நேச சிறகுகள்!
3
சுந்தரியை சமாளித்து போனை கட் பண்ணுவதற்குள் பவானிக்கு போதும் போதும் என்றானது. ‘வீட்டுக்கு போனதும் திட்டுவாங்களே…!’ என நெற்றியை தேய்த்தவள், பின்னால் திரும்பிய நேரம் ஒரு நெடிய உருவத்தில் இடித்து கொண்டு தடுமாறி போக, ஜஸ்ட் மிஸ்ஸில் காலை பேலன்ஸ் பண்ணி நின்று விட்டாள்.
‘யாருடா அது?’ என்றவள் திரும்பி பார்த்த நொடி, மனம் பக்கென்று அடித்து கொண்டது.
அவள் நிமிர்ந்து பார்க்கும் உயரத்தில் வாட்டசாட்டமாக ஒருவன் நின்றிருந்தான். “உங்க டாப்…!” என்றவன் கீழே கை காட்ட, பவானிக்கோ தன்னை சுற்றி எல்லாம் மியூட்டில் போனது போல் இருந்தது.
அவன் இடது புருவத்தில் இருந்த தழும்பு, அதற்கு மேலே இருந்த மச்சம் என நிமிடத்தில் அனைத்தையும் சரி பார்த்து முடித்திருந்தாள். ‘இது அவரு தான… ஆமா அவரே தான்!’ என இதயம் படபடக்க, கண்களை பெரிதாக விரித்து அதிர்ச்சியாக பார்த்தாள்.
எதிரில் நின்றவனுக்கோ அவள் முக பாவனையை கண்டு குழப்பமானது. ‘எதுக்கு இப்படி பார்க்குறா?’ என புருவம் சுருக்கியவன்,
“ஹெலோ…!” என முகத்திற்கு நேராய் சொடக்கு போட, பவானியின் மிரட்சி கலைந்தது.
“உன் டாப்ஸ்…!” என்றவன் சட்டென ஒருமைக்கு மாறி இருக்க, பவானி கீ கொடுத்த பொம்மை போல் கீழே பார்த்தாள்.
அவள் அணிந்திருந்த ஏ லைனர் காலர் வைத்த லாங் டாப் பின்னால் கிழிந்து தரையை கூட்டி கொண்டு இருந்தது. ‘அட கடவுளே… எவ்ளோ நேரமா இப்படி இருக்கோம்?’ என சங்கடப்பட்டவள்,
“தாங்க்ஸ் பீம்…!” என சொல்ல வந்து பின்பு சட்டென சுதாரித்து, “தாங்க்ஸ் சார்!” என அவனை நேராக சந்திக்க முடியாமல் ஒரு ஓரமாக சென்று கிழிந்திருந்த பகுதியை மட்டும் தனியாக பிரித்து எடுக்க முயல, அதுவோ வருவேனா என போக்கு காட்டியது.
உள்ளே சென்று காயத்ரியை ஹெல்ப் பண்ண சொல்லலாம் என்றாலும் இப்படியே தான் தரையை கூட்டி கொண்டு போக வேண்டும். ‘அவளாவது பார்த்து இருக்களாமே… அவள் முன்னால் தானே வெளியே வந்தேன்?’ என விரக்தியில் மறுபடியும் முயற்சி செய்ய, அவள் செய்வதை எல்லாம் அவனும் பார்த்து கொண்டே இருந்தான்.
“ஹெல்ப் கேட்டா என்ன…?” என்று இயல்பாய் தோன்ற, அழுத்தமான அடிகளோடு அருகே சென்றான். யாரோ தன்னை கடந்து செல்கிறார்கள் என பவானி நிமிராமல் இருக்க,
“விடு நான் ஹெல்ப் பண்றேன்!” என்றான் அவன். மீண்டும் அவனை பார்த்து ஹார்ட் பக் பக் என அடித்து கொள்ள, வாயிலிருந்து வார்த்தைகள் வேறு வர மறுத்தது.
“இப்படி உட்காரு!” என்றவன் சைடில் இருந்த திண்டில் அமர வைத்து, கிழிந்திருந்த துணியை மட்டும் கெட்டியாக பிடித்து இழுக்க, சிறிது அன் ஈவனாக கிழிந்து அது கையேடு வந்து விட்டது.
“தாங்க்ஸ்!” என்றவள் மெதுவாய் சொல்ல, அவனோ அவள் முகத்தை கண்கள் சுருக்கி பார்த்தான். பவானியின் இதயம் வேறு எகிறி குதித்து ஓடி விடுவேன் என புரட்சி செய்ய,
“டூ வீ நோ ஈச் அதர்?” என்றான் சந்தேகமாய். பவானி இயல்பாக இருக்க முடியாமல் தவித்ததை, தன்னை பார்த்து பயப்படுகிறாள் என நினைத்து கொண்டான். சிறிது பயப்படும் படியாக தான் அவன் உருவமும் இருந்தது.
