது.
பவானிக்குமே அதில் பிரச்சனை இல்லை. மேலும் இப்பொழுது ஆன்லைனில் கூட டியூசன் எடுக்கலாமே என்று நினைத்தவள், “வேற ஏதாவது சொல்லாம விட்டுட்டீங்களா?” என்று கேட்க, அவன் நக்கலாக சொன்னான்.
“நீ தெரிஞ்சுக்க வேண்டியதை எல்லாம் சொல்லியாச்சு. அன்ட் நீ காலேஜ்ல பார்த்த பீம் கேரக்டரா நான் இப்போ வாழல…. ஆல்சோ டோன்ட் எவர் கால் மீ லைக் தட்!”
இதை சொன்ன பொழுது அவன் முகத்தில் தெரிந்த ஏதோ ஒரு வலி பவானியையும் அதிகமாய் வருத்தியது. அவன் சொல்ல வேண்டியதை சொல்லி முடித்து,
“முடிவு உன் கையில… பிடிக்கலைன்னா இப்போவே வெளிப்படையா சொல்லிடு. டிலே பண்ண வேணாம்….!” என்று கிளம்பி விட, “ஒருநிமிஷம்…!” என நிறுத்தினாள். அவன் திரும்பி பார்க்க,
“என்னை பத்தி எதுவுமே கேட்கலையே…?” என்றாள்.
“நான் எதுவும் தெரிஞ்சுக்க வேணாம்…!” என்றவன் கூற, பவானிக்கு சுருக்கென்று இருந்தது.
‘நம்மள பிடிக்கல போல… அதான் இப்படி சொல்றறு!’ என நினைத்தவள், “கீழ போகலாம்!” என்று அவனை கடந்து செல்ல முயன்றாள்.
தன் பதிலை சொல்லாமல் சொன்ன பின்பு அவனை பிடித்திருக்கிறது என எப்படி சொல்ல முடியும்? அவனை இந்த நொடியும் கொள்ளை கொள்ளையாய் பிடிக்கும். அதற்காக தன்னை விரும்பாதவனோடு எவ்வாறு வாழ முடியும் என தோன்ற, வம்சி சற்று விரைவாய் அவளை கடந்து விட்டான்.
ஆனால் பாதி படியில் நின்றவன், சட்டென “உன்னை பிடிக்காம இங்க வரல…!” என்று கூற, பவானி விழிகள் விரித்தாள்.
“என்ன சொல்றீங்க…?” என தனக்கே கேட்காத குரலில் வினவ,
“எனக்கு உன்னை பிடிச்சு இருக்கு… நான் சொன்னத எல்லாம் மீறியும் என்கூட வாழ்க்கை முழுக்க ட்ராவல் பண்ண ஓகேன்னா… ரொம்ப நல்லா பார்த்துப்பேன். அன்ட் ஐ மீன் இட்!” என்று விட்டு சென்று விட்டான்.
பவானி படபடப்பாய் மாற முகமோ செங்காந்தளாக சிவந்து போனது. “என்னை அவருக்கு பிடிச்சு இருக்கா…?” என நெஞ்சில் கை வைத்தவள், அதே படியில் அமர்ந்து அதிக உணர்வு அழுத்தத்தால் அழவே ஆரம்பித்து விட்டாள்.
கைகள் நடுங்கியது… வேர்த்து கொட்டியது. அவன் எந்த மீனிங்கில் சொல்லி சென்றானோ அவனுக்கு தான் வெளிச்சம். ஆனால் பவானிக்கோ உலகம் கையில் கிடைத்தது போல் இருக்க, அவன் சொன்ன மற்ற விஷயங்கள் எல்லாம் ஒரு பொருட்டாக கூட தெரிய வில்லை. அந்த நொடி,
“அவருக்கும் என்னை பிடிச்சுருச்சுல… அது போதும்… எனக்கு அவரு மட்டுமே போதும்!” என்று அழுகை சிரிப்பு என மாறி மாறி அனுபவித்தவள், கண்ணை நன்றாக துடைத்து கொண்டு கீழே வர, வம்சியோ எதுவுமே நடக்காதது போல் அமர்ந்து இருந்தான்.
பவானி சொன்ன பின்பே வம்சி தன் பதிலை சொல்ல நினைக்க, அவளோ பார்வதியிடம், “எனக்கு சம்மதம் அத்த… அவரை பிடிச்சு இருக்கு!” என்று கூற, அருகே நின்ற சுந்தரிக்கு கொண்டாட்டம் ஆகி போனது.
“என்ன சொல்றா பவானி?” என விஜயா கேட்க, “அவளுக்கு சம்மதம் தான்!” என்றார் நிறைவாக.