சிறு குழந்தைகளுக்கு, “பூச்சாண்டி மாமா உன்னை புடிச்சிட்டு போயிடுவாரு!” என மிரட்டி சோறூட்ட உதவும் தோற்றம். மலிக்கபடாத ஒருவார தாடி, முறுக்கு குறைந்த முறுக்கு மீசை. அதில் ஆங்காங்கே சில நரை முடிகளும் இருக்க, பார்க்க வில்லன் மாதிரி பெரும் உருவத்தோடு இருந்தான்.
பவானி அவன் கேள்விக்கு பதில் சொல்லும் முன்பே, “இங்க என்னடி பண்ணுற…?” என்ற கேள்வியோடு வந்து விட்டாள் காயத்ரி. பக்கத்தில் நின்றவனையும் ஒரு மார்க்கமாக பார்க்க தவறவில்லை.
“என் டாப்ஸ்… அது…!” என பதில் சொல்ல தடுமாறிய பவானி, “தாங்க்ஸ் சார்!” என்றவன் கேட்ட கேள்விக்கு பதில் தராமல் அக்காவின் கையை இழுத்து செல்ல அவன் விசித்திரமாக பார்த்தான்.
இதில் தப்பித்து செல்வது போல் திரும்பி வேறு பார்த்து கொள்ள, அவன் எதுவும் புரியாமல் பார்கிங்கில் இருந்த தன் என்பீல்ட் பைக்கை நோக்கி சென்றான். ஏனென்றே புரியாமல் பைக் கண்ணாடியில் முகத்தை பார்த்து கொண்டவன், “என்னை பார்த்தா பேய் மாதிரியா இருக்கு? அப்படி பார்க்குறா…?’ என சிந்தித்தபடி கிளம்பி விட்டான்.
“யாருடி அது…?” என காயத்ரி விசாரிக்க, பவானி கடுப்பாக கேட்டாள்.
“என் டாப் கிழிஞ்சத நீ பார்க்கலையா…?”
“உன் டாப்பா… எங்க கிழிஞ்சு இருக்கு?” என்றாள் காயத்ரி விளங்காமல்.
“பின்னாடி தான்… அவரு தான் பார்த்து சொன்னாரு…!” என பவானி இழுக்க, “ஓ…?” என்ற காயத்ரி,
“பார்க்க பொறுக்கி மாதிரி இருந்தானா… உன்கிட்ட வம்பு பண்றானோன்னு நினைச்சுட்டேன்!” என்றாள். இதில் சுறுசுறுவென கோபம் வர,
“அவரு ஒன்னும் அப்படி கிடையாது!” என்றாள் பவானி வேகமாய். தங்கையின் பதிலில் திடுக்கிட்ட காயத்ரி, “அது அப்படி உனக்கு தெரியும்?” என்றாள்.
பின்பு தான் வீணாக கொந்தளித்து விட்டோம் என புரிய, ‘உருவத்த வச்சு குணத்தை எடை போட கூடாது… அதுக்கு சொன்னேன்!” என்று சமாளித்தாள்.
“அதெல்லாம் அந்த காலம் பவானி. இப்போ டீசன்ட்டா இருக்கவனையே நம்ம முடியல… இப்படி இருந்தா எப்படி இருப்பானுகளே… முதல்ல அவன் எதுக்கு உன் பின்னாடி பார்க்கணும்… எல்லாரும் இப்படி தாண்டி!” என்று நக்கலாக சிரிக்க, பவானியின் முகம் சிவந்தது.
“பீம் அப்படி பட்டவர் இல்ல!” என்று கத்த தோன்ற, இருந்தும் வாயை இறுக்கமாய் மூடி கொண்டாள்.
“வீட்டுக்கு கிளம்புவோமா… அம்மா அப்போவே திட்டுனாங்க!” என்று வேறு பேச்சை தொடங்க,
“ஆமா… என்கூட பேசுனா நீ தெளிஞ்சுடுவேல… அதான் உன்னை ப்ரொடக்ட் பண்ணுறாங்க!” என்ற காயத்ரி பில் பே பண்ணிவிட்டு தங்கையை வந்து வீட்டில் விட, அதற்குள் அவள் கணவன் பார்த்த அற்புத வரனை பற்றி ஒரு கதையே சொல்லி விட்டாள்.
“அம்மா கிடக்குறாங்க… வயசான ஆளு. இந்த ஜெனரேசன் ட்ரென்ட் புரியாதவங்க. ஆனா நீ புத்திசாலி. இங்க பணம் இருந்தா தான் பிணம் கூட மதிக்கும். சும்மா நல்லவன தான் கல்யாணம் பண்ணுவேன்… அம்மா அப்பா சொன்னா தான் கழுத்தை நீட்டுவேன்னு பிடிவாதமா இருக்காத. நீ யோசிச்சிட்டு சொல்லு. உனக்கு ஓகேன்னா, நான் வீட்ல சண்டை போட்டு உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன். நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன்!” என எலெக்சன் வாக்குறுதிகளாக அவிழ்த்து விட பவானி புன்னகையோடு, ‘சரி நான் யோசிக்கிறேன்!’ என்றாள். இல்லையென்றால் அவள் விட மாட்டாளே!
“குட்… எனக்கு முடிவு பண்ணிட்டு கால் பண்ணு…!” என காயத்ரி விடை கொடுக்க, பவானிக்கு ஒன்று மட்டும் புரிந்தது. ஆதாயம் இல்லாமல் இங்கு எதிலும் காரியம் நடக்காது. காயத்ரி சொல்லும் மாப்பிள்ளை சொந்தமாக ஒரு ஸ்டார்ட்டப் கம்பெனி வைத்திருக்கிறான்.
அது பெரிய லெவலில் மாறும் எதிர்காலம் உள்ளதால், ராகவன் அதில் ஒரு பாட்னராக ஜாயின் பண்ண நினைக்கிறான். ஆனால் அந்த ஆளுக்கோ சொந்தம் அல்லாத மற்றவர்கள் மீது நம்பிக்கை கிடையாது. எனவே சொந்தமாகி கொள்ள ஒரு கருவியாக பவானியை நினைத்தார்கள்.
அந்த ஆளுக்கு முப்பத்தி ஒன்பது வயது என்பது கூடுதல் தகவல். பவானி வீட்டுக்கு வந்த நேரம் பார்வதி அத்தையும் இருந்தார்.
“வாடி… உங்கக்கா குதிரை கொம்பா மாப்ளை கொண்டு வந்தாளாமே?” என்றவர் கேலியாக கேட்க, பவானிக்கு சிரித்து விட்டாள்.
“கிண்டல் பண்ணாதீங்க அத்த… அவ அம்மா கூடவே சரியான பேச்சு!”
“பின்ன இவ நல்ல இடம்ன்னு வந்ததும் நாங்க சரி சரின்னு மண்டிய ஆட்டிடுவோமா…?” என்று சீறலாக வந்தார் சுந்தரி.
“அவ முன்ன மாதிரி இருந்தாலும் சரி பார்வதி… இப்போலாம் நான் வளர்த்த பொண்ணு தானான்னு எனக்கே சந்தேகமா இருக்கு!” என சுந்தரி வருந்தினார்.
“எல்லாம் கல்யாணம் ஆனதும் புள்ளைய மாத்திடுறாங்க சுந்தரி. நம்ம கையில என்ன இருக்கு சொல்லு? என் வீட்லயும் ஒன்னு இருக்கே!” என பார்வதி அலுத்து கொண்டார். அவர் அவருக்கு அவர் பிரச்சனை பெரிது.
பார்வதி பத்து வருடங்களுக்கு முன்பு வரை அவர்கள் வீட்டின் அருகே தான் வாடகைக்கு குடி இருந்தார். சுந்தரிக்கும் அவருக்கும் நல்ல பழக்கம். தோழிகள் என்பதையும் தாண்டி, தூரத்து சொந்தம் வேறு.
பார்வதியின் மகன் தலையெடுத்ததும் ஒரு அப்பார்ட்மென்ட் வாங்கி கொண்டு அங்கிருந்து சென்று விட்டார்கள். ஆனால் அவர்கள் நட்பு மட்டும் அழகாய் அதே போல் தொடர்ந்தது.
“நான் மாப்பிள்ளை வீட்ல பேசிட்டேன்… அவங்களுக்கு பவானிய ரொம்ப பிடிச்சு இருக்காம். ஜாதகம் பார்த்து ஒத்து வந்தா, சீக்கிரமே கல்யாணத்தை வச்சிடுவோம்ன்னு சொல்றாங்க. பவானி நீயும் மாபிள்ள போட்டா பாரு… உனக்கும் பிடிக்கணும்…!” என்று பார்வதி சொல்ல, பவானி மறுத்தாள்.