இதை கேட்டு வம்சியின் கண்ணில் சின்ன மின்னல் தோன்ற, “எனக்கும் சம்மதம்!” என்றான் உறுதியாக. வம்சியின் தந்தை ரத்தினம் உடனே,
“அப்போ இன்னிக்கே பூ வச்சு உறுதி படுத்திப்போம்…. நாளும் நல்லா இருக்கே…!” என்று எடுத்து கொடுக்க, கனக சபையும் சம்மதித்தார். காயத்ரிக்கோ நடப்பதை பார்த்து வயிறு எரிந்தது. தங்கையை தனியாக அழைத்து சென்று நாலு வாங்கு வாங்கிட வேண்டும் என நினைத்தாலும் விஜயா பவானியை கை பிடியில் வைத்திருக்க, பல்லை கடித்து கொண்டு நின்றாள்.
ஒருபக்கம் போட்ட திட்டம் எல்லாம் நாசமாக போகிறதே என ஆவேசமாக இருந்தது. வீட்டிற்கு சென்று கணவனுக்கு என்ன பதில் சொல்ல போகிறோம்… அந்த மாப்பிள்ளையிடம் வேறு பவானியின் படத்தை காட்டி வாக்கு கொடுத்தாயிற்றே என மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் நிற்க, வம்சியின் அக்கா ரஞ்சிதம் பட்டும் படாமல் பவானியிடம் பேசினாள்.
வம்சி எச்சரிக்கை செய்து விட்டதால், பவானி மிகவும் கேர்புல்லாகவே வார்த்தைகளை பயன்படுத்தினாள். ரஞ்சிதத்திற்கு குழந்தைகள் கிடையாது. திருமணம் முடிந்தும் சில வருடங்கள் கடந்து இருந்தது.
இதனாலே அவள் கணவன் பாஸ்கரனோடு ஏதாவது வாக்குவாதம் செய்து விட்டு அம்மா வீட்டுக்கு வந்து விடுவாளாம். வம்சி தனியாக இருக்க கண்டே பார்வதி இந்த சம்பந்தத்தை முடிப்பதில் அதிக முனைப்பு காட்டினார். ஒருவேளை ஒரே குடும்பமாக இருந்திருந்தால் நிச்சயம் வேண்டாம் என மறுத்து இருப்பார்.
ஆனால் பவானிக்கு வம்சியை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு இதெல்லாம் ஒரு மேட்டராகவே தெரியவில்லை. வாழ்வில் அதிகமாய் விரும்பும் ஒன்றை அடைய மனித மனம் தனக்கு பிடிக்காததை கூட செய்ய நினைக்குமே! அது தான் அவள் விஷயத்திலும் நடந்தது.
மேலும், ஒன்றை இழந்தால் தான் ஒன்னொன்று என்பது எழுதபடாத நியதி. பவானியும் வம்சியை மட்டுமே கருத்தில் கொண்டு அவன் குறிப்பிட்ட மற்ற அனைத்தையும் புறம் தள்ளி இருக்க, இனி காலம் தான் அவள் முடிவு சரியா தவறா என சொல்ல வேண்டும்.
பூ வைத்து பாக்கு வெத்தலை மட்டும் மாற்றி கொண்டு, திருமணத்துக்கு முதல் நாளே நிச்சயம் வைத்து கொள்ளலாம் என முடிவு செய்தார்கள். வரும் மார்கழி முடிந்து தையில் திருமண தேதி குறித்து விட, பவானி மிஸஸ் வம்சியாக மாற இரண்டு மாதங்களே இருந்தது.
கலகலப்பாய் பேசி கொண்ட இரு குடும்பங்களும், “உங்க பொண்ணுக்கு போடுறத போடுங்க… நாங்க எதுவும் டிமான்ட் பண்ணல…!” என மேம்போக்காக சொல்லி விட்டாலும், அதில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது.
மற்ற விஷயங்களை பின்பு பேசி கொள்ளலாம் என்று கை நனைத்து மனம் நிறைந்து அனைவரும் விடை கொடுக்க, வம்சி மட்டும் போவதற்கு முன்பு,
“நான் கால் பண்ணுறேன் வாணி…!” என்று சொல்லி செல்ல, பவானிக்கு வெட்கம் பிடிங்கி தின்றது. மனதில் காணாமல் போயிருந்த பட்டர்ப்லைஸ் எல்லாம் திரும்பி வந்து பேக்ரவுண்ட் ஸ்கோர் கொடுக்க, பார்வதி கலாய்த்தார்.
“நான் சொன்னேன்ல…. உன் மனசுக்கு நீ நல்லா இருப்ப பவானி!”