“அம்மா அப்பாக்கு ஓகேன்னா எனக்கும் ஒகே அத்த!”
“ஏண்டி இந்த காலத்து பொண்ணுங்க பழகி பார்த்து தான் வாழ்க்கைய பகிர்ந்துப்போம்ன்னு சட்டம் பேசுதுங்க… நீ எதுக்குடி இப்படி இருக்க…?” என பார்வதி திட்ட, பவானி அம்மாவை பார்த்தாள்.
இதற்கு முன்பும் இப்படி தான் நிறைய பேரை காட்டினார்கள். இவளும் சரி என்று தான் சொல்லுவாள். ஆனால் அதன்பின்பு எல்லாம் அமைதியாகி விடும். இப்படி ஒவ்வொரு ஆளையும் இவன் தான் வருங்கால கணவனோ என நினைத்து நினைத்து பவானி சோர்ந்து போனது தான் மிச்சம்.
கூடவே இன்று யாரை நீண்ட காலமாய் மறந்து விட்டோம் என நம்பி இருந்தாளோ அவனை மறுபடியும் பார்த்து விட்டதால் மனதில் எதுவும் பதியவில்லை.
‘பீம் ஏன் இப்படி மாறிட்டாரு…?’ என யோசித்து யோசித்து சோர்ந்தவள் மணியை பார்க்க, அது நாலரையை நெருங்கி இருந்தது.
ஐந்தரைக்கு டியூசன் போக வேண்டும். சிறிது நேரம் தூங்கி இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்ற, பார்வதியிடம் சஹஜமாக சொன்னாள்.
“எனக்கு அப்படி டெஸ்ட் பண்ணி பார்க்க தோணல அத்த. மேலும் ஒருத்தவங்க குணத்தை அவங்க கூட வாழ்ந்தா மட்டும் தான புரிஞ்சுக்க முடியும்? ஏன் உங்க காலத்துல எல்லாம் அப்படி தான? நீங்க பெஸ்ட் கப்புள்சா இப்போ இருக்கலையா… ஸோ, நானும் ரிஸ்க் எடுக்க ரெடி…!” என கண்ணடித்தவள்,
“நீங்க பேசுங்க… நான் ரூம்ல இருக்கேன்!” என்று விலகி கொள்ள, ‘இந்த காலத்துல இப்படி ஒரு பொண்ணா… என் பையனுக்கு கொடுத்து வைக்காம போயிடுச்சே!’ என பார்வதிக்கு பீலிங்காக இருந்தது.
சுந்தரிக்கோ இன்று பவானி வித்தியாசமாய் நடந்து கொள்வது புரிய, “என்ன ஆச்சு இவளுக்கு?” என்று பார்த்தார். அறைக்குள் வந்த பவானிக்கோ காரணமின்றி அழுகை வந்தது.
“சை.. இவ்ளோ வருஷம் கழிச்சு எதுக்கு அவரை பார்க்கணும்… கடவுள் எதுக்கு அவரை என் கண் முன்னால காட்டனும்… அவருக்கு கல்யாணம் ஆகி இருக்குமா? குழந்தைங்க இருக்குமா? இருக்கும்! அவருக்கும் வயசு முப்பது இருக்கும்ல… ஆனா ஏன் ஆளே மாறி போயிருக்கார்? கண்ணுல இருந்த கூர்மை மட்டும் குறையவே இல்ல… அதே ஆளை எடபோடுற பார்வை, தெளிவான பேச்சு. இருந்தும், அவரு அவராவே இல்லன்னு பீல் ஆகுது. பீம்க்கு ஏதாவது பிரச்சனையா இருக்குமோ…? அவருகிட்ட நின்னு பேசி இருக்கலாமோ?” என்று ஏதேதோ தோன்ற, அவள் மனமோ கடிந்து கொண்டது.
“அவரு உன் வாழ்கையில வந்த அழகான வானவில் மாதிரி பவானி… வானவில நீ பார்த்து ரசிக்கலாம்… ஆனா அது வானவிலுக்கு தெரியாது. அதே போல அதை புடிச்சு வைக்க நினைச்சாலும், கொஞ்ச நேரத்துல மறைஞ்சு போய் உன்னை ஏமாத்திரும்! பெட்டர் கண்டதையும் யோசிக்காம முடிஞ்சத முடிஞ்சதாவே விட்ரு…!” என்று அறிவுறுத்த கலங்கிய கண்களை துடைத்து கொண்டாள். ஆனால் அவள் விரும்பும் வானவிலே வாழ்க்கை முழுக்க துணையாக வருவேன் என்று கூறினால் என்ன செய்வாளோ?