அவர் அதை சொல்லி முடிக்கும் முன்பே காயத்ரி கயகயவென ஆரம்பித்தாள்.
“எங்க அதான் எல்லாரும் சேர்ந்து அவளை கிணத்துல தள்ளீட்டீங்களே… ஏண்டி படிச்சு படிச்சு சொன்னேன்ல… எதுக்குடி சரின்னு சொன்ன?” என்று கோபமாய் கேட்க, சுந்தரி அதட்டினார்.
“இது அவ வாழ்க்கை காயு. அவ தான் முடிவு பண்ணனும்…!”
“நீங்க அவளையா முடிவு பண்ண விட்டீங்க… இப்படி கத்தி முனைல நிக்க வச்சா அவளும் என்ன தான் பண்ணுவா. கண்டிப்பா உங்களுக்காக தான் சரின்னு சொல்லி இருப்பா!”
“அப்படி நீயா நினைச்சுகிட்டா ஒன்னும் பண்ண முடியாது காயத்ரி. இது பவானியோட தனிப்பட்ட முடிவு. யாரும் அவளை கம்பல் பண்ண கிடையாது!” என பார்வதியும் சொல்ல, கவிரசுவும் அதிசயமாக பேசினான்.
“ஆமா காயு… மாபிள்ள ரொம்ப நல்ல கேரக்டரா இருக்காரு. வசதி கம்மி தான். ஆனா குணம் முக்கியம்ல?”
தன் அண்ணனா இப்படி பேசுவது என பவானிக்கே ஷாக் ஆனது. ‘பரவாயில்ல… என்மேல அக்கறையும் இருக்கும் போல!’ என மனதில் நினைத்து கொள்ள,
“கேரக்டர் என்ன கேரக்டர்… கேரக்டரா சோறு போட போகுது. பவானி உங்ககிட்ட எப்படி கஷ்டபட்டாளோ அப்படி தான் போற வீட்டுலையும் இருக்க போறா.. ஆனா உங்களுக்கு!” என்று வேகமாய் சொல்லி கொண்டிருக்க, “ஏய் காயத்ரி!” என கனகசபை குரலை உயர்த்தி இருந்தார்.
அவர் பாய்ன்ட் வந்தால் மட்டுமே வாயை திருக்கும் பேர்வழி. அத்தனை சீக்கிரம் கோபப்பட மாட்டார். கோபம் வந்தால் பொறுமையாகவும் நடந்து கொள்ள மாட்டார்.
“நானும் பார்த்துட்டே இருக்கேன் அன்னைல இருந்து ரொம்ப தான் அராஜகம் பண்ணிட்டு இருக்க. உன்னைய தான் நாங்க கட்டி கொடுத்துட்டோம்ல… அப்பறம் எதுக்கு இந்த வீட்டு விஷயத்துல மூக்கை நுழைக்கிற… உன் தங்கைய பெத்தது படிக்க வச்சது எல்லாம் நாங்க… அவளுக்கு என்ன பண்ணா சரியா வரும்ன்னு எங்களுக்கு தெரியாதா…?” என கேட்க, காயத்ரிக்கு சிறிது பயமானாலும்,
“அப்பா… அப்போ இந்த வீட்டு விஷயத்துல நான் தலையிடவே கூடாதுன்னு சொல்றீங்களா… எனக்கு இங்க எந்த உரிமையும் இல்லையா… கட்டி கொடுத்துட்டா எல்லாம் முடிஞ்சதா?” என கண்ணை கசக்க, கனகசபை பட்டென சொன்னார்.
“உனக்கு கருத்து சொல்ற உரிமை இருக்கு…. ஆனா முடிவெடுக்க வேண்டியது நானும் உன் அம்மாவும் தான். அரசுக்கு கூட அந்த உரிமைய நான் கொடுக்க மாட்டேன்!” என்றவர் பவானியிடம்,
“உன்னை யாராவது இங்க வற்புறுத்தினாங்களா பவானி… எங்களுக்காக தான் நீ சரின்னு சொன்னியா?” என கேட்க, பவானி காயத்ரியையே பார்த்து,
“எனக்கு அவரை பிடிச்சு இருக்கு காயத்ரி…!” என்று சொல்ல, காயத்ரியின் கண்கள் சிவந்தது.
“கண்டிப்பா உன் முடிவை நினைச்சு பின்னாடி பீல் பண்ணுவ பவானி… அப்போ இந்த அக்கா சொன்னதை கேட்டு இருக்கலாமோன்னு உனக்கு தோணும். நானும் அதை பார்க்க தானே போறேன்?” என்று சப்தமாய் சொன்னவள், ரியாவை தூக்கி கொண்டு கிளம்பி இருந்தாள்.